Thursday, April 29, 2021

உணவு அரசியலின் கவிதைகள் - ஷங்கர்ராமசுப்ரமணியன்

 


உயிரற்ற மாட்டுக்கறி உணவாக ஆகும்போது, அது உயிர்களை நீட்டிக்க உதவுகிறது. உழைப்பும் உற்பத்தியும் குழந்தைகளும் அதன் வழியாக நீளும் பண்பாடும் உயிர்கள் நீட்டிக்கப்படுவதாலேயே உருவாகின்றன. உயிரை நீட்டிக்க முடிந்த எந்த உணவும் தனித்ததல்ல, விலக்கப்பட்டதல்ல. அதனால், நம்மை வாழ்விக்கும் எல்லா உணவுகளும் உயிர்த்தன்மை கொண்டவையே. அதனாலேயே அவை பொதுப் பண்பாட்டின் உயிரங்கமாகவும் ஆகிவிடுகின்றன. அந்த உயிர்த்தன்மை கலை ஆகும், கவிதை ஆகும் எழில் பச்சோந்தி எழுதிய ‘பீஃப் கவிதைகள்’ தொகுப்பில் நடந்துள்ளது.

தமிழகம், கேரளத்தின் வேறு வேறு பிராந்தியங்களில் உள்ள மாட்டுக்கறிப் பண்பாட்டினூடாகச் செய்த யாத்திரை மூலம் இந்தக் கவிதைகளை அவர் அடைந்துள்ளார். உலகெங்கும் பெரும்பான்மை மனிதர்களின் உணவாதாரமாகவும், இந்தியாவில் ஆறில் ஒரு பகுதிக்கும் மேலான மக்களின் புரதச்சத்தை உறுதிசெய்யும் உயிராதாரமாகவும் உள்ள மாட்டுக் கறி தொடர்பிலான அரிதான பண்பாட்டுத் தரவுகள்தான் ‘பீஃப் கவிதைகள்’. 

பச்சோந்தியின் கவிதைகளில் குழந்தைகளுக்கு விளையாட்டுத் தோழனாக மாடு இருக்கிறது; அது குழந்தைப் பருவத்து நினைவின் ஒரு பகுதியாக ஆகிறது; அவர்களுக்கே அல்வாவாகவும் கனியாகவும் சிறுபிராயப் பண்டமாகவும் தெரிகிறது. உயிருடன் இருக்கும்போது புனிதப்படுத்தப்பட்டு, இறந்த பிறகு அதைச் சாப்பிடுபவர்களுடன் சேர்ந்து விலக்கப்பட்ட தொல்நினைவுகள் உறைந்திருக்கும் பெரும் பாறையாக உள்ளது. சில சமூகங்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் பிரம்மாண்ட ரொட்டியாக உள்ளது; தொடரும் ஒடுக்குமுறையைப் பாடும் ‘உடைந்த மனிதர்’களின் பறையாக ஆகிறது. மாட்டுடன் திருப்பாவையின் நினைவுகளையும், மாட்டின் கயிறு உரலைப் பின்னும்போது கண்ணனையும் சேர்த்து எழுப்புகிறார் பச்சோந்தி.

கவிஞர்களும் ஆதிவாசிகளும் குழந்தைகளும் உருவாக்கும் தனிப் புராணங்களையும் பச்சோந்தி இந்தக் கவிதைகளில் உருவாக்குகிறார். (மாட்டுவால் மயிரைக் கயிறாய்த் திரித்து/ கரந்தமலையில் தூளியாடினேன்/ மாட்டுக்கொம்பைத் தன் தலையில் பொருத்தி விளையாடிய தங்கை/ தொரட்டிப் பழங்களைப் பறிக்கச் சென்றாள்/ குரங்கொன்று நெல்லிக்காய்களை உலுக்க/ உலுக்கலில் மலையே உதிர்ந்துவிடும்போல் இருந்தது/ பதறியடித்த தங்கையும் நானும்/ மலையை உருட்டிப் புரண்டபடி வீடடைந்தோம்/ தொரட்டிப்பழம் பறிபோன சோகத்தில்/ வழுக்குப் பாறையொத்த மாட்டுத்தொடையில்/ சறுக்கிச் சறுக்கி விளையாண்டோம்.) இந்தக் கவிதையைப் படித்த வாசகருக்கு அதற்குப் பிறகு பார்க்கும் மலைகளெல்லாம் மலையின் சரிவெல்லாம் மாடாகத் தெரியும்.

மாடு, மனிதன், இயற்கை கொள்ளும் உறவை அத்தனை விவரங்களுடன் நுட்பமாகச் சொல்லும்போது மொழி, யதார்த்தம் கடந்த மயங்கும் உணர்வைத் தனது காட்சிகள் வழியாக பச்சோந்தி சாதாரணமாய் உருவாக்கிவிடுகிறார். தோட்டிக்குளத்தில் உலாவரும் மேகங்களை உறிஞ்சிக் குடிக்கிறது மாடு என்ற காட்சியும், அதன் பொடனியில் வீற்றிருந்தபடி காதுமடலைக் குத்தும் ஊர்க்குருவியும், குளம் சொட்டியபடி இருளுக்குள் நுழையும் நண்டும் இப்படித்தான் அமைதியோடு அவர் கவிதைகளில் நுழைகின்றன. நனவுக்கும் நனவிலிக்கும் இயற்கைக்கும் இருப்புக்கும் முன்தீர்மானங்களற்று அசையும் ஊஞ்சலிலிருந்து பச்சோந்திக்குக் கிடைத்திருக்கும் காட்சிகள் இவை. இயற்கை - விலங்கு - மனிதன் ஊடாடும் ஒட்டுமொத்த உயிர்ச் சங்கிலியின் கதைகளாகவும் இவற்றைப் படிக்கலாம்.

வலிந்து மேற்கொள்ளப்பட்ட அரசியல் பாவனையோ, புதியவொன்றைச் சொல்கிறோம் என்ற பரபரப்போ இன்றி தேர்ந்த கவனமும் ஆழமும் மௌனமும் கொண்ட குரல் பச்சோந்தியுடையது. தமிழில் புதுக்கவிதை வடிவம், இங்கே நடுத்தர வர்க்கத்தினரின் உயர்சாதியினரின் விசாரங்களைக் கொண்ட கலை வடிவமாகவே தோற்றம்கொண்டது. ஞானக்கூத்தனிலும் சற்று இறங்கி கலாப்ரியாவிலும் 1990-களின் ஆரம்பத்தில் கவிஞர்கள் பழமலய், யவனிகா ஸ்ரீராம் வழியாகவும் ஜனநாயகத் தன்மையை அடைந்தது. மதிவண்ணனில் உத்வேகம் பெற்ற தலித் கவிதை அழகியல் பச்சோந்தியில் புதிய பரிமாணத்தைச் சாதித்துள்ளது. புதுக்கவிதை என்ற வடிவத்தில் இருந்த உணவும், உருவகிக்கப்பட்ட உயிர்த்தன்மையும் சேர்ந்து ஒரு பண்பாட்டை இணைத்துக்கொண்ட கலை சிருஷ்டியாக ‘பீஃப் கவிதைகள்’ உருவெடுத்துள்ளன.

- ஷங்கர்ராமசுப்ரமணியன்,

தொடர்புக்கு: sankararamasubramanian.p@hindutamil.co.in

 

பீஃப் கவிதைகள்

பச்சோந்தி

நீலம் வெளியீடு

திருவல்லிக்கேணி, சென்னை-14.

தொடர்புக்கு: 99942 04266

விலை: ரூ.150

https://www.hindutamil.in/news/literature/539681-beef-kavidhaigal-1.html

தெளிவி

 


கிணற்று நீரில் விஷம் கலப்பவன்
ஒரு குவளை தண்ணீர்கூட தரமாட்டன்
பயிர்களைத் தீயிட்டுக் கொளுத்துபவன்
ஒரு கவளம் உணவுகூட தரமாட்டான்  
பாதங்களைக் கழற்றி தலையில் சூடச் சொல்பவன் 
பழுதான சாலைகளைச் செப்பனிடக்கூட மாட்டான்
காதலித்தவர்களைக் கழுத்தறுப்பவன்
பின்னிப்பிணைந்த சிறு செடியையும் விட்டுவைக்கமாட்டான் 
மனநலம் பிசகிய இவர்களையெல்லாம் அழையுங்கள்
கருவறையின் எடையைக் காட்டுங்கள் 
வயிற்றைத் திறந்து காட்டுங்கள்
மரணக்குழியின் ஆழ அகலங்களை இறங்கிக் காட்டுங்கள்
குழி தானாக மூடுவதற்குள்
கவனமாக மேலே அழைத்து வந்துவிடுங்கள்
கல்லெறிந்த நீர் எப்போதும் கலங்கியே இருக்காது
உடைந்த குடம் நீரை முழுவதும் கொட்டாது

- பச்சோந்தி
   29.04.2021


உழுகுடிகளின் கவிசொல்லி - பேராசிரியர் கல்யாணராமன்

 




இப்போது மூங்கிலுக்கு என் பாட்டி வயதாகிறது 

காய்ந்த வேர்களின் கணுக்களில் சிந்தித் 

தரையில் பரவிய மூங்கில் அரிசிகளில் 

ஒன்றுதான் நான்      

இது பச்சோந்தியின் மூன்றாவது கவிதைத்தொகுப்பு. முதல் தொகுப்பான வேர் முளைத்த உலக்கையின் வெளியீட்டு விழாவில் நான் பேசினேன். அதைச் சிறிதும் மாற்றாமல், அப்படியே கணையாழியில் வெளியிட்டார்கள். ஓர் அசல் கிராமத்துக் குரலென்றும், நிகழ் கால வெக்கையின் நிஜக்காட்சியென்றும், மண்பிணைப்பின் வேரோடிய மனவிரிவென்றும், ஒரு பெருந்திரளின் ஆவேச வெடிப்பாய்ப் பொங்கிப் பெருகும் பேச்சென்றும் கவிஞர் பச்சோந்தியைச் சாதகமாக மதிப்பிட்டிருந்தேன். இன்னும் நுண்மையான கவனிப்புகளுடன், காட்சிமொழியின் அதிகபட்ச சாத்தியங்களுடன் அவர் கவிதைவயப்பட வேண்டுமெனக் கோரியிருந்தேன். இந்த என் வலியுறுத்தலுக்குச் செவிகொடுத்து  கிராமத்தை அதன் வேர் முடிச்சிலிருந்து உசாவியும் நகரக்கண்களால் விசாரித்தும் உழுகுடிகளின் உடலெங்கும் புகுந்துள்ள கருவேல முட்களைக் கண்டுகொண்டும் இத்தொகுப்பில் பச்சோந்தி தீவிரப்பட்டிருக்கிறார், ஆவணமாக்கத்துடன் அசைவுகளுக்குள் சுருண்டிருக்கும் அதிர்வுகளையும் ஆர்ப்பாட்டமின்றிக் கவனப்படுத்தியுள்ளார். மேலும், கடலுக்குள் பதுங்கிய சூறாவளியாய், அவர் சொற்களில், நெருப்பள்ளிப்போட்டுக் குப்பைக்கூளங்கள் ஒழிக்கும் ஞான சூரியனின் கிரணக் கதிர்வீச்சையும் காண்கிறேன்.           

ஒரு தொப்புள் கொடியைப் பல்லில் அறுக்கும் 

காலக்கூத்தில் 

சிறு ஈரமடி தொடங்கித் தீயை முடுக்கும் ஊழித்தீட்டே 

நீதி... நீதி...

பறையொலியில் பார்துயிலை எழுப்பிச் 

சுள்ளிகளின் மீது குடல்விறைத்து ஆடுகிறோம் 

தகிக்கும் கானலில் எம்மைப் பொசுக்கு 

எங்கள் அலறலோ ஆவியோ மட்டும்தான் 

உமது நெருப்பின் உயரம் தாண்டும் 

கொதிக்கும் எம் சூடான சாம்பலை 

உம் நெற்றியில் பூசி மிச்சத்தை வாயிலிட்டு ருசி          

ஓரிடத்தில் பிறந்து, அவ்விடத்திலேயே வளர்ந்து, அங்கேயே மணமுடித்துப் பிள்ளைகள் பெற்றுப் பிழைத்து, உழைத்துக் களித்த மண்ணோடு மண்ணாய்ப் புதையுண்டும், நதியோடு விளையாடிக் கொடியோடு தலைசீவிக் காற்றோடு காற்றாய்க் கலந்தும் கரைந்தும் போன வேளாண் வாழ்வின் காலம் முடிந்துவிட்டது. பதியெழு அறியாப் பழங்குடி மக்கள் எனச் சிலம்பு பேசும் அந்தத் தொல்குடிப் பாரம்பரியம், இன்று புலம்பெயர்தல்களின் இடையறாத துரத்தலால், பிணந்தின்னிகளின் கருணையை எதிர்நோக்கிக் கூசிச்சிறுத்துக் கையெடுத்துக் கும்பிட்டு உயிர்ப்பிச்சை கேட்கிறது. ஊற்று, குளம், குட்டை, கிணறு, ஏரி, நதி, காடு, கழனி, பூக்கள், பறவைகள், விலங்குகள், தோட்டம், தோப்பு, நிழல், தட்டான்கள், புல், பூண்டு, பச்சை தாண்டி மனிதனை அடிக்கக்கிளம்பிவிட்டன மனிதமூளைகள். இயற்கையோடும் வேற்றுக் கிரகங்களோடும் மிருகங்களோடும் இயந்திரங்களோடும் மனிதனால் போராடவும் வெற்றி அடையவும் முடியும். ஆனால், மனிதனோடு மனிதன் மோதும் தற்கொல்லிப்போரைத் தவிர்த்து, எல்லோரும் இன்புறும் மேலாம்நிலையை எப்படித் தக்கவைப்பது என்பதுதான், விஞ்ஞான யுகத்தின் வினா. இதற்குப் பதில் கூறும் திராணி பச்சோந்திக்கு இருக்கிறது.    

நாம் ஒளியிலும் இருக்கிறோம் 

இருளிலும் இருக்கிறோம் 

அந்த ஒளியும் இருளும்  

உன்னுடையதுமில்லை 

என்னுடையதுமில்லை   

நாம் ஒளியற்றும் இருக்கிறோம் 

இருளற்றும் இருக்கிறோம் 

அந்த ஒளியின்மையும் இருளின்மையும் 

உன்னுடையதும் என்னுடையதுமாகும்  

கிராமங்களின் அழிவைக் கண்முன் கண்டுகொண்டிருக்கிறோம்; விவசாய நிலங்கள் ஃப்ளாட்டுகளாவதை வேடிக்கை பார்க்கிறோம். நகர்மயமாதல் குறித்தும், மக்கள்தொகைப் பெருக்கம் பற்றியும், பூர்வகுடிப் பண்பாட்டழிவு சார்ந்தும், மையக்குவிப்பின் கேடுகள் தொடர்பாகவும் நிறைய நிறையப் பேசிவிட்டோம். பிரச்சனைகள் பிரச்சனைகள் பிரச்சனைகள் என்பதல்லாமல், தீர்வுகளேயில்லை என்ற நிலைக்குப் பொதுபுத்தியை மிக விரைந்து நகர்த்திக்கொண்டிருக்கிறோம். சாலைகள் வேண்டும், மேம்பாலங்கள் வேண்டும், மெட்ரோ வேண்டும், தடையற்ற மின்சாரம் வேண்டும், லாரி லாரியாய்க் குடிநீர் வேண்டும், செல்போன்களும் கணினிகளும் புதிது புதிதாய்த் தினமும் வேண்டும் என்ற மனநிலை இனி மாறாது. உயிரோடிருப்பதற்கான போராட்டமும், மிஞ்சி எஞ்சுவதற்கான யத்தனிப்பும் இனி குறையாது. இவ்விடத்தில் நின்றுகொண்டு புத்தர், இயேசு, வள்ளலார், காந்தி என்று சமரசம் சன்மார்க்கம் பேசலாகாது. 

அயோத்திதாசர், பெரியார், அம்பேத்கர் என்று பயணப்பட்டு, மார்க்ஸ் காட்டும் ஒளியில், லெனினையும் மாவோவையும் காஸ்ட்ரோவையும் சிந்தித்தாக வேண்டும். இதை வறட்டுப் புரட்சிவாதம் என்று ஏசி கட்சி மனநிலையைக் கண்டித்துவிட்டுக் கடுகுள்ளத்தாரோடு கண்மறைவில் கைக்கோத்துக்கொண்டு, மலையை வெட்டிச் சாலை போடுவதையும் அணுவுலைகளையும் எதிர்ப்பதுபோல் ஆதரிப்பதுதான் நம்மில் பெரும்பாலோர் தொடர்ந்து செய்வதாகும். இச்சூழ்ச்சியைப் புரிந்தும் புரியாமல் மருண்டு நடுங்கும் இளம் கவிமனங்கள், புறப் பதற்றங்களால் அகஞ்சிதைந்து நொறுங்கிக் கண்ணீரும் கவலையுமாய்ப் பித்துப் பிடித்துச் சீறுகின்றன. 

