Thursday, February 24, 2022

மகளின் பரிசு


அதிகாலை 5.45 அளவில் துணிகளை அள்ளிக்கொண்டு மாடிக்கு வந்தேன். உரித்துவைத்த வெள்ளைப் பூண்டாய் ஒளிர்ந்தது நிலா. இறைந்து கிடக்கும் கற்கண்டாய் விண்மீன்கள். வெளிச்சத்தைச் சொடுக்கிச் சோப்பைத் தேடினேன். சப்பையான சிறிய துண்டு மட்டுமே எஞ்சியிருந்தது. போர்வை, பேன்ட், சட்டை, கைக்குட்டை, மனைவி மற்றும் பிள்ளைகள் துணி இவை அனைத்துக்கும் குட்டியூண்டு சோப்புக் கட்டிப் போதாதுதான். சரி, கரையும் வரை துவைக்கலாம் என்று மென்மையான துணிகளை மட்டும் தெரிவு செய்தேன். முழுவதும் கரையும் நேரத்தில் இருட்டின் கதவைத் திறந்தாள்  மனைவி. வேறு சோப்பு இருக்கிறதா என்றேன். இல்லை என்றாள். காசு இருந்தால் கொடு வாங்கி வருகிறேன் என்றேன். இரண்டு பத்து ரூபாய் நோட்டைக் கொடுத்து இதுதான் இருக்கிறது என்றாள். பால் வேற வாங்க வேண்டுமே என மனதினில் நினைத்துக்கொண்டு நாட்டார் கடைக்குச் சென்றேன். 

நாட்டார் கடைக்குச் சென்று மாதக் கணக்காகிவிட்டது. கடையில் வேலை செய்யும் தம்பி கிரிக்கெட் விளையாட வருபவன். எங்கு பார்த்தலும் அண்ணே அண்ணே என்று அம்பொழுகப் பேசுவான். மளிகைக் கடை வைத்திருக்கும் இஸ்லாமியக் குடும்பம் நாங்கள் குடியிருக்கும் வீட்டின் கீழ்த்தளத்திற்குக் குடிவந்தபிறகு நாட்டார் கடைக்குச் செல்வதில்லை. கொரோனா காலத்தில் வீடு தேடிவந்து காய்கறி, பால், முட்டை என எங்கள் வீட்டுக்கு மட்டுமல்லாது அருகில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கொடுப்பார்கள். வியாபாரம் நிமித்தம்தான் என்றாலும் ஊரடங்குக் காலத்தில் துணிச்சலாக ஒவ்வொரு வீடாகச் சென்றது மெய்சிலிர்க்க வைத்தது. அதன்பின் தினந்தோறும் காய்கறி எல்லாம் புஸ்ரா கடையில் வாங்க ஆரம்பித்துவிட்டோம். 

ஒரு நாள் நாட்டார் கடைக்குக் காய் வாங்கச் சென்றிருந்தேன். காய்கறியின் விலையில் தங்கச் செயினே வாங்கிவிடலாம் என்றிருந்தது. ஏன் தம்பி இவ்வளவு விலை என்றேன். காய்கறி விலையெல்லாம் ஏறிப் போயிடுச்சு, நீங்க காய்கறியே வாங்குறது இல்லையா என்று எகத்தாளமாய்க் கேட்டேன். அதற்கு அடுத்து இன்றுதான் அங்கு செல்கிறேன். தம்பி, இன்னொரு வாடிக்கையாளரைக் கவனித்துக்கொண்டிருந்தான். தம்பி 10 ரூபாய் பவர் சோப்பு ஒன்னு கொடு என்று ஒன்றுக்கு இரண்டு முறை கேட்டேன். அவன் என்னைப் பார்க்கக்கூட இல்லை. கிழக்குப் பக்கம் நின்றிருந்த நாட்டாரிடம் 10 ரூபாய் பவர் சோப்பு ஒன்னு வேணும் என்றேன். தம்பியைக் கைகாட்டியவரிடம் 10 ரூபாய் பால் பாக்கெட் இருக்கிறதா என்றதும் கணத்தில் இறுக்கத்தைத் தளர்த்திக்கொண்டு உடனே எடுத்துக்கொடுத்து சோப்பையும் கொடுத்தார். புன்னைகையுடன் இரண்டு பத்து ரூபாயைக் கொடுத்துவிட்டு வீடு வந்தேன். 

