Tuesday, March 29, 2022

அது ஒரு மட்டைப்பந்துக் காலம்

Photo Credit : pixels.com

நேற்று காலை சுமார் 6 மணியளவில் 51A பேருந்தில் ஏறி நடைப்பயிற்சிக்குச் சென்றேன். விஜய நகர் ரயில் நிலையத்திற்கும் தெற்கில் இருந்த மைதானத்தின் கருவேல மரங்கள் முழுவதும் வெட்டப்பட்டிருந்தன. டிக்கெட் போட பாலத்தின் நடுவில் பேருந்து நின்றது. அங்கே இறங்கி காலியான மைதானத்தை நிழற்படம் எடுக்க வேண்டும் போல் இருந்தது. நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிய நினைவுகள். அருகருகே ஸ்டெம்ப் நடப்பட்டு எங்கே யாரோ ஒருவன் பந்தையடிக்க வீசும் மட்டை மண்டையில் ஏதும் பட்டுவிடுமோ என்று தோன்றும். எல்லாம் பச்சை நிற டென்னிஸ் பந்துதான். மிகக் கூர்மையாகப் பார்த்தால்தான் நம்ம அணி அடிக்கும் பந்து தெரியும். இல்லையேல் பந்துடன் பந்து கலந்துவிடும். மழைக்காலத்தில் சிறு சிறு குட்டைகளுக்கிடையிலும் வெய்யில் காலத்தில் தகிக்கும் கானலுக்கிடையிலும் பந்துகள் பறந்தவண்ணம் இருக்கும். அது ஒரு மட்டைப்பந்துக் காலம். 

பாலத்தைக் கடந்து செல்லும் போதே இன்னும் திறக்கப்படாத சூழலியல் பூங்காவைக் கண்டேன். பாலாஜி காலனியில் இறங்கி, அங்கிருந்தே ஓட்டத்தைத் தொடங்கி, கைவேலி நிறுத்தம் வரை சென்று மீண்டும் பூங்காவை நோக்கி ஓடினேன். பூங்காவின் முன்னே இரு சக்கர வாகனங்கள் மட்டுமே நின்றுகொண்டிருந்தன. பூட்டிய பூங்காவைத் திரும்பத் திரும்பக் கண்டதில் சற்று சோர்வு தட்டியது. மீண்டும் கைவேலி வரை ஓடிவந்து மூச்சிரைக்கப் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன். வெகு நேரமாய்ப் பேருந்து வரவில்லை. எனக்கும் தெற்கில் நின்றுகொண்டிருந்த பெண் பின்னால் சென்று சற்று தொலைவில் ஓரங்கட்டப்பட்ட வாகனத்தில் ஏறிச் சென்றாள். அவளுக்கும் அருகில் இருந்த அம்மை அதிர்ச்சியுடன் வண்டி செல்லும் திசையைப் பார்த்துக்கொண்டிருந்தாள். வடக்கில் நின்ற முதியவர், அப்போதுதான் நண்பனை இறக்கிவிட வந்த வண்டியை நோக்கி ``இன்று போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம். வண்டி வருவது சிரமம், நான் முக்கால் மணி நேரமாய்க் காத்துக்கொண்டிருக்கிறேன்'' என்றதும், ``வண்டியில் ஏறு கிண்டியிலேயே விட்டு விடுகிறேன்'' என நண்பனை மீண்டும் ஏற்றிக்கொண்டார். 

அங்கிருந்து வீட்டுக்கு நடந்துசென்று விடலாம் என்று மெதுவாய் ஓட ஆரம்பித்தேன். மேம்பாலத்தின் அருகே சென்றதும் மேலே ஓடுவதா அல்லது பாலத்தின் கீழே ஓடுவதா என்கிற குழப்பம். பாலத்தின் ஓரமாய்க் கீழே ஓடினேன். பாலத்தின் அடியில் சேலைச் சுவர்களில் எண்ணற்ற குடும்பங்கள் வசித்து வந்தன. இன்னும் திறக்கப்படாத சுவரின் உள்ளே மனிதர்கள் உறங்குவது நன்கு தெரிந்தது. அவர்கள் உறங்கும் இடம்தான் பாலம் அமைப்பதற்கு முன்னிருந்த சாலை. அச்சாலையில் பதின்ம வயதில் நான் நடந்து சென்றிருக்கிறேன். எண்ணற்ற பறவைகளின் சிறகசைப்புகளை, கண்ணுக்கெட்டும் தூரம் வரை ததும்பும் நீரலைகளைக் கண்டிருக்கிறேன். அச்சதுப்பு நிலத்தில் இப்போது தண்டவாளம், மேம்பாலம், அதன் அடியில் குடும்பங்கள், நினைத்துப் பார்க்கவே அதுவோர் பூர்வப் பிறவியின் அழிக்க முடியாக் காட்சிகள் என்பது போல் தோன்றியது. வேளச்சேரி செல்ல அங்கு பாதை இணைக்கப்படவில்லை. பின்பு ரயில் நிலையத்தின் நடைமேடைகளையும் தண்டவாளங்களையும் கடந்துதான் மெயின் சாலையைப் பிடித்தேன். 

ரயில் நிலையப் பேருந்து நிறுத்தத்தைத் தாண்டிச் செல்கையில் ஓர் காட்சி கால்களின் ஓட்டத்தை நிறுத்தியது. சாலையோரம் போடப்பட்ட அஸ்திவாரத்தின் மீது நீண்டிருந்த கம்பிகளின் பின்னே 100 மீட்டர் இடைவெளியில் பள்ளமான காலி நிலம். இரு புறமும் வானுயர்ந்த கட்டடங்களுக்கிடையில் ஒற்றைக் குடிசை. எனக்கு அண்ணாமலை திரைப்படத்தில் இடம்பெறும் பால்காரனின் குடிலை நினைவூட்டியது. சாலையின் மட்டத்திற்குக் குறைவான நிலத்தின் உயரம்தான் வேளச்சேரி என்னும் கிராமத்தின் உயமாய் இருந்திருக்கும். நான் பார்க்க வேளச்சேரி 100 அடி சாலையின் மேற்குப் பக்கமிருக்கும் நிலமெல்லாம் இதன் உயரத்தில்தான் இருந்தது. 90 களின் பிற்பகுதியில் கணக்கற்ற மைதானங்கள் இருக்கும். அம்மைதானங்கள், அப்போது தங்கியிருந்த குடிசை, நண்பர்கள் எல்லாம் கணத்தில் தோன்றி மறைந்தன. மழையடித்தால் செம்மண் சாலையில் பார்த்துப் பார்த்துதான் கால் வைக்க வேண்டும், இல்லையேல் குண்டி மட்டுமல்ல;  மண்டையும் பழுத்துப் போய்விடும். ஒரு போராட்டம் எத்தனை நினைவுகளை மீட்டிவிட்டது. நினைவுகள் எல்லாம் போராட்டம் ; போராட்டமெல்லாம் நினைவுகள்!

29.03.2022
செவ்வாய்க்கிழமை
 

No comments:

Post a Comment

  பேச்சுக்குரலில் நவீனப் பட்டினப்பாலை   `கபால நகரம்’ பச்சோந்தியின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பென்று நினைக்கிறேன். அவருடைய முதல் தொகுப்பு, ‘வே...