ஒரே புயல் ஓராயிரம்முறை சுழன்றடிக்கிறது 

ஒரே மனிதன் ஓராயிரம்முறை விஷம் குடித்துச் சாகிறான் 

ஒரே மீன் ஓராயிரம்முறை செத்து மிதக்கிறது 

ஒரே மான் ஓராயிரம்முறை ரத்தம் கக்குகிறது 

ஒரே மின்கம்பம் ஓராயிரம்முறை உடைந்து சாய்கிறது 

மழைக்கு ஒதுங்கியவனின் மீது 

ஒரே மரம் ஓராயிரம்முறை முறிந்துவிழுகிறது 

நுகத்தடி பூட்டிய மாடுகளின் மீது 

ஓராயிரம்முறை மின்கம்பி அறுந்துவிழுகிறது 

ஓராயிரம்முறை நாய் கவ்வுகிறது

இப்பூமியை

பழைய மாட்டுக்கொம்பால் புதிய மாட்டின் குரல்வளையைக் குத்திக்கொண்டிருக்கிறார் பச்சோந்தி; ஆடு நீராகாரம் குடிக்கும் ஒலியைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்; அப்பாவும் விறகென்று அரிவாளுக்கும் தெரிந்துவிட்டதை அறிவிக்கிறார்; வாழ்வு கெடுக்க யார் யாரோ வருவதெண்ணிப் பதைபதைக்கிறார்; மலை சுமந்த வண்ணத்துப்பூச்சி மீதேறும் லாரியைப் பகைக்கிறார்; கொழுமுனையைப் பிடுங்கி அடிவயிற்றில் நட்டுக்கொண்டவரைக் குருதிப் படமாய்க் காட்டுகிறார்; மலைப்பாம்பாகும் மெட்ரோ ரயிலை வெறிக்கவைக்கிறார்; அமிலம் மிதக்கும் புகைக்குள் மாநகரச்சாலையின் மூச்சுத்திணறலை நாடி பிடிக்கிறார். பிளாஸ்டிக் தொட்டியின் கற்றாழைக்கும் ஓமவல்லிக்கும் நீரூற்றி நடுங்கும் குதிங்காலைப் பார்வைப் புலத்தில் நிறுத்துகிறார்; உரலிலிருந்து உருவப்பட்டு அந்தரத்திலாடும் புழுத்துப்போகாத உலக்கையை செல்போன் வெளிச்சத்தில் எதிர்கொள்கிறார்! காட்சி மொழி விரிய விரிய எட்டுத் திசைகளிலும் கேட்கும் சிரிப்பும் அழுகையும் சேர்ந்து, முதுகுத்தண்டைச் சில்லிடவைக்கின்றன. 

அரளி வீசும் கந்தகக் காற்றை உள்ளிழுத்தபடி புறப்படும் பேருந்தையும், மேம்பாலத்தில் மூழ்கிய ஆற்றையும், மழை நிறைக்கும் பிச்சைப்பாத்திரத்தையும்,  முறிந்த கிளையில் தலைகீழாகத் தொங்கும் கலாபத் தோகையையும், அலையாத்திக் காடுகளின் மரண வாசத்தையும் காட்டும்போது பேயவன் காண் எங்கள் கவி, பெரும் பித்துடையான், காயழல் ஏந்திக் காதலுடன்  மண் பாடுவான் எனக் கண்டுகொள்கிறோம். தயிர் கலந்த, மிருதுவான, கொத்தமல்லியும் கறிவேப்பிலையும் தூவிய, எண்ணெய் மிதக்கும் மாட்டுக் கறியை நாவிலெடுத்து வாயிலடக்கிக் கீழண்ணமும் மேலண்ணமும் எச்சிலில் ஊற ஊறத் தொண்டைக்குழிக்குள் ஆழப்புதைத்துச் சிறுமியின் கையில் ஒளிரும் வீச்சருவாள் தந்து, ரத்தம் நிலமெல்லாம் ரத்தம், ரத்தம் நினைவெல்லாம் ரத்தம் எனப் பலிக் குரலெடுக்கிறார் பச்சோந்தி. 

நாங்கள் யார் பொருளையும் திருடியதில்லை 

நாங்கள்  யார் நிலத்தையும் அபகரித்ததில்லை 

எமது பனையின் வேர்கள் அறுக்கப்படுமாயின் 

எமது புளியம்பூக்கள் உதிர்க்கப்படுமாயின் 

எமது மயில் உண்ணும் பயிர் அழித்து 

அளவைக்கல் நடப்படுமாயின் 

கரும்பும் நெல்லும் தென்னையும் விளைந்திருக்கும் நிலத்தை 

ஜேசிபி விழுங்குமாயின் 

கொழுமுனையைக் கொண்டறுப்போம் உங்கள் சதை நரம்புகளை 

அம்மியில் நொறுக்குவோம் எலும்பு மூட்டுகளை 

அவற்றைச் சூரியனை மூட்டி 

கொஞ்சம் சூப்பு குடிப்போம் 

எஞ்சிய சிறு குறு சதை எலும்புத்துண்டுகளைக்  

கோணூசியில் கொத்தி வானில் எறிவோம் 

இனி எவனின் நிழலாவது எம் கிணற்று நீரில் தென்பட்டால் 

உலக்கையால் குத்துவோம் 

 ஆம் உலக்கையால் குத்துவோம் 

இருள் மூடிய ஒரு மாபெரும் மரணப் பள்ளத்தாக்கில் விழுந்துகொண்டேயிருக்கும் பிணங்களை விளக்கேந்திக் கணக்கெடுக்கும் கண்ணியமற்ற காவற்பணியைக் கவிஞர்கள் செய்யவேண்டியிருக்கிறது. நிகழ்காலம் கோரும் இந்தக் கடுங்காவலைத் தன்நினைவாகப் பச்சோந்தி அம்பட்டன் கலயம் தொகுப்பாக்கியிருக்கிறார். இது இன்றின் கவிதையானாலும், நேற்றை நினைத்தேங்குவதும், நாளைக்கு நடுங்குவதுமாகக் காலம் மூன்றுக்கும் சாட்சி பூதமாகிறது. ஒரு கிராமக் கவி, புலம் பெயர்ந்திறங்கிய நகரவாழ்வால் வெகுண்டெழுந்து, மண்ணையும் மனிதர்களையும் அதிகாரங்களுக்குக் காவுகொடுத்த அவலத்தையே மீளமீள அலுக்காதும் சலிக்காதும் பச்சோந்தி பேசுகிறார். இலக்கைக் குறிவைக்கும் அவர் குரல், மேன்மேலும் கூர்மையுறுவதைக் கவனிக்கிறேன். மொழியும் பார்வையும் ஒன்றுகூடி கவிதை அடர்த்திப்படுவதைக் காண்கிறேன்.                              

வீட்டைத் தூக்கிக்கொண்டலைகிறேன் 

புதிதாய் வாங்கிய இடத்தில் கட்டிய கனவு வீடு 

இப்போது அங்கே முடிவற்ற தார்ச்சாலை செல்கிறது 

அரளிக்காற்றை வீசியபடி 

அதைச் சொந்த ஊருக்குத் தூக்கிச்சென்றேன் 

அங்கே ஓர் அணு உலை புகைந்தபடியிருந்தது 

மாமன் ஊருக்குத் தூக்கிச்சென்றேன் 

அங்கே மீத்தேன் வாயு வெடித்தபடியிருந்தது 

அத்தை ஊருக்குத் தூக்கிச்சென்றேன் 

அங்கே நிலக்கரி வெட்டியபடியிருந்தது 

இனி எங்கேதான் தூக்கிச்செல்வது இவ்வீட்டை 

பேசாமல் கையிலேயே வைத்திருக்கலாமென்று நினைக்கிறேன் 

என் காட்டுக்குருவிகளோடு 

என் காட்டுக்காற்றோடு 

என் காட்டுப்பூச்சிகளோடு 

என் காட்டுவானத்தோடு                          

கனிவோடு பச்சோந்தி தொட்டுத் தழுவும் மண்பற்று மனிதர்களுக்குக் கணக்கில்லை; நஞ்சை புஞ்சையில் அவர் கண் பதியாத ஒருதுளி நிலமில்லை; கவிதை அவருக்குக் கை வாளில்லை; உயிர்க்காற்று! இவ்வாறே உழுகுடிகளின் கவியாக அவர் உயர்ந்தெழுகிறார். ஆனால் அடுக்கிப் பட்டியலிடுவதையும், மிகை நெகிழ்ச்சியையும், சொற்களைச் சற்றே நீட்டுவதையும், கூடுதல் அழுத்தங்களையும் இனிமேல் பச்சோந்தி சுய தணிக்கை செய்ய வேண்டும். தாமாகவும் பிறராகவும் கூடுவிட்டுக் கூடுபாய்ந்து அவர் பொதுமையாகும்போது, நோக்கும் திசையெலாம் தாமன்றி வேறில்லை என்றாகி கவிதை பேசாப் பேச்சாகிவிடும். இத்தடத்திலேயே தொடர்ந்தவர் பயணிக்கும்போது, இன்னொரு கபிலனாய், பரணனாய், பெருஞ்சித்திரனாய் பெருங்கடுங்கோவாய்த் தமிழின் நவீன உருத்திரங்கண்ணனாய்ப் புத்துயிர்ப்பார்! 

என் விழிகளின் வெப்பத்தில் உருகி வழிந்து 

என் தீண்டப்படாத வாசல் தாண்டி 

உலகெங்கும் பரவிக்காய்ந்த ரத்தத்தில் கலந்திருப்பது

அந்தத் தேவடியாப்பயல்களின் ரத்த நெடியும்தான்


கல்யாணராமன்

அண்ணா நகர்

16/12/2018


(`அம்பட்டன் கலயம்' என்கிற எனது மூன்றாவது கவிதை நூலில் இடம்பெற்ற பேராசிரியர் கல்யாணராமனின் அணிந்துரை)   

ஊர்விலக்கம் பெற்றவனின் பெருநகரப் படிமங்கள் - யவனிகா ஶ்ரீராம்




நாம் வசிக்கும் பிராந்தியத்தில் சக மனிதர்களைச் சந்திப்பதென்பது பல்வேறு நம்பிக்கைகள் சார்ந்ததாகவும் அங்கு நிகழும் உற்பத்தி சார்ந்த வாழ்வுமுறைகள் சாதிய உணர்வுகள் அல்லது வேறோர் இணக்கமான பாவனைகள், வன்மங்கள், அச்ச உணர்வுகள், தோல்விகள், வன்முறைகள் போன்றவற்றின் ஊடாக உயிர் இருப்புகொள்வதாக இருக்கிறது. ஓர் ஊருக்குள் நல்லவன் கெட்டவன் வாழ்ந்தவர் வாழாதவர் கௌரவமான குடும்பம் இழிவான குடும்பம் என்பதான பொது வரையறைகளுக்கும் இறுதியில் அப்பிராந்தியத்தின் இடுகாடு சுடுகாட்டில் முடிந்து போகிற கதையாடலாகவும் இருந்து வருவதைத்தான் மனிதமையின் தத்துவார்த்த இருப்பென்று காலமும் இடமும் அதன் வரலாற்றின் அர்த்தத்தில் முடித்துவைக்கிறது. இப்படியான தனிமனிதரின் வரலாறுதான் பச்சோந்தியின் கவிதைகளின் இறந்துவிட்ட எல்லா ஊர்களின் ஊர்வலக் காட்சியாகிறது.

இக்கவிஞனே எப்போதும் ஊர்விட்டு அலையும் வேடிக்கைக்காரனாக இருக்கிறான். ஊருக்காக உறவுக்காகக் குடும்பத்தை ஏற்றுக்கொண்டு தான் யார் என்பதை அறிவதற்காக வீட்டை, கிராமத்தை விட்டுக் கிளம்பிவிடுகிறான். இப்படியான வெளியேற்றத்தின் மூலம் மொழிக்குச் சில கவிதைகள் கிடைக்கின்றன. பண்டைய நாள்களில் ஊர் விலக்கம் என்கிற தண்டனைமுறை அங்கு நிலவிய சாதியப் படிநிலைகளின் வழியே அதிகாரமாகக்கொண்டு செலுத்தப்பட்டதை அறிந்திருக்கிறோம். ஊர் விலக்கம்தான் இந்திய நகர்மயமாதலின் முதல் உளவியல் வன்முறையாக இருந்தது. இப்படியாக ஊர் என்கிற அமைப்பை அதன் உற்பத்தி உறவுகளில் நேர்ந்த மேலாதிக்கக் கலாசாரக் கொடுமைகளை எதிர்கொள்ள வேண்டிவரும் ஒரு சிறு பெண்ணோ ஆணோ கிராம வாழ்வைச் சந்தேகிப்பதும் அங்கு விளையும் உயிர் ஆதார விவசாயம் மற்றும் தன் காமம் காதல் போன்ற இயல்பூக்கங்களின் மேல் அந்தத் தேர்வின் மீது ஒருவகையான அவமானம் சுமத்தப்படுவதை உணர்ந்து தனக்கான மொழியில் அவற்றை எழுதிப் பார்த்துத் தப்பித்து தன்னிலையாக நிற்கும் செயல்பாடே அவர்களின் சுதந்திரமான கலையாகவும் ஆகிவிடுகிறது. இவ்விடத்தில் பச்சோந்தி கிராமத்துக்கும் நகரத்துக்கும் இடையே ஓர் ரயிலைப் பிடித்துக்கொண்டு அலைபாய்கிறான். அந்த ரயில் தன் சொந்த சாதிய வன்முறை நிலத்துக்கும் சாதியை எளிதில் கண்டுபிடிக்க இயலாத நகர வன்முறைக்கும் இடையே இக்கவிதைகளைத் தன் அலைச்சலின் சாட்சியமாக வைக்க முயல்கிறான்.

தமிழறிஞர் கால்டுவெல் சொல்லிச்சென்ற திராவிட மொழிகளின் நிலங்களுக்கும் அயோத்திதாசர் வரையறுத்த தமிழ்க் கலாச்சார உணர்வுகளுக்கும் அல்லது மார்க்சிய வர்க்கப் பார்வைக்கும் இன்றைய உலகமயப் போக்குகளுக்கும் இடையே இந்தியப் பொதுக் காட்சிப் புலன்களை மதம் மற்றும் அரசு அல்லது நவீன மூலதனம் வரையறுத்துக்கொண்டுவிட்ட நாளில் கவிஞன் அவற்றின் ஊடாகத்தான் அன்றாடத்தை இப்படியாக குழந்தைமையாகப் பதிவு செய்துவிடுகிறான். அவன் நினைவில் இயற்கையின் சுற்றுச்சூழலியலின் கனவுகள் மட்டுமே தேங்கி இருக்கின்றன. ஏனெனில், தன்னில் இயற்கையின் ஒரு பகுதியாகவும் இருக்கிறான். இயற்கையோடு தாயை, தந்தையை நிலத்தைப் பாடுபவனாக ஒரு பறவையைப் போல கடவுளற்ற விண்வெளிக்குப் பூமியின் ஈரத்தை எடுத்துச் செல்பவனாகவும் இருக்கிறான்.

அவனின் சமுத்திரங்கள் அவன் தாயின் கண்களைவிட ஆழமானதில்லை. அவனது தொரட்டிக் கம்பு நிலவை மண்ணுக்குப் பறித்து வீழ்த்தும் அவன் தந்தையின் கரங்களைப்போல நீளமானது. அவனது மாமிசங்கள் சூரிய ஒளியில் வாட்டப்பட்டவை. அவனது ரத்தம் பூமியை உயிர்ப்புடன் வைக்கும் ஆறுகளைவிட கொந்தளிப்பானது. அவன் பசியைப் பாடுகிறான், பறவைகள் ஆமோதிக்கின்றன. அவன் இசைக்கிறான் தப்பிய பருவங்கள் தம்மை சரிசெய்துகொள்கின்றன. பச்சோந்தியின் கவிதைகள் உயிர் வாழ்வதற்கு ஆதாரமற்றவற்றைத் தாண்டி எதையும் புனைவுகொள்ளவில்லை.

