Wednesday, March 31, 2021

ஓர் விடுமுறைக்காகக் காத்திருப்போம் மகளே!






உன்னை முதன்முதலாய்ப் பிரிந்தது, நீ உன் அம்மாவின் வயிற்றில் ஏழுமாதமாய் இருந்தபோதுதான். 

இப்போது உனக்கு ஐந்து வயதாகப் போகிறது. இன்னும் பிரிந்துதான் இருக்கிறோம். நீ உன் அம்மாவோடு சென்னை வந்துபோன இரண்டுமூன்று முறைகளில், இரண்டு மூன்று மாதங்களே என்னோடு இருந்தாய். ஒருமுறை உன் அம்மா மறுமுறை கர்ப்பம்தரிக்கையில் சென்றாய், இரண்டாவது வளைகாப்புக்காக, மூன்றாவதுமுறைதான் உன்னைக் கட்டாயப்படுத்தி அனுப்பினேன். உன்னை மட்டுமா, உன் அம்மாவையும் அம்மாச்சியையும்தான். 

கடந்த இருபது வருடங்களில் எத்தனையோ இடர்களைச் சந்தித்ததுண்டு. ஆனால் அப்போதெல்லாம் உன்னப்பன், சரி ஊருக்குப் போயிடலாம் என்று நினைச்சதே இல்லை. ஏனோ உன்னை மூன்றாவது முறை அனுப்பிய அந்நொடி பாதி இறந்துதான் போனேன். ஆமாம் வாடகை தரமுடியவில்லை, கெரசின் வாங்க காசில்லை, ஏன் பால் வாங்கக்கூட இயலாத சூழ்நிலை. இதை அறிந்த உன் அம்மா ``கொஞ்ச நாள் ஊர்ல  போய் இருக்கேன் மாமா'' என்றாள். அப்போது வேணாம் என்றேன். பிறகு நானே ஒருநாள், ``கொஞ்சநாள் ஊர்ல போய் இருக்கியா" என்றேன். இம்முறை உன் அம்மா போகமாட்டேன் என்றாள். எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் உங்ககூடவே இருக்கிறேன் என்றாள். 

 வேலை நிமித்தமாக வெளியூரில் தங்கியிருந்தேன். அப்போது வந்த வர்தா புயலில் வீட்டுக்காரங்க கெரசின் பணம் கேட்கையில் உன் அம்மா வீட்டுக்காரங்களுக்கே தெரியாமல் உன் அம்மாவோடும் அம்மாச்சியோடும் ஊருக்குச் சென்றாய். ஆறேழு மாதங்கள் கடந்தன. பாதி இறந்த அப்பன் இப்போது உயிர்ப்பாய் இருக்கிறேன். ஆனாலும் உன் பிரிவு என்னை நிலைகுலையவைக்கிறது. 

பள்ளியில் சேர்க்கும்போதாவது உன்னருகில் வாழலாம் என்ற என் நினைப்பில் காலம் கல்லெறிந்துவிட்டது. எல்.கே.ஜி படிப்பும் ஊரிலேயே என்றாகிவிட்டது. இதுவரை அப்பனின் விடுமுறைக்காகக் காத்திருந்தாய்; இனி உன் விடுமுறைக்காகக் காத்திருப்பேன் மகளே!


ஜூன் 9, 2017. 

Tuesday, March 30, 2021

கரியப்பிச்சி

வளைந்த வலது காலால் தரைதேய்ந்தபடி நடக்கும் கரியப்பிச்சி இரண்டு சினை ஆடுகளை மேய்ச்சல் நிலத்துக்கு ஓட்டிச்சென்றார். இரண்டும் வெவ்வேறு நிறம். கறுப்பு ஒன்று; செவலை ஒன்று. 

கறுப்பின் கால்தடங்களைப் பின்தொடர்ந்தே செவலை செல்லும். சிறிது நேரம் பிரிந்திருக்காது. ஆதலால், செவலையோ கழுத்துக் கயிறோடு பின் அலையும். செவலையின் கயிற்றைக் கறுப்பாட்டுக் கயிற்றோடு இணைத்துக் கிளுவை முள்ளின் தண்டில் கட்டிவைப்பார் கரியப்பிச்சி. கோரப்புற்களையும் அறுகம்புற்களையும் மேய்ந்து பின் கிளுவை முள்ளின் முக்கூட்டு இலைகளையே தின்னத்தொடங்கும். சற்று உயரமான இலைகளை முன்னங்கால்களால் கவ்வியபடியே சாய்ந்து சாய்ந்து தின்றுகொண்டிருக்கையில் மூக்கில் முள்தைக்க வலியில் அண்ணாந்து வானை வெறித்தது. 

நடக்கவே சிரமப்படும் கரியப்பிச்சி கட்டிப்போட்டுதான் மேய்ப்பார். வழிதவறி வெள்ளாமைக்காட்டில் மேய்ந்தால் ஓடிச்சென்றோ வேகமாய் நடந்தோ அவரால் விரட்ட முடியாது. வளைந்த ஒற்றைக்காலை எளிதில் தூக்கவோ மடக்கவோ முடியாது. பல ஆண்டுகளாகவே நின்றபடியேதான் வெளிக்குப் போவார். அப்படிப் போகும் போது அவரின் முக்கலும் முனகலும் அருகில் இருப்போரைக்கூடக் கலங்கடிக்கச் செய்யும். வயிற்றுப் போக்குப் போகும் தருணங்களில் காலை அகன்று விரிக்கமுடியாது. இதனால், தொடை வழியே வழிந்தொழுகும் நாற்றத்தைத் தாங்கமுடியாமல் கண்களிலிருந்து வழியும் கண்ணீர் கன்னத்தில் படாமல் தரையை நனைக்கும். 

திண்ணையில் கால்களைத் தொங்கப்போட்டுக்கொண்டுதான் சோறு தின்பார். சாப்பாடு, தண்ணீர் எல்லாம் அவர் அமர்ந்திருக்கும் இடத்திற்கே வரும். ஒருநாளும் அவராக தண்ணீர் மொண்டோ சோறு போட்டோ சாப்பிடமாட்டார். ஆனால், தன் சாப்பாட்டை தான் மட்டும் தின்னாமல் வாசலில் வெப்பச்சூட்டைக் கொத்திக்கொண்டிருக்கும் கோழிகளுக்கு எறிவார். அப்பருக்கைகளைப் பங்குபோட வரும் காக்கைகளைக் கொத்தப் பறக்கும் கோழிகள். அக்கொத்தலில் இருந்து தப்பி வீட்டின் மீது அமரும் காக்கைகளுக்கு ஓடுகளின் மீது சோற்றைக் குவித்துவைப்பார். 

நண்பகல் வெயிலின் கள்ளியோரமாக ஆடுகள் கால் நொண்டியபடி கொட்டத்துக்குத் திரும்பிக்கொண்டிருந்தன. ஆடுகளைப் பின்தொடர்ந்துவரும் கரியப்பிச்சி தண்ணீர் இல்லாமல் மேயக்கூட மாட்டிக்கிறது என்று சலிப்பும் வெறுப்பும் கலந்த குரலில் சொன்னார். அந்தச் சலிப்பு மேயாத ஆடுகளின்மீதும் வெறுப்பு மேயும் ஆடுகளுக்குத் தண்ணீர்கொண்டுவரக்கூடாதா என்றபடி குடும்பத்தின்மீதும் வந்தவை. இதை உணர்ந்துகொண்ட கரியப்பிச்சி மகன் `சரி வாங்க தண்ணீர் வைப்போம்' என்றபடி ஆடுகளைப் பிடித்துக் கொட்டத்தில் கட்டினான். பின் சார்ஜர் ஏறிக்கொண்டிருந்த செல்போனை எடுக்கச் சென்றான். 

திண்ணையில் அமர்ந்திருந்த கரியப்பிச்சி ஆட்டுக்குத் தண்ணீர் வைங்கம்மா என்று சற்று அதட்டலுடன் சொன்னார். மீண்டும் `கொஞ்சம் பொறுமையாக இருப்பா வைக்கிறேன்' என்று அவரின் மகன் சொன்னான். தன் பேரனுக்குச் சோறு ஊட்டிக்கொண்டிருந்தாள் அவரின் மகள். பேத்தி அதே திண்ணையில் தூரி ஆடிக்கொண்டிருந்தாள். தூரியாடியவள் கரியப்பிச்சியின்மேல் மோதிவிட்டாள். அவர் கடும் ஆத்திரத்துடன் நாக்கைத் துறுத்திக்கொண்டு கண்ணுமுழியை உருட்டிக்கொண்டும் முழங்கையால் ஓங்கினார். இவ்வளவு கோபத்தை தன் அப்பா இதுவரை தன்னிடம் மட்டுமல்ல யாரிடமும் காட்டியதில்லையே என்று எண்ணினான். 

