Wednesday, February 16, 2022

`தானாய் மலரும் காலம்'

வெகு நாளாகவிட்டது நடைப் பயிற்சிக்குச் சென்று. வேளச்சேரியின் பிரதான சாலைகள், குறுக்குச் சந்துகள் எனக் கவிஞர் ஷங்கர் ராமசுப்ரமணியனுடன் சேர்ந்து நடந்ததுண்டு. குறிப்பாக வேளச்சேரி ரயில்நிலையத்தில் அதிகமான நாட்களைச் செலவிட்டிருக்கிறோம். எனக்கும் ஷங்கருக்குமான உறவு ஆரம்பத்தில் பிடிப்பற்றதாகத்தான் இருந்தது. அவரைச் சந்திக்கும் சமயமெல்லாம் சின்ன சீண்டல் இருந்துகொண்டே இருக்கும். அவை மேலும் அவரிடமிருந்து விலகல்தன்மையையே கொடுத்தன. பீஃப் கவிதைகளுக்குப் பிறகு இருவருக்கும் நல்ல இணக்கம் ஏற்பட்டது. அடிக்கடி போனிலும் நேரிலும் சந்தித்துப் பேசுவோம். குறிப்பாக விகடனில் வேலை இழந்த துயர் மிகு காலத்தில் என்னைப் பத்திரப்படுத்தினார். பொருளாதார ரீதியாக, வேலை வாய்ப்பு ரீதியாக, வாசிப்பு சார்ந்து புத்தகங்கள் அள்ளிக்கொடுப்பது எனப் பேரன்பைக் காட்டினார். நீண்ட காலமாக வாசிக்க வேண்டும் என்கிற ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலை முதல் ஊரடங்கின் போது கேட்டேன். உடனே தன் வீட்டு நூலகத்தில் இருந்து எடுத்துக் கொடுத்தார். இப்படி சில முக்கியமான நூல்களைக் கேட்டதும் கொடுத்துவிடும் மனம் ஷங்கருக்கு. 


வேலையற்ற நாட்களில் எனக்கு எதுவும் ஆகிவிடுமோ எனக் கண்காணித்துக்கொண்டே இருப்பார். குரலில் தொய்வு அல்லது உடைசல் தெரிந்தால் உடனே வண்டி எடுத்துக்கொண்டு என் வீட்டுக்கு வந்துவிடுவார். பாவனை, பாசாங்கு இரண்டுமற்ற ஷங்கர் தன் அறிவை, ஆளுமையைப் பிறர் மீது திணிக்காதவர். செல்மாவுக்குப் பிறகு இப்படியான கட்டற்ற அன்பை என்மீது செலுத்தியவர் ஷங்கர் ஒருவராகத்தான் இருப்பார். 


வேளச்சேரி ரயில் நிலையம்

வேளச்சேரி ரயில் நிலையம்

அறிவுத்தளத்தில்தான் ஒருவரைச் சந்திக்க வேண்டும் என்றல்ல; சும்மா ஒருவரைச் சந்தியுங்கள். இந்த வேளச்சேரியில் உள்ள பூ விற்பவரைக் கால் நூற்றாண்டாகத் தெரியும். நான் சென்னை வந்த புதிதில் மருந்துக்கடை நடத்திய பெண் இன்று பாட்டியாகி உள்ளார். இவர்கள் மட்டுமல்லாது பால் போடுபவர், பேப்பர் போடுபவர் எனப் பலபேருடன் இன்றும் தொடர்பில் இருக்கிறேன். வீட்டுக்குள்ளே இருக்காமல் உங்களுக்குள் ஒடுங்கியிருக்காமல் பிறரைச் சந்தித்துப் பழகுங்கள் என அடிக்கடி கூறுவார். `கவிதை எழுதுவது பறக்கப் பழகுவது, உரைநடை எழுதுவது நடக்கப் பழகுவது' உங்களுக்கு நன்றாகப் பறக்கத் தெரிகிறது. நடக்கவும் கற்றுக்கொள்ளுங்கள் எனத் தொடர்ந்து கூறிவந்தவர் `பாட்டி வடை சுட்டது' என்று எளிமையாக எழுதத் தொடங்குங்கள் என்பார். அவர் சொல்வதற்கெல்லாம் தலையாட்டிவிட்டு ஒன்றும் செய்யாமல் இருப்பேன். அது அவருக்கு ஒருவித எரிச்சலை உண்டு பண்ணியிருக்கும். பல நேரங்களில் சிலர் சொல்வதை என்னால் உடனே செய்ய முடியாமல் போன சம்பவங்கள் ஏராளம் உண்டு. ஏன் என் உள்ளுணர்வு சரி என்று சொல்லிச் செய்யாமல் போனவை கணக்கில் அடங்காதவை. அப்படித்தான் இதுவும். மற்றபடி பிறர் சொல்லிக் கேட்கக் கூடாதென்றெல்லாம் ஒன்றுமில்லை. எதுவும் தானாய் மலரும் போது மகத்துவமாக இருக்கும் அல்லவா. இது தானாய் மலரும் காலம்.

ஆமாம் இனி நடக்கப் பழகப் போகிறேன் நண்பர்களே!

17.02.2022
வியாழக்கிழமை

No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...