Saturday, February 19, 2022

ஊஞ்சலாடும் பாரதியார் பூங்கா

நேற்றிரவு உறங்கச் செல்லும் முன்பே நாளை நடைப்பயிற்சி செல்லும் போது என்னையும் தம்பியையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று மகள் கட்டளையிட்டாள். சரி என்று சொன்னேன். இப்படிச் சரியென்று சொல்லிவிட்டு அழைத்துச் செல்லாமல் சென்ற நாட்கள் எண்ணமுடியாதவை. இன்று வழக்கம் போல் 5.30 க்கு எழுந்து நடைப்பயிற்சிக்குத் தயாரானேன். ஆனால், இன்றும் மகளை ஏமாற்ற மனமில்லாமல், மேல் அறைக்குச் சென்றேன். முகம் கழுவ தண்ணீர்க்குழாயைத் திறக்க முற்பட்டேன். அது ஏற்கெனவே திறந்தபடிதான் இருந்தது. ட்ரம்மில் நீர் மொண்டு லக்ஸ் சோப்பில் முகம் கழுவேன். முகத்திலிருந்து வழிந்த நீர்ச்சொட்டுகளைச் சுவரில் எறிந்தபடி கதவைத் தட்டினேன். ஒரே தட்டலில் மனைவி உ சொல்லி கதவைத் திறந்தாள். பிள்ளைகளும் உற்சாகமடைந்துவிட்டார்கள். தினமும் செல்லும் மடிப்பாக்கம் ஏரிக்குக் கூட்டிச் செல்லலாம் என்றால் திரும்பி வர நேரமாகும் என்பதால் வேளச்சேரி பாரதியார் பூங்காவுக்கே அழைத்துச் செல்லலாம் என்று முடிவெடுத்தேன். கட்டிலில் கலைந்த உறக்கத்தை மீண்டும் துளிர்க்க முயற்சி செய்த மகனின் மீது சாய்ந்து கட்டியணைத்து முதுகில் செல்லமாய்க் கடித்து வைத்தேன். ம்... விடுங்கப்பா என்றான். சரி போய் முகம் கழுவிக்கொண்டு வாங்க பூங்காவுக்குச் செல்லலாம் என்றதும் துரிதமாகத் தயாராகி முன் நின்றனர். மனைவியையும் அழைத்தேன். குப்பை கொட்ட வேண்டும் நீங்கள் சென்று வாருங்கள் என்றாள். குப்பையை நாம் போகும் போது கொட்டிக்கொள்வோம் என்றேன், மௌனமானாள். இப்படித்தான் எப்போது பூங்காவுக்குச் சென்றாலும் அவள் உடன்வரமாட்டாள்.

குப்பையை எடுத்துக்கொண்டு பிள்ளைகளுடன் பூங்காவுக்குச் சென்றேன். முழுதும் விடியாத பொழுதில் திறந்துவிட்டார்களா இல்லையா என்கிற சந்தேகத்துடன் பூங்காவின் கதவுக்கு அருகில் சென்றோம். உள்ளே பருத்த பெண்மணி ஒருவர் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். ஓ... திறந்துவிட்டார்கள் என்று உற்சாகத்துடன் ஊஞ்சலை நோக்கி இருவரும் ஓடினர். வேளச்சேரி தண்டீஸ்வரத்தில் பிராமணர் தெருவுக்கும் தெலுங்கு பிராமணர் தெருவுக்கும் நடுவில் உள்ளது பாரதி பூங்கா. இதன் கிழக்கு திசையிதான் யாவரும் பதிப்பகத்தினரின் B4Books கடை உள்ளது. தெற்குப் பகுதியில் தபால் நிலையம் உள்ளது. நெட்டிலிங்கம், பாக்கு, கொய்யா, பூவரசம், வேம்பு, புளியம் ஆகிய மரங்கள் இங்கு உள்ளன. அத்தனை இருக்க பாரதி பூங்காவில் பாரதி இருக்கிறாரா என்பதுதானே உங்கள் கேள்வி. இருக்கிறார். விரிந்த புத்தகவடிவில் அமைக்கப்பட்டுள்ள கல்லின் இடது பக்கத்தில் பாரதியார் முண்டாசுடன் இருக்க, அதன் வலப் பக்கத்தில் `சாதிகள் இல்லையடி பாப்பா', `ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று கூறி அலையும் அறிவிலிகாள்' பாடல்வரிகள் இடம்பெற்றுள்ளன.

