அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்ததும் வாசலில் நின்றவாறே, சுவரோரமிருந்த பழுதுற்ற தொலைக்காட்சிப் பெட்டின் அருகில் பையை வைத்தேன். மனைவி, மகன் இருவரும் கட்டிலில் அமர்ந்திருந்தனர். மகள் நின்றுகொண்டிருந்தாள். கைகால் கழுவச் சோப்பைத் தேடினேன். எப்போதும் வெளியிலிருக்கும் வெளிரிய ட்ரம் மீதுதான் இருக்கும். சில நேரத்தில் சிறிய மென்நீல வாளியில் துணி சோப்பு, பேஸ்ட், பிரஸ்களோடு கலந்திருக்கும். அம்மா இன்று சேலை கட்டினார் என்றாள் மகள். முதலில் மகிழ்ச்சியாக இருந்தாலும் சற்றெனக் கோபம் வந்து உங்க அம்மா சேலை கட்டினால் எனக்கென்ன கட்டாவிட்டால் என்னக்கென்ன என்றேன். மகளின் முகம் சுருங்கியதைக் கண்டேன். பையை உள் வைக்கும் போது நைட்டிதான் கட்டியிருந்தாள். ஆனால், அழுக்கு நைட்டியல்ல.
Monday, February 28, 2022
பசியற்ற வயிறும் பசியுற்ற உடலும்
லூஸுத்தனத்தின் முடிவிலி
துணிதுவைக்க மாடிக்கு வந்தேன். அவ்விடத்தைப் பாத்திரங்களால் நிரப்பியிருந்தாள் மனைவி. ஆடஞ்சு நிற வாளியில் துணிகளை அமிழ்த்தினேன். ``பாத்திரம் துலக்க வேண்டும், பால் காயவைக்கக் கூடப் பாத்திரமில்லை. நான் அப்புறம் துவைத்துக்கொள்கிறேன்'' என்றாள். அவளின் சொற்களுக்குச் செவிகொடுக்காமல் கொஞ்சம் தள்ளி இந்துவின் வாசலில் அமர்ந்து துவைக்க ஆரம்பித்தேன். நீர்செல்லும் வழியில் ஏற்பட்ட அடைப்பைக் கேபிள் வயரால் துளைத்துக்கொண்டிருந்தாள். பின் தடிமனற்ற வயரால் துளைத்தாள். அவளுக்கு உதவியாக முயற்சி செய்து, இறுதியாகக் குச்சியால் குடைந்தோம். ஒன்றும் பயனில்லை. வெளியில் வந்த இந்து எங்களின் நிலையை வீட்டுக்குள்ளிருக்கும் தன் கணவனிடம் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன். சற்று நேரத்தில் வெளியில் வந்த பெருமாள் என்னாச்சு அண்ணா என்றபடி, சுவரில் பொருத்தப்பட்டிருக்கும் குழாயின் இணைப்பைப் பிடுங்க முயற்சி செய்தார். அதிலிருந்து வெளிவரும் நீர் அடுத்த வீட்டின் பின்பகுதியில் கொட்டாமல் இருக்க, ஒரு வாளி கேட்டார். எந்த வாளியை எடுத்துக்கொடுப்பது என்பதில் என் மனைவிக்குக் குழப்பம் ; எனக்கும்கூட. சற்றேனத் துணிதுவைக்க நீர் பிடித்து வைத்திருந்த சிறிய வாளியை எடுத்துக்கொடுத்தேன். பிடுங்கப்பட்ட குழாயைக் குலுக்க அடைப்பிலிருந்து பொதுபொதுவென நீர்கொட்டியது. பின், துவைப்பதைத் தொடர்ந்தேன். மனைவி பாத்திரம் தேய்க்க ஆரம்பித்தாள்.
இரண்டு பேன்ட்டை மட்டும் படிச்சுவரில் காயவைத்தேன். அவற்றையும் கொடிக் கயிற்றிலேயே காயவைக்கலாம் என்றாள். கொடி அறுந்துவிடும் என்று மறுத்துவிட்டேன். பால் வேறேன்ன வாங்க வேண்டும் என்றேன், அமைதியாக இருந்தாள். பீரோவைத் திறந்து பேன்ட், சட்டை, ஜட்டி மூன்றையும் எடுத்துக் கட்டிலில் வைத்தேன். குளிக்கப் போகும் முன் மீண்டும் என்ன வாங்கணும் என்றேன். பால், சன் ரைஸ், விம் பார் மட்டும் போதும் என்று சொல்ல, படியிறங்குகையில் மகன் அழைத்து `அம்மா துணி சோப்பு வாங்கி வரச் சொன்னாங்கப்பா' என்றான். ஓகே என்று சைகை செய்த படி `அம்மாடியோ கொலுசுச் சத்தம் ஆதாரமா நெஞ்சு நிக்கும்' என்கிற புத்தம் பூவே திரைப்படப் பாடலைப் பாடிக்கொண்டே புஸ்ரா கடைக்குச் சென்றேன்.
பொருள்கள் கொடுத்துக்கொண்டபடி நேற்று வந்த விருந்தாளி யார் என்றார் கடைக்காரர். என் அண்ணன். அவர்தான் என்னைப் பள்ளி முதல் கல்லூரிவரை படிக்க வைத்தவர். தாயாய், தந்தையாய், நண்பனாய் இருந்து என்னை ஆளாக்கியவர் என்றேன். எப்போது சென்னைக்கு வந்தேன், உடன்பிறந்தவர்கள் எத்தனை பேர், என்னென்ன வேலைகள் செய்திருக்கிறேன் என அனைத்து விவரங்களையும் கேட்டறிந்தார். பிறிதொரு தருணத்தில் விரிவாகப் பேசுவோம் என விடைபெற்றேன். சந்தில் நுழைந்து செல்லும் போது பொருட்களின் எண்ணிக்கை குறைவது போல் தோன்ற பேச்சினூடே விம் பார் கேட்டேதை அவரும் சரிபார்ப்பதை நானும் மறக்கலானோம். மீண்டும் ஓடிச் சென்று வாங்கி வரும் வழியில் இட்லிக் கடை ஆயா அழுகிய முட்டைகளைச் சாலையில் வீசிக்கொண்டிருந்தார். அழுகலைக் கொத்தி வானோக்கிக் கரைந்தது காகம்.
சோப்புக் கரைசலில் அழுக்கு தேய்க்கையில் லிங்கம் சற்று வலித்தது. இரவின் சுயமைதுன நினைவு வந்துபோனது. தலைக்கு எண்ணெயே வைக்க மாட்டிக்கிறீங்க என்று கடந்த வாரம் பாரசுட் தேங்கெண்ணெய்ப் போத்தலைக் கொடுத்தாள். பேச்சுவாக்கில் கீழறைக்கு எடுத்துச் சென்றுவிட்டேன். நேற்று இரவு ஆன் ஃப்ராங்கின் `ஒரு இளம்பெண்ணின் நாட்குறிப்பு'ப் படித்துக்கொண்டிருக்கையில் ஓரிடத்தில் யாக்கை சிலிர்த்தது. கைக்கு வாகாக இருந்த எண்ணெயை எடுத்து என் அடிவயிற்றில் ஊற்றிப் பிசைந்துகொள்ள ஆரம்பித்தேன். கூழாங்கல்லைப் போலிருந்த லிங்கம் கடப்பாரையாய் விறைத்து விம்மியது. உடலுறவை விட சுயமைதுனத்தில்தான் இன்பத்தின் விளிம்பைச் சந்திக்க நேர்கிறது. ஆனாலும், எண்ணிப் பார்க்க உடலுறவே சுகந்தமானது.
