Sunday, March 13, 2022

நவீனக் கவிதையின் திரைமொழி - குதிரைவால்


மார்ச் 12 அன்று குதிரைவால் திரைப்படம் பார்க்க அப்படத்தின் இணை இயக்குநர் அரவிந்தன் அழைத்திருந்தார். இதற்கு முன்பு ஓர் நாள் சாலிக்கிராமம் பிரசாத் லேப்பில் எழுத்தாளர்களுக்காக ஒரு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக நண்பர் தமிழ் அழைத்திருந்தார். அன்று நீலம் இதழ், பிரின்ட் அனுப்புவதற்கான இறுதிக்கட்டப் பணிகளால் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை. எனவே, மீண்டும் ஒரு வாய்ப்புக் கிடைப்பதைத் தவறவிடக் கூடாது என்று எண்ணினேன். நுங்கம்பாக்கத்தில் உள்ள Magic Lanten முன்னோட்டத் திரையரங்கில் திரையிடுவதாகக் கூறியிருந்தார். அங்குதான் சார்பட்டா பார்த்தேன். எனவே, சொன்னவுடன் இடக்குழப்பமின்றிச் செல்ல முடிந்தது. எழுத்தாளரும் நெருங்கிய நண்பருமான ராம் முரளி உடன் வந்திருந்தார். ராம் முரளி நெய்வேலியைச் சேர்ந்தவர். கவிஞர் ஷங்கர்ராம சுப்ரமணியன் மூலம் அறிமுகமானவர். ஷங்கரைப் போல வண்டி எடுத்துக்கொண்டு என்னைத் தேடி வரும் பேரன்பு கொண்டவர். எளிய பின்புலமும் ஆழமான அறிவும் கொண்ட ராம் முரளி நீலம் இதழில் மிலன் குந்தரே, கூகிவா தியாங்கோ நேர்காணலை மொழிபெயர்த்திருக்கிறார். எதையும் அர்ப்பணிப்புடன் செய்யும் இவர் சமீபத்தில் சத்ய ஜித்ரேயின் `childhood days' நூலினைக் `குழந்தைப் பருவ நாட்கள்' என்னும் தலைப்பில் நற்றிணைப் பதிப்பகம் மூலம் வெளியிட்டிருக்கிறார்.

திரையரங்கின் முன்னே வண்டியை நிறுத்திவிட்டு உள் நுழைந்தோம். மூன்றாவது மாடியின் வரவேற்பறையில் மூன்று பேர் நின்றிருந்தனர். அவர்களில் ஒருவர் இயக்குநர் என்றும் மற்றொருவர் ரைட்டர் என்றும் அறிமுகப்படுத்திச் சிறு தண்ணீர் போத்தலைக் கொடுத்து வரவேற்றனர். எங்களுக்குப் பின் ஆனந்த் குமரேசன் சக கலைஞர்களுடன் நின்றிருந்தார்.  ஆனந்த் குமரேசன் குரு நானக் கல்லூரியில் கணிதம் படித்தவர். எனக்கு சீனியர். அது 2002 - 2005.  பின்பு, 2011 ஆம் ஆண்டில் ரஷ்யன் கலாச்சார மையத்தில் நடைபெற்ற எஸ்.ராவின் உலக இலக்கியப் பேருரையில் சந்தித்துப் பேசினேன். ஆனால், உன்னைக் கல்லூரியில் பார்த்ததே இல்லையே என்னும் பாவனைதான் அப்போது அவருக்கு இருந்தது. இப்போதும் அந்த மனநிலைதான் இருக்கிறது. சிற்சில சமயங்களில் மிகவும் அன்போடும் பழகியிருக்கிறார். தேவி திரையரங்கில் `பூலோகம்' திரைப்படத்தை இருவரும் கண்டு ரசித்திருக்கிறோம். ஒரு கலைஞன் அரசியல் கூர்மையுள்ளவனாய் நிலைபெறுவது அவசியம் என்பது அன்றைய சந்திப்பின்  சாரமாக இருந்தது. கடுமையான வாசிப்பையும் திரைத்துறை சார்ந்து நுட்பமான பார்வையும் கொண்டவர். எதையும் கட்டுடைக்க வேண்டும் என்கிற மீறலைக் கல்லூரிக் காலத்திலிருந்து இப்போது வரை தக்கவைத்திருக்கும் கலைஞர்.   

அரங்கினுள் சென்று அமர்ந்தோம். ஸீரோ டிகிரி காயத்ரி, உதவி இயக்குநர்கள் அன்பு, பாலா, கலர்ஸ் தீபன் என மிகச் சிலரே தெரிந்த முகங்களாக இருந்தன. மன்னிக்கவும் இன்னும் ஐந்து நிமிடங்களில் திரையிடல் ஆரம்பித்துவிடும் என்று முதலில் தகவல் தெரிவித்த சிறிது நேரத்தில் இன்னும் ஐந்து நிமிடங்களில் ஆரம்பித்துவிடுவோம் என்று சொல்லிச் சென்றனர். மூன்றாவது முறையாக வந்து, தொழில்நுட்பக் கோளாறு என முதல் தளத்திற்குச் செல்லும்படி கூறினார். 