உலக்கைகள், அரிவாள்கள், தொரட்டிகள், மண்வெட்டிகள், கடப்பாரைகள் மிஞ்சிப்போனால் மண்ணைக் குத்திப் பிரட்டும் மாட்டுக் கொம்புகள் அல்லது தானியக் கதிர்களை அடிக்கும் அதன் குளம்புகளின் மீது தீராத காதல் கொண்டவை.

நோய்வாய்ப்படும் இந்த உடலைக் கருவியாக்கி நிலத்தின் வளமான பாடல்களை நமக்குக் கையளிக்கின்றன. அவன் ஓர் உதிர்ந்த மூங்கில் அரிசியாக இருக்கிறான். சிறிய மீன்களைக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துபவனாகவும் பெரிய எருமைகளை இறைச்சிக்குப் பதப்படுத்தி தன் உயிர் ஆதாரத்தை நிலைநாட்டும் வீரியமிக்கவனாகவும் தன் சிறிய துண்டு நிலத்தில் சூரிய சந்திர காலமனைத்திலும் தன் தாய் தந்தை பாட்டி யாவருடனும் உழைத்து வியர்வையைப் பெருக்கி அவ்வளவு நம்பிக்கையளிக்கும் எளிய கவிதைகளை நமக்குத் தந்துவிடுகிறான் என்பதை தவிர அவனை அன்பு செய்ய நாம் நமது கட்டமைக்கப்பட்ட சலித்துப்போன சுயத்தை இழப்பதுதான் காதலின் புதிய பரிமாணமாக இருக்க முடியும். அவனுக்கும் அவன் கவிதைகளுக்கும் அவன் நலன்களுக்கும் வாழ்த்துகள்....

அன்புடன்

யவனிகா ஶ்ரீராம்

சின்னாளபட்டி

08.12.2018

(`அம்பட்டன் கலயம்' என்கிற எனது மூன்றாவது கவிதை நூலில் இடம்பெற்ற கவிஞர் யவனிகா ஶ்ரீராமின் அணிந்துரை)   

 

புராதனக் குரங்குகளின் கோட்டோவியம் - யவனிகா ஶ்ரீராம்




உலகில் எல்லா மனிதர்களும் கிராமத்திலிருந்து வந்தவர்கள்தான். அவர்களின் கிராமம் எப்போதும் அவர்களை ஆதூரப்படுத்தியும் அந்நியப்படுத்தியும் நிகழ்காலத்தின்மீது ஒரு பதற்றத்தை உருவாக்குகிறது. கிராமங்களில் தெரிந்த முகங்கள் பெரு நகரங்களில் அச்சமாகவும் போலிப் புன்னகையாகவும் மாறிவிட்டன. கிராமத்திலிருக்கும் சொந்த வீட்டைவிட நகரத்திலிருக்கும் வீட்டிற்குத்தான் மதிப்பு அதிகம். ஆகவே பெரும்பாலான மக்கள் நகர மதிப்பாகி விடுகிறார்கள். அவர்களுக்கான உயர்ந்த உலக விற்பனைக் கூடங்கள் கவர்ச்சிகரமாகக் கடவுளின் கருணையைப் போல் கண்ணடித்து அழைக்கிறது. உலகம் நகரமாகிவிட்டது. நாமும் நகரத்தைப் பேணுகிறோம். அதன் வேசித்தனத்தின்மீது கவர்ச்சி கொள்கிறோம். ஒரு கொகோகோலாவும் கண்டகிச் சிக்கனும் நமது வாழ்க்கையை மதிப்பிற்குரியதாக மாற்றிவிட்டதை ஏற்றுக்கொள்கிறோம். நமது குடும்பம் பெரும் உணவு விடுதிக்குள் வாழ்கிறது.

சரி இதெல்லாம் நமது சொந்தக் கைகளின்மீது நிகழ்கிறதா? நமது தானியங்கள் இத்தனை விலைமதிப்புள்ளதா? நமக்கு இருந்த திறன்கள் என்ன? நாம் எங்கே நமது உழைப்பையும்  படைப்புத்திறனையும் விருந்துத்தன்மையையும் காதலையும் மறந்தோம் என்கிற இடத்திலிருந்து தொடங்குகிறது பச்சோந்தியின் கவிதைகள். அவன் ஊர்சுற்றுகிறான். அவனது இரயில்கள் அவனை பாரதூரமாக அவனை பல்வேறு இடங்களுக்குக் கடத்தி விடுகின்றன. 

புகைவண்டியில் துண்டுத் தூளிகளில் உறங்கும் குழந்தைகளின் அடியில் செய்தித் தாளை விரித்து உறங்குகிறான். அவனது கவிதைகள் கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடையே அலைபாய்கின்றன. கிராமம் உறங்கும் முன்னிரவை நகரத்தின் உறங்காத பின்னிரவுகளுக்குக் கடத்திச் செல்கிறான். கவிஞர்கள் இப்படித்தான் உற்பத்தியிலிருந்தும் தங்களின் நிலத்தின் உறுதிப்பாட்டிலிருந்தும் மொழியை மற்றமை ஆக்குகிறார்கள். தமிழில் கிராமியப் பீடிப்பு நிறைந்த மனம் ஒரு நாடோடிக்கு வாய்ப்பதுபோலவே பச்சோந்திக்கு வாய்த்திருக்கிறது. அவனது காதல் அவனது அடிவயிற்றிற்கும் கீழில்லை. கொஞ்சம் மேலே. அவனது பாடல் வயிற்றின் ராகம். அவன் உலகத்தின் பசிக்காக, தன் சொந்தப் பசியை ஒப்படைக்கிறான். அவனது `முந்நூறு ரூபாய் வீடு’ உலகத்தின் கடைக்கோடியில் அலைகிறது. அவனது கடிகாரம் சோர்ந்துபோன யாரையும் தைய்க்க முடியாத கூர்மையற்ற முட்களுடையது. ஆயினும் அதில் ஒரு நூலைக் கோக்க முயலுகிறான். அவன் தைய்த்துக்கொண்டே இருக்கிறான். அவன் மரங்கள் மின்சார இலைகளை உடையன. அவனது பாட்டி அலறிய கதைதான் அவன் அதிர்ந்தோடும் பாதை வழிகள். 

ஒரு கறுக்கருவாளை நகரத்தில் சுமந்து திரிபவனைப் பார்த்திருக்கிறீர்களா? அங்கோ தானியங்கள் விளைவதில்லை. ஏனெனில் உலகம் ஒரு மானியமயமாகிவிட்டது. எனது நிலத்தின், எனது நீரின், எனது தாகத்தின், எனது இச்சையின், எனது காமத்தின் அத்தனை விழுமியங்களின்மீது பற்றுகொண்ட ஒரு பழங்குடிதான் கவிஞர் பச்சோந்தி. அவனின் இந்தத் தொகுப்பு அவன் அறிந்த மொழிகளின் கதை. அவன் வீடு ஒரு தொங்கும் அங்காடி. அவன் அங்காடிகளின் தெருவில் அலைகிறான். குழந்தைகள் கைநீட்டும் பொருட்களின்மீது அதிர்ச்சியுற்றவனாய் அவனைக் கண்காணிக்கும் CCTV கேமராக்களின் பார்வைக்குத் தப்பி விமானத்தை மண்டியிட்டுத் தொழும் மனிதர்களைப் பார்த்துப் புன்னகைக்கிறான். 

அவனது கவிதை புராதனக் குரங்குகளின் கோட்டோவியம். பிராந்திய உற்பத்தி உறவில் தன் ஐம்புலன்களையும் கிளர்ச்சியாகச் சேகரிக்கத் தெரிந்த ஒருவனை அவனது மொழி இறுதியில் கவிஞனாக்கி விடுகிறது. அவனும் நானும் தொங்கும் அங்காடிகளில் பரிதவிக்கிறோம். அவனது கவிதைகள் தொப்புள் கொடிகளை அறுக்க இயலாமல் தவிப்பதுபோலவே, வாங்குவதற்காக உயிரோடு வைக்கப்பட்டிருக்கும் பெரும்பாலான மக்களின் அமுக்கப்பட்ட பிரதியாக இருக்கிறது. ஆகவே, கவிஞனால் அமைதியாக இருக்க முடியாது. எனவே, அவனது கவிதைகளில் அமைதியில்லை. அதுவே அனைத்தையும் நமக்குச் சமர்ப்பிக்கிறது. அவன் இன்னும் மேலும் எழுதிச் சிறக்க எனது வாழ்த்துகள்.

யவனிகா ஸ்ரீராம், 

சின்னாள பட்டி,

25.09.2016.

(எனது இரண்டாவது கவிதை நூலான `கூடுகளில் தொங்கும் அங்காடி'க்குக் கவிஞர் யவனிகா ஶ்ரீராம் எழுதிய அணிந்துரையிலிருந்து)

Wednesday, April 28, 2021

தன்னைத் தேடித் தான் காண்பது - பழமலய்




நிலப்பிரபுத்துவத்தின் எச்ச்ங்கலாகத் தேங்கியுள்ள கிராம வாழ்க்கை விடக்கூடாததா?

முதலாளித்துவத்தின் வெளிப்பாடாக ஓட்டம் காட்டுகிற நகர வாழ்க்கை விரும்பத் தக்கதா?

"எப்பா இவ்வளவு பெரிய ஊரா நம்மூரு " என்று வியந்தது ஒரு காலம்.  "அட இத்துனூண்டு ஊரா நம்மூரு " என்று மெய்யுணர்தல் ஒரு காலம். "இக்கரைக்குப் அக்கரை பச்சை" என்பதுதான் நடப்பியலாக இருக்கிறது. நகரங்களில் சாதிகள் இல்லை . நல்லது! நகர வீடுகளில் திண்ணைகள் இல்லை. நல்லதா? இவை மட்டுமா? இந்நாளிலும் -

பிற சாதியினர் கால்களில் மிதிபடும் செருப்பு ஒரு சாதியினர் கைகளில் எடுபடுவதாக இருக்கிறது. பாம்புக்குப் பாலை ஊற்றி வளர்க்கக் கூடாது. ஆனால் சாதிப் பாம்பிற்கோ அது செத்த பிறகும் வார்க்கப்படுகிறது. எது மெய்? செத்ததா? உயிரோடு இருப்பதா?

கவிஞர் பச்சோந்திக்கு வேடிக்கை பார்க்கும் சாதிக் கொடிகளின் கீழ் நிழல் இல்லை, என்றாலும் சாதிகள் இருக்கின்றன. கொடிகள் பறக்கின்றன. எறும்புகள் பாவம்! இருத்தலையும் கொள்ளி. இவர்களுக்கு மழை மட்டுமா பாம்பு? வெயிலுந்தான்!

"வாழையடி வாழையாய் - நான் வாழலாமா ஏழையாய்?" என்பது எவ்வளவு பெரிய கேள்வி. "வெளிச்சம் எல்லோருக்கும் வெளிச்சமாக இல்லை" என்பதும் பெரிய சோகம்.

திருந்தாதவர்களும் வருந்தாதவர்களும் இருந்துகொண்டே இருக்கிறார்கள். "தீக்குச்சியை உரசிப் பனித்துளி என்கிறார்கள். கிழக்கைக் காட்டி வடக்கு என்கிறார்கள்."

"நான் பூஜ்ஜியத்திலிருந்து பூக்க வேண்டியிருக்கிறது; காயத்திலிருந்து காய்க்க வேண்டி இருக்கிறது.". 

கவிஞர் பச்சோந்தி, வெளிப்படையாக எந்த அரசியலையும் பேசுவதில்லை. அவர் கவிஞர். அவர் பேசமாட்டார். அவர் கவிதைகள்தாம் பேசும். ஊர் என்றாலும், சேரி என்றாலும், அது அவர் ஊர், அவர் சேரி. அவர் மண். அது இருக்கிறது. அவர் மக்கள். அவர்கள் ஆவிகளாகவும் இருக்கிறார்கள். கவிஞர் பச்சோந்தி, தன் மண்ணையும் மக்களையும் கவிதைகளாக, கதைக் கவிதைகளாக உணர்கிறார். நம்மை உணரச் செய்கிறார்.

யாருக்கும் அவை `ஞாபக் கறையான்கள் கடித்துப் போட்ட பால்ய காகிதங்கள்', 'கிணற்றில் போட்ட அஞ்சு பைசா தூளி ஆடிகிட்டே மிதந்து மிதந்து தரை தொட விரைவதைப்போல் நடு நெஞ்சில் மிதப்பவை' அவை.

அவர்கள் இல்லாமல், ஒத்தையடி ஓடைப் பாதையும், புளியமரத்து நிழலும் அநாதை ஆவதில் கவிஞருக்குச் சம்மதம் இல்லை. ஏனென்றால், அவை, அவர்!.

`நீச்சலடித்த நினைவுகள் நெஞ்சில் கசிகின்றன 

வெயில் மிதக்கும் 

மொட்டுக் கிணறுகளில்'.

கவிஞருக்கு மௌனம் இல்லை. நேற்றைய ஞாபகங்கள் அடுத்தடுத்து வந்து பேசிக்கொண்டே இருக்கின்றன.

காதல் கடிதத்தைப் பிரித்துப் படிக்கையில் வியர்வைத் துளிகள் கொட்டின, 

ஒரு கிறித்துவ ஆணும் இந்துப் பெண்ணும் ஊரை விட்டு ஓடிப் போனது, 

காதலுக்கு உள்ளேயும் தாழ்ப்பாள், வெளியேயும் பூட்டு!

குலசாமிகள் செத்துப் போகிறார்கள். காவல் தெய்வங்கள் காவல் தெய்வங்களாக இருந்தும் காப்பற்றவில்லை.

உனக்கான வாழ்க்கை உன்னிடமிருந்து பிடுங்கப்படுகிறது.

வளமையைப்போலே வறுமையும் பேசப்பட வேண்டியதே.

சாதிப்பற்று, மதவெறி, இனப்படுகொலை - எல்லாம் என்ன? ஏன்?

வாசக நண்பர்கள் உடனான உரையாடல் நம்பகமானதாக இருக்கிறது. வாசக நண்பரும் ஒருவராகவா இருக்கிறார்? பலதரப்பட்டவர்கள்! யாரோடு எதைப் பேசுவது?

என்ன மாதிரியான பிய்த்தல் பிடுங்கல் இது! மனிதர்கள் சூழலுக்குத் தக்கவாறு தங்களைத் தகவமைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. மனிதனின் அடையாளமே பச்சோந்தியா? இருக்கலாம். ஆனால் அவன் தேடுகிறான். தேடிக் கண்டடைய விரும்புகிறான்.

இவ்வளவுக்கும் இடையில் கவிஞர் தன்னை அடையாளம் காண வேண்டியிருக்கிறது. தன் முகத்தைத் தானே பார்க்க வேண்டும். அது, கண்ணாடியில் அல்ல, அதைத் தவிர்த்து. ஓகோ! அகத்தைப் பார்க்க வேண்டுமா? இது சாத்தியம்தானா? சாத்தியமாகியிருக்கிறது. இக்கவிதைகள் , இவர் முகத்தை இவரே பார்த்துக்கொள்ளும் ஒரு முயற்சியே . இதற்குக் கவிதைகளைத் தவிர்த்து வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இது இவருக்குப் போலவே எவருக்கும் பொருந்துவதே. இதனாலேயே நான் ஒவ்வொருவரும் அவரவர் கவிதைகளை அவரவர் எழுத வேண்டும் என்று சொல்லி வருகிறேன். தன்னைத் தேடிக் காண்பதற்கு உள்ள ஒரே குறுக்கு வழி இதுதான். மனிதருக்குத் தன்னை அறிவதே அறிவாக இருக்க முடியும். இதற்கு உதவுவதே கலை, இலக்கியம்.

கவிஞர், வானத்தில் தொங்கும் பொம்மை, மகள் வாசனை என இரண்டு கவிதைகள் எழுதி இருக்கிறார். பொன்னெழுத்தில் பொறிக்கப்பட வேண்டியவை.

ஆண்பிள்ளை, பெண்பிள்ளை என்கிற வேறுபாடு எல்லாம் பார்க்காமல் , மயக்கம் செய்யும் மக்களைப் பற்றிப் பாண்டியன் அறிவுடை நம்பி ஒரு பாடல் பாடியுள்ளார் 

(புற நானூறு -188)

படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்

உடைப்பெருஞ் செல்வர் ஆயினும்,............... இடைப்படக்

குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,

இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும்

நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,  5

மயக்குறு மக்களை.............( இல்லோர்க்குப்

பயக்குறை இல்லைத் - தாம் வாழும் நாளே.)

