Wednesday, February 23, 2022

முக்தருன்னிஷா பேகம் தெரு

 

கடந்த திங்கட்கிழமை காலையில் அலுவலகத்தின் டைனில் ஹாலில் அமர்ந்திருந்தேன். சந்தைக்குச் சென்று வரலாமா என்று தம்பி அகத்தியன் கேட்டான். யோசிக்காமல் சட்டென்று போலாம் என்றேன். சந்தையென்றாலே ஆதாம் மார்க்கெட்தான். நல்லதம்பி தெருவிலிருந்து இரு சக்கர வாகனத்தில் கிளம்பினோம். எப்போதும் போக்குவரத்து நெருக்கடி கொண்ட எல்லீஸ் சாலையைக் கடந்து முக்தருன்னிஷா பேகம் தெருவுக்குள் நுழைந்தோம்.  முக்தருன்னிஷா பேகம் தெரு இருபக்கமும் உயரமான கட்டடங்கள் உள்ள பகுதி. நீளமான வாய்க்கால் போன்ற வானத்தைக்கொண்டிருக்கும். ஒரு குடியிருப்பின் சுவர் மற்றொன்றின் மீது உரசியபடி இருக்கும். சில சுவருக்குள் சூரிய ஒளி புகமுடியாதபடி இருட்டாக இருக்கும். எனவே, சுவர் ஒட்டி இருக்கிறதா அல்லது விலகி இருக்கிறதா எனக் கண்டுபிடிப்பது மிகக் கடினம். இந்தத் தெருவின் மேற்கு முனை எல்லீஸ் சாலையையும் கிழக்கு முனை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையையும் தொட்டிருக்கும். காய்கறிக் கடையில் இருந்து காய்லாங் கடை, சலூன் கடை, போட்டோ ஃப்ரேம், கறிக் கடை, மருந்துக்கடை எனப் பல வகையான கடைகள் கொண்டிருக்கும் தெரு. உள்ளாட்சித் தேர்தல் நேரம் என்பதால் நட்சத்திரம் பொறிக்கப்பட்ட இஸ்லாமியக் கொடிகள் எங்கு பார்த்தாலும் கட்டப்பட்டிருந்தன. ``ஜெயலலிதா அம்மாவோடு அதிமுக காணாமல் போயிடுச்சுப்பா. இப்ப இருக்கிறவங்க எல்லா ஒன்னுக்கும் லாயக்கில்லை'' என்கிற சொற்கள் வண்டியைத் தொடர்ந்துவந்தன. ஆதாம் சந்தைக்கும் முன்பே ஒரு பெயர்ப் பலகையற்ற மளிகைக் கடையில் வண்டியை ஓங்கட்டினோம். அலுவலகத்திற்குத் தேவையான காய்கறிகள் பெரும்பாலும் இங்குதான் வாங்கி வரப்படும். சாலையோரம் நெல்லிக்காய்,  வெள்ளரிக்காய் எலுமிச்சைகளை விற்றுக்கொண்டிருந்தவளின் கூடையில் திமுக வாக்குச் சேகரிக்கும் துண்டறிக்கை கிடந்தது. அருகே  மரப்பலகையில் கோணியை விரித்து அதன் மீது பனங்கிழங்கு விற்றுக்கொண்டிருந்தார் முதியவர். செங்கல் மீது அமர்ந்திருந்த இருவரின் தொடை மீது முகக் கவசம் இருந்தது.

 `நீலம்' இலச்சினையுள்ள இரண்டு சந்தன நிறத் துணிப் பைகளை எடுத்துவந்திருந்தான் அகத்தியன். அதில் ஒன்றைக் கடைக்காரர் தனக்கு வேண்டுமென வாங்கிக் கொண்டார். இங்கு இஸ்லாமியப் பிச்சைக்காரர்கள் தெருவின் ஓரம் அங்குமிங்குமாய் அமர்ந்திருப்பர். `சிலுக்குச் சட்டை சீனா பொம்மை பலூன் வேண்டுமா, கண்ணாமூச்சி ஆட்டம் உனக்குச் சொல்லித் தரட்டுமா' என்கிற பாடலைப் பாடியபடி ஒரு பெண் நடந்து சென்றார். இரைச்சல் மிகுந்த அச்சாலையிலும்  கணீரென்று ஒலித்தது அக்குரல். அக்குரலைப் பின்தொடர்ந்தேன். `கோழி மிதிச்சு குஞ்சு முடம் ஆகிவிடாது, உனக்கு கொய்யாப்பழம் பறிச்சுத் தரேன் அழுகக் கூடாது' என்னும் வரியைப் பாடிக்கொண்டிருந்த போது எதிரில் ஸ்கூட்டியில் வந்த இஸ்லாமியப் பெண் இவரிடம் அரபு மொழியில் ஏதோவொன்று கேட்க போகிற போக்கில் பதில் சொல்லி `சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா ……………' என்று மீண்டும் ஒலித்தாள். அப்போது முக்தருன்னிஷா பேகம் தெருவின் எல்லை முடிந்திருந்தது. நான் தெரு முனையில் நின்று தூரத்தில் ஒலித்தபடி செல்லும் குரலைக் கேட்டுக்கொண்டிருந்தேன். இப்பாடல் 1956 இல் T.R.ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த வண்ணக்கிளி திரைப்படத்தில் இடம்பெற்றது. மருதகாசியின் மயக்கும் வரிகளைக் கே.வி.மகாதேவன் இசையில் சுசிலா பாடியிருப்பார். எனக்குச் சுசிலாவின் மென்குரலைவிட இப்பெண்ணின் கம்பீரம், கணீர்த்தன்மை மிகவும் பிடித்திருந்தது. இனி இப்பாடலை எங்கு கேட்டாலும் இரைச்சலுற்ற தெருவில் ஒலித்த கம்பீரம் நினைவுக்கு வரும்.

No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...