இதிகாசங்களும் புராணங்களும் காப்பியங்களும் வரலாறும் திரைத்துறையில் அடுத்தடுத்து வெவ்வேறு கோணங்களில் எடுக்கப்பட்டு வந்திருக்கின்றன. பின்பு, மனிதனின் வாழ்வியலில் மீது கேமரா ஒளி பாய்ந்தது. வறுமையும் வலியும் துரோகமும் காதலும் காமமும் கொண்டாட்டமும் பண்பாட்டுப் பின்னணியில் எடுத்துரைக்கப்பட்டிருக்கின்றன. கதா நாயகத்தன்மை வேர்கொள்ள ஆரம்பித்த போது அதை நகலெடுக்கும் தன்மை இன்று வரை தொடர்ந்து வருகிறது. புதிதாகத் தலைப்புகூட வைக்க முடியாத சிந்தனை வறட்சியும் தலைப்பை, பாடலை, இசையை, பாடல் வரிகளை போலச் செய்தலும் திரைத்துறையின் சாபக்கேடுகள். சூப்பர் ஸ்டார் என்கிற மாயை அல்லது மமதை எல்லோரையும் ஆட்டுவித்துக்கொண்டிருக்கிறது. இதிலிருந்து விலகிய இன்னோர் போக்கு என்னவென்றால் இலக்கியத்தைத் திரைமொழியாக்குவது. மிகச் சிறந்த முறையில் இதை இயக்குநர் வெற்றிமாறன் முன்னெடுக்கிறார். வெ.சந்திரமோகனின் `லாக்கப்', பூமணியின் `வெக்கை' நாவல்களைச் சர்வதேசத் தளத்தில் கவனப்படுத்தினார். தற்போது சி.சு.செல்லப்பாவின் `வாடிவாசலை'த் திரைப்படமாக எடுத்துக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற நீலம் பதிப்பக நூல் வெளியீட்டு விழாவில் கரன் கார்க்கியின் `மரப்பாலம்' நாவலைத் திரைப்படமாக்கப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகத் தெரிவித்தார். இறந்த பின்னும் அடையாளப்படாமல் எத்தனையோ எழுத்தாளர்களின் படைப்புகள் பதிப்பகங்களிலும் நூலகங்களிலும் தூசி படிந்துள்ளன. இவற்றைத் தூசுதட்டும் போக்கு சமீபமாக அதிகரித்துவருவது ஆரோக்கியமான போக்கு.   

குதிரைவால் என்பது யதார்த்தமான தலைப்புதான். அது மனிதனின் பின்னிருப்பதுதான் விநோதத்தை ஏற்படுத்துகிறது. மிகவும் கிரியேட்டிவாக இருந்த டீஸர், படத்தின் மீதான எதிர்பார்ப்பைப் பன்மடங்கு அதிகரிக்கச் செய்திருந்தது. எழுத்தின் போக்கைக் கட்டுடைத்த அல்லது மடைமாற்றிய பிரம்மராஜன், கோணங்கி, ரமேஷ் பிரேதன் திரை வரலாற்றில் முதன்முதலில் டைட்டில் கார்டில் இடம்பெற்றுள்ளனர். உறக்கத்தில் இருந்து எழுந்து பார்த்தால் வால் முளைத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியுறும் நாயகன், ஏன் முளைத்தது என்கிற காரணத்தைக் கண்டு அதை நோக்கிச் செல்லும் பயணம்தான் குதிரைவால். மற்றவர்களின் கண்களுக்குத் தெரியாத வாலின் அசைவு, இவன் உடலில் நெளிவு சுளிவுகளை உண்டாக்கும். இதனால் பொதுச் சமூகத்தின் எள்ளல் தன்மைக்கு ஆட்பட்டபடியே இருப்பான். 

ஒவ்வொரு பிரேமும் நவீன ஓவியங்களின் வண்ணத்திலும் ஒவ்வொரு வசனமும் நவீனக் கவிதையின் தொனியிலும் இடம் பெற்றிருப்பது இதற்கு முன் நிகழாதவை. மேஜிக்கல் ரியலிஸ வகைமையான படத்தின் பெரும்பாலான காட்சிகள் வழக்கத்திற்கு மாறாக உள்ளன. சூரியன் மறைவதும் நிலவு உதிப்பதும் ஒரே ஃப்ரேமில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நனவில் தொலைந்ததைக் கனவில் தேடுவதும் திட்டும் போது கழுதை விட்டை என்பதும் அடர்ப்பச்சை கிணற்று நீர் பானையில் சாம்பல் நிறத்திலும் உள்ளன. நவீனக் கவிதையைத் திரைமொழியாக்கிய அனுபவத்தைக் கொடுத்தது. விநோதமான இப்பேரமைதியைக் கண்டு ரசிக்கக் கொஞ்சம் நிதானம் வேண்டும். நவீன ஓவியத்தில் நவீனக் கவிதையில் ஊறி உறைந்து பித்துப் பிடித்தவரால்தான் இப்படியெல்லாம் வசனம் எழுத முடியும். இந்தப் பித்தநிலை இன்னோர் பித்தனுக்கும் வெகுவாகப் பிடிக்கும். இது நீலம் தயாரிப்பின் இன்னோர் பரிமாணம். படம் வெளியான பின் இன்னும் விரிவாகப் பேசுவோம் பித்தர்களே!

14.03.2022
திங்கட்கிழமை

No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...