அப்பாவின் கோபத்தை நினைக்கையில் மகனுக்கும் கோபம் வந்தது. ஆனால், அதைத் தன் அப்பாவிடம் வெளிக்காட்டாமல் தன் மகளின் மீது காட்டினான். தொட்டிலைவிட்டு இறங்கு என்று சொல்லி அவளை அடித்தான். அதோடு விட்டுவிடாமல் தொட்டிலில் இருந்து இறக்கி வீட்டுக்குள் போகும்படி முதுகில் ஒரு குத்துக் குத்தி திறந்திருக்கும் ஒற்றைக் கதவின் வழியாக உள்ளே தள்ளினான். மகள் கதறி அழுதாள். பின் இரண்டு புத்தகங்களை எடுத்துக்கொண்டு கள்ளிநிழலோரம் நடந்துசென்றான். செல்லும்முன் தன் அப்பாவைப் பார்த்தான். திண்ணையில் ஒடுங்கிப்போய் அமர்ந்திருந்தார். அந்த ஒடுங்கல் அவரைத் தாக்கியதாகத் தோன்றவைத்தது. ஏதோ தவறிழைத்தவனாய்க் கள்ளிநிழலிலிருந்து திரும்பிவந்து கட்டிய ஆடுகளை அவிழ்த்துக்கொண்டு அடித்த மகளிடம் வா காட்டுக்கு ஆடுமேய்க்கப்போவோம் என்று அழைத்துச் சென்றான். 

முச்சந்தி வரை வேகமாக நடந்த ஆடுகள் அதைத்தாண்டி நடக்காமல் நின்றன. கயிற்றால் இழுக்கையில் எட்டுக்கால்களும் தரையைத் தேய்த்துக்கொண்டே நகர்ந்தன. இதற்கு முன் ஆடுமேய்த்தது எப்போது என்று யோசித்தான். சிறுவயதில் ஆடுமேய்த்தது. ஏன் இத்தனை ஆண்டுகளில் ஒருநாள் கூட ஆடுகளை மேய்க்கவில்லை. சென்னையில் வேலைவாய்ப்பால் சனி ஞாயிறுகளில்தான் ஊருக்கு வருவான். காலையில் வந்து மாலையில் வீடுதிரும்பிய நாள்கள்தான் அதிகம். அப்படி வரும் பொழுதுகளில் ஊரிலிருந்து வந்த களைப்பால் பாதிநாள் தூங்கிவிடுவான். தூங்கியெழுந்ததும் குளித்துவிட்டு நண்பர்களைப் பார்க்க சீக்கிரமாகவே திண்டுக்கல் கிளம்பிடுவான். ஒரு முழுநாள் ஊரில் இருந்ததுகூட கிடையாது. இப்போது ஊரடங்கு காலம் என்பதால் ஒரு மாதத்துக்கும் மேலாக ஊரில் இருக்கிறான். ஆடுமேய்க்கும் அப்பாவுக்குச் சோறுதண்ணீர் கொண்டுபோவதோடு சரி. இப்போது ஆடுகள் வரமறுப்பது ஒருவகையில் அப்பாவிடம் தான் தோல்வியுற்றதைப் போல் உணர்ந்தான். ஆனால், ஏதோ ஓர் உணர்வு எழுந்து இல்லை இதில் தோற்றுவிடக்கூடாது என்று சிறிது தூரம் இழுத்தபடியே ஆட்டை ஓட்டினான். பிறகு தானாகவே நடக்க ஆரம்பித்தன. 

உலோக மரம் நிறைந்த காட்டில் வேலியோரமாகக் கட்டிவைத்தான். ஆடுகள் மேயாமல் கத்தின. இது மேலும் அப்பாவிடம் தோலியுற்றதை உறுதிப்படுத்தின. பயந்து, இல்லை நாம் இதில் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்று யோசித்தான். பின், கையில் இருந்த புத்தகங்களை மகளிடம் கொடுத்துவிட்டு அருகில் இருந்த உலோக மரத்தை நோக்கி நடந்தான். அது சமீபத்தில் பெய்த மழைக்குச் செழித்து வளர்ந்திருந்தது. நின்றபடி எக்கும் கிளைகளை ஒடித்துவந்து போட்டான். பாதி மட்டுமே தின்றது. பின் புளியமரத்தில் பூக்களற்ற குறுங்கிளைகளை ஒடித்துவந்து ஆடுகளுக்குத் தின்னக்கொடுத்தான். கொத்தாக மிச்சமின்றித் தின்றன. சரி இன்று ஆடுகளை மேய்த்துவிடுவோம் என்ற நம்பிக்கை பிறந்தது. அப்போது அங்குவந்த அக்கா ஆட்டை அவிழ்த்தாள். ஏன் என்று கேட்கையில் `முட்கிளைக்குள் ஆடு சிக்கிக்கொள்ளும் பிடித்து வேறு இடத்தில் கட்டுவோம்' என்றாள். 

 `அப்பா என்ன செய்கிறார்' என்றதும் சாப்பிட்டுக்கொண்டு இருப்பதாகச் சொன்னாள். 
அப்போதுதான் சற்று நிம்மதியாக இருந்தது. 

 `தூரி ஆடும்போது அவர் எலும்பில் பட்டுவிட்டதுபோல' என்றான். 

 `ஆமாம் உடம்பெல்லாம் எலும்புதானே இருக்கு பாவம் வலித்திருக்கும்' என்றாள். 

 `சரி பாப்பாவைக்கூட்டிக்கொண்டு வீட்டுக்குப் போ' என்றான். 

எப்போதும் நான் தானே கோபப்படுவேன் தம்பி ஏன் இப்படிக் கோபத்தை வெளிப்படுத்தினான் என்று அக்கா நினைத்திருப்பாள். தான் பேசவேண்டியதை தம்பி பேசிவிட்டான் என்று ஒருவகையில் அக்கா மகிழ்ச்சியடைந்திருப்பாள். எப்போதும் அன்பும் அக்கறையும்கொண்ட தம்பி இப்படி கோபப்பட்டுவிட்டானே என்று மறுபுறம் வேதனையும் அடைந்திருப்பாள். 

ஆடுகளை அவிழ்த்துவிட்டான். கறுப்பாடு மேயாமல் ஓடியது. அதன் பின்னே செவலையும் ஓட வீட்டுக்கு ஓடிவிடுமோ என்கிற அச்சத்தில் மீண்டும் கட்டிவைத்தான். ஆடுகட்டிய கிளுவை முள்ளின் உச்சியில் கோவாக்கொடி படர்ந்திருந்தது. ஆனால் எட்டும் தூரத்தில் இல்லை. அதன் கீழ்க்கிளையை வளைத்துப் பார்த்தான். அப்படியிருந்தும் மேல்முனை அசையக்கூடவில்லை. தடிமனான கிளுவைக்கிளையின் மேல் கால்வைத்து ஏறலாம் என்று பார்த்தால் கைப்பிடிக்கத் தோதுவாக இல்லை. ஒருவழியாக கோவாக்கொடியைப் பறித்துக்கொடுத்தான். சற்று நேரத்தில் கறுப்பாடு கழியத்தொடங்கியது. அதன்பின் முன்போல் அல்லாமல் மெதுமெதுவாக மேய்ந்தது. சற்றுநேரத்தில் அம்மா அங்கு வந்தாள். 

 ``என்னப்பா நீ ஆடுமேய்க்கிற அப்பா எங்க போனார்" என்று கேட்டவரிடம் நடந்தவற்றைச் சொன்னான். 

 ``அந்த ஆளுக்கு யார்கிட்ட எப்படிப் பேசணும்னே தெரியாது" என்று சொன்னபடியே ``என்னப்பா ஆடு இப்படிக் கழியுது" என்றாள். 

ஒரு குச்சியை எடுத்து கழிந்ததைக் கிண்டிப்பார்த்தார். அது குடலைப்போல் இருந்தது. இன்னும் கண்ணுக்கு அருகில் எடுத்துப் பார்த்து ``கறவக்குட்டி வீசியிருச்சு போல" என்றாள். 

``அப்படின்னா என்னம்மா" என்றான். 

 ``சினை ஆட்டைக் கூட மேயும் ஆடுகள் முட்டினால் உள்ள இருக்கும் குட்டி கழிவா வெளியில வந்திடும்" என்றாள். 

``சரி மேய்ந்தது போதும் வீட்டுக்கு ஓட்டிச் சென்று இலைதழையைக் கட்டுவோம்" எனச் சொல்ல வீடடைந்தோம். 

வீட்டுக்கு வந்ததும் மாதுளை பிஞ்சு, கொய்யா பிஞ்சு, ஆவாரம்பிஞ்சு, நாட்டுக்கருவேல இலை ஆகியவற்றை அம்மியில் இடிச்சு அரைத்து கழிந்த ஆட்டுக்குக் கொடுத்தாள். 

``என்ன மாமா தாத்தாவைச் சொன்னீங்க. பாவம் கொட்டத்தில் போய்ப் படுத்துக்கிட்டார். வாங்க சாப்பிடலாம் என்று கூட்டிவரவும்தான் வந்தார்" என்றாள் மனைவி. 

``நான் ஒண்ணும் சொல்லலை. பாப்பாவைத்தான் அடித்தேன்" என்றான்.

கிழக்கே இருந்து முகத்தைத் தொங்கப் போட்டபடியே வந்தார் அப்பா.

