Thursday, March 31, 2022

இன்னும் கொஞ்சம் பேசியிருக்கலாம் Mr.கருணா பிரசாத்


நந்தனம் அரசுக் கல்லூரியில் பி.காமும் தஞ்சைப் பல்கலையில் எம்.ஏ தமிழும் படித்த கருணா பிரசாத் நாடகத்துறையில் பிஎச்டி முடித்தவர். கூத்துப்பட்டறையில் தம்மை இணைத்துகொண்ட பிறகு பயணம் வேறொன்றாக உருமாறியதை அறிந்தவர். முப்பது ஆண்டுகளாக ராயப்பேட்டை அலுவலகம் பதிப்பகமாக இயங்கிவந்த நிலையில் இனி அங்குப் புத்தக விற்பனையும் நடைபெறவிருக்கிறது. அவரின் போதிவனம் பதிப்பக வெளியீடான `நவீன ஓவியம் : புரிதலுக்கான சில பாதைகள்' நூலினை வாங்கச் சென்றிருந்தேன். 

பொதுவாக நாம் சந்திக்கச் செல்லும் ஆளுமைகள் தாம் கற்ற அறிவின் மூலம் நம்மைக் கேள்விக்குட்படுத்தி எதிராளியின் பலமென்ன என்று பரிசோதிப்பார்கள். அப்படியான உரையாடலில் பேசுபவர் அல்லது கேட்பவர் இவர்களில் யாராவது ஒருவருக்குக் குற்றவுணர்வு ஏற்பட்டு விடும். சந்திப்பதற்கு முன்பு இருக்கும் உற்சாகம் உரையாடல் முடிந்து திரும்பும் போதும் தீராமல், இன்னும் கொஞ்ச நேரம் பேசலாமே என்று தோன்றவைப்பது ஆரோக்கியமான உரையாடல் என்று என் வகையில் வரையறுக்கிறேன். சிலர் பேசிக்கொண்டிருக்கும் போதே சலிப்புணர்வுடன் துண்டித்துவிடும் அபாயச் சூழலும் நிகழ்வதுண்டு. அன்று கருணா பிரசாத்துடனான உரையாடல் முதல் வகையைச் சேர்ந்தது.

சமோசா சாப்பிடுகிறீர்களா என்று கேட்டார். சமோசா, பஜ்ஜி, வடை போன்ற எண்ணெய்ப் பண்டங்கள் அதிகம் எடுத்துக்கொள்வதில்லை என்று மறுத்து லெமன் டீ ஓகே என்றேன். இரண்டு லெமன் டீ சொல்லிச் சக்கரையைத் தனியாகக் கொடுத்து விடும்படிக் கூறினார்.  

நீங்கள் நீலத்தில் என்னவாக இருக்கிறீர்கள் அதற்கு முன்பு என்ன செய்தீர்கள் என்று கேட்டார் . உதவி ஆசிரியராக இருக்கிறேன். இதற்கு முன் கணையாழியில் பணி செய்திருக்கிறேன். 2012 காலகட்டத்தில் கல்லூரி நண்பருடன் இணைந்து விளம்பர நிறுவனம் நடத்திக்கொண்டிருந்தேன். பிஸினஸ் மேனாக இருந்த என்னைப் பத்திரிகைத் துறை நோக்கி அழைத்து வந்தவர் கணையாழி ஆசிரியரான ம.இராசேந்திரன்தான். 

கணையாழியில் உதவி ஆசிரியராகச் சேர்ந்த பிறகு என் வாழ்க்கை வேறொன்றை நோக்கி நகர்வதை உணரத் தொடங்கினேன். என் அறிவுலகின் முதல் தந்தை ம.ரா என்றேன். பின்பு வம்சியில் பணி புரிந்தேன் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது ``எங்கே திருவண்ணாமலையிலா?'' என்று இடைமறித்தார். ஆமாம் என்றேன். கலை இலக்கிய இரவுகள், நாடகங்கள் எனத் தீவிரமாய் இயங்கிய திருவண்ணாமலை நினைவுகளைப் பகிர்ந்தார். வம்சியில் வேலை செய்த போதுதான் கே.வி.ஷைலஜா என்னை விகடனில் சேர்த்துவிட்டார் என்றேன். ஓ... வெனப் புன்முறுவல் பூத்தார்.

உரையாடல் ஒரு கட்டத்தில் இவ்வாறு தொடங்கியது.

தாஸ்தவெஸ்கி மனிதனின் அடிமனதில் தேங்கிக் கிடக்கும் கசடுகளையும் குற்றவுணர்வையும்தானே தொடர்ந்து எழுதிவந்தார் என்று தொடங்கினேன். ``மனதின் அழுக்கை, கசடுகளையும் எழுத நினைக்கிறேன். ஆனால் முடியவில்லையே'' என்ற ஜி.நாகராஜனின் வார்த்தைகளைப் பகிர்ந்தார்.

அப்படி எழுதுவது அபூர்வம் என்றேன். ஆமாம், தன்னைப் பொதுச் சமூகத்தின் முன் நிர்வாணப்படுத்த அசாத்திய துணிச்சல் வேண்டும் என்றார். என் மரணத் தறுவாயில் ஒரு கையில் மதுவும் மறு கையில் மாதுவும் இருந்தால்தான் என் ஆன்மா சாந்தியடையும் என்றான் கண்ணதாசன். கேரள நவீனக் கவிதையின் சொத்து என்று அறியப்படும் பாலச்சந்திரன் சுள்ளிகாடின் `சிதம்பர நினைவுகள்' அப்படியான நூல்தான். ஆனால், குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அவரே ``அந்தப் பாலச்சந்திரன் இறந்துவிட்டான்'' என்று பகிரங்கப்படுத்தியிருக்கிறார் என்றேன்.

அந்த மாதிரி விசயங்களுக்குப் பிரான்சிஸ் கிருபா எத்தனித்தார். அதற்குக் காலம் கை கொடுக்கவில்லை என்றார். 

மண்ட்டோவும் இந்த வகைமையில் வரக் கூடியவர்தானே. குடும்பப் பெண்களைவிட விலைமாதருடன் இருப்பதையே விரும்புகிறேன். இப்படியெல்லாம் சொல்வதற்கு எவ்வளவு கட்ஸ் வேண்டும்!? என்றேன்.

ஐயோ.....! அவரின் பிரார்த்தனை ஒன்று போதும். தன் வாழ்க்கையை ரசனைக்கு உட்படுத்தியதாகவே பார்க்கும் மனோநிலை அவருக்கு வாய்ந்திருந்தது. பெரும்பாலானோர், தன் வாழ்வின் மறுபக்கத்தை அது தரும் வலி, வேதனைகளைப் புறக்கணித்துவிட்டுச் செல்வதுதானே இயல்பாக இருக்கிறது. கொஞ்சம் நேரம் ஒதுக்கி ஏன் இவ்வாறு நிகழ்கிறது, காரணங்கள் என்ன, எப்படித் தீர்க்க முடியும் என்ற பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டுமல்லவா என்றார். 

இப்போது இருக்கும் எழுத்தாளர்கள் தப்பு செய்தாலும் தன் ஆளுமைச் சிதைவுக்குள்ளாகிவிடக் கூடாது என்பதற்காக மறைக்கத்தான் பார்க்கிறார்கள். போலியான ஆளுமையைப் பாதுகாக்க மிகத் தீவிரமாய் மெனக்கெடுகிறார்கள் என்றேன்.

சிறுது மௌனத்திற்குப் பிறது, அது உண்மை என்றார்.

சபாரி ஹோட்டலின் உள் கட்டமைப்பைப் பார்த்து மிகப் பழைமையானது போல இருக்கிறது என்றேன். ஆமாம், பிரபஞ்சன், தமிழினி வசந்த குமார், சி.மோகன் இன்னும் மிக முக்கியமான நவீன இலக்கியவாதிகள் இங்கு டீ குடித்திருக்கிறார்கள். பக்கத்தில்தான் கிரியாவின் பழைய அலுவலகம் இருந்தது என்றார். அப்படியென்றால் இடைவெளி சம்பத், லாசரா, கிரியா ராமகிருஷ்ணன், ஜி.நாகராஜன், கருணா பிரசாத் என எத்தனையோ ஜாம்பவான்கள் இங்கு டீ குடித்திருப்பார்கள் அல்லவா. ஆமாம், நாளை பச்சோந்தியும் இடம்பெறுவார் அல்லவா டியர்ஸ்... 

* ஆளுமைகளைச் சந்திக்கும் நம்பிக்கையை, தைரியத்தை உங்களுடனான உரையாடல் அளித்திருக்கிறது. உங்களுக்கு என் வணக்கங்கள் திரு.கருணா பிரசாத்

30.03.2022

புதன்கிழமை

  

Wednesday, March 30, 2022

பிணவறைக் கட்டடம் தெரியுமா!?


இரண்டு வாரங்களுக்கு முன்பு `நவீன ஓவியம் : புரிதலுக்கான சில பாதைகள்' என்னும் நூலை நண்பருக்குப் பரிசளிப்பதாகச் சொல்லியிருந்தேன். மிகவும் தனித்தலைந்து விட்டேன், நண்பர்களுக்காக நேரம் ஒதுக்கலாம், அவர்களிடம் உரையாடலாம் பழகலாம் என்கிற முயற்சியின் விளைவாக இதைத் தொடங்கியிருக்கிறேன். எல்லாருக்குமல்ல ; அரிதான நட்புக்குமட்டுமே! முதலில் பரிசல் செந்தில்நாதனிடம் கேட்டிருந்தேன். ``கையில் இல்லை, வாங்கித் தருகிறேன்'' என்று சொல்லியிருந்தார். ஒரு வாரம் கழித்து சி.மோகனிடம் விசாரித்தேன். போதிவனம் கருணா பிரசாத்திடம் வாங்கிக்கொள்ளுமாறு கூறினார். அவரின் தொடர்பு எண்ணை வாங்கிக் கொண்டேன்.    

2017 காலகட்டத்தில் வெய்யிலுடன் தடம் பணிகளை மேற்கொண்டிருந்தேன். இதழில் இடம்பெறும் அனைத்துப் படைப்புகளையும் திருத்தம் செய்து கொடுப்பேன். அவரும் நானும் மிகவும் நேசிப்புக்குள்ளான காலம். நான் என்னுடைய பணியை முடித்துவிட்டு ஒவ்வொரு நாளும் வெய்யிலைத் தேடிச் சென்று விடுவேன். பிறகு தடம் பணிகளைச் செய்து முடித்துவிட்டுத்தான் வீட்டுக்குச் செல்வேன். பிரின்ட்க்கு அனுப்பும் நாட்களில் இரவெல்லாம் விடிய விடிய பணிகளைச் செய்து முடித்து அதிகாலை மூன்று நான்கு மணிக்குத் திருவல்லிக்கேணியில் இருந்த அவரின் மேன்ஷன் அறைக்குப் புறப்படுவோம். 

அலுவலகத்தில் இருந்து அண்ணாசாலை வழியாகப் பேசிக்கொண்டே நடந்து சென்று, தேவி திரையரங்கின் அருகிலுள்ள கடையில் ஜுஸ் குடித்து விட்டுப் பின் மீண்டும் நடையைத் தொடர்வோம். அவருடன் பழகிய நாட்களில் அல்லது தடம் இதழ் பணியின் போது நிறைய கற்றுக்கொண்டிருந்தேன். தடத்தில் தொடராக வந்துகொண்டிருந்த சி.மோகனின் நவீன ஓவியங்கள் குறித்த கட்டுரைகள் குறிப்பாக சல்வடார் டாலியைப் பற்றிய கட்டுரையும் அதில் இடம்பெற்ற ஓவியங்களும் என்னில் புதிய திறப்பை, பார்வையை, கேள்விகளை, சந்தேகங்களை எழுப்பின. அக்கட்டுரையை வாசித்து ஓவியங்களுடன் பொருத்திப் பார்த்துக்கொண்டது என்னில் புதிய வெளிச்சத்தை உண்டாக்கியது. மேலும் சர்ரியலிஸம் சம்பந்தமான ஓவியங்கள், படைப்புகளைத் தேடிப் படிக்க ஆரம்பித்தேன். இன்றும் என் கவிதைகளில் ஆங்காங்கே தென்படும் சர்ரியல் தன்மைக்கு அக்கட்டுரை வழி அமைத்துக் கொடுத்தது எனலாம்.

26.03.2022 அன்று கொஞ்சம் சீக்கிரமாக அலுவலகம் வந்துவிட்டேன். சரியாக 9:30 மணியளவில் கருணா பிரசாத்தை அழைத்து என்னை அறிமுகம் செய்துகொண்டு நூல் வேண்டுமென்றேன். நீங்கள் எங்கிருந்து வருவீர்கள் என்னும் கேள்விக்கு, திருவல்லிக்கேணி என்றேன். ராயப்பேட்டையில்தான் அலுவலகம் வாங்க என்றவரிடம் லேண்ட்மார்க் விசாரிக்கும் போது பிணவறைக் கட்டடம் தெரியுமா என்று அவர்சொன்னது புரிந்தாலும் திடுக்கிடலுடன் ராயப்பேட்டை மருத்துவமனையா? என்றதும் ஆமாம் அந்த சிக்னலுக்கும் அருகே சபாரி ஹோட்டல் இருக்கும். அதற்கும் நான்கு கட்டடங்கள் தாண்டி வெளியில் ஃபர்னிச்சர் கடை இருக்கும் என்ற போது போலீஸ் ஸ்டேஷனுக்கும் எந்தப் பக்கம் என்றேன். அதற்குச் சற்று முன்னதாக சரவணா ஸ்டீல்ஸ் இருக்கும் அங்கு வந்துவிடுங்கள் என்றார். 21 பேருந்தைப் பிடித்து அங்கு இறங்கி, சரியாக அஹமத் காம்ப்ளக்ஸ் எதிரிருந்து அழைத்தேன். அதே காம்ப்ளக்ஸின் தரைத்தளத்தின் கடைசியில் வாருங்கள் என்றார். உள்ளே புனரமைப்புப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. கலை இலக்கியம் சார்ந்த தரமான படைப்புகள் மிகவும் மலிவு விலையில் தரலாம் என்கிற புதிய முயற்சியில்தான் போதிவனம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்று 2020 புத்தகக் காட்சியின் போது கருணா ஒரு பேட்டியில் கூறியிருப்பார். அப்படியான தரமான நூலுக்கு உதாரணம் `நவீன ஓவியம் : புரிதலுக்கான சில பாதைகள்'.

உங்களின் நாடகம் பெசன்ட் நகர் ஸ்பேசஸ் அரங்கில் பார்த்திருக்கிறேன் என்றேன். எக்மோரில் உள்ள நீலம் புரடக்‌ஷன் அலுவலகத்திற்குச் செஞ்சோலையைச் சேர்ந்த அருணாவைச் சந்திக்க வந்திருப்பதாகக் கூறினார். பின் முந்நூறு ரூபாய் கொடுத்து நூலைப் பெற்றுக்கொண்டு, டீ காபி எதுவும் சாப்பிடலாமா என்றேன். ஓ சாப்பிடலாமே என்றபடி இருவரும் புறப்பட்டுவிட்டோம். செல்லும் வழியில் வாகனங்களின் இரைச்சல் காதைக் கிழித்தது. அதனூடே என்னுடைய ஊரையும் படிப்பையும் விசாரித்தர். சொந்த ஊர் திண்டுக்கல், 1998 இல் சென்னைக்கு வந்தேன். அப்போது வேளச்சேரியில் இரண்டு அப்பார்ட்மென்ட்கள்தான் இருந்தன. ஒன்று வசந்த அப்பார்ட்மென்ட் ; மற்றொன்று அலாக்ரிட்டி. எட்டாம் வகுப்பு வரை ஊரில் படித்தேன். ஒன்பதில் இருந்து பன்னிரண்டு வரை வேளச்சேரி அரசுப் பள்ளியிலும் கல்லூரிப் படிப்பைக் குருநானக்கில் முடித்தேன். கிட்டத்தட்ட வேளச்சேரி என் கிராமமாகவே மாறிவிட்டது என்றேன். உண்மையிலேயே அது கிராமம்தான் என்றார். பொதுவாக புதிய மனிதர்களைத் தேடிச் சென்று பார்ப்பது, பழகுவது என்பதில் எனக்கு அவநம்பிக்கை உண்டு. ஆனால், கருணா பிரசாத்துடனான சந்திப்பு மிகவும் நம்பிக்கை அளிக்கக்கூடியதாகவும் மகிழ்ச்சியானதாகவும் இருந்தது. அம்மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் நாளை பகிர்கிறேன் டியர்ஸ். 

30.03.2022
புதன்கிழமை

Tuesday, March 29, 2022

அது ஒரு மட்டைப்பந்துக் காலம்

Photo Credit : pixels.com

நேற்று காலை சுமார் 6 மணியளவில் 51A பேருந்தில் ஏறி நடைப்பயிற்சிக்குச் சென்றேன். விஜய நகர் ரயில் நிலையத்திற்கும் தெற்கில் இருந்த மைதானத்தின் கருவேல மரங்கள் முழுவதும் வெட்டப்பட்டிருந்தன. டிக்கெட் போட பாலத்தின் நடுவில் பேருந்து நின்றது. அங்கே இறங்கி காலியான மைதானத்தை நிழற்படம் எடுக்க வேண்டும் போல் இருந்தது. நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிய நினைவுகள். அருகருகே ஸ்டெம்ப் நடப்பட்டு எங்கே யாரோ ஒருவன் பந்தையடிக்க வீசும் மட்டை மண்டையில் ஏதும் பட்டுவிடுமோ என்று தோன்றும். எல்லாம் பச்சை நிற டென்னிஸ் பந்துதான். மிகக் கூர்மையாகப் பார்த்தால்தான் நம்ம அணி அடிக்கும் பந்து தெரியும். இல்லையேல் பந்துடன் பந்து கலந்துவிடும். மழைக்காலத்தில் சிறு சிறு குட்டைகளுக்கிடையிலும் வெய்யில் காலத்தில் தகிக்கும் கானலுக்கிடையிலும் பந்துகள் பறந்தவண்ணம் இருக்கும். அது ஒரு மட்டைப்பந்துக் காலம். 

