Monday, February 21, 2022

I am proud of you அப்பா

இரண்டு நாளுக்கு முன்பு மகாபலிபுரம் போகலாம் என்று திட்டமிட்டிருந்த போது கையில் இரண்டாயிரம் இருந்தது. இன்று 600 ரூபாயாய்ச் சுருங்கிப் போனது. பணம் கட்டாததால் துண்டித்துப் போன கேபிள் கனெக்‌ஷன் எங்களின் பயணத்தைக் கேள்விக்குள்ளாக்கியது. ``வீட்டுக்குள்ளேயே இருப்பது ஜெயில் இருப்பது போல் இருக்கிறது. எங்கையாவது வெளியில் கூட்டிட்டுப் போங்கப்பா'' என்று பிள்ளைகள் கேட்டபிறகுதான் இந்தப் பயணம் முடிவானது. கிராமத்தில் பிறந்து வளர்ந்த பிள்ளைகளுக்கு 10X10 அறை சிறையாகத்தான் இருக்கும். ஒருபக்கம் கேபிளுக்குப் பணம் கட்டச் சொல்லிக்கொண்டிருந்தாள் மனைவி. மறு பக்கம் எப்பப்பா மகாபலிபுரம் போவோம் எனப் பிள்ளைகள் ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு கட்டத்தில் சும்மா அமைதியா இருக்கமாட்டீங்களா எனக் கடுகடுக்க இனிமே கீழயே வரமாட்டேன் என்றாள் மகள்(எலியிடமிருந்து புத்தகங்களைக் காக்க கீழ் ஒரு அறை எடுத்துள்ளேன்). உன்னை யார் வரச் சொன்னது என்று மேலும் வெறுப்பைக் காட்டினேன். சற்றுநேரம் கழித்துக்குக் கதவைத் திறந்தால் படியில்  உட்காந்திருந்தாள். கேபிளுக்குப் பணம் கட்டவேண்டுமெனச் சொல்ல அப்படியென்றால் இன்றைக்கும் வெளியில் போகமாட்டோமா, போங்க நல்லா ஏமாத்துறீங்க எனச் சொல்லிவிட்டு மேலே சென்றுவிட்டாள். செய்வதறியாமல் நண்பனைத் தொடர்புகொண்டு கடற்கரைக்குக் கூட்டிப் போகச் சொல்லிக் காலையிலிருந்து பிள்ளைகள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் கையில் முந்நூறு ரூபாய்தான் இருக்கிறது என்றேன். கார் ஓட்டிக்கொண்டிருக்கிறேன், சிறிது நேரத்தில் அழைக்கிறேன் என்றான். 


முதல்முறை மீன் எடுத்துச் சமைத்திருந்தாள் மனைவி. மகன் அசைவப் பிரியன். அப்பப்போ மீன், கறி எடுத்துச் சமைக்க வேண்டும். பாவம் பிள்ளைகள் ஏங்கிப் போகும் எனச் சமீப காலமாகச் சொல்லிவந்தாள். சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது, நண்பர் நவீனிடமிருந்து அழைப்பு. பீனிக்‌ஸ் மாலில் 10:40 க்கு `Uncharted' என்கிற adventure movie. மூன்று டிக்கட் இருக்கிறது வருகிறீர்களா என்றார். அப்போது 10:20 ஆகியிருந்தது. படத்துக்குப் போறேன் என்கூட ஒருவர் வரலாம் இருவரில் யார் வர்றீங்க என்றேன். தம்பியை அழைத்துக்கொண்டு போங்க என்றாள் மகள். படம் முடிந்து சீக்கிரம் வந்து பீச்சுக்குக் கூட்டிப் போங்க என்றாள். சரி என்று  புறப்பட்டோம்.


