Monday, February 28, 2022

பசியற்ற வயிறும் பசியுற்ற உடலும்


அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்ததும் வாசலில் நின்றவாறே,  சுவரோரமிருந்த பழுதுற்ற தொலைக்காட்சிப் பெட்டின் அருகில் பையை வைத்தேன். மனைவி, மகன் இருவரும் கட்டிலில் அமர்ந்திருந்தனர். மகள் நின்றுகொண்டிருந்தாள். கைகால் கழுவச் சோப்பைத் தேடினேன். எப்போதும் வெளியிலிருக்கும் வெளிரிய ட்ரம் மீதுதான் இருக்கும். சில நேரத்தில் சிறிய மென்நீல வாளியில் துணி சோப்பு, பேஸ்ட், பிரஸ்களோடு கலந்திருக்கும். அம்மா இன்று சேலை கட்டினார் என்றாள் மகள். முதலில் மகிழ்ச்சியாக இருந்தாலும் சற்றெனக் கோபம் வந்து உங்க அம்மா சேலை கட்டினால் எனக்கென்ன கட்டாவிட்டால் என்னக்கென்ன என்றேன். மகளின் முகம் சுருங்கியதைக் கண்டேன். பையை உள் வைக்கும் போது நைட்டிதான் கட்டியிருந்தாள். ஆனால், அழுக்கு நைட்டியல்ல.

திருமணமாகி பத்தாண்டுகள் ஆகப் போகின்றன. ஆனால், மனைவி சேலை கட்டின நாட்கள் விரல்விட்டு எண்ணக்கூடியவைதாம். முதல் காரணம் பெரும்பாலும் ஊரில் இருந்திருப்பது ; மற்றொன்று மிகச் சொற்பமாகவே  குடும்பத்தை வெளியில் அழைத்துச் சென்றிருப்பது. இரண்டுமே குடும்பத்தின் மீது எனக்கிருக்கும் அக்கறையின்மையைத்தான் காட்டுகின்றன. வீட்டில் இருந்தாலும் புடவை அல்லது தூய்மையான உடை உடுத்த வேண்டும் என்பதைப் பெண்கள் அறிந்திருக்க வேண்டுமல்லவா, இது ஆண்களுக்கும்தான். அவர்களின் ஆடைச் சுதந்திரத்தில் தலையிடுவதாக இதை ஒற்றைப் பார்வையில் குறுக்க வேண்டாம். ஒரு நாள் ஏன் எப்போதும் அழுக்கு நைட்டியையே போட்டிருக்கிறாய், நல்ல துணியைப் போட வேண்டியதுதானே. ஆடைகள் புற அழகோடு அக அழகையும் காட்டும் கண்ணாடி. ஒருவிதமான தைரியத்தை, மரியாதையை, அழியா நினைவுகளைக் கொடுக்கக் கூடியவை. நான் சிறுவயதில் பார்த்த அம்மா வெள்ளைச் சேலையில் பிங்க் நிற பூப்போட்ட சேலையிலும் நீலப் புடவையில் வெள்ளைப் பூப்போட்ட சேலையில் இருந்தவள். மேலும், வட்டமான பொட்டு, மஞ்சள் அப்பிய முகம், பூ முடிந்த கொண்டை, வாய்ச் சிவக்கும் வெற்றிலை இப்படியான சித்திரங்கள் நினைவுக்கு வருகின்றன. இப்போது நீ இருக்கும் சூழலை உன் மகன் வளர்ந்த பிறகு நினைக்கும் போது என்ன நினைப்பான். அழுக்கு நைட்டி, பொட்டற்ற நெற்றி, பூவற்ற தலை. மஞ்சளற்ற முகம் இவைதானே வந்து போகும். அவனுக்காகவாவது நீ மாறக்கூடாதா என்றேன். அவவனுக்கு ஒரு கவலையென்றால் உங்களுக்கு ஒரு கவலை என்பாள். 

