Saturday, April 23, 2022

போலிகளை எதிர்கொள்வதுதான் பெரும் சவால்


நேற்று மாலை வேளச்சேரியிலிருந்து சென்னைப் பல்கலைக்கழகம் சென்றுகொண்டிருந்தேன். மனைவி `இளங்கலை தமிழ் இலக்கியம்' படிக்கிறாள். ஆன்லைன் தேர்வு நடைபெறுவதால், தேர்வுத்தாளைச் சமர்ப்பிக்கத்தான் இப்பயணம். 

தமிழ்க் கவிதைகளில் சவாலான ஒரு கவிதைத் தொகுப்பைக் கடந்த இரண்டு ஆண்டுகளாக எதிர் நோக்கிக் காத்துக்கொண்டிருக்கிறேன். சமீபத்தில் வெளியான நண்பர் மாரி செல்வராஜின் `உச்சினியென்பது' நூலினை மிகத் தீவிரமாக வாசித்தபடி பேருந்தில் பயணித்தேன். சரியாக மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை அருகே சென்றுகொண்டிருந்த போது நேரம் பார்க்கக் கைபேசியை எடுத்தேன். அதில் பரிசல் செந்தில்நாதனின் தவறிய அழைப்பு இருந்தது. உடனே அழைத்தேன், `இடைவெளி' கவிதைக்கான காலாண்டிதழ் இன்று மாலை 5.30 அளவில் வெளியிடுகிறோம். ஷங்கர் வருகிறார் நேரம் இருந்தால் அவருடன் வாங்க என்றார். எங்கே நடைபெறுகிறது என்றேன். மோகன் வீட்டில் என்றார். அப்போது நேரம் 4.45 இருக்கும். பல்கலைப் பணியை முடித்துவிட்டு சி.மோகன் வீடு இருக்கும் வளசரவாக்கம் செல்வது இயலாத காரியம். முடியாது என்று தெரிந்தும் விடைத்தாள் சமர்ப்பித்ததும் அழைக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். 

சென்ற வேலை முடிந்து ஷங்கரை அழைத்துப் பேசினேன். ``நிகழ்வுக்கு நூல்வனம் மணிகண்டன் வருவதாகக் கூறியுள்ளார். அவருக்காகக் காத்திருக்கிறேன். வந்ததும் புறப்பட்டு விடுவோம்'' என்றார். சரி வரும் போது இடைவெளி இதழ் ஒன்று எடுத்து வாருங்கள் என்றேன். ``தாராளமாக, கவிதைச் சிறப்பிதழ் தானே இரண்டு இதழ் கூட எடுத்து வருகிறேன். கவிதையை யார் படிக்கப் போகிறார்கள்'' என்றார். 

இன்று காலை ஷங்கரைப் பார்த்து இதழைப் பெற்றுக்கொண்டேன். சிறப்பாசிரியராக சி.மோகன் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஒவ்வோர் இதழும் ஒரு பொருளை மையப்படுத்திச் சிறப்பிதழாக வெளிவருமெனத் தெரிவித்துள்ள இடைவெளி ஆசிரியர் குழு அடுத்த இதழை கவிஞரும் ஆய்வாளருமான றாம் சந்தோஷ் பொறுப்பில் கொடுத்துள்ளது. 

முதல் இதழ் `ஆஹா சாகித் அலி' என்னும் இந்திய - அமெரிக்கக் கவிஞரின் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. இந்த இதழின் பொறுப்பாசிரியர் கவிஞர் ஷங்கர் ராமசுப்ரமணியன் இவ்விதழ்ப் பணியைச் செம்மையாகச் செய்துள்ளார். யார் இந்த ஆஹா சாகித் அலி என்று கூகுளில் தேடினால் விரல்விட்டு எண்ணக்கூடிய இணைப்புகளே கிடைத்தன. இந்து தமிழ் திசையில் `செய்திகள் புதைக்கப்பட்ட பள்ளத்தாக்கு' என்னும் குறுங்கட்டுரை, காலச்சுவடு பக்கத்தில் ந.ஜயபாஸ்கரனின் `அறுந்த காதின் தன்மை' என்னும் கவிதைத் தொகுப்பின் பின்னட்டைக் குறிப்பு உட்பட அனைத்தும் ஷங்கரின் பெயரையே காட்டின. 

சுதந்திர இந்தியாவில் பிறந்து எழுபதுகளின் பிற்பகுதியில் அமெரிக்காவிற்குக் குடியேறியவர் ஆஹா சாகித் அலி. அங்கு பென்சில்வேனியா பல்கலையில் பிஎச்டி முடித்து பேராசிரியராகப் பணிபுரிந்தவர், 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காலமாகியுள்ளார். தன்னை நாடுகடத்தப்பட்டவன் என்று பிரகடனப்படுத்திக்கொண்ட சாகித் அலியைப் படிக்கப் படிக்கப் பாலஸ்தீனக் கவிஞர் முஹ்மது தர்வீஸ் நினைவில் வந்து போனார். அவரின் அடையாள அட்டை, கடைசிவானத்துக்கு அப்பால் என்னும் கவிதைகள் என்னை மிகவும் பாதித்தவை. நிலத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்டவர், நிலம் பிடுங்கப்பட்டவர், பிழைப்பு தேடி நிலத்தை விட்டுச் சென்றவர் எங்கெங்கு உள்ளார்களோ அனைவருக்கும் இவர்கள் நெருக்கமாக இருப்பார்கள். 

அதிகாரத்தை எதிர்க்கும் ஆயுதம்தான் கலை. அக்கருவியை இடைவிடாது முடுக்குபவர்கள்தாம் கலைஞர்கள். இங்கே, அதிகாரத்தைக் கேள்வி கேட்கப் புறப்பட்டவர்கள் தாமே ஓர் அதிகாரப் பிம்பமாய் உருவெடுத்திருப்பது துர்பாக்கியம். நேரடியான எதிரியைவிட முற்போக்கு போர்வையில் உலவும் போலிகளை எதிர்கொள்வதுதான் மிகப் பெரும் சவாலாக உள்ளது. மாறாக 
தன்னலமின்றிக் கலை என்னும் ஆயுதத்தை ஏந்தியவனே வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கிறான். ஆண்டாண்டுக் காலமாய் அடக்குமுறையைச் சந்திக்கும் தலைமுறைகளுக்கு அவன் விட்டுச் செல்லும் கலை ஆயுதமாக, ஆறுதலாக இருந்து வருகிறது. காஷ்மீரியக் கவிஞன் ஆஹா சாகித் அலியின் எழுத்துகள் இரண்டாம் வகை. 

`அஞ்சல் அலுவலகம் இல்லாத நாடு', `அன்பே ஷாஹித்', `பேகம் அக்தரின் நினைவில்', `கஸல்', `மதியத்தில் டில்லிக்குத் திரும்புவதைக் கனவு காண்கிறேன்', `டெல்லியைப் பற்றிய தொலைந்த நினைவு', `வீடுகள்', `கண்ணாடி வளையல்களின் கனவு', `டெல்லியில் கோஸின்ட்சேவின் கிங் லியர் நாடகத்தைப் பார்த்துவிட்டு வரும்போது', `பனிமனிதர்கள்' என்னும் தலைப்பிலான கவிதைகளும் ஆஹா சாகித் அலி பற்றிய சில குறிப்புகளும் அடங்கியுள்ளன. கணையாழி கடைசிப் பக்கத்தை சுஜாதா நிரப்பியது போல் இடைவெளியின் கடைசிப் பக்கத்தை சி.மோகன் எழுதியுள்ளார். கஸல் என்னும் தலைப்பிலான கவிதை இவ்வாறு தொடங்குகிறது...

இழப்பின் மொழியாக எஞ்சியிருக்கும் ஒரே மொழி
அரபிதான் 
இந்த வார்த்தைகள் சொல்லப்பட்டது வேறு மொழியில்
அரபியல் அல்ல.

கவிதைகளை மட்டும் நாளை எழுதுகிறேன் டியர்ஸ்....

23.04.2022
சனிக்கிழமை



 

Thursday, April 21, 2022

பலகீனங்களின் மேல் சவாரி செய்யும் சமூகத்தில்

  


நேற்று காலை 3.30 மணியளவில் போதி பிரவேஷ் எழுதிய `தந்த்ரா வழியில் தாம்பத்ய வாழ்க்கை' நூலில் இடம்பெற்ற `பாலின்பத்தின் ஆற்றல்' பகுதியைப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் `பாலின்பம் நிகழும் போது நுண்ணறிவை உருவாக்கும் வேதிகள் சுரக்கின்றன. உச்சக்கட்டப் பாலின்பத்தின் போது சுரக்கும் வேதிகளே நுண்ணறிவை உருவாக்கக் கூடியவை' என்கிற இடம் குறித்துக் கூடுதல் புரிதல் தேவைப்பட்டது. ஆனால், பாலியல் சார்ந்து யாரிடம் பேசுவது என்கிற குழப்பம். பிறரின் பலகீனங்களின் மேல் சவாரி செய்யும் சமூகத்தில் இவ்வாறான உரையாடல் சாத்தியமில்லைதான். இரண்டு மணி நேரம் படித்துவிட்டு, பின்பு 5.30 க்கு மீண்டும் உறங்கச் சென்று விட்டேன். சரியாக 6.45 மணி இருக்கும், உறக்கத்தைத் தட்டி எழுப்பினாள் மகள். கீழறைக்கு வந்ததும் சதுரங்கம் ஆட அழைத்தாள். 