அம்மா இல்லாமல் முதல்முறை என்னுடன் தனியாக வந்தான். இதற்கு முன்பு `பாபநாசம்', `காலா', `பரியேறும் பெருமாள்' இரண்டு படங்களுக்கும் பீனிக்ஸ் மாலுக்குக் குடும்பத்துடன் சென்றிருந்தோம். நான்கு பேரும் சேர்ந்து பார்த்த முதல் படம் `காலா'தான். பிறகு கறுப்பு உடைகொண்ட ரஜினி படத்தை எங்கு பார்த்தாலும் `அப்பா காலாப்பா' என்று சொல்வார்கள். வேளச்சேரி தண்டீஸ்வரத்திலிருந்து பீனிக்ஸ் மால் செல்லப் பயணச்சீட்டின் விலை 11 ரூபாய். இதற்கென எடுத்துச் சென்ற சில்லறைகளை எடுத்து நடத்துநரிடம் நீட்டினேன். இடையில் ஒரு நிறுத்தம்தான். நான் படித்த குருநானக் கல்லூரியை மகனுடன் கடந்து செல்லும் போது, சிறு நினைவு எழுந்தது. 2005 இல் அதிமுக தமிழகத்தை ஆண்டுகொண்டிருந்தது. `கல்லூரிக் காலத்தில் நம்ம கல்லூரிக்கு அருகில் பத்துத் திரையரங்கம் வரப்போகிறது' என்கிற செய்தி பரபரப்பாகிக்கொண்டிருந்தது. ஒரே இடத்தில் பத்துத் திரையங்கமா என்று பிளந்த வாய்களில் என்னுடையதும் ஒன்று. அது ஒரு நடக்கவியலாத கனவு அல்லது மிகச் சிறந்த கட்டுக்கதை என்றுதான் அன்று நினைத்திருந்தேன். இன்று மகனுடன் அங்கு சென்றுகொண்டிருக்கிறேன். 

திரைப்படம் தொடங்க இன்னும் பத்து நிமிடங்கள்தான் இருக்கின்றன. பீனிக்ஸ் வாசலில் இருக்கிறேன். எங்கே இருக்கிறீங்க என நவீன் கேட்டார். இதோ வந்துகொண்டிருக்கிறோம் என்றேன். வாசலில் இருந்து அவரை அழைத்தேன். உள்ளிருப்பதாகக் கூறினார். நுழைவாயிலில் மணிக்கட்டில் தெர்மல் ஸ்கேனரில் வெப்பநிலையைப் பரிசோதித்தனர். அடுத்து டிக்கட் கொடுக்கும் இடத்தில் டிக்கட் காட்டுங்கள் என்றார் ஒரு பெண்மணி. உள்ளே இருக்கிறாங்க என்கிற என் பதில் அவருக்கு ஒருவித சலிப்புணர்வைக் கொடுத்ததைக் கண்டேன். சற்று நிமிடத்தில் எனக்கே என்மேல் வெறுப்பு வந்தது. சரியா அவரிடம் பதில் சொல்லவில்லையோ? சொற்களைத் தெரிவுசெய்து பேசியிருக்க வேண்டுமோ என்று குழம்பிப்போயிருந்தேன். இந்த அவமதித்தல் எப்படி நடந்தது. நான் என்ன பேசினேன் என்பதை ஒருமுறை நினைத்துப் பார்த்தேன். வெறுமனே `உள்ள இருக்காங்க' என்கிற சொற்களைக் கேட்கும் போது நமக்கே அச்சொற்களின் மீது அச்சொற்களைப் பேசியவர் மீது வெறுப்புணர்வு வரத்தானே செய்கிறது என்றெண்ணி எனக்கு நானே சமாதானம் செய்துகொண்டு மொபைலைப் பார்த்தேன். அப்போதுதான் நவீனின் Missed Call ஐக்கண்டு அழைத்தேன். வாட்ஸ் அப்பில் டிக்கெட் அனுப்பியிருக்கிறேன். Screen 1, இருக்கை எண் D10, D11 என்றார். Mobile data வை ஆன் செய்து டிக்கெட் காட்ட அந்தப் பெண்மணியை அழைத்த போது பரவாயில்லை உள்ளே போங்க சார் என்றார். இழந்த நம்பிக்கையை, பலத்தை மீண்டும் மீட்டு மகனுடன் திரையரங்கினுள் நுழைந்தேன்.

