Thursday, February 17, 2022

குசுவொலி

 சுமார் காலை ஐந்தரை மணியளவில் நடைப் பயிற்சிக்குத் தயாரானேன். புதிய டயரி பாதி விலையில் கிடைக்கும் என்பதை ஒவ்வொரு மாலையிலும் சிங்கப்பூர் ஷாப்பிங்கில் ஒலித்தது ஞாபகம் வர 75 ரூபாய்க்கு நேற்று ஒரு டயரி வாங்கினேன். அந்த டயரியை எடுத்துக்கொண்டு தண்டீஸ்வரம் சாலையில் நடந்துகொண்டிருந்தேன். மலிவான விலையில் வாங்கிய ஷாட்ர்ஸின் இடதுப் பக்க பாக்கெட் ஓட்டை என்பதால் வீட்டுச் சாவியை பஸ் பாஸ் வைத்திருக்கும் வலது பாக்கெட்டில் எறிந்தேன். பாரதி பூங்காவின் அருகில் சாலையைக் கடக்கும் போது V51 பேருந்துப் பலகைக் கண்ணில் பட கைக்காட்டி ஏறினேன். இரண்டு பேர் மட்டும் இருந்த அப்பேருந்து மூன்றாவதாக என்னைச் சுமந்து நகர்ந்தது.

`பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தம்தம் 
கருமமே கட்டளைக் கல்'
திருவள்ளுவரின் வார்த்தைகள் ஓட்டுநருக்கும் பின்னுள்ள ஒளியில் ஒளிர்ந்தன. வழக்கமாய் ஒவ்வொரு பேருந்திலும் உள்ள குறளைப் படிப்பேன்.
வேளச்சேரி ரயில் நிலைய மேம்பாலத்தில் பேருந்து நகர்ந்துகொண்டிருந்தது.  அரைவட்ட வடிவ வளைவுகளை, செல்போன் டவரின் சிவப்பு நிற விளக்கைத் தாண்டி என்னை விரட்டிவந்தது முழுநிலவு. ராம் நகரில் நிறுத்தத்தில் ஏறிய ஒருவரின் செருப்பற்ற பாதங்கள் மகளிர் இருக்கையில் தொங்கிக்கொண்டிருந்தன. அதற்கும் அடுத்த நிறுத்தத்தில் பூவும் பொட்டுமாய் மாநிறத்தில் ஒரு பெண் மிக லட்சணமாக இருந்தாள். காலியான பேருந்தில் அவளுடன் ஆண் ஒருவர் அமர்ந்தான். அநேகமாக அவளின் கணவனாக இருக்கலாம். இன்னும் கொஞ்சம் நேரம் பார்க்கலாம் என்று இருந்தது. ஆனால், முன்னிருக்கையில் அமர்ந்தவரை முன்சென்று பார்ப்பது நாகரிகமாக இருக்காது என்றெண்ணிப் பாலையா கார்டனில் இறங்கினேன். வேளச்சேரியில் புன்னகை செய்த பள்ளி நண்பன் என்ன இங்க என்றான் 'சும்மா வாக்கிங் என்றேன். கிளினிக்கில் ஒரு வேலை என்றான். எத்தனை பிள்ளைகள் என்ற விசாரிப்பில் இருவருக்கும் தலா ஆணொன்று ; பெண்ணொன்று. கொரோனா வேலையிழப்பினால் தனியார் பள்ளியில் பணம் கட்டமுடியாமல் கார்ப்பொரேஷனில் பிள்ளைகளைச் சேர்த்துவிட்டது எனக் கடந்தகால நினைவுகள் நிகழ்கால ஒன்றுபட்ட பகிர்தலோடு விடைபெற்றோம்.


நடைபாதை நத்தை முட்டைகள்

அகலவிருக்கும் மெல்லிய இருட்டில் நடைப்பயிற்சி ஏரியை அடைந்தேன். 100 மீட்டர் இடைவெளியில் இளஞ்சிவப்பு நிற டி ஷர்ட் அணிந்த பெண் நடந்துவந்தாள். நீண்ட நேரம் தாக்குப் பிடிக்காத கண்கள் சிறகுலர்த்தும் வாத்தில் கவிழ்ந்தன. பசும்புல்லில் வெண்சிறகுகள் பிய்ந்துகிடந்தன. பின் மீண்டும் அவளைப் பார்த்தேன் அவளும் என்னைப் பார்த்தாள். என்னை நெருங்கிய இளஞ்சிவப்பின் தூரம் தலைகுனிந்தபடி நகர்ந்தது. 
அலையடிக்கும் சிதறலான செவ்வானத்தின் மீது நீந்திக்கொண்டிருந்தது கருவாத்து. V வடிவத்தில் பறந்துவந்த சிறகுகள் சற்று தூரத்தில் M வடிவத்தில் பரிணமித்துப் பின் அரூப நிலையாகின. சதா கரைந்தபடியே காதுக்குள் காகம் நுழைகையில் கறுப்பு டி ஷர்ட் அணிந்தவன் விரைந்து ஓடிவருகிறான்.
நானும் ஓடத் தயாராகிவிட்டேன்.


கரையோரம் வீற்றிருந்தது இலையற்ற வேப்பமரம். அதன் கரிய கிளையில் தன் அலகைக் கூர்தீட்டியது காகம். செந்தாமரையை உரசியபடி நகரும் முக்குளிப்பான்கள் நாணலுக்கடியில் மூழ்கி மூழ்கி எழுகின்றன. சிற்றலைகளின் மீது வடதும் இடதுமாய்ப் படபடக்கும் அரூபச் சிறகுகள். கம்பி வேலிக்குள் பதுங்கிய ஆண் நாயொன்றின் மீது இரண்டு பெண் நாய்கள் லொள் லொள்களைக் கொட்டிக்கொண்டிருந்த தருணத்தில் வழுக்கைத் தலை அச்சமுற்றது நடைபாதையில். பனைவேரில் ஒடிந்துகிடந்த மாங்கிளையை மோந்து பார்த்த நாய்கள் பதுங்கிய நாயின் திசையை வெறித்தபடியே இருக்க, நான் அந்த மாங்கொத்தை நொச்சிமீது எறிந்து மீண்டும் ஓடத் தொடங்கினேன்.

ஏரியின் மேற்கோரம் குவிந்துகிடைக்கும் நாணலுக்கிடையில் குத்திநிற்கின்றன எண்ணிலிறந்த பீர் பாட்டில்கள். இலையற்று தோலுரிந்த எருக்கஞ் செடி வேர்சாய்ந்துகிடக்கிறது. நீலச் சங்குப் பூக்களைப் பறித்து செவ்வரளியின் மீது எறிகிறான். சேவல் கூவும் நாய் குரைக்கும் சிட்டுக் குருவி, மைனா ஒலிகளுக்கிடையே தொடையை அகல விரித்து வெடித்த குசுச் சத்தம் நடைமேடையை மூச்சுமுட்ட வைத்தது. ''எங்க இருக்கீங்க பால் வாங்கிட்டு, அப்படியே டீத்தூள் வாங்கிட்டு வந்திடுங்க'' என்று போனில் ஒலித்தாள் மனைவி. சரி இன்றைய சூடான தேநீரைப் பருகுவோம். 

17.02.2022
வியாழக்கிழமை

No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...