புதிய தலைமுறையில் தலைப்புச் செய்தி கேட்ட படியே காய்களை நகர்த்த ஆரம்பித்தோம். பால் பாக்கெட் வாங்கிக்கொண்டு அம்மாவுடன் படி ஏறிய மகனை அழைத்து அவன் நெஞ்சைத் தொட்டுப் பார்த்தேன். நேற்றெல்லாம் கடுமையான காய்ச்சல். வாந்தி எடுத்ததில் கொஞ்சம் வாடிப் போயிருந்தான். கையில் இருநூறு ரூபாய்தான் இருந்தது. மகனுக்கு எதுவும் ஆகிவிடுமோ என்பதைவிட பெரிய அளவில் மருத்துவச் செலவு வந்தால் யாரிடம் பணம் கேட்பது என்கிற பயம்தான் மேலோங்கி இருந்தது. ஆனாலும் எதுவும் ஆகிவிடாது மகனே கவலைப்படாதே என்று, மருந்துக் கடையில் டானிக்கும் வாந்தி மாத்திரையும் வாங்கிக் கொடுத்திருந்தேன். இன்று வெப்பச் சூடு ஏதுமில்லாதது ஆறுதலாக இருந்தது. விளையாட்டின் ஊடே மனைவி எடுத்து வந்த தேநீரின் சூட்டை ஆற்றினேன். ஆவி பறத்தலைப் பகிர்ந்து பருகினோம். என்னுடைய வழிகாட்டுதல் ஏதுமின்றி முதல் முறை ஆட்டத்தைத் தன்வசமாக்கி வெற்றி பெற்றாள் மகள். நான் அவள் கைகளை இறுகப் பிடித்து வாழ்த்துச் சொன்னேன். அப்பாவை வென்ற மகிழ்ச்சியுடன் மேலறைக்குச் சென்று விட்டாள். 

சற்று நேரத்தில் ஷங்கர் அழைத்து நிதானமான பதில் வணக்கத்துடன் தேநீர் குடிக்கலாமா என வினவினார். வீட்டில் குடித்த தேநீரின் கசப்பு இன்னும் தொண்டைக் குழியில் வடியாமல் கிடந்தது. ஷங்கர் அழைத்தால் செல்லாமல் இருக்க முடியாது. அது ஓர் அதீத அன்பு. அன்பை மறுத்து வேறென்ன செய்யப் போகிறோம் இவ்வுலகில். நடைப்பயிற்சியின் போது இடைவெளி விட்டு இரண்டு கோப்பைத் தேநீர் குடித்ததெல்லாம் பலமுறை நடந்திருக்கிறது. உடனே வருகிறேன் என்றேன். ஜிம் பக்கம் வந்திருங்க என்றார். அவருக்கு முன்பே ஜிம் எதிரே நின்று அழைத்தேன். அப்படியே கீழிறங்கி டீக்கடைக்கு வந்திருங்கள் என்றார். காய்கறிகளை இறக்கும் வேலை, தள்ளுவண்டியில் அடுக்கும் வேலை எனப் பரபரப்பாக இருந்தது தண்டீஸ்வரம் சாலை.

கனரா வங்கி ஏடிஎம் அருகில் இருந்த டீக்கடைக்குச் சென்று லெமன் டீ இருக்கிறதா என்று முன்பே விசாரித்தேன். இல்லை என்ற கடைக்காரர் புதிய நபராக இருந்தார். காய்கறி மூட்டை, கீரைக் கட்டுகள் நடைமேடை மீது கிடைந்தன. கட்டடங்களின் மீது விழுந்த சூரியன் இன்னும் வீதிக்கு வரவில்லை. பூக்கட்டும் மேசையும் பூக்கட்டுபவர் அமர மரப் பலகையும் தயார் நிலையில் இருந்தன. வெள்ளைச் சட்டை, கறுப்பு பேன்ட்டுடன் இரு சக்கர வாகனத்தில் வந்திறங்கிய ஷங்கரின் முகம் க்ளீன் ஷேவிங் செய்யப்பட்டிருந்தது. வாகனங்களின் இரைச்சலினூடே காகங்கள் கரைந்தன. ஜிம்மிற்குச் செல்லும் போது என்ன சட்டையுடன் என்று வினவுவதற்குள் சூர்யா பேசினார். அவருடன் பேசிக்கொண்டிருந்ததால் சட்டையை மாற்றத் தவறிவிட்டேன் என்றார். வெகுநாளாகிவிட்டது சூர்யாவைப் பற்றிப் பேசி எப்படி இருக்கிறார் என்றேன். அடுத்த கவிதைத் தொகுதியை உங்களுக்கு அனுப்பியது போல் அவருக்கும் அனுப்பியிருக்கிறேன். அவர் படித்துத் தன் கருத்தைச் சொன்னதும் வெளியீட்டுக்கான வேலையை ஆரம்பிக்க வேண்டியதுதான் என்றார்.

மொத்தக் கவிதைகளையும் படித்து நான் அவரிடம் பேசிய போது, `இன்னும் கொஞ்சம் கூடுதலாக எழுத வேண்டும், அதற்கு ஒரு வருடம் கூட ஆகலாம்' என்கிற முடிவில் இருந்திருந்தார். இன்று `அந்தத் தொகுப்பு ஏற்கெனவே முடிந்து விட்டது. நானும் மன அளவில் அதிலிருந்து வெளியே வந்துவிட்டேன். பலகீனமாக இருந்தாலும் கொண்டு வந்திடலாம். இனி எழுதப் போவது இந்தத் தன்மையில் இருக்காது. இது தன் நிகழ்வை முடித்துக்கொண்டது' என்று கூறிய போது, சர்க்கரை கம்மியான தேநீர் தயாராகியிருந்தது. மிகவும் மட்டமான சுவையைச் சுட்டியபடி கோப்பையில் வடியும் தேநீரைக் கழுவியோ அல்லது துடைத்தோ கொடுக்காமல் அப்படியே கொடுக்கிறார் பாருங்க என்று சொல்லும் போது கொழுத்த கறுப்பு வெள்ளை நாயொன்று ஷங்கரின் ஷார்ட்ஸை மோந்து பார்த்தது. நாயின் உரிமையாளர் அதட்டினார். மனிதர்களைப் போல் விலங்குகளிடமும் அன்பும் பரிவும் காட்டும் ஷங்கர் நாயின் செயலுக்கு அமைதியாக இருந்தது வியப்பொன்றுமில்லை.     

22.04.2022
வெள்ளிக்கிழமை



Wednesday, April 20, 2022

பற்றி எரியும் அப்பாவின் கனவு!


தம்மைப் போல் பண்ணையடிமையாய்த் தம் பிள்ளைகளும் வாழ்ந்திடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் அப்பா. மேலும், எல்லா பிள்ளைகள் மீதும் ஒருவித வெறுப்பைத் தொடர்ந்து காட்டி வந்தார். இதனால், இரண்டு விசயங்கள் நடந்தன. ஒன்று வெறுப்பைத் தாங்காமல் ஊரை விட்டுப் பிள்ளைகள் ஓடுவது ; மற்றொன்று படிப்பு என்கிற சொல்லில் விடுதியில் சேர்த்து விடுவது. மூத்த அண்ணன் முதல் ரகம் ; இளைய அண்ணன் இரண்டாம் ரகம். ஆனால், தம் பிள்ளைகள் பெரிய ஆளாக வர வேண்டும் என்கிற கனவை மூட்டையாய்ச் சுமந்தபடியே இருந்தார். அக்கனவு எதுவென்று சுட்டுவிரல் நீட்டவோ, அக்கனவை நோக்கிக் கைக்கூட்டி அழைத்துச் செல்லவோ, அக்கனவைச் சொற்களால் விளக்கவோ அவரால் இயலவில்லை. ஆனால், தீராக் கனவு அதிகாலைச் சூரியனைப் போல் சுடர்விட்டுக்கொண்டே இருந்தது. 

சிறுவயதிலிருந்தே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி, கண்ணதான், வாலி, வைரமுத்து போன்றோரின் திரைப்பாடல்களை அடிக்கடி சொல்லிக் காட்டுவார். ஒவ்வொரு முறையும் அவர் பேச்சிலிருந்து ஒரு சொலவடை வந்து விழும். அறிந்தோ, அறியாமலோ அவை எனக்குள் சேகரமாகின. கலைஞர், அண்ணா உரையாடல்களைச் சொல்லிக் காட்டுவார். ஆனால், அவரின் பேச்சைச் சமீபம் வரை நான் பொருட்படுத்தியதில்லை. ஊருக்குச் சென்றால் அப்பாவின் நண்பர் பாபுவைத் தேடி அவர் தோட்டத்திற்குச் சென்று விடுவேன். வீட்டை விட்டால் அவர் தோட்டத்தில்தான் இருப்பேன். தென்னைக்கு நீர் பாய்ச்சும் அவர், இலக்கியம் படிக்கும் என் அருகில் வந்து அமர்ந்துகொள்வார். அவருக்குக் கேட்கும் படி வாசிப்பேன், பிறகு அது குறித்தும் உரையாடுவோம். 

அப்படி கடந்த வருடம் பொது முடக்கக் காலத்தில் வாசிப்பின் ஊடே, உங்களின் மொழி வளம், உச்சரிப்பு, முகபாவம் எல்லாம் தேர்ந்த கலைஞனையே வெளிக்காட்டுகிறது என்றேன். இதை ஏற்கெனவே பலமுறை அவரிடம் சொல்லி இருக்கிறேன். இதற்கு அவர் அளித்த பதில் புதிதாக இருந்தது. ``என்னை விட உங்கள் அப்பா மிக அருமையாகப் பேசுவார். நிறைய பழமொழி சொல்லுவார்'' என்றார். அப்பாவைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லையோ என்கிற குற்றவுணர்வு எழுந்தது. எப்போதும் அம்மாவைப் பற்றியே பேசுவேன். ஊருக்கு போன் செய்தால் கூட அம்மாவிடம்தான் அதிக நேரம் பேசுவேன். அப்பாவிடம் அவ்வளவாகப் பேச மாட்டேன். நலம் விசாரிப்பைத் தவிர அப்பாவும் பெரிதாகப் பேச மாட்டார். நான் எழுதிய கவிதைப் பனுவல்களைக் காட்டுக்கு எடுத்துச் சென்று வரிக்கு வரி படிப்பார். 

கடந்த ஓராண்டுக்கு முன்பு ``நான் எழுதிய கவிதை'' என்று ஒரு காகிதத்தைக் கொடுத்தார் அப்பா. இப்போது அது எங்கிருக்கிறது என்று தெரியவில்லை. அவ்வப்போது ``ஒரு கதை சொல்லுறேன் கேளுப்பா'' என்பார், நான் அவர் சொற்களைப் பெரிதுபடுத்தியதில்லை. 