என ஒருகியுள்ளார்.

நான் அறிய பாண்டியன் அறிவுடை நம்பி பாடியுள்ள இந்த அருமையான பாடலுக்குப் பிறகு தமிழில் மலர்ந்துள்ள நெஞ்சில் கனல் மணக்கும் ஓர் அருமையான கவிதை கவிஞர் பச்சோந்தி எழுதியுள்ள வானத்தில் தொங்கும் பொம்மை என்கிற இக்கவிதையே ஆகும்.

மகள் என்கிற ஒரே கவிதைக்காகக் கூட இவரை நாம் கொண்டாடலாம், மதிக்கலாம். இத்தொகுதியில் காணும் விண்மீன்களுக்கு இடையில் ஒரு வண்ண மீன் அது.

இது அதுதான் (இதோ அந்த விண்மீன் )

`கதவு திறந்தேன் 

வீடெல்லாம் நிரம்பியிருந்தது

ஊருக்குப் போன 

மகளின் வாசனை' 

கவிஞர் தொடர்ந்து எழுதலாம். ஆம், அவருக்காகவும் பிறருக்காகவும்.


த.பழமலய்,

விழுப்புரம், 

30.10.2014.

அடிவயிற்று ஆவேசத்துடன் மேலெழுந்து அதிகார முகங்களுக்குச் சவால்விடுபவை - பேராசிரியர் கல்யாணராமன்

 




நெடுங்காலத்திற்கு பிறகு, தமிழ்க்கவிதையில் ஓர் அசல் கிராமத்துக்குரல் ஒலிக்கிறது. அசல் என்று சொன்னால், நகல் இல்லை என்பதுதான் பொருள். என்பதுகளின் நடுப்பகுதியில் பழமலயின் சனங்களின்கதை வெளிவந்தபோது, புதுக்கவிதையின் வாசகர்கள் ஒரு புதிய சாளரம் திறக்கப்பட்டதைக் கண்டு பெரிதும் மகிழ்ந்தார்கள். அதே தடத்தில் 2015 இல் இன்னொரு புதிய குரல், ஓர் அசல் கிராமத்தானுக்கு உள்ள நெஞ்சுரத்தோடும் பாசாங்கற்ற குமுறலோடும் வேர்முளைத்த உலக்கை என்ற கவிதைத்தொகுப்பாக வெளிவந்துள்ளது.

பிரம்மராஜனின் கவிதை ஒன்றுக்கு `ஹேங்கர் திருடும் காக்கை' என்று தலைப்பிடப்பட்டிருக்கும். ஒரு நகரத்து வாழ்க்கையின் தலைகீழ்புரட்டலைக் கூறிவிடும் நுட்பமான ஒரு தலைப்பு அது. அதற்கு இணையாக கவிஞர் பச்சோந்தியின் வேர்முளைத்த உலக்கை என்ற தலைப்பைக் குறிப்பிடவேண்டும். தலைவெட்டப்பட்ட தென்னைமரம் ஒன்று கண்முன் நிழலாடுகிறது. இது எவ்வாறு நிகழ்ந்தது. இயற்கையின் சீற்றத்தால் நிகழ்ந்த விபத்தா இது? நாசக்காரகும்பலால் நேர்ந்த சுற்றுச்சூழல் சிதைவா? விடைதேடும் பொறுப்பு, கவிதை வாசகர்களுக்கு இருக்கிறது.

`ஏதேச்சையாக வரும் மழைத்துளி

வேர்களைக்கட்டிக்கொண்டு அழும்

வேர்கள் இருந்த இடத்தையேனும்'

என்பதைப் படிக்கும்போது, நமக்குள் ஏதோ ஒன்று முறியும் சப்தம் கேட்கிறது. தென்னைமரம் மட்டுமா அழிந்துபோனது? இன்னும் எதைஎதையெல்லாம் இழந்தோம் என்பதை எண்ணி ஒரு கணம் இதயம் நொறுங்குகிறது.

ஒரு துண்டு தேங்காய்பத்தை

ஒரு மரங்கொத்திப்பொந்து

அடுப்பெரிக்கப் பன்னாடை

பந்தடிக்கக் காய்ந்தமட்டை

குச்சுக்கட்ட பச்சைமட்டை

அத்தனையும் கிடைக்குமா

அறுத்துப்போட்ட ரீப்பர்களில்…..

தேங்காய்பத்தும் மரங்கொத்திப்பொந்தும் பன்னாடையும், பந்தைக்கும் மட்டையும், குச்சுக்கட்டும் பச்சைமட்டையுமா தென்னை? ரீப்பர்களாக தென்னையைப் பார்க்கும் நுகர்வுப்பார்வை மட்டும் பிரச்சனை இல்லை. சுற்றுச் சூழலில் கலந்துள்ள அத்தனையையும் பயன்படுப்பொருள்களாகப் பார்ப்பதிலும் சிக்கல் உண்டு. கிராமத்து வாழ்க்கையா, நகரத்து வாழ்க்கையா என்று வாதப்பிரதிவாதங்கள் செய்துகொண்டிருப்பதில் பயன் இல்லை. மனதின் உள்ளிட்ட அனைத்து உயிர்களும் அமைதியாக வாழ்வதற்கான இடங்களும் தருணங்களும், நமது கிராமங்களிலும் நகரங்களிலும் அருகிக்கொண்டு இருக்கின்றன என்பதுதான் நிகழ்கால வெட்கை.

கிராமங்களை எழுதிக்கொண்டாடுதல் என்பது நவீனத் தமிழ் இலக்கியத்தில், அது சிறுகதையாகினும் புதுக்கவிதையாகினும், பிரிக்கமுடியாத அல்லது தவிர்க்கமுடியாத ஒரு மோஸ்தரப் போக்காகச் செல்வாக்கு செலுத்திக்கொண்டிருக்கிறது. இப்போக்கிலிருந்து முற்றிலுமாக விலகிய தமிழ்ப்படைப்பாளிகள் என்று அதிகம்பேரைச் சொல்லமுடியாது. இழந்துபோன பழம்வாழ்வின் நீடிக்கமுடியாத பெருமித எச்சங்களைத் திரும்பத் திரும்ப நினைவில் நீட்டி மகிழும் படைப்பாளிகளின் பொதுப்போக்கு அது.

எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் கிராமங்களைவிட்டு நகரங்களுக்கு வாழவந்துவிட்டாலும், நகர வாழ்க்கையில் காலூன்றிக் கலக்கமுடியாமல், மீண்டும் மீண்டும் கிராமப்பசுமையை நோக்கியே தாவும் தமிழ்மனங்கள் நம் படைப்பாளிகளுடையவை. ஆனால், பசுமைமட்டும் கிராமம் இல்லை சாதிச்சாயத்தால் உள்ளூத்ர தழும்பேறிக்கிடக்கும் நச்சுவட்டம் அது. சாதியை விமர்சிக்காமல் கிராமங்களைப் புகழ்வது என்பதில் மேட்டிமை அரசியல் ஒளிந்துள்ளது. இந்திய கிராமங்கள் அழியாமல் இந்தியாவில் வாழும் சராசரி மனிதர்களுக்கு விடுதலை சாத்தியமில்லை என்று மார்க்ஸ் கூறியதை கீழை மார்க்சியம் பேசி நாம் மறந்துவிட முடியாது. கிராமங்களைப்பற்றி எழுதும் எந்தப் படைப்பாளியும் இச்சிக்கலுக்கு முகம் கொடுத்துதான் ஆகவேண்டும்.

வேர்முளைத்த உலக்கையில் கிராமங்களைக்கொண்டாடும் மனநிலை இல்லை. கிராம வாழ்க்கையின் ஒவ்வோர் அணுவிலும் புகைந்திருக்கும் அடிமைத்தனத்தையும், அதற்கு எதிரான போராட்ட உணர்வையும் மறுவிசாரணை செய்து, பசுமையின் அமைதியைக் கிழித்து அதன் உள்ளிருக்கும் கொடூர முகத்தைக் கொஞ்சமும் தயங்காமல் வெளிக்காட்டிவிடும் படைப்பு நேர்மை கவிஞர் பச்சோந்திக்கு வாய்த்திருக்கிறது. இத்தொகுப்பின் முதல் கவிதையான `ஆவிகள் நடமாடும் கிராமம்' என்ற கவிதையின் தலைப்பேகூட, ஒருவகையில் இதைக் குறிப்புணர்த்திவிடுவதாகக் கூறலாம். தாமஸ் கிரே எழுதிய `An elegy Written in a Country Ghurchyard' என்ற ஆங்கிலக் கவிதையை நினைவூட்டும் ஒரு தமிழ்க்குரல் இது. மனிதர்கள் ஏன் ஆவிகளானார்கள் என்பதை நாம் சிந்திக்க வேண்டாமா? குழந்தையாய் இருந்தபோது `எப்பா இவ்வளவு பெரிய ஊரா நம்மூரு' என்று விழிவிரிய வியந்துநின்ற சின்னப்பிள்ளையை, மீசைவைத்த கல்யாண வயதில், `அட இத்துனூண்டு ஊரா நம்மூரு' என குமயவைத்த அந்த திடுக்கிடல் எவ்வாறு நிகழ்ந்தது. 

இக்கேள்விகளுக்கான பதில்களாக விரிபவைதான் பச்சோந்தியின் கவிதைகள்.

ஒரு தனிப்பட்ட இளைஞனின் மனக்குறிப்புகளாக இக்கவிதைகள் குறுகி ஒலிப்பதில்லை. சிலபல தலைமுறைகளின் அடயாளமிழந்த உரிமைகள் மறுக்கப்பட்ட இயல்புணர்வுகள் பறிக்கப்பட்ட ஒரு பெரும்திரளின் ஆவேச வெடிப்புகள் இவை. முணங்கித்தேயும் முக்கல்களாக இவை நீர்த்துப்போவதில்லை, அடிவயிற்று ஆவேசத்துடன் இவை மேலெழுந்து வந்து அதிகார முகங்களுக்குச் சவால்விடுகின்றன.

`வெய்யிலில் கருத்த விவசாயிபோல்

வானம் கருத்துப்போனது' 

`தெருக்கொன்றாய்த்

 திருகுகுழாய் முளைக்க

நாகரிகக் குண்டு விழுந்து

யாழ்ப்பாண நூலகமாய்ச் சாம்பலாகியது

மானிட உறவுகள்' 


`இருட்டு எல்லோருக்கும் இருட்டாகவே இருக்கிறது

வெளிச்சம்தான் எல்லோருக்கும் வெளிச்சமாக இருப்பதில்லை'

இத்தைகைய கவிதைவரிகள் பிழிந்துவைக்கும் சோகத்தின் ஊடே என்ன சொல்ல முனைகின்றன கிராமமும் விவசாயமும் அதனை நம்பி வாழும் மக்களும் இழக்க இழக்க நாம் அவற்றை வேடிக்கைப்பார்த்துக்கொண்டே இருக்கவேண்டியதுதானா? யாராவது பேசுவதற்கு ஆள்கிடைப்பார்களா என கிராமத்துக் குட்டிச்சுவர்களைப்போல துயரமும் அழுகையும் அல்லாத ஒரு வாழ்க்கை சாத்தியமே இல்லையா? ஆட்டுக்கல்லின் அலாதிச்சத்தங்களைக் கேட்டுக்கொண்டு, கொலைசெய்யப்பட்ட குலசாமிகளின் நினைவுகளில் நீந்திக்கொண்டு கிழிந்துபோன ஜனநாயகச் சட்டையைத் தைத்தலின்றி வேறொன்றையும் நம்மால் செய்ய இயலாதா? `இன்னும் இன்னும் வசதிகள் வாய்வைத்துத் தின்னும் நம் ஆயுளை' என்றெழுதி ஆறுதல்பட்டுக்கொள்ளத்தானா உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

இருவழிச்சாலையும், அதன் மேம்பாலமும், அதற்குமேல் மெட்ரோபாலமும் எழும்பும் நகரங்களை நோக்கி ஒவ்வொருநாளும் நம் இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் வந்துகொண்டிருக்கிறார்கள். ஒத்தைடைப்பாதைகள்கூட சீராக இல்லாத கிராமங்களில் நோயாளிகளும் கிழடுகளும் ஏதிலிகளும் அனாதைகளும் தங்களுக்கு என்ன நேர்ந்தது என்பதையே அறியாதவர்காளாய் மரணத்துக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். கிராமம் விரட்டுகிறது; நகரம் நெருக்குகிறது. இன்றைய மனிதன் என்னதான் செய்வான், பாவம்!

`அன்று ஒன்றாக இருந்தோம்

வெவ்வேறாக

இன்று வெவ்வேறாக இருக்கிறோம்

ஒன்றாக'

 ஒன்றாக இருப்பதும், வெவ்வேறாகத் திரிவதும் நிகழ்கால தலைமுறைக்கு ஒரே நேரத்தில் நிகழும் கொடுமையை இன்று காண்கிறோம். வேறுபாடுகள் அனைத்தையும் எப்படியாவது உடைத்தெரிந்திட முடியாதா எனப் பதைபதைக்கிறார் கவிஞர் பச்சோந்தி. வேறுபாடுகளை உடைத்தெறிகிறோம் என்கிற போர்வையில் பண்பாட்டு அடையாளங்களை முற்றிலுமாகச் சிதைத்துவிடும் அதிகாரச் சூழல்பற்றிய அச்சமும் அவர் கவிதைகளில் முன்னுக்கு வருகின்றன.

எனது கண்களால்

வேறொரு முகத்தையும்

வேறொரு கண்களால்

எனது முகத்தையும்

பார்த்து ரசிக்கத்தான் கண்களா?

எனக் கவிஞர் கேட்கும்போது உயிர்வாழ்க்கை என்பது, உரிமைகள் யாதும் பறிக்கப்பட்ட சூழலில் எவ்வளவு பிரச்சனைக்குரியது என்பது மிகவும் எளிமையான மொழியில் கவிதைக் கேள்வியாக உயிர்த்துவிடுகிறது அல்லவா! யாருடைய வாழ்க்கையை நாம் வாழ்ந்துகொண்டி ருக்கிறோம், யாருடைய உணவை உண்டுகொண்டிருக்கிறோம், யாருக்காக அல்லது யாருக்குப்போட்டியாகச் சந்தையில் விற்கப்படுகிறோம். இத்தைகைய கேள்விகளுக்கெல்லாம் கவிதைகளுக்குள் தீர்வைத் தேடுவது இயலாத செயலாய் இருக்கலாம். ஆனாலும் இக்கேள்விகளையே எழுப்பாமல், வெறும் அழகியல் நுட்பங்களில்மட்டும் தன்னை நிறைத்துக்கொண்டு, இன்றைய சூழலில் எந்தக் கவிஞனும் தப்பிவிடமுடியாது. 

நகத்தடி பட்டினிப் பெருமூச்சுகளையும் நினைவுகளின் நிலநடுக்களில் சிக்கிக்கொண்ட முதுமை எறும்புகளையும் மண்ணை நக்கும் நாகரிகங்களையும், லொக் லொக் மனிதர்களையும், அவன் கவனித்துதான் ஆக வேண்டும். இவற்றை கவிஞர் பச்சோந்தி கவனித்திருக்கிறார் என்பது மட்டுமன்றி, ஒரு கிராமத்து நதியைப்போல் இயல்பாகவும் நளினமாகவும் காட்சிமொழி வாயிலாகக் கருத்துகளைக் கவிதைகளுக்குள் பேசமுனைகிறார் என்பதுதான், ஒரு கவிஞராக அவரது வருகையைக் கவனப்படுத்துகிறது.

பச்சோந்தி பெயர்பற்றிய விவாதங்களில் ஈடுபட்டு பச்சோந்தியின் பார்வைக்குப் பின்னால் உள்ள மானுட விழுமியங்களைப் பற்றிய அவரது பெரும்பரிவை எளிதாக நாம் கடந்து சென்றுவிடக் கூடாது. கவிதை என்பது சொரிந்துகொடுப்பதோ, கிச்சுக் கிச்சு மூட்டுவதோ, யாரையும் தொந்தரவு செய்யாமல் இதமாக மனங்களை வருடி விடுவதோ இல்லை. சிலபல வேளைகளில் சூடியிழுப்பதும் சுயநினைவூட்டுவதும் ஓங்கி ஒலிப்பதும்கூட கவிதைதான். 