இருட்டிலிருந்து மேல்நோக்கிப் பார்த்தோம். வலதுப் பக்க மேற்பகுதியில் செல்போன் வெளிச்சம் எங்களை அழைப்பது போல் இருந்தது. அங்கேதான் இருக்க வேண்டுமெனச் சென்றோம். மூன்று சீட்டின் நடுவே நவீன் அமர்ந்திருந்தார். அவரின் வலது பக்கம் மகனை அமரச் சொன்னேன். பொதுக்கென்று இருக்கை அவனை மூழ்கச் செய்திடும் போல் இருந்தது. எப்போது படம் போட்டார்கள் என்றேன். இரண்டு நிமிடங்கள்தான் இருக்கும் என்றார். நேட்டும் சாமும் புதையலின் வரைப்படத்தைத் திருடச் செல்லும் இடத்தில் மாட்டிக்கொள்ளும் காட்சியில் படத்தைப் பார்க்க ஆரம்பித்தோம். சகோதரன் பிரிவில் துயருரும் நேட்டின் முகம் கணத்தில் வாலிப முகமாய் உருமாறும். சில காட்சிகள் வித்தியாசமான கோணத்தில் படமாக்கப்பட்டிருந்தது. தொய்வின்றி விறுவிறுப்பாக நகர்ந்தது. இடைவேளையில் சிறுநீர் கழிக்கச் செல்லும் போது சுவரில் பதிப்பக்கப்பட்டிருந்த அகன்ற கண்ணாடி முன் மகனை நிறுத்திப் பார் என்றேன். சிறுநீர் கழிக்கும் இடம், கைகழுவும் இடம் எல்லாம் சும்மாவே கூடவந்தான். கைகழுவிய பிறகு வெப்பக் காற்றில் கைநுழைத்து எடுக்கும் சத்தத்தை உற்றுப் பார்த்தான். என் கைகளின் வெப்பத்தை உலரவைக்கும் போது, கை எட்டாமல் குறுக்கே கைகளை நீட்டிக்கொண்டிருந்தான். அவனின் கைகளையும் வெப்பக் காற்றில் உள்நுழைத்து உள்நுழைத்து எடுத்தேன். 

பால் வாங்க கடைக்குக் கூட்டிச் செல்லும் போதே கண்டதைக் கேட்கும் மகன் வணிக அங்காடியில் அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்டுவிடுவானோ என்று முதலில் அரங்கை விட்டு வெளியில் அழைத்துவர பயந்தேன். சினிமா டிக்கெட் பதிவுசெய்து வரமுடியாத நவீன் நண்பர் குடும்பம் பாப்கார்ன், கோக், தண்ணீர் பாட்டில் என மொத்தம் 600 ரூபாய்க்குச் சேர்த்தே பதிவுசெய்திருப்பதை நவீன் சொன்னதும் மகனே உனக்கு நல்ல தீனிடா என்றேன். அகமகிழ்ந்தான். இன்னொரு பக்கம் ச்சா இந்த 600 ரூபாய் இருந்திருந்தால் பிள்ளைகளை மகாபலிபுரம் அழைத்துச் சென்றிருக்கலாமே என்று என்னும் போது ஓசியில் கிடைப்பதைத் தின்றுவிட்டு வா, காசு கொடுத்து வாங்குவது போல் பாவனை செய்யாதே என்றது மனம். இதைக் குடிங்க என்று ஒரு கோப்பையைக் கொடுத்தார் நவீன். வாங்கினேன் சூடாக இருந்தது. என்ன இது என்றேன். Hot Chocolate என்றார். அப்படி ஒன்று இருப்பதே அப்போதுதான் தெரியும். அவ்வளவு முட்டாளா நீ என்று உங்கள் உன் மனம் சொல்லலாம். சில நேரங்களிள் உலகத்திலேயே அடிமுட்டாளில் முதன்மையானவன் நான்தான் என எண்ணிக்கொள்வேன். எனவே, முட்டாள் என்கிற உங்கள் நினைப்பில் கல் எறிய மாட்டேன். ரெண்டு மடக்குக் குடித்துவிட்டு நண்பருக்குக் கொடுத்துவிட்டேன். இடையிடையே பாப்கார்ன் கொறித்துக்கொண்டிருந்தேன். Hot Chocolate ஐ நண்பரிடம் கொஞ்சம் குடித்துவிட்டுத் தருகிறேன் என்று வாங்கினேன். நான் குடிப்பதைப் பார்த்த நண்பர் மீண்டும் வாங்கிக் கொள்ளாமல் முழுவதும் நீங்கள் குடிங்க என்றார்.  இனிப்புப் பாப்கார்னைத் தின்றுவிட்டு நெளிந்துகொண்டிருந்த மகனை உற்றுப் பார்த்தேன். போதும் என்று கொடுத்துவிட்டான். இதை மடித்துவைத்துப் பாப்பாவுக்கு எடுத்துச் செல்லுங்கள் என்றார் நண்பர்.  

