Thursday, February 24, 2022

கிளீன் போல்டு ஆகுமா கிளிஷே?


நேற்று தோழி ஒருவருக்கு `புத்தக் காட்சிக்குச் சென்றீர்களா' என்று செய்தி அனுப்பியிருந்தேன். `இன்னும் இல்லை, நீங்கள் எத்தனை தடவை சென்றீர்கள் பச்சோ' என்றார். `ஒரு தடவைதான், அதுவும் சும்மா. உங்களை மாதிரி அன்பான, அழகான ஒருவர் புத்தகங்கள் வாங்கித் தருவது என்று சொன்னால் மீண்டும் வரலாம் என்று இருக்கிறேன்' என்றேன். சிறிது நேரத்தில் மூன்று சூப்பர் எமோஜிகளை அனுப்பினார். `வெறும் சூப்பர்தானா' என்றேன். வெகுநேரமாக என் செய்தி கிரே நிறத்திலேயே இருந்ததால், அனுப்பாமல் இருந்திருக்கலாமோ என்று தோன்றியது. பின்பு அன்பான, அழகான போன்ற சொற்கள் ரொம்ப கிளிஷேவானவை அவற்றை நீக்கியிருக்கலாமோ, நீக்கிவிட்டால் உப்புச் சப்பற்ற சொற்றொடராக இருந்திருக்கும் அல்லவா. தோழிகளிடம் புத்தகம் வாங்கித் தரச் சொல்வதே கிளிஷேதான். இப்படியாக ஏதேதோ எண்ணிக்கொண்டிருந்தேன். 

பொதுவாகப் பெண்களிடம் அதிகம் பழகும் ஆளில்லை ; குறைவாகவும் கூட. ஆனால், பெண்ணுறவுக்காக ஏங்கும் ஆண்களில் நானும் ஒருவன் என்பதில் எந்தக் கூச்சமுமில்லை. அன்பு, அழகு, ஏக்கம், கூச்சம், பிறப்பு, இறப்பு அனைத்துமே ஒரு கிளிஷேதானே. `சமூக வலைத்தளங்களில் இப்பெருநகரத்தில் எத்தனை பெண்கள் உண்டு, ஏன் நமக்கென்று ஒரு தோழி இல்லை' என்று எத்தனை முறை என்னை நானே கேள்வி எழுப்பியிருக்கிறேன். நான் ஒன்றும் விலங்குகள் வாழும் வனத்தில் இல்லை ; விண்மீன்கள் கொட்டிக்கிடக்கும் வானில் இல்லை ; ஓயாது ஒலிக்கும் அலை மடிப்புக்குள் இல்லை ; வேர்களைப் போல் நிலத்துக்குள்ளும் இல்லை. பிறகேன் இக்கொடிய தனிமை. கோடி மக்களில் நானும் ஒருவனாகத்தான் இருக்கிறேன். ஏன் ஒருவருக்கும் என்னைப் பிடிக்கவில்லை என்று தோன்றும். அப்போதெல்லாம் `உன்னைத் தேடி எத்தனை பெண்கள் வந்திருக்கிறார்கள். நீதான் வறட்டுக் கௌரவத்துடன், பயத்துடன் அவர்களைக் கண்டு விலகி ஓடியிருக்கிறாய். கொஞ்சம் நிதானமாக இரு; எதற்கும் அவசரப்படாதே ; சக மனிதருக்காக நேரம் ஒதுக்கு ; அவர்களிடம் உரையாடு. உனக்குள் உன்னைப் பூட்டிவைத்திருக்கிறாய். முதலில் உன்னைத் திற' என்று உள்ளுணர்வு பின்மண்டையில் அடிக்கும். 

நேற்று பதில் அனுப்பாத தோழி இன்று காலை சிரிப்பு எமோஜியுடன் Good Morning அனுப்பியுள்ளார். Very Good Morning உடன் கிட்டாரையும் சாக்லேட்டையும் அனுப்பியுள்ளேன். இதுவும் ஒரு கிளிஷேதான். கிளிஷேவை கிளீன் போல்டு ஆக்கமுடியாதல்லவா?!

 25.02.2022, 

வெள்ளிக்கிழமை

No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...