``என்னப்பா எங்க போன என்று விசாரித்தபடி இறுக்கத்தைத் தளர்த்தினேன். ஆடு மேய்க்கப் போனால் சாயங்காலம் வரை ஏன் காட்டிலேயே இருக்கிற. இடையில் வந்து சோறு தண்ணி சாப்பிட நினைக்கமாட்டியா? உன் உடலையும் வருத்திக்கிட்டு ஆட்டையும் வருத்திக்கிறியே. ரொம்ப கஷ்டப்பட்டு ஏன் இப்படி ஆடு மேய்க்கிற. உன்னப் போல ஆடுமாடு மேய்க்கிறவங்க இடையில் வந்து தண்ணிக்கு விட்டுக் கட்டுறாங்க. அவுங்களும் சோறு தண்ணி சாப்பிட்டுக் கொஞ்ச நேரம் படுத்திருந்துட்டுப் பிறகுதான் திரும்பவும் ஆடுமாடுகளை ஓட்டிப் போறாங்க. நீ என்னடான்னா போனா போனமேனிக்குக் காட்டுலயே கிடக்குற" என்றான். சரி சரி இனிமேல் அப்படியே செய்கிறேன் என்பதுபோல தலையை அசைத்தார். 

ஒருமுறை மாமாவின் தோட்டத்தில் இருந்தான். அங்கு குளிக்கவந்தார் கரியப்பிச்சி. குளிக்கவருவதாக அவர் சொன்னால்தான் பிறருக்குத் தெரியும். கையில் சோப்பு இருக்காது. தோளில் துண்டு இருக்காது. குளிக்கவரும் வேளையில் மட்டுமல்ல பெரும்பாலும் சட்டை போட்டிருக்க மாட்டார். மாற்றிக்கொள்ள வேறு துணியும் எடுத்துவரமாட்டார். அவரின் கருத்த மேனி ஆங்காங்கே கரும்புள்ளிகளுடன் வழுவழுப்பா அழுக்குபடிந்துகிடக்கும். சோப்பு போட்டுக் குளிக்கவேண்டியது தானே என்று கேட்டால், நான் என்னைக்குப்பா சோப்புப் போட்டேன். விவரம் தெரிந்த நாளிலிருந்து இப்படித்தான் குளிக்கிறேன் என்பார். பெரும்பாலும் பொழுது சாய்ந்தபின்தான் குளிக்கவருவார். அப்படி ஓர் உருவம் வருவதும் தெரியாது போவதும் தெரியாது. இருளோடு இருளாகவே நடமாடுவார். நீரோசையை வைத்தே குளிப்பதாகக் கண்டுகொள்ள முடியும். அடர்த்தியற்ற மீசை. தாடையில் மட்டுமே தாடி இருக்கும். மற்ற இடங்களில் மழித்ததுபோல்தான் இருக்கும். தொப்பையற்ற வயிறு வரி வரியாகவே காணப்படும். எவ்வளவு சாப்பிட்டாலும் நெஞ்சு அளவைத்தாண்டி வெளியே எட்டிப் பார்க்காது.

எப்போதும் ஆடுகள் கட்டும் கொட்டத்தில்தான் தூங்குவார். அக்கொட்டத்தில் அவருக்கெனத் தனியான இரும்புக் கட்டில் போடப்பட்டிருக்கும். மழைபெய்தால் ஓட்டு வீடுமட்டுமல்ல; கொட்டமும் ஒழுகும். குறிப்பாக அவர் கட்டிலின் தலைமாட்டில் ஒழுகும். அவ்வாறு ஒழுகும் போது எழுந்து அமர்ந்துகொண்டு ஒழுகும் மழையைக் கைகளால் வழித்து வழித்துக் கீழே விடுவார். ஆடுகளும் அடைகாக்கும் கோழியும் ஒழுகுகிறா என்று பார்ப்பார். அவை இருட்டில் இருப்பதால் அவற்றைத் தொட்டுப் பார்த்துதான் அறிந்துகொள்வார். அக்கொட்டத்தில் தேங்காய் நிரப்பிய சாக்கு மூட்டைகளோடு விறகுகளும் அடுக்கப்பட்டிருக்கும். துவைத்த துணிகள் காயும். இவை அத்தனையோடும்தான் கரியப்பிச்சி உறங்கியும் உறங்காமலும் முண்டிக்கொண்டிருப்பார்.

- பச்சோந்தி
`அம்பட்டன் கலயம்' கவிதை நூலுக்கு தமுஎகச விருது தகவல் கிடைத்ததும் உடனே மனைவிக்கும் மகளுக்கும் சொன்னேன். அடுத்த நாள் காலை 3.30 மணியளவில் பாதி உறக்கத்தில் சிறுநீர் கழித்துக்கொண்டிருக்கும் போது விருது அறிவிச்ச ஞாபகம் வர ஏனோ லேசான கண்ணீர் முட்டியது. துடைத்துக்கொண்டு மீண்டும் தூங்கிவிட்டேன். காலையில் அலுவலகம் செல்வதற்காக பேருந்தில் பயணித்துக்கொண்டிருக்கையில் மீண்டும் லேசாக ஆரம்பித்து பொழபொழவென்று அடக்கமுடியாமல் மீண்டும் மீண்டும் அழுதேன். 

தனித்துவமான வாழ்வியல் அனுபவம் உங்கள் கவிதைகளில் உண்டு. ஆனால், சொல்லல் முறையில் தனித்துவம் இல்லை ;மாடர்னிட்டி கைகூடவில்லை; நாஸ்டாலஜி தேக்கமடைந்த உள்ளது. போன்ற விமர்சனங்கள் முதல் இரண்டு கவிதை நூல்களுக்குக் கிடைத்தது. இப்படியான படைப்பிலக்கியம் சார்ந்த உரையாடல் மூலம் அது என்ன? இது என்ன?என்று தேடித் தேடிப் படித்தேன். மிகவும் நேசித்தவர்களின் பிரிவு, நிராகரிப்பு, இருட்டடிப்பு போன்றவை தற்கொலைக்குத் தூண்டியது. இவர்களின் கால்கள் என்னோடு நடக்கத் தயங்கின; கண்கள் சந்திக்க மறுத்தன; அழைப்பை ஏற்க மறுத்தன. சிலர் சம்பந்தமில்லாமல் சமூக வலைதளங்களில் என்னை விமர்சனம் செய்தனர். இவை எல்லாவற்றையும் படிப்படியாக ஒவ்வொன்றாகத் தாண்டி வாசிப்பும் எழுத்துமாக இருந்து கொஞ்சம் இடைவெளி விட்டு விட்டு எழுதியதுதான் அம்பட்டன் கலயம்.

இந்நூலுக்கு வெற்றிமொழி இலக்கியக் கூட்டத்தில் விமர்சனம் செய்த மனோ.மோகன் கடந்த பத்து ஆண்டுகளில் கவிதையின் பயணம் குறித்தும் அதில் பச்சோந்தியின் இடம் என்ன என்றும் மிக அற்புதமான கட்டுரை வாசித்தார். அதன்மூலம் மிகத் தெளிவான ஒரு பாதை தெரிந்தது. கற்றுக்கொள்ளும் படியாகவும் இருந்தது. தொடர்ந்து இந்திரன் அய்யா, பிரவீன் பஃறுளி, இளங்கோ கிருஷ்ணன் போன்றோர் கூகையில் நடைபெற்ற விமர்சனக் கூட்டத்தில் மிகச் சிறப்பாகப் பேசினார்கள். 

என்னை நானே சுய தணிக்கை செய்கிறேன். என்னை நானே மறுதலிக்கிறேன். இன்னும் ஒன்றும் செய்யாதது போலத்தான் உள்ளது. இனி வரும் காலங்களில் யாரும் எழுதாதவற்றை எழுதுவேன். எத்தனை விருதுகள் கிடைத்தாலும் தற்போது கிடைத்த தமுஎகச விருதை மறக்க இயலாது. தமுஎகச வுக்கும் விருது அறிவிச்சதும் தனக்குக் கிடைத்ததைப் போல மகிழ்ச்சியடைந்த நண்பர்களுக்கும் நன்றி! நிலவொளியில் பறையிசை முழங்க நடைபெற்ற திருவாரூர் இலக்கிய விருது விழா என் வாழ்வின் மறவா தருணங்கள்...

எங்கள் பயணத்தைத் தொடர்கிறோம்




2012 - 2018 வரை சேர்ந்து வாழ்ந்த காலம் ஓராண்டு இருக்கும். கண், கால் போனபோக்கிலும் அலைந்து திரிந்தபின், சென்னையில் குடும்பத்தோடு வாழும் வாழ்க்கையை, நம்பிக்கையை மீண்டும் கொடுத்துள்ளது காலம். எத்தனை நாள் 'அழகான மனைவி அன்பான துணைவி பாடல் வரிகளையும், வானம் பார்த்தேன், மாய நதியையும் கேட்டுக் கடந்துள்ளேன் என்பதை நினைக்கையில் எனக்கே ஆச்சர்யமாக உள்ளது. 