இப்போதெல்லாம் அப்பாவின் உதட்டசைவைக் கேட்கத் தோன்றுகிறது. அவருக்குத் தெரியும் மொத்தப் பழமொழிகளையும் அவரின் பண்ணை வாழ்வையும் ஒரே மூச்சில் கேட்க வேண்டும் என்று மனம் உந்துகிறது. தரை தேய்த்து நடக்கும் அவர் காலடி ஓசையின் பின்னே நடக்க வேண்டும். கரும் புள்ளிகள் பூத்த அவர் முகத்தைப் பார்த்துப் பேச வேண்டும் என மனம் ஏங்குகிறது. ஆனால், அவரோ பல வருடங்களாகத் தம் பிள்ளைகளின் அன்புக்கு ஏங்கிக்கொண்டுதான் இருக்கிறார். தம் பிள்ளை பெரியாளா வரவேண்டும் என்னும் அப்பாவின் கனவு இன்னும் எரிந்துகொண்டுதான் இருக்கிறது. எனக்கு என் பிள்ளை பெரியாளா வரவேண்டும் என்கிற கனவு பற்றியிருக்கிறது. அப்பாவின் மகனும் மகனின் மகனும் அப்பாக்களின் கனவை அடைக்காத்துச் சிறகடிக்க வைப்பார்கள். அச்சிறகுகள் விரியும் காலம் வந்துவிட்டது டியர்ஸ்... 

20.04.2022
புதன்கிழமை

Tuesday, April 19, 2022

உடைந்த வளையல் வானத்தின் கீழ்...

 


நேற்று மாலை சிவராஜ் பாரதியும் நானும் அலுவலகத்தில் உரையாடிக்கொண்டிருந்தோம். வரவேற்பரையில் கரகரத்த குரல் ஒலித்தது. யாரென்று பார்த்தேன். புத்தக மூட்டையுடன் பரிசல் செந்தில்நாதன் வந்திருந்தார். தலித் வரலாற்று மாதத்தை முன்னிட்டு இம்மாத இறுதியில் மதுரையில் வானம் கலைத் திருவிழா 2022 நடைபெறவிருக்கிறது. அங்கு விற்பனை செய்வதற்காக நீலம் சார்பாகப் புத்தகங்கள் கேட்டிருந்தோம். எனவே, க.பஞ்சாங்கத்தின் `தலித்துகள் பெண்கள் தமிழர்கள்', கோ.ரகுபதியின் `காந்தியின் ஸநாதந அரசியல்', பிரஞ் ரஞ்சன் மணி, பமீலா சர்தார் இருவரும் தொகுத்து வெ.கோவிந்தசாமி மொழிபெயர்த்த `மறக்கப்பட்ட விடுதலைப் போராளி சாவித்திரிபாய் பூலேவின் வாழ்வும் போராட்டமும்', வசந்த் மூனின் `ஒரு தலித்திடமிருந்து', பிரியா விஜயராகவனின் `ஆட்டுக்குட்டியும் அற்புத விளக்கும்' ஆகிய பிரதிகளுடன் பரிசல்  வந்திருந்தார்.  

காஸ்ட்லெஸ் கலக்டிவ் பார்க்கப் பாண்டிச்சேரிக்குச் சென்றீர்களா, கூட்டம் எப்படி இருந்தது என்றார். வழக்கம் போல் இளைஞர்கள் கூட்டம் திரண்டிருந்தது. விசில் சத்தம், கைத்தட்டல் என ஆரவாரமாக இருந்தது என்றேன். நேற்று நடைபெற்ற நாடக விழாவுக்குச் சென்றீர்களா என்றேன். இல்லை, நேற்றுதான் பரிசலின் நூல் வெளியீடு நடைபெற்றது என்றார். சரி வாங்க தேநீர் குடிப்போம் என்றேன். 

நல்லதம்பி தெருவில் இறங்கிச் சென்றபோது, வணிக அங்காடிக்குள் நுழைந்து செல்லலாம் என்றார். அடர் இருட்டு என்பதால் ஏதோ குகைக்குள் இருப்பது போல் இருக்கும். எனவே, எப்போதும் சாலையின் வழி சுற்றிச் செல்வதையே விரும்புவேன். குறுந்தெருவின் வானம், உடைந்த வளையல் துண்டினைப் போல் இருக்கும். அதில் தென்படும் சிறகுகளையும் மேகங்களையும் பார்த்துச் செல்லலாம் அல்லவா. ஆனால், தற்போது குகைக்குள் புகுந்துதான் சென்றோம்.

சற்று நேரத்திற்கு முன்பு சிவராஜுடன் தேநீர் குடித்ததால், செந்தில்நாதனுக்கும் மட்டும் ஒரு நார்மல் டீ சக்கரை கம்மி என்று கடைக்காரரிடம் சொன்னேன். தம்பி, ராம்கி எப்படி இருக்கிறான் என்றேன். ராம்கி என்பது செந்தில்நாதனின் மகன். 

போன வாரம்தான் அறுவை சிகிச்சை செய்தோம். 

ஏன் அடிக்கடி அறுவை சிகிச்சை செய்றீங்க, உடல்நிலைக்கு என்ன ஆச்சு. 

போன வருசம் விழுந்தது, இப்போதான் வலி எடுத்தது, இப்போது செய்யவில்லையென்றால் பின்னாடி பிரச்சினை ஆகிவிடும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். இன்ஷுரன்ஸ் க்ளைம் செய்து சிகிச்சையைச் செய்தோம் என்றார். 

திரைப்பாடல் முயற்சி எப்படிப் போகிறது என்றார்.

யாரையும் சென்று வாய்ப்புக் கேட்பதில்லை. பரியேறும் பெருமாள் படம் ஆரம்பித்த போது மாரி செல்வராஜைச் சந்தித்ததுதான் கடைசி. அதன் பின்பு வேறு யாரையும் சென்று பார்க்கவில்லை. இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு சமயத்தில் அதியன் ஆதிரையைச் சந்திக்க போனில் தொடர்பு கொண்டேன், சந்திக்க முடியவில்லை. பிறகு, இனி யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம், நம்ம வேலையைப் பார்ப்போம் என்று தோன்றிவிட்டது என்றேன். வெட்கம், மானம், ரோசம் எல்லாவற்றையும் இறக்கி வைத்துவிட்டு ஒவ்வோர் அலுவலகமாய்ச் சென்று பாடல் வாய்ப்புக் கேளுங்கள். ஏதோ ஒரு படம், ரெண்டு படத்தில் எழுதினால் கூட அடுத்தடுத்து வாய்ப்பு வரும். யாரிடமும் சென்று வாய்ப்புக் கேட்கவில்லை என்றால் உனக்குப் பாடல் எழுத விருப்பம் இருக்கிறது என்று பிறருக்கு எப்படித் தெரியும். ஒண்ணும் தெரியாதவங்க எல்லாம் பாடல் எழுதி யூடியூபில் பதிவு செய்கிறார்கள், உனக்கு என்னய்யா குறைச்சல் என்றார்.

உன்னுடைய நோக்கம் பாடல் எழுதுவதுதான் என்று அறிவிப்பு கொடு, அப்போதுதான் யாராவது ஒருவர் வாய்ப்புக் கொடுப்பார். மூடி மறைத்து வைத்திருந்தால் வயசுதான் ஆகும் என்றார். இப்போது மட்டுமல்ல கடந்த நான்கு ஐந்து வருடங்களாக என்னைத் தொடர்ந்து பாடல் எழுதச் சொல்லும் நண்பர்களில் பரிசலும் ஒருவர். இவ்வளவு தார்மிக உரிமையுடன் திரைப்பாடல் எழுதச் சொல்லும் இன்னொரு நண்பர் அகரமுதல்வன். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக அகரன் என்னுடன் சரியாகப் பேசுவதில்லை. வேளச்சேரியில் நடைபெற்ற பீஃப் கவிதைகள் விமர்சனக் கூட்டத்தில் கைக்கொடுக்கக் கூட மறுத்துவிட்டார். ஏன் கைக்கொடுக்க மறுக்கிறீர்கள் என்றேன், நான் எதுக்கு உங்களுக்குக் கைக்கொடுக்க வேண்டும் என்று மிகவும் அதிகாரத் தொனியுடன் அகரமுதல்வன் சொன்னது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. பார்க்கும் இடமெங்கும் அன்பொழுகப் பேசிய அகரமுதல்வனுக்கு என் மேல் என்ன கோபம் என்பது புரியாத புதிராக உள்ளது. 

ஜி.நாகராஜன் சொல்வது போல் மனிதனுக்குத் தேவை அன்பு அல்ல மரியாதைதான். மரியாதையற்ற எந்த இடத்திலும் பச்சோந்தி இருக்க மாட்டான். என் 22 ஆண்டு சென்னை வாழ்க்கையில் மிகவும் தெரிவு செய்துதான் பழகி வருகிறேன். கூட்டத்தோடு கோவிந்தா போடும் பழக்கம் இதுவரையிலும் இனிமேலும் எனக்குச் சாத்தியமற்ற ஒன்று. 

பனுவலில் இருக்கும் போது இலக்கியக் கூட்டங்கள், சமூக நீதி நிகழ்வு எனத் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளைப் பரிசல் நடத்தி வந்தார். இப்போது சரியான இடம் அமையவில்லை என்பதால் அவ்வாறான நிகழ்ச்சிகளைச் செய்ய முடியவில்லை என்று சற்று வருத்தத்துடன் தெரிவித்த பரிசல், இன்னும் ஐந்தாண்டுகளில் பதிப்பகத்தின் நூல் எண்ணிக்கையைக் கூட்ட வேண்டும். சரி, விகடன் வரை செல்ல வேண்டும் புறப்படுவோமா என்றார். மாரி செல்வராஜின் `உச்சினியென்பது' கவிதை நூல் இருக்கிறதா என்றேன். 

