Saturday, January 6, 2024



என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப் கவிதைகளுக்குப் பின். 

இரண்டாயிரம் ஆண்டு தொன்மைவாய்ந்த கவிமொழியின் மரபில் வந்த நாம் கவிதையெல்லாம் யாருங்க படிக்கிறாங்க, கவிதைத் தொகுப்பெல்லாம் யாருங்க வாங்குகிறாங்க என்று பதிப்பகங்களே சலிப்புற்றுப் பேசும் சூழலில்தான் பீஃப் கவிதைகள் வெளிவந்து கொண்டாடப்பட்டது. 2020 ஆம் ஆண்டு புத்தகச் சந்தையில் அதிகம் விற்பனையான 10 புத்தகங்களில் ஒன்றாக பீஃப் கவிதைகளை `தி இந்து தமிழ் திசை’ நாளேடு அறிவித்திருந்தது. எங்கு சென்றாலும் என் முகம் தெரிகிறதோ இல்லையோ பீஃப் கவிதைகள் என்றால் கல்லூரி மாணவர்கள்கூட அறியும் அளவிற்குச் சென்றடைந்திருக்கிறது. அதே நேரத்தில் இதன்மூலம் உண்டான அடையாளம் பணிச் சூழலிலும் தனிப்பட்ட வாழ்விலும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக இப்பனுவலை ஓர் தொடர்வண்டிப் பயணத்தில் விடிய விடிய வாசித்த திருமுருகன் மாமா அதிகாலையில் இதை நம் ஊருக்குள் யாரிடமும் படிக்கக் கொடுத்துவிடாதே என்றார். இதை ஒருவகையில் வரவேற்கிறேன். ஏனென்றால் வெறுமனே அழகியலையும் பெருமிதத்தையும் மட்டுமே முன்னிறுத்தாமல் நமக்குள் இருக்கும் கசடுகளையும் சுயமதிப்பீட்டுடன் அணுகவேண்டும் என்பதை முக்கியம் என்று கருதுகிறேன். 

கொரோனா காலகட்டத்தில் உலகம் முழுவதுமுள்ள பல பெருநிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களை எந்தவிதக் குற்றவுணர்வுமின்றிக் கூண்டோடு பணிநீக்கம் செய்தன. நோய்த் தொற்றில் கொத்துக் கொத்தாக இறந்துகொண்டிருந்த சமயத்தில் உயிரோடு இருந்தாலே போதும் என்பதே அதிகப்பட்ச வேண்டுதலாக இருந்தது. இச்சூழலில்தான் ஆனந்த விகடன் 170 தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்தது மிகப் பெரிய பேசு பொருளானது.

'எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறு ஒன்று அறியேன் பராபரமே! என்னும் தாயுமானவர் பாடலைத் தன் இலச்சினையில் பொருத்தியுள்ள ஆனந்த விகடன் எந்தவிதப் பாகுபாடுமின்றி 170 பேரைத் தெருவில் முகக் கவசத்துடன் நிற்கவைத்தது. விசுவாசமானவர்கள் - விசுவாசமற்றவர்கள், அனுபவமிக்கவர்கள் - புதிதாய் வேலைக்குச் சேர்ந்தவர்கள், வயதானவர்கள் - இளைஞர்கள், ஒத்த அரசியல் உடையோர் - எதிர் அரசியல் பேசுபவர் எனப் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் பல ரகம். பணிநீக்கம் செய்யப்பட்டதைக் காட்டிலும் அதற்காக விகடன் மேற்கொண்ட முயற்சிகளும் நடந்துகொண்ட விதமும்தான் மிகவும் அருவருப்பூட்டின. நிறுவனம் நினைத்தபடி அனைவரையும் தன் வழிக்கு இணங்கவைத்தது; ஒற்றை ஆளைத் தவிர. அந்த ஒற்றை ஆள் நிறுவனத்திற்கு எதிராக நின்று போராடினான். இறுதியில் வெற்றியும் பெற்றான். இவ்வெற்றியில் அரண்செய் ஆசிரியரும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர் சங்கத்தை ஏற்படுத்தியவருமான தோழர் ஹசீப்க்கு மிக முக்கியப் பங்குண்டு. 

