Friday, February 18, 2022

யாழிசையின் தோழி ஹரிணி

அதிகாலை தண்டீஸ்வரம் சாலை பரபரப்பானது. சாலையின் இருவோரமும் செய்தித்தாள் கோக்கும் அடுக்கும் பணி தீவிரமாய் நடக்கும். இன்னும் சரியாக விடியாத கருக்கலில் நடைப்பயிற்சிக்காக சென்றுகொண்டிருந்தேன். பேருந்து நிறுத்தத்தில் நன்கு அறிமுகமான முகக் கவசமற்ற முகம். என் மெல்லிய புன்னகையை என் முகக் கவசம் மறைத்திருக்கும். அருகில் சிறு குழந்தை. இருவரையும் கடந்து பின்பு திரும்பி முகக் கவசத்தை நீக்கி எப்படி இருக்கீங்க என்றதும் சற்று கூர்ந்து நோக்கிய அப்பெண்மணி ``அதானே பார்த்தேன். எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது என்று நினைத்தேன். மாஸ்க் போடவும் சரியா தெரியலை. நீங்கள் தானா? நான் நல்லா இருக்கேன். நீங்கள் எப்படி இருக்கீங்க'' என்றார். உங்க மகள் எங்க படிக்கிறாள் என்றதும் மாநகராட்சிப் பள்ளியில் என்றேன். என் மகளுக்கு ஃபீஸ் அதிகமாகிடுச்சு. நானும் வேறு எங்காவது சேர்க்கணும் என்றார். எவ்வளவு என்று கேட்டேன். அவர் பதிலில் நெஞ்சுடைந்து போவது போல் இருந்தது. காரணம் LKG கல்விக் கட்டணம் 45,000 ரூபாய். 


சரி என்ன இந்நேரத்தில்? 

ஊருக்குப் போகிறோம். 

எந்த ஊர் 

திருவண்ணாமலை.
   
திருவண்ணாமலையில் நண்பர்கள் இருக்கிறார்கள் என்று இடத்தைச் சுட்டிக் காட்டினேன். அவருக்குத் தெரியவில்லை. உம் பெயரு என்னம்மா என்று அவர் மகளிடம் கேட்டேன். முதலில் அச்சிறுமி தயங்கினாள். அவள் அம்மாவும் நானும் பேசப் பேசக் குழப்பமுற்றவளாய் திருதிருவென்று முழித்துக்கொண்டிருந்தாள். உன்கூட படிச்ச யாழிசை அப்பாதாம்மா நான் என்று சொன்னதும் அச்சிறுமியின் முகத்தில் சிறு புன்னகை மலர்ந்தது. உன் பேரு என்ன என்றேன் ஹரிணி என்றாள். சரி யாழிசை கிட்ட போய் ஹரிணியைப் பார்த்தேன் உன்னை விசாரித்ததாய்ச் சொன்னாள் என்று சொல்கிறேன் என்றேன். தெற்கிலிருந்து வடக்காக அசைந்தாடிச் சத்தமின்றிச் சிரித்தாள் அச்சிறுமி. 
 
18.02.2022
வெள்ளி

No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...