பாலத்தைக் கடந்து செல்லும் போதே இன்னும் திறக்கப்படாத சூழலியல் பூங்காவைக் கண்டேன். பாலாஜி காலனியில் இறங்கி, அங்கிருந்தே ஓட்டத்தைத் தொடங்கி, கைவேலி நிறுத்தம் வரை சென்று மீண்டும் பூங்காவை நோக்கி ஓடினேன். பூங்காவின் முன்னே இரு சக்கர வாகனங்கள் மட்டுமே நின்றுகொண்டிருந்தன. பூட்டிய பூங்காவைத் திரும்பத் திரும்பக் கண்டதில் சற்று சோர்வு தட்டியது. மீண்டும் கைவேலி வரை ஓடிவந்து மூச்சிரைக்கப் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன். வெகு நேரமாய்ப் பேருந்து வரவில்லை. எனக்கும் தெற்கில் நின்றுகொண்டிருந்த பெண் பின்னால் சென்று சற்று தொலைவில் ஓரங்கட்டப்பட்ட வாகனத்தில் ஏறிச் சென்றாள். அவளுக்கும் அருகில் இருந்த அம்மை அதிர்ச்சியுடன் வண்டி செல்லும் திசையைப் பார்த்துக்கொண்டிருந்தாள். வடக்கில் நின்ற முதியவர், அப்போதுதான் நண்பனை இறக்கிவிட வந்த வண்டியை நோக்கி ``இன்று போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம். வண்டி வருவது சிரமம், நான் முக்கால் மணி நேரமாய்க் காத்துக்கொண்டிருக்கிறேன்'' என்றதும், ``வண்டியில் ஏறு கிண்டியிலேயே விட்டு விடுகிறேன்'' என நண்பனை மீண்டும் ஏற்றிக்கொண்டார். 

அங்கிருந்து வீட்டுக்கு நடந்துசென்று விடலாம் என்று மெதுவாய் ஓட ஆரம்பித்தேன். மேம்பாலத்தின் அருகே சென்றதும் மேலே ஓடுவதா அல்லது பாலத்தின் கீழே ஓடுவதா என்கிற குழப்பம். பாலத்தின் ஓரமாய்க் கீழே ஓடினேன். பாலத்தின் அடியில் சேலைச் சுவர்களில் எண்ணற்ற குடும்பங்கள் வசித்து வந்தன. இன்னும் திறக்கப்படாத சுவரின் உள்ளே மனிதர்கள் உறங்குவது நன்கு தெரிந்தது. அவர்கள் உறங்கும் இடம்தான் பாலம் அமைப்பதற்கு முன்னிருந்த சாலை. அச்சாலையில் பதின்ம வயதில் நான் நடந்து சென்றிருக்கிறேன். எண்ணற்ற பறவைகளின் சிறகசைப்புகளை, கண்ணுக்கெட்டும் தூரம் வரை ததும்பும் நீரலைகளைக் கண்டிருக்கிறேன். அச்சதுப்பு நிலத்தில் இப்போது தண்டவாளம், மேம்பாலம், அதன் அடியில் குடும்பங்கள், நினைத்துப் பார்க்கவே அதுவோர் பூர்வப் பிறவியின் அழிக்க முடியாக் காட்சிகள் என்பது போல் தோன்றியது. வேளச்சேரி செல்ல அங்கு பாதை இணைக்கப்படவில்லை. பின்பு ரயில் நிலையத்தின் நடைமேடைகளையும் தண்டவாளங்களையும் கடந்துதான் மெயின் சாலையைப் பிடித்தேன். 

ரயில் நிலையப் பேருந்து நிறுத்தத்தைத் தாண்டிச் செல்கையில் ஓர் காட்சி கால்களின் ஓட்டத்தை நிறுத்தியது. சாலையோரம் போடப்பட்ட அஸ்திவாரத்தின் மீது நீண்டிருந்த கம்பிகளின் பின்னே 100 மீட்டர் இடைவெளியில் பள்ளமான காலி நிலம். இரு புறமும் வானுயர்ந்த கட்டடங்களுக்கிடையில் ஒற்றைக் குடிசை. எனக்கு அண்ணாமலை திரைப்படத்தில் இடம்பெறும் பால்காரனின் குடிலை நினைவூட்டியது. சாலையின் மட்டத்திற்குக் குறைவான நிலத்தின் உயரம்தான் வேளச்சேரி என்னும் கிராமத்தின் உயமாய் இருந்திருக்கும். நான் பார்க்க வேளச்சேரி 100 அடி சாலையின் மேற்குப் பக்கமிருக்கும் நிலமெல்லாம் இதன் உயரத்தில்தான் இருந்தது. 90 களின் பிற்பகுதியில் கணக்கற்ற மைதானங்கள் இருக்கும். அம்மைதானங்கள், அப்போது தங்கியிருந்த குடிசை, நண்பர்கள் எல்லாம் கணத்தில் தோன்றி மறைந்தன. மழையடித்தால் செம்மண் சாலையில் பார்த்துப் பார்த்துதான் கால் வைக்க வேண்டும், இல்லையேல் குண்டி மட்டுமல்ல;  மண்டையும் பழுத்துப் போய்விடும். ஒரு போராட்டம் எத்தனை நினைவுகளை மீட்டிவிட்டது. நினைவுகள் எல்லாம் போராட்டம் ; போராட்டமெல்லாம் நினைவுகள்!

29.03.2022
செவ்வாய்க்கிழமை
 

Sunday, March 27, 2022

தன்னிகரற்ற தனிப் பெரும் கலைஞனுக்கு...

பெருங்குடி ரயில் நிலையம். 18 அக்டோபர் 2020

நேசிப்பு என்பது தட்டையாகிவிட்ட காலத்தில் வாழ்கிறோம். நம்முடன் மிகவும் நெருக்கமாக இருப்பவர்கள், நம்மைப் பற்றிப் புறம் பேசிக்கொண்டு இன்னொரு நபரிடமும் நெருக்கமாக இருப்பர். காதலின் பொருட்டு, காமத்தின் பொருட்டு, பொருளின் பொருட்டு என இதற்கு எத்தனை பொருட்டு வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம். இப்படி பாவனையான உலகத்தில் சிற்சில நேரம் நாமும் பாவனை செய்ய நேர்வது நம் விதி. ஆழ்ந்த நம்பிக்கையோ, காதலோ எதுவுமற்று வாழ்வது சாபம். அறிவியல், விஞ்ஞானம், தொழில்நுட்பம் அனைத்தும் வளர்ந்தோங்கிய 21 ஆம் நூற்றாண்டில் கூட்டம் கூட்டமாய்த்தான் இருக்கிறோம், தனிமையைச் சுமந்தபடி. என்ன நடந்தாலும் நான் இருக்கிறேன், கவலைப் படாதே என்று சொல்லும் உறவு அரிதாகி விட்டது. இப்படியான காலத்தில் அன்பின் பேருருவாய் ஒருவன் வந்தான். அவனுடன் தெருத் தெருவாய் அலைந்தேன் ; நேரங்காலமின்றி உரையாடினேன் ; எண்ணற்ற புத்தகங்களைப் பெற்றேன் ; விலகி விலகி ஓடினாலும் துரத்தித் துரத்தி நேசிக்கப்பட்டேன்.

புதிய உடை வாங்கிக் கொடுத்தான் ; உரையாடலின் போது எதிர்த் தரப்பின் கருத்தையும் ஆமோதித்தான் ; அன்பை மட்டுமல்ல சண்டையும் செய்தோம் ; கோபம் கொண்டோம் ; பேசாமல் இருந்தோம் ; பின் அகங்காரத்தை உடைத்துக்கொண்டு மன்னிப்புக் கேட்டோம் இப்படி எத்தனையோ தருணங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. அன்பு காட்டுவதில் அன்னையாகவும் கண்டிப்பதில் தந்தையாகவும் நல்லது கெட்டது பகிர்வதில் நண்பனாகவும் இருப்பவன். 

வேலையற்ற கொரோனா காலத்தில் வாடகை கட்ட முடியாமல் வீடு காலி செய்யச் சொன்ன வீட்டு உரிமையாளர் ஒரு புறம் ; தினந்தோறும் கதவைத் தட்டும் வங்கி ஊழியர் ஒரு புறம் என அல்லலுற்ற போது, ஒரேயடியாக ஊருக்குச் செல்லும் சூழல் வந்தது. தகவல் அறிந்த உடன் தன் நண்பனின் உதவியால் என்னைச் சென்னையில் நிலைபெறச் செய்தவன். இப்படி எத்தனையோ சொல்லலாம். அதையும் மீறி அக்கொடிய காலத்தில் ``ஒன்னு ஊருக்குப் போகணும், இல்லையா இங்கேயே இருந்து கொடியை நாட்டணும்'' என்று அவன் உதிர்த்த வார்த்தைகள் இன்னும் அடிநெஞ்சில் நிலைத்திருக்கின்றன. 

1998 ஆம் ஆண்டு 13 வயதில் காஜா பட்டன் வைக்கச் சென்னை வந்த போது, இரண்டு மாதத்திலேயே நிராதரவற்று நிற்கையில் ``ஊரை விட்டுப் போலாமா, இல்லை இங்கே நின்று ஜெயிப்போமா'' என்று அண்ணனும் நானும் கலந்து பேசி ``நின்று ஜெயிப்போம்'' என்ற முடிவுக்கு வந்தோம். அப்படியான உறுதிதான் இது. எது நடந்தாலும் நான் இருக்கிறேன், கவலைப்படாதே என்று சொல்லுமவன் எனக்கு எல்லாமுமாய் இருப்பவன். 

யாருக்கும் விலை போகாமல், யாருடனும் சமரசம் செய்யாமல், பலத்தோடும் பலவீனத்தோடும் விளங்கும் தன்னிகரற்ற தனிப் பெரும் கலைஞன். என் பார்வையில் அறம் மிகுந்த மனிதன். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஷங்கர்!

27.03.2022
ஞாயிற்றுக்கிழமை

(மார்ச் 25 அன்று ஷங்கர்ராமசுப்ரமணியன் பிறந்த நாள்)

Saturday, March 26, 2022

இன்றும் வத்தல் கறி கிடைக்கவில்லை


வத்தல் கறி வாங்க புளியந்தோப்பு ஆட்டுத்தொட்டிக்குச் செல்ல வேண்டும் என்பது நேற்றிரவின் திட்டம். காலை 5 மணிக்கு எழுந்தேன். முள்ளங்கி நிலா வானில் மிதந்துகொண்டிருந்தது. பல் துலக்கிக் குளித்துவிட்டு செல்போன் ஒளியுடன் படியிறங்கிக் குறுக்குச் சந்தில் நடந்தேன். தபால் நிலைய இலையற்ற அரச மரம் எலும்புக் கூட்டைப் போல் உருக்குலைந்திருந்தது. காய்ந்த குச்சிகளின் நடுவே கிழக்கு வானில் ஒளிர்ந்தது ஒற்றை விண்மீன். M70, 570S ஆகிய பேருந்துகள் அடுத்தடுத்து வந்துகொண்டிருந்தன. சற்று நேரம் கழித்து V51 வந்தது. பேருந்தின் பின் பக்கம் ஒளி கொஞ்சம் சுடர்விட்டெரிந்தது. முன்பக்கத்திலும் மத்தியிலும் மங்கலாக இருந்தது. பெரும்பாலும் பயணத்தில் வாசிக்கும் பழக்கமுள்ள என் மனம் பின்பக்க வெளிச்சத்தைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் அல்லவா. ஆனால், மங்கலான மத்தியப் பகுதியைத்தான் தெரிவு செய்தது. ஏனென்றால் ஒளியில் யாரும் அமரவில்லை. மங்கலானதிற்கும் எதிராக இளம்பெண் ஒருத்தி அமர்ந்திருந்தாள். அவளைப் பார்க்க வேண்டும் என்றோ, அவளை சைட் அடிக்க வேண்டும் என்றோ நான் உட்காரவில்லை. நான் படிப்பதை அவள் பார்க்க வேண்டும் என்கிற நப்பாசை மட்டுமே! 

விரிந்த காகிதத்தின் நடுவிலும் வெளியிலும் என மாறி மாறிக் கண்களை ஊன்றினேன். சாலை கடக்கும் குதிரைவாலுக்காகச் சற்று நேரம் பேருந்தின் ஒளி அணைந்து ஒளிர்ந்தது. சின்னமலையில் இறங்கி மெட்ரோ பாலத்தின் அடியில் அலைவுறும் சிறகுகளைத் தேடினேன். இருட்டு வானம் சிவப்பு, மஞ்சள் நிறம் பூசி வெளுக்கத் தொடங்கியது. தேவாலயத்தில் தெரிந்தது`He is risen'. 

சின்னமலையில் இருந்து B18 பேருந்தில் ஏறி சென்ட்ரலில் இறங்கினேன். அங்கிருந்து புளியந்தோப்புக்கு 42 பேருந்தில் செல்ல வேண்டும். வத்தல் கறி வாங்கித் தருவதாகச் சொன்ன நண்பரிடம் எங்கு வரவேண்டுமென்று போனில் அழைத்துக் கேட்டேன். g3 நிறுத்தத்திற்கு வந்துவிடுங்கள் என்றார். பின்னி மில்லின் மதிற்சுவரின் அடியைத் துளைத்து மேலெழுந்து ஓங்கியிருந்தது அரசம் வேர்கள். அவை, பரந்து விரிந்த கூந்தலாய்ச் சுவரெங்கும் அசைந்தாடின. அடிச் சுவர் பெயர்ந்து விழுந்ததில் அடிவேர் சூரியனில் ஒளிர்ந்தது. காளையை அடக்கும் வீரன், பொது சுமக்கும் வண்டி மாடுகள், சண்டையிடும் சேவல்கள் ஆகியவை எதிர்ச் சுவரின் ஓவியத்தில் நிழலாடின. மேற்புரம் தொங்கும் கேபிள் வயரில் சிக்கிய கிளையைக் கவ்வ முயலும் பறவை, வெகு நேரத்திற்குப் பிறகு சிறகை மட்டுமே சுமந்து பறந்தது.

ஸ்கூட்டியில் வந்த நண்பரை அப்போதுதான் முதலில் பார்த்தேன். பின் அமர்ந்து சென்றால், சற்று தொலைவிலேயே புளியந்தோப்பு இறைச்சிக் கூடம் வந்தது. இரண்டாண்டுக்கு முன்பு பீஃப் கவிதைகள் எழுதும் போது வந்தது. சந்தை அடர்ந்த கூட்டமாய் இருந்தது. மார்பிலும் தோலிலும் உரித்த ஆடுகளைச் சுமந்தபடி அங்கும் இங்குமாய் அலைவுற்றிருந்தன மனிதத் தலைகள். கிழக்கு எல்லையை அடைந்து வத்தல் கறி விசாரித்தோம். டிகாஸ்டர் சாலையில் உள்ள A1 பீஃப் ஸ்டாலில் கிடைக்கும் என்று ஒருவர் கூறினார். ஆனால், அங்கு இல்லை. எதிரில் இருந்த சார்மினார் கடைக்கு முன்பு பேசிக்கொண்டிருந்தோம். சுவர் ஓவியராக இருக்கும் நண்பரிடம் என்னைப் பற்றிக் கூறினேன். பரஸ்பரம் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கும் போது, சாப்பிடுறீங்களா நண்பா என்றார். இருவரும் சாப்பிடுவதென்றால் ஓகே என்று சொல்வதற்குள் ஒரு டோக்கன் வாங்கி பிரியாணியையும் கையில் ஏந்தி வந்துவிட்டார். 

கொத்தாகக் குவிக்கப்பட்ட கறி மிகவும் மென்மையுடன் இருந்தது. குச்சி போன்ற குறு எலும்புகளையும் ஒரு துண்டு கிழமாட்டுக் கறியையும் ஒதுக்கி வைத்துவிட்டு சிறுகச் சிறுகச் சுவைத்தேன். சோற்றுக்குள் கறியைக் கறிக்குள் சோற்றைத் திணித்து அரிந்த வெங்காயத்தை மடித்துத் தின்றேன். நல்லி எலும்பு ஒன்று வாங்கி வரவா என்றார். இதையே திங்க முடியாமல் தின்கிறேன். இன்னொரு நாள் நல்ல பசியோடு வருகிறேன் இருவரும் சேர்ந்து சாப்பிடுகையில் நிறைய வாங்கித் தின்போம் என்றேன். சும்மா அல்வாவைப் போல் தித்திப்பாக இருந்தது. 

புளியந்தோப்பில் பெரும்பாலான இடங்களில் அம்பேத்கரின் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. திறந்த வெளி அடுப்பு, வாசலில் அமர்ந்து சாப்பிடுவது, திண்ணையில் தலை சீவுவது, குடத்தில் நீர் எடுத்துச் செல்வது, சாணி அள்ளுவது என அத்தனை காட்சிகளும் பெருங்கிராமத்திற்குள் நுழைந்தது போன்ற உணர்வைக் கொடுத்தன. 40 ஆண்டுகள் பழமையான குடியிருப்புகளில் பாசான் மட்டுமல்ல மரம் செடி கொடிகளும் முளைத்து வளர்ந்துள்ளன. இவை வளர வேண்டிய இடத்தில் வளரவில்லை. இம்மக்கள் வாழ வேண்டிய இடத்தில் வாழவுமில்லை. எனக்கோ! இன்றும் வத்தல் கறி கிடைக்கவில்லை. 

26.03.2022 

சனிக்கிழமை

Friday, March 25, 2022

தம்மை ஆட்டுவிக்கும் கலை





எக்ஸ்பிரஸ் அவென்யுவில் `Parallel Mothers' என்னும் ஸ்பேனிஷ் திரைப்படம் பார்க்கச் சென்றிருந்தேன். அரங்கினுள் கிட்டத்தட்ட 10 பேர்தான் இருந்திருப்போம். அவர்களில் இருவர் கணவன் மனைவியாக இருக்கலாம். நான்கு பேர் நண்பர்கள். மூன்று பெண்கள் ஒரு ஆண். முன் வரிசையில் ஒரு ஆணையும் பெண்ணையும் விட்டுவிட்டு மற்ற இரண்டு பெண்கள் பின்வரிசையின் நடுப் பகுதிக்குச் சென்றுவிட்டனர். ஜானிஸ், அனா என இரண்டு கர்ப்பிணிகள் ஒரே நேரத்தில் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். முக்கலும் முனகலும் அலறலும் அழுகையுமாக பிரசவத் தருணத்தின் வலிகளை நேரடியாகக் காட்சிப்படுத்தியிருந்தனர். டிஎன்ஏ பேட்டர்னிட்டி டெஸ்டிங் முடிந்து குழந்தைகளைத் திரும்ப ஒப்படைக்கும் போது மாற்றிக் கொடுத்துவிடுகின்றனர். அவர்களில் ஒரு குழந்தை இறந்து போக இன்னொரு குழந்தை என்ன ஆனது, உரிய தாயிடம் சேர்க்கப்பட்டதா இல்லையா என்பது மிச்சக் கதை.