குருநானக் கல்லூரி வாசலில் உள்ள ஹானஸ்டியில் 50 ரூபாய்குச் சில்லறை கேட்டுச் சென்றபோது, மகன் ஐஸ் கிரீம் என்றான். வீட்டுப் பக்கத்தில் வாங்கித் தருகிறேன் என்று சொல்வதற்குள் Gpay இல் இரண்டு கோன் ஐஸ் வாங்கிக் கொடுத்தார் நவீன். பாலித்தீன் கவரில் எடுத்துக்கொண்டு M70 பேருந்தில் வீடு திரும்பினோம். ஐஸ் கிரீமைக் கண்டதும் குதூகலமானாள் மகள். நல்ல வேலை கதவைச் சாத்திக்கொண்டு உறங்கலாம் என்றிருந்தோம் என்றாள் மனைவி. மடித்துவைத்திருந்த இனிப்புப் பாப்கார்னை எடுத்து மகளிடம் நீட்டினேன். சுவைத்துப் பார்த்த மனைவி பொடி தூவிய பாப்கார்ன்தான் எனக்குப் படிக்கும் என்றாள். சரி பீச்சுக்குப் போகலாமா என்றார்கள். இருங்க பாத்ரூம் போய் வருகிறேன் என்று சொல்லிவிட்டுக் காலையில் பணம் கேட்டிருந்த நண்பனுக்கு அழைத்தேன். துண்டிக்கப்பட்ட எண்ணிலிருந்து I'am driving right now. I'll call you back later என்கிற குறுஞ்செய்தி வந்தது. மீண்டும் 4 மணிக்கு போன் செய்த போது எதிரில் ஒலித்த பெண்ணின் குரல், தம்பி நான்தான் அக்கா பேசுகிறேன். தம்பி மீட்டிங்கில் இருக்குது. அப்புறம் பேசச் சொல்கிறேன் என்றது. மகனும் மகளும் பீச்சுக்குப் போலாம்ப்பா என்றார்கள். கையில் இருந்த பணத்தைக் கேபிளுக்குக் கட்டிவிட்டு, வீட்டில் இருந்த இரண்டு புத்தகங்களை எடுத்துக்கொண்டு புத்தகக் காட்சிக்குக் கிளம்பினேன். புத்தகக் காட்சி கூட்ட நெரிசலில் வீட்டிலிருந்து அழைக்கப்பட்ட போன் சத்தம் கேட்கவில்லை. அடுத்தடுத்து இரண்டு அழைப்பில் `இன்னும் கேபிள் வரவில்லை', இன்னும் கேபிள் வரவில்லை' என்ற சொற்கள். மூன்றாவது முறை அழைத்து ``கேபிள் வந்துவிட்டது. I am proud of you அப்பா'' என்றாள் மகள்.   

21.02.22
திங்கட்கிழமை 

No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...