குளித்து முடித்துக் கீழறைக்குச் சென்று உடைகூட மாற்றாமல் செல்போனில் செஸ் விளையாட ஆரம்பித்துவிட்டேன். ஜெயிக்க வேண்டிய ஆட்டம் எதிராளி கைக்கு மாறும் நொடியில் ``அப்பா டீ குடிக்க வாங்க'' என்றாள் மகள். சூட்டைச் சிறுகச் சிறுகப் பருகியபடி, O N E ONE, T W O TWO படித்துக்கொண்டிருந்த மகனைப் பார்த்தேன். வாஜி, போஜி, பஜ்ஜி என்று கிண்டலடித்தேன். கையிலிருந்த வாய்ப்பாட்டை என் மீது எறிந்தான். அட்டை கிழிந்த வாய்ப்பாடு உன் கிழிந்த டவுசரு மாதிரி இருக்கிறது என்றேன். அனைவரும் கைகொட்டிச் சிரிக்க ஆரம்பித்தோம். பசியற்றதால் சாப்பாடு வேண்டாம் என்று அலுவலகம் கிளம்பினேன். இரண்டு தோசையாவது சாப்பிடுங்கள் என்றாள் மனைவி. ஆமாம், போட வேண்டியதைப் போட மாட்டிக்கிறாய். ஆனால், பசியில்லையென்றாலும் சோற்றைப் போட்டுக் கொல்லுகிறாய் என்றேன். ``போட வேண்டியது என்னதுப்பா'' என்றான் மகன். உன் அம்மாகிட்ட போய்க் கேளு, ரகசியமாய்க் காதில் சொல்லும் என்றேன். லூஸுத்தனமா ஏதாவது உளரிக்கிட்டே இருக்காதீங்க என்றாள். ஆம் இது லூஸுத்தனத்தின் முடிவிலிதான்.
28.02.2022
திங்கட்கிழமை
Friday, February 25, 2022
நம்புவீர்களா டியர்ஸ்!
தி.நகர் காய்கறிச் சந்தைக்குச் சென்றுவிட்டு V51 பேருந்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். தண்டீஸ்வரம் பேருந்து நிறுத்தத்தின் அருகே கோத்தாஸ் காபிக் கடை வாசலில் தள்ளுவண்டியில் வாழைப்பழம் விற்றுக்கொண்டிருப்பவரிடம் தினமும் 20 ரூபாய்க்கு ஏலக்கி வாங்கி வருவேன். காய்கறிப் பைகள் இரண்டையும் கடை வாசற்படியில் வைத்துவிட்டுப் பழம் வாங்கினேன். பின்பு, சாலையைக் கடந்து அரசமரத்தடி அடர் இருட்டில் கறுப்பு முகக் கவசத்தைக் கழற்றி மூச்சை இழுத்துவிட்டேன். கனத்தை இரு கால்களின் மீது வைத்துக் கை மாற்றிக்கொண்டேன். பிரமிளா மாவுக் கடை அருகில் இருசக்கர வாகனத்தின் பின் பக்கம் கிடைமட்டமாய்ச் சாய்ந்த பெண்ணொருத்தி. அத்தெருவின் முனை இருட்டில் நின்ற வண்டியில் முணுமுணுப்புச் சத்தம். இப்போது நான் மேட்டுத் தெருவின் முனையில் சென்றுகொண்டிருக்க கிடைமட்டமற்ற வண்டி என்னைக் கடந்து சென்றது.
முள்ளங்கி நிலா
அன்று மாலை அலுவலகம்விட்டு வீடு செல்லும் போது முறுக்கு, ப்ரெட், சிப்ஸ் வாங்கிச் சென்றேன். பிள்ளைகள் இருவரும் கட்டிலில் படுத்திருந்தபடி மோட்டு - பட்லு பார்த்துக்கொண்டிருந்தார்கள். முறுக்கைப் பிரித்த மனைவி சிக்கு வாடை அடிப்பதாக என்னையும் முகர்ந்து பார்க்கச் சொன்னாள். எனக்கும் அப்படியான வாசனை அடித்தது. ஆனால், கடிக்கும் போது அப்படியான தன்மை தெரியாததால் சாப்பாட்டுகுக் கடித்துக்கொண்டேன். ஏற்கனவே ஒருமுறை வாங்கிவந்த முறுக்கு வாயில் வைக்க முடியாத அளவுக்குச் சிக்குவாடை அடித்தது. கடைக்காரரிடம் கொடுத்து வேறு பாக்கெட் வாங்கிவந்தேன். எடுத்துச் சென்ற முறுக்கை ஒருவருக்கு இருவர் கடித்துச் சுவைத்துப் பார்த்துதான் கொடுத்தார்கள். இப்போது இரண்டாவது முறை. இதை மாற்றிவர தண்டீஸ்வரம் வரை போக சோம்பேறித்தனம். கோபத்தில் இனி அங்கு வாங்கக் கூடாது என்று முடிவெடுத்துவிட்டோம்.
தம்பி, சாப்பிடும் வரை செய்தி வை. அப்பா கீழ போன பிறகு மீண்டும் பொம்மைப் படம் வைத்துக்கொள் என்றேன். போப்பா என்ன டிவியே பார்க்க விடமாட்டிக்கிறீங்க. எப்பப் பாரு நியூஸ் சேனலையே பார்க்கிறீங்க என்றான். எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் அவன் சேனலை மாற்றவில்லை. சாப்பிட்டு முடித்துச் சாவியை எடுத்துக்கொண்டு கீழறைக்குச் சென்றேன். இன்னைக்காவது எங்கள் கூட தூங்கக் கூடாதாப்பா. எப்பப் பார்த்தாலும் கீழயே போய் தூங்கிறீங்க என்றாள் மகள். நான் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்து வெளியேறினேன். அப்பா கீழ வந்து உங்கள் கூட செஸ் விளையாடவா, விளையாடி முடித்ததும் என்னை மேல விட்டுடணும் ஓகே வா என்றாள். சரி வாம்மா என்று அழைத்துச் சென்றேன். படியிறங்கும் முன் பையைக் குடுங்க நான் எடுத்து வருகிறேன் என்று பிடிவாதமாக வாங்கிக்கொண்டாள்.
Thursday, February 24, 2022
கிளீன் போல்டு ஆகுமா கிளிஷே?
நேற்று தோழி ஒருவருக்கு `புத்தக் காட்சிக்குச் சென்றீர்களா' என்று செய்தி அனுப்பியிருந்தேன். `இன்னும் இல்லை, நீங்கள் எத்தனை தடவை சென்றீர்கள் பச்சோ' என்றார். `ஒரு தடவைதான், அதுவும் சும்மா. உங்களை மாதிரி அன்பான, அழகான ஒருவர் புத்தகங்கள் வாங்கித் தருவது என்று சொன்னால் மீண்டும் வரலாம் என்று இருக்கிறேன்' என்றேன். சிறிது நேரத்தில் மூன்று சூப்பர் எமோஜிகளை அனுப்பினார். `வெறும் சூப்பர்தானா' என்றேன். வெகுநேரமாக என் செய்தி கிரே நிறத்திலேயே இருந்ததால், அனுப்பாமல் இருந்திருக்கலாமோ என்று தோன்றியது. பின்பு அன்பான, அழகான போன்ற சொற்கள் ரொம்ப கிளிஷேவானவை அவற்றை நீக்கியிருக்கலாமோ, நீக்கிவிட்டால் உப்புச் சப்பற்ற சொற்றொடராக இருந்திருக்கும் அல்லவா. தோழிகளிடம் புத்தகம் வாங்கித் தரச் சொல்வதே கிளிஷேதான். இப்படியாக ஏதேதோ எண்ணிக்கொண்டிருந்தேன்.