அவள் பிணியில் சிக்கி மீண்டும் உயிருடன் கிடைத்ததே பெரும்பேறுதான். 'மாமா கடைசி வரை என்னைக் கூப்பிட்டுப் போகமாட்டாருபோல' என்கிற வார்த்தைகளை, அக்கா சொல்லக் கேட்டதிலிருந்து மீண்டும் மீண்டும் துன்புறுத்தின. 10க்கு 15 அடியுள்ள ஒற்றை அறையுள்ள வீட்டைப் பிடித்து மனைவி மக்களை அழைத்துவந்துவிட்டேன். அவர்கள் வந்து இருக்கும் மூன்று வாரங்களும் அன்பின் சிறையில் அடைபட்டுள்ளேன். 

அந்தச் சிறை என்னை ஒடுக்குகிறது... இடைவிடாது நெருக்குகிறது... ஆனாலும் என்னைப் புதுப்பிக்கிறது... முதன்முறை கடல்பார்க்கும் மகனோடும் மகளோடும் நாங்கள் எங்கள் பயணத்தைத் தொடர்கிறோம் புதுமணத் தம்பதியென...

Monday, March 29, 2021

மகள் அப்பனின் நீண்ட ஒளி



இருட்டைக் கண்டால் என் மகள் பயப்படுவாள். ஆதலால், சிறுநீர் கழிக்கப் போனாலும் என்னைக் கூட்டிச் செல்வாள். கழிவறையில் சென்று நிற்பவளுக்கு ஜட்டியை நான்தான் கழற்றிவிடுவேன். ஆனாலும் இரவில் பாயிலும் போய்விடுவாள். அவளின் ஈர உடை கலைந்து துடைத்துவிட்டு, பின் வேறு உடை போட்டு விடுவதற்காக நிற்கவைப்பேன். பாதி உறக்கத்தில் அழுவாள். முதுகைத் தட்டிக்கொடுத்தபடி உறங்கச் செய்வேன். 

அதிகாலையில் தூக்கம் கலைபவள் அப்பா எங்கே என்றுதான் தேடுவாள். பல் துலக்கி விட்டு, முகம் கழுவி விடுவேன். அவள் அம்மா காய்ச்சிய தேநீரை ஆற்றிக் கொடுப்பேன். பெரும்பாலான நேரங்களில் என் முதுகிலேதான் சவாரி செய்வாள் அல்லது மடியிலேதான் உருண்டுகிடப்பாள். வெறுமனே கூடவே இருப்பாள் எப்போதும். 

தினமும் அவளை குளிக்க வைப்பதும் நான்தான். அவளை தலைக்குக் குளிப்பாட்டும் போது மலைகளைக் கோதுவது போல் இருக்கும். சோப்பு நுரையோடு ஒழுகும் சளியைச் சிந்தி எறிவேன். அவள் என்னிடமிருந்து மீன்களைப் போல் நழுவுவாள். உடல் துவட்டி உடைமாற்றிவிடுவேன். சுடச் சுட இருக்கும் சோற்றை பிசைந்துகொண்டே இருப்பாள். கத்திப்பார்ப்பேன், நானே பிசைந்து ஊட்டுவேன் அவள் வாயை மூடிக்கொள்வாள். ரெண்டடி அடிக்க ரெண்டு வாய் சாப்பிடுவாள். 

சில பொழுதுகளில் பள்ளிக்குச் செல்லும் சாலையில் ஆயாம்மாவின் இட்லிக் கடையில் ரெண்டு இட்லி வாங்கி ஊட்டுவேன். ஒன்றரை இட்லி சாப்பிடுவாள். பின் வழியெங்கும் இருக்கும் மரங்களை அறிமுகப் படுத்துவேன். பாட்டும் பாடுவேன். ஓரிரு நாள்களில் அவள் எனக்கு அவற்றை சுட்டிக்காட்டுவாள். ஓரிரு வரிகளைப் பாடியும் காட்டுவாள். ஆச்சர்யப்படுவேன்; அதிசயிப்பேன்.
பின்பு கூட்டமுள்ள பேருந்தில் அவளை நானும் என்னை அவளுமாக பற்றிக்கொண்டு பள்ளி செல்வோம்.  

முன்னிரவின் பொழுதில் கதவு தட்டும் ஓசையைக் கேட்டு பற்றித் தொங்குவாள். 
மகள் அப்பனைப் பரிசுத்தப்படுத்துபவள்... 
மகள் அப்பனை பக்குவப்படுத்துபவள்... 
மகள் அப்பனை இம்சிப்பவள்... 
மகள் அப்பனை ஆற்றுப்படுத்துபவள்...
அவளே ஆயுளின் குறுகிய இருட்டு... 
அவளே ஆயுளின் நீண்ட ஒளி!!!

Thursday, March 18, 2021

பீஃப் கவிதைகளுக்கு கவிஞர் ரமேஷ் பிரேதன் எழுதிய பின்னட்டைக் குறிப்பு



இன்றைய இந்தியக் காலத்தில் பீஃப் என்பது ஓர் உணவுப் பொருள் இல்லை; அதுவோர் உணர்வுப் பொருண்மை. உணர்வைப் பொருண்மை செய்யும் வகைப்பாட்டில் வெளிப்படும் கவி.பச்சோந்தியின் நான்காம் தொகுப்பான ’பீஃப் கவிதைகள்’ பிரம்மனின் உடம்புக்கு வெளியில் வாழும் மக்களின் பண்பாட்டு மானுடவியல் தரவுகளைத் திரட்டித் தருகிறது. ஒரு நாவலையும் ஆவணத் திரைப்பதிவையும் தன்னுள் திணித்துக்கொண்டிருக்கும் இத்தொகுப்பு, தமிழ்க்கவிதை நெடும்பரப்பில் நாவின் சுவை நரம்புகள் தெறிக்க மாட்டிறைச்சியை சூடு பறக்க வறுத்துக்கொட்டிப் பரத்துகிறது. நகுலனின் சாக்லேட் கவிதைகள் போல பச்சோந்தியின் பீஃப் கவிதைகள். ஆம், பார்ப்பனக் கவிதையியலிலிருந்து வெளியேறிய தலித் கவிதையியலின் விடுதலை அழகியலின் புதிய உச்சம். இதுவொரு கவித்துவக் கலகப் பனுவல்.


பொலிப்பில் தவிக்கும் மகளைக் காளையுடன் ஏறித்தழுவவிட்டு, கருத்தரித்தவளைப் பத்தியப் பக்குவம் பார்த்து, சூல் வயிறு கனக்கும் இரவுகளில் உறக்கம் அறுத்து, முக்கிப் பிதுக்கி வெளித்தள்ளும்போது சரிந்த அடிவயிறை அழுத்தமாகத் தடவிக்கொடுத்து, நிற்கத் தடுமாறும் குழந்தையைத் தாங்கிப்பிடித்துத் தாய்முகம் காட்டும்; தீட்டைப் பொருட்படுத்தாதச் சமூகமே மாட்டை வணங்க வளர்க்க தின்னத் தகுதியும் உரிமையும் கொண்டது. மாறாக, குருதி பாலாய்த் திரியக் கறந்து, பாலைத் தயிறாக்கி வெண்ணெய் கடைந்து உருக்கி நெய்யாக்கித் தின்னும் சமூகத்திற்குப் பசுவைத் தெய்வமாய் வணங்க உரிமையில்லை. மாட்டிலும் இறைமை கண்டு மாட்டிறைச்சியிலும் இறைமை காண்பதே உயிரியல் அறம்.

பறைச்சேரி, சூத்திரச்சேரி, பார்ப்பனச்சேரி கடந்து இந்தியச்சேரியில் திரண்ட மாடுகள் பன்னாட்டு அறுவைக்கூடத்தில் தலைக்கீழாய்த் தொங்கியபடி இத்துணைக்கண்டத்தில் தாம் கடந்துவந்த வாழ்க்கையை அசைபோடுகின்றன. அன்றைய யாகச்சாலையில் வெட்டப்பட்டு அஃனி குண்டத்தில் வறுத்துத் தின்னப்பட்ட தாம் மீட்கப்பட்டு இன்றைய கோச்சாலையில் அடைக்கப்பட்டு பன்னாட்டு வர்த்தக ஏற்றுமதிச் சரக்காகி உலகில் முதலிடத்தில் ஆர்யவர்த்தத்தை ஏற்றிவைத்த பீஃப் அரசியலைத் தம் வாழ்வின் இறுதியில் விளங்கிக்கொண்டன. 

தொகுப்பின் ஒவ்வொரு கவிதையாகப் பேசிக்கொண்டேயிருக்கலாம்; இந்திய வாழ்க்கை பற்றிய குறிப்பில் மாடுகளை எழுதுவதா மனிதர்களை எழுதுவதா? அஃறிணைக்கும் உயர்திணைக்கும் அரசியல் ஒன்றே காண். ‘திருப்பிப் போட்ட கேள்விக்குறிக் கொம்பு’ என எழுதும் பச்சோந்தியின் நெற்றியில் முளைத்த கொம்பைப் பற்றி பிறகு எழுதுகிறேன்.

