Monday, November 7, 2022

என்னை நன்றியுள்ளவனாக்கு இயற்கையே!


நாம் மிகவும் நேசிக்கக்கூடியவர்களின் ஒவ்வோர் அசைவையும் அவர்கள் அடையும் உயரங்களையும் கண்டு நெகிழ்ச்சியடைந்து அவர்கள் மேற்கொள்ளும் பயணத்திலுள்ள சாதக பாதகங்களைப் பகிர்ந்து அவர்களின் நலம்விரும்பியாக இருப்போம். ஆனால், அவர்கள் நம்மீது சிறு அடிப்படைப் புரிதலுமின்றி இருப்பார்கள். தெரிந்தும் அவர்களின் மீது தொடர்ந்து அன்பு செலுத்திவருவோம். அவர்களும் தொடர்ந்து நம்மைச் சந்தேகத்திற்கு உட்படுத்தி, யூகங்களால் நம்மை மதிப்பிட்டபடியே இருப்பார்கள். மேலும் மேலும் இவர்களின் அன்பைப் பெற நடத்தைச் சான்றிதழை நெற்றியில் ஒட்டியபடி வாழ நேரிடும். இன்னும் சிலர் சாதிச் சான்றிதழைக் கண்டு நெருங்குவார்கள். மாறாக ஒருவரின் நடத்தை, சாதி இரண்டையும் பொருட்படுத்தாமல் எங்கோ இருக்கும் ஒரு சாமானியரை, வாழ்வின் விளிம்பில் தத்தளிப்பவரை உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் செல்லவேண்டுமென்ற அரிதான உறவையும் கண்டிருப்போம். என் வாழ்வில் ஓர் அரிதான உறவுதான் எழுத்தாளர் கே.வி.ஷைலஜா. 

2015 ஆம் ஆண்டின் மத்தியக் காலத்தில் கணையாழியில் வேலை செய்த போது வேறு எந்தப் பத்திரிகை அலுவலகத்திலும் வேலை தேடிச் சென்றது கிடையாது. அங்கு பணிநீக்கம் செய்த பிறகு இதைவிட நல்ல இடத்தில் வேலைக்குச் சேர வேண்டும் என்கிற வைராக்கியம் உதித்தது. இப்போதும் கணையாழிதான் என் முதல் பள்ளி. ம.இராசேந்திரன்தான் என் முதல் ஆசிரியர் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை. திடீர் திருமண வாழ்வை எதிர்கொள்ள முடியாது தத்தளித்த போதுதான் கணையாழியில் பணிக்குச் சேரும் வாய்ப்புக் கிடைத்தது. மேலும், வியாபாரமா இலக்கியமா என்கிற குழப்பம் வேறு. இரண்டிற்கும் தீர்வு சொன்னது கணையாழிதான். ம.இராசேந்திரன் சக மனிதன் மீது செலுத்தும் அன்பும் அவர் குடும்பத்தில் ஒருவருக்கிடையே இருக்கும் அந்நியோன்னியமும்தான் என் இல்லற வாழ்விற்குத் தெளிவைக் கொடுத்தது.  