பொதுவாகப் பெண்களிடம் அதிகம் பழகும் ஆளில்லை ; குறைவாகவும் கூட. ஆனால், பெண்ணுறவுக்காக ஏங்கும் ஆண்களில் நானும் ஒருவன் என்பதில் எந்தக் கூச்சமுமில்லை. அன்பு, அழகு, ஏக்கம், கூச்சம், பிறப்பு, இறப்பு அனைத்துமே ஒரு கிளிஷேதானே. `சமூக வலைத்தளங்களில் இப்பெருநகரத்தில் எத்தனை பெண்கள் உண்டு, ஏன் நமக்கென்று ஒரு தோழி இல்லை' என்று எத்தனை முறை என்னை நானே கேள்வி எழுப்பியிருக்கிறேன். நான் ஒன்றும் விலங்குகள் வாழும் வனத்தில் இல்லை ; விண்மீன்கள் கொட்டிக்கிடக்கும் வானில் இல்லை ; ஓயாது ஒலிக்கும் அலை மடிப்புக்குள் இல்லை ; வேர்களைப் போல் நிலத்துக்குள்ளும் இல்லை. பிறகேன் இக்கொடிய தனிமை. கோடி மக்களில் நானும் ஒருவனாகத்தான் இருக்கிறேன். ஏன் ஒருவருக்கும் என்னைப் பிடிக்கவில்லை என்று தோன்றும். அப்போதெல்லாம் `உன்னைத் தேடி எத்தனை பெண்கள் வந்திருக்கிறார்கள். நீதான் வறட்டுக் கௌரவத்துடன், பயத்துடன் அவர்களைக் கண்டு விலகி ஓடியிருக்கிறாய். கொஞ்சம் நிதானமாக இரு; எதற்கும் அவசரப்படாதே ; சக மனிதருக்காக நேரம் ஒதுக்கு ; அவர்களிடம் உரையாடு. உனக்குள் உன்னைப் பூட்டிவைத்திருக்கிறாய். முதலில் உன்னைத் திற' என்று உள்ளுணர்வு பின்மண்டையில் அடிக்கும்.
நேற்று பதில் அனுப்பாத தோழி இன்று காலை சிரிப்பு எமோஜியுடன் Good Morning அனுப்பியுள்ளார். Very Good Morning உடன் கிட்டாரையும் சாக்லேட்டையும் அனுப்பியுள்ளேன். இதுவும் ஒரு கிளிஷேதான். கிளிஷேவை கிளீன் போல்டு ஆக்கமுடியாதல்லவா?!
25.02.2022,
வெள்ளிக்கிழமை
மகளின் பரிசு
அதிகாலை 5.45 அளவில் துணிகளை அள்ளிக்கொண்டு மாடிக்கு வந்தேன். உரித்துவைத்த வெள்ளைப் பூண்டாய் ஒளிர்ந்தது நிலா. இறைந்து கிடக்கும் கற்கண்டாய் விண்மீன்கள். வெளிச்சத்தைச் சொடுக்கிச் சோப்பைத் தேடினேன். சப்பையான சிறிய துண்டு மட்டுமே எஞ்சியிருந்தது. போர்வை, பேன்ட், சட்டை, கைக்குட்டை, மனைவி மற்றும் பிள்ளைகள் துணி இவை அனைத்துக்கும் குட்டியூண்டு சோப்புக் கட்டிப் போதாதுதான். சரி, கரையும் வரை துவைக்கலாம் என்று மென்மையான துணிகளை மட்டும் தெரிவு செய்தேன். முழுவதும் கரையும் நேரத்தில் இருட்டின் கதவைத் திறந்தாள் மனைவி. வேறு சோப்பு இருக்கிறதா என்றேன். இல்லை என்றாள். காசு இருந்தால் கொடு வாங்கி வருகிறேன் என்றேன். இரண்டு பத்து ரூபாய் நோட்டைக் கொடுத்து இதுதான் இருக்கிறது என்றாள். பால் வேற வாங்க வேண்டுமே என மனதினில் நினைத்துக்கொண்டு நாட்டார் கடைக்குச் சென்றேன்.
நாட்டார் கடைக்குச் சென்று மாதக் கணக்காகிவிட்டது. கடையில் வேலை செய்யும் தம்பி கிரிக்கெட் விளையாட வருபவன். எங்கு பார்த்தலும் அண்ணே அண்ணே என்று அம்பொழுகப் பேசுவான். மளிகைக் கடை வைத்திருக்கும் இஸ்லாமியக் குடும்பம் நாங்கள் குடியிருக்கும் வீட்டின் கீழ்த்தளத்திற்குக் குடிவந்தபிறகு நாட்டார் கடைக்குச் செல்வதில்லை. கொரோனா காலத்தில் வீடு தேடிவந்து காய்கறி, பால், முட்டை என எங்கள் வீட்டுக்கு மட்டுமல்லாது அருகில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கொடுப்பார்கள். வியாபாரம் நிமித்தம்தான் என்றாலும் ஊரடங்குக் காலத்தில் துணிச்சலாக ஒவ்வொரு வீடாகச் சென்றது மெய்சிலிர்க்க வைத்தது. அதன்பின் தினந்தோறும் காய்கறி எல்லாம் புஸ்ரா கடையில் வாங்க ஆரம்பித்துவிட்டோம்.
ஒரு நாள் நாட்டார் கடைக்குக் காய் வாங்கச் சென்றிருந்தேன். காய்கறியின் விலையில் தங்கச் செயினே வாங்கிவிடலாம் என்றிருந்தது. ஏன் தம்பி இவ்வளவு விலை என்றேன். காய்கறி விலையெல்லாம் ஏறிப் போயிடுச்சு, நீங்க காய்கறியே வாங்குறது இல்லையா என்று எகத்தாளமாய்க் கேட்டேன். அதற்கு அடுத்து இன்றுதான் அங்கு செல்கிறேன். தம்பி, இன்னொரு வாடிக்கையாளரைக் கவனித்துக்கொண்டிருந்தான். தம்பி 10 ரூபாய் பவர் சோப்பு ஒன்னு கொடு என்று ஒன்றுக்கு இரண்டு முறை கேட்டேன். அவன் என்னைப் பார்க்கக்கூட இல்லை. கிழக்குப் பக்கம் நின்றிருந்த நாட்டாரிடம் 10 ரூபாய் பவர் சோப்பு ஒன்னு வேணும் என்றேன். தம்பியைக் கைகாட்டியவரிடம் 10 ரூபாய் பால் பாக்கெட் இருக்கிறதா என்றதும் கணத்தில் இறுக்கத்தைத் தளர்த்திக்கொண்டு உடனே எடுத்துக்கொடுத்து சோப்பையும் கொடுத்தார். புன்னைகையுடன் இரண்டு பத்து ரூபாயைக் கொடுத்துவிட்டு வீடு வந்தேன்.