அது வாங்கத்தான் வெய்யிலைச் சந்திக்க விகடனுக்குச் செல்கிறேன் என்றார். 
சரி நானும் வருகிறேன் எனக்கு ஒரு புத்தகம் கொடுங்க என்றேன். ஆனால், விகடனுக்கு வர மாட்டேன் என்றேன். அப்பு டீக்கடையில் வந்து நில்லுய்யா என்றார். மறுத்துவிட்டேன். பின்பு, ஈரானி டீக்கடை ஓரமாக நிற்பது என முடிவு செய்தோம். இருவரும் அவரின் டிவிஎஸ் 50 இல் புறப்பட்டோம். அண்ணா சாலையில் உள்ள IOB எதிரில் உள்ள ஸ்மித் சாலையின் ஓரம் என்னை இறக்கிவிட்டு விட்டு விகடனுக்குச் சென்றார் பரிசல். 

அருகில் இருந்த ஈரானி டீக்கடையை நோக்கினேன். விகடனில் பணி புரிந்த போது மாலை நேரத்தில் நண்பர்களுடன் டீ குடிக்க வருவோம். இங்கு பருப்பு கலந்த சிறிய அளவிலான சமோசா மிகச் சுவையாக இருக்கும். எதிரில் சிறிய அரசமரத்தின் அருகே இருந்த பெட்டிக்கடைப் பெண்மணி அவ்வழியாகச் சென்ற ஆஃபீஸர் ஒருவருக்குப் புன்னகை செய்தார். சாய்ந்திருந்த துருப்பிடித்த மின்பெட்டியின் கீழ் சருகுகள், கேபிள் வயர்கள், கட்டைகள் கிடந்தன. சிக்னல் விளக்குகள் பச்சையும் சிவப்புமாக ஒளிர்ந்தன. வெளியின் கருமை கூடியது. எங்கேனும் விண்மீன் தென்படுமா என்று வானத்தைத் துலாவினேன். சைக்கிளில் வந்த பூ வியாபாரி வெகு நேரமாய்ச் சாலையைக் கடக்கக் காத்திருந்தார். அலுவலகம் முடிந்து அங்கும் இங்குமாய்ப் பெண்கள் நடந்த வண்ணம் இருந்தனர். கருஞ்சிறகுகள் தனித்தும் சேர்ந்தும் கருமையாய்ச் சிறகடித்தன. உதிர்ந்து நைந்த மல்லிகைக் பூக்களை நெருக்கமான காட்சியில் நிழற்படம் எடுத்துக்கொண்டிருந்தேன். 

சிக்னலைத் தாண்டி வந்த பரிசல் செந்தில்நாதன் வெய்யிலிடம் நூல்கள் கேட்டேன் நூல் வனம் மணிகண்டனிடம் வாங்கிக்கச் சொல்லி விட்டார். பின், ``உன் தம்பி இரண்டு நூல்கள் வேண்டும் என்று காத்திருக்கிறான். நீயென்னடான்னா இல்லை என்று சொல்றீயே'' என்று சொன்னதும் இருங்க வருகிறேன் என்று சொல்லிவிட்டுத் திரும்பி வந்து மூன்று நூல்கள் கொடுக்கிறார். நான் கேட்டேன் இல்லை என்று சொல்லிவிட்டு, நீ இருக்கிற என்றதும் தருகிறார். ரெண்டு பேரும் என்னய்யா நினைச்சிக்கிட்டு இருக்கீங்க என்றார். சரி சரி எனக்கு ஒரு நூல் தாங்க என்று வாங்கி இருவரும் பிரித்துப் பார்த்தோம் மிக நேர்த்தியான வடிவமைப்பும் திக்கான காகிதமும் இடம்பெற்ற பின்னட்டையில் `மொழியின் பிரத்யேக மூக்குத்தியின் வெளிச்சம் இச்சொற்களில் இருக்காது. ஏனெனில் இவை இருளின் வரிகள்' என்று கூறும் மாரி செல்வராஜ் `கலையைக் களத்துக்கு இழுத்துவந்த அண்ணன் பா.இரஞ்சித்துக்கு...' என்று இந்நூலைச் சமர்ப்பணம் செய்துள்ளார். பரிசல் செந்தில்நாதன் வடக்கு திசையை இரு சக்கர வாகனத்திலும் நான் தென் திசையைப் பேருந்திலுமாக விரட்டிச் சென்றோம். வேளச்சேரியில் இறங்குவதற்குள் பாதி நூலை வாசித்துவிட்டேன். கவிதைகளைப் பற்றிப் பிறகு பேசுவோம் டியர்ஸ்.


19.04.2022
செவ்வாய்க்கிழமை

Sunday, April 17, 2022

என்னதான் பார்க்கிறாய் கணேஷா!?


நாளை சீக்கிரம் எழுந்திருக்க வேண்டுமென்று முடிவெடுத்திருந்தேன். இங்கு சீக்கிரம் என்பது விடிவதற்குள். அப்போதுதான் பூசனம் பிடித்த சோற்றை யாருக்கும் தெரியாமல் கீழே கொட்ட முடியும். பூசனம் பிடித்தது சோறு மட்டுமல்ல ; சாம்பார், பால், பொறியலும்கூட. இவற்றுடன் மனமும்தான். மனதின் பூசனத்தைப் பிறகு எழுதுகிறேன்.

தமிழ்ப் புத்தாண்டு அன்று சமைத்தது. காலையில் நண்பரைப் பார்க்கச் சாப்பிடாமல் சென்றதில் மனைவிக்குக் கோபம். என்ன செய்வது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் இருக்கும் அவரைப் பார்த்து, இப்போது சினிமாவில் ரொம்ப பிஸியாகி விட்டார். மேலும், 9.30 இல் இருந்து 10 மணிக்குள் வந்துவிடுங்கள் என்றதால் சீக்கிரம் புறப்பட்டு விட்டேன்.

இப்படியானவற்றைக் கொட்டச் செல்லும் போது பக்கத்து வீட்டிலோ, கீழ் வீட்டிலோ யாராவது பார்த்தால் பாவம் நாற்றத்தில் மயக்கமடைந்து விடக் கூடும். நல்லவேளை இருட்டில் எழுந்து கொட்டிவிட்டேன். வீட்டின் தென்புறமுள்ள தொழுவத்தின் ஓரக் காலியிடத்தில்தான் இப்படியான கழிவுகளைக் கொட்டுவோம். வழக்கமான கனத்தினை நினைத்துச் சோற்றுச் சட்டியை உதறினேன், முழுச் சட்டியளவு கனம் மணிக்கட்டில் வலியைக் கொடுத்தது. ஏதோ நாலைந்து பாத்திரம் இருக்குமென்று சமையல் கட்டில் நுழைந்தால் அள்ள அள்ளக் குறையவில்லை.

பிள்ளைகள் இருவரும் தன் அம்மாவுடன் பெரியப்பா வீட்டிற்குச் சென்றுவிட்டனர். அவர்கள் இல்லாததால் மேலறைக்குச் செல்லாமல் இரண்டு நாட்களாகக் கீழறையிலேயே உறங்கி விட்டேன். ஊருக்குப் போனவர்கள் வந்து பாத்திரங்கள் இருக்கும் நிலையைப் பார்த்தால் மனைவியை விட மகள் என்னைக் கேள்விகளால் கொன்று போட்டு விடுவாள். ஒருவழியாகத் தேய்த்த பாத்திரங்களைச் சின்ன வாளியில் மூன்று முறை எடுத்துச் சென்றேன். துவைக்கத் துணியிருந்தது, எதிர் வீட்டுப் பாத்திரங்களுக்கு இடம் கொடுத்துக் கீழறைக்குச் சென்று விட்டேன். செல்லும் போது சுவரோரம் வெண்கோணியில் கிடந்த குப்பையை எடுத்துச் சென்றேன், அதன் அழுகல் கொஞ்சம் தரையில் ஒட்டிக்கிடந்தது.

`உண்ணாமதி சியாம சுந்தர்' தெரிவு செய்து தொகுத்த `நகைக்கத்தக்கதல்ல' நூலை வாசிக்கலானேன். சா.தேவதாஸ் மொழிபெயர்ப்பில் எதிர் வெளியிட்ட இந்நூல் 1932 - 1956 காலகட்டத்தில் வெளியான அம்பேத்கர் கேலிச்சித்திரங்களை மையப்படுத்தியவை. இந்நூலுக்கு சூரஜ் யங்டே அணிந்துரை எழுதியுள்ளார். அதன் இறுதியில்  `இப்புத்தகத்தைக் கீழே வைக்கையில் தலித் அரசியலில் மிகவும் கற்றறிந்தவராக, அறிவு விளக்கம் பெற்றவராக, கூர்மையானவராக வெளிவருவீர்கள். வரவிருக்கும் எதிர்காலப் படைப்புகளுக்கு வழிகாட்டும் மைல்கல்லாக `நகைக்கத்தக்கதல்ல' நிச்சயம் இயங்கும்' இவ்வாறு குறிப்பிடுகிறார். ஒவ்வொரு கேலிச்சித்திரத்திற்கும் இரண்டு அல்லது மூன்று பக்கங்களில் அக்காலகட்டத்தின் அரசியல் போக்கு வரலாற்றுப் பின்புலத்துடன் விவரிக்கப்பட்டுள்ளது. 

புத்தகக் காட்சியின் போது தம்பி கே.சி.ரஞ்சித் குமார் வாங்கி அலுவலகத்தில் வைத்திருந்தான். அவ்வப்போது எடுத்துப் படிப்பேன். ஓர் நாள் அலுவலகம் வந்திருந்த அருள் முத்துக்குமரனுடன் ரஷ்யா - உக்ரைன் போர் குறித்து உரையாடிய பிறகு ``படித்துவிட்டுப் பொறுமையாகத் தாங்க அண்ணா'' என்று கே.சி.ஆர் இந்நூலைக் கொடுத்தான். பத்து மணி வரை படித்துவிட்டுத் துணி துவைக்கச் சென்று விட்டேன்.

