Sunday, March 6, 2022

எப்போதும் கொஞ்ச முடியாது மகளே!


கீழறையில் செஸ் விளையாடிக்கொண்டிருந்தேன். வெளியிலிருந்து அழைத்தாள் மகள். என்னம்மா என்றேன். அம்மா உங்களை அழைப்பது கேட்கவில்லையா. நானும் எத்தனை தடவைக் கூப்பிடுறேன் என்றாள் கொஞ்சம் ஆக்ரோசமாக. அம்மா என்னை அழைத்தது கேட்கவில்லை. சரி இப்படி ஆங்காரமாய் ஆவது எதற்கு. மிக இயல்பாக இருக்கச் சொல்லி எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன் என்றதும். அம்மா கூப்பிட்டாங்க என்று அமைதியாகச் சொன்னாள். மிகவும் இக்கட்டான சூழலில் பாதியிலேயே ஆட்டத்தை முடித்துவிட்டுச் செல்ல முடியாதல்லவா. வருகிறேன் போம்மா என்று சொல்லி அவள் கதவைச் சாத்திச் செல்வதைப் பார்த்துக்கொண்டே யானையை நகர்த்திச் சிப்பாயை வெட்டிவிட்டேன். அதற்கு நேராக இருந்த எதிராளியின் யானை எஞ்சியிருந்த ஒற்றை யானையையும் வெட்டிவிட்டது. நான் செய்த தவறுக்கு மகள்தான் காரணமெனச் சற்றென்று கோபம் வந்தது. கோபத்தின் முன்னே கதவைத் திறந்துகொண்டு பெரிய பப்பாளிப் பழத்துண்டுடன் வந்தாள். பொசுக்கென்று நமந்துவிட்டது கோபம். பழச் சுவையைச் சுவைத்தபடி ஆடினேன். பாதி தூரம் வந்திருந்த சிப்பாயை நகர்த்தி ராணியாக்கிவிட்டான். படையற்ற என் ராஜா எதிராளியின் இரண்டு யானைகளோடும் புதிதாகப் பதவியேற்ற ராணியோடும் கடுமையாகப் போராடித் தோற்றது. 

சிதறிக் கிடந்த பப்பாளி விதைகளை அள்ளிக் குப்பைக் கூடையில் எறிந்துவிட்டு, பழச்சாறை மிதிப்பானில் துடைத்தேன். நிலுவைப் பணிகளை முடிக்க அலுவலகம் செல்ல வேண்டும். குளித்து முடித்து ஈரமான சந்தனத் துண்டை மூங்கில் நாற்காலியின் மீது உலரப் போட்டு, மேலறை சென்று சாப்பிட அமர்ந்தேன். கறி சூப்பு இருக்கிறது குடிக்கிறீங்களா என்றாள் மனைவி. ஓ எஸ் குடிக்கிறேனே என்றேன். சூப்பைக் கொடுத்து மகனுடன் பகிர்ந்துகொள்ளச் சொன்னாள். தம்பி கறி சாப்பிட்டுக்கொள்ளட்டும் கறி சாப்பிடாத பாப்பாவுக்குச் சூப்பைக் கொடுக்கிறேன் என்றேன். என்னால் குடிக்க முடியாது என்றாள் மகள். என்ன நீ அது வேண்டாம் இது வேண்டாம் என்று அடிக்கடி அடம்பிடிச்சுக்கிட்டே இருக்கிறாய். பேசாமல் வந்து குடி என்றதும் அமைதியாக வந்து அருகில் அமர்ந்தாள். அப்போதும் குடிக்க மறுத்தாள். நீ ரொம்ப நாளாக சேர் வேண்டும் என்று கேட்டாய் அல்லவா, இன்று வாங்கிடலாமா என்றபடி. கூகிளில் என்ன விலை இருக்கும் என்று தேட ஆரம்பித்தேன். என் தேடலில் மகனும் மகளும் கண்கள் வைத்து இது நல்லா இருக்கு அது சூப்பரா இருக்கிறது என்று சொல்ல விலையைப் பார்த்தால் எப்பா ஆயிரக்கணக்கில் எகிறுது. பேசாமல் Second Hand  வாங்கிடலாமா என்றதும் Second Hand என்றால் என்ன எனக் கேட்டாள். ஒரு பொருளைச் செய்து நேரடியாகச் சந்தைக்கு வந்தால் புதிது அல்லவா. அப்படியில்லாமல் ஏற்கெனவே பயன்படுத்திய பொருளை விற்பனைக்கு வாங்குவதுதான் Second Hand என்றேன். ஓஹோ என்கிற குரல் கோரஸாகக் கேட்டது. சரி ஒரு சேர் மட்டும் இப்போதைக்கு வாங்கிவிட்டு மற்றொன்று அடுத்த மாதம் வாங்கிக் கொள்ளலாம் என்கிற முடிவுக்கு வந்தால் மகள் முகம் சுருங்கிவிட்டது. சரி இன்று இரண்டு வாங்கிவிடுவோம் என்றேன்.

அம்மாவிடம் ஏதோ கிசுகிசுத்தாள். என்னவென்று விசாரித்தால், சூப்பைக் குடிக்கமுடியவில்லையாம். இங்க கொடு எவ்வளவு குடித்திருக்கிறாய் என்று பார்ப்போம் என்றேன். கொடுக்க மறுத்து இவ்வளவுதான் இருக்கிறது என்று டம்ளரின் மீது கோடு கிழித்தாள். யேம்மா கொடுத்ததே அவ்வளவுதானே என்றேன். உம்மென்று ஆகிவிட்டாள். ஆவி பறக்கும் பிரியாணிக்கு மின் விசிறியைச் சுழலவிட்டேன். காய் திங்க மாட்ட, பழம் திங்க மாட்ட, கறி திங்க மாட்ட ஆனால் க்ரீம் பிஸ்கட், க்ரீம் பன்னு மட்டும் எத்தனை வேண்டுமானாலும் சாப்பிடுவ அல்லவா. போ... சேரும் இல்ல மோரும் இல்ல. எப்போது நீ இதெல்லாம் சாப்பிடுகிறாயோ அப்போது வாங்கித் தருகிறேன் என்று அலுவலகம் கிளம்பிவிட்டேன். டாடா சொன்னேன் மகன் மட்டும் டாடா சொன்னான். மகள் என் முகத்தையே பார்க்கவில்லை. நானும் கிளம்பிவிட்டேன்.  

தடம் எண் 23C பேருந்து நந்தனம் தாண்டி நகர்ந்துகொண்டிருந்தது. வீட்டிலிருந்து அழைப்பு. சொல்லுங்க மேடம் என்றேன். நான் மேடம் இல்லை, உங்கள் பொண்ணு என்றாள். சொல்லும்மா என்றேன்... ஒரே அமைதி. அட சொல்லும்மா, இந்தா... இந்தா... இப்பச் சொல்லப் போறீயா இல்லையா. எப்ப வருவீங்க என்றாள். நான் அப்புறம் பேசுகிறேன் என்று அழைப்பைத் துண்டித்துவிட்டேன். 

06.03.2022
ஞாயிற்றுக்கிழமை

No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...