உன் முத்ததிற்கு என் இடுப்பளவு உயரம் மகளே!




ஏன் என்னை இவ்வளவு காதலிக்கிறாய் மகளே; என் அம்மாவும் உன் அம்மாவும் என்னைக் காதலிப்பதைவிட. என் அம்மா காட்டுமிராண்டித்தனமான கணவனோடும் உன் அம்மா நாடோடித்தன்மையான கணவனோடும் வாழ சபிக்கப்பட்டவர்கள். சகிப்புத்தன்மையைத் தன் தோலாய் உடுத்திக்கொண்ட இருவருக்கும் என்னைப் பிரிதல் என்பது இயல்பாகிவிட்டது. உன்னால் மட்டும் என் பிரிவைத் தாங்கிக்கொள்ளமுடியவில்லையே ஏன்? 

நான் வீடுதிரும்பும் நள்ளிரவில் உன் அம்மாகூட உறங்கிவிடுகிறாள். நீ ஏன் விழித்தே இருக்கிறாய். சாப்பிட்டு முடித்து மொட்டைமாடியில் படித்துக்கொண்டிருக்கையில் பக்கங்களின் ஒளியை நீயும்கூட உற்றுப்பார்த்தபடியே இருக்கிறாய். சற்று நேரத்தில் உட்கார்ந்தபடியே தூங்கிவிழுந்தாய். உள்ளே போய் தூங்குமா என்றேன். என் மடிமீது தலைவைத்து அங்கேயே படுத்துக்கொண்டாய். கண்கள் பக்கங்களைப் பார்த்துக்கொண்டிருந்தாலும் கைகள் உன் நெற்றியில் விழுந்த தலைமுடியைக் கோதிக்கொண்டிருக்க நீ உறங்கிப்போனாய் மகளே! 

முன்னொரு நாள் கிராமத்து வாசலில் நான் அமர்ந்திருக்க, எல்லோரும் திண்ணையில் அமர்ந்திருந்தனர். நீயோ என் கன்னத்தை நோக்கி முத்தமிடவந்து தயங்கிபடி பின்வாங்கியது ஏனம்மா. நான்கூட``உன் அப்பாகிட்ட ஏன் தயங்குற, இது நம்ம வீடுதானே" என்று விளக்கிக்கூறவும் தவறிவிட்டேன். ``அப்பா என்கூட படுப்பா" என்கிறாய். ``கொஞ்சம் உக்காரு பேசலாம், என்னை விட்டுட்டு ஊருக்குப் போன உங்கூட கா விட்டுடுவேன், என்னைக் குளிப்பாட்டி விடு, தலைதுவட்டிவிடு, சாப்பாடு ஊட்டிவிடு, ஜட்டி போட்டுவிடு" போன்ற வார்த்தைகள் என்னைச் சுற்றிச் சுற்றி வருகின்றன. நீ கொடுக்கும் முத்தம் கடலில் ஒரு மழைத்துளி விழுவதுபோல் அல்லது ஒரு துளியில் கடல் கலப்பது போல். 

உன் அப்பனால் நவீனக் கலாச்சாரத்தோடு ஒன்றிப்போக முடியவில்லை மகளே! பழைமையைத் தொங்கிக்கொண்டே அலைகிறான். எல்லோருடனும் சகஜமாகப் பேசிப் பழகாமல் தனித்தும் இறுக்கத்தோடுமே அலைகிறான். இதனால், நேசிப்பதாய் வருபவர்களும் தெறித்து ஓடுகிறார்கள். இந்தத் தனிமையும் இறுக்கமும் உன்னிடம் மட்டும் தானாகவே உடைந்துபோகிறதே மகளே! என் பள்ளி நாள்களில் எத்தனை நண்பர்கள் என்னைத் தேடிவருவார்கள் என்று சொன்னால் நீயேகூட நம்பமாட்டாய். நீ என்னைப் போல் இல்லை மகளே. எதையும் பேசவேண்டிய நேரத்தில் தெளிவாகவே பேசுகிறாய். கூர்மையான அறிவோடும் இருக்கிறாய். எதிர்த்துக் கேள்வி கேட்கிறாய். இதெல்லாம் யாரிடமிருந்து கற்றுக்கொண்டாய் எனக் கேட்டால், ``எல்லாம் உங்கிட்ட தான்ம்பா" என்கிறாய். 

தெருவில் நாம் இருவரும் நடக்கும்போது அப்பா நான் வளர்ந்துட்டேன்ல என்கிறாய், ஆமாம் என் இடுப்பளவு வளர்ந்துவிட்டாய். இன்னும் வளருவாய் மகளே!

`பீஃப் கவிதைகள்' கவிதை நூலில் இடம்பெற்ற முன்னுரை

பண்ணை அடிமைக்கும் தாலாட்டும் ஒப்பாரியும் பாடும் பெற்றோருக்கும் கடைமகனாக கரந்தமலைக்கும் சிறுமலைக்கும் இடையே உள்ள கோவில்பட்டியில் பிறந்தேன். அப்பாவுக்குப் பண்ணையடிக்கவே நேரம் போதாமல் அம்மா, அண்ணன், அக்கா என எல்லாரையும் அதில் ஈடுபடுத்துவார். அம்மாதான் எங்களுக்கு எல்லாம். ஆனாலும், அப்பாவிடம் வாங்கும் விதவிதமான அடிகளுக்கு ஈடாக அம்மாவைத்தான் வகைவகையாக ஏமாற்றுவேன். ஏமாற்றுவதையும் சேர்த்துதான் அன்புகாட்டி வளர்த்தார். யார் எங்கு கூப்பிட்டாலும் யோசிக்காமல் கூடச் செல்வேன். மளிகை கடைக்கு, அரவை மில்லுக்கு, காதலருக்குத் தூதாக, கரந்தமலைக்கு நெல்லிக்காய் தொரட்டி பறிக்க என எங்கெங்கோ சுற்றித் திரிந்திருக்கிறேன். சாப்பிடுவதற்கும் தூங்குவதற்கும்தான் வீட்டுக்குச் செல்வேன். பல நேரங்களில் மாரியம்மன் கோயில், அங்கன்வாடி, பெருமாள் கோயில் மண்டபம் என எங்க ஊர்ப் பசங்க மொத்தமாகத் தூங்குவோம். அதற்காகவே, ஒரு போர்வையை வீட்டிலிருந்து எடுத்துவந்து வைத்திருப்பேன். இப்படி சிறுவயதில் வீட்டில் தங்காத மனநிலை இப்போதும் தொடர்ந்து வருவது இயல்பாக இருப்பதை அறியமுடிகிறது. அது, என் படைப்பூக்கத்துக்கும் தனித்தன்மைக்கும் வழிவகுப்பதாக உணரவும் முடிகிறது.

 எட்டாம் வகுப்பு வரை கிராமத்தில் படித்தேன். ஒன்பதாம் வகுப்புக்கு வேறு ஊருக்குச் செல்ல நேர்ந்தது. அதுவும் விடுதியில் தங்கிப் படிக்கும் சூழ்நிலை. ஓரிரு வாரங்களில் பெட்டி படுக்கையோடு யாரிடமும் சொல்லாமல் அங்கிருந்து ஊருக்கு நடந்தே வந்துவிட்டேன். வேறு பள்ளிகளில் படிக்கவைக்கும் முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. சொந்த ஊரில் பிள்ளைகள் இருந்தால் தம்மைப்போலவே, பண்ணையடிமையாக மாறிவிடுவார்களோ என்ற பயத்தில் ஒவ்வொரு பிள்ளைகளாக வெளியேற்றுவதிலேயே உறுதியாக இருந்தார் அப்பா. இதையடுத்து தையல், எலக்ட்ரீசியன், கட்டடத்து வேலை, ஃபைனான்ஸ் கடை எனப் பலவேலைகளில் சேர்த்துவிட்டாலும் எங்கும் மனம் நிலைக்கவில்லை. கடைசியாக சென்னையில் உள்ள அண்ணன் கடைக்கு வேலைக்கு அனுப்பலாம் என்று முடிவெடுத்தார்கள். சென்னை என்றதும், சேட்டு அண்ணன் தங்கச்சி சடங்கு அன்று நிலா வெளிச்சத்தில் உறைகிணறு சற்றில் ரவி மாமா அமர்ந்து, சுற்றியிருந்த சிறுவர்களை நோக்கி மெட்ராஸுக்கும் சென்னைக்கும் எத்தனை கி.மீட்டர் என்று கேட்க அதிகபட்சமாக 500 கி.மீ என்று நான் சொன்னது ஞாபகத்தில் வந்தது. மேலும், வடமதுரை பள்ளியில் அக்காவும் நானும் படிக்கையில், அந்த வழியாகப் போகும் சென்னைப் பேருந்துகளைப் பார்த்து ``இதுல போனா அண்ணனைப் பார்க்கப் போலாம்ல" என்று பேசுவதும் நினைவிலாடியது. பின்பு, ஒருவழியாக அப்பாவுடன் சென்னைக்குக் கிளம்பினேன். அவர், கடன்வாங்கிய ஐயாயிரம் ரூபாயை மஞ்சள் பையில் வைத்து சென்னைக்குப் போகும்வரை பத்திரப்படுத்த பெரும் சிரமப்பட்டார். இப்படி, சென்னைக்கு காஜா பட்டன் வைக்க வந்த கணேசன்தான் பச்சோந்தி.  