படம் முடிந்து வெளிவரும் போது ஒருவிதமான போதைக்கு அலைந்தது மனம். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வணிக அங்காடியின் மையத்தில் பத்து மணி ஆகியும் சந்தை கலையாமல் இருந்தது. நறுமணத் தைலம், ஐஸ்கிரீம் இன்னும் ஏதேதோ வாசனை கலந்த ஜில்லென்ற காற்றில் ததும்பியபடி கிழக்கு வாசலை அடைந்தேன். குளிர் காற்று விடுத்து வெப்பம் ஆட்கொண்டது. மூங்கில்களால் ஆன கார்டன் பாருக்குச் செல்லலாம் என்று தோன்றியது. திறந்த வெளியில் அங்கங்கே மூங்கில் சின்னஞ் சிறிய மரமாய்ச் செழித்திருக்கும். ஆனால், அங்காடியின் எதிரில் டாஸ்மாக் என்னும் பலகை உள்ளிழுத்தது. சரி, சாலையோரம் இருக்கும் என்று சென்றால், குறுக்குத் தெருவின் நீண்ட இருள் என்னைக் கரம் பிடித்துச் சென்றது. அது ஜி.பி.சாலை. இரு பக்கமும் கடைகள் மூடப்பட்டிருந்ததால் இருளின் அடர்த்தி கூடியிருந்தது. தெருவில் நுழையவே அச்சமாய் இருந்தது. அங்கங்கே நின்றிருக்கும் வாகனத்தின் முன், பின், நடைபாதை என எங்கெங்கும் காணினும் ஒரே குடிகாரர்களின் வீதி உலாதான். இவர்களில் யாராவது போதையில் வந்து என் செல்போனைப் பிடிங்கி விடுவார்களோ, பையை வாங்கிக்கொண்டு காசு கேட்பார்களோ, அவர்களுக்கு இசையவில்லையென்றால் கொன்று விடுவார்களோ இப்படியான சிந்தனைகள் என்னை இறுக்கின. ஆனாலும் குடிக்க வேண்டுமென்னும் போதை ஒரு தெம்பைக் கொடுத்தது. முட்டுச் சந்தின் வலது புறம் இருந்த டாஸ்மாக்கின் இரும்புக் கம்பிகளுக்கிடையே ஒரு ஒயின் வேண்டுமென்றேன். 220 ரூபாய் ஒயின்தான் இருக்கிறது என்றார். எடிஎம் இல் 330 ரூபாய் இருந்தது. சரி கொடுங்கள் என்று Gpay செய்யச் சென்றேன். Gpay வசதி கிடையாது என்றதும் ஏமாற்றத்துடன் திரும்பினேன். 

டாஸ்மாக்கின் எதிரில் கூட்டம் அதிகமாய் இருந்தது. தெருவிளக்கில் ஒளிர்ந்த ஆலங்கிளையைக் கண்டு ரசித்த படி திரும்பினேன். மரத்தைத் தாண்டியதும் அடர் இருள். எப்படியோ குடிகாரர்களிடமிருந்து சற்று தூரம் வந்த நிம்மதி. நகர வீதிகளில் விடிய விடிய தனியனாய் அலைந்து திரிந்திருப்பதால் வேறு பயமில்லை. 

ஜி.பி.சந்தின் வழியாக மீண்டும் ஜி.பி.சாலையை அடைந்தேன். சவுத் இந்தியன் வங்கி ஏடிஎம் இருந்தது. அதிலிருந்து முந்நூறு ரூபாயை எடுத்து, எதிரில் இருந்த டாஸ்மாக்கில் ஒரு ஒயின் வேண்டுமென்று நூறு ரூபாயை நீட்டினேன். நீட்டின கையை ஒருவரும் சீந்துவாரில்லை. எனக்குப் பின் வந்த ஐந்து பேர் சரக்கு வாங்கிச் சென்று விட்டனர். சரக்குக் கொடுப்பவரில் ஒருவர் போதையாக இருந்ததால் என்னால் கோபப்பட்டுக் கேட்க முடியவில்லை. எப்படியோ வாங்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினேன். யாருமற்ற woods சாலையில் நடந்து வரும் போதே சாலையோரம் நின்று ஒயினைக் குடித்துவிடலாமா என்றிருந்தது. மனதை அடக்கிக்கொண்டு அண்ணாசாலையை அடைந்தேன். 18K பேருந்து சிக்னலில் நின்றிருந்ததைக் கண்டு வேகமாய் ஓடி ஏறினேன். 

ஒய்எம்சி வரை சென்று அங்கிருந்து வேறு ஒரு வண்டி பிடித்துச் சென்று விடலாம் என நினைத்தேன். ஆனால், டிஎம் எஸ் நிறுத்தத்திற்கும் முன் ஒரு மளிகைக் கடை திறந்திருந்ததால் சைடிஸ் வாங்க இறங்கிவிட்டேன். பேரிச்சை, முந்திரி, உலர்ந்த திராட்சை, செவ்வாழை, காராச்சேவு வாங்கிக்கொண்டு நடந்தேன். செவ்வாழையின் தோலை உரித்து இருட்டில் எறிந்துவிட்டேன். பின்பு, வெகு நேரமாய் டிஎம்எஸ் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தேன். வாகனம் எதுவும் வரவில்லை. சரி, ஒயினைக் குடித்துவிடலாம் என்று சாலையின் ஓரமாய்த் திரும்பி நின்று ஒயினின் மூடியைப் பல்லால் கடித்துத் திறந்தேன். என் வாழ்வில் முதல் முறையாக மதுப் போத்தலை நானே திறந்தது அப்போதுதான். மிடறு மிடறாகத்தான் குடிப்பதுதான் வழக்கம்.  அன்றென்னவோ பெருங்குடிகாரனைப் போல் மடமடவெனக் குடிக்க ஆரம்பித்தேன். என் குடியின் மீது பேருந்து வெளிச்சமடித்தது. மூடியும் மூடாமலும் பைக்குள் பாட்டிலைத் திணித்தேன். பேருந்தில் ஏறுவதற்குக் கூச்சமாகவும் பேருந்தின் உள்ளிருப்பவர்களைப் பார்க்க அவமானமாகவும் இருந்தது. இருக்கையில் அமர்ந்து பைக்குள் கைநுழைத்து ஒயின் கொட்டிவிட்டதா என்று தடவிப் பார்த்தேன். நட்டக்குத்தமாய் நின்றிருந்ததை நினைத்து மகிழ்ச்சியடைந்தேன். 

பேரிச்சை, உலர்ந்த திராட்சை, முந்திரி அனைத்தையும் இறங்குவதற்கு முன்பே தின்று முடித்துவிட்டேன். ஒய்எம்சியில் நாலைந்து இளைஞர்கள் நின்றுகொண்டிருந்தனர். பேருந்து நிழற்குடையில் பையை வைத்து எஞ்சியிருந்த ஒயினை எடுத்து ஒரே மூச்சில் குடித்துவிட்டேன். பசங்க முன்பு குடிக்க ஒரு மாதிரியாக இருந்தது. ஆதலால்தான் நிழற்குடைத் தூணின் பின்சென்று அதைச் செய்தேன். காராச்சேவின் உறையைக் கிழித்து வேடனைப் போல் தின்ன ஆரம்பித்தேன். நகரம் மெல்ல மெல்ல ஆட ஆரம்பித்தது. ஆட்டத்துடன் Rapido bike பதிவு செய்தேன். ஐந்து நிமிடத்தில் வந்த பைக்கில் ஏறி அமர்ந்து காராச்சேவு சாப்பிடுகிறீர்களா என்றேன். வேண்டாம் என்று மறுத்துவிட்டார். ஒரு துண்டு கூட மிச்சம் வைக்காமல் தின்றபடியே பயணித்தேன். நகரம், வானம், நட்சத்திரங்கள், வெளிச்சம், இருட்டு என எல்லாம் ஆட்டத்தைத் தொடங்கின. சற்று என்னை உற்றுப் பார்த்தேன். அட ஆட்டத்தில் பெரும் ஆட்டம் தன்னைத் தானே ஆட்டுவிப்பதுதான். 

25.03.2022
வெள்ளிக்கிழமை

நிலவில் கிணறு தோண்டலாமா!?

 

 


இரண்டு மூன்று நாட்களாக வளையல் வாங்கித் தரச் சொல்லிக் கேட்டுக்கொண்டிருந்தாள் மகள். மனைவி வாங்கிக் கொடுப்பாள் என்று சட்டை செய்யாமல் விட்டுவிட்டேன். மகனோ கிழிந்த இளஞ்சிவப்பு நிறப் பையைத் தைய்த்துத் தரச் சொல்லிக் கேட்டுக்கொண்டிருந்தான். இன்று இரவு தைய்த்துக் கொடுக்கிறேன் எனச் சாக்குப் போக்கிச் சொல்லி வந்தேன். அன்று மாலை அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் போது ஏதோ குற்றவுணர்வு என்னைக் குடைந்தது. உடனே மகள், மகன் இருவரையும் வாங்க பேக்கரிக்குப் போகலாம் என்று அழைத்துச் சென்றேன். பஜனை கோயில் தெருவாகச் செல்லாமல் பிள்ளையார் கோயில் தெரு வழியாக, மூத்திர நெடியடிக்கும் சந்தைக் கடந்து இருட்டில் ஒருவர் பின் ஒருவராகச் சென்றோம். செல்போன் வெளிச்சத்தால் இருட்டை விலக்கினேன், அதுவும் குறுங்கால்வாயின் கருங்கல் மீது சரியாகக் கால் வைக்க வேண்டும். இல்லையேல் புரட்டிப் போட்டுவிடும். தொழுவத்து வாசனையை நுகர்ந்தபடி ஓராண்டியம்மன் கோயில் தெருவில் உள்ள ஹாட் சிப்ஸ் கடைக்குச் சென்றோம்.

நேந்திரம், அச்சு முறுக்கு, பொறி உருண்டை வாங்கிக்கொண்டு கிளம்பும் போது பிளாக் ஃபாரெஸ்ட் கேக் வேண்டுமென மகள் அடம்பிடித்தாள். இன்னொரு நாள் வாங்கித் தருகிறேன், இப்போது இவற்றைத் தின்னுங்கள் என்றேன். மகள் வளையல் கேட்டது ஞாபகம் வர, வழக்கமாக அம்மாவுடன் எந்தக் கடையில் வளையல் வாங்குவீர்கள் என்றேன். தாத்தா கடையில் என்றாள். எங்கிருக்கிறது? இந்தத் தெருவின் கடைசியில், வாங்க நான் கூட்டிப் போய்க் காட்டுகிறேன் என்றாள். அக்காவுக்கு வளையல் வாங்குவது தெரிந்ததும் எனக்கும் ஏதாவது வாங்கித் தாங்க என்றான். முதலில் கடைக்குப் போவோம் என்றேன். 

தாத்தா கடையில் சிறுமியுடன் பெண்ணொருவர் இருந்தார். வளையல் வேண்டும் என்றதும் இருந்தவற்றைக் காட்டினார். குறைந்த வெளிச்சத்தில் மிகவும் சிறிய கடை அது. நிறைய வகைகள் இல்லை. இருப்பதில் பிடித்ததை வாங்கினோம். ஒரு ஜோடி இளஞ்சிவப்பு ; இன்னொரு ஜோடி மென் பச்சை என மொத்தம் 50 ரூபாய். மகனை நோக்கி 50 ரூபாய்க்குள் எதுவேண்டுமானாலும் வாங்கிக் கொள் என்றேன். ஏதோவோர் பொருளைத் தீவிரமாய்த் தேடினான். என்ன பொருள் என்று அவனுக்குச் சொல்லத் தெரியவில்லை. ஒருவழியாக வாசலில் தொங்கவிட்டிருப்பீங்க அல்லவா என்று மகள் சொன்னதும், ஓ அதுவா இப்போது இல்லை என்றார் கடைக்காரர். அந்தப் பொருளின் பெயர் நினைவில் இல்லை. சொப்புச் சாமான் வாங்கித் தாங்க என்றான். விலை கேட்டேன், 150 ரூபாய் என்றார். உனக்குத்தான் ஏற்கெனவே சொப்புச் சாமான் வாங்கிக் கொடுத்து இருக்கிறேனே, வாங்காத பொருளை வாங்கிக் கொள் என்றேன். அதுதான் வேண்டுமென அடம்பிடித்தான். எங்களுக்கும் பின் வந்த ஒருவர் 40 ரூபாய் தண்ணீர்ப் பொத்தலை எடுத்துக்கொண்டு 30 ரூபாய்க்குத் தரும் படி பேரம் பேசிக்கொண்டிருந்தார். அவர் பேசி முடித்ததும், தம்பி கேட்ட பொருள் எப்போது கிடைக்கும் என்று கடைக்காரரிடம் கேட்டேன். இன்னும் மூன்று நாளில் வந்துவிடும் என்றார். அப்போது வந்து வாங்கித் தருகிறேன் என்று ஒரு வழியாக இருவரையும் அழைத்து வந்துவிட்டேன்.    

வளையல்களை மகளும் ஸ்நாக்ஸை மகனும் எடுத்துக்கொண்டு வர மூவரும் பேசிக்கொண்டே படியேறினோம். இருவரையும் வீட்டுக்குள் போகச் சொல்லிவிட்டுச் சிறுநீர் கழிக்கச் சென்றுவிட்டேன். திரும்பி வந்து பார்த்தால், எனக்கு எதுவும் வாங்கித் தரவில்லை என்று தன் அம்மாவிடம் சொல்லிக் கட்டிலில் அழுதுகொண்டிருந்தான். அவனுக்கு எதுவும் வாங்கித் தராதது மனைவிக்கும் கோபம் என்பது பார்க்கும் போதே தெரிந்தது. இருவரையும் திட்டிவிட்டு வீட்டுக்கும் வெளியில் வந்து சுவரில் சாய்ந்தபடி இருண்ட மேற்கு வானை வெறித்துக்கொண்டிருந்தேன். சற்று நேரம் கழித்து வந்த மகன் தோளில் என்னை உட்கார வையுங்கள் என்றான். அவன் முன் குனிந்து குத்துக்காலிட்டேன். என் நெஞ்சுப் பகுதியில் ஒரு காலையும் முதுகுப் பகுதியில் இன்னோர் காலையும் போட்ட படி அமர்ந்தான். மொட்டை மாடியின் ஒரு முனைக்கும் மறு முனைக்கும் அவனைத் தூக்கிச் சென்று நிலவினைக் காட்டினேன். மகளும் நிலவொளியில் நனைந்தாள். எங்களின் காலடிகளால் மொட்டை மாடி மத்தளமிட்டது. கூண்டுக்குள் இருந்த பச்சைக் கிளிகள் பாடின. நிலாவில் வீடு கட்டுவதைப் பற்றியும் கிணறு தோண்டி நீர்ப் பாய்ச்சுவதைப் பற்றியும் கதைக்கலானோம். 

25.03.2022
வெள்ளிக்கிழமை

Thursday, March 24, 2022

கொலை கொலையாய்


வேளச்சேரி ரயில்வே மேம்பாலம் எருமை மாடுகளால் அதிர்வுற்றது. காற்றைக் குத்தும் கொம்புகள் சூரியனில் பிரகாசிக்க, 51B பேருந்து நெரிசலில் திக்கித் திணறுகிறது. கைவேலி நிறுத்தத்தில் இறங்கி ஓடும் போது நடைமேடை பின்னோக்கி நகரும். கொக்குகள் சிறகடிக்கும் இரும்புப் பாலத்தினடியில் சிறுநீர் நாற்றம். நடைப்பயிற்சி செய்பவரின் கனவில் கல்பாம்பு சீறிக் கொத்தும், புதர்கள் வேரொடுங்கிப் பிய்ந்தன. சிறகு விரித்த மரப் பட்டாம் பூச்சி அசையாது பறந்த வண்ணமாய் ஒரே இடத்தில். செக்கச் சிவந்த கால் பந்தாய்க் கிழக்கில் சூரியன். வெங்காயத் தாமரையை அமிழ்த்தும் சிறகுகள். நீர் நடுவே காய்ந்த மரங்கள் அரூபமாய் அலையடிக்கின்றன. தாயுடன் சிறுமிகள் கையேட்டின் பறவைகளின் நிறங்களைத் தடவிப் பார்த்துப் பெயர்ச்சொற்களின் பெயர்தலைப் பரிசோதிக்கும். புங்கங் காய்கள் கொலை கொலையாய்த் தொங்கும். கொலை கொலையாய்... எங்கும் எங்கெங்கும்....

