இரண்டு வாரங்களுக்கு முன்பு `நவீன ஓவியம் : புரிதலுக்கான சில பாதைகள்' என்னும் நூலை நண்பருக்குப் பரிசளிப்பதாகச் சொல்லியிருந்தேன். மிகவும் தனித்தலைந்து விட்டேன், நண்பர்களுக்காக நேரம் ஒதுக்கலாம், அவர்களிடம் உரையாடலாம் பழகலாம் என்கிற முயற்சியின் விளைவாக இதைத் தொடங்கியிருக்கிறேன். எல்லாருக்குமல்ல ; அரிதான நட்புக்குமட்டுமே! முதலில் பரிசல் செந்தில்நாதனிடம் கேட்டிருந்தேன். ``கையில் இல்லை, வாங்கித் தருகிறேன்'' என்று சொல்லியிருந்தார். ஒரு வாரம் கழித்து சி.மோகனிடம் விசாரித்தேன். போதிவனம் கருணா பிரசாத்திடம் வாங்கிக்கொள்ளுமாறு கூறினார். அவரின் தொடர்பு எண்ணை வாங்கிக் கொண்டேன்.
2017 காலகட்டத்தில் வெய்யிலுடன் தடம் பணிகளை மேற்கொண்டிருந்தேன். இதழில் இடம்பெறும் அனைத்துப் படைப்புகளையும் திருத்தம் செய்து கொடுப்பேன். அவரும் நானும் மிகவும் நேசிப்புக்குள்ளான காலம். நான் என்னுடைய பணியை முடித்துவிட்டு ஒவ்வொரு நாளும் வெய்யிலைத் தேடிச் சென்று விடுவேன். பிறகு தடம் பணிகளைச் செய்து முடித்துவிட்டுத்தான் வீட்டுக்குச் செல்வேன். பிரின்ட்க்கு அனுப்பும் நாட்களில் இரவெல்லாம் விடிய விடிய பணிகளைச் செய்து முடித்து அதிகாலை மூன்று நான்கு மணிக்குத் திருவல்லிக்கேணியில் இருந்த அவரின் மேன்ஷன் அறைக்குப் புறப்படுவோம்.
அலுவலகத்தில் இருந்து அண்ணாசாலை வழியாகப் பேசிக்கொண்டே நடந்து சென்று, தேவி திரையரங்கின் அருகிலுள்ள கடையில் ஜுஸ் குடித்து விட்டுப் பின் மீண்டும் நடையைத் தொடர்வோம். அவருடன் பழகிய நாட்களில் அல்லது தடம் இதழ் பணியின் போது நிறைய கற்றுக்கொண்டிருந்தேன். தடத்தில் தொடராக வந்துகொண்டிருந்த சி.மோகனின் நவீன ஓவியங்கள் குறித்த கட்டுரைகள் குறிப்பாக சல்வடார் டாலியைப் பற்றிய கட்டுரையும் அதில் இடம்பெற்ற ஓவியங்களும் என்னில் புதிய திறப்பை, பார்வையை, கேள்விகளை, சந்தேகங்களை எழுப்பின. அக்கட்டுரையை வாசித்து ஓவியங்களுடன் பொருத்திப் பார்த்துக்கொண்டது என்னில் புதிய வெளிச்சத்தை உண்டாக்கியது. மேலும் சர்ரியலிஸம் சம்பந்தமான ஓவியங்கள், படைப்புகளைத் தேடிப் படிக்க ஆரம்பித்தேன். இன்றும் என் கவிதைகளில் ஆங்காங்கே தென்படும் சர்ரியல் தன்மைக்கு அக்கட்டுரை வழி அமைத்துக் கொடுத்தது எனலாம்.