Wednesday, February 23, 2022
முக்தருன்னிஷா பேகம் தெரு
கடந்த திங்கட்கிழமை காலையில் அலுவலகத்தின் டைனில் ஹாலில் அமர்ந்திருந்தேன். சந்தைக்குச் சென்று வரலாமா என்று தம்பி அகத்தியன் கேட்டான். யோசிக்காமல் சட்டென்று போலாம் என்றேன். சந்தையென்றாலே ஆதாம் மார்க்கெட்தான். நல்லதம்பி தெருவிலிருந்து இரு சக்கர வாகனத்தில் கிளம்பினோம். எப்போதும் போக்குவரத்து நெருக்கடி கொண்ட எல்லீஸ் சாலையைக் கடந்து முக்தருன்னிஷா பேகம் தெருவுக்குள் நுழைந்தோம். முக்தருன்னிஷா பேகம் தெரு இருபக்கமும் உயரமான கட்டடங்கள் உள்ள பகுதி. நீளமான வாய்க்கால் போன்ற வானத்தைக்கொண்டிருக்கும். ஒரு குடியிருப்பின் சுவர் மற்றொன்றின் மீது உரசியபடி இருக்கும். சில சுவருக்குள் சூரிய ஒளி புகமுடியாதபடி இருட்டாக இருக்கும். எனவே, சுவர் ஒட்டி இருக்கிறதா அல்லது விலகி இருக்கிறதா எனக் கண்டுபிடிப்பது மிகக் கடினம். இந்தத் தெருவின் மேற்கு முனை எல்லீஸ் சாலையையும் கிழக்கு முனை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையையும் தொட்டிருக்கும். காய்கறிக் கடையில் இருந்து காய்லாங் கடை, சலூன் கடை, போட்டோ ஃப்ரேம், கறிக் கடை, மருந்துக்கடை எனப் பல வகையான கடைகள் கொண்டிருக்கும் தெரு. உள்ளாட்சித் தேர்தல் நேரம் என்பதால் நட்சத்திரம் பொறிக்கப்பட்ட இஸ்லாமியக் கொடிகள் எங்கு பார்த்தாலும் கட்டப்பட்டிருந்தன. ``ஜெயலலிதா அம்மாவோடு அதிமுக காணாமல் போயிடுச்சுப்பா. இப்ப இருக்கிறவங்க எல்லா ஒன்னுக்கும் லாயக்கில்லை'' என்கிற சொற்கள் வண்டியைத் தொடர்ந்துவந்தன. ஆதாம் சந்தைக்கும் முன்பே ஒரு பெயர்ப் பலகையற்ற மளிகைக் கடையில் வண்டியை ஓங்கட்டினோம். அலுவலகத்திற்குத் தேவையான காய்கறிகள் பெரும்பாலும் இங்குதான் வாங்கி வரப்படும். சாலையோரம் நெல்லிக்காய், வெள்ளரிக்காய் எலுமிச்சைகளை விற்றுக்கொண்டிருந்தவளின் கூடையில் திமுக வாக்குச் சேகரிக்கும் துண்டறிக்கை கிடந்தது. அருகே மரப்பலகையில் கோணியை விரித்து அதன் மீது பனங்கிழங்கு விற்றுக்கொண்டிருந்தார் முதியவர். செங்கல் மீது அமர்ந்திருந்த இருவரின் தொடை மீது முகக் கவசம் இருந்தது.
`நீலம்' இலச்சினையுள்ள இரண்டு சந்தன நிறத் துணிப் பைகளை எடுத்துவந்திருந்தான் அகத்தியன். அதில் ஒன்றைக் கடைக்காரர் தனக்கு வேண்டுமென வாங்கிக் கொண்டார். இங்கு இஸ்லாமியப் பிச்சைக்காரர்கள் தெருவின் ஓரம் அங்குமிங்குமாய் அமர்ந்திருப்பர். `சிலுக்குச் சட்டை சீனா பொம்மை பலூன் வேண்டுமா, கண்ணாமூச்சி ஆட்டம் உனக்குச் சொல்லித் தரட்டுமா' என்கிற பாடலைப் பாடியபடி ஒரு பெண் நடந்து சென்றார். இரைச்சல் மிகுந்த அச்சாலையிலும் கணீரென்று ஒலித்தது அக்குரல். அக்குரலைப் பின்தொடர்ந்தேன். `கோழி மிதிச்சு குஞ்சு முடம் ஆகிவிடாது, உனக்கு கொய்யாப்பழம் பறிச்சுத் தரேன் அழுகக் கூடாது' என்னும் வரியைப் பாடிக்கொண்டிருந்த போது எதிரில் ஸ்கூட்டியில் வந்த இஸ்லாமியப் பெண் இவரிடம் அரபு மொழியில் ஏதோவொன்று கேட்க போகிற போக்கில் பதில் சொல்லி `சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா ……………' என்று மீண்டும் ஒலித்தாள். அப்போது முக்தருன்னிஷா பேகம் தெருவின் எல்லை முடிந்திருந்தது. நான் தெரு முனையில் நின்று தூரத்தில் ஒலித்தபடி செல்லும் குரலைக் கேட்டுக்கொண்டிருந்தேன். இப்பாடல் 1956 இல் T.R.ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த வண்ணக்கிளி திரைப்படத்தில் இடம்பெற்றது. மருதகாசியின் மயக்கும் வரிகளைக் கே.வி.மகாதேவன் இசையில் சுசிலா பாடியிருப்பார். எனக்குச் சுசிலாவின் மென்குரலைவிட இப்பெண்ணின் கம்பீரம், கணீர்த்தன்மை மிகவும் பிடித்திருந்தது. இனி இப்பாடலை எங்கு கேட்டாலும் இரைச்சலுற்ற தெருவில் ஒலித்த கம்பீரம் நினைவுக்கு வரும்.
இமைதாண்டாக் கண்ணீர்
இரண்டாவது மாடியின் சின்ன அறையில் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக்கொண்டிருந்தாள் மனைவி. அம்மா கொடுத்தனுப்பிய தேங்காய், புளியைப் பழுதுற்ற தொலைக்காட்சியின் ஓரம் சாய்வாக வைத்துவிட்டு வழக்கம் போல் உடைமாற்றி முகம் கழுவி வர கீழ் அறைக்குச் சென்றேன். மகனிடம் `அப்பாகூடச் சென்று எடுத்து வா' என்றாள் மனைவி. `நீ கீழ வராதே' என்று சொல்லியும் பின்னாடியே வந்துவிட்டான். `எதற்காக வந்தாய்?' `பபுள்கம் எடுக்க'. `நீ உள்ளே வராத போ' என்றேன். அன்று காலையில் நடந்த சம்பவம்தான் அவன்மீது இவ்வளவு கோபம்கொள்ளக் காரணம்.
