Friday, February 18, 2022

வேளச்சேரி கிழக்குப் பேருந்து நிறுத்தம்

தண்டீஸ்வரத்தின் கிழக்குப் பேருந்து நிறுத்தம் மிகப் பழமையானது. கிட்டத்தட்ட வேளச்சேரி கிராமாக இருந்த போது அது கட்டியிருக்கலாம். அங்கு இருபுறமும் நீர்ப்பாசனமுள்ள வயல்வெளி இருந்திருக்கலாம். நான்கு உருளைத் தூண்களால் கட்டியெழுப்பப்பட்டிருக்கும் அதன் மேற்கூரைத் தளத்தின் நடுவே உத சூரியன் சின்னம் இருக்கும். திமுக பிரமுகர் கட்டியிருக்கலாம் என்கிற யூகம். இருபத்திரண்டு ஆண்டுகளாக இந்த நிறுத்தத்துடன் தொடர்பில் இருக்கிறேன். டவுசர் போட்ட பையனாய், பேன்ட் போட்ட இளைஞனாய், வேட்டி கட்டிய தகப்பனாய் எனப் பல்பருவங்களைக் கடந்துவந்திருக்கிறேன். இதோ இப்போது ஷர்ட்ஸுடன் நிற்கிறேன். மடிப்பாக்கத்தில் நடைபயிற்சி செய்ய இங்குதான் பேருந்து ஏறுவேன். 

    வேளச்சேரி கிழக்குப் பேருந்து நிறுத்தம்

2001-2002 ஆண்டுகளில் உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போது தினமும் இந்த நிறுத்தத்திற்கு வருவேன். பதின்மத்தின் இறுதியில் எதற்காக இங்கு வந்திருப்பேன் என்று நினைக்கிறீர்கள். உங்கள் யூகம் தவறு. நண்பனைப் பேருந்து ஏற்றிவிட. அவன் வீடு ஒட்டியம்பாக்கத்தில் இருந்தது. தடம் எண் 51B இல்தான் அங்கு செல்வான். சரி நண்பனைப் பற்றிச் சொல்கிறேன். அவன் பெயர் அருண் பிரசாத். தினமும் பள்ளிச் சீருடையை அயன் செய்துதான் போட்டு வருவான். உருண்டையான கண்கள். சிவந்த நிறமுடைய அவன் நெற்றியில் எப்போதும் திருநீறு கலையாதிருக்கும். துடைப்பக்குச்சி போன்ற தேகம். நானும் என் அண்ணனும் தங்கியிருந்த அறைக்கு அதிகம் முறை வந்தது அவனாகத்தான் இருப்பான். வந்ததும் வியர்வையில் சட்டைக் கழற்றித் தொங்கவிட்டுவிடுவான். சும்மா ஈர்க்குச்சி போன்ற அவன் எலும்புகள் பேன் காற்றில் அசைந்தாடும் என்றால் நம்பிவிடுவதற்கான வாய்ப்பு அதிகம். ஆனால், தர்க்கரீதியாக நீங்கள் மூளைக்கு வேலைகொடுத்து நேரத்தைக் குப்பைக்கூடையில் போட வேண்டாம். 

இப்போது அந்தப் பேருந்து நிறுத்தம் வயோதிகத்தன்மையடைந்துள்ளது.  அல்லது கொஞ்சம் நீளமான உயரமற்ற தகனமேடை போன்று காட்சியளிக்கிறது. நின்றுகொண்டே தொட்டுவிடும் அதன் வெளிப்புற மேற்கூரையை இப்போதெல்லாம் அவ்வப்போது தொட்டுப்பார்ப்பதுண்டு. 51 B இன்றும் அதே தடத்தில்தான் ஓடுகிறது. அதைக் காணும் போதெல்லாம் கண்ணாடி அணிந்த நண்பனின் உருவம் வந்துவந்து போகும். ஆனால் அவனைப் பார்த்துதான் ஆண்டுகளாகின்றன. 

18.02.2022

வெள்ளிக்கிழமை

        

No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...