துணி சோப்பைத் தேடும் போதுதான் நீரூற்றி வைக்கும் ட்ரம் மீது பட் ரோஸ் வாடிக் கிடந்தது தெரியவந்தது. கடந்த வாரம் தன் பெரியப்பா வீட்டில் இருந்து மகள் கொண்டுவந்தது. நாங்கள் இல்லையென்றாலும் தினமும் பூச்செடிக்குத் தண்ணீர் ஊற்ற வேண்டும் எனச் சொல்லி இருந்தாள். துணிகளின் மீது விழுந்த நீரைப் பிடித்து வதங்கிய செடியின் வேர் மீது ஊற்றினேன். அப்போதுதான் ஒரு போர்வையும் படுக்கை விரிப்பும் மூன்று நாட்களாக வெயிலில் கிடப்பதையும் பார்த்தேன். வீட்டையும் பார்ப்பதில்லை, நாட்டையும் பார்ப்பதில்லை, என்னதான் பார்க்கிறாய் கணேஷா!?


Thursday, April 14, 2022

தன் குஞ்சைச் சூரியனில் காய வைப்பவன்


saatchiart

ஓர் நாள் கிழிந்த டவுசரின் வழியே கருத்த பிண்டம் ஒன்று எட்டிப் பார்த்தது. என்னடா இது என்று அதன் நுனியைத் தொட்டுக் கேட்டேன். வெட்கப்பட்டுக் கைகள் இரண்டால் பொத்திக்கொண்டு ஓடி விட்டான். சமீப நாட்களாகத்தான் கிழிந்த ஆடைகளை அணிந்த பிள்ளைகளைக் கவனிக்க ஆரம்பித்தேன். குடும்பத்தின் மேல் என்ன அக்கறை கொண்டுள்ளோம் என எழுந்த கேள்வி புதுத் துணி வாங்கிக் கொடுக்க நினைத்தது. 

சில நேரம் குளித்து முடித்து ஈரம் சொட்டச் சொட்ட வீட்டுக்குள் ஓடி வருவான். ஒற்றை அறையுள்ள வீடு முழுவதும் நனைந்துவிட்டால் என்ன செய்வதென்று, வெளியில் சென்று குஞ்சைச் சூரியனில் காய வை என்பேன். பார்த்துக் காற்றில் பறந்துவிடாமல் பார்த்துக்கொள் என்று சொல்லும் போது என் மண்டையில் குட்டுவைத்த படி சூரியனின் வெப்பத்தை நோக்கிச் சென்றுவிடுவான். 

கிழிந்த டவுசரைத் தைய்த்துக் கொடுக்கலாம் என்று பார்த்தால் கந்தலாய்க் கிடந்தது. சரி புதுத் துணி வாங்கித் தருகிறேன் என்றதும் எனக்கும் என்று கேட்டாள் மகள். சரி இருவருக்கும் வாங்கித் தருகிறேன் என்று சொன்னதும், அவ்வப்போது எப்ப வாங்கிக் கொடுப்பீர்கள் என்று நச்சரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு வழியாக இந்த மாதச் சம்பளம் வந்ததும் என்று உறுதியளித்தேன். 

சம்பளத்தில் வாடகையும் சென்ற மாதம் வாங்கிய கடனும் கொடுக்கும் போது இந்த மாதம் புதுத் துணி வாங்குவதில் சந்தேகம் எழுந்தது. நேற்று இரவு அலுவலகம் முடிந்து A51 இல் வீட்டுக்குச் சென்றுகொண்டிருக்கும் போது, மகன் அழைத்து ``என்னப்பா ட்ரெஸ் வாங்கிட்டு வருகிறீர்களா'' என்று கேட்டான், என்ன சொல்வது என்று தெரியாமல் ம்ம்ம்... என்றேன். பஸ் பாஸ் வாங்க 1,000 ரூபாய் ஒதுக்கி வைத்திருந்தேன். பின் வேளச்சேரியில் இறங்கினேன். வீட்டுக்குச் செல்லாமல் இளம் பச்சையில் துளிர்த்திருக்கும் அந்த அரச மரத்தின் நிழலில் நின்ற படி சிறிது யோசிக்கலானேன். மீண்டும் பேருந்தில் ஏறி தி.நகருக்குச் செல்ல ஆரம்பித்தேன். எல்லோரும் விளக்குகள் அணையும் வீட்டுக்குத் திரும்பும் இரவில் விடிய விடிய எரியும் நகரத்தின் உள் நுழைந்துகொண்டிருந்தேன். 

தி.நகர் பேருந்துப் பணிமனையின் அருகிலிருந்த பெரியார் சிலையின் பின்னந்தலையில் வாகன வெளிச்சம் பீறிட்டது. சவுத் உஸ்மான் சாலை கொஞ்சம் கொஞ்சமாய் மூட்டையைக் கட்ட ஆரம்பித்திருந்தது. அதில் ஒரு மூட்டையைப் பிரிக்கச் சொல்லி அழகான ஜோடியைத் துலாவ ஆரம்பித்தேன். மிகவும் மென்மையான துணி வகைகள் மட்டுமே இருந்தன. இதைவிடக் கொஞ்சம் தடிப்பான ரகம் வேண்டும் என்றேன். எங்களிடமில்லை, பிள்ளையார் கோயில் வாசலில் இருக்கும் சீக்கிரமாகச் சென்று கேளுங்கள் இல்லையென்றால் கடையை மூடி விடுவார்கள் என்றார். பலாச்சுளையின் வாசனையை நுகர்ந்த படி உஸ்மான் சாலையின் மத்தியை நோக்கி நகர்ந்தேன். சென்று கொண்டிருக்கும் போதே ஓர் நடைபாதைக் கடை மேசையின் நுனியில் மிக அழகான பட்டாடைப் பாவாடையைப் பார்த்தேன். விலையைக் கேட்டேன் 150 ரூபாய் என்றார், எந்தவித யோசனையுமின்றி வாங்கிப் பையில் திணித்துவிட்டேன். இனி மகளுக்காக என்ன வாங்கினாலும் இது ஒன்றே போதும் அவள் ஆரவாரிக்க.

பிள்ளையார் கோயிலின் வாசலின் வலது புறத்தில் மகனுக்கும் மகளுக்கும் மிக அழகான உடைகளைத் தெரிவு செய்தேன். ஆனால், விலையைச் சற்றும் குறைக்க முன்வரவில்லை. எவ்வளவு பேசிப் பார்த்தும் 10 ரூபாய் கூட குறைக்காததால் துணி வேண்டாம் என்கிற முடிவுக்குச் செல்ல ஆரம்பித்தேன். வேண்டாம் என்று புறப்பட்ட போது, ``இதே துணிகளை நாளைக்கு விற்கும் தெம்பு என்னிடம் இருக்கிறது. இவ்வளவு நேரம் பார்த்து வாங்காமல் போவது உங்களுக்கு வருத்தத்தைக் கொடுக்கும் என்பதற்காகச் சொல்கிறேன்'' என்றார். நானும் பிடிவாதமாக மறுத்து விலகினேன். ஆனால், அனைவரும் கடையை மூடும் இந்நேரத்தில் இனி எங்கே போய்த் துணிகளைத் தேடப் போகிறாய், பேசாமல் வாங்கிச் செல் என்றது உள் மனம். ``இதே துணிகளை விற்கும் தெம்பு என்னிடம் இருக்கிறது'' என்று அவர் சொன்ன போது அருகே ஓர் பெண் இருந்தாள். வேற துணி வாங்க நம்மிடம் தெம்பில்லையா என்ன என்று தோன்றியது. ஆனாலும் நிற்கவும் இல்லாமல் போகவும் மனமில்லாமல் அதே கடையைக் கடந்து வடக்கும் தெற்குமாக நடக்கலானேன். எப்படியாவது கூப்பிட்டுக் கொடுத்துவிடுவார் என்று நம்பினேன், என் நம்பிக்கை பொய்த்தது.

இன்னும் சற்று தூரம் சென்றதும் இன்னோர் கடையில் துணிகளைப் பார்த்து விலை கேட்டேன். நல்ல விலையாகத் தெரிந்தது, துணி அவ்வளவு நல்லதில்லை. அவரிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்று தெரியாமல் இன்னும் விலை குறைத்துக் கேட்டேன், அந்த விலைக்குத் துணி இல்லை என்று சொல்லிவிட்டார். விட்டால் போதும் என்று ஓட ஆரம்பித்தேன். இருபதடி தூரத்தில் சென்ற போது, சரி வாங்க நீங்க கேட்ட விலைக்கே வாங்கிக் கொள்ளுங்கள் என்று இரண்டு முறை அழைத்தார். எதுவும் கேட்காதது போல் அந்தக் குரலைக் கூட்டத்தினிடையே விட்டுவிட்டேன்.

ரங்கநாதன் தெருவைத் தாண்டி பேருந்து பணிமனையை நோக்கிச் செல்லும் கடைகளை மீண்டும் வெறிக்கலானேன். இன்றும் துணி வாங்குவது சிரமம் போல் என்கிற எண்ணம் என் குரல்வளையை நெரிக்க ஆரம்பித்தது. மணி 10.5 ஆகிவிட்டது. மனைவி அழைத்து எங்க இருக்கிறீங்க என்றாள். அப்போதுதான் துணி வாங்க வந்திருக்கும் செய்தியை அவளிடம் பகிர்ந்தேன். வாங்காமல் விட்டு வந்த தன்மையிலான பாவாடைகள் ஒரு கடையில் தென்பட்டன. முதலில் விலையைக் கேட்டேன், ``பத்து இருபது குறைத்துக்கொள்ளலாம் நீங்க பாருங்க'' என்று சொன்னதும் தீவிரமாய்த் தேட ஆரம்பித்தேன். மகனுக்கும் மிக அழகான பனியனும் டவுசரும் வாங்கினேன். இந்த ஒரு பனியனே போதும் அவன் மகிழ்ச்சிகொள்ள என்று நினைத்து நறுமணத்தால் மூழ்கிய உஸ்மான் சாலையில் இருந்து விடைபெற்றேன். 

இந்நேரத்தில் பேருந்து இல்லையென்றால் ஓலா பைக்கில்தான் செல்ல வேண்டியதிருக்கும் என்று எண்ணியபடி, இருண்ட பணிமனையின் உள்நுழைந்தேன். பேருந்துத் தடம் எண் 3 நின்றிருந்தது. சரிபாதி இருளும் ஒளியும் மிதந்த இருக்கையில் அமர்ந்தேன். அதற்கு முன் பச்சைப் பலகை 51A நின்றிருந்தது. முதலில் எடுத்த பேருந்தில் ஏறி வீடு வந்தேன்.

