Wednesday, April 28, 2021

அகமும் புறமும்: கவிதையில் ஒன்று மற்றொன்றின் கண்ணாடி - குட்டி ரேவதி



இன்று கவிதை எழுதவரும் ஒருவர், 'அகவெளிக்கவிதைகள் எழுதுபவரா' இல்லை, 'புறவெளிக்கவிதைகள் எழுதுபவரா' என்ற கேள்வி சிந்திக்கவைக்கும். அல்லது, உங்கள் தகுதி என்ன என்பதைத் தீர்மானிக்கத்தூண்டும் ஓர் அதிகாரக்கேள்வி. 'அகவெளிக்கவிதைகள்' கலைப்பூர்வமானதாகவும், 'புறவெளிக்கவிதைகள்' பிரச்சாரத்தொனி நிறைந்தவையாக, கலையுணர்வு அற்றவையாக முன்முடிவுகளும், முன் தகுதிகளும், முன் அதிகாரங்களும் தரப்பட்ட நவீனத்தமிழ்க் கவிதை வெளியில், அதிநவீனக்கவிதை என்பது, அகத்தையும் புறத்தையும் இணைக்கும் தொடர்புபடுத்தும் முரண்படுத்தும் புதிய வடிவத்தையும் செறிவையும் கண்டுணர்தல். அப்படியான வெளிகள் தேடிய பயணத்தில், இத்தொகுப்பு வந்து முன்னிற்கிறது. அகமும் புறமும், ஒன்று மற்றொன்றின் கண்ணாடியாகி மாறி பிம்பங்களைச் செய்கின்றன.

'பச்சோந்தி'யின் கவிதைகள்  முழுக்கவும் ஏழ்மையிலும் அதைக்கடந்து வந்த
நினைவுகளிலும் புரளும் வரிகளே கவிதைகளாகி இருக்கின்றன. ஆனால், அதன் வலியும் உட்பொருளும் அழகுணர்ச்சியுடன் சொல்லப்பட்டிருப்பது மிகச்சிறப்பு. அதிலும் முக்கியமானது, அரசியலை நினைவுகளுடன் கலந்து வடித்திருப்பது. ஒட்டுமொத்த கிராமமும் வாழ்வும் மாற்றங்களும் ஏக்கங்களும் பெருமூச்சுகளும் உள்ளவர்களும் இல்லாதவர்களும் இறந்துபோனவர்களும் கொல்லப்பட்டவர்களும் வந்து போகின்றனர். ஒரு கிராமத்தை நினைவுபடுத்தும் முயற்சியை அழகான துல்லியமான தேர்ந்தெடுத்தச் சொற்களால் கவிஞர் சொல்லுமிடத்து, வாசிக்கும் போது நாம் கவிதைகளுக்கு இடையே சிக்கிக்கொள்ளாமல் பகிரப்படும் விடயங்களினூடே பயணிக்கமுடிகிறது.

நவீனக்கவிதை கவிதை உக்கிரமான மொழி, உணர்ச்சித் தீவிடம், நடைநயம்,
படிமவெளி என்றெல்லாம் கடந்து வந்திருந்தாலும், இன்று நடை தளர்ந்த மொழி, அனுபவ வடிகால், குறுங்கதை சொல்லல் எனத் தன்னை வேறு சொல்மொழிக்குக் கொண்டு வந்துவிட்டதைப் புதிய இளங்கவிஞர்களிடம் காணமுடிகிறது. இது ஒரு குறைபாடாக இல்லாமல் மாறுபாடாக இருந்தால், கவிதை தன் வலுவை இழக்காமல், வலிமையாக நெஞ்சில் நிற்கமுடியும். கவிதை வடிவமே அதற்குத்தான். ஆகத்தேர்ந்தெடுத்த உட்பொருளை, அதற்கேற்ற நடையில் தீவிரம் வழுவாமல் வாசகர் நெஞ்சில் இறக்கிவிடமுடியுமெனில் கவிதை தன் பணியை முடித்துக்கொண்டது என்றே சொல்லலாம்.

நிறைய அழகான வரிகளை, மிகவும் அலட்சியத்துடன் கடந்து செல்கிறார் கவிஞர்.


அன்றிரவு
விடிய விடிய உறங்கவிடாமல்
உடல் முழுவதும்
நட்டு நட்டுன்னு
கொத்திக்கொண்டே இருந்தன
மழைப்பாம்புகள்

(குடிசைக்குடைக்குள் ஒரு குட்டை)


ஐந்நூறு கிலோமீட்டர்
தாண்டி வசிக்கிற நொடிகளில்
புரட்டிப் புரட்டி வாசிக்க முயன்றும்
சுக்கு நூறாய் நொறுங்குகின்றன
ஞாபகக் கரையான்கள் கடித்துப்போட்ட
பால்ய காகிதங்கள்.