25.03.2022
வெள்ளிக்கிழமை

Tuesday, March 22, 2022

ஷங்கரின் மூங்கில் நாற்காலி


தண்டீஸ்வரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்துகொண்டிருந்தேன். ஹோத்தாஸ் காபி கடையில் இருந்து கண்ணதாசன் கையசைத்தார். அருகே வேதா நாயக் இருந்தார். நலம் விசாரித்தபடி பேசிக்கொண்டிருந்தோம். ஒரு காபி குடியுங்கள் என்றதும் முதலில் மறுத்தேன். தொடர்ந்த அன்பின் கட்டளையை மறுக்க முடியவில்லை. இப்போதெல்லாம் பால் கலந்த தேநீர், காபியைத் தவிர்த்து வருகிறேன். வேலை எப்படி போய்க்கொண்டிருக்கிறது, பிள்ளைகளின் நலம் குறித்து பரஸ்பரம் பகிர்ந்து கொண்டோம். வீடு வெங்கடேஷ்வரா நகரில்தானே என்றேன். இல்லை விஜய நகர். ஜீவ கரிகாலன் வீடும் என் வீடும் அருகருகேதான் உள்ளன என்றார். அவர் வீட்டுக்கும் அருகே புதிய பேருந்து நிலையம் வரப் போவதாகவும் இரவு நேரங்களில் அதற்கான பணியின் போது கருவேல மரங்கள் வெட்டப்படும் ஓசை ஒலித்துக்கொண்டிருப்பதாகவும் கூறினார். வேத நாயக்கின் முக வீக்கம் கண்டு என்னாச்சு என்றேன். கை விரல்களில் தோலுரிந்து வருவதை இரு கைகளையும் நீட்டிக் காண்பித்தார். என்னாச்சு என்றே தெரியவில்லை ஒரு நாளைக்கு 150 முறை தும்மல் வருவதாகவும் கூறினார். யோவ் தும்மலைக் கண்டு வாடிக்கையாளர் கடைக்கு வராமல் போயிடப் போறாங்கய்யா என்று கண்ணதாசன் கிண்டல் செய்தார். சரி நான் மேலே செல்கிறேன் என்று ஆவி பறத்தலை ஏந்தியபடி வேதா சென்று விட்டார். 

வீட்டு வாடகை, கார் பார்க்கிங், மழைக்காலத்தில் வெள்ளம் வருவது பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருக்கையில் கறுப்பு உடையுடன் தெலுங்கு பிராமணர் தெருவிலிருந்து சாலையைக் கடந்தார் கவிதைக்காரன் இளங்கோ.  கணையாழியில் நான் உதவி ஆசிரியராகப் பணிபுரியும் காலத்திலிருந்தே கண்ணதாசனும் இளங்கோவும் பரிச்சயமானவர்கள். என்ன எதுவும் எழுதினீர்களா என்றார். உரைநடைதான் எழுதிக்கொண்டிருக்கிறேன். இன்னும் கவிதை எழுதவில்லை என்றேன். சரி, எழுதினால் அவசியம் அனுப்புங்கள் என்றார். கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக யாவரும் இணையதளத்திற்குக் கவிதைகள் கேட்டுக்கொண்டிருக்கிறார். கவிதை எழுதும் சூழலை இன்னும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை. முழுக்க உரைநடையில் கவனம் செலுத்தி வருகிறேன். எழுதினால் முதலில் யாவருக்கும் அனுப்ப வேண்டும். மேலே வாங்க போலாம் என்று இளங்கோ அழைத்தார். இல்லை நண்பா வீட்டுக்குச் செல்ல வேண்டும் இன்னொரு முறை பார்க்கலாம் என்று விடை பெற்றுச் சென்றுவிட்டேன்.

கீழறைக்குச் செல்லாமல் மேலறைக்குச் சென்றேன். பிள்ளைகள் படித்துக்கொண்டிருந்தனர். மாமா, கீழ போய் தூங்காமல் மேலேயே எங்களுடன் தூங்குங்கள். அலுவலகம் முடிந்து வருகிறீர்கள், சாப்பிடுகிறீர்கள் உடனே கீழ போய் விடுகிறீர்கள். திரும்பவும் காலையில் வருகிறீர்கள் சாப்பிடுகிறீர்கள் அலுவலகம் சென்று விடுகிறீர்கள். என்னம்மோ நாங்க மட்டுமே இருப்பதாகத் தோன்றுகிறது என்றாள். எனக்கும் ஒரு வார காலமாக இதே உணர்வு இருந்தது. சரி இன்றிலிருந்து மேலேயே தூங்குகிறேன் என்றேன். இதற்கு முன் பல நாள்கள் அப்பா எங்க கூட தூங்குங்கப்பா என்று அடிக்கடி மகள் கேட்டுக்கொண்டே இருந்தாள். கீழறைக்குச் சென்று உடை மட்டும் மாற்றிவிட்டு உடனே வருகிறேன் என்றேன். கூடவே மகனும் வந்தான். 

அப்பா இந்த மூங்கில் நாற்காலியை மேலே எடுத்துச் செல்லலாமா என்றான். அங்கு இடமில்லை வேண்டாம் என்றேன். நீங்க எடுத்திட்டு வாங்க நான் ஒரு ஐடியா தருகிறேன் என்றான். ``நான் ஒரு ஐடியா தருகிறேன்'' என்கிற வார்த்தைகளை மிகவும் ரசித்தேன். ரசித்ததை அறிந்த மகன் மீண்டும் ஒரு முறை அவ்வாறு கூறினான். நான் அந்த மூங்கில் நாற்காலியைத் தலைக்கு மேல் சுமந்த படி சென்றேன். இப்படித்தான் ஷங்கரின் வீட்டில் இருந்து அவர் வண்டிக்குப் பின்னமர்ந்து சுமந்து வந்தேன். கடந்த வாரம் அவர் வீட்டிற்குச் சென்ற போது இதன் விலை என்ன இருக்கும் என்றேன். நீங்க எடுத்துக்கங்க பச்சோந்தி என்றார். இல்லை, விலையை அறிந்துகொள்ளத்தான்  கேட்டேன் என்று தயங்கினேன். நூறு சதவிகிதம் சொல்கிறேன் நீங்க எடுத்துக்கங்க என்றதும் எடுத்து வந்துவிட்டேன். கல்யாணமான புதிதில் வாங்கியது என்றார். அவர் நினைவுகளுடன் என் வீட்டில் இருக்கிறது அந்த மூங்கில் நாற்காலி. 

கம்பிகளற்ற ஜன்னலின் அருகே அமர்ந்து பிள்ளைகள் கீழே எட்டிப் பார்த்து விடுவார்களோ என்கிற அச்சத்தில் இருக்கிறேன். அது வேறு இரண்டாவது மாடி. கட்டிலுக்கும் அலமாரிக்கும் இடையில் வைத்துவிட்டு, இங்கிருந்து நகர்த்தக் கூடாது என்று அன்புக் கட்டளை விதித்தேன். பின்பு, கேலிச்சித்திர வரலாறு நூலைச் சற்று நேரம் புரட்டிய படி இருந்தேன். மேலும் மூன்று புத்தகங்களின் பக்கங்கள் புரளும் சத்தம். நேற்றிரவு மகளைக் கட்டிக்கொண்டு மனைவியும் மகனைக் கட்டிக்கொண்டு நானும் உறங்க ஆரம்பித்தோம். 

23.03.2022
புதன்கிழமை


 

குடிக்க வேண்டும் என்பதுதான் மகா போதை - Red Wine Only


அலுவலகம் முடிந்து A51 பேருந்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தேன். சரியாக, நந்தனம் செல்லும் போது நண்பர் ஒருவரை போனில் அழைத்துப் பேசினேன். சமீபத்தில் நடைபெற்ற `கள்ளன்' திரைப்பட முன்னோட்டக் காட்சிக்குக் கடைசி நேரத்தில் வர முடியாதது குறித்தும் அங்கு எடுக்கப்பட்ட நிழற்படங்களிலும் வீடியோவிலும் உங்களைக் காணவில்லையே என்றும் விசாரித்தேன். பேசியிருக்கிறேன், அதைத் தனியாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்கள் என்றார். ஓ... அப்படியா சரி நான் பார்க்கிறேன் என்றேன். நீங்கள் கொடுத்த நாட்சுமே சொசெகியின் `பத்து இரவுகளின் கனவுகள்' வாசித்துக்கொண்டிருக்கிறேன், முடிந்ததும் தருகிறேன் என்றார். அவசியமில்லை, நான் வேறு ஒரு நூல் வாங்கிவிட்டேன் என்றேன். இல்லை குறிப்பு எல்லாம் எடுத்து இருக்கிறீர்கள் அல்லவா என்றதும் அதெல்லாம் ஒன்றுமில்லை, அந்த நூல் உங்களுக்கானது என்றேன். சற்று நேரம் கழித்து, இன்று கொஞ்சம் ஒயின் போலாமா என்றார். ஓ... தாராளமாகப் போலாம் என்றேன். சரி வேளச்சேரி வந்ததும் சொல்லுங்கள் பணம் அனுப்புகிறேன் என்றார். வேளச்சேரி விஜய நகரில் உள்ள Elight Tasmac இல் Misty Grapes 750 ML விலை கேட்டேன். அதற்குள் நண்பரிடமிருந்து Gpay இல் 500 ரூபாய் வந்து விழுந்தது. அங்கு Gpay வசதி இல்லையென்பதால், இருங்க கீழே சென்று ஏடிஎம் இல் பணம் எடுத்து வருகிறேன் என்றேன். எதற்கு அலைகிறீர்கள் ஏடிஎம் கார்டு இருந்தால் கொடுங்க ஸ்வைப் செய்து கொள்ளலாம் என்று டாஸ்மாக் ஊழியர் கூறினார். தினக்குடிக்கும் அரிதான குடிக்கும் இதுதான் வித்தியாசம். அவ்வப்போது டாஸ்மாக் வந்தால்தானே இதெல்லாம் தெரியும் என்றேன். அவ்வப்போது வாங்க சார் என்றார். இல்லையென்றால் வாங்கி வீட்டில் வைத்துக்கொண்டு வாரத்திற்கு இரண்டு முறை குடிங்க, உடலுக்கு நல்லது முகமும் பொலிவு பெறும். ஆனால், ஒயின் குடித்துவிட்டு விழித்திருக்காமல் நன்றாக உறங்க வேண்டும் என்றார். நல்ல ஆலோசனையாக இருக்கிறது. ஆனால், மற்றவர்களின் பேச்சை உடனே கேட்க மாட்டேன், இந்த விசயத்தில் கடைப்பிடிப்பேன் என்று நினைக்கிறேன். 

குடித்த பின் உண்டாகும் போதையை விட, குடிக்கப் போகும் முன் வரும் போதைதான் மகா போதை. விஜய நகர் பாலத்தினடியில் நின்றவாறு Rapido Bike Book செய்தேன். வேளச்சேரியில் இருந்து தில்லை கங்கா நகர் செல்ல 36 ரூபாய் காட்டியது. ஸ்டேட் பேங்கின் வாசலில் காத்திருந்தேன். ஐந்து நிமிடங்களில் வந்து நின்றது வாகனம். ஓடிபி எண்களைச் சொல்லி வாகனத்தில் ஏறினேன். வழி தெரியுமா என்றார். ரயில் நிலைய மேம்பாலத்தின் அடியில் வலது பக்கம் செல்ல வேண்டும். அங்கிருந்து நேர் வழி என்றேன். கொண்டாட்டத்தில் விண்மீன்களைப் பிடித்துச் சொட்டாங்கல்லாக்கிப் பல்லாங்குழி ஆடவேண்டும் போல் இருந்தது. ஒருவேளை தோழி ஒருத்தி இருந்தால், நிலவைப் பறித்து மஞ்சள் கிழங்காக்கி மேனியெங்கும் பூசிவிட வேண்டும். இப்படி ஏதேதோ கற்பனைகளில் மிதந்து செல்கிறேன். மரங்களின் நிழலினூடே தெருவிளக்கில் தனியாய், இருவராய், கூட்டமாய் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். நான் மொபைலில் உள்ள பழைய படங்கள் ஒவ்வொன்றாய் நீக்கியபடியே சென்றேன். நிழற்படங்களைப் போல் கணத்தில் இருட்டையும் ஒளியையும் அழிக்க முடியுமா என்கிற கேள்வியை அடுத்து வானுயர்ந்த கட்டடங்களை நிலத்திலிருந்து அழித்துவிட முடியுமா. இப்படியே போனால் கிறுக்குப் பிடித்துவிடும் போல். கொஞ்சம் செல்போனை அணைத்து உன் கற்பனைகளை மூட்டை கட்டி வை என்றது மனம். மெட்ரோ பாலத்தினடியில் மின்மினிப் பூச்சியாய்ப் பறந்துகொண்டிருந்தேன். 

நண்பரின் வீடு வந்து சிறிது நேரம் பேசிவிட்டுச் சமையல் பொருட்கள் வாங்க புறப்பட்டோம். தில்லை கங்கா நகருக்கும் எதிரில் உள்ள மெட்ரோ ரயில் பாலத்தினடியில் வண்டியின் வெளிச்சம் பாய்ந்தது. நடுச் சாலையில் ஶ்ரீ சர்வமங்கள ஶ்ரீ லஷ்மி நரசிம்மர் வீதி உலாவில் இருந்தார். தன் வீட்டு வாசலுக்கு நரசிம்மர் வரும் வரை குடும்பம் குடும்பமாக அவரவர் குடியிருப்பின் வெளியில் காத்திருந்தனர். வண்டி சென்று கொண்டே இருந்தது. கிட்டத்தட்ட நங்கநல்லூரின் நடுப் பகுதிக்குச் சென்றிருப்போம். Mothers World என்னும் சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்து நாட்டு முட்டை, காளான், ஆப்பிள், மாதுளை, வெள்ளரி, நெய் முறுக்கு, வறுத்த முந்திரி ஆகியவற்றை வாங்கி பில் போட்டுக்கொண்டிருக்கும் போது, காலையில் பிள்ளைகள் க்ரையான்ஸ் கேட்டது நினைவுக்கு வர இரண்டு க்ரையான்ஸும் Smile yellow color ball ஒன்றையும் வாங்கிக் கொண்டோம். வண்டியில் புறப்படும் போது, உணவில் எவ்வாறு ரசாயனம் கலக்கப்பட்டு நோய்க்கூறுகள் ஏற்படுகின்றன என்பதைப் பற்றிப் பேசிக்கொண்டு வந்தோம். மீனும் கூட கெடுதிதான் என்றேன். மீன் ஆரோக்கியமான உணவாச்சே என்றார். அதிலும் பார்மலின் போன்ற வேதிப் பொருள்கள் கலக்கின்றார்கள் என்றேன். சரியான இடம் பார்த்து வாங்க வேண்டும். முன்பெல்லாம் நண்பர்களுடன் காலை ஐந்து மணிக்கெல்லாம் பட்டினப்பாக்கம் சென்று விடுவோம். மத்தி, அயிலை, நெத்திலி, பாறை, சின்னக் கிழங்கா போன்ற மீன்களை வாங்கி வருவோம். கடலில் பிளாஸ்டிக் சேர்வதால் அதை உண்டு வாழும் மீனின் உடலில் சேகரமாகும். ஆனால், சிறிய வகை மீனில் பிளாஸ்டிக் குறைவாக இருக்கும். கண்ணுக்குத் தெரியாத மைக்ரோ பிளாஸ்டிக் சின்ன மீனில் குறைவாக இருக்கும். சின்ன மீனை பெரிய மீன்கள் சாப்பிடும் போது, பெரிய மீனில் பிளாஸ்டிக் அதிகமாக இருக்கும். அதனால்தான் கண்ட கண்ட நோயில் அற்ப ஆயுளில் போகிறோம் என்றார் நண்பர். 

சோபாவின் மையத்தில் அமர்ந்து டாக்டர் ஜே.பாலகிருஷ்ணாவின் `கேலிச்சித்திர வரலாறு' படித்துக்கொண்டிருந்தேன். `கேலிச்சித்திரங்களில் டார்வினும் பரிணாம வளர்ச்சியும்' என்னும் தலைப்பிலான கட்டுரை வேறொரு பார்வையைக் கொடுத்தது. அரசியல் தலைவர்கள், நடிகர்கள் கேலிச்சித்திரங்களில் வித விதமாக விமர்சிக்கப்பட்டுள்ளனர். இதற்கு டார்வினும் விதிவிலக்கல்ல போலும். பெரும்பாலான நேரங்களில் படிக்க ஆரம்பிக்கும் போது வேறு ஒரு சிந்தனை வாசிப்பினைக் கவ்விச் சென்று விடும். ஆனால், அப்போது மிகவும் முழுமனதுடன் படித்துக்கொண்டிருந்தேன். ஒயின் குடிப்பதையே நிறுத்திவிட்டு அப்படியே படிக்கலாமா என்று கூடத் தோன்றியது. இவ்வாறான கூர்மையான அவதானிப்பு எப்படிச் சாத்தியப்பட்டது? பஞ்சு மெத்தை போன்ற சோபாவா, பரந்த வீட்டின் அமைதியா, ஒயின் குடிக்கப் போகும் உற்சாகமா என்று யோசித்துக்கொண்டிருக்கையில் பொறித்த மீன், முட்டைக் குழம்பு, வறுத்த முந்திரி, நறுக்கிய வெள்ளரி, நெய் முறுக்கு என அடுக்கடுக்கான பண்டங்கள் மேசையின் மீது பரவ ஆரம்பித்தன. பட்டையான கத்தியில் ஒயினின் மூடி அறுத்துத் திறக்கப்பட்டது. ஒயின் ஊற்றப்பட்ட இரு கண்ணாடிக் குவளைகள் ஒன்றுடன் ஒன்று மோத இடைவிடாது பாடல்கள் ஒலித்தன.

22.03.2022
செவ்வாய்க்கிழமை 

Monday, March 21, 2022

கடவுளின் தலை மீது சிறுநீர்க் கழிக்காதே!


இன்று காலை 10:30 மணியளவில் எல்லிஸ் சாலையில் சும்மா நடந்து சென்று கொண்டிருந்தேன். மசூதியின் மென்பச்சை சுவரிலும் கேபிள் வயர்கள் கூடு போன்று பின்னப்பட்ட மின் கம்பத்திலும் அலைவுற்றிருந்தன புறாக்கள். கரும்புள்ளிகளாய் நீல வானில் சிறகுகள். எல்லிஸ் புரத்தின் நுழைவாயிலில் இருந்த மேசை மீது கோத்து மீந்த சாமந்தியும் ரோஜாவும் மல்லிகையும் குவிந்திருக்க, தகரத்தின் மீது ஆணியடிக்கப்பட்ட சிறிய இருக்கை சுற்றி நான்கு செங்கல் சூழக் கிடந்தது. அருள் மிகு ஶ்ரீ நாகாத்தம்மன் திருக்கோயிலும் 59 அ வட்ட திமுக அலுவலகமும் அருகருகே. உச்சியில் கந்தகம் படிந்த நாவல் மரம், Vicky sign கடைக்குள் வேர் விட்டிருக்கிறது. வெல்டிங் வைக்கப்பட்ட கம்பிகள் தரத் தரவென இழுத்துச் செல்லப்படும் ஓசை. இதன் எதிரில் இருந்த மிலிட்டரி உணவு விடுதி, சமீப நாட்கள் வரை உமா டிபன் கடையாய் உருமாறியிருந்தது. தற்போது அது இடிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. 

