Wednesday, February 23, 2022

இமைதாண்டாக் கண்ணீர்

 


இரண்டாவது மாடியின் சின்ன அறையில் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக்கொண்டிருந்தாள் மனைவி. அம்மா கொடுத்தனுப்பிய தேங்காய், புளியைப் பழுதுற்ற தொலைக்காட்சியின் ஓரம் சாய்வாக வைத்துவிட்டு வழக்கம் போல் உடைமாற்றி முகம் கழுவி வர கீழ் அறைக்குச் சென்றேன். மகனிடம் `அப்பாகூடச் சென்று எடுத்து வா' என்றாள் மனைவி. `நீ கீழ வராதே' என்று சொல்லியும் பின்னாடியே வந்துவிட்டான். `எதற்காக வந்தாய்?' `பபுள்கம் எடுக்க'. `நீ உள்ளே வராத போ' என்றேன். அன்று காலையில் நடந்த சம்பவம்தான் அவன்மீது இவ்வளவு கோபம்கொள்ளக் காரணம்.

கடந்த ஒரு வாரமாக நல்லமுறையில் பள்ளி சென்று வந்தவன். காலையில் பள்ளிசெல்ல மறுத்து மீண்டும் அழ ஆரம்பித்துவிட்டான். மென்னழுகையோடே உடன் வந்தவனிடம் என்னாச்சு என்று கேட்டேன், பதிலில்லை. புஸ்ரா மளிகைக் கடையில் மகளுக்குப் பால்கோவாவும் மகனுக்கு மைசூர் பாகும் வாங்கிக் கொடுத்தேன். காகிதத்தில் மடிக்கப்பட்ட மைசூர் பாகுவை உள்ளங்கையோடு இறுகப் பிடித்தபடி வந்தான். சரி எப்படியும் வகுப்பறைக்குச் சென்று விடுவான் என்கிற தைரியத்தில் அழைத்துச் சென்று விட்டேன். வழக்கமான இடத்தில் எப்போதும் கேட்கும் கேள்வியை மகள் கேட்டாள் ``அப்பா நம்ம எப்பப்பா கார் வாங்குவோம்''. ``எப்படிம்மா குறிப்பா இந்த இடத்தில் வந்ததும் இந்தக் கேள்வியைக் கேட்குற'' என்றதும் ``இல்லை இந்த வீட்டில் நிறுத்தியிருக்கும் கார் ரொம்பப் பிடித்திருக்கிறது'' என்றாள். ``சரி சரி... கார் எல்லாம் வாங்க முடியாது. டூ வீலர் வேண்டுமானால் வாங்கலாம்'' என்றேன். ``எப்பப்பா'' என்றாள். ``இதைவிட நல்ல சம்பளத்திற்கு வேலைக்குப் போகும் போது கண்டிப்பாக வாங்கலாம்'' என்றேன். ``சரி இந்தப் பள்ளிக்கூடம் பிடித்திருக்கிறதா'' என்றேன். ``பிடிக்கவில்லையென்றால் என்னப்பா செய்வீங்க'' என்றாள். உடனடியான மகளின் இந்தப் பதிலுரைக்கும் கேள்விக்குத் திக்கித்திணறிப் போனேன். ``இதற்கு முன் நீ குருநானக் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தாய். அப்போது அப்பா நல்ல சம்பளத்தில் வேலை செய்துகொண்டிருந்தேன். கொரோனா வந்தபோது அந்த நிறுவனத்திலிருந்து வேலையை விட்டு எடுத்துட்டாங்க. கிட்டத்தட்ட ஐந்தாறு மாதங்கள் வேலையின்றி இருந்தேன். பிறகு வேலைக்குச் சேர்ந்த இடத்தில் முன்போன்ற சம்பளம் இல்லம்மா. இதைவிட நல்ல வேலைக்குப் போகும் போது உன்னையும் இதைவிட நல்ல பள்ளியில் சேர்த்துவிடுறேம்மா'' என்றேன். ``சரி சரி'' என்று சொன்னாள். 

பள்ளி இருக்கும் தெருமுனையை அடைந்தோம். மெல்லிய குரலில் அழுதவன் திடீரென்று ``கக்கா வருது'' என்றான். ``ஏன்டா காலையில் போகவில்லையா'' என்றால் ``இல்லை'' என்றான். அன்று நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றதால் அதில் எனக்கும் குழப்பம்தான். சரி பள்ளிக்கூடம் சென்றதும் போயிக்கலாம் என்றேன். ``அங்கே விடமாட்டாங்க'' என்று மகள் சொன்னதும் நடுப்பாதையில் என்னசெய்வதென்று அறியாமல், சரி முதலில் பள்ளிக்கூடம் போனதும் முடிவெடுத்துக்கலாம் என்று மகளைப் பள்ளியினுள்  அனுப்பிவிட்டு வீட்டுக்குப் போய் கக்கா போகவைக்கலாம் என்று நினைத்தேன். வீட்டுக்குப் போகும் போது இரண்டு மடங்கு வேகமாக நடந்தான். ``தம்பி, ஏன் பள்ளிக்கூடம் போக விருப்பமில்லாமல் இருக்கிறாய் ; எதுக்கெடுத்தாலும் ஏன் அழுகிறாய். நல்ல படிக்கணும் தைரியமா இருக்கணும். எப்பப் பார்த்தாலும் அழுதாய் என்றால் கோழைப் பையன் என்று கிண்டல் செய்வார்கள். மற்ற நேரமெல்லாம் எவ்வளவு தைரியமாய் இருக்கிறாய் ; கம்பீரமாய்ப் பேசுறாய், எல்லா வேலையும் செய்கிறாய். ஆனால், பள்ளிக்கூடம் என்றால் மட்டும் நடுங்கிச் சாகிறாய். இப்படியெல்லாம் இனிமே இருக்காமல் உன்னை மாற்றிக்கொள்'' என்றேன். ``ம்ம்ம்'' என்றான். பிள்ளையார் கோயில் தெரு குறுக்குச் சந்தின் அருகே சென்றதும் ``இங்கிருந்து நீ மட்டும் போ. வீட்டுக்குத் திரும்பும் போது கையசை'' என்றேன். சுமார் 200 மீட்டர் இடைவெளியில் இருந்து திரும்பி மட்டும் பார்த்துவிட்டுச் சென்றுவிட்டான். மதியப் பொழுதில் மனைவியை அழைத்துப் பேசும் போது, ``கக்கா போகணும் என்று சொல்லவும் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டேன்'' என்றேன். அப்படியா எங்கிட்ட வந்து ``நான் அழவும் அப்பா என்னைக் கூட்டிட்டு வந்துட்டாருன்னு சொன்னான்'' என்றாள்.

தம்பி இப்படியெல்லாம் பொய் பேசினால், அப்பா உன்கூடப் பேசமாட்டேன் என்றதும் சற்றென அவன் கண்களில் இமைதாண்டாது தேங்கி நின்றது கண்ணீர். எனக்கும் கஷ்டமாகிவிட்டது. `ஒன்பதாம் வகுப்பு விடுதியில் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் பெட்டி படுக்கையோடு வந்தவன் தானே நீ. அதன் பின் மெட்ராஸுக்குப் போய் படித்தாயல்லவா. உன் பையன் படிக்க மாட்டானா. லூஸுல விடு' என்றது உள்ளுணர்வு. மாற்றம் ஒன்றுதானே மகத்தானது. காத்திருப்போம்...

23.02.2022
புதன்கிழமை

No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...