உருவம் X உள்ளடக்கம் என்ற பழைய மிரட்டலுக்குப் பச்சோந்தி பணிந்துவிடவில்லை என்பதும், இவற்றை உருத்தெரியாது சிதைத்த பன்மைகுரல்களின் பெருவீச்சாய்த் தம் கவிதையைப் பச்சோந்தி ஒலிக்கவைத்துள்ளார் என்பதும் மிகவும் முக்கியமான விடயங்களாகும். தன்னைச்சுற்றி நிகழும் பலவற்றின்மீதும் இன்னும் நுன்மைகளை, கவனங்களை அவர் செலுத்த வேண்டும் என்பதும், கருத்துகளைக் காட்சிமொழியின் அதிகப்பட்ச சாத்தியங்களுடன் விரிப்பதற்கு அவர் முனையவேண்டும் என்பதும் நட்பின எதிர்பார்ப்புகளாகும்.

`கொத்துக்கொத்தாய்க் கட்டிப்போட்ட

நாற்றுக்கட்டுகள்

சேற்றுத்தண்ணீரில் காலூன்றமுயலும்

பிள்ளைகளாய்' 

நாற்றாங்காலில் கிடக்கும் நாற்றுக்கட்டுகளைப் பார்க்கும்போது காலூன்ற முயலும் குழந்தைகளின் நினைவு பச்சோந்திக்கு வருகிறது. ஓர் அரிய கவித்துவத் தருணம் இது. உயிர்ப்பன்மையில் தன்னொருமையைக் கரைத்துவிடும் பழங்குடி பண்பாட்டின் இயற்கைச் சாரம் இது. தி.ஜானகிராமனின் மலர்மஞ்சம் நாவலில் ஒரு கூடை நிறைய பூத்துக்கிடக்கும் ரோஜாக்கள், கையும் காலும் முளைத்துக் கூடைக்குள் ஒண்டிக்கிடக்கும் குழந்தைகளாக தி.ஜாவுக்குத் தெரிவதைப்போன்ற ஒரு நுண்காட்சி இது. இதுபோன்ற பல கண்திறப்புகள் கவிஞர் பச்சோந்திக்கு மேலும் வாய்க்கட்டும். அவரது வாழ்க்கைப் பார்வை மேலும்செழித்து மானுடம் தழுவியதாக மலரட்டும்.

`என் வயிற்றைத்திருடிக்கொண்டாய்

என் வானத்தை இடித்து உடைத்தாய்

போதும் நிறுத்திவிடு

இனி பூஜ்ஜியத்திலிருந்து பூக்கிறேன்

காயத்திலிருந்து காய்க்கிறேன்

அவமானத்திலிருந்து அடையாளப்படுகிறேன்'

லெனின் `பொலிட் பீரோ' அறிக்கையில் தம் கவிதைக்கும் ஓர் இடம் கேட்டான் மாயாகோவிஸ்கி என்பார்கள். இத்தகைய கவிஞர்கள் இன்றுஇல்லை என்று பலரும் நிம்மதி பெருமூச்சுவிடலாம் இந்த வரிசையில் பச்சோந்தி சேர்ந்துவிடமாட்டார் என்று நம்புகிறேன். கிராமத்தைவிட்டு நகரத்தை நோக்கி இடப்பெயர்ந்துள்ள பச்சோந்தி மேலும் ஆற்றலுடன், இன்னும் வலிமையுடனும் இந்த நூற்றாண்டின் அடுத்தகட்ட வாழ்க்கையைக் கவிதைகளாக எழுதி தமிழ்மண்ணுக்குப் பெருமை சேர்ப்பார்.

(எனது முதல் கவிதை நூலான `வேர்முளைத்த உலக்கை' வெளியீட்டு நிகழ்வில் கவிஞர் கல்யாணராமனின் உரை, பின்பு இது எழுத்து வடிவம் பெற்று கணையாழியில் கட்டுரையாக வெளிவந்தது. கணையாழி பொன்விழாவில் சிறந்த கட்டுரைக்கான விருதும் பெற்றது) 

அகமும் புறமும்: கவிதையில் ஒன்று மற்றொன்றின் கண்ணாடி - குட்டி ரேவதி



இன்று கவிதை எழுதவரும் ஒருவர், 'அகவெளிக்கவிதைகள் எழுதுபவரா' இல்லை, 'புறவெளிக்கவிதைகள் எழுதுபவரா' என்ற கேள்வி சிந்திக்கவைக்கும். அல்லது, உங்கள் தகுதி என்ன என்பதைத் தீர்மானிக்கத்தூண்டும் ஓர் அதிகாரக்கேள்வி. 'அகவெளிக்கவிதைகள்' கலைப்பூர்வமானதாகவும், 'புறவெளிக்கவிதைகள்' பிரச்சாரத்தொனி நிறைந்தவையாக, கலையுணர்வு அற்றவையாக முன்முடிவுகளும், முன் தகுதிகளும், முன் அதிகாரங்களும் தரப்பட்ட நவீனத்தமிழ்க் கவிதை வெளியில், அதிநவீனக்கவிதை என்பது, அகத்தையும் புறத்தையும் இணைக்கும் தொடர்புபடுத்தும் முரண்படுத்தும் புதிய வடிவத்தையும் செறிவையும் கண்டுணர்தல். அப்படியான வெளிகள் தேடிய பயணத்தில், இத்தொகுப்பு வந்து முன்னிற்கிறது. அகமும் புறமும், ஒன்று மற்றொன்றின் கண்ணாடியாகி மாறி பிம்பங்களைச் செய்கின்றன.

'பச்சோந்தி'யின் கவிதைகள்  முழுக்கவும் ஏழ்மையிலும் அதைக்கடந்து வந்த
நினைவுகளிலும் புரளும் வரிகளே கவிதைகளாகி இருக்கின்றன. ஆனால், அதன் வலியும் உட்பொருளும் அழகுணர்ச்சியுடன் சொல்லப்பட்டிருப்பது மிகச்சிறப்பு. அதிலும் முக்கியமானது, அரசியலை நினைவுகளுடன் கலந்து வடித்திருப்பது. ஒட்டுமொத்த கிராமமும் வாழ்வும் மாற்றங்களும் ஏக்கங்களும் பெருமூச்சுகளும் உள்ளவர்களும் இல்லாதவர்களும் இறந்துபோனவர்களும் கொல்லப்பட்டவர்களும் வந்து போகின்றனர். ஒரு கிராமத்தை நினைவுபடுத்தும் முயற்சியை அழகான துல்லியமான தேர்ந்தெடுத்தச் சொற்களால் கவிஞர் சொல்லுமிடத்து, வாசிக்கும் போது நாம் கவிதைகளுக்கு இடையே சிக்கிக்கொள்ளாமல் பகிரப்படும் விடயங்களினூடே பயணிக்கமுடிகிறது.

நவீனக்கவிதை கவிதை உக்கிரமான மொழி, உணர்ச்சித் தீவிடம், நடைநயம்,
படிமவெளி என்றெல்லாம் கடந்து வந்திருந்தாலும், இன்று நடை தளர்ந்த மொழி, அனுபவ வடிகால், குறுங்கதை சொல்லல் எனத் தன்னை வேறு சொல்மொழிக்குக் கொண்டு வந்துவிட்டதைப் புதிய இளங்கவிஞர்களிடம் காணமுடிகிறது. இது ஒரு குறைபாடாக இல்லாமல் மாறுபாடாக இருந்தால், கவிதை தன் வலுவை இழக்காமல், வலிமையாக நெஞ்சில் நிற்கமுடியும். கவிதை வடிவமே அதற்குத்தான். ஆகத்தேர்ந்தெடுத்த உட்பொருளை, அதற்கேற்ற நடையில் தீவிரம் வழுவாமல் வாசகர் நெஞ்சில் இறக்கிவிடமுடியுமெனில் கவிதை தன் பணியை முடித்துக்கொண்டது என்றே சொல்லலாம்.

நிறைய அழகான வரிகளை, மிகவும் அலட்சியத்துடன் கடந்து செல்கிறார் கவிஞர்.


அன்றிரவு
விடிய விடிய உறங்கவிடாமல்
உடல் முழுவதும்
நட்டு நட்டுன்னு
கொத்திக்கொண்டே இருந்தன
மழைப்பாம்புகள்

(குடிசைக்குடைக்குள் ஒரு குட்டை)


ஐந்நூறு கிலோமீட்டர்
தாண்டி வசிக்கிற நொடிகளில்
புரட்டிப் புரட்டி வாசிக்க முயன்றும்
சுக்கு நூறாய் நொறுங்குகின்றன
ஞாபகக் கரையான்கள் கடித்துப்போட்ட
பால்ய காகிதங்கள்.

(ஞாபகக் கரையான்கள் கடித்துப்போட்ட
பால்ய காகிதங்கள்)

அஞ்சுக்கும் பத்துக்கும்
முப்பதுக்கும் நாப்பதுக்கும்
இடுப்பொடிய இடுப்பொடிய
நீரிலூற காலூன்றிக் கை ஊன்றி
பாட்டுப்பாடி நடவு நட்ட
அறுபதுகளுக்கும் எழுபதுகளுக்கும்
சோறின்றி நீரின்றி
சங்கத்தமிழ் தாலாட்டும்
கேலி கிண்டல் வாலாட்டும்
கதை கதைப்புதான்
 வலி சுமக்கும்

(நகத்தடி பட்டினிப் பெருமூச்சுகள்)




மனித இனத்திற்கு 'பால்ய கால நினைவுகளும்', 'காதல் கடிதங்களும்' தாம்
கவிதை விதைகள் எழுச்சி கொள்வதற்கான நீர்தெளித்தலாய் இருந்துள்ளன.
பால்யத்தை அனுபவிக்கும் அறியாமைக்கும், அதன் உற்சாகவெறியில் களிகொண்டு இயங்கும் அம்மனத்தளத்திலிருந்து வெளியே வந்து நோக்குவதற்கும் இடையேதான் அதன்காவியத்தன்மை சிக்கிக்கொண்டிருக்கிறது என்பது நாம் அறியாததன்று. ஆனால், இவற்றை மீண்டும் அனுபவிக்க உண்டாகும் விழைவும் அல்லது அவற்றை
இழந்துவிட்டதற்கான ஏக்கமும், வெறும் வரிகளாய் இல்லாமல், சிறிய சிறிய
குறியீடுகளாய் முன் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில், கவித்துவ எழுச்சி
முழுமையடைகின்றது.



நினைவுகளின் நிலநடுக்கத்தில்
நிர்மலமாய்ப் புதைகின்றனர்
அப்பாயில்லாத அம்மாவும்
அம்மாயில்லாத அப்பாவும்

கிணற்றில் போட்ட அஞ்சு பைசா
தூளி ஆடிக்கிட்டே மிதந்து மிதந்து
தரைதொட விரைவதைப் போல
நடுநெஞ்சில் மிதக்கின்றன
இளமை இறகுகள்

(நினைவுகளின் நிலநடுக்கங்களில்
சிக்கிக்கொண்ட முதுமை எறும்புகள்)

அக்காவைக் காணோம் என்பது
ஏதோ செடியை விலக்கித் தேடும்
புதருக்குள் ஓடி விழுந்த
சிவப்பு நிற
காரக் பந்தைப் போலவே இருந்தது
விளையாட்டுச் சிறுவனான எனக்கு

(வீடு திரும்பாத ஆடு மேய்க்கப்போன அக்கா)

ஊருக்குள்ளும் ஊர் எல்லையிலும்
பத்திரமாகவே உள்ளனர்
அத்தனை சாமிகளும்

ஊருக்கு வெளியிலும்
குளத்தங்கரை ஓரத்தில்
விடுபட்டு உதிர்கின்றன
அனாதையாகிப் போன
வயோதிகப்பிணங்களாய்
கொலை செய்யப்பட்ட குலசாமிகள்

(கொலைசெய்யப்பட்ட குலசாமிகள்)

நீ சாதியை மயக்க
மது ஊட்டுகிறாய் - பின்பு
சாதியின் பட்டினிக்குப்
பாலூட்டுகிறாய்

செத்துப்போன பாம்பானது
உன் மேல்சாதியும்
என் கீழ்ச்சாதியும்

(செத்துப்போன சாதிப்பாம்புக்கு பாலூத்தாதே)

இன்னும்தான்
ஈரமாய்க் கசிகின்றன
கதவுக்குப் பின்னால்
அறிவியல் புத்தகத்தின் நடுவே
காதல் கடிதத்தைப்
பிரித்துப் படிக்கையில்
கொட்டிய வியர்வைத் துளிகள்

(வாழையடி வாழையாய்
வாழலாமா ஏழையாய்)

மாதிரிக்கு நான் நிறைய கவிதைகளை முன் வைத்திருப்பதற்குக் காரணம்
சொற்சுவையை நுகருவதற்குத்தான். மேகச்சட்டை மாட்டிய வானம், சில்வர்
தட்டில் முகம்பார்க்கும்  சூரியனின் நெற்றியில் தப்பாட்டம் அடித்தபடி,
பொத்தான்களற்ற சுருட்டிச் சொருகிய காக்கிநிறச் சராய் ஜன்னல் ஓட்டையின் மீது கறுப்புக்குண்டிகளை எட்டி எட்டிப்பார்க்கும் பதினொரு மணி வெயில், நடவு நட்ட முதல் இரவு சேற்றுத்தண்ணீரில் மிதந்து வரும் நிலா வெளிச்சத்தில்
ஊற்றுத்தண்ணீராய்ச் சுரக்கிறது நகத்தடி பட்டினிப்பெருமூச்சுகள் எனக்
குறுங்கிராமத்தின் வாழ்வியலைச் சொல்லுமிடத்து, அவற்றை அவ்விதமே சொல்லிச் சொல்லிப் புளகாகிதம் கொண்டிருந்தால், இம்மொழி கவிதையாகியிருக்க மாட்டா.

கவிஞர், இவ்வரிகளின் அடியில் கொண்டிருக்கும் முன்வைக்கும் சமூக
அக்கறையும் அரசியல் மாண்பும்தான் இதற்கு முன்பான எல்லா கிராமிய,
நாட்டார்வழக்காற்று மொழிகளையும் கடக்கச்செய்கின்றன. ஊருக்குள் இருக்கும் அடிகுழாய், ஆடுகள், கல்நார் கூரைகள், அண்டாக்கள்,
அய்யனார் பேருந்து, கரும்புக்கட்டுகள், இலுப்பை, நாவல் மரங்கள், கருவேல
முள்வேலி, கள்ளிச்செடி, ஓணான், பாம்புகள், விளக்குமாறால் அடிவாங்கும்
பூரானும் நட்டுவாக்கிளி, எல்லாம் கதாபாத்திரங்களாகின்றன.

இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்தமான கவிதைகளாக, லொக்..லொக்…
மனிதர்கள், ஆவிகள் நடமாடும் கிராமம், கைகுலுக்கும் கண்ணாடி, இரண்டு
தோளில் இரண்டு தலை ஆகியவற்றைச் சொல்லலாம். இவை, புனைவுவெளிகளில் வெகுவாகக் கையாளப்பட்ட,  'மாய யதார்த்தவாத' வடிவ மொழியை, கவிதைக்கு அழைத்து வந்தது போன்ற உணர்வைக் கொடுக்கின்றன. நம் அன்றாட வாழ்வு கழியும் சூழலில், மண்டிக்கிடக்கும் ஒளிவேறுபாடும், அவை கிளர்த்தும் நினைவுகளும் உணர்வுகளும் கொண்டு கவிதை ஆக்குதல் என்பதை இவர் தீவிரப்படுத்தியிருக்கிறார். சுயத்தின் அப்பட்டமான பிரதிபலிப்பாகவும் வெளிப்பாடாகவும் இருக்கின்றன.

உறவு, சாதி, வசதி, வாய்ப்பு, உணவு என்பவை நம் நிலத்தில் சாதியின்
ஏற்றத்தாழ்வுகளுக்கு இடையே சிக்கிக்கிடப்பவை. சாதியின் அழுத்தத்தையும்
அதன் கீறல்களையும் அக்கீறல்கள் வழியே வெளிப்படும் நீதிகளையும்
கவிதைகளாக்க நம் நிலத்தின் வரலாற்றை விரிந்த பார்வைகளால்
பார்க்கத்தெரிந்திருக்கவேண்டும் என்பது என் அனுமானம். அதுவே, ஒரு கவிஞனை, மொழியுடன் உறவாடும் ஒருவரை முழுமை செய்யும். இல்லையென்றால், என்னதான் கவிஞன் என்றாலும் அரைகுறைத்தெளிவு பெற்றவராகவே கருத நிறைய இடமிருக்கிறது.