பெரு நகர சென்னை நடுநிலைப் பள்ளிக்குச் செல்லும் வழியின் வலது பக்கத்தில் உள்ள கும்மிருட்டு வசிக்கும் பாழடந்த கட்டடத்தில் ஆல, அரச மரங்கள் வேர் விட்டிருக்கின்றன. அதன் சுவர்க் கொடிக்கயிற்றில் ஈரம் சொட்டும் ஆடைகள். எதிரே இருக்கும் குலாம் முர்துலா தெருவின் முனையில் பிளவுற்ற சுவர் நடுவே பூவரசு மரம் கேபிள் வயர்களால் வளைத்துக் கட்டப்பட்டுள்ளது. அதன் அருகே தாமரை மீது வீற்றிருக்கும் விநாயகர் கையிலும் குறுந்தாமரை. கடவுளை வரைந்த கலைஞன் கடவுளின் தலைக்கு மேல் `இங்கு சிறுநீர் கழிக்காதீர்' என்று எழுதியுள்ளான். சிறுநீர்க் கழிக்க இடமா இல்லை.  

22.03.2022
செவ்வாய்க்கிழமை

வறுமை என்பது விதியல்லவே!


மதியமும் மாலையும் அம்மாவிடம் பேச அக்காவின் எண்ணுக்கு அழைத்திருந்தேன். இரண்டு முறையும் எண் பிஸியாக இருந்தது. அதன் பிறகு அம்மாவிடம் பேச வேண்டும் என்பதை மறந்துவிட்டேன். அம்மாச்சிக்கு உடல்நிலை சரியில்லையென்று மனைவி சொல்லியிருந்தாள். பேசணும் பேசணும் என்று நினைத்து மறந்துவிட்டேன். நேற்று இரவு வேகவைத்த சக்கரவள்ளிக் கிழங்கைப் பிள்ளைகளுடன் சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் அண்ணன் கான்ஃபரென்ஸ் அழைப்பின் மூலம் பேசிய அம்மா, என்ன சாமி போனே பண்ணமாட்டிக்கிற என்றார். இல்லம்மா... என்று இழுத்தேன். இரண்டாயிரம் ரூபாய் எனக்கு அனுப்பிவிட்டு, அங்க செலவுக்கு என்ன சாமி செய்யுற என்றார். அதெல்லாம் காசு இருக்கிறதும்மா என்றேன். மீண்டும் இரண்டாயிரம் அனுப்பியதைச் சொல்லவும், அட ஏன் அதையே சொல்கிறாய் என்றேன். இல்ல சாமி டவுனுக்குள்ள இருக்கிறீங்க, அதான் என்றார். 22 ஆண்டுகளாக நாங்க டவுனில்தான் இருக்கிறோம். ஒவ்வொரு அப்பா அம்மாவும் மாசம் பொறந்தா ஆயிரக்கணக்கில் பிள்ளைகளிடம் அனுப்பச் சொல்லி தொந்தரவு செய்கிறார்கள். நீயென்னடான்னா இரண்டாயிரம் ரூபாய் அனுப்பியதை நினைத்துப் புலம்புகிறாயே என்றேன். மௌனமாக இருந்தார்.

சரி உடல்நிலை எப்படி இருக்கிறது என்று வழக்கம் போல் கேட்டேன். அதான் சாமி, ஒரு தப்பு செய்திட்டேன் என்றார். என்னாச்சு என்றதும், மருந்து அடிக்கிற டப்பாவை உங்க அப்பா மாமரத்தில் தொங்க விட்டுருக்கிறார். அதை ஆடு தட்டிவிட்டிருக்கும் போல, கீழே காய்ந்து கட்டியாக இருந்தது. மர நிழலில் அமர்ந்து ஆடு மேய்த்துக்கொண்டிருந்த போது வெத்தலைக்குச் சுண்ணாம்பு இல்லையென்று அந்த மருந்துக் கட்டியைப் புட்டு மென்றுவிட்டேன் என்றார். என்னம்மா இப்படி வெறித்தனமாவா வெத்தலை போடுவ என்றேன். நல்லவேளை உயிர் பிழைத்துவிட்டேன் என்றவரிடம், இப்ப எப்படி இருக்கிறது என்றேன். நல்லா இருக்கிறது, கொஞ்சமாதான் சாப்பிட முடிகிறது என்றார். கவலைப் படாதே இன்னும் ஒரு மாதத்தில் நம்ம கஷ்டத்திற்கு ஒரு முடிவு கிடைக்கும் என்றேன். ஆமாம், கஷ்டப்படுகிறவங்க கஷ்டப்பட்டுகிட்டே இருக்கணும் என்பது ஒன்னும் விதியில்லையே!

21.03.2022
திங்கட்கிழமை

Sunday, March 20, 2022

சதுப்பு நிலத்தின் சூழலியல் பூங்கா!


ஒரு வாரம் ஆகிவிட்டது நடைப்பயிற்சிக்குச் சென்று. சோம்பேறித்தனம், இன்னொரு வகையில் சொல்வதென்றால் காலையில் எழுந்து படிக்க ஆரம்பித்து விடுகிறேன். இன்று காலை எழுந்ததும் உடன் தூங்கிய மகனை எழுப்பி மேலறைக்கு அழைத்துச் சென்றேன். அவனும் அம்மாவும் கொஞ்சிக் கொண்டிருக்கையில் பல்துலக்கி முகம் கழுவி விட்டு வந்தேன். நடைப்பயிற்சிக்குச் செல்வதைப் பார்த்த மனைவி, பாலும் 100 கிராம் சிறு பருப்பும் வாங்கிக் கொடுத்துட்டுப் போங்க என்றாள். நானும் வருகிறேன் என்று சொன்ன மகனிடம் பாலையும் பருப்பையும் ஒப்படைத்துவிட்டுக் கிளம்பிவிட்டேன். 

மேட்டுத் தெருவின் கிழக்கு வானம் தன் நெற்றியில் முழுச் சூரியனைச் சூடியிருந்தது. கோவாப் பழச் சூரியனைத் தூரத்து மொட்டை மாட்டியில் ஏறிப் பறித் தின்றுவிடலாம் போல் இருந்தது. கறுப்புத் தார்ச்சாலையில் வாசல் தெளித்த நீரெல்லாம் பாதரசம் போல் தளும்பிக்கொண்டிருந்தது. தளும்பலில் காலலைகள் முட்டி மோதி உடைந்து சிதற, அச்சிதறலின் ஓரிரு துளிகளை நீரற்ற சாலை இழுத்துச் சென்றது.  

51V வெள்ளைப் பலகை பேருந்தில் ஏறி, கைவேலியில் இறங்கி பள்ளிக்கரணைச் சாலையில் ஓட ஆரம்பித்தேன். ``என்னடா மடிப்பாக்கம் தானே போவ'' என்று தானே கேட்கிறீர்கள். இப்போது வேறு இடம். பள்ளிக்கரணைச் சதுப்பு நிலத்தில் கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்துவைக்கப்பட்டுள்ள `சூழலியல் பூங்கா' வுக்குச் செல்கிறேன். இப்பூங்கா `தேசிய காற்று சக்தி நிறுவனம்' (National Institute Of Wind Energy) அருகே அமைந்துள்ளது. நீருக்கிடையே நாணல் நிறைந்திருந்த பகுதி. கரையோரம் காளான் குடை போன்று குடில் இருந்தது. பேருந்தில் வரும் போது, போகும் போதெல்லாம் அந்தக் குடிலுக்குச் சென்று அமரவேண்டும் என்று நினைத்ததுண்டு. இப்போது அதன் மொத்த வடிவமும் உள் கட்டமைப்பும் மாறிவிட்டதை, இரண்டு வாரத்திற்கு முன்பு பள்ளிக்கரணை செல்லும் போது யதேச்சையாகப் பார்த்தேன். பாலாஜி காலனியில் இறங்கி உள்ளே சென்று பார்த்தால், கிட்டத்தட்ட பியூஸ் மனுஷ் உண்டாக்கிய சேலம் மூக்கனேரி போன்று காட்சியளித்தது. நடுவே நீண்ட பாதை. அதன் நடுவே பச்சைப் பசேலெனப் புல்வெளி. அதன் இருமருங்கிலும் நடக்கும் பாதை. இதன் வலது பக்கம் வறண்டு பிளந்த நிலம். இடது பக்கம் நீர் நிரம்பிய பகுதி. அங்கங்கே பறவைகள் அமர பட்ட மரக் குச்சிகள் நடப்பட்டிருந்தன. 

பூவரசு (Portia), நாவல் (Jamun), கொடுக்காப்புளி (Manila Tamarind), அரசு (Peepal), மகிழம் (Bulletwood), ஏழிலைப் பாலை (Blackboard), இலுப்பை (Indian Butter), மகாகனி (West Indian Mahogany), வேம்பு (Neem), நீர்க்கடம்பு (Freshwater Mangrove), நீர் மருந்து (Arjun), நீர்ப் பருத்தி (Sea hibiscus) ஆகிய மரங்கள் உள்ளன. இதன் கிழக்கே மாபெரும் குப்பைக் கிடங்கு அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 20 ஊழியர்கள் பணிபுரியும் இப்பூங்கா மேலும் விரிவுபடுத்தப்படும் என்று அங்கு புல்வெளிக்கு நீர்ப் பாய்ச்சிக்கொண்டிருந்த ஊழியர் ஒருவர் கூறினார். பெரும்பாலும் பணக்காரர்கள் வந்து செல்லும் நடைப்பயிற்குக் கூடமாக இச்சூழலியல் பூங்கா அமைந்துள்ளது. எப்போதும் இரு சக்கர வாகனங்கள் நிறைந்திருக்கும் வெளிப்பகுதி இன்று கார்களாலும் நிரம்பியிருந்தது. சென்ற வாரம் பள்ளி நண்பன் சுந்தரமூர்த்தியை அங்கு கண்டேன். மிக விசாலமான, பறவைகள், மூலிகை மரங்கள் நிறைந்த இச்சூழலியல் பூங்காவுக்கு நடைப்பயிற்சி வருகிறீர்களோ இல்லையோ சும்மா ஒரு முறைச் சுற்றிப் பார்க்கவாவது குடும்பத்துடன் செல்ல வேண்டும். குளிர்சாதன வணிக அங்காடிகளிலும் திரையரங்குகளிலும் எங்குமே செல்லாமல் வீட்டுக்குள்ளே அடைந்து கிடப்பவர்களும் இங்கே செல்லலாம். பறவைகளாய்ச் சிறகு விரித்துப் பறக்கலாம்...     

21.03.2022
திங்கட்கிழமை

கனத்தைத் துளைக்கும் இன்னோர் கனம்


நேற்று மாலை 6 மணிக்குப் `பண்டிதர் 175' நூலுக்கு விமர்சனக் கூட்டம் நடைபெறவிருந்ததை யொட்டி, பாண்டிச்சேரி செல்லலாம் என்றிருந்தேன். இரண்டு வாரத்திற்கு முன்பே ஆய்வு மாணவர் சந்துரு நிகழ்ச்சிக்கு வாங்க சேர்ந்து போலாம் என்று சொல்லியிருந்தார். நான் வருகிறேன் என்று உறுதியாகச் சொல்லவில்லை. ஆனாலும், வாங்க தல போயிட்டு வருவோம் என்றார். சரி போகும் போது சொல்லுங்கள் பார்ப்போம் என்றிருந்தேன். நேற்று போன் செய்து, என்னங்க சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டீர் என்றேன். எனக்கு ஒரு தேர்வு இருக்கிறது, நானே நிகழ்ச்சிக்குப் போவேனா என்று தெரியவில்லை என்றார். சரி நான் புறப்பட்டு வருகிறேன் என்றதும் தேர்வுக்குச் செல்வதால் மொபைலை வீட்டில்தான் வைத்துச் செல்வேன். ஒருவேளை போன் செய்வதாக இருந்தால் மாலை 7 மணிக்கு மேல் அழையுங்கள் என்றார். தம்பி கே.சியிடம் பாண்டிச்சேரிக்கு எனக்கு டிக்கெட் போட முடியுமா என்றேன். வாங்கண்ணா போலாம், இதெல்லாம் கேட்கணுமா என்றான். சரி கிளம்பிப் போய்விடலாம் என்று இருந்த போது, பையில் பணமில்லாமல் மேற்கொள்ளும் பயணம் பலகீனமான அனுபவத்தையே கொடுக்கும் என்றெண்ணி உள் மனம் சொல்ல பாண்டிச்சேரி பயணத்தை ரத்து செய்தேன். அப்படியிருந்தும் இலஞ்கிக் கண்ணனும் கே.சியும் வாங்கப் போலாம் என்று விடாப்பிடியாய் அழைத்தனர். முன்னே செல்லுங்கள் பின்னே வருகிறேன் என்று சொல்லிவிட்டேன். 

இலஞ்சிக் கண்ணனும் கே.சியும் இல்லாததால் வெறிச்சோடிப் போயிருந்தது. என்ன செய்யலாம் என்று யோசித்து, பரிசல் செந்தில்நாதனை அழைத்துச் சில புத்தகங்கள் வேண்டும் பணம் அடுத்த மாதம் கொடுத்து விடுகிறேன் என்றேன். நீங்க போன் செய்வீங்க, ஆனா வரமாட்டீங்க. பிறகு எதுக்குய்ய நேரத்தை வீணாக்குகிறீர் என்று செல்லமாய்க் கோபித்துக்கொண்டார். அவர் கோபப்படுவதிலும் நியாயம் உண்டு. சில முறை போன் செய்து வருவேன் என்பேன், ஆனால் போக மாட்டேன். காரணம் அலைச்சல். அவர் கடைக்குச் சென்று இரண்டு வருடங்களுக்கும் மேலாகிறது. கொரோனாவுக்கு முன்பு சென்றது. எல்டாம்ஸ் சாலை, மந்தைவெளி, திருவல்லிக்கேணி ஆகிய இடங்களில் கடை வைத்திருக்கும் போது அடிக்கடி சென்று வந்திருக்கிறேன். இப்போது கடைக்குச் செல்ல, கோயம்பேடு செல்லும் வழியில் எம்எம்டிஏ காலனி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி உள்ளே 2 கி.மீ தூரம் நடக்க வேண்டும். இப்போதெல்லாம் ஊருக்குச் செல்வதென்றால் கூட கோயம்பேடு பக்கம் செல்வதில்லை. நேரடியாக தாம்பரம்தான்.

வேளச்சேரிக்கு be4Books வந்த பிறகு பெரும்பாலும் புத்தகங்கள் அங்கேயே வாங்கிக் கொள்கிறேன். வீட்டுக்குச் செல்லும் போதும் அலுவலகம் வரும் போதும் be4Books கடை அருகில்தான் பேருந்து நிறுத்தம், அலைச்சலில்லை.

 `அம்பேத்கர் கடிதங்கள்', `நகைக்கத்தக்கதல்ல', `கிராம்சியின் சிறைக்குறிப்புகள்' ஆகிய நூல்களின் அட்டைப் படங்களை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து செந்தில்நாதனின் வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பிவிட்டுப் புறப்பட்டுவிட்டேன். வாசிக்க ஆரம்பித்த காலத்தில் `சிதம்பர நினைவுகள்', `சொற்கள்' போன்ற மிக முக்கியமான புத்தகங்களைச் செந்தில்நாதன் எனக்கு அறிமுகப்படுத்தினார். அண்ணா சாலையில் இருந்து அங்கு செல்லக் கிட்டத்தட்ட 1 மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது. ஒரு பக்கம் வெயில் மறுபக்கம் துரித உணவங்களின் தகிப்பு. இரண்டும் சேர்ந்து எரிக்கும் அனலில் நடந்து சென்றேன். அருள்மிகு ஶ்ரீ ஆதி ஞான சக்தி வினாயகர் ஆலயம் முன்பு நின்று, ``இபி வாசலில் உள்ள மாதா கோயிலுக்கு எப்படிச் செல்ல வேண்டும்'' என்று கேட்டேன். நேராய்ப் போய், இரண்டாவது லெஃப்ட் என்றார்.  

கடைக்கு முன்பு பலகார வாசனையை நுகர்ந்தபடி, உள்நுழைந்தேன். ஜன்னல் கம்பிகளுக்கு நடுவே தெரிந்த செந்தில்நாதனின் முகம் இன்முகத்துடன் வரவேற்றது. மூன்று பேரிடம் பேசிக்கொண்டபடி எனக்காக எடுத்து வைத்திருந்த நூல்களுடன் ஏற்கெனவே கேட்டிருந்த `புதுமைப்பித்தனின் கட்டுரைகள்' இருந்தது. அடுத்த அறைக்குச் சென்றிருந்த என் அருகில் வந்து மின் விசிறியைச் சுழலவிட்டு வேணும்கிற புத்தகங்களைப் பாருய்யா என்றவரிடம் தேநீர் குடிப்போமா என்றேன், இப்போதுதான் குடித்துவிட்டு வந்தேன் என்றார். புத்தகங்களைத் தெரிவுசெய்து அவரின் மேசை மீது வைத்தேன். ஆசிரியர் குழு சந்திப்பு நடக்கிறது, சரியா பேசலை என்று எதுவும் நினைத்துக் கொள்ளாதய்யா என்றார். அதெல்லாம் ஒன்றுமில்லை என்றபடி மீண்டும் உள்ளறைக்குச் சென்று பார்த்த புத்தகங்களின் மீதே கண்களைப் பதித்தேன். பின்பு, சரி நான் கிளம்புகிறேன் என்று சொல்லிவிட்டுப் புத்தகங்களை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன். ஆசிரியர் குழுவினரிடம் என்னை அறிமுகப்படுத்தினார். அறிமுகம் செய்து விடைபெற்றேன். 

