Friday, March 25, 2022

நிலவில் கிணறு தோண்டலாமா!?

 

 


இரண்டு மூன்று நாட்களாக வளையல் வாங்கித் தரச் சொல்லிக் கேட்டுக்கொண்டிருந்தாள் மகள். மனைவி வாங்கிக் கொடுப்பாள் என்று சட்டை செய்யாமல் விட்டுவிட்டேன். மகனோ கிழிந்த இளஞ்சிவப்பு நிறப் பையைத் தைய்த்துத் தரச் சொல்லிக் கேட்டுக்கொண்டிருந்தான். இன்று இரவு தைய்த்துக் கொடுக்கிறேன் எனச் சாக்குப் போக்கிச் சொல்லி வந்தேன். அன்று மாலை அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் போது ஏதோ குற்றவுணர்வு என்னைக் குடைந்தது. உடனே மகள், மகன் இருவரையும் வாங்க பேக்கரிக்குப் போகலாம் என்று அழைத்துச் சென்றேன். பஜனை கோயில் தெருவாகச் செல்லாமல் பிள்ளையார் கோயில் தெரு வழியாக, மூத்திர நெடியடிக்கும் சந்தைக் கடந்து இருட்டில் ஒருவர் பின் ஒருவராகச் சென்றோம். செல்போன் வெளிச்சத்தால் இருட்டை விலக்கினேன், அதுவும் குறுங்கால்வாயின் கருங்கல் மீது சரியாகக் கால் வைக்க வேண்டும். இல்லையேல் புரட்டிப் போட்டுவிடும். தொழுவத்து வாசனையை நுகர்ந்தபடி ஓராண்டியம்மன் கோயில் தெருவில் உள்ள ஹாட் சிப்ஸ் கடைக்குச் சென்றோம்.

நேந்திரம், அச்சு முறுக்கு, பொறி உருண்டை வாங்கிக்கொண்டு கிளம்பும் போது பிளாக் ஃபாரெஸ்ட் கேக் வேண்டுமென மகள் அடம்பிடித்தாள். இன்னொரு நாள் வாங்கித் தருகிறேன், இப்போது இவற்றைத் தின்னுங்கள் என்றேன். மகள் வளையல் கேட்டது ஞாபகம் வர, வழக்கமாக அம்மாவுடன் எந்தக் கடையில் வளையல் வாங்குவீர்கள் என்றேன். தாத்தா கடையில் என்றாள். எங்கிருக்கிறது? இந்தத் தெருவின் கடைசியில், வாங்க நான் கூட்டிப் போய்க் காட்டுகிறேன் என்றாள். அக்காவுக்கு வளையல் வாங்குவது தெரிந்ததும் எனக்கும் ஏதாவது வாங்கித் தாங்க என்றான். முதலில் கடைக்குப் போவோம் என்றேன். 

தாத்தா கடையில் சிறுமியுடன் பெண்ணொருவர் இருந்தார். வளையல் வேண்டும் என்றதும் இருந்தவற்றைக் காட்டினார். குறைந்த வெளிச்சத்தில் மிகவும் சிறிய கடை அது. நிறைய வகைகள் இல்லை. இருப்பதில் பிடித்ததை வாங்கினோம். ஒரு ஜோடி இளஞ்சிவப்பு ; இன்னொரு ஜோடி மென் பச்சை என மொத்தம் 50 ரூபாய். மகனை நோக்கி 50 ரூபாய்க்குள் எதுவேண்டுமானாலும் வாங்கிக் கொள் என்றேன். ஏதோவோர் பொருளைத் தீவிரமாய்த் தேடினான். என்ன பொருள் என்று அவனுக்குச் சொல்லத் தெரியவில்லை. ஒருவழியாக வாசலில் தொங்கவிட்டிருப்பீங்க அல்லவா என்று மகள் சொன்னதும், ஓ அதுவா இப்போது இல்லை என்றார் கடைக்காரர். அந்தப் பொருளின் பெயர் நினைவில் இல்லை. சொப்புச் சாமான் வாங்கித் தாங்க என்றான். விலை கேட்டேன், 150 ரூபாய் என்றார். உனக்குத்தான் ஏற்கெனவே சொப்புச் சாமான் வாங்கிக் கொடுத்து இருக்கிறேனே, வாங்காத பொருளை வாங்கிக் கொள் என்றேன். அதுதான் வேண்டுமென அடம்பிடித்தான். எங்களுக்கும் பின் வந்த ஒருவர் 40 ரூபாய் தண்ணீர்ப் பொத்தலை எடுத்துக்கொண்டு 30 ரூபாய்க்குத் தரும் படி பேரம் பேசிக்கொண்டிருந்தார். அவர் பேசி முடித்ததும், தம்பி கேட்ட பொருள் எப்போது கிடைக்கும் என்று கடைக்காரரிடம் கேட்டேன். இன்னும் மூன்று நாளில் வந்துவிடும் என்றார். அப்போது வந்து வாங்கித் தருகிறேன் என்று ஒரு வழியாக இருவரையும் அழைத்து வந்துவிட்டேன்.    

வளையல்களை மகளும் ஸ்நாக்ஸை மகனும் எடுத்துக்கொண்டு வர மூவரும் பேசிக்கொண்டே படியேறினோம். இருவரையும் வீட்டுக்குள் போகச் சொல்லிவிட்டுச் சிறுநீர் கழிக்கச் சென்றுவிட்டேன். திரும்பி வந்து பார்த்தால், எனக்கு எதுவும் வாங்கித் தரவில்லை என்று தன் அம்மாவிடம் சொல்லிக் கட்டிலில் அழுதுகொண்டிருந்தான். அவனுக்கு எதுவும் வாங்கித் தராதது மனைவிக்கும் கோபம் என்பது பார்க்கும் போதே தெரிந்தது. இருவரையும் திட்டிவிட்டு வீட்டுக்கும் வெளியில் வந்து சுவரில் சாய்ந்தபடி இருண்ட மேற்கு வானை வெறித்துக்கொண்டிருந்தேன். சற்று நேரம் கழித்து வந்த மகன் தோளில் என்னை உட்கார வையுங்கள் என்றான். அவன் முன் குனிந்து குத்துக்காலிட்டேன். என் நெஞ்சுப் பகுதியில் ஒரு காலையும் முதுகுப் பகுதியில் இன்னோர் காலையும் போட்ட படி அமர்ந்தான். மொட்டை மாடியின் ஒரு முனைக்கும் மறு முனைக்கும் அவனைத் தூக்கிச் சென்று நிலவினைக் காட்டினேன். மகளும் நிலவொளியில் நனைந்தாள். எங்களின் காலடிகளால் மொட்டை மாடி மத்தளமிட்டது. கூண்டுக்குள் இருந்த பச்சைக் கிளிகள் பாடின. நிலாவில் வீடு கட்டுவதைப் பற்றியும் கிணறு தோண்டி நீர்ப் பாய்ச்சுவதைப் பற்றியும் கதைக்கலானோம். 

25.03.2022
வெள்ளிக்கிழமை

2 comments:

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...