மகன் மீகாமன் பிறந்த தருணத்தில் மிகத் தீவிரமாக வேலை தேடிக்கொண்டிருந்தேன். பொருளாதார நெருக்கடியின் போது நண்பன் ஆன்மன் போன்றோர் மிகவும் உறுதுணையாக இருந்தனர். மிகவும் துயருற்ற சமயத்தில் என் மகனை நினைத்து ஒரு கவிதை எழுதி முகநூலில் பதிவிட்டிருந்தேன். அதைப் படித்த கவிஞர் பீனிக்ஸ் ஷைலஜாவிடம் சொல்லி இருக்கிறார். பச்சோந்தியைக் கூப்பிடுங்க அவனுக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று ஷைலஜா - பவா சொன்னதாக பீனிக்ஸ் என்னிடம் தெரிவித்தார். யார் அழைத்தும் அவ்வளவு எளிதில் அடைக்கலம் தேடிச் செல்ல விருப்பமில்லாதவன் ஷைலஜா, பவா இருவரின் அன்பில் அடைக்கலமானேன். அதற்குமுன் வம்சி புத்தகக் கடை வீட்டிற்கு மாறிய போது நண்பன் ம.நவீனுடன் அங்கு சென்றிருக்கிறேன். அந்நிகழ்வில்  எழுத்தாளர் பிரபஞ்சன் 360 டிகிரியில் தன் மென்னுரையை ஆற்றிக்கொண்டிருந்தார். ஓலையின் அடியில் இளஞ்சிவப்பு வெளிச்சத்தில் அமர்ந்தபடி அவரின் பேச்சை ரசித்துக்கொண்டிருந்தேன். அருகில் கிருஷ்ண மூர்த்தி, ஷபி இருவரும் அமர்ந்திருக்கத் தங்களை அறிமுகம் செய்துகொண்டோம். இவர்கள் இருவரும் சேர்ந்துதான் என் முதல் நூலான 'வேர்முளைத்த உலக்கை'க்கு திருவண்ணாமலை அடிவாரத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்கள். எழுத்தாளர் அழகிய பெரியவன் சிறப்புரையாற்றிய இந்நிகழ்வுக்கு ஷைலஜா, பவா இருவரும் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர். அந்நிகழ்வின் ஏற்புரையில்கூட நான் சுமாராகத்தான் பேசியிருந்தேன். இப்படி எந்த நெருக்கமுமில்லாத என்னை அழைத்துத் தங்கள் வீட்டில் தங்கவைத்து வம்சி பதிப்பகத்தில் வேலை கொடுத்தார்கள். அதுவும் வேறு வேலை கிடைக்கும்வரை வருமானம் கிடைக்கச் செய்ததுதான். ஒரு சமயம் விகடன் ஆசிரியர் ரா.கண்ணன் தனக்குத் தெரிந்தவர்தான் அவரிடம் உனக்கு வேலை கேட்டுப் பார்க்கிறேன் என்றார் ஷைலஜா. சொன்னதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து என் வேலை குறித்து அவ்வப்போது அவருக்கு நினைவூட்டினார். மாதங்கள் உருண்டோட நம்பிக்கையற்ற ஒரு பொழுதில் சென்னையிலுள்ள ஒரு புத்தகக் கடைக்கு என்னை நேர்காணலுக்கு அனுப்பினார் பவா. அங்கு மிகக் குறைவான சம்பளம் தருவதாகச் சொன்னதால் நான் மறுப்புத் தெரிவித்துவிட்டேன். 

இடைவிடாத நம்பிக்கையுற்ற ஷைலஜா கவலைப்படாத பச்சோந்தி விகடனில் உறுதியாகக் கிடைக்கும் என்று நம்பிக்கையளித்து ஆற்றுப்படுத்தினார். ஓர்நாள் அந்தக் காத்திருப்புக்கு அர்த்தம் கிடைக்கும் வகையில் ரா.கண்ணன் உன்னைச் சந்திக்க வரச் சொல்லியிருக்கிறார் என்று சொன்னதும் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தேன். அதற்கு முன்பு `இவன்தான் பாலா' போன்ற தொடர் படித்திருந்தாலும் ரா.கண்ணனின் முகம்கூட எனக்குத் தெரியாது என்று இப்போது சொல்வதில் வெட்கமாகத்தான் உள்ளது. என் முதல் நூலையும் அடுத்து வரவிருந்த நூலின் பிரின்ட் அவுட்டும் கூடவே கணையாழி, தமிழ் ஸ்டூடியோ `கூடு'வில் வெளியாகியிருந்த இரண்டொரு கட்டுரைகளின் நகலுடன் ஆனந்த விகடன் வரவேற்பறையில் காத்திருந்தேன். 