26.03.2022 அன்று கொஞ்சம் சீக்கிரமாக அலுவலகம் வந்துவிட்டேன். சரியாக 9:30 மணியளவில் கருணா பிரசாத்தை அழைத்து என்னை அறிமுகம் செய்துகொண்டு நூல் வேண்டுமென்றேன். நீங்கள் எங்கிருந்து வருவீர்கள் என்னும் கேள்விக்கு, திருவல்லிக்கேணி என்றேன். ராயப்பேட்டையில்தான் அலுவலகம் வாங்க என்றவரிடம் லேண்ட்மார்க் விசாரிக்கும் போது பிணவறைக் கட்டடம் தெரியுமா என்று அவர்சொன்னது புரிந்தாலும் திடுக்கிடலுடன் ராயப்பேட்டை மருத்துவமனையா? என்றதும் ஆமாம் அந்த சிக்னலுக்கும் அருகே சபாரி ஹோட்டல் இருக்கும். அதற்கும் நான்கு கட்டடங்கள் தாண்டி வெளியில் ஃபர்னிச்சர் கடை இருக்கும் என்ற போது போலீஸ் ஸ்டேஷனுக்கும் எந்தப் பக்கம் என்றேன். அதற்குச் சற்று முன்னதாக சரவணா ஸ்டீல்ஸ் இருக்கும் அங்கு வந்துவிடுங்கள் என்றார். 21 பேருந்தைப் பிடித்து அங்கு இறங்கி, சரியாக அஹமத் காம்ப்ளக்ஸ் எதிரிருந்து அழைத்தேன். அதே காம்ப்ளக்ஸின் தரைத்தளத்தின் கடைசியில் வாருங்கள் என்றார். உள்ளே புனரமைப்புப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. கலை இலக்கியம் சார்ந்த தரமான படைப்புகள் மிகவும் மலிவு விலையில் தரலாம் என்கிற புதிய முயற்சியில்தான் போதிவனம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்று 2020 புத்தகக் காட்சியின் போது கருணா ஒரு பேட்டியில் கூறியிருப்பார். அப்படியான தரமான நூலுக்கு உதாரணம் `நவீன ஓவியம் : புரிதலுக்கான சில பாதைகள்'.
உங்களின் நாடகம் பெசன்ட் நகர் ஸ்பேசஸ் அரங்கில் பார்த்திருக்கிறேன் என்றேன். எக்மோரில் உள்ள நீலம் புரடக்ஷன் அலுவலகத்திற்குச் செஞ்சோலையைச் சேர்ந்த அருணாவைச் சந்திக்க வந்திருப்பதாகக் கூறினார். பின் முந்நூறு ரூபாய் கொடுத்து நூலைப் பெற்றுக்கொண்டு, டீ காபி எதுவும் சாப்பிடலாமா என்றேன். ஓ சாப்பிடலாமே என்றபடி இருவரும் புறப்பட்டுவிட்டோம். செல்லும் வழியில் வாகனங்களின் இரைச்சல் காதைக் கிழித்தது. அதனூடே என்னுடைய ஊரையும் படிப்பையும் விசாரித்தர். சொந்த ஊர் திண்டுக்கல், 1998 இல் சென்னைக்கு வந்தேன். அப்போது வேளச்சேரியில் இரண்டு அப்பார்ட்மென்ட்கள்தான் இருந்தன. ஒன்று வசந்த அப்பார்ட்மென்ட் ; மற்றொன்று அலாக்ரிட்டி. எட்டாம் வகுப்பு வரை ஊரில் படித்தேன். ஒன்பதில் இருந்து பன்னிரண்டு வரை வேளச்சேரி அரசுப் பள்ளியிலும் கல்லூரிப் படிப்பைக் குருநானக்கில் முடித்தேன். கிட்டத்தட்ட வேளச்சேரி என் கிராமமாகவே மாறிவிட்டது என்றேன். உண்மையிலேயே அது கிராமம்தான் என்றார். பொதுவாக புதிய மனிதர்களைத் தேடிச் சென்று பார்ப்பது, பழகுவது என்பதில் எனக்கு அவநம்பிக்கை உண்டு. ஆனால், கருணா பிரசாத்துடனான சந்திப்பு மிகவும் நம்பிக்கை அளிக்கக்கூடியதாகவும் மகிழ்ச்சியானதாகவும் இருந்தது. அம்மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் நாளை பகிர்கிறேன் டியர்ஸ்.
30.03.2022
புதன்கிழமை
No comments:
Post a Comment