Monday, February 28, 2022

லூஸுத்தனத்தின் முடிவிலி


துணிதுவைக்க மாடிக்கு வந்தேன். அவ்விடத்தைப் பாத்திரங்களால் நிரப்பியிருந்தாள் மனைவி. ஆடஞ்சு நிற வாளியில் துணிகளை அமிழ்த்தினேன். ``பாத்திரம் துலக்க வேண்டும், பால் காயவைக்கக் கூடப் பாத்திரமில்லை. நான் அப்புறம் துவைத்துக்கொள்கிறேன்'' என்றாள். அவளின் சொற்களுக்குச் செவிகொடுக்காமல் கொஞ்சம் தள்ளி இந்துவின் வாசலில் அமர்ந்து துவைக்க ஆரம்பித்தேன். நீர்செல்லும் வழியில் ஏற்பட்ட அடைப்பைக் கேபிள் வயரால் துளைத்துக்கொண்டிருந்தாள். பின் தடிமனற்ற வயரால் துளைத்தாள். அவளுக்கு உதவியாக முயற்சி செய்து, இறுதியாகக் குச்சியால் குடைந்தோம். ஒன்றும் பயனில்லை. வெளியில் வந்த இந்து எங்களின் நிலையை வீட்டுக்குள்ளிருக்கும் தன் கணவனிடம் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன். சற்று நேரத்தில் வெளியில் வந்த பெருமாள் என்னாச்சு அண்ணா என்றபடி, சுவரில் பொருத்தப்பட்டிருக்கும் குழாயின் இணைப்பைப் பிடுங்க முயற்சி செய்தார். அதிலிருந்து வெளிவரும் நீர் அடுத்த வீட்டின் பின்பகுதியில் கொட்டாமல் இருக்க, ஒரு வாளி கேட்டார். எந்த வாளியை எடுத்துக்கொடுப்பது என்பதில் என் மனைவிக்குக் குழப்பம் ; எனக்கும்கூட. சற்றேனத் துணிதுவைக்க நீர் பிடித்து வைத்திருந்த சிறிய வாளியை எடுத்துக்கொடுத்தேன். பிடுங்கப்பட்ட குழாயைக் குலுக்க அடைப்பிலிருந்து பொதுபொதுவென நீர்கொட்டியது. பின், துவைப்பதைத் தொடர்ந்தேன். மனைவி பாத்திரம் தேய்க்க ஆரம்பித்தாள்.     

இரண்டு பேன்ட்டை மட்டும் படிச்சுவரில் காயவைத்தேன். அவற்றையும் கொடிக் கயிற்றிலேயே காயவைக்கலாம் என்றாள். கொடி அறுந்துவிடும் என்று மறுத்துவிட்டேன். பால் வேறேன்ன வாங்க வேண்டும் என்றேன், அமைதியாக இருந்தாள். பீரோவைத் திறந்து பேன்ட், சட்டை, ஜட்டி மூன்றையும் எடுத்துக் கட்டிலில் வைத்தேன். குளிக்கப் போகும் முன் மீண்டும் என்ன வாங்கணும் என்றேன். பால், சன் ரைஸ், விம் பார் மட்டும் போதும் என்று சொல்ல, படியிறங்குகையில் மகன் அழைத்து `அம்மா துணி சோப்பு வாங்கி வரச் சொன்னாங்கப்பா' என்றான். ஓகே என்று சைகை செய்த படி `அம்மாடியோ கொலுசுச் சத்தம் ஆதாரமா நெஞ்சு நிக்கும்' என்கிற புத்தம் பூவே திரைப்படப் பாடலைப் பாடிக்கொண்டே புஸ்ரா கடைக்குச் சென்றேன்.