வெறும் பால்ய சுகங்களோடும், பதின்பருவ நினைவுகளோடும் கழித்துவிடும்
வெறும் மொழி இச்சையாகவும் உணர்வுத் தீவிரமாகவும் ஓய்ந்துபோகும் வாய்ப்பு இருக்கிறது. தன் வாழ்வை, பிறிதொன்றாகப் பார்க்கும் வாய்ப்பை சாதியின் அழுத்தம், மதத்தீவிரம், பால்நிலை சமத்துவமின்மை இவற்றை அறிந்தவரால் மட்டுமே பெறமுடியும். தன் வாழ்வைப் பிறிதொன்றாகப் பார்க்கும் வாய்ப்பு இல்லாதவரின் கவிதைகள் முதல் வரிகளோடே முற்றுப்பெற்றுவிடும். இந்நிலையில், பச்சோந்தியின் இத்தொகுப்பு புதிய அனுபவவெளிக்கும் தொலைநோக்குச்செறிவும் கொண்டவையாக இருக்கின்றன. எல்லாக் கவிதைகளும் ஒரே தொனியில் இழைவது, அவற்றின்
ஒரே வடிவமைப்பினாலும் அழுத்தமாக நிறுவப்படுகிறது. இதை மட்டும் கவிஞர் தவிர்த்திருப்பின் வேறுவகையான அனுபவ முதிர்ச்சிகளை இத்தொகுப்பு நல்கியிருக்கக் கூடும். 

கவிதை எழுதுதல், தொடர்ப்பயணம். எழுதி முடித்தவையாக எதுவுமே அறியப்படுவதில்லை. தொடரும் நடைக்கண்ணிகள் மீது, ஒற்றைக்கம்பால் நடந்து செல்லும் அத்துணைத் துணிவையும் இவர் கொண்டிருப்பது மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது.


குட்டி ரேவதி
24.11.14

தண்டவாளங்களாலும் மின்சாரக் கம்பிகளாலும் மனங்கொண்ட வனாந்திரத்தின் ஒற்றைச்செடி

 


``கவிஞர் பச்சோந்தி யாரென்றால், ஓர் அசலான நவீன நாடோடி என்ற பிம்பம் எனக்கு இருக்கு. இவரின் 'வேர்முளைத்த உலக்கை' முதல் கவிதைத் தொகுப்பு. இவரின் எழுத்து சமகாலக் கவிஞர்களிடமிருந்து எப்படி மாறுபட்டது என்றால், அவர் தன் மொழியில் தன் கிராமத்து மொழியில் தன் மக்களின் பேச்சுவழக்கில் கவிதையை எழுதுபவர். இதை இதற்கு முன்பு பச்சியப்பன், யாழி முனுசாமி செய்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் முன்பாக பழமலய் செய்திருக்கிறார். தமிழில் அசாத்தியமாக நாமெல்லாம் புறந்தள்ளிய ஒரு பொதுவான மொழியென்று கொண்டாடிக்கொண்டிருந்த காலகட்டத்தில் தன் பேச்சுமொழி வழக்கு மொழியைக் கவிதைக்குள் மிக சாதுர்யமாகவும் மிக அசாத்தியமாகவும் பயன்படுத்தியவர் கவிஞர் பழமலய். அவருடைய 'சனங்களின் கதை' என்கிற கவிதைத் தொகுப்பு மிகக் கவனம்பெற்றது. பச்சோந்தி அந்தமாதிரியான இடத்திலிருந்து வந்தவர்.

இவரின் கூடுகளில் தொங்கும் அங்காடி மிகுந்த பயணங்களுக்குப் பிறகும், மிகுந்த மனிதர்களைக் கண்டதற்குப் பிறகும் அவரின் அனுபவங்களிலிருந்து எழுதப்பட்ட, தான் தொலைந்த, தான் இழந்த வாழ்க்கையை மீண்டும் அசைபோடுகிற தொகுப்பாகத்தான் இருக்கிறது. வேர்முளைத்த உலக்கை என்கிற கவிதை தொகுப்பு தமிழ்க் கவிதைப் பரப்பில் இவரின் முதல் நூல். முதல் கவிதைத் தொகுப்பின் சாபம் என்னவென்றால், அதைப் பற்றி பேசுவதற்கும், வாசிப்பதற்கும் ஆட்களே இருக்கமாட்டார்கள்.என்னுடைய முதல் கவிதை தொகுப்பு '....' என் சொந்தச் செலவில் வெளியிட்டு காண்பவரிடமெல்லாம் இலவசமாகக் கையளிக்கும் அவல நிலைதான் இருந்தது. அது அப்படியான காலகட்டம். ஆனால், வேர்முளைத்த உலக்கை என்கிற தொகுப்புக்குக் கவிஞர் குட்டி ரேவதி எழுதிய முன்னுரை மிக முக்கியமானது. கவிஞர் குட்டி ரேவதி போன்ற சில ஆளுமைகள்தான் கவிதை எழுதுபவர்களை உற்சாகமாக வரவேற்று ஆதரிப்பவர்கள். 

``இருட்டு எல்லோருக்கும் இருட்டாகவே இருக்கிறது

வெளிச்சம்தான் எல்லோருக்கும் வெளிச்சமாக இருப்பதில்லை" என்று கவிதை எழுதியவர்தான் பச்சோந்தி. 

வேர்முளைத்த உலக்கை' ரத்தமும் சதையுமான திண்டுக்கல் காலனி. நகரத்தின் பசியோடும் பட்டினியோடும் தங்குவதற்கு இடமற்ற ஒரு நவீன காலத்தினுடைய இந்த முதலாளித்துவ இந்த நகரமயமாதல், இந்த உலகமயமாதலில் தனித்து அடித்து விரட்டப்பட்ட ஒரு சாமானியனின் பதிவுதான் வேர்முளைத்த உலக்கை. என் சக கவிஞரான பச்சோந்தியை நான் ஏன் கொண்டாடுகிறேன் என்றால், இவர் தமிழ்க் கவிதையில் இந்தத் தலைமுறையில் நான் கைவிட்ட, நான் மறந்துபோன சில விசயங்களை நவீன மொழியில் இந்தத் தலைமுறையினரில் இதயத்துடிப்போடு எழுதக்கூடியவராக இருக்கிறார். இந்தத் தொகுப்பில் ஒரு கவிதை இருக்கிறது, 

தூளியாடி வளர்ந்தது மேல்கிளை

தூக்கிலாடி வளைந்தது கீழ்க்கிளை

பச்சோந்தி எழுதுகிற நீளமான கவிதைகளைவிட இதுபோன்ற இரண்டுவரிக் கவிதைகளில் இவர் காட்டுகிற பெரிய உலகம், பெரிய அரசியல், பெரிய விநோதம் வலிமையுடையது.

'கூடுகளில் தொங்கும் அங்காடி' அவர் சுயத்திலிருந்து விலகுகிறதோ என ஏன் அவர் எனக்குத் தெரிவித்தார். தெரிகிறது என்று சொல்லவில்லை ஏன் தெரிவித்தார் என்று கேட்கக் கூடிய உரிமை வாசகனான எனக்கு அந்த உரிமை இருக்கிறது. ஒரு புதிய இடத்தை நோக்கி நகர்வதற்கான முயற்சியாக இதை எடுத்துக்கொள்கிறேன். 

கவிஞர் பச்சோந்தி நன்கு அறியப்பட்டவர். தொடர்ச்சியாக எல்லாவற்றையும் வாசிக்கக் கூடியவர். இவர் தன் ரயில் பயணங்களில் கையில் ஏந்தியிருக்கும் புத்தகம் யாருடையது என்று மிகவும் உற்றுநோக்கக் கூடிய சமூகமாக முகநூல் சமூகம் இருந்தது. அவர் நாடோடியாகத் திரிகிறபோது இந்தப் பயணத்தில் பச்சோந்தி எந்தப் புத்தகத்தைப் படிக்கப்போகிறார் என்று ஒரு குழு பேசிக்கொள்கிற அளவுக்குப் பச்சோந்தியினுடைய வாசிப்பு பற்றிய ஒரு பெரிய பிம்பம் இருந்தது. பச்சோந்தியும் அதற்கு இரைபோடுகிற அளவுக்கு தான் படிக்கிற புத்தகத்தினை போட்டோ எடுத்து முகநூலில் பதிவிடுவார். ஒரு குறிப்பிட்ட காலத்தில் நிறைய புத்தகங்கள் படித்தவர். ஒரு கவிஞனுடைய மனம் ஒரு புதிய திசையை நோக்கிச் செல்லக்கூடிய இடர்ப்பாடுகளாகத்தான் இந்தத் தொகுப்பைப் பார்க்கிறேன். நான் சொல்லுகிற யாவும் குறைகள் கிடையாது. இது அவருடைய வீதியில் அவருடைய பயணத்தில் அவர் கண்டுகொள்ளாமல் விட்டுப்போன இடர்ப்பாடுகளைப் பற்றி நான் பேசிக்கொண்டிருக்கிறேன். ஆனால், சில உன்னதமான சில கவிதைகளை இந்தத் தொகுப்பில் எழுதியிருக்கிறார். உன்னதமென்றால் பச்சோந்தியால்தான் எழுதமுடியும் என்கிற கவிதை இதில் இருக்கிறது. 

இந்தத் தொகுப்பிற்குப் பிறகான பச்சோந்தியையும் எனக்குத் தெரியும். ஆனந்த விகடனில் வெளியான உக்கிரமான பிரிதலைக் கண்ணீரோடும் கம்பலையோடும் சொல்லக்கூடிய `இரண்டே எரிதலை இழுத்துச் செல்லுதல்' என்கிற கவிதையை எழுதிய பச்சோந்தியையும் அதற்குப் பிறகாக இப்போது எப்படி செழுமையுடையவராய் வந்து அமர்ந்திருக்கிறார் என்பதும் தெரியும். மேலும், இத்தொகுப்பில் உள்ள 'கசாப்பு நிலம்' என்கிற கவிதையைப் பச்சோந்தியால் மட்டுமே எழுதமுடியும். இதுதான் பச்சோந்தியின் சுயம், இதுதான் தன் மொழியை இன்னும் கூர்மையாக இன்னும் செழுமையாக இதுதான் நம் காலகட்டத்தில் எழுதப்படவேண்டிய வார்த்தைகள். அடக்கப்படுபவர்களின் இலக்கியம் என்பது அதைக் கேட்பதற்கான செவிகளை, செவிடுகளாக இருக்கும். நாம் அடித்தேதான் திறக்கவேண்டும். நாம் அடித்துத் திறப்பதற்கான இரும்பு உத்தியலைப் போல்தான் நம் வார்த்தைகள் இருக்க வேண்டும். 'கசாப்பு நிலம்' என்கிற ஒரு கவிதையை எழுதி இருப்பதாலேயே இவரை நாம் கொண்டாட வேண்டும். ஏன் கொண்டாட வேண்டும் என்றால், இங்கு இன்னும் நம் இலக்கியங்களைப் பேசுவதற்கான ஒரு சூழலை உருவாக்கிக் கொள்ளவே இல்லை. 

''இரத்தம் உறைந்த தண்டவாள இருள் // கண்ணீர் உறிஞ்சிய நிறமற்ற வானம் // எலும்புகள் மண்டிய கசாப்பு நிலம் // 

இந்த வரிகள் நிறைய இளவரசன்களை, நிறைய சங்கர்களை நினைவூட்டுகின்றன. நிறையப் பேரின் அழுகுரல்களை நிறை கொளுத்தப்பட்ட குடிசைகளை நிறைய சேரிகளை, சேரிகளையும் ஊரையும் பிரித்துவைத்திருக்கும் அவலமான காலத்தில் நம்மீதே காரி உமிழக்கூடிய ஒரு வார்த்தையை இந்தக் கவிதையில் எழுதியிருக்கிறார். நான் பேசிக்கொண்டிருக்கிற இந்த இடம் ஒரு கசாப்பு நிலம். நாளை எங்கிருந்தோ ஒரு வார்த்தையை எடுக்கும் இடமும் ஒரு கசாப்பு நிலம். இது போன்ற கவிதைகள் இந்தத் தொகுப்பில் இருப்பதென்பது, இத்தொகுப்பை மிகப்பெரிய இடத்துக்கு நகர்த்திச் சென்றுவிட்டது. இதை எப்படிச் சொல்லவேண்டும் என்றால், ஓர் அழகிய வனாந்திரத்தில் இருக்கக் கூடிய ஒரு தனித்த முந்திரிப் பழ மரம்போல் சில கவிதைகள் இருக்கின்றன. முந்திரிக் காட்டில் முந்திரியும் பழமும் இருப்பது இயல்பு என்றால் தனித்த வனாந்திரத்தில் உள்ள ஒற்றை முந்திரி மரம் அந்த வனாந்திரத்தின் வாசத்தையே மாற்றிவிடும். அதுபோல்தான் பச்சோந்தியைக் கொண்டாட மெனக்கெட வேண்டும் என்கிற கவிதை இந்தத் தொகுப்பில் இருக்கிறது. இன்னும் ஒரு கவிதை 

தாத்தா வீட்டில் வானம் ஒழுகிமரச்சுவர் பசலை பூத்ததுஅப்பா வீட்டில் கூரை ஒழுகி செம்மண் சுவர் குழைந்ததுஎனது வீட்டில் ஓடு ஒழுகி செங்கல் நதி புரண்டோடுதுமகன் வீட்டில் புல்டோசர் மோதி டைல்ஸ் சுவர் சாலையானதுபேரன் வீட்டில் மழையே ஒழுகி கரைந்தது எல்லாம்எங்கும் அரூபச் சுவர்கள்

எனக்கு பச்சோந்தியின் மீது இருக்கக் கூடிய பெரிய பாசம், அன்பு என்பது அவர்போல் அவர் இந்த நகரத்தைப் பார்ப்பதுபோல சமகாலத்தில் இந்த நகரத்தை வேறு எவரும் பார்த்திருக்கமுடியாது. ஏனென்றால் அவருக்கான மனம் என்பது எப்போதும் ஊருக்கும் அவர் வாழ்கிற அறைக்கும் ரயிலின் தண்டவாளங்களால் தொடர்புபடுத்தப்பட்டிருக்கிறது அல்லது ரயிலில் போகிற மின்சாரக்கம்பிகளால் தொடர்புபடுத்தப்பட்டிருக்கிறது. அவருக்கு எப்போதும் யாழிசையின் நினைவு, யாழிசையின் அம்மாவின் நினைவு அவர் அம்மா பற்றிய நினைவு அவர் குடும்பம் பற்றிய நினைவு அல்லது அவர் ஊரில் இருக்கக் கூடியதைப் போல்தான் சென்னையில் இருக்கும் நினைவு. அவர் எழுதுவது கிராமத்தின் மண்சுவர்களுக்கும் நகரத்தின் அறைகளின் கட்டில் அறைகளுக்கும் இடையே மாட்டிக்கொள்ளப்பட்ட ஒருவனின் குரல்தான் பச்சோந்தியினுடைய குரல். 



அவருக்கு பசி தெரியும். பச்சோந்திக்குப் பசி தெரியும் என்பது அகரமுதல்வனுக்கு நன்றாகத் தெரியும். பசி தெரிந்த ஒருவனால்தான் வார்த்தைகளைத் தீனிபோடமுடியும். அரூபச் சுவர் என்கிற கவிதையானது இவர் நகரக்கூடிய இடமாக எனக்குத் தெரிகிறது. அவர் எங்கேயோ நகர்ந்துசெல்ல விரும்புகிறார். அல்லது யாரோ ஒருவரின் குரலின் வழியாக அவர் வழிநடத்தப்படுகிறார். அவர் நடந்துபோகின்ற பாதைகளில் இப்படியான வார்த்தைகள் வந்துகொண்டே இருக்கும். இந்தக் கவிதையில் பெரிய தலைமுறையின் வாழ்க்கை இருக்கிறது. இந்தக் கவிதையைப் புரிந்துகொள்வதற்கு நாம் சமகால அரசியலை உற்றுநோக்கியிருக்க வேண்டும். நாம் எங்கெங்கோ விமானத்திலிருந்து தூவப்பட்ட நெற்கதிர்களைப் போல நாம் எதிர்பார்க்காத இடங்களில் எல்லாம் விதைக்கப்பட்டிருக்கிறோம். அங்கெல்லாம் நாம் நடவுசெய்யப்பட்டிருக்கிறோம். நடவுசெய்யப்பட்டிருக்கிறவர்களின் பயிர்கள் கருகி இருக்கிறதா இல்லையா என்பதை பற்றி இந்தக் காலம் கவலைகொள்வதில்லை. 

