Thursday, April 29, 2021

ஊர்விலக்கம் பெற்றவனின் பெருநகரப் படிமங்கள் - யவனிகா ஶ்ரீராம்




நாம் வசிக்கும் பிராந்தியத்தில் சக மனிதர்களைச் சந்திப்பதென்பது பல்வேறு நம்பிக்கைகள் சார்ந்ததாகவும் அங்கு நிகழும் உற்பத்தி சார்ந்த வாழ்வுமுறைகள் சாதிய உணர்வுகள் அல்லது வேறோர் இணக்கமான பாவனைகள், வன்மங்கள், அச்ச உணர்வுகள், தோல்விகள், வன்முறைகள் போன்றவற்றின் ஊடாக உயிர் இருப்புகொள்வதாக இருக்கிறது. ஓர் ஊருக்குள் நல்லவன் கெட்டவன் வாழ்ந்தவர் வாழாதவர் கௌரவமான குடும்பம் இழிவான குடும்பம் என்பதான பொது வரையறைகளுக்கும் இறுதியில் அப்பிராந்தியத்தின் இடுகாடு சுடுகாட்டில் முடிந்து போகிற கதையாடலாகவும் இருந்து வருவதைத்தான் மனிதமையின் தத்துவார்த்த இருப்பென்று காலமும் இடமும் அதன் வரலாற்றின் அர்த்தத்தில் முடித்துவைக்கிறது. இப்படியான தனிமனிதரின் வரலாறுதான் பச்சோந்தியின் கவிதைகளின் இறந்துவிட்ட எல்லா ஊர்களின் ஊர்வலக் காட்சியாகிறது.

இக்கவிஞனே எப்போதும் ஊர்விட்டு அலையும் வேடிக்கைக்காரனாக இருக்கிறான். ஊருக்காக உறவுக்காகக் குடும்பத்தை ஏற்றுக்கொண்டு தான் யார் என்பதை அறிவதற்காக வீட்டை, கிராமத்தை விட்டுக் கிளம்பிவிடுகிறான். இப்படியான வெளியேற்றத்தின் மூலம் மொழிக்குச் சில கவிதைகள் கிடைக்கின்றன. பண்டைய நாள்களில் ஊர் விலக்கம் என்கிற தண்டனைமுறை அங்கு நிலவிய சாதியப் படிநிலைகளின் வழியே அதிகாரமாகக்கொண்டு செலுத்தப்பட்டதை அறிந்திருக்கிறோம். ஊர் விலக்கம்தான் இந்திய நகர்மயமாதலின் முதல் உளவியல் வன்முறையாக இருந்தது. இப்படியாக ஊர் என்கிற அமைப்பை அதன் உற்பத்தி உறவுகளில் நேர்ந்த மேலாதிக்கக் கலாசாரக் கொடுமைகளை எதிர்கொள்ள வேண்டிவரும் ஒரு சிறு பெண்ணோ ஆணோ கிராம வாழ்வைச் சந்தேகிப்பதும் அங்கு விளையும் உயிர் ஆதார விவசாயம் மற்றும் தன் காமம் காதல் போன்ற இயல்பூக்கங்களின் மேல் அந்தத் தேர்வின் மீது ஒருவகையான அவமானம் சுமத்தப்படுவதை உணர்ந்து தனக்கான மொழியில் அவற்றை எழுதிப் பார்த்துத் தப்பித்து தன்னிலையாக நிற்கும் செயல்பாடே அவர்களின் சுதந்திரமான கலையாகவும் ஆகிவிடுகிறது. இவ்விடத்தில் பச்சோந்தி கிராமத்துக்கும் நகரத்துக்கும் இடையே ஓர் ரயிலைப் பிடித்துக்கொண்டு அலைபாய்கிறான். அந்த ரயில் தன் சொந்த சாதிய வன்முறை நிலத்துக்கும் சாதியை எளிதில் கண்டுபிடிக்க இயலாத நகர வன்முறைக்கும் இடையே இக்கவிதைகளைத் தன் அலைச்சலின் சாட்சியமாக வைக்க முயல்கிறான்.