ஒற்றைக் கையில் புத்தகங்களின் கனம். அக்கனத்தை வலது இடது கைகளில் மாற்றி மாற்றிச் சுமந்து நடந்தேன். D70 பேருந்தில் ஏறி, இருக்கையற்ற இருக்கையின் சாய்தளத்தின் பிடிமானத்தில் புத்தகங்களைத் தாங்கி நின்றேன். கனத்திலிருந்து ஒன்றை உருவினேன். அது பா.ரவிக்குமார் - கல்பனா மொழிபெயர்த்த `மிதக்கும் உலகம்' என்னும் ஜப்பானியக் கவிதைகள். பள  பளக்கும் வண்ணத்தாளில் ஒவ்வொரு கவிதைக்கும் மர அச்சு ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன. வாசிக்க வாசிக்க இறுக்கமும் கனமும் விலகி லேசாய் உணர்ந்தேன். ஒரு கனம் இன்னோர் கனத்தைத் துளைத்துவிடுகிறதல்லவா! 

20.03.2022
ஞாயிற்றுக்கிழமை

Thursday, March 17, 2022

எனக்குப் பிடித்த சட்டை - D BOX

 


நேற்று சாயங்காலம் திருவல்லிக்கேணி சாலையிலுள்ள பாபிலோன் கடைக்கு லெமன் டீ குடிக்கச் சென்றேன். இது ஆதாம் மார்க்கெட்டுக்கும் எதிரில் உள்ளது. கிட்டத்தட்ட நான் பணி புரியும் அலுவலகத்தில் இருந்து 1 கி.மீ தொலைவு கொண்டது. ஒரு முறை உதவி இயக்குநர் அன்புதான் இக்கடையை அறிமுகப்படுத்தினார். இலஞ்சிக் கண்ணன், கே.சி.ரஞ்சித் குமார், அன்பு ஆகியோருடன் காலை 11 மணியளவில் சென்றிருந்தேன். மிக ஸ்ட்ராங்கான இஞ்சி டீ  குடித்தோம். பின்பு, நண்பர் ரவியுடனும் தனியாகவும் என அவ்வப்போது சென்றதுண்டு.  

விகடனுக்கு வேலைக்குச் சென்றதிலிருந்து, வாசன் அவென்யூ அப்பு அண்ணா கடையில் தினசரி லெமன் டீ குடிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டேன். அதிலும் மாலை நேரத்தில் சூடான வறுத்த வேர்க்கடலையை மென்ற படி குடிக்கும் லெமன் டீ மிகவும் சுவையாக இருக்கும். அங்கு வேலையில் இருந்து நீக்கப்பட்ட பிறகு வீட்டில் கொடுக்கிறதைக் குடிக்க ஆரம்பித்தேன். அது வேறு முழு ஊரடங்கு காலம் என்பதால் விதவிதமான மூலிகை கலந்து கொடுத்தார்கள். கசப்போ, துவர்ப்போ உயிர்வாழ அத்தனையும் குடிக்கத்தான் வேண்டியிருந்தது. 

சமீபமாக மீண்டும் லெமன் டீ குடிக்க ஆரம்பித்துள்ளேன். என்னடா சாராயம் குடிக்கிற அளவுக்கு ஓவரா பாவனை செய்கிறாய் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஒயின் எனக்கு ரொம்பப் பிடிக்கும், இது பற்றி இன்னொரு தடவை பேசுவோம். பாபிலோன் கடையில் லெமன் டீ குடித்துவிட்டு வெளியில் வந்தால், அதன் அருகே டாஸ்மாக் இருந்தது. இப்போதெல்லாம் நாக்கு மதுவின் சுவைக்கும் உடல் மாதுவின் சுவைக்கும் வழக்கத்தை மீறி ஏங்கித் தவிக்கிறது. ஆனால் அனுபவிக்கத்தான் சூழல் அமையவில்லை. அதிலும் வொயினைக் கூட யாராவது வாங்கிக் கொடுத்துவிடுகிறார்கள் அல்லது கேட்டு வாங்கிக் கொள்ள முடிகிறது. மாதுவின் சுவைக்கு....?! எவ்வளவு அசிங்கமா பேசுகிறான் பாரு இவன்லாம்.... என்று உணர்வது புரிகிறது. இந்தச் சமூகத்தில் எதைப் பேச வேண்டுமோ அதைப் பேச மறுக்கிறோம். சரி இதுக்கு மேல இதைப் பற்றிப் பேசினால் என்னைத் தீவிரவாதியாய்ப் பார்ப்பீர்கள். நான் டாஸ்மாக் என்ற அந்தப் பெயர்ப் பலகையை ஏக்கத்தோடு பார்த்து விடைபெற்றேன். 

சற்று தொலைவில் D Box Mens Wear என்னும் துணிக்கடையின் கண்ணாடியில் வைக்கப்பட்டிருந்த சட்டைகளில் ஒன்று மிகவும் பிடித்திருந்தது. உள்ளே சென்று விலையை விசாரித்தேன், 590 என்றார் கடைக்காரர். எவ்வளவு குறைக்கலாம் என்றால், 40 ரூபாய் குறைத்து 550 ரூபாய்க்குத் தரலாம் என்றார். கடையில் M Size கொண்ட அனைத்துச் சட்டைகளையும் பார்த்தேன். எதுவும் பிடிக்கவில்லை. சரி, இதைக் கொடுங்க என்று ட்ரையல் ரூமில் சென்று போட்டுப் பார்த்தேன் மிகவும் கச்சிதமாக இருந்தது. 500 ரூபாய்க்குத் தரமுடியுமா என்றேன். வராது என்று கடைக்காரர் சொல்லிவிட்டார். ஏடிஎம் கார்டைக் கொடுத்து சங்கேத எண்களை அழுத்தினேன் 300 ரூபாய் மிச்சத் தொகை என்று என் மொபைலுக்குச் செய்தி வந்தது. இதுவரை வாங்கியதில் எனக்குப் பிடித்த சட்டைகளில் இதுவும் ஒன்று. பிடித்ததைப் பகிர்கிறேன் டியர்ஸ்...

17.03.2022
வியாழக்கிழமை

நிலமிழந்தவர்களின் சமரசமற்ற போராட்டம் - `பட'

அதிகாரத்தின் சுரண்டலை எதிர்த்துத் தொடர்ந்து போராடிக்கொண்டுதான் இருக்கிறோம். அதிகாரமோ தொடர்ந்து நமக்குத் துரோகம் செய்துகொண்டே இருக்கிறது. துரோகம் தொடர்ந்துகொண்டே இருக்கும் போது போராட்டம் மட்டும் அறுந்துவிடுமா என்ன? மதம், சாதி, இனம், மொழி, குடும்பம், நட்பு, காதல் அனைத்தும் துரோகத்திற்கும் மீறலுக்கும் இடையேயானவை என்றே வரலாறு நமக்குச் சொல்கிறது. சந்ததிகளுக்காகத் தம்மைத் தியாகம் செய்யும் களப் போராளிகளின் நெஞ்சுறுதிதான் நம் நிலத்தை, பண்பாட்டை இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது. 

மார்ச் 10 ஆம் தேதி வெளியான `பட' என்னும் திரைப்படம் `ஆதிவாசி பூமி ஆதிவாசிகளுக்கே' என்னும் சித்தாந்தத்தைச் சமரசமின்றி உரக்கச் சொல்கிறது. கேரளாவில் 1996 ஆம் ஆண்டு அக்டோபர் 4 அன்று நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் கமல் கே.எம் இயக்கியிருக்கிறார். கேரள அசெம்ளியில் 140 எம் எல் ஏக்கள் `ஆதிவாசிகள் சட்ட'த்தை  நிறைவேற்றுகிறார்கள். இதனால் பாதிக்கப்பட்ட ஆதிவாசிகள் இச்சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டுமெனப் போராடுகிறார்கள். அதிகாரம் போராட்டக்காரர்களின் மீது தாக்குதலைத் தொடுக்கிறது. வியர்வை படிந்த நிலமெங்கும் ரத்தம் சிந்தவைக்கிறது. காயங்களோடும் கதறலோடும் எரியும் புகை மூட்டங்களுக்கிடையே ஓடி ஒளியும் மக்களைத் துரத்தித் துரத்தித் துன்புறுத்துகிறது. போராட்டத்தினால் எந்தப் பலனும் இல்லை என்பதை உணர்ந்த ஆதிவாசிகள் `அய்யங்காளி படை' என்று தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு பாலக்காடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகுந்து ஆட்சியரைப் பிணையக் கைதிகளாக்கிச் சில நிபந்தனைகளை வைக்கிறது. நிபந்தனைகளுக்கு அதிகாரம் செவிமடுத்ததா, பிணையக் கைதி ஆட்சியர் என்ன ஆனார் என்பதே `பட'.

செய்தித்தாள்கள் வடது இடது மேல் கீழ் என அத்துணைப் பகுதிகளிலும் எரிந்து சுருளும் பின்னணியில் திரையில் எழுத்து பொறிக்கப்படும். முதல் காட்சி வானில் இருந்து அடர்ந்த மரங்களினூடே தடாகத்தை நோக்கிச் செல்கிறது என்று பார்த்தால், அதன் அருகே உள்ள குறும்பாறையில் விளையாடும் சிறுவர்களை நோக்கிச் செல்கிறது. ஓடியாடுகையில் அதில் ஒரு சிறுவன் சிறு குச்சியால் வேர்களினோரம் இருக்கும் புற்றுகளை இடித்துக்கொண்டிருப்பான். சிறுமி ஒருத்தி அவனிடமிருந்து குச்சியைப் பிடுங்கிக்கொண்டு ஓடுவதும் அவளை இவன் துரத்திச் செல்வதும் வானுயர்ந்த ஆரண்யம் வெறுமனே வனமல்ல ; இது சூரியன் ஒளிரும் எங்கள் தாயின் கருவறை, அறுபடாத தொப்புள் கொடி, உறையாத ரத்த நெடி என்றெல்லாம் நமக்கு அறிவுறுத்துகிறது. நடிகர்கள் குஞ்சாக்கோ போபன், விநாயகன், ஜோஜு ஜார்ஜ், திலீஷ் போத்தன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நிஜப் போராளிகளின் உணர்வுகளைத் தங்களின் தேர்ந்த நடிப்பால் மிகத் துல்லியமாய் வெளிப்படுத்துகிறார்கள். எளிய காட்சிகளிலும் வலிமையான இசையால் மிரட்டுகிறார் விஷ்ணு விஜய். போராட்ட வடிவத்தைக் காவல்துறை சீர்குலைக்க நினைக்கையில், ஆட்சியரின் மண்டை மீது துப்பாக்கியை நீட்டி ஆட்சியகத்தின் ஒரு பகுதியைக் குண்டுவைத்துத் தகர்த்தி மேலும் நம்மைப் பதற்றம் கொள்ளச் செய்கிறது. ஆனால், சமரசப் பேச்சுவார்த்தையின் போது எங்கள் வசம் இருப்பவை பொம்மைத் துப்பாக்கியும் வெடி மருந்தில்லாக் குழாய்களும்தாம் என்பது நம்பும்படியாக இல்லை. போராட்டங்களை மேற்கொள்ளும் பெரும்பாலோர் ஒரு கட்டத்தில் அதிகாரத்திடம் அடிபணிந்துவிடுகின்றனர். இதனால் அதன் வடிவங்கள் நீர்த்துப் போகின்றன. ஆனால், சமரசமற்ற போராட்டத்தின் சாட்சியாக இருக்கிறது `பட'. 

வேடிக்கை பார்ப்பவர்களைக் கொஞ்சம் கோபம் கொள்ளவும் எப்போது நிலத்தை மீட்போம் என ஏங்குவோரை கொஞ்சம் ஆற்றுப்படுத்தவும் செய்யும் `பட', அதிகார மட்டத்தை அசைத்துப் பார்த்திருக்கிறது. என்னவிதமான விளைவுகளை வேண்டுமானாலும் செய்யட்டும், ஆதிவாசி பூமி ஆதிவாசிகளுக்கே!

 

17.03.2022
வியாழக்கிழமை
   

Wednesday, March 16, 2022

கண்ணாடியில் ஒளிந்த பிம்பம்


51A பேருந்திலிருந்து தண்டீஸ்வரத்தில் இறங்கினேன். லதா சூப்பர் மார்க்கெட் எதிரில் நின்றபடி பேன்ட் பாக்கெட்டிலிருந்து செல்போனை எடுத்த போது, இரண்டு தவறிய அழைப்புகள் இருந்தன. ஒன்று மனைவியிடமிருந்து ; மற்றொன்று நண்பர் நவீனிடமிருந்து. முதலில் மனைவியை அழைத்து என்ன வாங்கி வரவேண்டும் என்றேன். ஒன்றும் வேண்டாம், வந்துவிட்டீர்களா என்று கேட்கத்தான் அழைத்தேன் என்றார். பஜ்ஜி, வடை எதுவும் வேண்டுமா என்றால், சாப்பிடும் நேரத்தில் எதற்கென்று சொல்லிவிட்டார். எதிரில் நடைவண்டியில் பலாவிலிருந்து சுளைகளைப் பிரித்து அதன் முனை நீக்கியதைக் கண்டதும், பலாச்சுளை வாங்கி வரவா என்றேன் ம்ம்... வாங்கி வாங்க இதையெல்லாம் கேட்டிட்டு இருக்கீங்க என்றார். கடைக்கு அருகில் சென்று ஒரு கூறு 20 ரூபாய் என்பதை அறிந்துகொண்டு, 30 ரூபாய்க்குக் கொடுங்க என்றேன். என் அருகில் நின்றவர் 100 ரூபாய்க்கு வாங்கிச் சென்றார். சரி, நம்ம ஒரு ஐம்பது ரூபாய்க்காவது வாங்கலாம் என்று 1/4  கிலோ வாங்கி வந்தேன். மகள் பழங்கள் சாப்பிடமாட்டாள். அவளுக்கு என்ன வாங்கலாம் என்று யோசிக்கையில் பேரீச்சம் பழம் நினைவுக்கு வந்தது. பழங்களில் இது ஒன்றைத்தான் சாப்பிடுவாள். 

அருகில் கண்ணாடிச் சுவர்களால் ஒளிர்ந்துகொண்டிருந்த ஐயங்கார் பேக்கரிக்குச் சென்றேன். உயரத்தில் இருந்த கரும் பேரீச்சையின் விலை 135 என்பதைக் கேட்டதும் எடுக்கச் சொன்னேன். அருகில் 1/2 கிலோ பக்கோடா வேண்டுமென்று சொல்லிய பெண் கண்ணாடிச் சுவரை நோக்கி கைவீசம்மா கைவீசு என்றபடி குழந்தையைப் போல் நடந்தாள். வயது 35 இருக்கும். குண்டான உடல் வாகு. கையில் இருந்த புத்தகங்களைக் கண்ணாடி மேசை மீது வைக்கும் போது அவர் நடந்ததை எண்ணி மென்மையாய்ச் சிரித்துவிட்டேன். காசைக் கொடுத்துவிட்டு மீதிச் சில்லறையை வாங்கும் தருணத்தில் மீண்டும் அவளைப் பார்த்தேன். தன்னை முழுவதுமாய்த் திருப்பி என்னை நோக்கிக் கூர்ந்து பார்த்தாள். இமைகளை மேல் உயர்த்தி ஆள்காட்டி விரலால் புருவத்தைச் சொரிந்தபடி திரும்பிவிட்டேன். சில்லரையைக் கொடுத்த கடைக்காரர் அந்தப் பெண்ணை உர்ரென்று முறைத்தார். புத்தகங்களையும் பழங்களையும் எடுத்த பிம்பம் கண்ணாடியில் ஒளிந்தது. 

சாலையைக் கடந்து பேட்டா ஷோரும் சுவர் திட்டில் பையை வைத்துப் பழங்களை உள் திணித்துப் புத்தகங்களைக் கையில் ஏந்தியபடி நடந்தேன். `கூர்மையாய்ப் பார்த்த பெண்ணை நோக்கி மீண்டும் ஒரு புன்னகை செய்திருக்கலாம் ; கையசைத்து ஒரு ஹாய் சொல்லியிருக்கலாம்; என்னை உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டிருக்கலாம்' என்று எண்ணியபோது சக்தி அரிசி மண்டி வந்துவிட்டது. 1/2 கிலோ பாசிப் பருப்பு 60 ரூபாய், பட்டாணி 1/2 கிலோ 50 ரூபாய், கடுகு 15 ரூபாய்க்கு வாங்கிக்கொண்டு மேட்டுத் தெருவின் இருளையும் ஒளியையும் கடந்து சென்றேன். பஜனை கோயில் தெருவின் முனையில் புஸ்ரா மளிகைக் கடைக்காரர், கடைக்கும் வெளியில் வாடிக்கையாளர் ஒருவரிடம் பேசிக்கொண்டபடி என் கைகளையே பார்த்துக்கொண்டிருந்தார். ஏனோ பருப்பு, பட்டாணிகளைப் பையில் திணித்துவிட்டுப் பழங்களைக் கையில் ஏந்திச் சென்றிருக்கலாம் என்று தோன்றியது. `சரி தவறிய இரண்டாவது அழைப்பு' என்னவானது என்று நீங்கள் கேட்பது காதில் ஒலிக்கிறது. கொஞ்ச நேரம் கழித்துச் சொல்கிறேன் டியர்ஸ்.... 

16.03.2022
புதன்கிழமை

Tuesday, March 15, 2022

The Great Lifco Dictionary


கடந்த செவ்வாய்க்கிழமை அலுவலகம் முடிந்து வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தேன். பேருந்து கிண்டியை அடைந்த போது  அழைத்த மனைவி, வரும் போது Lifco Dictionary வாங்கி வரும்படி கூறினார். தண்டீஸ்வரத்தில் உள்ள இந்தியன் புத்தகக் கடையில் Lifco அகராதி இல்லையென்று சொல்லிவிட்டார்கள். சரி நாளை வாங்கிக் கொள்ளலாம் என்று வீட்டில் சொல்லிவிட்டேன். மறுநாள் தேவி திரையரங்கப் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிச் சாலையைக் கடந்து எதிர்த் திசையில் சென்றுகொண்டிருந்தேன். பெரும்பாலும் நடைமேடைப் புத்தக் கடையை வேடிக்கை பார்த்த படிதான் செல்வேன். இக்கடை தேவி திரையரங்க நுழைவாயிலுக்கு முன்பு வலது பக்கத்தில் இ.எல்.எஸ் புத்தகக் கடைக்கு அருகில் நடைமேடை மீது அமைந்துள்ளது. கடைக்காரர் ஒரு பெண்மணியிடம் பேசிக்கொண்டிருந்தார். அவர் பேச்சுக்குள் நுழைந்து Lifco அகராதி இருக்கிறதா என்றேன். இருக்கிறது என்பது போல் தலையசைத்தார். பேச்சை சற்று நேரம் தொடர்ந்த படி இருந்ததால், ஐயா அகராதி இருக்கிறதா என்று மீண்டும் கேட்டேன். அவர்கள் இருவரும் தீவிரமாகப் பேசியதைக் கண்டு அமைதியுற்றேன். ``என்ன செய்வது எல்லாம் அவரவருக்கே தெரியணும்'' என்றபடி விடைபெற்றனர்.