Tuesday, February 22, 2022
கிழிசலின் கிளை
மாற்றி மாற்றி அணிந்துவந்த இரண்டு நீல நிறப் பேன்ட்டின் அடிப்பகுதி கிழிந்துவிட்டது. சிறிது கிழிந்த நிலையில் மீண்டும் மீண்டும் உடுத்தினேன். விளைவு, கிழிசல் விரிந்து விரிந்து இன்னோர் கிளைவிட்டது. அழுக்குப் படிந்த இரண்டும் கீழறை ஹேங்கரில் தொங்குகின்றன. வேறு ஏதாவது பேன்ட் போடலாம் என்று மேலறை பீரோவைத் துலாவினேன். ``கலைக்காமல் எடுங்க'' என்று ஆணையிட்டாள் மனைவி. இப்படியான அவளின் சொற்களில் ஏனோ சில நேரம் பாதியில் தேடலை முடித்துக்கொள்வேன். இன்றும் அதே போன்று கட்டைளையிட்டாலும் இடைநிறுத்தமின்றித் தேடலைத் தொடர்ந்தேன். ஒரு கறுப்பு நிற ஜீன்ஸ் கிடைத்தது. என்னிடம் இருப்பதிலேயே மிகவும் கடினத்தன்மை மட்டுமல்ல ; விலையுயர்ந்ததும்கூட. வழக்கமாக 650 ரூபாயில் பேன்ட்டைத் தெரிவுசெய்துவிடுவேன். ஆனால், இதன் விலை 1,500 ரூபாய். மிக நீ.............ண்ட காலம் உழைத்ததும் இதுதான். கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள். அதாவது திருமணத்திற்கு முன்பு வாங்கியது. முதலை வாயளவு பிளந்து கிடப்பதும் இதன் அடிப்பகுதி மட்டும்தான். இதைத் தைய்க்க கோணூசிதான் வாங்க வேண்டும்.
தொடர்ந்த தேடுதலில் வெளிறிய sky blue நிறத்தில் ஒரு பேன்ட்டை எடுத்தேன். கிழிசலற்ற இருந்தாலும் கறைபடிந்திருந்தது. என்ன பட்டது என்று தெரியவில்லை. இதை இன்று உடுத்தப் போகிறேன் என்று மனைவியிடம் சொன்னேன். அதற்கு மேட்சாகச் சட்டையும் எடுத்துவைத்தேன். மேலும் தீவிரத் தேடுதலில் தைய்க்க முடியும் என்ற அளவில் இருந்த இரண்டு பேன்ட்களை எடுத்து, மனைவியிடம் ஊசி நூல் கேட்டேன். வெண்ணிற அட்டையில் குத்தப்பட்டிருந்த ஊசியின் ஒரு முனை துருப்பிடித்திருந்தது. கீழிருக்கும் கறுப்பு டப்பாவில் நூல் இருக்கிறது எடுத்துக் கொடுடா என்று மகனிடம் கூறினாள். அவன் `கீழ்' என்கிற சொல்லைக் கவனியாது மேல் அலமாரியில் தேடினான். நானந்தக் கறுப்பின் உற்புறத்தைக் கலைத்துப் பார்த்தேன், இல்லை. சமையல் வேலையில் பரபரப்பாக இருந்தவள், அப்புறமா தேடித் தைய்த்து வைக்கிறேன் என்றாள். மீண்டும் பீரோவைத் துலாவ ஆரம்பித்தேன். கிழியலற்ற, கறையற்ற பேன்ட் ஒன்று கிடைத்தது.
எப்போதும் இருக்கும் இடத்தில் ஜட்டி இல்லாததால் ஜட்டி எங்கே என்று கேட்டேன். நீங்கள் மேலே எடுத்துவந்திருந்தால் துவைத்திருப்பேன். கீழதான் இருக்கும் என்றாள். கீழ இருக்க வாய்ப்பு இல்லை. இங்கதான் இருக்கும் என்றேன். கீழ் குளியறையில் வேறு யாரோ குளித்துக்கொண்டிக்கும் நீரோசை. வீட்டு உரிமையாளரின் இளைய மகனாகத்தான் இருக்கும். பின், அறையுனுள் சென்று,புத்தகங்களை வெறிக்கப் பார்த்துக்கொண்டிருந்தேன். `கீழதான் ஜட்டி இருக்கும்' மனைவியின் சொற்கள் நினைவுக்கு வர, ஹேங்கரில் தொங்கும் இரண்டு பேன்ட்டின் உட்பகுதியைத் தேடினேன், இல்லை. பிறகு, உடைந்த மர நாற்காலி மீதும் அதன் அடியிலும் தேடி, மேலெழும் போது செய்தித்தாள்களின் மீது கோடு போட்ட வெள்ளைச் சட்டை இருந்தது. இது இரண்டு நாட்களுக்கு முன் போட்டதே, ஒருவேளை இதில் இருக்குமோ என்கிற யூகம் மெய்யானது.
இரண்டு ஜட்டிகளையும் ஒரு பூப்போட்ட சட்டையை மட்டும் துவைக்கக் கொடுத்தேன். இன்னும் துவைக்க வேண்டிய நாலைந்து துணிகள் மனைவிக்குத் தெரியாமல் கீழறையில் இருக்கின்றன. அவற்றை நாளை எழுந்ததும் நான் துவைக்க முடிவெடுத்திருக்கிறேன். இவை இரண்டு போக மாற்றாக இரண்டு பழைய ஜட்டிகள் என்னிடம் உண்டு. ஒன்று இறுக்கமான சிவப்பு ஜட்டி ; மற்றொன்று கொஞ்சம் லூஸான சாம்பல் நிற ஜட்டி. மனைவி ஊருக்குச் சென்றிருந்த சமயத்தில் துவைக்கச் சோம்பேறித்தனப்படும் ஒரு சில நாட்கள் கிழிந்த ஜட்டியையும் போட்டிருக்கிறேன். ஒருமுறை கிழிந்ததைப் போடுறீங்களே, எவ்வளவோ செலவு செய்றீங்க ரெண்டு புது ஜட்டி வாங்கக் கூடாதா என்றாள். வாங்கலாம் வாங்கலாம் என்று காலம் கடத்தினேன். கடந்த வாரம்கூட ஒரு நாள் அந்தக் கிழிந்த ஜட்டியை அணிந்திருந்தேன். அடுத்த நாள் இனி இதை மீண்டும் துவைக்க வேண்டாம் என்று குப்பை சேகரிக்கும் பாலித்தீன் கவரில் திணித்துவிட்டேன். ஒரு நாள் அங்காடிக்குச் சென்று வந்த மனைவி எனக்குப் புதிதாக இரண்டு ஜட்டிகள் வாங்கி வந்திருந்தாள். அவளை அடிக்கடி `அழுக்கு நைட்டி', `அழுக்கு நைட்டி' என்று கிண்டல் செய்யும் என் ஆண் மனம் சற்றே வெட்கித் தலைகுனிந்தது. அவள் நினைத்திருந்தால் `ஏய் கிழிந்த ஜட்டி' என்று சில முறை என்னைக் கிண்டல் செய்திருக்கலாம். ஆனால், ஒருபோதும் அவள் அப்படி அழைத்ததில்லை. சரி அதென்ன அழுக்கு நைட்டி என்று கேட்கிறீர்களா பிறிதொரு சமயம் எழுதுகிறேன் டியர்ஸ்.
