Tuesday, March 22, 2022

ஷங்கரின் மூங்கில் நாற்காலி


தண்டீஸ்வரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்துகொண்டிருந்தேன். ஹோத்தாஸ் காபி கடையில் இருந்து கண்ணதாசன் கையசைத்தார். அருகே வேதா நாயக் இருந்தார். நலம் விசாரித்தபடி பேசிக்கொண்டிருந்தோம். ஒரு காபி குடியுங்கள் என்றதும் முதலில் மறுத்தேன். தொடர்ந்த அன்பின் கட்டளையை மறுக்க முடியவில்லை. இப்போதெல்லாம் பால் கலந்த தேநீர், காபியைத் தவிர்த்து வருகிறேன். வேலை எப்படி போய்க்கொண்டிருக்கிறது, பிள்ளைகளின் நலம் குறித்து பரஸ்பரம் பகிர்ந்து கொண்டோம். வீடு வெங்கடேஷ்வரா நகரில்தானே என்றேன். இல்லை விஜய நகர். ஜீவ கரிகாலன் வீடும் என் வீடும் அருகருகேதான் உள்ளன என்றார். அவர் வீட்டுக்கும் அருகே புதிய பேருந்து நிலையம் வரப் போவதாகவும் இரவு நேரங்களில் அதற்கான பணியின் போது கருவேல மரங்கள் வெட்டப்படும் ஓசை ஒலித்துக்கொண்டிருப்பதாகவும் கூறினார். வேத நாயக்கின் முக வீக்கம் கண்டு என்னாச்சு என்றேன். கை விரல்களில் தோலுரிந்து வருவதை இரு கைகளையும் நீட்டிக் காண்பித்தார். என்னாச்சு என்றே தெரியவில்லை ஒரு நாளைக்கு 150 முறை தும்மல் வருவதாகவும் கூறினார். யோவ் தும்மலைக் கண்டு வாடிக்கையாளர் கடைக்கு வராமல் போயிடப் போறாங்கய்யா என்று கண்ணதாசன் கிண்டல் செய்தார். சரி நான் மேலே செல்கிறேன் என்று ஆவி பறத்தலை ஏந்தியபடி வேதா சென்று விட்டார். 

வீட்டு வாடகை, கார் பார்க்கிங், மழைக்காலத்தில் வெள்ளம் வருவது பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருக்கையில் கறுப்பு உடையுடன் தெலுங்கு பிராமணர் தெருவிலிருந்து சாலையைக் கடந்தார் கவிதைக்காரன் இளங்கோ.  கணையாழியில் நான் உதவி ஆசிரியராகப் பணிபுரியும் காலத்திலிருந்தே கண்ணதாசனும் இளங்கோவும் பரிச்சயமானவர்கள். என்ன எதுவும் எழுதினீர்களா என்றார். உரைநடைதான் எழுதிக்கொண்டிருக்கிறேன். இன்னும் கவிதை எழுதவில்லை என்றேன். சரி, எழுதினால் அவசியம் அனுப்புங்கள் என்றார். கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக யாவரும் இணையதளத்திற்குக் கவிதைகள் கேட்டுக்கொண்டிருக்கிறார். கவிதை எழுதும் சூழலை இன்னும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை. முழுக்க உரைநடையில் கவனம் செலுத்தி வருகிறேன். எழுதினால் முதலில் யாவருக்கும் அனுப்ப வேண்டும். மேலே வாங்க போலாம் என்று இளங்கோ அழைத்தார். இல்லை நண்பா வீட்டுக்குச் செல்ல வேண்டும் இன்னொரு முறை பார்க்கலாம் என்று விடை பெற்றுச் சென்றுவிட்டேன்.

கீழறைக்குச் செல்லாமல் மேலறைக்குச் சென்றேன். பிள்ளைகள் படித்துக்கொண்டிருந்தனர். மாமா, கீழ போய் தூங்காமல் மேலேயே எங்களுடன் தூங்குங்கள். அலுவலகம் முடிந்து வருகிறீர்கள், சாப்பிடுகிறீர்கள் உடனே கீழ போய் விடுகிறீர்கள். திரும்பவும் காலையில் வருகிறீர்கள் சாப்பிடுகிறீர்கள் அலுவலகம் சென்று விடுகிறீர்கள். என்னம்மோ நாங்க மட்டுமே இருப்பதாகத் தோன்றுகிறது என்றாள். எனக்கும் ஒரு வார காலமாக இதே உணர்வு இருந்தது. சரி இன்றிலிருந்து மேலேயே தூங்குகிறேன் என்றேன். இதற்கு முன் பல நாள்கள் அப்பா எங்க கூட தூங்குங்கப்பா என்று அடிக்கடி மகள் கேட்டுக்கொண்டே இருந்தாள். கீழறைக்குச் சென்று உடை மட்டும் மாற்றிவிட்டு உடனே வருகிறேன் என்றேன். கூடவே மகனும் வந்தான். 

அப்பா இந்த மூங்கில் நாற்காலியை மேலே எடுத்துச் செல்லலாமா என்றான். அங்கு இடமில்லை வேண்டாம் என்றேன். நீங்க எடுத்திட்டு வாங்க நான் ஒரு ஐடியா தருகிறேன் என்றான். ``நான் ஒரு ஐடியா தருகிறேன்'' என்கிற வார்த்தைகளை மிகவும் ரசித்தேன். ரசித்ததை அறிந்த மகன் மீண்டும் ஒரு முறை அவ்வாறு கூறினான். நான் அந்த மூங்கில் நாற்காலியைத் தலைக்கு மேல் சுமந்த படி சென்றேன். இப்படித்தான் ஷங்கரின் வீட்டில் இருந்து அவர் வண்டிக்குப் பின்னமர்ந்து சுமந்து வந்தேன். கடந்த வாரம் அவர் வீட்டிற்குச் சென்ற போது இதன் விலை என்ன இருக்கும் என்றேன். நீங்க எடுத்துக்கங்க பச்சோந்தி என்றார். இல்லை, விலையை அறிந்துகொள்ளத்தான்  கேட்டேன் என்று தயங்கினேன். நூறு சதவிகிதம் சொல்கிறேன் நீங்க எடுத்துக்கங்க என்றதும் எடுத்து வந்துவிட்டேன். கல்யாணமான புதிதில் வாங்கியது என்றார். அவர் நினைவுகளுடன் என் வீட்டில் இருக்கிறது அந்த மூங்கில் நாற்காலி. 

கம்பிகளற்ற ஜன்னலின் அருகே அமர்ந்து பிள்ளைகள் கீழே எட்டிப் பார்த்து விடுவார்களோ என்கிற அச்சத்தில் இருக்கிறேன். அது வேறு இரண்டாவது மாடி. கட்டிலுக்கும் அலமாரிக்கும் இடையில் வைத்துவிட்டு, இங்கிருந்து நகர்த்தக் கூடாது என்று அன்புக் கட்டளை விதித்தேன். பின்பு, கேலிச்சித்திர வரலாறு நூலைச் சற்று நேரம் புரட்டிய படி இருந்தேன். மேலும் மூன்று புத்தகங்களின் பக்கங்கள் புரளும் சத்தம். நேற்றிரவு மகளைக் கட்டிக்கொண்டு மனைவியும் மகனைக் கட்டிக்கொண்டு நானும் உறங்க ஆரம்பித்தோம். 

23.03.2022
புதன்கிழமை


 

No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...