நகரம் உறங்கும் நேரத்தில் திறந்த கதவின் இருளை விலக்கினேன். மனைவி விழித்தெழக் குரல் கேட்டுப் பிள்ளைகளும் படபட வெனப் பாயின் மீது அமர்ந்துவிட்டார்கள். புதுத் துணிகளைப் பாயின் மீது எடுத்து வைத்தேன். பட்டாடைப் பாவாடையை மகளும் வெள்ளை நிறப் பனியனை மகனுமாக நெஞ்சோடு அணைத்துக்கொண்டார்கள். அணைப்பை ரசித்த படி எல்லாத் துணிகளுமே நல்லா இருக்கிறது என்றாள் மனைவி. அடுத்த நாள் காலையில் துணி துவைக்கையில் நான் அந்தக் கந்தல் துணிகளைக் குப்பையில் எறிந்துவிட்டேன். இனி கிழிசலில் தொங்கும் குஞ்சைப் பார்த்து ``பார்த்துடா கீழே விழுந்திடப் போகுது'' என்று வம்பளக்க வாய்ப்பில்லை.

15.04.2022
வெள்ளிக்கிழமை  

Wednesday, April 6, 2022

பழக்கமற்ற ஒன்று முதலில் மூச்சுமுட்டவைக்கும் தானே!?




நேற்று இரவு கீழறைக்கு உறங்கச் சென்றேன். பிள்ளைகளில் யாராவது ஒருவரை உங்களுடன் அழைத்துச் செல்லலாம் அல்லவா. காலையில் இருந்து கூடவே இருக்காங்க, கொஞ்ச நேரம் அசைய முடியவில்லை. எப்பப் பாரு சாப்பிட உக்காரும் போது, டாய்லட் வருது என்கிறான். பாத் ரூம் போனாலும் கூடவே வருகிறான். தூங்கும் போதும் ரெண்டு பேரும் இறுக்கி அணைத்துக்கொள்கிறார்கள், இடுப்பும் முதுகும் வலிக்கின்றன என்றாள். மகனை உடன் தூங்க அழைத்தேன் வர மாட்டேன் என்று சொல்லிவிட்டான். என்ன செய்வது என்று தெரியாமல் தனியாக தூங்கச் சென்று விட்டேன். ஆனால் ஏதோவொன்று என்னைத் தொந்தரவு செய்தபடியே இருந்தது. 

காலை 4 மணிக்கு எழுந்து எழில் சின்னதம்பி மொழிபெயர்த்த `கடைசி வருகை' மொழிபெயர்ப்புச் சிறுகதை நூலில் தலைப்பிட்ட கதையைத் தெரிவு செய்து படித்தேன். மிக விசித்திரமான கதை. கருப்பையில் சுமக்கப்படாத ஒருவன், ரத்தமும் சதையும் எலும்புமற்ற ஒருவன் பேசியபடியே இருப்பான். அவன் மற்றவரின் கனவில் தோன்றுபவன். கனவில் மட்டுமே உயிர் வாழும் அவனின் குரல் கனத்தை ஏற்படுத்தியது. அதற்கு அடுத்து வேறு ஒரு கதைக்கு நகர முடியவில்லை. இது ஒன்றே போதுமென மீண்டும் உறங்கச் சென்று விட்டேன். 

காலையில் எழுந்தால் வழக்கம் போல் கதவைத் தட்டி அப்பா, அம்மா உங்களைப் பால் வாங்கி வரச் சொன்னாங்க என்றான். இன்று உங்களுக்குப் பள்ளிக்கூடம் இருக்கிறதா என வினவினேன். இல்லை என்றான். சரி பால் வாங்க வேண்டாம் வெளியில் செல்வோம் என்று, மனைவியை செல்போனில் அழைத்தேன். அவள் அழைப்பை எடுப்பதற்குள் எங்கு செல்வது என்று யோசித்து, இன்று பார்த்தசாரதி கோயிலுக்குச் செல்வோம் கிளம்புங்க என்றேன்.  

வீட்டில் குடிக்க வேண்டிய காபியைக் `கோத்தாஸ் காபி' கடையில் குடிக்கலாம் என்று திட்டமிருந்தது. ஆனால், பேருந்தில் சென்றால் ரயில் நிலையத்திற்குச் செல்ல, பேருந்து நிறுத்தத்தில் இருந்து அதிக தூரம் நடக்க வேண்டும். எனவே, ஓலா ஆப்பில் ஆட்டோ புக் செய்தேன். 43 ரூபாய் கட்டணம் காட்டியது. குடும்பத்துடன் ஓலாவில் புக் செய்து போவது இதுதான் முதல்முறை. கிருஷ்ணர் கோயில் வாசலில் வந்து நின்ற ஆட்டோவில் ஏறி வேளச்சேரி ரயில் நிலையத்திற்குச் சென்றோம்.

ஆட்டோவின் வலது பக்கம் பிள்ளைகள் இருவரும் அமர, இடது பக்கம் நானும் மனைவியும் அமர்ந்துகொண்டோம். மஞ்சளும் சிவப்பும் இளஞ்சிவப்பும் கலந்த சேலை உடுத்தி மிக அழகாக இருந்தாள். இப்படி அழகாக இருப்பது மனதிற்கு மகிழ்ச்சியளித்தது. இவளையா அழுக்கு நைட்டி என்று கேலி செய்தேன்?. இரு கன்னங்களிலும் பதின் பருவத்துக்குரிய பருக்களின் தடங்கள் இன்னும் காய்த்துக் கிடக்கும்.

ஓராண்டியம்மன் தெருவில் விரைந்தது ஆட்டோ, ``வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்குறோம் எங்கவாவது கூட்டிக்கிட்டுப் போகக் கூடாதா'' என்று மாறி மாறிக் கேட்ட பிள்ளைகளின் முகத்தில் மகிழ்ச்சி ததும்பியது. விஜய நகரின் மேம்பாலம் அடியில் சென்று கொண்டிருந்த போது, இப்படித்தானே மாமல்லபுரம் போனோம் என்று பேசிக்கொண்டு வந்தனர். ரயில் நிலையம் இறங்கி, டிக்கட் கவுன்ட்டரில்  ரூ.20 கொடுத்துத் திருவல்லிக்கேணிக்கு நான்கு டிக்கட் வாங்கிக்கொண்டோம். நடைமேடையில் பரவிக் கிடந்த புறாக்களின் எச்சங்களை மிதித்தபடி ரயில் பெட்டிக்குச் சென்றோம். 

பெட்டியில் வெங்கடேசன் அண்ணனை எதிர் பாராமல் சந்திக்க நேர்ந்தது. இவர் நாங்கள் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளரின் மகன். கிட்டத்தட்ட 47 வயதிருக்கும். காற்றடித்தால் பறந்து போகும் தேகம், உள்ளொடுங்கிய கன்னங்கள், பெரும்பாலான நேரங்களில் டவுசருடன்தான் இருப்பார். தன் அம்மாவின் மீது மிகுந்த பாசம் உள்ளவர். மயிலாப்பூர் வரை வந்த அவருடன் சிறிது நேரம் உரையாடிய படி சென்றோம். உரையாடிய படி என்று சொல்வதை விட அவர் பேசப் பேசத் தலையாட்டியபடி சென்றோம் எனலாம். ரயில் பெருங்குடியைத் தாண்டும் போது ஷங்கருடன் நடைப்பயிற்குச் சென்ற வழியைக் காட்டினேன். தரமணியை அடைந்ததும் எஞ்சிய ஏரியின் ஓரம் இருந்த பால்ய நண்பன் தினாவின் வீட்டைக் காண்பித்தேன்.

திருவல்லிக்கேணியில் இறங்கி மேற்குப் பக்கமாகத் திரும்பினோம். கிழக்குப் பக்கம் சென்றால் மெரினா கடற்கரை. மையத்தில் எஸ்கலேட்டர் மேலே நகர்ந்தது. அதன் மீது ஏற பிள்ளைகள் ஆசைப்பட்டார்கள். அப்படி ஏறினால் ரயிலைப் பிடித்து மீண்டும் வீட்டுக்குச் செல்ல வேண்டியதுதான் என்றதும் ``அம்மாடியோவ் அப்ப வேண்டாம் சாமி'' என்றனர் கோரஸாக. மேற்கில் உள்ள மாட்டான் குப்பத்தையும் ரயில் நிலையத்தையும் இணைக்கும் கூவம் நதியின் அழுகலைக் கடந்து செல்லும் போது கருவாட்டு வாசம் நாசியைத் துளைத்தது. மனைவிக்கு மூச்சுத் திணறியிருக்கும் போல், வேகமாக நடங்க என்றாள். அவள் எதற்காகச் சொல்கிறாள் என்று உணராமல் இங்கேதான் மக்களும் வசிக்கிறாங்க என்றேன். அவர்கள் வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள் என்றாள், ஆம் எதையும் பழக்கப்படுத்த வேண்டும். பழக்கமில்லாத எதுவும் முதல் சந்திப்பில் மூச்சு முட்ட வைப்பது இயல்புதானே!

06.04.2022
புதன்கிழமை

Tuesday, April 5, 2022

நவீன இலக்கியத்தின் சிந்தனை வறட்சி!?