புத்தகங்கள் அடுக்கிவைத்திருந்த மேசைக்கு அடியில் குனிந்து தடித்த நூல் ஒன்றை எடுத்துத் தூசி தட்டிக்கொடுத்தார். நீல நிறத்தின் மேல் மஞ்சள் பூக்கள் பூத்திருந்த Spine பக்கத்தில் வெள்ளைத்தாள் ஒட்டியிருந்தது. அதன்மீது `The Great Lifco Dictionary' என்று எழுதப்பட்டிருந்தது. பழுப்பு நிறப் பக்கங்கள் என்னை வசீகரித்தன. பக்கங்கள் அனைத்திலும் தண்ணீர் பட்டது போன்ற கறை படர்ந்திருந்தது. ஒரே ஒரு பக்கம் மட்டும் பாதி கிழிந்த அகராதியின்  விலையைக் கேட்டேன். 200 ரூபாய் என்றார். விலை கொஞ்சம் குறைக்க வாய்ப்பிருக்கிறதா என்றேன். இல்லைங்க அய்யா, பக்கங்கள் அதிகமுள்ளது. படிக்க அருமையாக இருக்கும் என்றார். கையில் பணம் இல்லை. அண்ணா திரையரங்கின் வாசலில் இருந்த ஏடிஎம்மைக் காண்பித்து, இருங்க பணம் எடுத்து வருகிறேன் என்றேன். ஏன் அவ்வளவு தூரம், இதோ பக்கத்தில் இருக்கிறது என்று இன்னொரு ஏடிஎம்மைக் காண்பித்தார். கல்லூரி படிக்கும் போது ஒரு புது Lifco அகராதி வாங்கியிருந்தேன். அது இப்போது கிழிந்துவிட்டது. சில பக்கங்கள் தொலைந்துவிட்டன. கிழிந்ததை ஒட்ட வைக்கலாம்; தொலைந்ததை மீட்க முடியாது. முடியாததை முயன்று முயன்று ஏன் இருப்பதையும் தொலைக்க வேண்டும். இப்போது ஒன்றே ஒன்றுதான். கிழிந்துவிடாமல் கனத்த பழுப்பு நிறப் பக்கங்களை வீட்டில் சேர்க்க வேண்டும்.

16.03.2022
புதன்கிழமை

Friend Request ஐ எப்போது Accept செய்வாய் தோழி!


கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியத்திற்கும் மேல் அலுவலகம் வந்திருந்தேன். குதிரைவால் வசனகர்த்தாவான ராஜேஷ் அழைத்து `Parellel Mothers' படத்திற்கு ஒரு டிக்கெட் இருக்கிறது நீங்க போக முடியுமா என்றார். ``சாயங்காலம் சீக்கிரம் வந்து எங்களைப் பூங்காவுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்'' என்ற மகளின் கட்டளையை எண்ணியபடி யோசித்தேன். என்னங்கய்யா படம் பார்க்க யோசிக்கிறீங்க என்றார். சரி போகிறேன் என்றதும் வாட்ஸ் அப்பில் டிக்கெட் அனுப்பினார். நன்றி என்றேன். நட்புக்குள் இந்த நன்றியெல்லாம் வேண்டாம், ஃப்ரீயா விடுங்க என்றார். `ஃப்ரீயா விடுங்க' என்னும் சொற்கள் தோழி ஒருத்தியை ஞாபகப்படுத்தின. 

அது பீஃப் கவிதைகள் வெளிவந்த சமயம். பாரதியார் பூங்காவில் படித்துக்கொண்டிருக்கும் போது, இடையில் முகநூலில் `என்னைத் தெரியுமா' என்கிற செய்தி என் இன்பாக்ஸ்க்கு வந்தது. `சத்தியமா தெரியாது' என்றேன். `சரி இனித் தெரிந்துகொள்வோம்' என்று சொன்னார். அதைத் தொடர்ந்து நிறைய விசயங்கள் பகிர்ந்துகொண்டோம். ஆரம்பத்தில் சாதாரணமாகச் சென்ற உறவு பேரன்பாகியது. அடிநெஞ்சிலிருந்து பேசிய சொற்கள் இன்னும் அலையடித்தபடியே உள்ளன. அவ்வப்போது நான் உடையும் போது, பயந்து நடுங்கும் போது `ஃப்ரீயா விடுங்க, ஃப்ரீயா விடுங்க' என்று சொல்லிக்கொண்டே இருப்பார். முன்பின் பெண்களுடன் பேசிப் பழகாததால் அவருடைய அன்பை எதிர்கொள்ள முடியாது தவித்தேன். உனக்கு எதுவேணுமென்றாலும் நான் செய்கிறேன், உன் வளர்ச்சிக்கு நான் கடைசிவரை உறுதுணையாக இருப்பேன் என்னும் சொற்கள் இன்னும் காதில் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. 

அதீத அன்பைச் சந்தேகிக்க ஆரம்பித்தேன். பெண்களின் உடையை, நெயில் பாலீஸை, லிப்ஸ்டிக்கைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில் மனநல மருத்துவர் ஷாலினியின் உரையை மேற்கோள் காட்டினேன். அங்கிருந்து சிறிய புரிந்துகொள்ளாமைத் துளிர்விட்டது. மேலும், எனக்குத் தோழி ஒருத்தி இருப்பதாகவும் கூறினேன். இருவரும் ஒருமுறை சினிமாவுக்குச் சென்றிருக்கிறோம் என்றேன். அக்கணத்தில் அவர் சற்று உடைந்து போனதாக உணர்ந்தேன். ஆனால், தோழியும் நானும் தொட்டுகூடப் பேசவில்லையென்றால் நீங்கள் நம்பவா போகிறீர்கள். படம் முடிந்து சுரங்கப் பாதையில் ரயிலேற்றி அனுப்பி வைத்தேன். அவர் விடைபெறும் போது தூரத்து உறவினரைப் பார்த்தது போல் இருக்கிறது என்றார். மேலும், அவ்வப்போது உங்களின் அன்பு எனக்கு என் அப்பாவை ஞாபகமூட்டுகிறது என்றும் கூறுவாள். இப்போது இரு தோழிகளும் என்னிடம் பேசுவதில்லை. 

` ஃப்ரீயா விடுங்க' என்று சொன்ன தோழியை ஒருகட்டத்தில் வாட்ஸ் அப்பில் பிளாக் செய்தேன், பிறகு அன்லாக் செய்தேன். முகநூலிலும் unfriend செய்துவிட்டேன். இப்படி அவரிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக என்னைத் துண்டித்துக்கொண்டே சென்றேன். ஒரு கட்டத்தில் இவன் ஓவரா பண்ணுகிறான் என்று தோன்றியிருக்கும். என்னைவிட்டு எங்கோ போய்விட்டார். அவரைச் சரியா புரிந்துகொள்ளவில்லையோ என்கிற குற்றவுணர்வு என்னை ஆட்டுவிக்கத் தொடங்கியது. பேசி இரண்டு வருடமாகப் போகிறது. முகநூலில் மீண்டும் Friend Request கொடுத்தேன். பல மாதங்கள் உருண்டோடிவிட்டன. இன்னும் அவர் என் நட்பை ஏற்றுக்கொள்ளவில்லை. அவ்வப்போது அவரின் டைம் லைனைத் தேடுகிறேன் ; வாட்ஸ் அப் ஸ்டேடஸைப் பார்க்கிறேன். இன்னும் ஒருமுறை கூடச் சந்திக்காத தோழியின் முகம் வந்து வந்து போகிறது. எப்போது என் நட்பை ஏற்பார் தெரியவில்லை. ஏதோ ஓர் நொடியில் யாரோ ஒருவர் உதிர்க்கும் சொற்கள் அடிநெஞ்சைப் பிடுங்கிச் சென்றுவிடுகின்றன. ஏதோவொன்றை எழுத ஆரம்பித்து இப்படி முடித்துவிட்டேன். ஆரம்பமும் முடிவும் தன்னைத் தானே தெரிவு செய்துகொள்கின்றன. சரி `ஃப்ரீயா விடுங்க' பார்த்துக்கொள்வோம்.

15.03.2022
செவ்வாய்க்கிழமை


Sunday, March 13, 2022

நவீனக் கவிதையின் திரைமொழி - குதிரைவால்


மார்ச் 12 அன்று குதிரைவால் திரைப்படம் பார்க்க அப்படத்தின் இணை இயக்குநர் அரவிந்தன் அழைத்திருந்தார். இதற்கு முன்பு ஓர் நாள் சாலிக்கிராமம் பிரசாத் லேப்பில் எழுத்தாளர்களுக்காக ஒரு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக நண்பர் தமிழ் அழைத்திருந்தார். அன்று நீலம் இதழ், பிரின்ட் அனுப்புவதற்கான இறுதிக்கட்டப் பணிகளால் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை. எனவே, மீண்டும் ஒரு வாய்ப்புக் கிடைப்பதைத் தவறவிடக் கூடாது என்று எண்ணினேன். நுங்கம்பாக்கத்தில் உள்ள Magic Lanten முன்னோட்டத் திரையரங்கில் திரையிடுவதாகக் கூறியிருந்தார். அங்குதான் சார்பட்டா பார்த்தேன். எனவே, சொன்னவுடன் இடக்குழப்பமின்றிச் செல்ல முடிந்தது. எழுத்தாளரும் நெருங்கிய நண்பருமான ராம் முரளி உடன் வந்திருந்தார். ராம் முரளி நெய்வேலியைச் சேர்ந்தவர். கவிஞர் ஷங்கர்ராம சுப்ரமணியன் மூலம் அறிமுகமானவர். ஷங்கரைப் போல வண்டி எடுத்துக்கொண்டு என்னைத் தேடி வரும் பேரன்பு கொண்டவர். எளிய பின்புலமும் ஆழமான அறிவும் கொண்ட ராம் முரளி நீலம் இதழில் மிலன் குந்தரே, கூகிவா தியாங்கோ நேர்காணலை மொழிபெயர்த்திருக்கிறார். எதையும் அர்ப்பணிப்புடன் செய்யும் இவர் சமீபத்தில் சத்ய ஜித்ரேயின் `childhood days' நூலினைக் `குழந்தைப் பருவ நாட்கள்' என்னும் தலைப்பில் நற்றிணைப் பதிப்பகம் மூலம் வெளியிட்டிருக்கிறார்.

திரையரங்கின் முன்னே வண்டியை நிறுத்திவிட்டு உள் நுழைந்தோம். மூன்றாவது மாடியின் வரவேற்பறையில் மூன்று பேர் நின்றிருந்தனர். அவர்களில் ஒருவர் இயக்குநர் என்றும் மற்றொருவர் ரைட்டர் என்றும் அறிமுகப்படுத்திச் சிறு தண்ணீர் போத்தலைக் கொடுத்து வரவேற்றனர். எங்களுக்குப் பின் ஆனந்த் குமரேசன் சக கலைஞர்களுடன் நின்றிருந்தார்.  ஆனந்த் குமரேசன் குரு நானக் கல்லூரியில் கணிதம் படித்தவர். எனக்கு சீனியர். அது 2002 - 2005.  பின்பு, 2011 ஆம் ஆண்டில் ரஷ்யன் கலாச்சார மையத்தில் நடைபெற்ற எஸ்.ராவின் உலக இலக்கியப் பேருரையில் சந்தித்துப் பேசினேன். ஆனால், உன்னைக் கல்லூரியில் பார்த்ததே இல்லையே என்னும் பாவனைதான் அப்போது அவருக்கு இருந்தது. இப்போதும் அந்த மனநிலைதான் இருக்கிறது. சிற்சில சமயங்களில் மிகவும் அன்போடும் பழகியிருக்கிறார். தேவி திரையரங்கில் `பூலோகம்' திரைப்படத்தை இருவரும் கண்டு ரசித்திருக்கிறோம். ஒரு கலைஞன் அரசியல் கூர்மையுள்ளவனாய் நிலைபெறுவது அவசியம் என்பது அன்றைய சந்திப்பின்  சாரமாக இருந்தது. கடுமையான வாசிப்பையும் திரைத்துறை சார்ந்து நுட்பமான பார்வையும் கொண்டவர். எதையும் கட்டுடைக்க வேண்டும் என்கிற மீறலைக் கல்லூரிக் காலத்திலிருந்து இப்போது வரை தக்கவைத்திருக்கும் கலைஞர்.   

அரங்கினுள் சென்று அமர்ந்தோம். ஸீரோ டிகிரி காயத்ரி, உதவி இயக்குநர்கள் அன்பு, பாலா, கலர்ஸ் தீபன் என மிகச் சிலரே தெரிந்த முகங்களாக இருந்தன. மன்னிக்கவும் இன்னும் ஐந்து நிமிடங்களில் திரையிடல் ஆரம்பித்துவிடும் என்று முதலில் தகவல் தெரிவித்த சிறிது நேரத்தில் இன்னும் ஐந்து நிமிடங்களில் ஆரம்பித்துவிடுவோம் என்று சொல்லிச் சென்றனர். மூன்றாவது முறையாக வந்து, தொழில்நுட்பக் கோளாறு என முதல் தளத்திற்குச் செல்லும்படி கூறினார். 

இதிகாசங்களும் புராணங்களும் காப்பியங்களும் வரலாறும் திரைத்துறையில் அடுத்தடுத்து வெவ்வேறு கோணங்களில் எடுக்கப்பட்டு வந்திருக்கின்றன. பின்பு, மனிதனின் வாழ்வியலில் மீது கேமரா ஒளி பாய்ந்தது. வறுமையும் வலியும் துரோகமும் காதலும் காமமும் கொண்டாட்டமும் பண்பாட்டுப் பின்னணியில் எடுத்துரைக்கப்பட்டிருக்கின்றன. கதா நாயகத்தன்மை வேர்கொள்ள ஆரம்பித்த போது அதை நகலெடுக்கும் தன்மை இன்று வரை தொடர்ந்து வருகிறது. புதிதாகத் தலைப்புகூட வைக்க முடியாத சிந்தனை வறட்சியும் தலைப்பை, பாடலை, இசையை, பாடல் வரிகளை போலச் செய்தலும் திரைத்துறையின் சாபக்கேடுகள். சூப்பர் ஸ்டார் என்கிற மாயை அல்லது மமதை எல்லோரையும் ஆட்டுவித்துக்கொண்டிருக்கிறது. இதிலிருந்து விலகிய இன்னோர் போக்கு என்னவென்றால் இலக்கியத்தைத் திரைமொழியாக்குவது. மிகச் சிறந்த முறையில் இதை இயக்குநர் வெற்றிமாறன் முன்னெடுக்கிறார். வெ.சந்திரமோகனின் `லாக்கப்', பூமணியின் `வெக்கை' நாவல்களைச் சர்வதேசத் தளத்தில் கவனப்படுத்தினார். தற்போது சி.சு.செல்லப்பாவின் `வாடிவாசலை'த் திரைப்படமாக எடுத்துக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற நீலம் பதிப்பக நூல் வெளியீட்டு விழாவில் கரன் கார்க்கியின் `மரப்பாலம்' நாவலைத் திரைப்படமாக்கப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகத் தெரிவித்தார். இறந்த பின்னும் அடையாளப்படாமல் எத்தனையோ எழுத்தாளர்களின் படைப்புகள் பதிப்பகங்களிலும் நூலகங்களிலும் தூசி படிந்துள்ளன. இவற்றைத் தூசுதட்டும் போக்கு சமீபமாக அதிகரித்துவருவது ஆரோக்கியமான போக்கு.   

குதிரைவால் என்பது யதார்த்தமான தலைப்புதான். அது மனிதனின் பின்னிருப்பதுதான் விநோதத்தை ஏற்படுத்துகிறது. மிகவும் கிரியேட்டிவாக இருந்த டீஸர், படத்தின் மீதான எதிர்பார்ப்பைப் பன்மடங்கு அதிகரிக்கச் செய்திருந்தது. எழுத்தின் போக்கைக் கட்டுடைத்த அல்லது மடைமாற்றிய பிரம்மராஜன், கோணங்கி, ரமேஷ் பிரேதன் திரை வரலாற்றில் முதன்முதலில் டைட்டில் கார்டில் இடம்பெற்றுள்ளனர். உறக்கத்தில் இருந்து எழுந்து பார்த்தால் வால் முளைத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியுறும் நாயகன், ஏன் முளைத்தது என்கிற காரணத்தைக் கண்டு அதை நோக்கிச் செல்லும் பயணம்தான் குதிரைவால். மற்றவர்களின் கண்களுக்குத் தெரியாத வாலின் அசைவு, இவன் உடலில் நெளிவு சுளிவுகளை உண்டாக்கும். இதனால் பொதுச் சமூகத்தின் எள்ளல் தன்மைக்கு ஆட்பட்டபடியே இருப்பான். 