சில நேரம் எதிர் வீட்டுக்காரர்கள் முன்னே ஏ அழுக்கு நைட்டி என்றும் அழைத்துப் பார்த்தேன். என்ன சொன்னாலும் இப்படித்தான் இருக்கிறாள்.  ஒருமுறை என் பழைய நிழற்படம் ஒன்றை அவள் மூலமாகப் பார்க்க நேர்ந்தது. ச்சா... எவ்வளவு அழகா இருந்திருக்கிறேன். இளமையெல்லாம் வீணாகிறது என்றேன். அவள் சற்றென வெளியில் சென்று விண்மீன்களற்ற மேற்கு வானத்தை வெறிக்க ஆரம்பித்தாள். ஏதோ யோசித்துக்கொண்டிருக்கிறாள் என்று பொருட்படுத்தாது, சிறிது நேரம் கழித்து அவளருகில் சென்றேன். அவளின் கண்ணீரில் தூரத்து வெளிச்சம் கரைந்தது. என்னாச்சு என்றேன். என்னைப் பார்க்காமல் மௌனமாய் உடைந்து அழுதாள். என் சொற்கள் அவளைக் காயப்படுத்தியிருக்குமோ என்றெண்ணி, பிறகென்ன இத்தனை ஆண்டுகளில் நீயாக விருப்பப்பட்டு ஒரு முத்தம் கொடுத்திருக்கிறாயா.  நெருங்கிவந்து கட்டியணைத்திருக்கிறாயா. ஒரு கணவன் மனைவியிடம் இதை எதிர்பார்ப்பது பிழையா என்றேன். அவளுக்கு ஏதோ புரிந்தது போல் இருந்தது. இனி மாற்றம் இருக்கும் என்பது போல் இருந்தது. ஆனால், இதோ இப்போதும் அப்படியேதான் நகர்கிறது வாழ்க்கை.

கடந்த வாரம் முடித்திருத்தம் செய்தேன். வழக்கத்திற்குக் கொஞ்சம் கூடுதல் அழகாய் இருப்பதாய்த் தோன்றியது. பிள்ளைகள் பள்ளி சென்ற பிறகு அவளைக் கட்டியணைக்க முயற்சி செய்தேன். என்னிலிருந்து தன்னைப் பிடுங்கிக்கொண்டு கதவைத் திறந்து வெளியேறுவதிலேயே குறியாக இருந்தாள். மீண்டும் மீண்டும் முயற்சி செய்கையில் பாலியல் வன்கொடுமை செய்கிறேனோ என்கிற சந்தேகம் வர எனக்கே என் மேல் வெறுப்பு வந்தது. விருப்பமில்லையென்றால் விட்டுவிட வேண்டியதுதானே. ஏன் இப்படி இழிவாக நடந்துகொள்கிறாய். பாலியல் வன்கொடுமை செய்பவனுக்கும் உனக்கு என்ன வேறுபாடு என்று எனக்குள் நானே கேட்டுக்கொண்டு சரி அலுவலகம் செல்கிறேன் என்றேன். சாப்பிட்டுப் போங்க என்றாள். பசியில்லை என்றேன் கொஞ்சமாகச் சாப்பிட்டுப் போங்க என்றதும் சாப்பிட்டேன். கிளம்பும் போது அவளிடம் இவ்வாறு கூறினேன். ``பசியற்ற வயிற்றுக்கு அளவற்ற உணவைக் கொடுக்கிறாய். பசியுற்ற உடலைப் பட்டினி போடுகிறாய்''. போய் துணி துவைக்கணும் பாத்திரம் தேய்க்கணும் அவற்றையெல்லாம் யார் செய்வார் என்றாள். சரி, மனைவி கணவனுக்குச் செய்வதை யார் செய்வார் என்றேன். திடுக்கிடலுடன் பார்த்தாள்.  

01.03.2022
செவ்வாய்க் கிழமை   

No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...