Tuesday, March 22, 2022

குடிக்க வேண்டும் என்பதுதான் மகா போதை - Red Wine Only


அலுவலகம் முடிந்து A51 பேருந்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தேன். சரியாக, நந்தனம் செல்லும் போது நண்பர் ஒருவரை போனில் அழைத்துப் பேசினேன். சமீபத்தில் நடைபெற்ற `கள்ளன்' திரைப்பட முன்னோட்டக் காட்சிக்குக் கடைசி நேரத்தில் வர முடியாதது குறித்தும் அங்கு எடுக்கப்பட்ட நிழற்படங்களிலும் வீடியோவிலும் உங்களைக் காணவில்லையே என்றும் விசாரித்தேன். பேசியிருக்கிறேன், அதைத் தனியாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்கள் என்றார். ஓ... அப்படியா சரி நான் பார்க்கிறேன் என்றேன். நீங்கள் கொடுத்த நாட்சுமே சொசெகியின் `பத்து இரவுகளின் கனவுகள்' வாசித்துக்கொண்டிருக்கிறேன், முடிந்ததும் தருகிறேன் என்றார். அவசியமில்லை, நான் வேறு ஒரு நூல் வாங்கிவிட்டேன் என்றேன். இல்லை குறிப்பு எல்லாம் எடுத்து இருக்கிறீர்கள் அல்லவா என்றதும் அதெல்லாம் ஒன்றுமில்லை, அந்த நூல் உங்களுக்கானது என்றேன். சற்று நேரம் கழித்து, இன்று கொஞ்சம் ஒயின் போலாமா என்றார். ஓ... தாராளமாகப் போலாம் என்றேன். சரி வேளச்சேரி வந்ததும் சொல்லுங்கள் பணம் அனுப்புகிறேன் என்றார். வேளச்சேரி விஜய நகரில் உள்ள Elight Tasmac இல் Misty Grapes 750 ML விலை கேட்டேன். அதற்குள் நண்பரிடமிருந்து Gpay இல் 500 ரூபாய் வந்து விழுந்தது. அங்கு Gpay வசதி இல்லையென்பதால், இருங்க கீழே சென்று ஏடிஎம் இல் பணம் எடுத்து வருகிறேன் என்றேன். எதற்கு அலைகிறீர்கள் ஏடிஎம் கார்டு இருந்தால் கொடுங்க ஸ்வைப் செய்து கொள்ளலாம் என்று டாஸ்மாக் ஊழியர் கூறினார். தினக்குடிக்கும் அரிதான குடிக்கும் இதுதான் வித்தியாசம். அவ்வப்போது டாஸ்மாக் வந்தால்தானே இதெல்லாம் தெரியும் என்றேன். அவ்வப்போது வாங்க சார் என்றார். இல்லையென்றால் வாங்கி வீட்டில் வைத்துக்கொண்டு வாரத்திற்கு இரண்டு முறை குடிங்க, உடலுக்கு நல்லது முகமும் பொலிவு பெறும். ஆனால், ஒயின் குடித்துவிட்டு விழித்திருக்காமல் நன்றாக உறங்க வேண்டும் என்றார். நல்ல ஆலோசனையாக இருக்கிறது. ஆனால், மற்றவர்களின் பேச்சை உடனே கேட்க மாட்டேன், இந்த விசயத்தில் கடைப்பிடிப்பேன் என்று நினைக்கிறேன். 

குடித்த பின் உண்டாகும் போதையை விட, குடிக்கப் போகும் முன் வரும் போதைதான் மகா போதை. விஜய நகர் பாலத்தினடியில் நின்றவாறு Rapido Bike Book செய்தேன். வேளச்சேரியில் இருந்து தில்லை கங்கா நகர் செல்ல 36 ரூபாய் காட்டியது. ஸ்டேட் பேங்கின் வாசலில் காத்திருந்தேன். ஐந்து நிமிடங்களில் வந்து நின்றது வாகனம். ஓடிபி எண்களைச் சொல்லி வாகனத்தில் ஏறினேன். வழி தெரியுமா என்றார். ரயில் நிலைய மேம்பாலத்தின் அடியில் வலது பக்கம் செல்ல வேண்டும். அங்கிருந்து நேர் வழி என்றேன். கொண்டாட்டத்தில் விண்மீன்களைப் பிடித்துச் சொட்டாங்கல்லாக்கிப் பல்லாங்குழி ஆடவேண்டும் போல் இருந்தது. ஒருவேளை தோழி ஒருத்தி இருந்தால், நிலவைப் பறித்து மஞ்சள் கிழங்காக்கி மேனியெங்கும் பூசிவிட வேண்டும். இப்படி ஏதேதோ கற்பனைகளில் மிதந்து செல்கிறேன். மரங்களின் நிழலினூடே தெருவிளக்கில் தனியாய், இருவராய், கூட்டமாய் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். நான் மொபைலில் உள்ள பழைய படங்கள் ஒவ்வொன்றாய் நீக்கியபடியே சென்றேன். நிழற்படங்களைப் போல் கணத்தில் இருட்டையும் ஒளியையும் அழிக்க முடியுமா என்கிற கேள்வியை அடுத்து வானுயர்ந்த கட்டடங்களை நிலத்திலிருந்து அழித்துவிட முடியுமா. இப்படியே போனால் கிறுக்குப் பிடித்துவிடும் போல். கொஞ்சம் செல்போனை அணைத்து உன் கற்பனைகளை மூட்டை கட்டி வை என்றது மனம். மெட்ரோ பாலத்தினடியில் மின்மினிப் பூச்சியாய்ப் பறந்துகொண்டிருந்தேன். 