Texasmonthly


இன்று காலை ஆங்கில இந்து இணையதளத்தில் டி.எம்.கிருஷ்ணாவின் `செபாஸ்டியனின் குடும்பக் கலை', `கர்னாடக இசையின் கதை' இரண்டு நூல்களின் வெளியீட்டு நிகழ்வின் செய்தியைப் பார்த்தேன். மைலாப்பூரில் இந்நிகழ்வு நடைபெற்றதை அறிந்தும் செல்லவில்லை. இப்போதெல்லாம் இலக்கிய நிகழ்வுக்குச் செல்வதென்பதே மிகவும் அயர்ச்சியூட்டுகிறது. இலக்கியக் கூட்டங்களெங்கும் ஏற்கெனவே அழைத்த `அந்த மூன்று பேரை' யே திரும்பத் திரும்ப அழைப்பது சிந்தனை வறட்சி செழித்தோங்கியதையே காட்டுகிறது. ஒருவரும் நூலைப் படிப்பதில்லை; நுனிப்புல் கணக்காய் மேய்ந்தாலும் அதைப் பற்றியும் பேசாமல் ஏற்கெனவே கற்றறிந்த அறிவைக் கொட்டுவதற்குள் துண்டுக் காகிதத்தை நீட்டி விடுகிறார்கள். காகிதம் நம்மைக் காப்பாற்றிவிட்டது என்று நினைக்கத் தோன்றுகிறது. நிகழ்ச்சிக்குச் செல்லாமல் இருப்பதற்கு இன்னொரு முக்கியக் காரணம் ஸ்ருதி டிவி. சுடச் சுடக் கேட்க முடிகிறது. க்ளிக் செய்தால் ஓரிரு நிமிடங்களில் முக்கிய உரையா அல்லது மொக்கை உரையா என்று கண்டு பிடித்து விடலாம். 

டி.எம்.கிருஷ்ணா நேர்காணல், உரை எதுவாக இருந்தாலும் கேள்வியாளரையே கேள்வி கேட்டல், மரபான விசயங்களைக் கட்டுடைத்தல், எதற்கும் அஞ்சாது கருத்துரைக்கும் அவரின் துணிச்சல் இதற்கு எல்லாம் பின்னணியாக இருக்கும் சமுதாயப் பின்புலம் என்று சொல்லும் சுய மதிப்பீடு என நிறையச் சொல்லலாம். எனவே, மேற்கண்ட நிகழ்வு சம்பந்தமான வீடியோ இருக்குமா என்று யுடியூபில் தேடிப் பார்க்க முற்பட்ட போது நக்கீரனின் முகம் தென்பட்டது. இன்று பதிவேற்றப்பட்டது என்பதைக் கண்டதும் மிகவும் ஆவல் எழுந்தது. மிகச் சமீபத்தில் திருப்பத்தூரில் நடைபெற்ற புத்தகக் காட்சியில் உரையாற்றியது. நிகழ்ச்சிக்கு அழைத்த பார்த்திபராஜா `இலக்கியத்தையும் பேச வேண்டும் சூழலியலையும் பேச வேண்டும்' என்று கேட்டுக்கொண்டதாகக் கூறியிருந்தார். இரண்டாண்டுகளுக்கு முன்பு இவர் பேசிய `சூழலியல் சாதியம்' என்னும் உரை மிகப் பெரிய தாக்கத்தை உண்டாக்கியது. 

சங்க இலக்கியத்தில் என்ன மரம், மரத்தின் உயரம், இலையின் வடிவம், பூக்கள் பூத்திருக்கா இல்லையா, என்ன பறவை, எப்படிக் கூவியது இப்படியான விவரணைகள் நிறைந்து இருக்கும். ஆனால், கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு இலக்கியத்தில் `மரத்தில் ஒரு பறவை இருந்தது அல்லது பெயரே தெரியாத பறவை' என்றவாறு இடம் பெற்றிருக்கும். நீண்ட பரம்பரையைச் சேர்ந்த நாம் இவ்வாறான சூழலியல் அறிவுக்குத்தான் நகர்ந்து வந்திருக்கிறோம் என்று தன் உரையைத் தொடங்குகிறார் நக்கீரன்.

இன்றைய ஊடகங்கள் எவ்வாறு மேம்போக்காகச் செய்திகளைக் கட்டமைக்கின்றன என்பதைச் சொல்லும் நக்கீரன் அதனூடாகப் பறவைகள் வலசை செல்வது வடக்கிருந்தும் தெற்கும் தெற்கிலிருந்தும் வடக்குமாக என்கிற தர்க்கப் பூர்வமான ஒன்றைப் பகிர்கிறார். இத்தனை சாட்டிலைட் வைத்திருக்கும் ஊடகங்களுக்குத் தெரியாத இந்த அறிவியல் பசியோடும் பட்டினியோடும் கிடந்த சங்கப் புலவனுக்குத் தெரிந்திருக்கிறது என்றார். நக்கீரனின் மேற்கோள்கள், முன்வைக்கும் தரவுகள், உண்டாக்கும் சொற்கள் எல்லாம் தர்க்கப்பூர்வமானவை. இவற்றில் சூழலியலும் அறிவியலும் இரண்டரக் கலந்திருக்கும்.  

15 கோடி ஆண்டுகள் வாழ்ந்த டைனோசர் இன்று தொல் எச்சங்களாக எஞ்சிக் கிடக்கின்றன. சில லட்சம் ஆண்டுகளாக வாழ்ந்துகொண்டிருக்கும் மனித இனம் என்னவாகும்? நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சக்கர நாற்காலியில் அமர்ந்த படி சிந்தித்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் ``இன்னும் நூறு ஆண்டுகளில் இந்தப் பூமி வாழத் தகுதியற்றதாக'' மாறிவிடும் என்கிறார். இதைத்தான் தொல்குடி தாயான ரேச்சல் கார்சனும் சொல்கிறார். இருவரும் இயற்கையைப் புரிந்து வைத்திருக்கிறார்கள். ``நாம்தான் வெல்வோம்'' என்கிற மனிதமையத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம் என்கிறார் நக்கீரன். ஆம் சூழலியலைப் புரிந்துகொள்வதற்கு முன் சக மனிதரைப் புரிந்துகொள்வோம். சக மனிதரைப் புரிந்து நடக்கும் போது பிரபஞ்சத்தின் பிடிபடாத அத்தனையும் புலப்படும். காதல், காமம், தனிமை, குடும்பம், பால்யம் இப்படியான தருணங்கள்தான் பெரும்பாலும் இலக்கியமாகப் படைக்கப்படுகின்றன. இவற்றிலிருந்து துண்டிக்கப்பட்ட அரிதான குரல் நக்கீரனுடையது. தனித்துச் செல்லும் அவரின் தடத்தை எண்ணற்ற கால்கள் இனிப் பின்பற்றும். 

05.04.2022
செவ்வாய்க்கிழமை

Monday, April 4, 2022

எனக்கே என்னை அருவருப்பூட்டுகிறது


நேற்று மாலை ஏதாவது எழுதலாம் என்று அலுவலகம் வந்திருந்தேன். எண்ணற்ற விசயங்கள் இருந்தாலும் மனம் ஒரு முகப்படவில்லை. மாத இறுதியைக் கடக்க நண்பர்களின் ஏடிஎம் இல் கைவைக்கும் சூழல் ஒருவிதக் குற்றவுணர்வுக்குத் தள்ளி விடுகிறது. ஒரு வழியில் ஒவ்வொரு மாதமும் உதவி கிடைத்தாலும் அதற்காக நான் மேற்கொள்ளும் பிரயத்தனங்கள் என்மேல் எனக்கே அருவருப்பூட்டுகிறது. அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது அல்லவா. பிறருக்கு உதவ நினைக்கும் மனம் தொடர்ந்து உதவியை நாடியபடியே இருப்பது கசப்பான வரலாறுதானே. அனைவருக்கும் கடனைத் திருப்பித் தரும் நாள்தான் சுயமரியாதையோடு வாழ இயலும் என்று நினைக்கிறேன். முக்கியமாக அம்மாவுக்குச் செலவுக்குப் பணம் அனுப்ப வேண்டும். தள்ளாத வயதில் ஆடுமேய்த்து அவளும் அவ்வப்போது என் மாதக் கடைசியைத் தாங்குகிறார்.

நான்கு நாள்களுக்கு முன்பு அம்மா அழைத்திருந்தார். இந்த மாதம் பணம் அனுப்புகிறேன் என்று சொன்னதும் அட நீ வேற, பிள்ளைகளைப் பார்த்துக்கொள் என்றார். சரி, சம்பளம் வாங்கியதும் உன்னைப் பார்க்க வருகிறேன், பார்த்து ரொம்ப நாளாச்சே என்றேன். சரி சரி கண்ணுக்குள்ளயே இருக்கிற, ஒரு எட்டு வந்து பார்த்துட்டுதான் போ சாமி என்றார். இந்த வாரம் அம்மாவைப் பார்க்கப் போக வேண்டும். போகும் போது அம்மாவுக்குப் பிடித்த பொறி, பேரீச்சை, ஆரஞ்சு வாங்கிச் செல்ல வேண்டும். எம் பிள்ளை வந்தாதான் எனக்குக் கறிச் சோறு என்பார். அந்த வார்த்தைகளைக் கேட்கவாவது கண்டிப்பாக ஊருக்கு டிரெயின் ஏறணும். இப்பதான் முன்பதிவற்ற ரயில் பெட்டிகள் மீண்டும் விட்டாச்சே. ஐ ஜாலி ....


 04.04.2022
திங்கட்கிழமை

Saturday, April 2, 2022

உன் ஸ்டோரி சொல்கிறது `பச்சோந்தி, you need a hug'

 

என் ஞாபகம் உனக்கு இன்னும் இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால், உன் நினைவுகள் சதா என்னை எரிக்கின்றன. யாருக்கோ நீ இடும் லைக்ஸ்களை விட ஹார்ட்டின்களையே அதிகம் எண்ணுகிறேன். கமென்ட்களில் நீ இடும் வார்த்தைகளில் சற்று நேரம் தேங்கி நின்றுவிடுகிறேன். வாசமற்ற பூங்கொத்துகளில் உன் வாசம் மட்டும் தீர்வதேயில்லை. க்ளிக் செய்தால் பூக்கும் அம்மலர்களின் இதழ்களில் ஒன்றைப் பறிக்க முடியவில்லை. செவ்விதழ்களின் வரிகளில் மஞ்சளாறு பாய்கிறது. இந்த வர்ணனை உனக்கு ரொம்பப் பிடிக்கும் என்று நினைக்கிறேன். நெற்றிப் பொட்டில் கடலைச் சூடியவள். நகங்களில் வானவில்லை உடுத்தியவள். ஃபேஸ்புக்கில் மரபின் மழலை நீ, வாட்ஸ் அப்பில் நவீனக் குமரி நீ, ஐய்யோ எனக்கென்ன பைத்தியம் முற்றிவிட்டதோ, வழக்கத்துக்கு மாறாக உளறுகிறேன்.

