Saturday, January 18, 2025

 

பேச்சுக்குரலில் நவீனப் பட்டினப்பாலை

 


`கபால நகரம்’ பச்சோந்தியின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பென்று நினைக்கிறேன். அவருடைய முதல் தொகுப்பு, ‘வேர் முளைத்த உலக்கை’க்கும், `அம்பட்டன் கலயம்’ தொகுப்புக்கும் முன்னுரை எழுதியிருக்கிறேன். கடந்த ஏழு எட்டு ஆண்டுகளில் கவிஞர் பச்சோந்தி வலுவான பல அடிகளைத் தமிழ்க் கவிதையுலகில் தடங்களாய்ப் பதித்திருக்கிறார். உள்ளிருந்து ஒலிக்கும் குரல் அவருடையது என்பதால், சமூகப் பிரச்சனைகளைப் பேசும் சர்ச்சைக்குரிய கவிதைகளாய்ப் பலவற்றை அவர் எழுதிப் பார்த்திருக்கிறார். வெறும் அனுபவம் சார்ந்த வெளிப்பாடுகள், அழகியலின் நுட்பங்கள், அரசியல் குரல்கள், சொந்த வாழ்வின் சோகங்கள், தத்துவச் சாயல்கள் எனப் பல முகங்களுடையது நவீனத் தமிழ்க் கவிதை. இதில் அமுக்கப்பட்ட மனிதர்களின் கருத்தியல் குரலாய் வெளிப்படுவதைத் தம் கவிதைகளின் அடிநாதமாய்ப் பச்சோந்தி பேணிவந்துள்ளார்.

இத்தொகுப்பில், உரைநடையையே கவிதையாக வளைக்கும் முயற்சியில் பச்சோந்தி இறங்கியிருப்பதாகத் தோன்றுகிறது. க.நா.சு செய்து பார்த்த ஒரு பரிசோதனை முயற்சிதான் இது. சொற்களுக்காகத் தவங்கிடந்து கொண்டிருக்காமல், மனதில் தோன்றுவதைக் கூடுமானவரையில் சாதாரணமான சொற்களிலேயே எழுதிப் பார்க்கும் தம் முயற்சியில் பெருமளவுக்குப் பச்சோந்தி வெற்றி பெற்றிருப்பதாகவே அவதானிக்க முடிகிறது. பார்ப்பதை, கேட்பதை, நினைப்பதை, உணர்வதை அந்தந்தத் தருணங்களிலேயே பதிவு செய்துவிட ஒரு கவி மனம் அவாவும்போது, அன்றாட நடைமுறை சார்ந்த பேச்சுமொழியாகக் கவிமொழி பரிணமிப்பதில் வியப்பில்லைதானே.

ஒரே ஓர் உதாரணம் மட்டும் காட்டலாம். ‘மண்டையோட்டை முகக் கவசமாக்கியவனைக் கோயம்பேட்டில் கண்டேன். ஓட்டின் தலைப்பகுதியில் வெட்டுத் தழும்பு. தண்டவாளத்தின் அடியில் கிடைத்ததாம். ஒன்றை எடுக்கும் கணத்தில் ஊற்றாய் மண்டையோடுகள் பெருகப் பெருக, மிரண்டு ஓடிவந்துவிட்டானாம். ஓர் தாய் தண்டவாளத்தில் குப்புறக்கிடந்த அரும்பு மீசையின் பாதத்தைக் கன்னத்தில் அழுத்தி அழுகிறாள். சிதறிய ரத்தத்துளிகளில் எண்ணற்ற ரயில்கள் தடதடத்தன’ என்றெழுதுகிறார். புனைகதையில் வருவது போன்றே, கவிதையிலும்கூடத் தயக்கமின்றி இவ்வரிகள் இடம்பெறுகின்றன. கவித்துவம் என்பதைச் சொற்களிலும் மொழியிலும் மட்டுமே காண்பது பழைய வாசிப்பு முறை. கவித்துவத்தைக் கவிஞரின் பார்வையிலும் ஒத்துணர்விலும் காண்பதுதான் நவீன வாசிப்பு. இதற்கு அணிசெய்திருக்கிறார் பச்சோந்தி.