23.02.2022,
புதன்கிழமை
சொற்களுக்குள் தள்ளப்பட்டவன்
வாரத்திற்கு மூன்று நாட்கள்தான் மகனுக்குப் பள்ளிக்கூடம். பள்ளியன்று மட்டும் `நான் நாளைக்குப் பள்ளிக்கூடம் போகிறேன்' என்று புலம்ப ஆரம்பித்து ஒப்பாரி வைப்பான். ஊரிலிருந்து வந்த முதல் நாள் அதற்குச் சம்மதம் தெரிவித்தோம். பிறகு ஒவ்வொரு நாளும் இப்படிச் சொல்ல ஆரம்பித்துவிட்டான். இப்போதெல்லாம் பள்ளிக்கூடம் என்றாலே பயந்து சாகிறான். அலுவலகம் கிளம்பும் போது மகளையும் மகனையும் பள்ளிக்கூடத்தில் விட்டுவிடச் சொன்னாள் மனைவி. வரமறுத்த மகனின் கன்னத்தைப் பளீரென அறைந்தாள். கதறியழுதபடி, படியிறங்கிக்கொண்டிருந்த என்னை அப்பாவெனக் கட்டிப் பிடித்தான். கணத்தில் தடுமாறி இருவரும் படியில் உருளத் தெரிந்தோம். ``எப்பப் பார்த்தாலும் ஏன்டா அழுதுகிட்டே இருக்கிற. அக்கா இருக்கேல்ல. லன்ச் டைம்ல வந்து உன்னைப் பார்க்கிறேன் அழாம இரு'' என்றாள். வழியெங்கும் கண்ணீரின் ஈரம். என்னால் கன்னத்தின் ஈரத்தை மட்டுமே துடைக்க முடிந்தது. பஜனை கோயில் தெருவில் இருந்த புஸ்ரா மளிகைக் கடையில் ஸ்நாக்ஸ் வாங்கிக் கொடுக்கவா என்றேன். வேண்டாம் என்றான். வகுப்பில் மிஸ் அடிக்கிறாங்களா. ம்ஹூம். பசங்க யாரும் கிண்டல் செய்கிறாங்களா. ம்ஹூம். அப்புறம் ஏன் பள்ளிக்கூடம் போகப் பிடிக்கலை என்றால் ஆழ்ந்த அமைதிதான் பதில். ஒரு வழியாகப் பள்ளியின் வாசலை அடைந்தோம். தன் சாப்பாட்டுக்கூடையை வாங்கிக்கொண்டு வலது பக்கமிருக்கும் வகுப்பறைக்குச் சென்றாள் மகள். பின் இருவரும் மகனின் வகுப்பறை நோக்கி நடந்துகொண்டிருந்தோம். வறண்டாவைத் தொடும் போதே அப்பா நான் வரலை என்றான். கையைப் பிடித்து அழைத்துச் சென்று வகுப்புக்கு வெளிச் சுவரோரம் பையை வைக்க அவன் கையை விட்டேன். என்னை உதறி எறிந்து `நான் வீட்டுக்குப் போறேன்' என்று விறுவிறுவென வறண்டாவிலிருந்து ஓடினான். விரட்டிப் பிடித்தேன். ஏன் இன்னும் வகுப்பறை திறக்கவில்லை என்று பக்கத்தில் இருந்த மாணவர்களை விசாரித்தேன். மாற்றலாகிய வகுப்பறையின் திசையைக் காட்டினார்கள். மகளின் வகுப்பறைக்குக் கீழ்த்தளத்தில் இருந்தது மகனின் வகுப்பறை. மாணவர்கள் நிறைந்த வகுப்பில் கரும்பலகையின் அருகே மணிமேகலை டீச்சர் நின்றுகொண்டிருந்தார். வணக்கம் வைத்து உள்நுழையும் போது `அப்பா என்னை அக்காகிட்ட விட்டுடுங்க' என்று படியேறி ஓடினான். நீ அக்காவின் வகுப்பறை செல்ல இன்னும் இரண்டு வருடங்கள் ஆகும். இந்த வகுப்பில் படித்தால்தான் அங்கு போக முடியும், கீழே இறங்கி வா என்றேன். பாதிப் படிகளைத் தாண்டிவந்தவனை இறுகப் பிடித்தேன். மீகாமன் `கம் இன் சைட்' ஏன் இப்படி அடம்பிடிக்கிற என்றார் மணிமேகலை டீச்சர். ``அப்பா உன் காலைப் பிடித்துக் கெஞ்சிக் கேக்கிறேன். என்னை வீட்டில் விட்டுடுங்கப்பா'' என்று முட்டிக்காலை இறுகப் பிடித்துக்கொண்டான். அதுவரை பொறுமையாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பிள்ளைகளை விடவந்த பெற்றோர்கள் குபுக்கெனச் சிரித்துவிட்டார்கள். அவன் கைகளிலிருந்து முட்டிக்காலை மீட்பதற்குள் பெரும்பாடாகிவிட்டது. `நல்லா படிச்சிட்டு இருந்த பையன். ஏன் திடீரென்று இப்படி அடம் பிடிக்கிற' என்ற மணிமேகலை டீச்சர் `கம் இன்சைட்', `கம் இன்சைட்' என்று சொல்லிக்கொண்டே இருந்தார். அந்தச் சொற்களுக்குள் அவனைத் தள்ளிவிட்டு அலுவலகம் சென்றுவிட்டேன்.
Monday, February 21, 2022
I am proud of you அப்பா
இரண்டு நாளுக்கு முன்பு மகாபலிபுரம் போகலாம் என்று திட்டமிட்டிருந்த போது கையில் இரண்டாயிரம் இருந்தது. இன்று 600 ரூபாயாய்ச் சுருங்கிப் போனது. பணம் கட்டாததால் துண்டித்துப் போன கேபிள் கனெக்ஷன் எங்களின் பயணத்தைக் கேள்விக்குள்ளாக்கியது. ``வீட்டுக்குள்ளேயே இருப்பது ஜெயில் இருப்பது போல் இருக்கிறது. எங்கையாவது வெளியில் கூட்டிட்டுப் போங்கப்பா'' என்று பிள்ளைகள் கேட்டபிறகுதான் இந்தப் பயணம் முடிவானது. கிராமத்தில் பிறந்து வளர்ந்த பிள்ளைகளுக்கு 10X10 அறை சிறையாகத்தான் இருக்கும். ஒருபக்கம் கேபிளுக்குப் பணம் கட்டச் சொல்லிக்கொண்டிருந்தாள் மனைவி. மறு பக்கம் எப்பப்பா மகாபலிபுரம் போவோம் எனப் பிள்ளைகள் ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு கட்டத்தில் சும்மா அமைதியா இருக்கமாட்டீங்களா எனக் கடுகடுக்க இனிமே கீழயே வரமாட்டேன் என்றாள் மகள்(எலியிடமிருந்து புத்தகங்களைக் காக்க கீழ் ஒரு அறை எடுத்துள்ளேன்). உன்னை யார் வரச் சொன்னது என்று மேலும் வெறுப்பைக் காட்டினேன். சற்றுநேரம் கழித்துக்குக் கதவைத் திறந்தால் படியில் உட்காந்திருந்தாள். கேபிளுக்குப் பணம் கட்டவேண்டுமெனச் சொல்ல அப்படியென்றால் இன்றைக்கும் வெளியில் போகமாட்டோமா, போங்க நல்லா ஏமாத்துறீங்க எனச் சொல்லிவிட்டு மேலே சென்றுவிட்டாள். செய்வதறியாமல் நண்பனைத் தொடர்புகொண்டு கடற்கரைக்குக் கூட்டிப் போகச் சொல்லிக் காலையிலிருந்து பிள்ளைகள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் கையில் முந்நூறு ரூபாய்தான் இருக்கிறது என்றேன். கார் ஓட்டிக்கொண்டிருக்கிறேன், சிறிது நேரத்தில் அழைக்கிறேன் என்றான்.