ஒவ்வொரு பிரேமும் நவீன ஓவியங்களின் வண்ணத்திலும் ஒவ்வொரு வசனமும் நவீனக் கவிதையின் தொனியிலும் இடம் பெற்றிருப்பது இதற்கு முன் நிகழாதவை. மேஜிக்கல் ரியலிஸ வகைமையான படத்தின் பெரும்பாலான காட்சிகள் வழக்கத்திற்கு மாறாக உள்ளன. சூரியன் மறைவதும் நிலவு உதிப்பதும் ஒரே ஃப்ரேமில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நனவில் தொலைந்ததைக் கனவில் தேடுவதும் திட்டும் போது கழுதை விட்டை என்பதும் அடர்ப்பச்சை கிணற்று நீர் பானையில் சாம்பல் நிறத்திலும் உள்ளன. நவீனக் கவிதையைத் திரைமொழியாக்கிய அனுபவத்தைக் கொடுத்தது. விநோதமான இப்பேரமைதியைக் கண்டு ரசிக்கக் கொஞ்சம் நிதானம் வேண்டும். நவீன ஓவியத்தில் நவீனக் கவிதையில் ஊறி உறைந்து பித்துப் பிடித்தவரால்தான் இப்படியெல்லாம் வசனம் எழுத முடியும். இந்தப் பித்தநிலை இன்னோர் பித்தனுக்கும் வெகுவாகப் பிடிக்கும். இது நீலம் தயாரிப்பின் இன்னோர் பரிமாணம். படம் வெளியான பின் இன்னும் விரிவாகப் பேசுவோம் பித்தர்களே!

14.03.2022
திங்கட்கிழமை

Saturday, March 12, 2022

நெடிதுயர்ந்தது மரங்கள் மட்டுமல்ல


சமீபத்தில் ஶ்ரீநேசனின் `கவிஞயம்' கட்டுரைத் தொகுப்பினைப் படித்தேன். அதில், `இஸ்ரேலியம்' கவிதை நூலுக்கான கட்டுரை `அறிவியலும் அரசியலும் குழந்தைகளும்' என்னும் தலைப்பில் இடம் பெற்றிருந்தது. பிரமிளின் புகழ் பெற்றக் கவிதையான E = mc², அறிவியலைப் புராணிகத்துடன் இணைத்து தத்துவமாகக் கண்ட புதிய அறிவியல் கவிதை என்றும் பிரம்மராஜனின் மொழிபெயர்ப்புக் கவிதைகளை அறிவியலின் தாக்கம் கொண்ட பரிசோதனைத்தன்மை வாய்ந்தவை என்றும் குறிப்பிட்டிருந்தார். இதன் தொடர்ச்சிதான் பாம்பாட்டிச் சித்தனின் இஸ்ரேலியம் என்கிறார் ஶ்ரீநேசன். முன் பகுதியில் இடம் பெற்றிருப்பதாய்ச் சொன்ன தனிம அட்டவணை என்னைப் பள்ளிப் பருவத்திற்கு அழைத்துச் சென்றது. வேதியியல் பாடத்தில் படித்தது இன்னும் நினைவிருக்கிறது. உடனே படிக்க வேண்டும் என்கிற உந்துதலுக்கு இதுவும் ஒரு காரணம். கூகுளில் தேடினேன், out of stock என்று வரவே நேரிடையாக புது எழுத்து மனோன் மணியத்திற்கு அழைத்து என்.டி.ராஜ்குமார் நூல்களுடன் இஸ்ரேலியத்தையும் அனுப்பும்படி கூறினேன். அவரும் கைவசமில்லை என்றார். நண்பர்களிடம் கேட்டிருந்தேன், அவர்களிடமும் இல்லை. அறிவியல் புனைவு சிறப்பிதழ் `மீ' கொண்டுவருவது குறித்து ஒருமுறை பிரவீண் பஃறுளி பேசிக்கொண்டிருக்கும் போது பாம்பாட்டிச் சித்தனின் இஸ்ரேலியம் பற்றிப் பேசியது நினைவில் எழுந்தது. அவரிடம் நேற்று மாலை கேட்டிருந்தேன். நாளை காலை கல்லூரி வரும் போது எடுத்து வருகிறேன் என்று சொல்லியிருந்தார்.   

இன்று காலை V51 பேருந்தில் அலுவலகம் சென்றுகொண்டிருந்தேன். குருநானக் கல்லூரியைக் கடக்கும் போது, பிரவீண் பஃறுளியிடம் கவிதை நூல் கேட்டிருந்தது நினைவுக்கு வர, உடனே அவரைத் தொடர்புகொண்டேன். அரை மணி நேரமாக அதைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன் என்றார். துண்டிக்கப்படாத அழைப்பினூடே கிடைத்துவிட்டது எனக் கூற, கல்லூரி வாசலில் காத்திருக்கவா என்றேன். சரி, 15 நிமிடத்திற்குள் வருகிறேன் என்றார். இதற்குள் கல்லூரி சிக்னலைத் தாண்டிச் சென்றது பேருந்து. செக் போஸ்டில் இறங்கி எதிரில் வந்த V51 பேருந்தில் ஏறி குரு நானக் கல்லூரி வாசலில் நின்றிருந்தேன். மாணவ, மாணவிகள் கல்லூரிக்குள் நுழைந்த வண்ணமிருந்தனர். அரும்பு மீசையுடன் கனவுகளுடன் கல்லூரிக்குள் அடியெடுத்துவைத்த 17 வயதுச் சிறுவன் என்னிலிருந்து பிரிந்து இன்றும் வாசலில் நடந்ததைப் பார்த்தேன். 

பிரவீண் வரும் வரை என்ன செய்வது என்று அறியாமல் ஹானஸ்டியில் ஒரு லெமன் டீ குடித்தேன். இதன் விலை 15 ரூபாய். யாருமற்ற ஹானஸ்டியின் மத்தியில் ஒற்றை மின்விசிறி ஓடிக்கொண்டிருந்தது. இதன் சுவரில் காவி, பச்சை, வெள்ளை நிறங்கள் அடிக்கப்பட்டிருந்தன. மென்னிருளில் அதிக நேரம் அமர முடியாமல் சூரிய ஒளிக்கு வந்தேன். பூக்களற்ற பன்னீர் புஷ்ப மரத்தின் கீழ் ஆளுயர மின் பெட்டிகள் துருப்பிடித்திருந்தன. கிழிந்த துண்டறிக்கைகளால் மூடப்பட்டிருந்த அப்பெட்டியின் அருகே முதிர்ந்த வாகை மரம். ஆட்டோக்களற்ற குட் வில் ஆட்டோ நிறுத்தம். அதன் உச்சியில் குழைகளற்ற தென்னை ஓலைகளில் கந்தகம் படிந்திருந்தது. 

ஹானஸ்டிக்கும் ஆக்சிஸ் வங்கிக்கும் நடுவில் இருந்த சண்முகம் ஜெராக்ஸ் கடைக்குச் செல்லும் குறுக்குச் சந்தில் சிறிது நேரம் காத்திருந்தேன். பின் பேருந்து நிறுத்ததில் இருந்த படி கல்லூரிக்குச் செல்லும் வழியில் பார்த்த போது பிரவீண் விருட்டென்று இரு சக்கர வாகனத்தில் விரைந்ததைப் பார்த்தேன். மின்கையொப்பமிட விரைகிறார் என்று புரிந்து சற்று நேரம் கழித்து அழைத்தேன். மன்னிக்கவும் பச்சோந்தி கையொப்பமிடும் அவசரத்தில் உங்களை மறந்துவிட்டேன் என்றார். பரவாயில்லை, கேன்டீன் அருகே இருங்க நான் வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று உள் நுழைந்தேன். கண்ணாடி பதித்த கருங்கல் சுவரெங்கும் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. திறந்த வெளி மைதானம் கம்பி வலையிடப்பட்டிருந்தது. இந்த மைதானத்தைச் சுற்றியுள்ள வட்டமான சாலையில் கராத்தே மாணவனாய், என்சிசி மாணவனாய் எத்தனை சுற்றுகள் ஓடியிருக்கிறேன். இதோ நெடுதுயர்ந்த மரங்களின் நடுவே ஒற்றையாளாய் நடந்துசெல்கிறேன். நெடிதுயர்ந்தது மரங்கள் மட்டுமல்ல.

12.03.2022
சனிக்கிழமை

 

Tuesday, March 8, 2022

Need A Job! - By Poet Pacho

 

அனைவருக்கும் வணக்கம்!

2020 ஆண்டு ஜூன் மாதம் விகடனில் பணி நீக்கம் செய்யப்பட்டதை அனைவரும் அறிவீர்கள். அப்போதிருந்து கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறேன். அரண் செய், நீலம் ஊடகங்களில் கிடைத்த வேலை கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. ஆனாலும் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப இயலவில்லை. மாதத்தின் பாதி நாட்களை நண்பர்களின் உதவியால் நகர்த்திக்கொண்டிருக்கிறேன். தொடர்ந்து நண்பர்களிடம் பொருளாதார உதவியை நாடுவது குற்றவுணர்வாக இருக்கிறது. கடன் வாங்கிய வங்கியில் இருந்து தொடர்ந்து வீட்டுக்கு வந்து செல்கிறார்கள். பள்ளி திறந்த பிறகுதான் மீண்டும் மனைவி மக்களைச் சென்னைக்கு அழைத்து வந்திருக்கிறேன். வங்கியில் இருந்து பணம் கேட்டு வருவதால் என்னை விட வீட்டில் உள்ளவர்கள் உளரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால், உங்களிடம் நான் கேட்டுக்கொள்வது குறைந்த பட்சம் 35,000 இல் இருந்து 40,000 வரை சம்பளம் கிடைக்குமாறு ஏதேனும் ஊடகத்தில் பணிசெய்ய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள் என்கிற கோரிக்கைதான். கணையாழி, வம்சி, ஆனந்த விகடன், நீலம் (தற்போது வரை) ஆகிய ஊடகங்களில் உதவி ஆசிரியராகப் பணி புரிந்துள்ளேன். கிட்டத்தட்ட ஊடகத்துறையில் 10 ஆண்டு கால அனுபவம் உள்ளவன். என்னைப் பற்றி, என் வேலையைப் பற்றி நான் பணிபுரிந்த ஊடகங்களில் கேட்டு அறிந்துகொள்ளலாம். அப்படி அறியும் பட்சத்தில்  அது உங்களுக்கும் எனக்கும்  உதவியாக இருக்கும். என் மீது  அன்பு கொண்டவர்கள் ஏராளமானவர்கள் உண்டு என்பதை நன்கு அறிவேன். உங்களில் யாராவது இந்த உதவியைச் செய்தால் மிகவும் நன்றிக்குரியவனாக இருப்பேன். என்னுடைய வளர்ச்சியில் முகநூலுக்கும் முகநூல் நண்பர்களுக்கும் இன்றியமையாத பங்குண்டு. என்னை மேலும் வளர்த்தெடுங்கள் ; மேலும்  உற்சாகப்படுத்துங்கள் ; மேலும் கைகொடுங்கள் என்பதை இதன் வாயிலாகக் கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால்  எதிர்காலத்தில் தமிழின் மகத்தான கலைஞர்களில் நானும் ஒருவனாக இருப்பேன். மகத்தானதை நோக்கிச் செல்லுமிந்த இளைஞனை மீட்பது  உங்களின் கடமையும்கூட அல்லவா. 

 குறிப்பு : 

பண உதவி செய்கிறேன் என்று எனது எண்ணுக்கு அழைப்பதை அல்லது உள் பெட்டிக்குச் செய்திகள் அனுப்புவதைத் துளியும் விரும்ப மாட்டேன். எங்கு சென்றாலும் துயர்மிகு காலத்தில் கைகொடுத்த, கைகொடுக்கும் அரண் செய், நீலம் ஊடகங்களையும் அதில் பணிபுரியும் நண்பர்களையும் என்றும் மறவாது இருப்பேன்.


09.03.2022

புதன்கிழமை

Sunday, March 6, 2022

எப்போதும் கொஞ்ச முடியாது மகளே!


கீழறையில் செஸ் விளையாடிக்கொண்டிருந்தேன். வெளியிலிருந்து அழைத்தாள் மகள். என்னம்மா என்றேன். அம்மா உங்களை அழைப்பது கேட்கவில்லையா. நானும் எத்தனை தடவைக் கூப்பிடுறேன் என்றாள் கொஞ்சம் ஆக்ரோசமாக. அம்மா என்னை அழைத்தது கேட்கவில்லை. சரி இப்படி ஆங்காரமாய் ஆவது எதற்கு. மிக இயல்பாக இருக்கச் சொல்லி எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன் என்றதும். அம்மா கூப்பிட்டாங்க என்று அமைதியாகச் சொன்னாள். மிகவும் இக்கட்டான சூழலில் பாதியிலேயே ஆட்டத்தை முடித்துவிட்டுச் செல்ல முடியாதல்லவா. வருகிறேன் போம்மா என்று சொல்லி அவள் கதவைச் சாத்திச் செல்வதைப் பார்த்துக்கொண்டே யானையை நகர்த்திச் சிப்பாயை வெட்டிவிட்டேன். அதற்கு நேராக இருந்த எதிராளியின் யானை எஞ்சியிருந்த ஒற்றை யானையையும் வெட்டிவிட்டது. நான் செய்த தவறுக்கு மகள்தான் காரணமெனச் சற்றென்று கோபம் வந்தது. கோபத்தின் முன்னே கதவைத் திறந்துகொண்டு பெரிய பப்பாளிப் பழத்துண்டுடன் வந்தாள். பொசுக்கென்று நமந்துவிட்டது கோபம். பழச் சுவையைச் சுவைத்தபடி ஆடினேன். பாதி தூரம் வந்திருந்த சிப்பாயை நகர்த்தி ராணியாக்கிவிட்டான். படையற்ற என் ராஜா எதிராளியின் இரண்டு யானைகளோடும் புதிதாகப் பதவியேற்ற ராணியோடும் கடுமையாகப் போராடித் தோற்றது. 

சிதறிக் கிடந்த பப்பாளி விதைகளை அள்ளிக் குப்பைக் கூடையில் எறிந்துவிட்டு, பழச்சாறை மிதிப்பானில் துடைத்தேன். நிலுவைப் பணிகளை முடிக்க அலுவலகம் செல்ல வேண்டும். குளித்து முடித்து ஈரமான சந்தனத் துண்டை மூங்கில் நாற்காலியின் மீது உலரப் போட்டு, மேலறை சென்று சாப்பிட அமர்ந்தேன். கறி சூப்பு இருக்கிறது குடிக்கிறீங்களா என்றாள் மனைவி. ஓ எஸ் குடிக்கிறேனே என்றேன். சூப்பைக் கொடுத்து மகனுடன் பகிர்ந்துகொள்ளச் சொன்னாள். தம்பி கறி சாப்பிட்டுக்கொள்ளட்டும் கறி சாப்பிடாத பாப்பாவுக்குச் சூப்பைக் கொடுக்கிறேன் என்றேன். என்னால் குடிக்க முடியாது என்றாள் மகள். என்ன நீ அது வேண்டாம் இது வேண்டாம் என்று அடிக்கடி அடம்பிடிச்சுக்கிட்டே இருக்கிறாய். பேசாமல் வந்து குடி என்றதும் அமைதியாக வந்து அருகில் அமர்ந்தாள். அப்போதும் குடிக்க மறுத்தாள். நீ ரொம்ப நாளாக சேர் வேண்டும் என்று கேட்டாய் அல்லவா, இன்று வாங்கிடலாமா என்றபடி. கூகிளில் என்ன விலை இருக்கும் என்று தேட ஆரம்பித்தேன். என் தேடலில் மகனும் மகளும் கண்கள் வைத்து இது நல்லா இருக்கு அது சூப்பரா இருக்கிறது என்று சொல்ல விலையைப் பார்த்தால் எப்பா ஆயிரக்கணக்கில் எகிறுது. பேசாமல் Second Hand  வாங்கிடலாமா என்றதும் Second Hand என்றால் என்ன எனக் கேட்டாள். ஒரு பொருளைச் செய்து நேரடியாகச் சந்தைக்கு வந்தால் புதிது அல்லவா. அப்படியில்லாமல் ஏற்கெனவே பயன்படுத்திய பொருளை விற்பனைக்கு வாங்குவதுதான் Second Hand என்றேன். ஓஹோ என்கிற குரல் கோரஸாகக் கேட்டது. சரி ஒரு சேர் மட்டும் இப்போதைக்கு வாங்கிவிட்டு மற்றொன்று அடுத்த மாதம் வாங்கிக் கொள்ளலாம் என்கிற முடிவுக்கு வந்தால் மகள் முகம் சுருங்கிவிட்டது. சரி இன்று இரண்டு வாங்கிவிடுவோம் என்றேன்.

அம்மாவிடம் ஏதோ கிசுகிசுத்தாள். என்னவென்று விசாரித்தால், சூப்பைக் குடிக்கமுடியவில்லையாம். இங்க கொடு எவ்வளவு குடித்திருக்கிறாய் என்று பார்ப்போம் என்றேன். கொடுக்க மறுத்து இவ்வளவுதான் இருக்கிறது என்று டம்ளரின் மீது கோடு கிழித்தாள். யேம்மா கொடுத்ததே அவ்வளவுதானே என்றேன். உம்மென்று ஆகிவிட்டாள். ஆவி பறக்கும் பிரியாணிக்கு மின் விசிறியைச் சுழலவிட்டேன். காய் திங்க மாட்ட, பழம் திங்க மாட்ட, கறி திங்க மாட்ட ஆனால் க்ரீம் பிஸ்கட், க்ரீம் பன்னு மட்டும் எத்தனை வேண்டுமானாலும் சாப்பிடுவ அல்லவா. போ... சேரும் இல்ல மோரும் இல்ல. எப்போது நீ இதெல்லாம் சாப்பிடுகிறாயோ அப்போது வாங்கித் தருகிறேன் என்று அலுவலகம் கிளம்பிவிட்டேன். டாடா சொன்னேன் மகன் மட்டும் டாடா சொன்னான். மகள் என் முகத்தையே பார்க்கவில்லை. நானும் கிளம்பிவிட்டேன்.  

தடம் எண் 23C பேருந்து நந்தனம் தாண்டி நகர்ந்துகொண்டிருந்தது. வீட்டிலிருந்து அழைப்பு. சொல்லுங்க மேடம் என்றேன். நான் மேடம் இல்லை, உங்கள் பொண்ணு என்றாள். சொல்லும்மா என்றேன்... ஒரே அமைதி. அட சொல்லும்மா, இந்தா... இந்தா... இப்பச் சொல்லப் போறீயா இல்லையா. எப்ப வருவீங்க என்றாள். நான் அப்புறம் பேசுகிறேன் என்று அழைப்பைத் துண்டித்துவிட்டேன். 

06.03.2022
ஞாயிற்றுக்கிழமை

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...