துணிதுவைத்துக்கொண்டிருக்கையில் நடைப்பயிற்சிக்குச் சென்று வந்த இந்து, 2 கிலோ சத்துமாவை என் மனைவியிடம் கொடுத்துவிட்டுப் பேசிக்கொண்டிருந்தார். ``இது ஒரிஜினல் தேங்காய் எண்ணெய் இல்லை. கலப்படம்தான் இவ்வாறு வாசனை அடிக்கும்'' என்கிற என் மனைவியின் சொற்கள் காதில் விழுந்தன. சில விசயங்களில் என்னைவிடக் கூருணர்வு உள்ளவள். என்னைக் கட்டிக்கொண்டு துணி துவைப்பது, பாத்திரம் தேய்ப்பது, சமையல் செய்வதே கதியென்றாகிவிட்டாள். இரண்டு முறை படிக்கவைக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. மூன்றாம் சுற்றில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் 2021 ஆகஸ்ட் மாதம் B.Lit சேர்ந்திருக்கிறாள். அவள் கம்மலை அடகுவைத்த பணத்தில்தான் நடந்தது. மீதிப் பணம் அன்றைய மாதக் கடைசிக்கு உதவியது. ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. இன்னும் வட்டிகூட கட்டாமல் இருக்கிறோம் என்று அடிக்கடி சொல்வாள். இதற்கு முன் இரண்டு ஜெயினை அடகுவைத்து மீட்கமுடியாமல் மூழ்கிப் போயின. இதுவும் அவ்வாறு ஆகிவிடுமோ என்று அடிமனதில் அவளுக்குப் பயமுண்டு. கவலைப்படாதே விரைவில் நல்ல முன்னேற்றம் வரும், கண்டிப்பாக மீட்டிவிடுவோம் என்று சொல்லியிருக்கிறேன். துணிதுவைத்து முடிந்ததும் தண்ணீரூற்றித் துடைப்பத்தால் கூட்டிக்கொண்டிருந்தேன். இங்க கொடுங்கப்பா நான் கூட்டுகிறேன் என்றாள் மகள். துடைப்பத்தை எடுப்பதும் துணி துவைப்பதும் பெண்களின் வேலை மட்டுமல்ல என்று மறுத்துவிட்டேன்.

அப்பா என் தோழிக்கு இன்று பிறந்தநாள் ஏதாவது வாங்கிக் கொடுங்கள் என்றாள். என்னிடம் பணம் இல்லை. உண்டியலில் இருந்து எடுத்து வாங்கிக்கலாம் என்றேன். Gpay யில் 100 இருப்பது பிறகுதான் நினைவுக்கு வந்தது. இன்று காலை அம்மாதான் என்னைப் பள்ளியில் விடவேண்டும் என்றான் மகன். அப்பாதான் பள்ளியில் விடவேண்டும் என்றாள் மகள். அலுவலகம் கிளம்பும் போது இருவரையும் அழைத்தேன் மகள் மட்டும் உடன் வந்தாள். வழியில் நேற்று 8 ரூபாய்க்கு ரப்பர் வாங்கிய கடைக்குப் போகலாம் என்றாள். கடைக்குச் சென்றதும் முதலில் Gpay இருக்கிறதா என்று கேட்டேன். இருக்கிறது என்றதும் ஒரு பேனாவும் ரப்பரும் வாங்கினாள். எவ்வளவு என்றேன், 24 ரூபாய் என்றார். பணம் அனுப்புவதற்குள் தன் தோழிக்குக் கொடுக்கப் போகும் ஆர்வத்தில் இரண்டையும் கையில் எடுத்துக்கொண்டாள். அந்நேரம் பார்த்து Gpay வேலை செய்யவில்லை. இரண்டு மூன்று முறை முயற்சி செய்தும் பலனில்லை. பையைக் கடையின் ஓரம் வைத்துவிட்டு வீட்டில் சென்று உண்டில் காசை எடுத்து வரலாம் என்று முடிவெடுத்து ``அண்ணே, பை இங்க இருக்கட்டும் வீடுவரை சென்று வருகிறேன்'' என்றேன். நிலமை புரிந்துகொண்ட கடைக்காரர் ``ஒன்னும் பிரச்சினையில்லை பாப்பாவைப் பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு வந்து கொடுங்கண்ணே'' என்றார். ஏனோ சட்டென்று நினைவுக்கு வந்தது `அன்பின் வழியது உயர்நிலை'.  

24.02.2022
வியாழக்கிழமை

No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...