முதல்முறை மீன் எடுத்துச் சமைத்திருந்தாள் மனைவி. மகன் அசைவப் பிரியன். அப்பப்போ மீன், கறி எடுத்துச் சமைக்க வேண்டும். பாவம் பிள்ளைகள் ஏங்கிப் போகும் எனச் சமீப காலமாகச் சொல்லிவந்தாள். சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது, நண்பர் நவீனிடமிருந்து அழைப்பு. பீனிக்ஸ் மாலில் 10:40 க்கு `Uncharted' என்கிற adventure movie. மூன்று டிக்கட் இருக்கிறது வருகிறீர்களா என்றார். அப்போது 10:20 ஆகியிருந்தது. படத்துக்குப் போறேன் என்கூட ஒருவர் வரலாம் இருவரில் யார் வர்றீங்க என்றேன். தம்பியை அழைத்துக்கொண்டு போங்க என்றாள் மகள். படம் முடிந்து சீக்கிரம் வந்து பீச்சுக்குக் கூட்டிப் போங்க என்றாள். சரி என்று புறப்பட்டோம்.
Saturday, February 19, 2022
ஊஞ்சலாடும் பாரதியார் பூங்கா
Friday, February 18, 2022
வேளச்சேரி கிழக்குப் பேருந்து நிறுத்தம்
தண்டீஸ்வரத்தின் கிழக்குப் பேருந்து நிறுத்தம் மிகப் பழமையானது. கிட்டத்தட்ட வேளச்சேரி கிராமாக இருந்த போது அது கட்டியிருக்கலாம். அங்கு இருபுறமும் நீர்ப்பாசனமுள்ள வயல்வெளி இருந்திருக்கலாம். நான்கு உருளைத் தூண்களால் கட்டியெழுப்பப்பட்டிருக்கும் அதன் மேற்கூரைத் தளத்தின் நடுவே உத சூரியன் சின்னம் இருக்கும். திமுக பிரமுகர் கட்டியிருக்கலாம் என்கிற யூகம். இருபத்திரண்டு ஆண்டுகளாக இந்த நிறுத்தத்துடன் தொடர்பில் இருக்கிறேன். டவுசர் போட்ட பையனாய், பேன்ட் போட்ட இளைஞனாய், வேட்டி கட்டிய தகப்பனாய் எனப் பல்பருவங்களைக் கடந்துவந்திருக்கிறேன். இதோ இப்போது ஷர்ட்ஸுடன் நிற்கிறேன். மடிப்பாக்கத்தில் நடைபயிற்சி செய்ய இங்குதான் பேருந்து ஏறுவேன்.
வேளச்சேரி கிழக்குப் பேருந்து நிறுத்தம்
2001-2002 ஆண்டுகளில் உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போது தினமும் இந்த நிறுத்தத்திற்கு வருவேன். பதின்மத்தின் இறுதியில் எதற்காக இங்கு வந்திருப்பேன் என்று நினைக்கிறீர்கள். உங்கள் யூகம் தவறு. நண்பனைப் பேருந்து ஏற்றிவிட. அவன் வீடு ஒட்டியம்பாக்கத்தில் இருந்தது. தடம் எண் 51B இல்தான் அங்கு செல்வான். சரி நண்பனைப் பற்றிச் சொல்கிறேன். அவன் பெயர் அருண் பிரசாத். தினமும் பள்ளிச் சீருடையை அயன் செய்துதான் போட்டு வருவான். உருண்டையான கண்கள். சிவந்த நிறமுடைய அவன் நெற்றியில் எப்போதும் திருநீறு கலையாதிருக்கும். துடைப்பக்குச்சி போன்ற தேகம். நானும் என் அண்ணனும் தங்கியிருந்த அறைக்கு அதிகம் முறை வந்தது அவனாகத்தான் இருப்பான். வந்ததும் வியர்வையில் சட்டைக் கழற்றித் தொங்கவிட்டுவிடுவான். சும்மா ஈர்க்குச்சி போன்ற அவன் எலும்புகள் பேன் காற்றில் அசைந்தாடும் என்றால் நம்பிவிடுவதற்கான வாய்ப்பு அதிகம். ஆனால், தர்க்கரீதியாக நீங்கள் மூளைக்கு வேலைகொடுத்து நேரத்தைக் குப்பைக்கூடையில் போட வேண்டாம்.
இப்போது அந்தப் பேருந்து நிறுத்தம் வயோதிகத்தன்மையடைந்துள்ளது. அல்லது கொஞ்சம் நீளமான உயரமற்ற தகனமேடை போன்று காட்சியளிக்கிறது. நின்றுகொண்டே தொட்டுவிடும் அதன் வெளிப்புற மேற்கூரையை இப்போதெல்லாம் அவ்வப்போது தொட்டுப்பார்ப்பதுண்டு. 51 B இன்றும் அதே தடத்தில்தான் ஓடுகிறது. அதைக் காணும் போதெல்லாம் கண்ணாடி அணிந்த நண்பனின் உருவம் வந்துவந்து போகும். ஆனால் அவனைப் பார்த்துதான் ஆண்டுகளாகின்றன.
18.02.2022
வெள்ளிக்கிழமை
யாழிசையின் தோழி ஹரிணி
அதிகாலை தண்டீஸ்வரம் சாலை பரபரப்பானது. சாலையின் இருவோரமும் செய்தித்தாள் கோக்கும் அடுக்கும் பணி தீவிரமாய் நடக்கும். இன்னும் சரியாக விடியாத கருக்கலில் நடைப்பயிற்சிக்காக சென்றுகொண்டிருந்தேன். பேருந்து நிறுத்தத்தில் நன்கு அறிமுகமான முகக் கவசமற்ற முகம். என் மெல்லிய புன்னகையை என் முகக் கவசம் மறைத்திருக்கும். அருகில் சிறு குழந்தை. இருவரையும் கடந்து பின்பு திரும்பி முகக் கவசத்தை நீக்கி எப்படி இருக்கீங்க என்றதும் சற்று கூர்ந்து நோக்கிய அப்பெண்மணி ``அதானே பார்த்தேன். எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது என்று நினைத்தேன். மாஸ்க் போடவும் சரியா தெரியலை. நீங்கள் தானா? நான் நல்லா இருக்கேன். நீங்கள் எப்படி இருக்கீங்க'' என்றார். உங்க மகள் எங்க படிக்கிறாள் என்றதும் மாநகராட்சிப் பள்ளியில் என்றேன். என் மகளுக்கு ஃபீஸ் அதிகமாகிடுச்சு. நானும் வேறு எங்காவது சேர்க்கணும் என்றார். எவ்வளவு என்று கேட்டேன். அவர் பதிலில் நெஞ்சுடைந்து போவது போல் இருந்தது. காரணம் LKG கல்விக் கட்டணம் 45,000 ரூபாய்.
