Wednesday, May 5, 2021

விட்டுவிடலாம்

 



வயிற்றில் வனத்தைச் சுமந்து வந்தேன்

அப்படியே விட்டுவிடு என்றாய்

காலில் கடலைச் சுமந்துவந்தேன்

அப்படியே விட்டுவிடு என்றாய்

விரலில் வாசத்தைச்  சுமந்துவந்தேன்

அப்படியே விட்டுவிடு என்றாய்  

இதழ்களில் சிரிப்பைச் சுமந்துவந்தேன்

அப்படியே விட்டுவிடு என்றாய்  

இமைகளில் கண்ணீரைச் சுமந்துவந்தேன்

அப்படியே விட்டுவிடு என்றாய்  

கண்ணில் கனவைச் சுமந்துவந்தேன்

அப்படியே விட்டுவிடு என்றாய்  

நெஞ்சில் உன்னைச் சுமந்துவந்தேன்

அப்படியே விட்டுவிடு என்றாய்   

நீ வேண்டுமானால் 

எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிடு

என்னால் 

எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிடமுடியாது   

என்னை வேண்டுமானால் விட்டுவிட்டுப் போகட்டும் 

எல்லாம் 


- பச்சோந்தி

05.05.2021


பாரம்

 


பிறரின் பாரங்களைச் சுமப்பதுதான் 

சுமை என்கிறாய்

சரி 

எனது பாரங்களை நீ சுமந்து வா

உனது பாரங்களை நான் சுமக்கிறேன்

உனது பாரங்களை

எதற்காக நான் சுமக்க வேண்டும்

உன் பாரமும் என் பாரமும் ஒரே பாரம்தான்


- பச்சோந்தி

05.05.2021


Tuesday, May 4, 2021

ஏக்கத்தைக் கொறிப்போம் வா



சிறுதானியங்களும் குறுங்கனிகளும் 

சேமித்துக் காத்திருக்கிறேன் 

எப்போது வருவாய் எம் பறவையே  

 

நீ உண்டு எஞ்சியவற்றை நான் உண்ணவே

பசியோடு காத்திருக்கிறேன் 

எப்போது வருவாய் எம் பறவையே  

 

கத்திரி வெய்யிலில்

நிலமும் காற்றும் வானும் கடுமையாய்ச் சுடுகின்றன

பெரும் கல்தொட்டியில் நீர் சேமித்துள்ளேன்

சற்றேனும்  வந்து சிறகுலர்த்தியாவது செல்வாயா

 

சதா பறந்துகொண்டே இருந்தால்

சிறகுகள் வலிக்காதா 

மூங்கில் கழிகளை இறுக்கி சிறுகுடில் கட்டியுள்ளேன்

கண்ணிமைப் பொழுதுகள் ஓய்வெடுத்துச் செல்லக்கூடாதா

 

உன் கால்கள் 

என் உச்சந்தலைமீது அழுந்தியுள்ளது

உன் உடல் காற்றில் மிதக்கிறது

உன் தலையை மட்டும்

எங்கு சுமந்து அலைகிறாய்

 

யார் யாரோ 

உன்னை எங்கெங்கோ பார்த்ததாய்ச் சொல்கிறார்கள்

ஒரு நொடி ஒரு பொழுது

உன் கருவிழிகள் என்னைப் பார்க்காதா

 

நினைவில் சேமித்த 

உன் முழு உருவப் படத்தைப் பார்த்தேங்கும்

என் ஏக்கத்திற்கு

ஒரு முற்றுப்புள்ளி வைக்கக்கூடாதா  

 

நீயும்கூட 

என்னை நினைத்து ஏங்கி இருப்பாய் அல்லவா

 

- பச்சோந்தி


05.05.2021


Saturday, May 1, 2021

எண்ணையும் என்னையும்

 



இரண்டு நிமிடத்தில் அழைக்கிறேன் என்றாய்
இருநூறு நிமிடங்கள் ஆகிவிட்டன
இருநூறில்
எத்தனை இரண்டு இருக்கும் என
எண்ண ஆரம்பித்துவிட்டேன்
எண்ணுவதற்குள்  நானூறாகிவிட்டன
இப்போது
நானூறில் எத்தனை இரண்டு என 
எண்ண ஆரம்பித்துவிட்டேன்
இப்படி எண்ணிக்கொண்டே இருக்கிறேன்
நீயும்கூட என்னை எண்ணிக்கொண்டுதான் இருப்பாய்
எண்ணை எண்ணுவதும்
என்னை எண்ணுவதும்
எண்ணியெண்ணியே வாழ்ந்து தீர்ப்பதும் 

- பச்சோந்தி

02.05.2021


இன்மையில் இருத்தல்

 


அவளில்லாமல் என்னால் வாழமுடியாது
நானில்லாமல் அவளாலும் வாழமுடியாது
வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறோம்
அவளில்லாத அவளுள் நானும்
நானில்லாத என்னுள் அவளுமாக
இதுதான் 
இன்மையில் இருத்தல்
இருத்தலில் இன்மை 

- பச்சோந்தி
02.05.2021

இருத்தலி

 



நல்லவேளை நீ வந்துவிட்டாய் என்றாய்
நான் எங்கே வந்தேன்
நீதானே என்னை இழுத்துவந்தாய்
நல்லவேளை நான் சென்றுவிட்டேன் என்கிறாய்
நீ எங்கே சென்றாய்
நான்தானே உன்னை அனுப்பிவைத்தேன்
இப்போது
நானும் இங்கு இல்லை
நீயும் அங்கு இல்லை  
எங்கே இருக்கிறோம்
எங்கே இருக்கிறோம்  
எங்கே இருக்கிறோம்  

- பச்சோந்தி

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...