பச்சோந்தி யாரைப்போன்ற கவிஞன். பழ்மலய், அறிவுமதி, யாழினி முனுசாமி, பச்சையப்பன் இவர்களைப் போன்ற ஒரு கவிஞன். இவரின் முதல் தொகுப்பில் அவ்வளவு சாத்தியங்கள் இருக்கின்றன. தடாலடியாக ஒரு மொழியை மிக இறுக்கமாக, மிகவும் நெருக்கடிகொண்ட வார்த்தைகளை ஏன் எழுத வேண்டும். 

இந்தத் தொகுப்பில் நிறைய எடிட் செய்திருக்கலாம், கவிதை தலைப்புகளை மாற்றியிருக்கலாம். செய்நேர்த்தியைக் கூர்மையாக்கிருக்கலாம் என்று தோன்றுகிறது. 

சட்டைப்பையில் கிடக்கும் சில்லரைகளில்ஒற்றை ரூபாயை தேடி எடுப்பதற்குள்கடந்துசென்றது பிச்சைப் பாத்திரம்  

இவன் இரண்டு வரி, மூன்று வரிக் கவிதைகளில் இவரின் உலகம் பற்றிய விசாலமான இடம் இருக்கிறது. இதெல்லாம் மிக நுண்ணிய ஒரு விசயம். ஆனால் பச்சோந்தி எழுதியதால் பேசப்படாது. அதுதான் உண்மை. இதையே தாமிரப்பரணி ஆற்றுப்பக்கமிருந்து எழுதியிருந்தால் `நிமிடங்களில் கணங்களில் மிக நுண்ணிய விசயங்களைக் கடந்து எழுதி இருக்கிறீர்கள்' என்று வாழ்த்துச் செய்திகளெல்லாம் குவிந்திருக்கும். ஆனால் இவர் கவிதைகளில் வெளிப்படும் அரசியல் குழப்பமாக இருக்கிறது. அதுமாதிரியான இடங்களில் கவிதையாகவில்லையோ என்கிற சந்தேகம் எழுகிறது. ஒரு மகோன்னதமான ஒரு கவிதை `வறுமைச் சுளை'. `பணி விழும் காலம்' இதுதான் பச்சோந்தியின் அசலான இயங்குதளம். 

பச்சோந்தி தமிழ்க் கவிதைப் பரப்பில் எந்தப் பின்புலமுமின்றி, ஒரு காட்டின் நடுவே தாந்தோன்றியாக வளரும் அத்தனை மரங்களுக்கு நடுவிலும் எத்தனையோ வெளிச்சக்கீற்றுகளை மறைத்து அவ்வளவு பெரிய விருட்சங்கள் நிழல்பரப்பி இருக்கும் அந்த வனாந்திரத்தில், சூரியக் கதிர்களைத் தேடி வளைந்து தன்னால் உயிர்பெற முடியும் என்று நம்பிய ஒரு செடி. அவனுடைய பட்டினி, அவனுடைய பயணம், பார்க்காத மனிதர்கள் கிடையாது, சந்திக்காத அனுபவங்கள் கிடையாது

அந்த வனாந்திரத்தில் தன்னை ஒரு செடியாக நினைத்தவன் இன்று மரமாக வளர்ந்திருக்கிறான்.

  -- அகரமுதல்வன்  

(கன்னிமாரா நூலகத்தில் கூடுகளில் தொங்கும் அங்காடி என்கிற எனது இரண்டாவது கவிதை நூலுக்கு வாசக சாலை அறிமுகக் கூட்டம் நடத்தியது. அங்கு அகரமுதல்வன் பேசினார். அதன் எழுத்து வடிவம்.)

கூடுகளில் தொங்கும் அங்காடி - பச்சோந்தி




கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடையில் அல்லல்படுகிற மனம் கொண்ட மனிதனின் கவிதைகள் பச்சோந்தியினுடையது. மிக நெருக்கடியான, மன வெப்ளாரங்களில் இருந்து அவர் அதை எழுதியதாக நம்புகிறேன். குடும்பத்தைப் பிரிதல், நிலத்தைப் பிரிதல் என நாம் காலங்காலமாக இலக்கியத்தில் மிகப்பெரிய இடங்கொடுத்துப் பேசுகிற விசயங்களே இத்தொகுப்பில் பேசுபொருளாகின்றன.கூடவே, நவீன வாழ்க்கையில் ஏற்படக் கூடிய உளச்சிக்கல்கள், மனச்சிக்கல்கள், மற்றும் நகரத்தில் பசியோடு இருக்கிற ஒரு மனிதன், கிராமத்தின் அடுப்பங்கரை நினைவோடு வயிற்றில் எரிகிற தீயை தாழ்வுபடுத்திக் கொள்ளக்கூடிய இடங்களை இக்கவிதைகள் நினைவில் கொள்கின்றன. 

பச்சோந்தியினுடைய முதல் தொகுப்பான ‘வேர்முளைத்த உலக்கை’ அவரது மிக முக்கியமான படைப்பு. இந்தத் தலைமுறைக் கவிஞர்களில் கவனம் கொள்ளத்தக்க வருகை என்றே அத்தொகுப்பு உணர்த்தியது. ‘கவிஞர் பழமலய்’யின் கவிதைகளைப் போல கிராமத்து மொழியோடும், அதனுடைய பிரதேசத் தன்மையோடும் தன் வாழ்வை அத்தொகுப்பு முழுக்க வெளிப்படுத்தியிருந்தார் பச்சோந்தி. 

பச்சோந்தியின் ‘கூடுகளில் தொங்கும் அங்காடி’ தொகுப்பில் நவீன கவிதையின் அதி உட்சமான வடிவத்தைக் கையாண்டிருக்கிறார். அது கவிதைகளுக்கு, கவிதையின் மூலாதாரத்தைச் சீரிடச் செய்தது போன்ற தோற்றத்தையே அளிக்கிறது. ஒரு வாசகனாக நான் அப்படித்தான் சொல்ல முடிகிறது. 

மற்றபடிக்கு இத்தொகுப்பில் இருக்கும் பெரும்பான்மையான கவிதைகள் பசியைப் பற்றிப் பேசுகிறது, பயணத்தைப் பற்றிப் பேசுகிறது, ஒரு நாடோடியின் ஆனந்தத்தை, கண்ணீரை… இப்படியாக வழமையாகச் சொல்லக்கூடிய வார்த்தைகளில் இருந்தே வெளிப் பட்டிருக்கிறது. சிறப்பாகச் சில கவிதைகள் வறட்சியைப் பற்றி, நிலத்தைப்பற்றி, குளத்தைப் பற்றி, மரத்தைப் பற்றிப் பேசுகிறது. அதில் அடிக்கடி நம் கண்களில் தென்படுகிற கிழவர்கள், கிழவிகளின் பாத்திரங்கள் குறித்த சித்திரம் அசலான கிராமத்தின் நினைவூட்டலாக அமைகிறது.

உலகமயமாதல், நகரமயமாதல், முதலாளித்துவம் அனைத்தும் ஒரு மரத்தின் பெரிய கிளை. அந்தக் கிளையில் தொங்கிக் கொண்டிருக்கிற மனிதர்களின் பாடுகளை அழகுணர்ச்சியோடு சொல்ல முயன்றிருக்கின்றன. அன்னளவாகச் சமகாலத்தில் கவிதைகள் எழுதுகிற ஒரு கவிஞனுடைய முக்கியமான முயற்சியாக இத்தொகுப்பை அணுகலாம். ” 

-அகரமுதல்வன்

(நூல் வெளியில் இடம்பெற்றது)

Tuesday, April 27, 2021

எங்கும் வியாபித்திரு மகளே





உன் நெஞ்சில் என்னைக் கட்டிவைத்தாய் 
ஒரு நிமிடக் கண்ணயர்வில்
முதுக்குபுறமாய்த் துளையிட்டுத் தப்பிவிட்டேன் மகளே

உன் நாநுனியில் என்னைச் சுற்றிவைத்தாய்
ஓட்டைப்பல்லின் வழியே
எகிறிக்குதித்தேன் மகளே

உன் கொலுசில் என்னைத் திருகி வைத்தாய்
அடர்ந்த கூட்ட நெரிசலில்
தொலைந்துகொண்டேன்  மகளே

உன் கண்களுக்குள் என்னைக் கட்டிவைத்தாய்
கண்ணீரின் கரிப்போடு 
சொட்டிவிட்டேன் மகளே

உன் முத்தத்தில் என்னை முடிந்துவைத்தாய்
உதட்டுப் பள்ளத்தில் பதுங்கி
உலர்ந்துவிட்டேன் மகளே 

ஒன்றே ஒன்றைப் புரிந்துகொண்டால் போதும் மகளே

எங்கும் சிக்குவது 
ஓரிடத்திலும் தழைக்காது
எங்கும் சிக்காதது 
எங்கும் வியாபித்திருக்கும்   

- பச்சோந்தி



 


உன்னைப் போல் உறங்காது எரிகிறேன் நிலவே!

 




மகனைக் கட்டியணைத்து உறங்கும் மனைவியும் 
என்னைக் கட்டியணைத்து உறங்கும் மகளும்
ரயிலேறிச் சென்றுவிட்டனர்
உன்னைப் போல் உறங்காது எரிகிறேன் நிலவே  

கட்டாந்தரையையும்
தலையணையையும் 
எத்தனை முறைதான் கட்டியணைத்து உறங்குவது

சுவர்களைக் கட்டியணைக்கிறேன் 
சதை எலும்புகளில் சுவையில்லை 

காற்றைக் கட்டியணைக்கிறேன் 
கொஞ்சமும் வெப்பமில்லை

ஒளியைக் கட்டியணைக்கிறேன் 
உதட்டில் ஈரமில்லை 

வானைக் கட்டியணைக்கிறேன்
கையில் சிக்கவில்லை

என்னில் எரியும் நெருப்பை அணைத்தபடியே
உன்னைப் போல் உறங்காது எரிகிறேன் நிலவே  


- பச்சோந்தி 


சவநினைவு

 


கொல்வதற்கு முயற்சிக்கிறேன்
என்னிலிருந்து உன்னை 
உன்னிலிருந்து என்னை
மாறாக
என்னிலிருந்து என்னையும்
உன்னிலிருந்து உன்னையும்
அது கொல்கிறது...


- பச்சோந்தி, 
 
27.02.2020
6.16 AM

வெற்றிடம்

 


ஓர் வெற்றிடத்திற்கு
முகக் கவசம் அணிவிக்கப்படுகிறது
கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது
தகரத்தடுப்பு போடப்படுகிறது
பின்பு அது
வெற்றிடம் என்கிற பெயரையும் சுமந்திருக்கிறது
யார் வந்து போனாலும்
வெற்றிடம் வெற்றிடம்தான்

- பச்சோந்தி

மற்றமையைப் பூட்டாதிரு

 


மற்றமையைப் பூட்டாதிரு

கடற்கரையை ஒருபோதும் பூட்ட முடியாது
பூட்ட முயற்சிக்கும் ஒவ்வொரு முறையும்
நீதான் தலைகுனிந்து நிற்கிறாய்
சதா ஒவ்வோர் அலையும்
திறந்துகொண்டே இருக்கிறதல்லவா
சலிப்பற்று 
நீ பூட்டிக்கொண்டே இருக்கிறாய்
தொய்வற்று
தன்னைத் திறந்துகொண்டே இருக்கிறது
தன்னைத் தானே திறத்தல்தான்
ஞானம் எனப்படுகிறது
தன்னைத் தானே திறத்தல்தான்
அறிதல் எனப்படுகிறது
தன்னைத் தானே திறத்தல்தான்
திறத்தல்  எனப்படுகிறது
சரி அதற்கு என்ன செய்ய வேண்டும்
மற்றமையைப் பூட்டாதிரு போதும்

- பச்சோந்தி

Monday, April 26, 2021

பெருந்தீ

 




உன் விளக்கை நான் ஏற்றி

என் விளக்கை நீ ஏற்றி

இரண்டையும் ஒன்றாகத் திரித்தல் தானே பெருந்தீ


- பச்சோந்தி

எரிகிற நெருப்பில் நீண்டநேரம் குளிர்காயமுடியாது

 



எரிகிற வீட்டை இறுகப் பற்றாதே
எரித்தவனைப் பிடி
பாதிக் கருகின உன் காந்தி நோட்டுகள்
கிழித்து எரியப்பட்டன உன் பட்டயச் சான்றிதழ்கள்
உடைத்து நொறுக்கப்பட்டன உன் வாகனங்கள்
இவை எல்லாவற்றையும் செய்தவனுக்கு
ஒரு லாபமும் இல்லை
எரிகிற நெருப்பில் நீண்டநேரம் குளிர்காயமுடியாது
அதன் சாம்பலில் பலமுறை பல்துலக்க முடியாது
ஒன்று செய்
நீயே கரிக்கட்டைகளைக் கொடுத்தனுப்பு
கரும்பலகைப் புதுப்பிக்கப்பட்டால்
எல்லாம் சரியாகிவிடும்

- பச்சோந்தி

Friday, April 2, 2021

எலி நாற்றத்தை எறிய முடியவில்லை

 


காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் எல்லாம் நடு இரவில் கொள்ளை போகும் வழக்கம் நாள்தோறும் நடந்துவந்தது. இவ்வளவு நாள் இல்லாமல் எப்படித் திடீரென்று எலிகளின் வரவு என்று யோசித்து அதன் வழித்தடங்களை அறிய நினைத்தேன். நடு இரவில் பாத்திரங்கள் உருளும் சத்தம் தூக்கத்தைக் கலைத்ததால், கடுங்கோபத்தில் லைட்டைப் போட்டேன். அப்போது சமையல் கட்டுக்கும் மேல் உள்ள ஜன்னலில் நுழைந்து தப்பித்தது எலி. ஓ... இங்குதான் இருக்கா வழி. எப்படி நுழைந்தது என்று அருகில் சென்று பார்க்கும் போது பழைய அட்டை கொறிக்கப்பட்டிருந்தது. அங்கு வேறு ஓர் அட்டை வைத்து அடைத்து நிம்மதியடைந்தேன். ஆனால், அது தற்காலிகமானது என்று அடுத்த நாள் இரவு பாத்திரங்கள் உருளும் போது தெரிந்தது. 

அடுத்த நாள் உறங்கும் முன் மளிகைக் கடைக்குச் சென்று எலி மருந்து கேட்டேன். உடன் என் மகன் வந்திருந்தான். ஆனால், கடைக்காரர் எலி மருந்து இல்லை. எலி பிஸ்கட் இருக்கு வேணுமா என்றார். எலி பிஸ்கட்டா என்று திகைப்போடு கேட்டேன். ஆமாம், ரொட்டி மாதிரி இருக்கும் வீட்டில் வைத்தால், இதன் வாடை அறிந்து தானே வந்து எலி திங்கும் என்றார். 

வாங்கிச் சென்று மூன்றாக உடைத்து இரண்டை மட்டும் எலிக்கு வைத்து, ஒன்றை பத்திரம் வைத்தேன். இன்னையோட சரி இனி எலி வராது என்று மீண்டும் நிம்மதி. அடுத்தடுத்த நாட்களில் முன்போல் எலித் தொல்லை இல்லை என்று மகிழ்ச்சியடைந்தோம். அடுத்த நாள் பரணில் இருந்த புத்தகப் பைகள் சத்தம் போடவே, மிச்சமிருந்த ஒரு ரொட்டியையும் எலிக்கு வைத்தேன்.

எலி மருந்து வைத்தோம் அது என்னாச்சு என்றே தெரியலையே என்றபோது, தின்னுட்டு இங்கதான் கிடக்கும் ரெண்டு மூணு நாள் போனால்தான் வாடை அடிச்சு செத்தது தெரியும் என்றாள் மனைவி. 

இரண்டு நாட்களுக்குப் பிறகு கட்டிலின் ஓரம் ஓர் எலி வாயில் இருந்து ரத்தம் சொட்டியவாறு திக்குதெரியாமல் திணறிக்கொண்டிருந்தது. அருகில் சென்றதும் ஓடிவிடும் என்று பார்த்தால், அதனால் தப்பிச் செல்லமுடியவில்லை. அந்த மருந்து பிஸ்கட்டைத் தின்ன எலி போல, எடுத்து வெளியில் போடுங்கள் என்று மனைவி சொன்னாள். பழைய செய்தித்தாளை மடித்து எலியைக் கைகளால் கவ்வி எடுத்து வெளியில் எறிந்தேன். சுவரோரம் படிந்த அதன் ரத்தக்கறையை மாப் போட்டுத் துடைத்துவிட்டாள் மனைவி. 