சர்வதேசக் குரல் - சூரஜ் யங்டே
ஒரு பக்கம் தலித் வகையறா என்கிற கருத்துத் திணிப்பும் இன்னொரு பக்கம் என் எழுத்து தலித் எழுத்தல்ல என்கிற அடையாள மறுப்பும் நிகழும் சூழலில் சாதியைப் பேசித்தான் ஆக வேண்டும் என்கிற சூரஜ் யங்டே இந்திய நிலப்பரப்பில் மட்டுமல்லாது சர்வதேசக் குரலாக ஒலிக்கும் வலிமையான குரல். தமிழில் இருக்கும் தீவிர தலித் முற்போக்கு எழுத்தாளர்களில் சிலர் பிற்போக்கின் அடிவருடியாக மாறி சலாம் போட்டுக்கொண்டிருக்கும் சூழலில் சூரஜை வாசிக்க ஆரம்பித்துள்ளேன். அரசியல் கூர்மையுடனான இவரின் உரையாடல்களை யூடியூப் சேனலில் கண்டு மெய்சிலிர்த்திருக்கிறேன். இப்படியான வலிய குரல்; கூரிய பார்வை, நெஞ்சுறுதி சமகால இளைஞர்களிடம் என்னளவில் கண்டதில்லை. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் முதல் தலித் அறிஞரான சூரஜ்ஜை வாசிப்பதில் பெருமை கொள்கிறேன். இந்த நூலினை வாங்கி வந்து கொடுத்த அன்புத் தம்பி ரவிக்கு நன்றி என்கிற ஒற்றைச் சொல் மட்டுமல்ல ; ஓராயிரம் முத்தங்கள்!
Thursday, February 17, 2022
குசுவொலி
சுமார் காலை ஐந்தரை மணியளவில் நடைப் பயிற்சிக்குத் தயாரானேன். புதிய டயரி பாதி விலையில் கிடைக்கும் என்பதை ஒவ்வொரு மாலையிலும் சிங்கப்பூர் ஷாப்பிங்கில் ஒலித்தது ஞாபகம் வர 75 ரூபாய்க்கு நேற்று ஒரு டயரி வாங்கினேன். அந்த டயரியை எடுத்துக்கொண்டு தண்டீஸ்வரம் சாலையில் நடந்துகொண்டிருந்தேன். மலிவான விலையில் வாங்கிய ஷாட்ர்ஸின் இடதுப் பக்க பாக்கெட் ஓட்டை என்பதால் வீட்டுச் சாவியை பஸ் பாஸ் வைத்திருக்கும் வலது பாக்கெட்டில் எறிந்தேன். பாரதி பூங்காவின் அருகில் சாலையைக் கடக்கும் போது V51 பேருந்துப் பலகைக் கண்ணில் பட கைக்காட்டி ஏறினேன். இரண்டு பேர் மட்டும் இருந்த அப்பேருந்து மூன்றாவதாக என்னைச் சுமந்து நகர்ந்தது.
Wednesday, February 16, 2022
`தானாய் மலரும் காலம்'
வெகு நாளாகவிட்டது நடைப் பயிற்சிக்குச் சென்று. வேளச்சேரியின் பிரதான சாலைகள், குறுக்குச் சந்துகள் எனக் கவிஞர் ஷங்கர் ராமசுப்ரமணியனுடன் சேர்ந்து நடந்ததுண்டு. குறிப்பாக வேளச்சேரி ரயில்நிலையத்தில் அதிகமான நாட்களைச் செலவிட்டிருக்கிறோம். எனக்கும் ஷங்கருக்குமான உறவு ஆரம்பத்தில் பிடிப்பற்றதாகத்தான் இருந்தது. அவரைச் சந்திக்கும் சமயமெல்லாம் சின்ன சீண்டல் இருந்துகொண்டே இருக்கும். அவை மேலும் அவரிடமிருந்து விலகல்தன்மையையே கொடுத்தன. பீஃப் கவிதைகளுக்குப் பிறகு இருவருக்கும் நல்ல இணக்கம் ஏற்பட்டது. அடிக்கடி போனிலும் நேரிலும் சந்தித்துப் பேசுவோம். குறிப்பாக விகடனில் வேலை இழந்த துயர் மிகு காலத்தில் என்னைப் பத்திரப்படுத்தினார். பொருளாதார ரீதியாக, வேலை வாய்ப்பு ரீதியாக, வாசிப்பு சார்ந்து புத்தகங்கள் அள்ளிக்கொடுப்பது எனப் பேரன்பைக் காட்டினார். நீண்ட காலமாக வாசிக்க வேண்டும் என்கிற ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலை முதல் ஊரடங்கின் போது கேட்டேன். உடனே தன் வீட்டு நூலகத்தில் இருந்து எடுத்துக் கொடுத்தார். இப்படி சில முக்கியமான நூல்களைக் கேட்டதும் கொடுத்துவிடும் மனம் ஷங்கருக்கு.
வேலையற்ற நாட்களில் எனக்கு எதுவும் ஆகிவிடுமோ எனக் கண்காணித்துக்கொண்டே இருப்பார். குரலில் தொய்வு அல்லது உடைசல் தெரிந்தால் உடனே வண்டி எடுத்துக்கொண்டு என் வீட்டுக்கு வந்துவிடுவார். பாவனை, பாசாங்கு இரண்டுமற்ற ஷங்கர் தன் அறிவை, ஆளுமையைப் பிறர் மீது திணிக்காதவர். செல்மாவுக்குப் பிறகு இப்படியான கட்டற்ற அன்பை என்மீது செலுத்தியவர் ஷங்கர் ஒருவராகத்தான் இருப்பார்.
Tuesday, February 15, 2022
நரையைப் பகிர்கிறேன்
சமீபத்தில் ஓர் இலக்கிய நிகழ்வில் கலந்திருந்தேன். அங்கு எடுத்த போட்டோ ஒன்றை நண்பர் முகிலன் அனுப்பியிருந்தார். மிகுந்த ஆர்வத்துடன் பதிவிறக்கம் செய்து பார்த்தேன். திடுக்கிடலுடன் ஏமாற்றமே எஞ்சியது. இதற்கு முன் எடுத்த நிழற்படங்களைவிட இதில் நரை கூடியிருந்தது. சற்று சுருங்கி வறண்ட தோல் வயோதிகத்தன்மையைக் காட்டியது போல் இருந்தது. ஒருவகையில் கொஞ்சம் ஸ்டைலாகவும் இருந்தது. சிறுவயதில் வாயைத் திறந்தமேனிக்கு இருக்கும் போதெல்லாம் ``டே திறந்த வாயா'' என்று சிவகாமி டீச்சர் கிண்டல் செய்வார். அவ்வாறான தன்மையுடன் இல்லையென்றாலும் துருத்துவதற்கு
பேச்சுக்குரலில் நவீனப் பட்டினப்பாலை `கபால நகரம்’ பச்சோந்தியின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பென்று நினைக்கிறேன். அவருடைய முதல் தொகுப்பு, ‘வே...

-
என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...
-
நேற்று மாலை சிவராஜ் பாரதியும் நானும் அலுவலகத்தில் உரையாடிக்கொண்டிருந்தோம். வரவேற்பரையில் கரகரத்த குரல் ஒலித்தது. யாரென்று பார்த்தேன். புத்...
-
பேச்சுக்குரலில் நவீனப் பட்டினப்பாலை `கபால நகரம்’ பச்சோந்தியின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பென்று நினைக்கிறேன். அவருடைய முதல் தொகுப்பு, ‘வே...