Friday, February 25, 2022

முள்ளங்கி நிலா

அன்று மாலை அலுவலகம்விட்டு வீடு செல்லும் போது முறுக்கு, ப்ரெட், சிப்ஸ் வாங்கிச் சென்றேன். பிள்ளைகள் இருவரும் கட்டிலில் படுத்திருந்தபடி மோட்டு - பட்லு பார்த்துக்கொண்டிருந்தார்கள். முறுக்கைப் பிரித்த மனைவி சிக்கு வாடை அடிப்பதாக என்னையும் முகர்ந்து பார்க்கச் சொன்னாள். எனக்கும் அப்படியான வாசனை அடித்தது. ஆனால், கடிக்கும் போது அப்படியான தன்மை தெரியாததால் சாப்பாட்டுகுக் கடித்துக்கொண்டேன். ஏற்கனவே ஒருமுறை வாங்கிவந்த முறுக்கு வாயில் வைக்க முடியாத அளவுக்குச் சிக்குவாடை அடித்தது. கடைக்காரரிடம் கொடுத்து வேறு பாக்கெட் வாங்கிவந்தேன். எடுத்துச் சென்ற முறுக்கை ஒருவருக்கு இருவர் கடித்துச் சுவைத்துப் பார்த்துதான் கொடுத்தார்கள். இப்போது இரண்டாவது முறை. இதை மாற்றிவர தண்டீஸ்வரம் வரை போக சோம்பேறித்தனம். கோபத்தில் இனி அங்கு வாங்கக் கூடாது என்று முடிவெடுத்துவிட்டோம். 

தம்பி, சாப்பிடும் வரை செய்தி வை. அப்பா கீழ போன பிறகு மீண்டும் பொம்மைப் படம் வைத்துக்கொள் என்றேன். போப்பா என்ன டிவியே பார்க்க விடமாட்டிக்கிறீங்க. எப்பப் பாரு நியூஸ் சேனலையே பார்க்கிறீங்க என்றான். எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் அவன் சேனலை மாற்றவில்லை. சாப்பிட்டு முடித்துச் சாவியை எடுத்துக்கொண்டு கீழறைக்குச் சென்றேன். இன்னைக்காவது எங்கள் கூட தூங்கக் கூடாதாப்பா. எப்பப் பார்த்தாலும் கீழயே போய் தூங்கிறீங்க என்றாள் மகள். நான் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்து வெளியேறினேன். அப்பா கீழ வந்து உங்கள் கூட செஸ் விளையாடவா, விளையாடி முடித்ததும் என்னை மேல விட்டுடணும் ஓகே வா என்றாள். சரி வாம்மா என்று அழைத்துச் சென்றேன். படியிறங்கும் முன் பையைக் குடுங்க நான் எடுத்து வருகிறேன் என்று பிடிவாதமாக வாங்கிக்கொண்டாள். 

செஸ் விளையாட்டின் மீது உள்ள ஆர்வத்தில் ஒரு காந்த விசைகொண்ட சதுரங்கப் பலகையை வாங்கினேன். ஒரு நாள் ஊருக்குச் சென்றிருந்த போது அப்பா 500 ரூபாய் கொடுத்தார். நான் வேண்டாம் என்றேன். ``ஊருக்கு வரும்போதெல்லாம் செலவு செய்கிறாய் அப்பா நான் கொடுத்தா வாங்க மாட்டியா'' என்று அப்பா கேட்ட பிறகு மறுக்கமுடியவில்லை. 500 ரூபாயைப் பத்திரமாய்ச் சென்னைக்குக் கொண்டு வந்து அப்பா நினைவாக ஏதாவது ஒன்னு வாங்க வேண்டுமென்று திட்டமிட்டு வாங்கியதுதான் இந்தச் சதுரங்கப் பலகை. 

சில நாள்களாக அம்மாவின் செல்போனை எடுக்காமல் இருந்ததால் காய் நகர்த்தலை மறந்து போயிருந்தாள் மகள். நான் நகர்த்திய பிறகு இப்படி வைக்கணும் என்று சொல்லச் சொல்ல நகர்த்தினாள். ஆட்டம் என் கையில் முடிவதை அறிந்தவள் சற்று ஒடிங்கிப் போயிருந்தாள். அவளின் முகத்தில் தோற்றுவிட்டோம் என்கிற உணர்வு தென்பட்டது. இதற்கு முந்திய நாட்களில் விளையாடிய இரண்டு ஆட்டங்களில் அவளை வெற்றி பெறச் செய்திருந்தேன். தோல்வி நிலையிலிருந்து அவளை மீட்க, செல்போனில் உள்ள செஸ் ஆப்பில் ஒரு ஆட்டம் ஆடுவதென முடிவெடுத்தேன். Beginner, Easy, Medium கட்டங்களை ஜெயித்து வந்த என்னால் Hard Level ஐ கடந்து வரமுடியவில்லை. ஒரெ ஒரு மேட்ச் ஜெயித்தால் Expert Level சென்று விடலாம். ஆனால், மேட்ச் ஆரம்பிக்கும் ஓரிரு நொடிகளில் தோற்றுக்கொண்டே இருந்தேன். அப்பா எப்படித் தோற்கிறேன் என்று பாரும்மா என்று அவளின் முன் விளையாடி மகளை ஜெயித்த நேரத்தின் 4 இல் 1 பங்கில் ஆப்பில் நான் தோற்றேன். எப்பா என்னப்பா இப்படி விளையாடுறாங்க என்கிற சகஜ நிலைக்கு வந்தாள். கீழ் அறையின் வெளிச்சத்தை அணைத்துவிட்டு மேல் அறையில் விட்டு Good Night மா என்றேன். காலையில் நடைப்பயிற்சி செல்ல சீக்கிரமே வந்து என்னை எழுப்பணும், இல்லையென்றால் கீழ வந்து உங்களை உதைப்பேன் என்றபடி தலைகீழாகத் துடைப்பத்தை எடுத்துக் கைப்பிடியை உயர்த்தி ட்யூப் லைட் சுவிட்சைத் தட்டினாள். செல்போன் வெளிச்சத்தில் கீழறைக்கு நடக்கத் தொடங்கினேன். வட்டமாக அறுத்த முள்ளங்கியின் காற்பங்கைப் போல் ஒளிர்ந்துகொண்டிருந்தது நிலா.    

25.02.2022
வெள்ளிக்கிழமை
    

No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...