மிக நீண்ட நாள் கழித்து உன் ஸ்டோரியைப் பார்த்தேன். அது இவ்வாறு சொல்கிறது `பச்சோந்தி, you need a hug. 

02.04.2022
சனிக்கிழமை
  

Friday, April 1, 2022

வெண்தாடிக்குள் ஸ்மைல் செய்யும் நரேந்திர மோடி


நீடித்த நட்பு எவ்வளவு அசாத்தியமானதோ அதேபோல்தான் ஷங்கரிடமிருந்து கருத்தை அறிந்துகொள்வதும். அவ்வளவு எளிதாக எதற்கும் உடனடியாக எதிர்வினையாற்ற மாட்டார். முதலில் மனிதர்களைப் படிப்பார் ; அவர்களின் பண்பு நலன்களை, நடத்தையை, பழகும் விதத்தை, அவர்களின் கருத்தியலை இப்படியான படிநிலைகளில் தேறியவர்களிடம்தான் நட்பு பாராட்டுவார். இது அவரின் பலம் மட்டுமல்ல ; அவரே அறிந்த பலவீனமும்கூட. எனக்கும் அவருக்குமான நட்பு சண்டையில்தான் ஆரம்பித்தது. அவரிடமிருக்கும் அறம், கசடுகளைச் சற்றென்று களைந்தெடுத்துவிட்டு பேரன்பைப் பொழிய ஆரம்பிக்கும். அந்த அறம்தான் எங்களின் உறவைக் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறது. 

கருணா பிரசாத் கட்டுரை குறித்துத் தன் கருத்தைப் பகிர்ந்துகொள்வதற்காக  நேற்று மாலை ஷங்கர் அழைத்திருந்தார். உடல் நிலை சரியில்லாமல் இன்று வீட்டில்தான் இருந்தேன் என்று அவர் சொன்னதும் மாலை உங்களைப் பார்க்க வருகிறேன் என்றேன். கட்டுரையைப் படித்தேன், சிவாஜி படம் பார்த்தது போல் கடுமையான உருக்கம். மொழி என்பது காதலியைப் போல், வேற வேற இடங்களைப் பரிச்சயப்படுத்த வேண்டும். மொழியைத் தவிர பகிர நம்மிடம் என்ன உண்டு என்றார்.

இலக்கியம், சினிமா, ஆவணப்படம், மருத்துவம், அறிவியல் எனப் பல்துறையில் அவ்வப்போது நிகழும் மாற்றங்களை, வளர்ச்சியைப் பற்றி ஒவ்வொரு சந்திப்பின் போதும் ஷங்கர் பேசுவார். அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் பார்த்து வரலாம் என்று புறப்பட்டேன். வருகிறேன் என்றதும் ரயிலில் வந்தால் சீக்கிரம் வந்திடலாம் என்று ஆலோசனை கூறியிருந்தார். இங்கிருந்து புறப்படும் போதே இருட்டத் தொடங்கிவிட்டது. தினமும் பேருந்துப் பயணம் என்பதால் 1,000 ரூபாய் பஸ் பாஸ் வைத்திருப்பேன். கையில் காசு இருக்கிறதா, இல்லையா என்று யோசிப்பதில்லை. பையில் தடவிப் பார்த்தேன் சட்டைப் பையில் 6 ரூபாய் இருந்தது. திருவல்லிக்கேணியில் இருந்து வேளச்சேரி செல்ல டிக்கெட் விலை 5 ரூபாய்தான். என்னிடமிருந்த 6 ரூபாய் மிகவும் நம்பிக்கை கொடுத்தது.
 
வாலாஜா சாலையின் நடுவில் உள்ள புல்வெளியின் கம்பிகளைத் தாண்டும் போதே 2A பேருந்து வந்து நின்றது. விரைந்த வாகனங்களின் வெளிச்சத்திற்கு வழிவிட்டு ஒருவழியாகப் பேருந்தில் ஏறிவிட்டேன். ஒயிட் போர்டு என்பதால் பேருந்தும் இருட்டித்தான் இருந்தது. கண்ணகி சிலையில் இறங்கிச் செல்லலாம் என்றிருந்த மனம் கோஸா மருத்துவமனையில் இறங்கியது. பழைய புத்தகக் கடைகள் தெருவிளக்கில் ஒளிர்ந்தன. மாட்டான் குப்பம் வழியாக திருவல்லிக்கேணி ரயில் நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தேன். கருவாடு வாசனை கமகமத்தது. பஜ்ஜி சுடுவதை, பூக்கட்டுவதை வேடிக்கை பார்த்தபடியே சென்றேன். சுவரில் மஞ்சள் நிறத்தின் மீது கறுப்பில் PCO என்று எழுதியிருந்தது. அம்மூன்றெழுத்து எதை எதையோ நினைவுப்படுத்தின. மாட்டுத் தொழுவத்தைச் சுவாசித்து ரயில் நிலையப் படிக்கட்டுகளில் ஏறினேன். 

டிக்கெட் கவுன்டரில் எனக்கு முன்பு 2 பேர்தான் நின்றிருந்தனர். சீக்கிரம் டிக்கெட் வாங்கிக்கொண்டு `கண்ணில் ரெண்டு நூறு வெண்ணிலாக்கள் தோன்றும் ஆனாலும் அனல் பாயும்' பாடலைப் பாடிய படி நடைமேடைக்குச் சென்றேன். ரயில் நிலையக் கூரை நீலம், பச்சை, மஞ்சள் நிறங்களால் வண்ணமயமாய் இருந்தது. `வேளச்சேரி மார்க்கம்' என்ற எழுத்துகளின் மீது மின் விசிறி சுழன்றது. சற்று நேரத்தில் தண்டவாளத்தில் இரண்டு முழு நிலவுகள் ஒளிர்ந்த படி நகர்ந்து வந்தன. நான் ஒளியின் மீது சவாரி செய்தேன். `RAILWAY HELPLINE NUMBER 139', `புகைப்பிடிக்கக் கூடாது' எனக் கரும்பலகையில் பொறிக்கப்பட்டிருந்தன. `எண்ணத்தில் சிவனை வைத்தால் எடுத்த காரியம் வெற்றியாகும்' என்னும் ஸ்டிக்கர் மேற்புரம் ஒட்டப்பட்டிருந்தது. `VACCINES FOR ALL FREE FOR ALL' என்கிற ஸ்டிக்கரில் நீண்ட வெண்தாடிக்குள் ஸ்மைல் செய்தார் நரேந்திர மோடி. அதன் கீழ் `மாந்திரீகப் பாதிப்பு குணமாக்கப்படும்' விளம்பரம் பாதி கிழிந்திருந்தது. அடர் வெளிச்சத்திலிருந்து இரு நிலவுகள் இருட்டை நோக்கிப் பாய்ந்தன. தூரத்துக் கண்ணாடி மாளிகையைக் கடந்து பறந்தது ரயிலின் நிழல். 

முண்டகக் கண்ணியம்மன் நிறுத்தத்திலிருந்து புறப்பட்ட ரயில் பாம்பைப் போல் வளைந்து நெளிந்தது. இறங்குமிடத்தில் நின்றிருந்தேன், என் எதிரில் பதின்பருவ ஜோடிகள் ஒருவரை ஒருவர் அணைத்த படி நின்றிருந்தனர். இருவருக்கும் வயிறு இல்லாதது போல் இருந்தது. மிகவும் ஒல்லியான உருவங்கள். வருடுதலும் உரசுதலும் இணை பிரியாமல் ஒட்டி உலாவினர். அருகே வட நாட்டைச் சேர்ந்தவர்களைப் போல் இரு பெண்மணிகள்  குழந்தைகளுடன் கீழே அமர்ந்திருந்தனர். ஓடும் ரயிலின் ஓரத்தில் தள்ளாடி நடந்தது ஓர் குழந்தை. எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவர்களில் ஒரு பெண் இந்த மாதச் சம்பளம் 8,836 ரூபாய் போட்டுவிட்டார்கள் என்றார். கையில் இருந்த பச்சை, சிவப்புப் பீப்பி தாய், பிள்ளையை மாறி மாறி ஊதியது. இன்னோர் பெண்ணின் ஓரக் கண்கள் ஒல்லி ஜோடிகளைப் பார்த்து வெடுக்கெனப் பிடுங்கிக்கொண்டன. கறுப்பு நிறக் கண்ணாடி தவறி விழுந்தது தெரியாமல் கொஞ்சல் தொடர்ந்தது. 

சமோசா வடிவில் எஞ்சியிருந்த பெருங்குடி ஏரியைக் கடந்து நிறுத்தத்தில் இறங்கினேன். Back to nature save future என்னும் சொற்கள் பொறித்த ஓவிய மரத்தில் ஒளிரும் கட்டடங்களும் விரையும் வாகனங்களும் படுக்கை அறைகளும் இவற்றைச் சுற்றிப் பச்சை இல்லைகளுமாய் இருந்தன. அதன் வேர் இரண்டு கோடரிகளின் ஓங்குதலில் சாய்ந்துகொண்டே இருந்தது. 

பெருங்குடி ரயில் நிலையத்தின் வெளியே சற்று தூரம் சென்றதும் மஞ்சள் வெளிச்சம் அணைந்தது. வாகனங்களின் வெளிச்சத்தில் இருட்டு வடிவில் மனிதர்கள் நடமாடினர். அவ்வடர் இருட்டில் ஓர் பெண் செல்போன் வெளிச்சத்தில் தன்னை மூழ்கடித்தபடி நடந்து செல்கிறாள். நான் மீண்டும் பாடத் தொடங்கினேன் `கண்ணில் ரெண்டு நூறு வெண்ணிலாக்கள் தோன்றும் ஆனாலும் அனல் பாயும்'.

01.04.2022
வெள்ளிக்கிழமை

 

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...