170 பேரை பணிநீக்கம் செய்த விகடனுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காதவர்கள், எதிர்த்துப் போராடிய என்னை மிகவும் ஆபத்தானவனாகச் சித்தரிப்பது கேலிக்குரியதாகவே இருக்கிறது. யாருடனும் சகஜமாகப் பேசமுடியவில்லை. எங்கும் வேலை பெற முடியவில்லை. மிகவும் நேசித்தவர்கள்கூடப் பேசுவதற்கும் சந்திப்பதற்கும் தயங்குகிறார்கள் என எண்ணத் தோன்றுகிறது. அரண்செய், நீலம் பணி ஆறுதலாக இருந்தது. விகடனை எதிர்த்து நான் பெற்ற வெற்றி நீலத்தையும் அசைத்துப் பார்த்துவிட்டது போல் உணர்ந்தேன்.

ஒருமுறை எழுத்தாளர் தமிழ்ப் பிரபாவுடன் சகஜமாகப் பேசிக்கொண்டிருக்கையில் நீங்கதான் ஆஊன்னா கேஸ் போடுற ஆளாச்சே என்று சொன்னது மன உளைச்சலைத் தந்தது. இந்தப் புரிதல் நீலத்திலும் நீடிப்பது கடினம் என்பதையும் அறிவுறுத்தியது. சின்னச் சின்ன புரிதலற்ற தன்மையால் நீலமும் என்னைப் பணிநீக்கம் செய்தது. இது விகடன் பணிநீக்கத்தைவிட மிகுந்த மனவேதனையைக் கொடுத்தது. `நீலத்திலேயே வேலை செய்யாதவன் இனி எங்கு போய் வேலை செய்வான்' என்று பிறர் நினைக்கக் கூடுமே. இது எதிர்காலத்தை மிகவும் கேள்விக்குறியாக்கிவிடுமே என்று எண்ணிக் கொஞ்சம் இலகுவாகப் பேச முயன்றேன். இறுதியாக வாசுகி பாஸ்கர் ``நீங்கள் என்னதான் மன்றாடினாலும் எங்கள் முடிவை மாற்றிக் கொள்ளப்போவதில்லை. ஏதாவது பேசி எங்களின் நேரத்தை வீணாக்காதீர்'' என்றார். இனிப் பேசிப் பலனில்லை என்பதை அறிந்து அங்கிருந்து விடைபெற்றேன். 

பணிநீக்கம் செய்யப்பட்டு 8 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. தொடர்ந்து வேலை தேடிக்கொண்டிருக்கிறேன். இந்நிலையில் பிள்ளைகளைப் பள்ளியில் விடுவதும் மீண்டும் மாலையில் வீட்டிற்கு அழைத்து வருவதும் முதன்மையான பணியாகிவிட்டது. வீட்டிலேயே தங்காதவன் தினமும் வீட்டில் இருப்பது எவ்வளவு அவஸ்தையானது. அப்போது டைபாய்டு காய்ச்சலால் உடல் இளைத்தேன். மீண்டு வந்தேன். 

ஒருமுறை நண்பர் சீனுவிடம் பிள்ளைகளுடன் ஏற்பட்ட ஓர் அனுபவத்தைப் பகிர்ந்தேன். அவர் மிகவும் துயருற்றார். இக்காலத்தை ஏன் எழுதக் கூடாது என்று தோன்றியது. அவ்வாறு எழுதிக்கொண்டிருக்கையில் கஜேந்திரன் ஐயாவிடம் ஓர் உரையாடலினூடே பணிநீக்கம் செய்யப்பட்டவனின் நாட்குறிப்புகள், பணிநீக்கக் காலச் சித்திரங்கள் ஆகிய விசயங்களைப் பகிர்ந்தேன். பணிநீக்கம் செய்யப்பட்டவனின் நாட்குறிப்புகள் மிகவும் புதிய பாடுபொருளாக இருக்கிறது. உலகில் இப்படியான விசயத்திற்கு நீங்கள்தான் கரு கொடுத்து உரு கொடுக்கிறீர்கள் என்ற போது இதன் முக்கியத்துவத்தைத் தீவிரமாய் உணர்ந்தேன். ஏற்கெனவே எழுதிக்கொண்டிருந்த நாவல், புதிதாய் எழுதிக்கொண்டிருந்த சிறுகதைகள் அனைத்தையும் விட்டுவிட்டு இதில் கவனம் செலுத்தத் தொடங்கினேன். 

