Sunday, March 20, 2022

கனத்தைத் துளைக்கும் இன்னோர் கனம்


நேற்று மாலை 6 மணிக்குப் `பண்டிதர் 175' நூலுக்கு விமர்சனக் கூட்டம் நடைபெறவிருந்ததை யொட்டி, பாண்டிச்சேரி செல்லலாம் என்றிருந்தேன். இரண்டு வாரத்திற்கு முன்பே ஆய்வு மாணவர் சந்துரு நிகழ்ச்சிக்கு வாங்க சேர்ந்து போலாம் என்று சொல்லியிருந்தார். நான் வருகிறேன் என்று உறுதியாகச் சொல்லவில்லை. ஆனாலும், வாங்க தல போயிட்டு வருவோம் என்றார். சரி போகும் போது சொல்லுங்கள் பார்ப்போம் என்றிருந்தேன். நேற்று போன் செய்து, என்னங்க சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டீர் என்றேன். எனக்கு ஒரு தேர்வு இருக்கிறது, நானே நிகழ்ச்சிக்குப் போவேனா என்று தெரியவில்லை என்றார். சரி நான் புறப்பட்டு வருகிறேன் என்றதும் தேர்வுக்குச் செல்வதால் மொபைலை வீட்டில்தான் வைத்துச் செல்வேன். ஒருவேளை போன் செய்வதாக இருந்தால் மாலை 7 மணிக்கு மேல் அழையுங்கள் என்றார். தம்பி கே.சியிடம் பாண்டிச்சேரிக்கு எனக்கு டிக்கெட் போட முடியுமா என்றேன். வாங்கண்ணா போலாம், இதெல்லாம் கேட்கணுமா என்றான். சரி கிளம்பிப் போய்விடலாம் என்று இருந்த போது, பையில் பணமில்லாமல் மேற்கொள்ளும் பயணம் பலகீனமான அனுபவத்தையே கொடுக்கும் என்றெண்ணி உள் மனம் சொல்ல பாண்டிச்சேரி பயணத்தை ரத்து செய்தேன். அப்படியிருந்தும் இலஞ்கிக் கண்ணனும் கே.சியும் வாங்கப் போலாம் என்று விடாப்பிடியாய் அழைத்தனர். முன்னே செல்லுங்கள் பின்னே வருகிறேன் என்று சொல்லிவிட்டேன். 

இலஞ்சிக் கண்ணனும் கே.சியும் இல்லாததால் வெறிச்சோடிப் போயிருந்தது. என்ன செய்யலாம் என்று யோசித்து, பரிசல் செந்தில்நாதனை அழைத்துச் சில புத்தகங்கள் வேண்டும் பணம் அடுத்த மாதம் கொடுத்து விடுகிறேன் என்றேன். நீங்க போன் செய்வீங்க, ஆனா வரமாட்டீங்க. பிறகு எதுக்குய்ய நேரத்தை வீணாக்குகிறீர் என்று செல்லமாய்க் கோபித்துக்கொண்டார். அவர் கோபப்படுவதிலும் நியாயம் உண்டு. சில முறை போன் செய்து வருவேன் என்பேன், ஆனால் போக மாட்டேன். காரணம் அலைச்சல். அவர் கடைக்குச் சென்று இரண்டு வருடங்களுக்கும் மேலாகிறது. கொரோனாவுக்கு முன்பு சென்றது. எல்டாம்ஸ் சாலை, மந்தைவெளி, திருவல்லிக்கேணி ஆகிய இடங்களில் கடை வைத்திருக்கும் போது அடிக்கடி சென்று வந்திருக்கிறேன். இப்போது கடைக்குச் செல்ல, கோயம்பேடு செல்லும் வழியில் எம்எம்டிஏ காலனி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி உள்ளே 2 கி.மீ தூரம் நடக்க வேண்டும். இப்போதெல்லாம் ஊருக்குச் செல்வதென்றால் கூட கோயம்பேடு பக்கம் செல்வதில்லை. நேரடியாக தாம்பரம்தான்.

வேளச்சேரிக்கு be4Books வந்த பிறகு பெரும்பாலும் புத்தகங்கள் அங்கேயே வாங்கிக் கொள்கிறேன். வீட்டுக்குச் செல்லும் போதும் அலுவலகம் வரும் போதும் be4Books கடை அருகில்தான் பேருந்து நிறுத்தம், அலைச்சலில்லை.