(ஞாபகக் கரையான்கள் கடித்துப்போட்ட
பால்ய காகிதங்கள்)

அஞ்சுக்கும் பத்துக்கும்
முப்பதுக்கும் நாப்பதுக்கும்
இடுப்பொடிய இடுப்பொடிய
நீரிலூற காலூன்றிக் கை ஊன்றி
பாட்டுப்பாடி நடவு நட்ட
அறுபதுகளுக்கும் எழுபதுகளுக்கும்
சோறின்றி நீரின்றி
சங்கத்தமிழ் தாலாட்டும்
கேலி கிண்டல் வாலாட்டும்
கதை கதைப்புதான்
 வலி சுமக்கும்

(நகத்தடி பட்டினிப் பெருமூச்சுகள்)




மனித இனத்திற்கு 'பால்ய கால நினைவுகளும்', 'காதல் கடிதங்களும்' தாம்
கவிதை விதைகள் எழுச்சி கொள்வதற்கான நீர்தெளித்தலாய் இருந்துள்ளன.
பால்யத்தை அனுபவிக்கும் அறியாமைக்கும், அதன் உற்சாகவெறியில் களிகொண்டு இயங்கும் அம்மனத்தளத்திலிருந்து வெளியே வந்து நோக்குவதற்கும் இடையேதான் அதன்காவியத்தன்மை சிக்கிக்கொண்டிருக்கிறது என்பது நாம் அறியாததன்று. ஆனால், இவற்றை மீண்டும் அனுபவிக்க உண்டாகும் விழைவும் அல்லது அவற்றை
இழந்துவிட்டதற்கான ஏக்கமும், வெறும் வரிகளாய் இல்லாமல், சிறிய சிறிய
குறியீடுகளாய் முன் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில், கவித்துவ எழுச்சி
முழுமையடைகின்றது.



நினைவுகளின் நிலநடுக்கத்தில்
நிர்மலமாய்ப் புதைகின்றனர்
அப்பாயில்லாத அம்மாவும்
அம்மாயில்லாத அப்பாவும்

கிணற்றில் போட்ட அஞ்சு பைசா
தூளி ஆடிக்கிட்டே மிதந்து மிதந்து
தரைதொட விரைவதைப் போல
நடுநெஞ்சில் மிதக்கின்றன
இளமை இறகுகள்

(நினைவுகளின் நிலநடுக்கங்களில்
சிக்கிக்கொண்ட முதுமை எறும்புகள்)

அக்காவைக் காணோம் என்பது
ஏதோ செடியை விலக்கித் தேடும்
புதருக்குள் ஓடி விழுந்த
சிவப்பு நிற
காரக் பந்தைப் போலவே இருந்தது
விளையாட்டுச் சிறுவனான எனக்கு

(வீடு திரும்பாத ஆடு மேய்க்கப்போன அக்கா)

ஊருக்குள்ளும் ஊர் எல்லையிலும்
பத்திரமாகவே உள்ளனர்
அத்தனை சாமிகளும்

ஊருக்கு வெளியிலும்
குளத்தங்கரை ஓரத்தில்
விடுபட்டு உதிர்கின்றன
அனாதையாகிப் போன
வயோதிகப்பிணங்களாய்
கொலை செய்யப்பட்ட குலசாமிகள்

(கொலைசெய்யப்பட்ட குலசாமிகள்)

நீ சாதியை மயக்க
மது ஊட்டுகிறாய் - பின்பு
சாதியின் பட்டினிக்குப்
பாலூட்டுகிறாய்

செத்துப்போன பாம்பானது
உன் மேல்சாதியும்
என் கீழ்ச்சாதியும்

(செத்துப்போன சாதிப்பாம்புக்கு பாலூத்தாதே)

இன்னும்தான்
ஈரமாய்க் கசிகின்றன
கதவுக்குப் பின்னால்
அறிவியல் புத்தகத்தின் நடுவே
காதல் கடிதத்தைப்
பிரித்துப் படிக்கையில்
கொட்டிய வியர்வைத் துளிகள்

(வாழையடி வாழையாய்
வாழலாமா ஏழையாய்)

மாதிரிக்கு நான் நிறைய கவிதைகளை முன் வைத்திருப்பதற்குக் காரணம்
சொற்சுவையை நுகருவதற்குத்தான். மேகச்சட்டை மாட்டிய வானம், சில்வர்
தட்டில் முகம்பார்க்கும்  சூரியனின் நெற்றியில் தப்பாட்டம் அடித்தபடி,
பொத்தான்களற்ற சுருட்டிச் சொருகிய காக்கிநிறச் சராய் ஜன்னல் ஓட்டையின் மீது கறுப்புக்குண்டிகளை எட்டி எட்டிப்பார்க்கும் பதினொரு மணி வெயில், நடவு நட்ட முதல் இரவு சேற்றுத்தண்ணீரில் மிதந்து வரும் நிலா வெளிச்சத்தில்
ஊற்றுத்தண்ணீராய்ச் சுரக்கிறது நகத்தடி பட்டினிப்பெருமூச்சுகள் எனக்
குறுங்கிராமத்தின் வாழ்வியலைச் சொல்லுமிடத்து, அவற்றை அவ்விதமே சொல்லிச் சொல்லிப் புளகாகிதம் கொண்டிருந்தால், இம்மொழி கவிதையாகியிருக்க மாட்டா.

