Tuesday, February 22, 2022

கிழிசலின் கிளை

மாற்றி மாற்றி அணிந்துவந்த இரண்டு நீல நிறப் பேன்ட்டின் அடிப்பகுதி கிழிந்துவிட்டது. சிறிது கிழிந்த நிலையில் மீண்டும் மீண்டும் உடுத்தினேன். விளைவு, கிழிசல் விரிந்து விரிந்து இன்னோர் கிளைவிட்டது. அழுக்குப் படிந்த இரண்டும் கீழறை ஹேங்கரில் தொங்குகின்றன. வேறு ஏதாவது பேன்ட் போடலாம் என்று மேலறை பீரோவைத் துலாவினேன். ``கலைக்காமல் எடுங்க'' என்று ஆணையிட்டாள் மனைவி. இப்படியான அவளின் சொற்களில் ஏனோ சில நேரம் பாதியில் தேடலை முடித்துக்கொள்வேன். இன்றும் அதே போன்று கட்டைளையிட்டாலும் இடைநிறுத்தமின்றித் தேடலைத் தொடர்ந்தேன். ஒரு கறுப்பு நிற ஜீன்ஸ் கிடைத்தது. என்னிடம் இருப்பதிலேயே மிகவும் கடினத்தன்மை மட்டுமல்ல ; விலையுயர்ந்ததும்கூட. வழக்கமாக 650 ரூபாயில் பேன்ட்டைத் தெரிவுசெய்துவிடுவேன். ஆனால், இதன் விலை 1,500 ரூபாய். மிக நீ.............ண்ட காலம் உழைத்ததும் இதுதான். கிட்டத்தட்ட ஒன்பது  ஆண்டுகள். அதாவது திருமணத்திற்கு முன்பு வாங்கியது. முதலை வாயளவு பிளந்து கிடப்பதும் இதன் அடிப்பகுதி மட்டும்தான். இதைத் தைய்க்க கோணூசிதான் வாங்க வேண்டும்.

தொடர்ந்த தேடுதலில் வெளிறிய sky blue நிறத்தில் ஒரு பேன்ட்டை எடுத்தேன். கிழிசலற்ற இருந்தாலும் கறைபடிந்திருந்தது. என்ன பட்டது என்று தெரியவில்லை. இதை இன்று உடுத்தப் போகிறேன் என்று மனைவியிடம் சொன்னேன். அதற்கு மேட்சாகச் சட்டையும் எடுத்துவைத்தேன். மேலும் தீவிரத் தேடுதலில் தைய்க்க முடியும் என்ற அளவில் இருந்த இரண்டு பேன்ட்களை எடுத்து, மனைவியிடம் ஊசி நூல் கேட்டேன். வெண்ணிற அட்டையில் குத்தப்பட்டிருந்த ஊசியின் ஒரு முனை துருப்பிடித்திருந்தது. கீழிருக்கும் கறுப்பு டப்பாவில் நூல் இருக்கிறது எடுத்துக் கொடுடா என்று மகனிடம் கூறினாள். அவன் `கீழ்' என்கிற சொல்லைக் கவனியாது மேல் அலமாரியில் தேடினான். நானந்தக் கறுப்பின் உற்புறத்தைக் கலைத்துப் பார்த்தேன், இல்லை. சமையல் வேலையில் பரபரப்பாக இருந்தவள், அப்புறமா தேடித் தைய்த்து வைக்கிறேன் என்றாள். மீண்டும் பீரோவைத் துலாவ ஆரம்பித்தேன். கிழியலற்ற, கறையற்ற பேன்ட் ஒன்று கிடைத்தது. 

எப்போதும் இருக்கும் இடத்தில் ஜட்டி இல்லாததால் ஜட்டி எங்கே என்று கேட்டேன். நீங்கள் மேலே எடுத்துவந்திருந்தால் துவைத்திருப்பேன். கீழதான் இருக்கும் என்றாள். கீழ இருக்க வாய்ப்பு இல்லை. இங்கதான் இருக்கும் என்றேன். கீழ் குளியறையில் வேறு யாரோ குளித்துக்கொண்டிக்கும் நீரோசை. வீட்டு உரிமையாளரின் இளைய மகனாகத்தான் இருக்கும். பின், அறையுனுள் சென்று,புத்தகங்களை வெறிக்கப் பார்த்துக்கொண்டிருந்தேன். `கீழதான் ஜட்டி இருக்கும்' மனைவியின் சொற்கள் நினைவுக்கு வர, ஹேங்கரில் தொங்கும் இரண்டு பேன்ட்டின் உட்பகுதியைத் தேடினேன், இல்லை. பிறகு, உடைந்த மர நாற்காலி மீதும் அதன் அடியிலும் தேடி, மேலெழும் போது செய்தித்தாள்களின் மீது கோடு போட்ட வெள்ளைச் சட்டை இருந்தது. இது இரண்டு நாட்களுக்கு முன் போட்டதே, ஒருவேளை இதில் இருக்குமோ என்கிற யூகம் மெய்யானது. 

இரண்டு ஜட்டிகளையும் ஒரு பூப்போட்ட சட்டையை மட்டும் துவைக்கக் கொடுத்தேன். இன்னும் துவைக்க வேண்டிய நாலைந்து துணிகள் மனைவிக்குத் தெரியாமல் கீழறையில் இருக்கின்றன. அவற்றை நாளை எழுந்ததும் நான் துவைக்க முடிவெடுத்திருக்கிறேன். இவை இரண்டு போக மாற்றாக இரண்டு பழைய ஜட்டிகள் என்னிடம் உண்டு. ஒன்று இறுக்கமான சிவப்பு ஜட்டி ; மற்றொன்று கொஞ்சம் லூஸான சாம்பல் நிற ஜட்டி. மனைவி ஊருக்குச் சென்றிருந்த சமயத்தில் துவைக்கச் சோம்பேறித்தனப்படும் ஒரு சில நாட்கள் கிழிந்த ஜட்டியையும் போட்டிருக்கிறேன்.  ஒருமுறை கிழிந்ததைப் போடுறீங்களே, எவ்வளவோ செலவு செய்றீங்க ரெண்டு புது ஜட்டி வாங்கக் கூடாதா என்றாள். வாங்கலாம் வாங்கலாம் என்று காலம் கடத்தினேன். கடந்த வாரம்கூட ஒரு நாள் அந்தக் கிழிந்த ஜட்டியை அணிந்திருந்தேன். அடுத்த நாள் இனி இதை மீண்டும் துவைக்க வேண்டாம் என்று குப்பை சேகரிக்கும் பாலித்தீன் கவரில் திணித்துவிட்டேன். ஒரு நாள் அங்காடிக்குச் சென்று வந்த மனைவி எனக்குப் புதிதாக இரண்டு ஜட்டிகள் வாங்கி வந்திருந்தாள். அவளை அடிக்கடி `அழுக்கு நைட்டி',  `அழுக்கு நைட்டி' என்று கிண்டல் செய்யும் என் ஆண் மனம் சற்றே வெட்கித் தலைகுனிந்தது. அவள் நினைத்திருந்தால் `ஏய் கிழிந்த ஜட்டி' என்று சில முறை என்னைக் கிண்டல் செய்திருக்கலாம். ஆனால், ஒருபோதும் அவள் அப்படி அழைத்ததில்லை. சரி அதென்ன அழுக்கு நைட்டி என்று கேட்கிறீர்களா பிறிதொரு சமயம் எழுதுகிறேன் டியர்ஸ்.

23.02.2022,

புதன்கிழமை


No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...