Tuesday, February 22, 2022

சொற்களுக்குள் தள்ளப்பட்டவன்

வாரத்திற்கு மூன்று நாட்கள்தான் மகனுக்குப் பள்ளிக்கூடம். பள்ளியன்று மட்டும் `நான் நாளைக்குப் பள்ளிக்கூடம் போகிறேன்' என்று புலம்ப ஆரம்பித்து ஒப்பாரி வைப்பான். ஊரிலிருந்து வந்த முதல் நாள் அதற்குச் சம்மதம் தெரிவித்தோம். பிறகு ஒவ்வொரு நாளும் இப்படிச் சொல்ல ஆரம்பித்துவிட்டான். இப்போதெல்லாம் பள்ளிக்கூடம் என்றாலே பயந்து சாகிறான். அலுவலகம் கிளம்பும் போது மகளையும் மகனையும் பள்ளிக்கூடத்தில் விட்டுவிடச் சொன்னாள் மனைவி. வரமறுத்த மகனின் கன்னத்தைப் பளீரென அறைந்தாள். கதறியழுதபடி, படியிறங்கிக்கொண்டிருந்த என்னை அப்பாவெனக் கட்டிப் பிடித்தான். கணத்தில் தடுமாறி இருவரும் படியில் உருளத் தெரிந்தோம். ``எப்பப் பார்த்தாலும் ஏன்டா அழுதுகிட்டே இருக்கிற. அக்கா இருக்கேல்ல. லன்ச் டைம்ல வந்து உன்னைப் பார்க்கிறேன் அழாம இரு'' என்றாள். வழியெங்கும் கண்ணீரின் ஈரம். என்னால் கன்னத்தின் ஈரத்தை மட்டுமே துடைக்க முடிந்தது. பஜனை கோயில் தெருவில் இருந்த புஸ்ரா மளிகைக் கடையில் ஸ்நாக்ஸ் வாங்கிக் கொடுக்கவா என்றேன். வேண்டாம் என்றான். வகுப்பில் மிஸ் அடிக்கிறாங்களா. ம்ஹூம். பசங்க யாரும் கிண்டல் செய்கிறாங்களா. ம்ஹூம். அப்புறம் ஏன் பள்ளிக்கூடம் போகப் பிடிக்கலை என்றால் ஆழ்ந்த அமைதிதான் பதில். ஒரு வழியாகப் பள்ளியின் வாசலை அடைந்தோம். தன் சாப்பாட்டுக்கூடையை வாங்கிக்கொண்டு வலது பக்கமிருக்கும் வகுப்பறைக்குச் சென்றாள் மகள். பின் இருவரும் மகனின் வகுப்பறை நோக்கி நடந்துகொண்டிருந்தோம். வறண்டாவைத் தொடும் போதே அப்பா நான் வரலை என்றான். கையைப் பிடித்து அழைத்துச் சென்று வகுப்புக்கு வெளிச் சுவரோரம் பையை வைக்க அவன் கையை விட்டேன். என்னை உதறி எறிந்து `நான் வீட்டுக்குப் போறேன்' என்று விறுவிறுவென வறண்டாவிலிருந்து ஓடினான். விரட்டிப் பிடித்தேன். ஏன் இன்னும் வகுப்பறை திறக்கவில்லை என்று பக்கத்தில் இருந்த மாணவர்களை விசாரித்தேன். மாற்றலாகிய வகுப்பறையின் திசையைக் காட்டினார்கள். மகளின் வகுப்பறைக்குக் கீழ்த்தளத்தில் இருந்தது மகனின் வகுப்பறை. மாணவர்கள் நிறைந்த வகுப்பில் கரும்பலகையின் அருகே மணிமேகலை டீச்சர் நின்றுகொண்டிருந்தார். வணக்கம் வைத்து உள்நுழையும் போது `அப்பா என்னை அக்காகிட்ட விட்டுடுங்க' என்று படியேறி ஓடினான். நீ அக்காவின் வகுப்பறை செல்ல இன்னும் இரண்டு வருடங்கள் ஆகும். இந்த வகுப்பில் படித்தால்தான் அங்கு போக முடியும், கீழே இறங்கி வா என்றேன். பாதிப் படிகளைத் தாண்டிவந்தவனை இறுகப் பிடித்தேன். மீகாமன் `கம் இன் சைட்' ஏன் இப்படி அடம்பிடிக்கிற என்றார் மணிமேகலை டீச்சர். ``அப்பா உன் காலைப் பிடித்துக் கெஞ்சிக் கேக்கிறேன். என்னை வீட்டில் விட்டுடுங்கப்பா'' என்று முட்டிக்காலை இறுகப் பிடித்துக்கொண்டான். அதுவரை பொறுமையாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பிள்ளைகளை விடவந்த பெற்றோர்கள் குபுக்கெனச் சிரித்துவிட்டார்கள். அவன் கைகளிலிருந்து முட்டிக்காலை மீட்பதற்குள் பெரும்பாடாகிவிட்டது. `நல்லா படிச்சிட்டு இருந்த பையன். ஏன் திடீரென்று இப்படி அடம் பிடிக்கிற' என்ற மணிமேகலை டீச்சர் `கம் இன்சைட்', `கம் இன்சைட்' என்று சொல்லிக்கொண்டே இருந்தார். அந்தச் சொற்களுக்குள் அவனைத் தள்ளிவிட்டு அலுவலகம் சென்றுவிட்டேன்.


22.02.2022
செவ்வாய்


No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...