சென்னைப் பெருநகரின் சாலைகளிலும் தெருக்களிலும் ரயில்வே ஸ்டேஷன்களிலும் பேருந்து நிறுத்தங்களிலும் நடைபெறும் பல்வேறு விசித்திரக் காட்சிகளைப் பச்சோந்தியின் கண்கள் விடாமல் படம்பிடித்துக்கொண்டேயிருக்கின்றன. ஓர் அநாதரவான மனோநிலையும் வெட்டவெளியின் உணர்வோட்டமும் இக்கவிதைகளில் அலையலையாய்ச் சிதறியபடியேயுள்ளன. மனித நாகரீகம் எவ்வளவு குரூரமானது, மனிதர்கள் எவ்வளவு கேவலமானவர்கள் என்பதையெல்லாம் தாண்டி, மனித இருப்பு எவ்வளவு அவலமானது என்ற புள்ளியில்தான் குவிந்திருக்கிறது கவிஞரின் மனம்.

‘விளக்குகள் எரியா சிக்னலில், கேள்விக்குறியைக் கைத்தடியாக்கிய பெரியார் சிலை, பறவையின் காய்ந்த எச்சத்துடன், முற்றும் தூசி படிந்துள்ளது’ எனக் காலத்தின் உறைவை நம்பிக்கை வறட்சியுடன் சித்திரித்தாலும், ‘ஆரவாரத்துடன் மண்டையோடுகளில் பறையிசைக்கிறது, மூலக்கொத்தளம் சுடுகாட்டுக்குள் நுழையும் தங்கரதம்’ எனச் சாவுக்குப் பின்னும் உருத்திரளும் எதிர்ப்புணர்வைப் பாடுவதிலும் பச்சோந்தி துடிப்புடன்தானிருக்கிறார்.

மெல்லத் தன் தோலை உரித்துப் பறையடித்தாடும் ராமனையும் சீதையையும் பச்சோந்தியின் கவிதைகளில்தாம் நீங்கள் பார்க்க முடியும். ‘பிரியும் இரு தண்டவாளங்களுக்கு நடுவே பாழடைந்த மைதானத்தில் இளைப்பாறும் காற்பந்தைப் பன்றிகள் புதருக்குள் எத்திச் செல்கின்றன’ என்கிறார்.

 ‘பாழடைந்த கட்டடத்தின் உடைந்த கண்ணாடியில் ஒளிர்கிறது சூரியன்’ என்கிறார். ‘இது காலணியல்ல, நம் இனத்தின் கடைசிக் கால்கள்’ என்கிறார். ‘ஆலம் விழுதுகள் தூண்களாகிப் போன வீட்டினைப் பார்த்து’ என்கிறார். இங்கே வாழ்வது என்பதை விடவும் கொடுமையானது வேறில்லை என்ற மனநிலைக்கு அருகில் சென்றுவிட்டார் பச்சோந்தி. பைத்தியம் பிடிக்காமல் இங்கு மனிதர்கள், சகஜபாவத்துடன் எப்படித்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்களோ! புத்தி பேதலித்த சொற்களையே கவிஞன் இங்குச் சிதறடித்துக்கொண்டிருக்கிறான். சொற்களெல்லாம் வலிமையிழக்கும் ஒரு காலத்தில் கவிஞன் ஏதிலியாகிறான். இன்னுமின்னும் எத்தனை காலத்துக்குக் கவிதை மட்டுமே எழுதுவது என்று அவனைத் துரத்தித் துரத்தி விடாமல் கேட்டுப் பிளிறுகிறது அவன் மூளை. வாழாமையே வாழ்வாகும் கொடுமைக்குக் கவிதையே சாட்சியாய்ப் பச்சோந்தி எதிர்நீச்சலிடுகிறார்.

