Friday, February 25, 2022

நம்புவீர்களா டியர்ஸ்!

 

தி.நகர் காய்கறிச் சந்தைக்குச் சென்றுவிட்டு V51 பேருந்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். தண்டீஸ்வரம் பேருந்து நிறுத்தத்தின் அருகே கோத்தாஸ் காபிக் கடை வாசலில் தள்ளுவண்டியில் வாழைப்பழம் விற்றுக்கொண்டிருப்பவரிடம் தினமும் 20 ரூபாய்க்கு ஏலக்கி வாங்கி வருவேன். காய்கறிப் பைகள் இரண்டையும் கடை வாசற்படியில் வைத்துவிட்டுப் பழம் வாங்கினேன். பின்பு, சாலையைக் கடந்து அரசமரத்தடி அடர் இருட்டில் கறுப்பு முகக் கவசத்தைக் கழற்றி மூச்சை இழுத்துவிட்டேன். கனத்தை இரு கால்களின் மீது வைத்துக் கை மாற்றிக்கொண்டேன். பிரமிளா மாவுக் கடை அருகில் இருசக்கர வாகனத்தின் பின் பக்கம் கிடைமட்டமாய்ச் சாய்ந்த பெண்ணொருத்தி. அத்தெருவின் முனை இருட்டில் நின்ற வண்டியில் முணுமுணுப்புச் சத்தம். இப்போது நான் மேட்டுத் தெருவின் முனையில் சென்றுகொண்டிருக்க கிடைமட்டமற்ற வண்டி என்னைக் கடந்து சென்றது.

வீட்டின் வாசலில் பை சற்று அறுபடும் சத்தம். காவலர் வீட்டுத் திண்ணையில் சற்று பைகளை வைத்துப் பின் படியேறினேன். பிள்ளைகளுக்குத் தோசை சுட்டுக் கொடுத்துக்கொண்டிருந்தாள் மனைவி. புதினா சட்னி. கீழறைக்கு வந்து உடை மாற்றிக் கை கால் முகம் கழுவிச் செல்வதற்குள் பாய்விரித்துப் படுத்துவிட்டாள் மகள். என்னம்மா அதுக்குள் படுத்துவிட்டாய் என்றேன். இரண்டு நாட்களாகப் பாப்பாவுக்குக் கொஞ்சம் உடல்நிலை சரியில்லை என்றாள். சத்தான உணவைச் சாப்பிடணும், பிளாஸ்டிக்கில் அடைத்ததையும் பிஸ்கட்டையும் வாங்கித் தின்றால் உடம்பில் என்ன இருக்கும். அவனைப் பாரு கண்ணில் பார்ப்பதைக் கையில் கிடைப்பதையெல்லாம் திங்கிறான். நீ பழமும் திங்க மாட்டிக்கிறாய் ; கறியும் திங்க  மாட்டிக்கிறாய் என்றேன். பிள்ளைமேல் கண்ணு வைக்காதீங்க என்றவள் ஏலக்கியை எடுத்து மகனுக்குத் தின்னக்கொடுத்தாள். நீ ஒரு பழம் சாப்பிடுமா நாளைக்கு உனக்குப் புதுத் துணி வாங்கித் தருகிறேன் என்றேன். மகள் மசிவதுபோல் தெரியவில்லை. காலையில் முட்டை வாங்கிக்கொடுத்தேன் தின்றாயா என்றால் மகன் மட்டும் தின்னதாகச் சொன்னாள். முறைத்துப் பார்க்க, அவனுக்கு இன்று விடுமுறை என்பதால் காலையில் ஆம்லெட் போட்டுக் கொடுத்தேன். பாப்பா பள்ளிக்கூடம் சென்றுவிட்டது, நாளைக்குப் போட்டுத் தருகிறேன் என்றாள். 

தோசை சாப்பிட்டு முடித்ததும் இரண்டு ஏலக்கியை எடுத்துவரச் சொல்லித் தின்றாலும், இன்னும் பசிப்பது போன்ற உணர்வு. எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது என மனைவி சொல்ல மீண்டும் சொய்ங் சொய்ங்தான். முறுகலான தோசையைத் தின்றுகொண்டிருக்கையில் எனக்கு முறுகலாக இருந்தால் பிடிக்காது என்று உனக்குத் தெரியும் அல்லவா என்றேன். அதை எனக்கு வைத்துவிடுங்கள் வேறு சுட்டுத் தருகிறேன் என்றாள். அதற்குள் கால் தோசையைத் தின்றுவிட்டேன். சிறுநீர் கழிக்கச் சென்றாலும் என்னிடம் சொல்லிவிட்டுத்தான் செல்கிறாள், 9 வயது ஆகிறது இன்னமும் இப்படி இருக்கிறாள் என்றாள். ஏன் என்றேன். சின்ன வயதில் சொல்லிட்டுப் போகணும் என்று சொன்னேன். அதை இன்னமும் கடைப்பிடிக்கிறாள். ஒருவகையில் இது நல்லதுதான் என்றாள். இரவு நேரத்தில் வேண்டுமானால் அம்மாவை உடன் அழைத்துச் செல் மற்ற நேரத்தில் இனி சொல்லாமல் செல். நான் வேலை செய்யும் இடத்தில் 35 வயதிலும் சிறுநீர் கழிக்கச் சொல்லிவிட்டுச் சென்றதுண்டு என்றேன். 

பேசிக்கொண்டிருக்கும் போதே மகன் உறங்கிவிட்டான். அவனைக் கட்டியணைத்துப் பூனை போல் கத்தினேன் ; சிங்கம் போல் கர்ஜித்தேன் ; புலி போல் உறுமினேன். சிறிதும் அசையாது கிடந்தான். முதுகில் கையில் கடித்துவைத்து மீண்டும் கர்ஜித்தேன். புரண்ட படி எட்டி உதைத்தான். விடாது அவனைக் கொஞ்சி இம்சித்தபடி இருந்தேன். மகளைக் கொஞ்சும் போதெல்லாம் நெளிந்து வெட்கப்படும் மகன் இப்படியான தருணங்களைக் கொண்டாடுவான்.

மிச்சமிருந்த பாலில் சூடான தேநீர் குடித்தபடி கீழறைக்குச் சென்றேன். பை இங்கேயே இருக்கிறது வந்து எடுத்துச் செல்லுங்கள் என மகள் அழைத்தாள். தேநீரோடு படியேறி தேநீர்க் கோப்பையோடே பையைச் சுமந்து திரும்பும் போது, இருந்து குடித்துப் போகக் கூடாதா, அவ்வளவு பிஸி மேனா நீங்கள் என்றாள். ம் ஹூம் என்றேன். சரி இருந்து தம்பியைப் பார்த்துக்கொள்ளுங்கள் நானும் பாப்பாவும் சிறுநீர் கழித்துவிட்டு வருகிறோம். யாருமில்லை என்றால் எங்கள் பின்னாடியே வந்துவிடுவான் என்றாள். மீண்டும் ம்ஹும் போட்டேன். எவ்வளவு பெரிய சுயநலவாதியாக இருக்கிறேன் அல்லவா. ஒரு சில நேரம்தான் இப்படி இருப்பேன் என்றால் நம்புவீர்களா டியர்ஸ்.

26.02.2022
சனிக்கிழமை   

No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...