சென்னைக்கு வந்த தொன்னூறுகளின் இறுதியில், நான்கு ஆண்டுகளுக்குப் பின் ஊருக்குச் செல்கையில், என் கிராமத்தின் மொத்த வடிவமும் கட்டமைப்பும் மாறியிருந்தன. கள்ளிச் செடிகளுக்குள் சட்டை கிழிய  தசை கிழிய பள்ளிக்குச் சென்ற பாதை, தார் பூசியிருக்க... ஊரே கூடி தண்ணீர் பிடித்த அடிகுழாய் துருப்பிடிக்க... ஒவ்வொரு வீட்டிலும் திருகு குழாய் முளைத்திருந்தது. செடிகளும் கொடிகளும் மரங்களும் மண்டிக்கிடந்த நிலம், பாலையாகியிருந்தது. பெயர்த்து எடுக்கப்பட்ட உறைகிணறு, காளியம்மன் கோயிலானது. மாடுகள் பூட்டி நிலம் உழுத கலப்பை, கறையான் பிடித்து புளியமரத்தின் நிழலில் சாய்க்கப்பட்டிருந்தது. குழந்தையைப் பெற்றெடுத்த சில நிமிடங்களுக்குள் வலிப்பில் இறந்தாள் மகேஸ்வரி, `அம்மை’ வந்து இறந்தாள் முட்டிக்காலில் நடக்கும் அமுல் அம்மா, பெருமாள் கோயில் மண்டபத்தைச் சுற்றிக்கிடக்கும் ஒட்டுப்பீடிகளைப் பொறுக்கிக் குடிக்கும் சவரியார் மாமா பேயடித்து இறந்தார். இப்படி, வாழ வேண்டியவர்கள் சுடுகாட்டிலும் சுடுகாட்டுக்குச் சென்றவர்கள் ஆவிகளாக ஊருக்குள்ளுமாக வாழ்வது ஏன், எப்படி நிகழ்ந்தது என்கிற இடத்திலிருந்து ஆரம்பித்தது என் எழுத்து.


என் ஊரில் இருந்த குட்டிச்சுவரைப் படம் பிடித்து, அப்படத்துடன் ஒரு சிறிய கவிதையை கணையாழிக்கு அனுப்பிவைத்தேன். ``கவிதையாக வரவில்லை. படம் யோசிக்க வைக்கிறது" என்று அவர் அளித்த இரண்டாவது சொற்றொடரைப் பற்றிக்கொண்டேன். வானம்பாடிகளின் கவிதைகளை மட்டும் வாசித்த காலம். பிறகு, தற்போதைய கவிதைப் போக்கை, வடிவத்தை அறிந்துகொள்ள பலகவிதை நூல்களை வாங்கிப் படித்தேன். அப்படி, தி.நகரில் உள்ள கடையில் நா.முத்துக்குமாரின் `பட்டாம்பூச்சி விற்பவன்' தொகுப்பைப் படித்ததும் நெருக்கமாக இருந்ததை உணர்ந்தேன். அதில், `இன்னும் கொஞ்சம் நீண்டு எழுதியிருக்கலாம்' என்று பாலுமகேந்திரா சொன்னதில் எனக்கும் உடன்பாடு இருந்தது. மேலும், நா.முத்துக்குமாரின் `தூர்' கவிதை படித்ததும் அப்போதய கவிதைப் போக்கு நமக்கும் வசப்படும் என்று நம்பிக்கை பிறந்தது. பிறகு, நா.பிச்சமூர்த்தி தொடங்கி அப்போது வந்த கவிதை நூல்கள் வரை படிங்கத் தொடங்கினேன். குறிப்பாக கிராமத்துக் கவிதைகளின் போக்கு, அதன் இயங்குதளம் பற்றி அறிய விரும்பினேன். ஒருசில தொகுப்புகளில் ஒன்றிரண்டு கவிதைகள் எனக்குப் பிடித்திருந்தன என்பதைவிடவும் என்வாழ்நிலைய யொட்டி இருந்தன. ஆனாலும், ஒரு போதாமை என்னைத் துரத்திக்கொண்டே இருந்தது. அதுகுறித்து இணையத்தில் தேடுகையில் ந.முருகேசபாண்டியனின் `கிராமத்துத் தெருக்களின் வழியே' நூல் பரிச்சயமானது. உயிர்மை பதிப்பகம் வெளியிட்டதை அறிந்துகொண்டு வாங்கிப் படித்தேன். என் கிராமத்து வாழ்க்கையை அப்படியே அசலாகப் பதிவுசெய்திருந்ததைக் கண்டு திகைப்புற்றேன். இதைத் தாண்டி எழுதுவது என்பது அப்போதைக்கு சவாலாகவும் தோன்றியது. ஆனாலும், என் கிராமத்து மக்களின் வாழ்வியலை எழுத ஆரம்பித்தேன். பின்பு, இராச.கணேசன் என்கிற பெயரில் `மாடுகளின் காலடிச் சுவடுகள்' எனும் தலைப்பில் `காட்சி' இணையத்தில் வெளியானது. எழுதிய முதல்கவிதையே அதுவும் இயக்குநர் ராம் நடத்தும் இணையத்தில் வெளியானது உற்சாகமாக இருந்தது. மேலும்,  `குடிசைக் குடைக்குள் குட்டை' என்கிற கவிதை இரண்டு பக்கங்களில் கணையாழியில் வெளியாகியது. இப்படி நான் பிறந்த ஊரான கோவில்பட்டியின் நிலத்தை, அங்கு வாழ்ந்த வாழும் மக்களைப் பற்றி எழுதியதுதான் என் முதல் நூலான `வேர்முளைத்த உலக்கை'. 

இந்நூல் தமிழக எழுத்தாளர்களிடம், வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. கிட்டத்தட்ட ஏழு மாவட்டங்களில் நூல் விமர்சனம் நடத்தினார்கள். ஆனாலும், திண்டுக்கல் செல்மா பிரியதர்ஸன் என்னை அழைத்துப் பேசிய வார்த்தைகள் தொடர்ந்து பயணிக்க உந்துதலாக இருந்தது. ``என் கால்நூற்றாண்டு வாழ்க்கை இதில் வைத்திருக்கிறான். இவனது கவிதைகள் கரப்ட் ஆகாமல் இருக்கு. இப்போது வந்திருக்கும் தொகுப்புகளில் நூறு கவிதை நூல்களின் அட்டைப்படத்தையும் பெயரையும் நீக்கிவிட்டால் எல்லாம் ஒரேமாதிரியாகத்தான் இருக்கும். ஆனால், இவற்றிலிருந்து வேர்முளைத்த உலக்கையை தனியாகப் பிரித்துவிடலாம். எதிர்காலத்தில் மிகப்பெரிய ஆளா வருவான் " என செல்மா பேசியது நவீன கவிதையின் பயணத்தின் பாதையில் எனக்கிருந்த புரிதலை மேலும் வலுவாக்கியது. இந்நூலுக்கு ஏர்வாடி ராதாகிருஷ்ணன் அந்த ஆண்டின் சிறந்த கவிதை நூலுக்கான `கவிதை உறவு' விருது வழங்கினார்.
 
பிறகு, கிராமத்துக்கும் சென்னைப் பெருநகருக்கும் தொடர் அலைச்சலில் இருந்தேன். அங்கும் இங்குமான ஊடாட்டம் பெரும் அலைக்கழிவு `கூடுகளில் தொங்கும் அங்காடி'யை எழுதவைத்தது. இந்நூலுக்குக் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டேன். ``தனித்துவமான வாழ்வியல் அனுபவம் உங்கள் கவிதைகளில் உண்டு. ஆனால், சொல்லல் முறையில் தனித்துவம் இல்லை ;மாடர்னிட்டி கைகூடவில்லை; நாஸ்டாலஜி தேக்கமடைந்த உள்ளது. போன்ற விமர்சனங்கள் முதல் இரண்டு கவிதை நூல்களுக்குக் கிடைத்தது. இப்படியான படைப்பிலக்கியம் சார்ந்த உரையாடல் மூலம் அது என்ன? இது என்ன?என்று தேடித் தேடிப் படித்தேன். மிகவும் நேசித்தவர்களின் பிரிவு, நிராகரிப்பு, இருட்டடிப்பு போன்றவை தற்கொலைக்குத் தூண்டியது. இவர்களின் கால்கள் என்னோடு நடக்கத் தயங்கின; கண்கள் சந்திக்க மறுத்தன; அழைப்பை ஏற்க மறுத்தன. சிலர் சம்பந்தமில்லாமல் சமூக வலைதளங்களில் என்னை விமர்சனம் செய்தனர். இவை எல்லாவற்றையும் படிப்படியாக ஒவ்வொன்றாகத் தாண்டி வாசிப்பும் எழுத்துமாக இருந்து கொஞ்சம் இடைவெளி விட்டு விட்டு எழுதியதுதான் `அம்பட்டன் கலயம்'. இந்நூலுக்கு வெற்றிமொழி இலக்கியக் கூட்டத்தில் விமர்சனம் செய்த மனோ.மோகன் கடந்த பத்து ஆண்டுகளில் கவிதையின் பயணம் குறித்தும் அதில் பச்சோந்தியின் இடம் என்ன என்றும் மிக அற்புதமான கட்டுரை வாசித்தார். அதன்மூலம் மிகத் தெளிவான ஒரு பாதை தெரிந்தது. கற்றுக்கொள்ளும் படியாகவும் இருந்தது.