நண்பரின் வீடு வந்து சிறிது நேரம் பேசிவிட்டுச் சமையல் பொருட்கள் வாங்க புறப்பட்டோம். தில்லை கங்கா நகருக்கும் எதிரில் உள்ள மெட்ரோ ரயில் பாலத்தினடியில் வண்டியின் வெளிச்சம் பாய்ந்தது. நடுச் சாலையில் ஶ்ரீ சர்வமங்கள ஶ்ரீ லஷ்மி நரசிம்மர் வீதி உலாவில் இருந்தார். தன் வீட்டு வாசலுக்கு நரசிம்மர் வரும் வரை குடும்பம் குடும்பமாக அவரவர் குடியிருப்பின் வெளியில் காத்திருந்தனர். வண்டி சென்று கொண்டே இருந்தது. கிட்டத்தட்ட நங்கநல்லூரின் நடுப் பகுதிக்குச் சென்றிருப்போம். Mothers World என்னும் சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்து நாட்டு முட்டை, காளான், ஆப்பிள், மாதுளை, வெள்ளரி, நெய் முறுக்கு, வறுத்த முந்திரி ஆகியவற்றை வாங்கி பில் போட்டுக்கொண்டிருக்கும் போது, காலையில் பிள்ளைகள் க்ரையான்ஸ் கேட்டது நினைவுக்கு வர இரண்டு க்ரையான்ஸும் Smile yellow color ball ஒன்றையும் வாங்கிக் கொண்டோம். வண்டியில் புறப்படும் போது, உணவில் எவ்வாறு ரசாயனம் கலக்கப்பட்டு நோய்க்கூறுகள் ஏற்படுகின்றன என்பதைப் பற்றிப் பேசிக்கொண்டு வந்தோம். மீனும் கூட கெடுதிதான் என்றேன். மீன் ஆரோக்கியமான உணவாச்சே என்றார். அதிலும் பார்மலின் போன்ற வேதிப் பொருள்கள் கலக்கின்றார்கள் என்றேன். சரியான இடம் பார்த்து வாங்க வேண்டும். முன்பெல்லாம் நண்பர்களுடன் காலை ஐந்து மணிக்கெல்லாம் பட்டினப்பாக்கம் சென்று விடுவோம். மத்தி, அயிலை, நெத்திலி, பாறை, சின்னக் கிழங்கா போன்ற மீன்களை வாங்கி வருவோம். கடலில் பிளாஸ்டிக் சேர்வதால் அதை உண்டு வாழும் மீனின் உடலில் சேகரமாகும். ஆனால், சிறிய வகை மீனில் பிளாஸ்டிக் குறைவாக இருக்கும். கண்ணுக்குத் தெரியாத மைக்ரோ பிளாஸ்டிக் சின்ன மீனில் குறைவாக இருக்கும். சின்ன மீனை பெரிய மீன்கள் சாப்பிடும் போது, பெரிய மீனில் பிளாஸ்டிக் அதிகமாக இருக்கும். அதனால்தான் கண்ட கண்ட நோயில் அற்ப ஆயுளில் போகிறோம் என்றார் நண்பர். 

சோபாவின் மையத்தில் அமர்ந்து டாக்டர் ஜே.பாலகிருஷ்ணாவின் `கேலிச்சித்திர வரலாறு' படித்துக்கொண்டிருந்தேன். `கேலிச்சித்திரங்களில் டார்வினும் பரிணாம வளர்ச்சியும்' என்னும் தலைப்பிலான கட்டுரை வேறொரு பார்வையைக் கொடுத்தது. அரசியல் தலைவர்கள், நடிகர்கள் கேலிச்சித்திரங்களில் வித விதமாக விமர்சிக்கப்பட்டுள்ளனர். இதற்கு டார்வினும் விதிவிலக்கல்ல போலும். பெரும்பாலான நேரங்களில் படிக்க ஆரம்பிக்கும் போது வேறு ஒரு சிந்தனை வாசிப்பினைக் கவ்விச் சென்று விடும். ஆனால், அப்போது மிகவும் முழுமனதுடன் படித்துக்கொண்டிருந்தேன். ஒயின் குடிப்பதையே நிறுத்திவிட்டு அப்படியே படிக்கலாமா என்று கூடத் தோன்றியது. இவ்வாறான கூர்மையான அவதானிப்பு எப்படிச் சாத்தியப்பட்டது? பஞ்சு மெத்தை போன்ற சோபாவா, பரந்த வீட்டின் அமைதியா, ஒயின் குடிக்கப் போகும் உற்சாகமா என்று யோசித்துக்கொண்டிருக்கையில் பொறித்த மீன், முட்டைக் குழம்பு, வறுத்த முந்திரி, நறுக்கிய வெள்ளரி, நெய் முறுக்கு என அடுக்கடுக்கான பண்டங்கள் மேசையின் மீது பரவ ஆரம்பித்தன. பட்டையான கத்தியில் ஒயினின் மூடி அறுத்துத் திறக்கப்பட்டது. ஒயின் ஊற்றப்பட்ட இரு கண்ணாடிக் குவளைகள் ஒன்றுடன் ஒன்று மோத இடைவிடாது பாடல்கள் ஒலித்தன.

22.03.2022
செவ்வாய்க்கிழமை 

No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...