வத்தல் கறி வாங்க புளியந்தோப்பு ஆட்டுத்தொட்டிக்குச் செல்ல வேண்டும் என்பது நேற்றிரவின் திட்டம். காலை 5 மணிக்கு எழுந்தேன். முள்ளங்கி நிலா வானில் மிதந்துகொண்டிருந்தது. பல் துலக்கிக் குளித்துவிட்டு செல்போன் ஒளியுடன் படியிறங்கிக் குறுக்குச் சந்தில் நடந்தேன். தபால் நிலைய இலையற்ற அரச மரம் எலும்புக் கூட்டைப் போல் உருக்குலைந்திருந்தது. காய்ந்த குச்சிகளின் நடுவே கிழக்கு வானில் ஒளிர்ந்தது ஒற்றை விண்மீன். M70, 570S ஆகிய பேருந்துகள் அடுத்தடுத்து வந்துகொண்டிருந்தன. சற்று நேரம் கழித்து V51 வந்தது. பேருந்தின் பின் பக்கம் ஒளி கொஞ்சம் சுடர்விட்டெரிந்தது. முன்பக்கத்திலும் மத்தியிலும் மங்கலாக இருந்தது. பெரும்பாலும் பயணத்தில் வாசிக்கும் பழக்கமுள்ள என் மனம் பின்பக்க வெளிச்சத்தைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் அல்லவா. ஆனால், மங்கலான மத்தியப் பகுதியைத்தான் தெரிவு செய்தது. ஏனென்றால் ஒளியில் யாரும் அமரவில்லை. மங்கலானதிற்கும் எதிராக இளம்பெண் ஒருத்தி அமர்ந்திருந்தாள். அவளைப் பார்க்க வேண்டும் என்றோ, அவளை சைட் அடிக்க வேண்டும் என்றோ நான் உட்காரவில்லை. நான் படிப்பதை அவள் பார்க்க வேண்டும் என்கிற நப்பாசை மட்டுமே!
விரிந்த காகிதத்தின் நடுவிலும் வெளியிலும் என மாறி மாறிக் கண்களை ஊன்றினேன். சாலை கடக்கும் குதிரைவாலுக்காகச் சற்று நேரம் பேருந்தின் ஒளி அணைந்து ஒளிர்ந்தது. சின்னமலையில் இறங்கி மெட்ரோ பாலத்தின் அடியில் அலைவுறும் சிறகுகளைத் தேடினேன். இருட்டு வானம் சிவப்பு, மஞ்சள் நிறம் பூசி வெளுக்கத் தொடங்கியது. தேவாலயத்தில் தெரிந்தது`He is risen'.
சின்னமலையில் இருந்து B18 பேருந்தில் ஏறி சென்ட்ரலில் இறங்கினேன். அங்கிருந்து புளியந்தோப்புக்கு 42 பேருந்தில் செல்ல வேண்டும். வத்தல் கறி வாங்கித் தருவதாகச் சொன்ன நண்பரிடம் எங்கு வரவேண்டுமென்று போனில் அழைத்துக் கேட்டேன். g3 நிறுத்தத்திற்கு வந்துவிடுங்கள் என்றார். பின்னி மில்லின் மதிற்சுவரின் அடியைத் துளைத்து மேலெழுந்து ஓங்கியிருந்தது அரசம் வேர்கள். அவை, பரந்து விரிந்த கூந்தலாய்ச் சுவரெங்கும் அசைந்தாடின. அடிச் சுவர் பெயர்ந்து விழுந்ததில் அடிவேர் சூரியனில் ஒளிர்ந்தது. காளையை அடக்கும் வீரன், பொது சுமக்கும் வண்டி மாடுகள், சண்டையிடும் சேவல்கள் ஆகியவை எதிர்ச் சுவரின் ஓவியத்தில் நிழலாடின. மேற்புரம் தொங்கும் கேபிள் வயரில் சிக்கிய கிளையைக் கவ்வ முயலும் பறவை, வெகு நேரத்திற்குப் பிறகு சிறகை மட்டுமே சுமந்து பறந்தது.
ஸ்கூட்டியில் வந்த நண்பரை அப்போதுதான் முதலில் பார்த்தேன். பின் அமர்ந்து சென்றால், சற்று தொலைவிலேயே புளியந்தோப்பு இறைச்சிக் கூடம் வந்தது. இரண்டாண்டுக்கு முன்பு பீஃப் கவிதைகள் எழுதும் போது வந்தது. சந்தை அடர்ந்த கூட்டமாய் இருந்தது. மார்பிலும் தோலிலும் உரித்த ஆடுகளைச் சுமந்தபடி அங்கும் இங்குமாய் அலைவுற்றிருந்தன மனிதத் தலைகள். கிழக்கு எல்லையை அடைந்து வத்தல் கறி விசாரித்தோம். டிகாஸ்டர் சாலையில் உள்ள A1 பீஃப் ஸ்டாலில் கிடைக்கும் என்று ஒருவர் கூறினார். ஆனால், அங்கு இல்லை. எதிரில் இருந்த சார்மினார் கடைக்கு முன்பு பேசிக்கொண்டிருந்தோம். சுவர் ஓவியராக இருக்கும் நண்பரிடம் என்னைப் பற்றிக் கூறினேன். பரஸ்பரம் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கும் போது, சாப்பிடுறீங்களா நண்பா என்றார். இருவரும் சாப்பிடுவதென்றால் ஓகே என்று சொல்வதற்குள் ஒரு டோக்கன் வாங்கி பிரியாணியையும் கையில் ஏந்தி வந்துவிட்டார்.
கொத்தாகக் குவிக்கப்பட்ட கறி மிகவும் மென்மையுடன் இருந்தது. குச்சி போன்ற குறு எலும்புகளையும் ஒரு துண்டு கிழமாட்டுக் கறியையும் ஒதுக்கி வைத்துவிட்டு சிறுகச் சிறுகச் சுவைத்தேன். சோற்றுக்குள் கறியைக் கறிக்குள் சோற்றைத் திணித்து அரிந்த வெங்காயத்தை மடித்துத் தின்றேன். நல்லி எலும்பு ஒன்று வாங்கி வரவா என்றார். இதையே திங்க முடியாமல் தின்கிறேன். இன்னொரு நாள் நல்ல பசியோடு வருகிறேன் இருவரும் சேர்ந்து சாப்பிடுகையில் நிறைய வாங்கித் தின்போம் என்றேன். சும்மா அல்வாவைப் போல் தித்திப்பாக இருந்தது.
புளியந்தோப்பில் பெரும்பாலான இடங்களில் அம்பேத்கரின் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. திறந்த வெளி அடுப்பு, வாசலில் அமர்ந்து சாப்பிடுவது, திண்ணையில் தலை சீவுவது, குடத்தில் நீர் எடுத்துச் செல்வது, சாணி அள்ளுவது என அத்தனை காட்சிகளும் பெருங்கிராமத்திற்குள் நுழைந்தது போன்ற உணர்வைக் கொடுத்தன. 40 ஆண்டுகள் பழமையான குடியிருப்புகளில் பாசான் மட்டுமல்ல மரம் செடி கொடிகளும் முளைத்து வளர்ந்துள்ளன. இவை வளர வேண்டிய இடத்தில் வளரவில்லை. இம்மக்கள் வாழ வேண்டிய இடத்தில் வாழவுமில்லை. எனக்கோ! இன்றும் வத்தல் கறி கிடைக்கவில்லை.
26.03.2022
சனிக்கிழமை
No comments:
Post a Comment