ஆறு ஆண்டுகளாய்ப் பணிநிமித்தமாக மகளைப் பிரிந்து வாழ்ந்த போது அவளுக்கு எழுதியதுதான் என் முதல் உரைநடை. அது `ஓர் விடுமுறைக்காய்க் காத்திருப்போம் மகளே' என்னும் தலைப்பில் இந்நூலில் இடம்பெற்றுள்ளது. பிறகு, விகடன் தடம் இதழுக்கு `நான் ஏன் எழுதுகிறேன்' என்னும் பகுதிக்குக் கவிஞர் வெய்யில் வற்புறுத்திக் கேட்க எழுதியது. பிறகு, பீஃப் கவிதைகளுக்கு முன்னுரை எழுதியது. இதையும் வெய்யிலின் வற்புறுத்தலின் பேரில்தான் எழுதினேன். என் எழுத்தின் மீது அவருக்குச் சந்தேகம் இருந்தது. இவன் தெரிந்து எழுதுகிறானா இல்லை குருட்டாம் போக்கில் எழுதுகிறானா என்னும் சந்தேகம் வெய்யிலுக்கு இருந்தது. அச்சந்தேகம் `நான் ஏன் எழுதுகிறேன்', பீஃப் கவிதைகள் முன்னுரை மூலம் தெளிவானது. 

கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியன் முதல் சந்திப்பின் போதே எழுத்தாளர் சுந்தரராமசாமியின் மேற்கோளுடன் உரைநடையின் முக்கியத்துவத்தை உணர்த்தினார். எப்போதும் போல் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் விட்டுவிட்டேன். பிறகு, ஷங்கரின் தொடர் வற்புறுத்தலால் ஏதாவது எழுதுவோம் என்று வலைத்தளம் தொடங்கி அதில் எழுதி வந்தேன். அவருக்கு அனுப்பினால் உடனடியாக வாசித்துவிட்டுக் கருத்துக் கூறுவார். இப்படி வெய்யில், ஷங்கர்ராமசுப்ரமணியன் இருவரால்தான் உரைநடையின் பக்கம் கவனம் செலுத்தினேன். 

பணிநீக்கக் காலத்தில் ஷங்கர் மிகவும் உறுதுணையாக இருந்தார். எப்படியாவது என்னை கரை சேர்க்கப் போராடினார் என் அப்பனைப் போல். இறுதியில் சிங்கப்பூர் அனுப்பவும் ஏற்பாடு செய்தார். ஆனால், அவரின் செயல்களுக்கு நான் உறுதுணையாக இருக்கவில்லை. பிறகு, என்னால் உங்களின் கண்ணீரைத் தொடர்ந்து வேடிக்கை பார்க்க முடியாது என்று விடைபெற்றார். ஷங்கரைப் போல் இக்காலத்தில் மிகவும் உறுதுணையாக இருந்தவர் எழுத்தாளரும் எங்கள் கல்லூரி பேராசிரியருமான பிரவீண் பஃறுளி. பொருளாதார தடுமாற்றத்திற்குத் தன்னால் இயன்ற அளவு பங்களித்தார்.

பலரும் கொஞ்சம் கொஞ்சமாக விலகிக்கொண்டிருந்த சமயத்தில் நூல்கள், திரைப்படம் சார்ந்த விசயங்களுக்குத் தக்க ஆலோசனைகள் வழங்கி ஆரத்தழுவும் கவிஞர் வே.நி.சூர்யாவுக்கு நன்றி. தன் பணிகளுக்கு நடுவே இத்தொகுப்பை வாசித்துப் பின்னட்டைக் குறிப்பு எழுதிக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் சில தர்க்கரீதியான கேள்விகளையும் செம்மையாக்கம் செய்யவேண்டிய அவசியத்தையும் உணர்த்திய எழுத்தாளர் பாலசுப்ரமணியன் பொன்ராஜுக்கு நன்றி. அட்டை ஓவியம் வரைந்த பிரேம் டாவின்ஸி, நூலை வடிவமைப்பு செய்த சந்தோஷ் கொளஞ்சி, ஓவியர் கோபு, நிழற்படக் கலைஞர் பாலாஜி கங்காதரன் ஆகியோருக்கு நன்றி. இக்கொடிய காலத்தில் துயரங்களைப் பகிர்ந்து வாழும் மனைவி சுகன்யா, பிள்ளைகள் யாழிசை, மீகாமன் ஆகியோருக்கும் நன்றி. 

மீண்டும் என்னை எழுதத் தூண்டியவர்களில் எழுத்தாளர் ஜீவகரிகாலனுக்கு மிக முக்கியப் பங்குண்டு. இந்நூலை வெளியிடும் யாவரும் பதிப்பகத்திற்கும் ஜீவகரிகாலனுக்கும் நன்றி. 

ஈரத்துடன் பச்சோந்தி

No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...