தொடர்ந்து இந்திரன் அய்யா, பிரவீன் பஃறுளி, இளங்கோ கிருஷ்ணன் போன்றோர் கூகையில் நடைபெற்ற விமர்சனக் கூட்டத்தில் மிகச் சிறப்பாகப் பேசினார்கள். ஆனாலும், என்னை நானே சுயதணிக்கை செய்கிறேன்.என்னை நானே மறுதலிக்கிறேன். இன்னும் ஒன்றும் செய்யாதது போலத்தான் உள்ளது. இனி வரும் காலங்களில் யாரும் எழுதாதவற்றை எழுதுவேன். எத்தனை விருதுகள் கிடைத்தாலும் தமுஎகச விருதை மறக்க இயலாது. தமுஎகச வுக்கும் விருது அறிவிச்சதும் தனக்குக் கிடைத்ததைப் போல மகிழ்ச்சியடைந்த நண்பர்களுக்கும் நன்றி.  நிலவொளியில் பறையிசை முழங்க நடைபெற்ற திருவாரூர் இலக்கிய விருது விழா என் வாழ்வின் மறவா தருணங்கள்.

ஊரெங்கும் மணக்கும் வறுத்த மாட்டுக்கறியை, எருமைத் தோலில் பறை செய்யும் தாத்தாவை, பயிர் விளைந்த நிலம் அபகரிக்கப்படுவதை எதிர்த்ததால் துப்பாக்கி குறிவைக்கும் தாயின் மார்பை, நிலஅளவைக் கல்லைக் கண்டு வள்ளிக் கிழங்கின் வேர்களைக் கட்டிக்கொண்டு அழும் அப்பனை, சுட்ட கல் எடுத்து குண்டி துடைப்பவனை, தண்டவாளங்களில் உறைந்த ரத்தத்தை என இச்சமூகத்திடமிருந்து எஞ்சி இருப்பதாலும் எல்லாவற்றிலிருந்தும் இச்சமூகம் எஞ்சி இருப்பதாலும் எழுதுகிறேன். குடும்பம், உறவு, நட்பு, காமம் இவற்றில் திருப்தியின்மையால் அலைக்கழிகிறேன். அப்பா அம்மா சேர்ந்திருந்த கால் நூற்றாண்டுக்கும் முந்தைய நிழற்படம் ஒன்றை  சமீபத்தில் அக்கா வீட்டில் கண்டேன். அப்புகைப்படத்தில் இருப்பவர்கள் அப்பா அம்மாதான் என்றாலும், அதில் இருப்பவை அவர்களின் இப்போதைய முகங்கள் அல்ல. ஒளிர்ந்து சிரிக்கும் பற்கள், பூக்கள் மணக்கும் கூந்தல், விதவிதமான பூக்கள் பூத்த சேலைகள், சற்று உடல் பெருத்த அம்மா என இவை எதுவுமே அதில் இல்லை. அவள் பாடிய தாலாட்டுப் பாடல், நடவுப் பாடல், ஒப்பாரிப் பாடல் இவை மட்டுமே மீதமிருக்கின்றன. என் வாசல் வழியே செல்லும் வாலிபன் என் அம்மாவை, ``ஏய் மாரிக் கிழவி!” என்று அழைத்தவாறு கடந்துபோகிறான். அம்மாவுக்கு உண்மையிலேயே வயதாகி விட்டதா என்ற சந்தேகம் பலமுறை ஏற்பட்டதுண்டு. சென்ற வாரம் அம்மாவின் பற்களற்ற சுருங்கிய கன்னம் சோற்றைக் குதப்பிக்கொண்டிருந்தது. அவள் என்னைவிடச் சற்று உயரம் குறைந்து காணப்படுகிறாள். அவள் கைகள் பிடித்துச் சென்ற காலம்போய், தோளின்மீது கைகள் போட்டபடி செல்கிறேன். இப்போது அவள், சாவின் பிடியில் சிக்குண்டதுபோல் உணர்கிறேன் அல்லது சாவின் பற்கள் அவளைக் கவ்வுவதற்கு காத்திருப்பதைப் போல் அச்சமுறுகிறேன். நினைத்துப் பார்க்கையில் இந்த அந்நியமாதல் எப்படி, ஏன் நிகழ்ந்தது என்று நினைக்கையில் கொஞ்சம் என் விரல்கள் எழுதுகோலின் மைக்குள் பிசுபிசுக்கின்றன; என் கண்கள் புத்தக வரிகளின் இடைவெளிக்குள் ஓடியாடுகின்றன.
   
மாட்டுக்கறி உண்பதற்காக சிறுபான்மை மக்களும் தலித் மக்களும் காவி அரசால் அச்சுறுத்தப்படுவதையும் தாக்கப்படுதையும் கொல்லப்படுவதையும் வார்த்தைகளாக மட்டுமல்ல; காட்சிகளாகவும் ஊடகங்களின் வாயிலாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். உங்கள் எல்லோரைப் போலவே நானும் மிகவும் பதற்றத்தோடும் அச்சத்தோடும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இவ்வாறு ஏன் நடக்கிறது. கொல்லப்படுவது யார் கொல்லுவது யார் என்ற கேள்விகள் என்னைத் துரத்திக்கொண்டே இருந்தன. இதில் யார் செய்வது சரி, யார் செய்வது தவறு, இவ்வாறு சிந்திக்கும் நான் யார் போன்ற இக்கேள்விகளுக்கு விடைதேடிய பயணம்தான் `பீஃப் கவிதைகள்'. மாட்டுக்கறி சார்ந்து ஒரு நூல் எழுதலாம் என்று ஆரம்பிததுதான் மூன்றாவது நூலான `அம்பட்டன் கலயம்'. ஆனால், சேலம் எட்டுவழிச் சாலை, கஜா புயல் இருபெரும் சம்பவங்களும் என் போக்கை மாற்றியமைத்தன. மேலும், மத்தியில் பாஜக அரசு இரண்டாவது முறையாகப் பதவியேற்ற ஒருமாத கால இடைவெளியிலேயே மாட்டுக்கறி சம்பந்தமாக ஒரு முஸ்லிம் தாத்தா கொலைசெய்யப்பட்டார். அப்போது, இந்நூல் எழுதும் எண்ணம் ஆணித்தனமாக வேரூன்றியது. 

இதுகுறித்து, முதல்முறை எழுத்தாளர் நக்கீரனுடன் உரையாடும் போது யதேச்சையாகச் சொன்னேன். ``எழுதுங்கள் தமிழுக்குப் புதிதாக இருக்கும்" என்றார். ஆனாலும், மாட்டுக்கறி, மாடு சார்ந்து அம்பட்டன் கலயத்தில் எழுதியதைச் சொன்னபோது ``பெருங்கோபத்தோடு என்ன நீ அப்படி எழுதிட்ட" என்றவாறு இருந்தது அந்தப் பார்வை. உடனே, இதுகுறித்து எழுத ஏதாவது ரெஃபெரென்ஸ் நூல் இருந்தால் சொல்லுங்கள் என்றேன். `பசு புனிதம்' என்கிற நூலை அவர் வீட்டின் நூலகத்திலிருந்து எடுத்துவந்து இது ஒன்றைப் படித்தால் போதும் என்றார். புராணங்களிலும், இதிகாசங்களிலும், வேள்வித் தீயிலும் மாடு உட்பட பல மிருகங்கள் எப்படி வதை செய்யப்பட்டன என்பதை அந்நூலில் மேற்கோள்களுடன் இருப்பதை அறியமுடிந்தது. பசுவதை ஒருவரலாற்றுப்  பார்வை உட்பட அதுசம்பந்தமா தேடிப்படித்தேன். ஆனாலும் இவை எல்லாவற்றையும் எடுத்து ஓரம் வைத்துவிட்டு மக்களை நோக்கி ஓட ஆரம்பித்தேன்.
 