சட்டென்று என்னைப் பார்த்த ஒருவர் நான்தான் கண்ணன் வாங்க பாஸ் என்று கண்ணாடிச் சுவர்களாலான சிற்றறைக்கு அழைத்துச் சென்றார். மிகக் குறுகிய நேரம்தான் என்னிடம் பேசினார். உங்க பெயர் ரொம்ப unique ஆக இருக்கே அதென்ன பாஸ் பச்சோந்தி என்று ரா.கண்ணன் கேட்கச் சட்டென்று mother of god என்று பதிலளித்தேன். இதற்கு முன்பு என் புனைபெயர் குறித்து இவ்வளவு நேர்மறையாக யாரும் என்னிடம் கேட்டதில்லை நானும் இப்படி பதில் சொன்னதில்லை. இதுவரை யாருக்குமே சிபாரிசு செய்யாத ஷைலஜா உங்களை அனுப்பியிருக்கிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. கட்டாயம் ஏதோ உங்களிடம் இல்லாமல் அனுப்பியிருக்கமாட்டார். ஆனால், உங்களைப் பற்றி எதுவும் எனக்குத் தெரியாது, தெரிந்துகொண்டு அழைக்கிறேன் என்று அனுப்பிவைத்தார். 

ஒரு நாள் அழைத்துத் தேர்வு வைத்தார்கள். ரவிபிரகாஷ்தான் அத்தேர்வை நடத்தினார். வெண்ணிறத் தலைமுடியுடன் இந்தியன் தாத்தாவைப் போல் தோற்றத்திலும் குரலிலும் மிரட்டலாக இருந்த இவர்தான் பின்னாளில் ஆனந்த விகடனில் எனக்கு மிக ஆதர்சமாக இருந்தார். 

தான்தோன்றித்தனமாக, திக்கற்ற திசையில், இது இரவா பகலா என அறியாது பயணித்துக்கொண்டிருந்த என் வாழ்வில் மாபெரும் தீபத்தை ஏற்றினார் ஷைலஜா. வேலைக்குச் செல்லுமுன் எக்காரணத்தைக் கொண்டும் வெளியில் வந்துவிடக் கூடாது எதுவாக இருந்தாலும் முதலில் எங்களிடம் சொல்லு பச்சோந்தி பிறகு நாம் முடிவு எடுத்துக்கொள்ளலாம் என்று பவாவும் ஷைலஜாவும் என்னைத் திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு அனுப்பிவைத்தனர். விகடனில் வேலை செய்த 2016 டிசம்பர் முதல் 2020 ஜுன் வரை எந்தப் புகாரும் அவர்களிடம் சொன்னதில்லை. ஏன் அதன்பிறகு திருவண்ணாமலைக்கே ஒருமுறைதான் சென்றேன். அதுவும் என்னுடைய இரண்டாவது கவிதை நூலான `கூடுகளில் தொங்கும் அங்காடி' நூல் வெளியீடு நிலத்தில் நடைபெற்ற போது சென்றதுதான். அதன்பிறகு அவ்வப்போது ஷைலஜா, பவாவுடன் பேசவுமில்லை. 

ஆனந்த விகடனில் என் பணியை நிரந்தரமாக்க, என்னை நீரூபிக்க மிகக் கடுமையாகப் போராடினேன். ஆரம்ப காலத்தில் தேநீர் குடிக்கக் கூட வெளியில் வந்ததில்லை, மதிய வெயிலைப் பார்த்ததில்லை. முதல் சந்திப்பின் போது விகடன் மனிதவள மேம்பாட்டுத்துறையைச் சேர்ந்த புவனேஸ்வரி ஏன் விகடனைத் தேர்ந்தெடுத்தீர்கள் எனக் கேட்டார். பத்திரிகைத் துறைக்கு இது ஒரு பல்கலைக்கழகம் என்றேன். எங்கோ ஒரு மூலையில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த என்னை விகடன் போன்ற பல்கலைக்கழகத்தில் படிக்கவைத்தவர் எழுத்தாளர் ஷைலஜா. அவரை அவ்வப்போது நினைத்துப் பார்ப்பதைத் தவிர எந்நன்றியும் அவருக்குச் செய்ததில்லை. ஷைலஜாவின் இப்பிறந்தநாளில் என்னை நன்றியுள்ளவனாக்கு என்று இயற்கையிடம் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.



No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...