 சென்னை - வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை என்று மூன்றாகப் பிரிந்து கிடக்கிறது. இத்தொகுப்பில் சென்னையின் உழைக்கும் மக்கள் பற்றிய பதிவை - அவர்களின் எல்லாமும் பிடுங்கப்பட்டு வெறும் மனித இயந்திரங்களாக அவர்கள் சுருக்கப்பட்டுச் சுரண்டப்படுவதன் அவலத்தைச் சித்திரித்திருக்கிறார். இந்த நகரின் பூர்வீகக் குடிமக்கள் - எப்படி அதிகாரக் குறுக்கீடுகளாலும் லாபம் மட்டுமே ஒரே குறியாகக்கொண்ட பெருவணிகத்தாலும் நுகர்வுக் கலாச்சாரத்தாலும் உள்ளீடற்ற வார்த்தைப் பந்தல்களாலும் துண்டாடப்பட்டுச் சிதைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற வரலாற்றை ஒரு கவிஞனின் சமூகப் பிரக்ஞையோடு பதிவுசெய்திருக்கிறார். தர்மமிகு சென்னையாக வள்ளலாரால் பாராட்டப்பட்ட அதே மாநகரம், இப்போது அதன் அப்பாவி மக்களை வெளித்தள்ளுவதில் எப்படி முன்நிற்கிறது என்ற வஞ்சனையின் வலைப்பின்னலை அம்பலப்படுத்துவதில், ஒரு நவீனப் பட்டினப்பாலையையே பாடிவிடுகிறார் பச்சோந்தி என்று சொல்லலாம். ஆம். நிலம் என்பதும் வீடு என்பதும் வாழ்வின் இருப்பை நிச்சயப்படுத்துவதற்குப் பதிலாகப் போராட்டச் சிதிலங்களாக மேன்மேலும் மக்களை நிலைகுலையச் செய்யும் பட்டினப்பாலைதான் பச்சோந்தியின் சென்னை.

 நவீனக் கவிதையில் பச்சோந்தியின் இடம் எது? மக்கள்சார்புக் கருத்தியலைப் பேசுவதையே கடமையாக ஏற்றுச் செயல்படும் பச்சோந்தி, நமது பண்பாட்டு மரபுகளுக்குப் பின்னாலுள்ள மேலாதிக்கத்தையும் அன்றாட வாழ்வில் புரையோடிப் போயுள்ள அமனித உணர்வுத் திரிபுகளையும் வெளிக்கொண்டு வரும் அழுத்தக் குழுவின் வேலையைத் தனியாளாய்ச் செய்கிறார். மக்களே போல்வராய்க் கயவர் உலவும் நிலப்பரப்புகளில் கவிஞன், மலர்வண்டியா ஓட்டிக்கொண்டிருக்க முடியும்! உள்ளத்திற்குள் இடையறாது ஒழுகும் குருதியைச் சிந்தையில் உணர்ந்தபடி, நடைப்பிணங்களுக்கிடையில் ஊர்ந்து ஊர்ந்து மூச்சையாவது இழுத்திழுத்து விடவேண்டியதுதான்! மண்ணின் அந்த முதல் நாளுக்குப் போக முடியாதபோதும் இந்த நாளைச் சகித்திருப்பது எப்படியென்ற கேள்வியில்தான் ஒட்டிக்கொண்டிருக்கிறது கவிஞனின் உயிர். ‘நாளை நமதே’ என்ற குரலைக் கவிதையிலாவது அவன் எழுப்பித்தான் தீர வேண்டியிருக்கிறது. அவனுடைய கவிதைகளைக்கூடப் படிக்காத அவனுடைய மக்களுக்காகவும் பொதுவெளியில் வந்து அவன் சற்றே கூக்குரலிடத்தான் வேண்டியிருக்கிறது. இக்கூக்குரலைச் சலிப்பின்றித் தொடர்ந்து எழுப்புவதில்தான் பச்சோந்தியின் இடமிருக்கிறது. அந்தவகையில் பேச்சிழந்தவர்களின் பேச்சுக் குரலே பச்சோந்தி!

 

கல்யாணராமன்

26.11.2022

 

 

No comments:

Post a Comment

  பேச்சுக்குரலில் நவீனப் பட்டினப்பாலை   `கபால நகரம்’ பச்சோந்தியின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பென்று நினைக்கிறேன். அவருடைய முதல் தொகுப்பு, ‘வே...