 `அம்பேத்கர் கடிதங்கள்', `நகைக்கத்தக்கதல்ல', `கிராம்சியின் சிறைக்குறிப்புகள்' ஆகிய நூல்களின் அட்டைப் படங்களை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து செந்தில்நாதனின் வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பிவிட்டுப் புறப்பட்டுவிட்டேன். வாசிக்க ஆரம்பித்த காலத்தில் `சிதம்பர நினைவுகள்', `சொற்கள்' போன்ற மிக முக்கியமான புத்தகங்களைச் செந்தில்நாதன் எனக்கு அறிமுகப்படுத்தினார். அண்ணா சாலையில் இருந்து அங்கு செல்லக் கிட்டத்தட்ட 1 மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது. ஒரு பக்கம் வெயில் மறுபக்கம் துரித உணவங்களின் தகிப்பு. இரண்டும் சேர்ந்து எரிக்கும் அனலில் நடந்து சென்றேன். அருள்மிகு ஶ்ரீ ஆதி ஞான சக்தி வினாயகர் ஆலயம் முன்பு நின்று, ``இபி வாசலில் உள்ள மாதா கோயிலுக்கு எப்படிச் செல்ல வேண்டும்'' என்று கேட்டேன். நேராய்ப் போய், இரண்டாவது லெஃப்ட் என்றார்.  

கடைக்கு முன்பு பலகார வாசனையை நுகர்ந்தபடி, உள்நுழைந்தேன். ஜன்னல் கம்பிகளுக்கு நடுவே தெரிந்த செந்தில்நாதனின் முகம் இன்முகத்துடன் வரவேற்றது. மூன்று பேரிடம் பேசிக்கொண்டபடி எனக்காக எடுத்து வைத்திருந்த நூல்களுடன் ஏற்கெனவே கேட்டிருந்த `புதுமைப்பித்தனின் கட்டுரைகள்' இருந்தது. அடுத்த அறைக்குச் சென்றிருந்த என் அருகில் வந்து மின் விசிறியைச் சுழலவிட்டு வேணும்கிற புத்தகங்களைப் பாருய்யா என்றவரிடம் தேநீர் குடிப்போமா என்றேன், இப்போதுதான் குடித்துவிட்டு வந்தேன் என்றார். புத்தகங்களைத் தெரிவுசெய்து அவரின் மேசை மீது வைத்தேன். ஆசிரியர் குழு சந்திப்பு நடக்கிறது, சரியா பேசலை என்று எதுவும் நினைத்துக் கொள்ளாதய்யா என்றார். அதெல்லாம் ஒன்றுமில்லை என்றபடி மீண்டும் உள்ளறைக்குச் சென்று பார்த்த புத்தகங்களின் மீதே கண்களைப் பதித்தேன். பின்பு, சரி நான் கிளம்புகிறேன் என்று சொல்லிவிட்டுப் புத்தகங்களை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன். ஆசிரியர் குழுவினரிடம் என்னை அறிமுகப்படுத்தினார். அறிமுகம் செய்து விடைபெற்றேன். 

ஒற்றைக் கையில் புத்தகங்களின் கனம். அக்கனத்தை வலது இடது கைகளில் மாற்றி மாற்றிச் சுமந்து நடந்தேன். D70 பேருந்தில் ஏறி, இருக்கையற்ற இருக்கையின் சாய்தளத்தின் பிடிமானத்தில் புத்தகங்களைத் தாங்கி நின்றேன். கனத்திலிருந்து ஒன்றை உருவினேன். அது பா.ரவிக்குமார் - கல்பனா மொழிபெயர்த்த `மிதக்கும் உலகம்' என்னும் ஜப்பானியக் கவிதைகள். பள  பளக்கும் வண்ணத்தாளில் ஒவ்வொரு கவிதைக்கும் மர அச்சு ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன. வாசிக்க வாசிக்க இறுக்கமும் கனமும் விலகி லேசாய் உணர்ந்தேன். ஒரு கனம் இன்னோர் கனத்தைத் துளைத்துவிடுகிறதல்லவா! 

20.03.2022
ஞாயிற்றுக்கிழமை

No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...