தமிழறிஞர் கால்டுவெல் சொல்லிச்சென்ற திராவிட மொழிகளின் நிலங்களுக்கும் அயோத்திதாசர் வரையறுத்த தமிழ்க் கலாச்சார உணர்வுகளுக்கும் அல்லது மார்க்சிய வர்க்கப் பார்வைக்கும் இன்றைய உலகமயப் போக்குகளுக்கும் இடையே இந்தியப் பொதுக் காட்சிப் புலன்களை மதம் மற்றும் அரசு அல்லது நவீன மூலதனம் வரையறுத்துக்கொண்டுவிட்ட நாளில் கவிஞன் அவற்றின் ஊடாகத்தான் அன்றாடத்தை இப்படியாக குழந்தைமையாகப் பதிவு செய்துவிடுகிறான். அவன் நினைவில் இயற்கையின் சுற்றுச்சூழலியலின் கனவுகள் மட்டுமே தேங்கி இருக்கின்றன. ஏனெனில், தன்னில் இயற்கையின் ஒரு பகுதியாகவும் இருக்கிறான். இயற்கையோடு தாயை, தந்தையை நிலத்தைப் பாடுபவனாக ஒரு பறவையைப் போல கடவுளற்ற விண்வெளிக்குப் பூமியின் ஈரத்தை எடுத்துச் செல்பவனாகவும் இருக்கிறான்.

அவனின் சமுத்திரங்கள் அவன் தாயின் கண்களைவிட ஆழமானதில்லை. அவனது தொரட்டிக் கம்பு நிலவை மண்ணுக்குப் பறித்து வீழ்த்தும் அவன் தந்தையின் கரங்களைப்போல நீளமானது. அவனது மாமிசங்கள் சூரிய ஒளியில் வாட்டப்பட்டவை. அவனது ரத்தம் பூமியை உயிர்ப்புடன் வைக்கும் ஆறுகளைவிட கொந்தளிப்பானது. அவன் பசியைப் பாடுகிறான், பறவைகள் ஆமோதிக்கின்றன. அவன் இசைக்கிறான் தப்பிய பருவங்கள் தம்மை சரிசெய்துகொள்கின்றன. பச்சோந்தியின் கவிதைகள் உயிர் வாழ்வதற்கு ஆதாரமற்றவற்றைத் தாண்டி எதையும் புனைவுகொள்ளவில்லை.

உலக்கைகள், அரிவாள்கள், தொரட்டிகள், மண்வெட்டிகள், கடப்பாரைகள் மிஞ்சிப்போனால் மண்ணைக் குத்திப் பிரட்டும் மாட்டுக் கொம்புகள் அல்லது தானியக் கதிர்களை அடிக்கும் அதன் குளம்புகளின் மீது தீராத காதல் கொண்டவை.

நோய்வாய்ப்படும் இந்த உடலைக் கருவியாக்கி நிலத்தின் வளமான பாடல்களை நமக்குக் கையளிக்கின்றன. அவன் ஓர் உதிர்ந்த மூங்கில் அரிசியாக இருக்கிறான். சிறிய மீன்களைக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துபவனாகவும் பெரிய எருமைகளை இறைச்சிக்குப் பதப்படுத்தி தன் உயிர் ஆதாரத்தை நிலைநாட்டும் வீரியமிக்கவனாகவும் தன் சிறிய துண்டு நிலத்தில் சூரிய சந்திர காலமனைத்திலும் தன் தாய் தந்தை பாட்டி யாவருடனும் உழைத்து வியர்வையைப் பெருக்கி அவ்வளவு நம்பிக்கையளிக்கும் எளிய கவிதைகளை நமக்குத் தந்துவிடுகிறான் என்பதை தவிர அவனை அன்பு செய்ய நாம் நமது கட்டமைக்கப்பட்ட சலித்துப்போன சுயத்தை இழப்பதுதான் காதலின் புதிய பரிமாணமாக இருக்க முடியும். அவனுக்கும் அவன் கவிதைகளுக்கும் அவன் நலன்களுக்கும் வாழ்த்துகள்....

அன்புடன்

யவனிகா ஶ்ரீராம்

சின்னாளபட்டி

08.12.2018

(`அம்பட்டன் கலயம்' என்கிற எனது மூன்றாவது கவிதை நூலில் இடம்பெற்ற கவிஞர் யவனிகா ஶ்ரீராமின் அணிந்துரை)   

 

No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...