கவிஞர், இவ்வரிகளின் அடியில் கொண்டிருக்கும் முன்வைக்கும் சமூக
அக்கறையும் அரசியல் மாண்பும்தான் இதற்கு முன்பான எல்லா கிராமிய,
நாட்டார்வழக்காற்று மொழிகளையும் கடக்கச்செய்கின்றன. ஊருக்குள் இருக்கும் அடிகுழாய், ஆடுகள், கல்நார் கூரைகள், அண்டாக்கள்,
அய்யனார் பேருந்து, கரும்புக்கட்டுகள், இலுப்பை, நாவல் மரங்கள், கருவேல
முள்வேலி, கள்ளிச்செடி, ஓணான், பாம்புகள், விளக்குமாறால் அடிவாங்கும்
பூரானும் நட்டுவாக்கிளி, எல்லாம் கதாபாத்திரங்களாகின்றன.

இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்தமான கவிதைகளாக, லொக்..லொக்…
மனிதர்கள், ஆவிகள் நடமாடும் கிராமம், கைகுலுக்கும் கண்ணாடி, இரண்டு
தோளில் இரண்டு தலை ஆகியவற்றைச் சொல்லலாம். இவை, புனைவுவெளிகளில் வெகுவாகக் கையாளப்பட்ட,  'மாய யதார்த்தவாத' வடிவ மொழியை, கவிதைக்கு அழைத்து வந்தது போன்ற உணர்வைக் கொடுக்கின்றன. நம் அன்றாட வாழ்வு கழியும் சூழலில், மண்டிக்கிடக்கும் ஒளிவேறுபாடும், அவை கிளர்த்தும் நினைவுகளும் உணர்வுகளும் கொண்டு கவிதை ஆக்குதல் என்பதை இவர் தீவிரப்படுத்தியிருக்கிறார். சுயத்தின் அப்பட்டமான பிரதிபலிப்பாகவும் வெளிப்பாடாகவும் இருக்கின்றன.

உறவு, சாதி, வசதி, வாய்ப்பு, உணவு என்பவை நம் நிலத்தில் சாதியின்
ஏற்றத்தாழ்வுகளுக்கு இடையே சிக்கிக்கிடப்பவை. சாதியின் அழுத்தத்தையும்
அதன் கீறல்களையும் அக்கீறல்கள் வழியே வெளிப்படும் நீதிகளையும்
கவிதைகளாக்க நம் நிலத்தின் வரலாற்றை விரிந்த பார்வைகளால்
பார்க்கத்தெரிந்திருக்கவேண்டும் என்பது என் அனுமானம். அதுவே, ஒரு கவிஞனை, மொழியுடன் உறவாடும் ஒருவரை முழுமை செய்யும். இல்லையென்றால், என்னதான் கவிஞன் என்றாலும் அரைகுறைத்தெளிவு பெற்றவராகவே கருத நிறைய இடமிருக்கிறது.

வெறும் பால்ய சுகங்களோடும், பதின்பருவ நினைவுகளோடும் கழித்துவிடும்
வெறும் மொழி இச்சையாகவும் உணர்வுத் தீவிரமாகவும் ஓய்ந்துபோகும் வாய்ப்பு இருக்கிறது. தன் வாழ்வை, பிறிதொன்றாகப் பார்க்கும் வாய்ப்பை சாதியின் அழுத்தம், மதத்தீவிரம், பால்நிலை சமத்துவமின்மை இவற்றை அறிந்தவரால் மட்டுமே பெறமுடியும். தன் வாழ்வைப் பிறிதொன்றாகப் பார்க்கும் வாய்ப்பு இல்லாதவரின் கவிதைகள் முதல் வரிகளோடே முற்றுப்பெற்றுவிடும். இந்நிலையில், பச்சோந்தியின் இத்தொகுப்பு புதிய அனுபவவெளிக்கும் தொலைநோக்குச்செறிவும் கொண்டவையாக இருக்கின்றன. எல்லாக் கவிதைகளும் ஒரே தொனியில் இழைவது, அவற்றின்
ஒரே வடிவமைப்பினாலும் அழுத்தமாக நிறுவப்படுகிறது. இதை மட்டும் கவிஞர் தவிர்த்திருப்பின் வேறுவகையான அனுபவ முதிர்ச்சிகளை இத்தொகுப்பு நல்கியிருக்கக் கூடும். 

கவிதை எழுதுதல், தொடர்ப்பயணம். எழுதி முடித்தவையாக எதுவுமே அறியப்படுவதில்லை. தொடரும் நடைக்கண்ணிகள் மீது, ஒற்றைக்கம்பால் நடந்து செல்லும் அத்துணைத் துணிவையும் இவர் கொண்டிருப்பது மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது.


குட்டி ரேவதி
24.11.14

No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...