ஊஞ்சலை ஆட்டிவிடச் சொல்லி மகள் அழைத்தாள். இருவரின் ஊஞ்சலுக்கும் நடுவில் நின்றபடி வலது கையால் மகனையும் இடது கையால் மகளையும் ஆட்டிவிட்டேன். நொண்டிக்கொண்டிருந்த கர்ப்பிணி நாயொன்று குறுந்திட்டில் ஏற சுற்றிச் சுற்றி வந்து கால்தூக்க முடியாமல் போக சிமென்ட் பெஞ்சின் அடியில் பதுங்கியது. பாட்டியுடன் வந்த சிறுமி ஒருத்தி அருகில் இருந்த ஊஞ்சலில் தன்னைத் தானே ஆட்டிக்கொண்டிருந்தாள். நடைப்பயிற்சியில் இருந்த அவளின் பாட்டியின் செல்போனில் ஒலித்தது `சஷ்டியை நோக்க சரவண பவனா'. சற்று அயர்ந்த என் மூக்கைப் பீடி நாற்றம் பிடிங்கிச் சென்றது. பின் திரும்பினால், கைப்பையைப் பூங்கா சுவரில் வைத்த ஒருவர் போன் பேசிக்கொண்டிருந்தார். இடக்கை விரல்களுக்கிடையே கசியும் புகையின் சாம்பல் காற்றில் பறக்கிறது.


அது என்ன மரம் என்று மகள் கேட்டாள். அது எனக்கு நெட்டிலிங்க மரம் என்று தொண்டை வரை வந்த சொல், அருகில் இரண்டு மூன்று பேர் நடந்துகொண்டிருப்பதைப் பார்த்து பெயர் தவறாக இருக்குமோ என்கிற சந்தேகத்தில் பதிலளிக்கவில்லை. இப்போதுதான் தெரிகிறது அது நாகலிங்க மரமென்று. இதன் மொட்டுகள் கூழாங்கல்லைப் போன்ற மென்மையுடனும் நசுக்குவதற்கு மிகக் கடினமாகவும் இருக்கும். கிளையில் ஓடும் கொடியில் தொங்கும் காய்கள் கால் பந்தைப் போலவும் பழவோடு மண்டையோட்டினைப் போலவும் இருக்கும். தன் மகளுடன் வந்த ஒருவர் மனைவியையும் மகளையும் ஊஞ்சலிட்டார். பொமெரேனியன் நாயுடன் ஊஞ்சலாடினாள் அவர் மனைவி. அவளின் மடியில் இருந்து குதித்த நாய் குண்டியைத் தரையுரசியபடி அரசஞ்சருகின் மீது சிறுநீர் கழித்தது.  

விளையாட்டை முடிக்கவைத்து வெளியே அழைத்து வந்ததும் வழக்கமாகச் செல்லும் தெலுங்கு பிராமணர் தெருவழியே மகள் அழைத்தாள். மகனோ, பிராமணர் தெருவழியாகச் சுற்றிச் செல்லலாம் என்றான். அக்கா வழி செல்லலாம் என்றால், தம்பி ஒத்துக்கொள்ளவில்லை. தம்பி வழி செல்லலாம் என்றால் அக்கா வழிக்கு வரவில்லை. பெரும்பாலும் மகளின் சார்பான நான் ஏனோ மகனின் பக்கம் சாய்ந்துவிட்டேன். மகள் நான் வரமாட்டேன் என அடம்பிடித்தாள். சரி இங்கேயே இரு என்று மகனுடன் புறப்பட்டு ரெண்டடி எட்டுவைத்தேன் புலம்பியபடி ஓடிவந்துவிட்டாள். மூவரும் கைவீசி தெருமுனைக்கு வந்தோம். ஐ... இப்படித்தான் தினமும் ஸ்கூலுக்குப் போவோம் என்று கோரஸாக இருவரும் கூறினார்கள். இனிக் கொஞ்ச நாளைக்குப் பூங்காவுக்கு அழைத்துச் செல்லச் சொல்லி தொல்லை தரமாட்டார்கள் என்று நினைக்கிறேன். பார்ப்போம்...

19.02.2022
சனிக்கிழமை
  

No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...