மாடு வெட்டும் முறை, அதன் ஓசை, அந்த இடத்தின் தன்மை, வெட்டுபவர்களின் உருவ அமைப்பு இதைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது. ஆனால், எங்கு போவது யாரிடம் பேசுவது என்று ஒன்றுமே புரியவில்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம் சிறுவயதில் என் ஊரில் புளியமரத்து நிழலில் அவ்வப்போது வெட்டிய மாடும் வீட்டின் வெளியெங்கும் தோரணத்தில் தொங்கவிட்ட, உப்புக் கண்டம் போட்ட கறித்துண்டுகள்தாம். இப்போதைய நடைமுறைகளை அறியலாம் என்று பாண்டியன் ரயிலைப் பிடித்து  திண்டுக்கல்லுக்குச் சென்றேன். அதிகாலை 4 மணிக்கு இறங்கி பேருந்து நிலையத்தில் பேகம்பூர் செல்லும் முதல் பேருந்துக்காகக் காத்திருந்தேன். அப்பேருந்தும் என்னை இருட்டிலேயே இறக்கிவிட்டது. திக்குதெரியாத காட்டில் போவதுபோலே பனிக்காலத்தின் இரவில் மெதுவாக ஊர்ந்து நடந்தேன். இருபக்கமும் வேடிக்கை பார்த்தபடி சென்றேன். கன்றை சாலையிலிருந்து ஒருவர் உள்ளே இழுத்துக்கொண்டிருந்தார். சோடியம் ஒளியைப் பெய்த தெருவிளக்கின் பின்னிருட்டில் சிறுநீர்கழித்தபடி பார்த்தேன். ஒரு கேன்டர் லாரியில் ஆட்டுத்தோல் நிரம்பியிருந்தன. மேலும் சற்று தூரம் நடந்து மீண்டும் பின்நோக்கித் திரும்பினேன். திரும்பி வரும்போது மாடுகள் சத்தமின்றி வெட்டப்பட்டுக்கொண்டிருந்ததைக் கண்டேன். ஆனால், அவர்களிடம் எப்படி, என்ன பேசுவது என்று தெரியாமல் வீட்டுக்கு வந்தேன். பின், மீண்டும் இன்னொரு நாள் இதேபோல் ரயிலைப் பிடித்து இங்கும் அங்குமாக விடியும்வரை நடந்து திரிந்தேன். அதிகாலையில் தேநீர்குடித்துவிட்டு ஒரு கறிக்கடையில் மாட்டுவால் வேண்டும் என்று கேட்டேன். உடனே கட்டிக்கொடுத்துவிட்டார்கள். கறிவாங்க மாமா வந்துகொண்டிருப்பாதச் சொல்லி ஒன்றரை மணிநேரம் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். 

ஒருநாள் திண்டுக்கல் தமிழ்தாசனிடம் பேசிக்கொண்டிருக்கையில் இப்படி ஒரு நூல் எழுதலாம் என்கிற எண்ணத்தைச் சொன்னேன். உடனே, அவர் தன் இருசக்கரவாகனத்தில் என்னை உட்காரவைத்து மாடுவெட்டும் ஒரு தாத்தாவிடம் என்னை அறிமுகப்படுத்திவைத்தார். பின், அவர் சொன்ன தேதியில் மீண்டும் அங்கே சென்று அவருடன் இருந்தேன். அப்படி ஒவ்வொரு விடுமுறை நாளிலும் அவர் கடைக்குச் செல்வேன். மாடு வெட்டும் காட்சிகளில் கன்றுகளின் தோல், கண், அதன் நடுக்கம் எல்லாம் கண்டு அதிர்ந்து மாட்டுக்கும் நமக்குமான உறவு வெறும் கறிம் மட்டும் தானா என்கிற கேள்வி எழுந்தது. விவரம் தெரிந்த நாளிலிருந்தே மாடுமேய்த்தது, குளத்தில் குளிக்கும் போது மாட்டையும் குளிப்பாட்டுவது, சோறூட்டுவது, பொட்டுவைப்பது, நோய்வந்தால் மருந்தூட்டுவது எனக் கடந்தகாலங்கள் என்முன் நின்றன.

முதல் கவிதையே `பீஃப் கவிதைகள்' என்னும் தலைப்பில்தான் எழுதினேன். ஶ்ரீசங்கர் என்னிடம் பலமுறை கவிதை அனுப்பச்சொன்னது ஞாபகம் வர அவருக்கு அனுப்பினேன். அவர் `நிலவெளி'யில் வெளியிட பலபேர் அக்கவிதை குறித்து என்னிடம் பேசினார்கள். சரியான பாதையில்தான் போகிறோம் என்று தெளிவுற்றேன். இதையே தொகுப்பின் தலைப்பாகவும் வைக்கலாம் என்று முடிவுசெய்தேன். அடுத்து மாடுகளுக்கு ஏற்படுகிற நோய்களும் குணப்படுத்தும் முறைகளும் பற்றி `தொழுவத்து மருத்துவக் குறிப்புகள்' என்னும் தலைப்பில் எழுதினேன். இது `கனலி'யில் வெளிவந்தது. தொடர்ந்து திருவல்லிக்கேணியில் அலைந்து திரிந்து `அக்ரஹாரத்து மாடுகள்' எழுதினேன். இது டிசம்பர் `அம்ருதா'வில் வெளியாகியுள்ளது. பறை செய்யும், பறையடிக்கும் கலைஞர்களின் வாழ்வியல் பின்புலத்தில் `வழிப்போக்கனின் புலால் நாற்றம்', எழுதினேன். மேலும், மாடுவெட்டும் இடமான சென்னைப் புளியந்தோப்பு ஆட்டுத்தொட்டி பற்றி `கடைசிப் பச்சயம் தேசியக்கொடியில்', வாசக சாலை இணையத்தில் வெளிவந்தது. மேலும், விபத்துக்கு உள்ளாகும் மாடுகள், சர்வதேச அளவில் நடைபெறும் மாட்டுச் சந்தை, கோசாலை மாடுகள் பற்றியும் எழுதநேர்ந்தது. `வேள்வியில் எஞ்சிய கறியமுதம்' என்கிற கவிதை `பேபல்' இதழில் வெளிவருவதாக அதன் ஆசிரியர் குழு தெரிவித்துள்ளது. இக்கவிதைக்காக மட்டுமே பாண்டிச்சேரி, மார்த்தாண்டம், திண்டுக்கல், கொச்சி ஆகிய நகரங்களுக்குப் பயணமானேன். முதல் மூன்று நூல்களைவிட, குறைவான காலக்கட்டங்களில் அதிக பயணம் செய்து களஆய்வோடு எழுதப்பட்டது இந்நூல்.

அரிதான தருணங்களில் சந்தித்தாலும் செல்மா பிரியதர்ஸன் அவர்களுடனான உரையாடல் மந்திரம் போன்ற சொற்களால் என்னை வழிநடத்தியது. மேலும், என் எழுத்தைக் கண்டு அதன்மூலமே என்னை கூர்மைப்படச்செய்தவர். தொடர்ந்து உரையாடி என்மேல் பெரும் நம்பிக்கையும் கொண்டிருக்கும் கல்யாணராமன், யவனிகா ஶ்ரீராம், பிரவீன் பஃறுளி, வெய்யில், நேசமித்ரன், கிகிகொமேரி ஆரம்பம் முதலே நல்ல நூல்களை அறிமுகப்படுத்தும் பரிசல்.சிவ செந்தில்நாதன், நிலவெளி கவிதை படித்துவிட்டு நல்லதொரு உரையாடலை ஏற்படுத்திய தோழன் பெரு.விஷ்ணுகுமார் ஆகியோருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். இந்நூலுக்குப் பின்னட்டை எழுதிக்கொடுத்திருக்கும் ரமேஷ் பிரேதன் அவர்களுக்கும், கலை இலக்கிய விமர்சகர் இந்திரன் அய்யாவுக்கும் நன்றி. தமுஎகச விருது பெற்றபோது திருச்சியிலிருந்து அழைத்து 'உன்னைக் கணையாழி விருது விழாவில் பார்த்தபோது கலைஞனுக்குரிய அத்தனை அம்சங்களுடன் நீ இருப்பதை அறிந்தேன். ஆனால், உன் திறமைக்கு நீ அடைந்திருக்கும் உயரம் இதுவல்ல" என்று அன்புவார்த்தைகள் உதிர்த்த எழுத்தாளர் கலைச்செல்விக்கு நன்றி. 

எப்போதும் விட்டுவிடுதலையாகி குடும்பத்தைவிட்டு ஓடும் என்னை, ஒருநாள்மிக இறுக்கமாக இருந்த போது தன் நகையை அடகுவைத்து `எங்கயாவது வெளியில போய்ட்டு வாங்க மாமா' என்று சொன்ன மனைவி சுகன்யாவுக்கு நன்றி என்ற ஒற்றைச் சொல் போதாது. எழுத காரணமாக இருப்பது என் கிராமமாக இருந்தாலும் எழுத்து வலிமையடைவதற்கு மனைவி தரும் சுதந்திரம்தான் காரணம். மேலும், என்னை மிகவும் நேசிக்கும் நான் மிகவும் நேசிக்கும் என்னைத் தன் அன்பால் நெறிப்படுத்தும் மகள் யாழிசைக்கும், மகன் மீகாமனுக்கும் நன்றி. இந்நூலை வெளியிடும் நீலம் அமைப்புக்கும் பா.இரஞ்சித் தோழருக்கும் அன்பு முத்தங்கள்.


 

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...