அடுத்த நாளும் எலி வாடை வரவே, கட்டிலுக்குக் கீழதான் எங்காவது செத்துக்கிடக்கும் என்றாள். விடிந்ததும் கட்டிலை நகர்த்திப் புத்தகப் பைகளை எல்லாம் எடுத்துப் பார்த்தோம். ஆனால், அங்கு எலி இல்லை. அப்படியே விட்டுவிட்டோம்.  

இன்று காலை நடைப்பயணம் கிளம்பும் நேரத்தில், `` மாமா,எலி நாத்தம் அடிக்கிறது என்னான்னு பாருங்க" என்றாள் மனைவி. நடு இரவிலே எலி நாற்றம் பற்றிச் சொன்ன போது ``ஊதுவத்தியைக் கொளுத்தி வை"  என்று தூக்கக் கலக்கத்தில் சொன்னது ஞாபகம் வந்தது.

ஒற்றை அறை கொண்ட வீட்டில், கட்டிலுக்கு அடியில் மட்டுமல்லாது மூட்டை மூட்டையாகப் புத்தகங்களைக் கட்டி பரண் மீது வைத்திருந்தேன். தூசி படிந்துகிடக்கும் பரணை முதலில் எந்தப் பக்கம் இருந்து சுத்தம் செய்வது என்று யோசித்து, சரி இங்கிட்டு இருந்து ஆரம்பிப்போம் என்று சனிமூலையில் இருந்த பைகளை ஒவ்வொன்றாக இறக்கினேன். அதற்குள் மாமா, இங்கிட்டு இருந்துதான் வாட அடிக்குது என்று வடமேற்கு திசையைக் காட்டினாள். ஆனால் எனக்கு வாடை அடிக்கவில்லை. ஒருவேளை மூக்கடைப்பு இருக்கும் என்று எனக்கு நானே கூறிக்கொண்டு தேட ஆரம்பித்தேன். 

அங்கிருக்கும் பைகளை இறக்கும் முன் கட்டிலில் இருந்த தலையணைகளை ஆரஞ்சு பச்சை நிறம் கலந்த மெல்லிய போர்வையால் மூடினேன். முகத்துக்கு முகக் கவசம் அணிந்தேன். ``கொரோனாவுக்குத்தானே மாஸ்க். செத்த எலியைப் பிடிக்கக் கூடவா போடுவீங்க'' என்றபடி சிரித்தாள்.

பைகளை இறக்க இறக்க எலிப் புழுக்கைகள் நிரம்பிக் கிடந்தன. எலிப் புழுக்கைகளும் வேர்க்கடலை ஓடுகளும் சின்னச் சின்ன காகிதங்களுமாகக் குவிந்துகிடந்தன. அதன் நடுவே கொஞ்சம் திரவத்தன்மையோடு ஓர் எலி கிடந்தது. நாற்றம் மூக்கைத் துளைத்தது. வெள்ளைத் தாள்களை எடுத்து அள்ளி வெளியில் எறிந்தேன். சரி மொத்தப் பரணையும் சுத்தம் செய்திடுவோம் என்று பைகளை எடுக்க எடுக்க இன்னோர் எலி எந்தத் தடயமுமின்றி ஒரு பிளாஸ்டிக் கவரின் மேல் ஒருக்களித்துத் தூங்குவது போல் கிடந்தது. அதையும் எறிந்தேன். பைகளை இறக்கப் பிள்ளைகள் உதவிசெய்ய முன்வந்தார்கள், ஓரிரு பைகளுக்குப் பிறகு தூசி படியும் வெளியில் சென்றுவிடுங்கள் என்று மனைவி கூறிவிட்டாள்.  

நண்பன் பரிசாகக் கொடுத்த கையடக்க ஜே.கிருஷ்ணமூர்த்தி நூல் ஒன்று கிடைத்தது. இரண்டு துண்டுகளான நிலையில் ஒரு அழி ரப்பர், பிளாஸ்டிக் ரப்பர் பந்து, முதன்முதலாய் வாங்கிய பழுதடைந்த செல்போன், ஒரு நகல்கூட இல்லையே என்று கவலைப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை, சினிமா சிடிக்கள் நிரம்பிய பை எல்லாம் கிடைத்தன. இவற்றின் ஊடாகக் கிடைத்த  சொப்புச் சாமான்களைக் கண்டதும் பிள்ளைகளுக்கு ஒரே குதூகலம்தான்.

முன்பைவிட அதிக நாத்தம் அடித்தது. எலிகளை எறிந்தாலும் அதன் நாத்தத்தை எறியமுடியவில்லை. தண்ணீரில் ஷாம்பும் துவைக்கிற சோப்பும் கலந்து துணியால் நன்கு துடைத்து எடுத்தேன். நாற்றம் குறைந்தது போல் இருந்தது. பின்பு, அலுவலகம் செல்ல நேரமானதால் அவசர அவசரமாகக் கிளம்பிவிட்டேன். இன்று இரவு பாத்திரம் உருளுமா பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஏப்ரல் 2, 2021. 


தெய்வத்தைப் புசித்தவன்


சமனடைந்துகொள்ள அல்லது சமநிலை குலைக்க எனக்கு நானே பேசிக்கொள்ளும் உள்பேச்சே கவிதை. கவிதைக்கு விலக்குகளில்லை; விதியில்லை; கட்டுப்பாடில்லை; தணிக்கையுமில்லை. அனைத்தும் எழுதப்படவேண்டியவையே என்று கூறும் செல்மா திண்டுக்கல் கல்லாத்துப்பட்டியில் பிறந்தவர். ஆசிரியராகப் பணிபுரிந்துவருகிறார்.

உலகத்தின் அம்மாக்களை எல்லாம் 'அம்மா என்பவள் காத்திருப்பவள்' என்கிற தன் ஒற்றைக் கவிதையில் எழுதியவர்தான். இக்கவிதையில் உள்ள அம்மா கிராமத்தை மையமிட்டு இருப்பாள். ஆனால், அம்மாக்களுக்கு ஏது கிராமம், நகரம் என்பதை அதே கவிதையில் இடம்பெறும் பின்வரும் வரிகளின்மூலம் உணரலாம்.

அம்மா என்பவள் குழந்தைகளை உறங்கவைத்து கணவனுக்குக் காத்திருப்பவள்// மூன்றாம் ஜாமத்தில் பணிவிடைகள் போல் சிலவற்றைத் தன் கணவனுக்குச் செய்ததைப் பிள்ளைகள் அறிந்தபின்னும்// வெட்கமற்ற அதிகாலையில் ஊறவைத்த தானியங்களின்மேல் உலக்கை குத்துபவள்.

மக்காத குப்பைப் புழுக்களின் நெளியும் நினைவுகளோடு பறக்கும் கொக்கைப்பற்றிக் குறிப்பிடுகையில் //வறண்டு வரும் குளத்தினைக் கொத்திக்கொண்டு பறந்துசெல்கிற கடைசி கொக்கு/என்றும், இன்னொரு கவிதையில் // துப்பாக்கிக்குத் தப்பிய பறவையின் பதற்றத்தை // என்றும் பறவைகளின் அழிவை, அலைவுறுதலை, அவை நிலமற்றுத்திரிவதை மேலும் பறவையற்ற வானத்தை நிலத்தைப் பற்றிப் பாடியிருப்பார்.

திசைகளற்ற எனது வானம் உன் இறகுகளுக்குள் // அன்பே பெரு உருவே உனைப் பற்றி ஏறுவேன்// மெதுவாய் இறுகிவரும் மென்முகடுகளை // உமிழ்நதியில் மூழ்கடித்து // பல்லாயிரமாய் // முத்தம் வெடித்துச் சாவேன் // என்று முல்லைநிலக் காதலும் கார்கால இசையும் நிரம்பியிருக்கும்.

கண்ணன் பாட்டு ராதையின் உதடுகளில் புதிய பற்தடங்கள் கவிதை இன்றைய உலகமயமாக்கலில் வாழ்ந்துகொண்டிருக்கும் கணவன் மனைவியின் அகவுணர்வைப் பிரதிபலிக்கும். சிலந்தி கடித்து கண்ணன் சாவதாய் ராதையும் , சிலிண்டர் வெடித்து ராதை சாவதாய் கண்ணனும் மாறிமாறிக் கனவுகண்டாலும் இறுதியில் பிரிவின் பொழுதைத் திடுக்கிட்டு அவள் தேநீர் தயாரிக்கச்செல்வதும் அத்தேநீரைச் சுவையாய் இருப்பதாகச் சொல்லும் கண்ணனுக்கு என்றுமில்லாதபடி முத்தமிட்டு ஆசுவாசமடைவார்கள். வடிவரீதியாகவும் புதிய பாடுபொருளிலும் சொல்நேர்த்தியிலும் ஒரே தொகுப்பில் அதிகமான கவிதைகள் அடங்கிய மிகச் சொற்பமான கவிதைத் தொகுப்பில் மிக முக்கியமானது 'தெய்வத்தைப் புசித்தல்' என்கிற இவர் முதல் தொகுப்பு. இது 2008 வெளிவந்தது. பத்தாண்டுகள் ஆனாலும் புதுமையும் இனிமையும் நிரம்பியிருப்பவை.

செல்மாவின் கவிதைகள்போல் உரையாடலின் வழியே வந்துவிழும் சொற்களும் துல்லியமானவை. அவை, முளைகட்டிய பயிர்கள்; ஓங்கி இழுத்துவிடும் கூர்மையான அம்புகள்; தாய்ச்சிறகுகளின் சூட்டில் பொறியும் குஞ்சுகள். ஒவ்வொரு இளம் கவிஞரும் சந்தித்து உரையாட வேண்டிய ஓர் அற்புதக் கலைஞர் செல்மா.


மார்ச் 2, 2018

Thursday, April 1, 2021

ஒற்றை விண்மீன் ஓராயிரம் ஆன கதை



இருளின் நெற்றியில் இருந்த ஒற்றை விண்மீனைக் காட்டினாள் மகள். அதோ, நிலா என்றேன். உப்புமூட்டை தூக்கு என்றவளை முதுகில் சுமந்து துள்ளித் துள்ளி ஓடினேன். குனிந்து வளைந்து ஆடினேன். அவள் காலைப் பற்றிக்கொண்டு கூடவே அலைந்தான் மகன். குங்குமமும் திருநீறும் இட்ட நெற்றியோடு பச்சைவண்ண உடையில் மகளின் புத்தகப்பையைப் பிடித்தபடி இருந்தாள் மனைவி. பிள்ளைகள் இருவரும் சாயங்காலம் சூப்பர் மார்க்கெட் போலாம் என்று காலையில் சொன்னதை நினைவூட்டினர். சொடொக்ஸோ கார்டில் இருந்த ஐந்நூறு ரூபாயை நம்பி, சரி போகலாம் என்றேன். நாளைக்குப் போகலாம் என்று மனைவி வரமறுக்க, கட்டாயப்படுத்திச் சும்மாவாது மெயின்ரோடுவரை நடந்துசென்று வருவோம் என்றேன். 

அம்மாவின் பையைத் தன் தோளில் மாட்டியபடி படியிறங்கினாள் மகள். ஏய் இரும்மா இருட்டுல என்று செல்போன் டார்ச் லைட் அடித்தேன். அவ்வொளியில் படிகளைக் கடந்துசென்றோம்.

வழியில் செங்கல் சுவரைத் துளைத்த அரசமரத்தின் இலைகள் தெருவிளக்கில் மின்னிக்கொண்டிருந்தன. மாவு விற்பவள் புன்னகைத்தாள். வழக்கத்துக்கு மாறாக அம்மாவின் கையைப் பற்றி மகளும் அப்பாவின் கையைப் பற்றி மகனுமாகச் சென்றோம். அவன் என்னை ஓடலாம் வாப்பா என்றான். சற்று ஓடினோம். அம்மாவின் கையைவிடுத்து மகளும் எங்கள் பின் ஓடிவந்தாள். நாங்கள் பகலில் காணும் கொடுக்காய்ப்புளி மரத்தின் கிளைகள் கருமையான கோடுகளாய்த் தெரிந்தன. இருளையும் ஒளியையும் கடந்து சூப்பர் மார்க்கெட்டைக் கண்டதும் உள்ளே ஓடினார்கள் இருவரும்.

கடைக்குள் இருந்த பொருள்களில் ஒன்றை எடுத்து இது என்னதுப்பா என்றதும் பெயர் சற்றென்று நினைவுக்கு வராமல் பணிப்பெண்ணிடம் இதன் பெயர் என்ன என்றேன் ஜவ்வரிசி என்றாள். அதன் அருகில் இருந்த சின்னஞ்சிறிய கற்கண்டு பாக்கெட் வேண்டும் என்றாள் மகள். உனக்கு பல்வலி, தொண்டை வலி வேறு வேண்டாம் என்றால் மனைவி. பல், தொண்டை வலி சரியானதும் பாப்பா சாப்பிடட்டும் வாங்கிக்கலாம் என்று மகளைப் பார்த்துக் கண்ணடித்தேன். அவள் குதூகலித்தாள். பின், கல்லமிட்டாய், க்ரீம் பிஸ்கட், சாக்லேட் என்று மகள் எடுக்க, பருப்பு, எண்ணெய், வறமிளகாய், கோதுமை மாவு என மனைவி எடுக்க, ஒரு பொம்மையைத் தூக்கிக்கொண்டு ஓடிவந்தான் மகன். அதன் விலை அதிகமாக இருக்குமோ என்று வேண்டாம் அப்புறம் வாங்கிக்கலாம் என்றேன். 

மொத்த விலை ரூ.480 என்று காட்டியது கணினி. இடையே சோப்பு எடுத்துவந்தாள் 515 ஆகியது. சரி கையில் முப்பது ரூபாய் இருக்கு இல்லையா என்று எனக்கு நானே கூறிக்கொண்டு, சொடொக்சோ கார்டைக் கொடுத்து பில் போடச் சொன்னேன். சொடொக்சோ மெஷின் இரண்டு நாள்களாக வேலை செய்யவில்லை என்றார் கடை ஓனர். பில் போடுவதற்கு முன்பே. சொடக்சோ கார்டு என்று சொல்லவேண்டாமா என்றார். உங்க மிஷின் ரிப்பேரா போனது எங்களுக்கு எப்படிங்க தெரியும் என்றேன். சரி வேற கார்டு இருக்கா என்றார். நான் இல்லையென்றதும் அவர் முகம் இறுகிப் போனது. பொருட்கள் நிரம்பிய பிளாஸ்டிக் வாளியை அங்கேயே வைத்துவிட்டு அப்புறம் வந்து வாங்கிக்கிறோம் என்றபடி வந்துவிட்டோம்.

மகனும் மகளும் எந்த ஓர் அறிகுறியும் இல்லாமல் அமைதியாக வந்தது ஆச்சரியமாக இருந்தது. மளிகைக் கடையில் ஒரு காராப் பூந்தி பாக்கெட்டும் ஒரு குட் டே பிஸ்கெட்டும் வாங்கியபடி வீடடைந்தோம். வீடு வந்தபின் அம்மாவின் பையைப் பிரித்துப் பார்த்த பிள்ளைகள். எங்கம்மா ஒண்ணுமே இல்லை என்றார்கள். அப்போதுதான் புரிந்தது பொருள்கள் வாங்காமல் வந்தது இவர்களுக்குத் தெரியவில்லையென்று. பிள்ளைகள் வெறுமையுற்று அங்கலாய்த்ததைக் கண்டு மனைவி என்னைப் பார்த்தாள். ச்சா அந்தப் பொம்மை வெறும் இருபது ரூபாய்தான் போட்டிருந்துச்சு என்றாள் மனைவி. அப்பா ஒண்ணுமே வாங்கலையா... அப்பா ஒண்ணுமே வாங்கலையா... என்ற மகன் முன் மௌனித்திருந்தேன். கொஞ்சம் அழவேண்டும் போலத் தோன்றியது. ஆனால், அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை. ஆத்திரத்தில் மகள் என் பானை வயிற்றின் மீது ஓங்கி அடித்துவிட்டுச் சென்றாள்.

சில ஆண்டுகளுக்கு முன் அவள் வேர்க்கடலையை எறிந்தபோது ஏற்பட்ட வலி மீண்டும். நான், சுவரில் கைகள் பதித்து அந்த வானத்தை வெறித்தேன். இப்போது ஒற்றை விண்மீனல்ல ஓராயிரம் விண்மீன்கள் ஒளிர்ந்துகொண்டிருந்தன. 

29 Feb 2020, 10:51

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...