பொருள்கள் கொடுத்துக்கொண்டபடி நேற்று வந்த விருந்தாளி யார் என்றார் கடைக்காரர். என் அண்ணன். அவர்தான் என்னைப் பள்ளி முதல் கல்லூரிவரை படிக்க வைத்தவர். தாயாய், தந்தையாய், நண்பனாய் இருந்து என்னை ஆளாக்கியவர் என்றேன். எப்போது சென்னைக்கு வந்தேன், உடன்பிறந்தவர்கள் எத்தனை பேர், என்னென்ன வேலைகள் செய்திருக்கிறேன் என அனைத்து விவரங்களையும் கேட்டறிந்தார். பிறிதொரு தருணத்தில் விரிவாகப் பேசுவோம் என விடைபெற்றேன். சந்தில் நுழைந்து செல்லும் போது பொருட்களின் எண்ணிக்கை குறைவது போல் தோன்ற பேச்சினூடே விம் பார் கேட்டேதை அவரும் சரிபார்ப்பதை நானும் மறக்கலானோம். மீண்டும் ஓடிச் சென்று வாங்கி வரும் வழியில் இட்லிக் கடை ஆயா அழுகிய முட்டைகளைச் சாலையில் வீசிக்கொண்டிருந்தார். அழுகலைக் கொத்தி வானோக்கிக் கரைந்தது காகம்.

சோப்புக் கரைசலில் அழுக்கு தேய்க்கையில் லிங்கம் சற்று வலித்தது. இரவின் சுயமைதுன நினைவு வந்துபோனது. தலைக்கு எண்ணெயே வைக்க மாட்டிக்கிறீங்க என்று கடந்த வாரம் பாரசுட் தேங்கெண்ணெய்ப் போத்தலைக் கொடுத்தாள். பேச்சுவாக்கில் கீழறைக்கு எடுத்துச் சென்றுவிட்டேன். நேற்று இரவு ஆன் ஃப்ராங்கின் `ஒரு இளம்பெண்ணின் நாட்குறிப்பு'ப் படித்துக்கொண்டிருக்கையில் ஓரிடத்தில் யாக்கை சிலிர்த்தது. கைக்கு வாகாக இருந்த எண்ணெயை எடுத்து என் அடிவயிற்றில் ஊற்றிப் பிசைந்துகொள்ள ஆரம்பித்தேன். கூழாங்கல்லைப் போலிருந்த லிங்கம் கடப்பாரையாய் விறைத்து விம்மியது. உடலுறவை விட சுயமைதுனத்தில்தான் இன்பத்தின் விளிம்பைச் சந்திக்க நேர்கிறது. ஆனாலும், எண்ணிப் பார்க்க உடலுறவே சுகந்தமானது.

குளித்து முடித்துக் கீழறைக்குச் சென்று உடைகூட மாற்றாமல் செல்போனில் செஸ் விளையாட ஆரம்பித்துவிட்டேன். ஜெயிக்க வேண்டிய ஆட்டம் எதிராளி கைக்கு மாறும் நொடியில் ``அப்பா டீ குடிக்க வாங்க'' என்றாள் மகள். சூட்டைச் சிறுகச் சிறுகப் பருகியபடி, O  N E ONE, T W O TWO  படித்துக்கொண்டிருந்த மகனைப் பார்த்தேன். வாஜி, போஜி, பஜ்ஜி என்று கிண்டலடித்தேன். கையிலிருந்த வாய்ப்பாட்டை என் மீது எறிந்தான். அட்டை கிழிந்த வாய்ப்பாடு உன் கிழிந்த டவுசரு மாதிரி இருக்கிறது என்றேன். அனைவரும் கைகொட்டிச் சிரிக்க ஆரம்பித்தோம். பசியற்றதால் சாப்பாடு வேண்டாம் என்று அலுவலகம் கிளம்பினேன். இரண்டு தோசையாவது சாப்பிடுங்கள் என்றாள் மனைவி. ஆமாம், போட வேண்டியதைப் போட மாட்டிக்கிறாய். ஆனால், பசியில்லையென்றாலும் சோற்றைப் போட்டுக் கொல்லுகிறாய் என்றேன். ``போட வேண்டியது என்னதுப்பா'' என்றான் மகன். உன் அம்மாகிட்ட போய்க் கேளு, ரகசியமாய்க் காதில் சொல்லும் என்றேன். லூஸுத்தனமா ஏதாவது உளரிக்கிட்டே இருக்காதீங்க என்றாள். ஆம் இது லூஸுத்தனத்தின்  முடிவிலிதான்.

28.02.2022

திங்கட்கிழமை

2 comments:

  1. கொஞ்சம் தைரியசாலி தான்.கண்ணாடியில் நம்மை பார்க்கின்றதான உணர்வு...

    ReplyDelete

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...