Friday, April 2, 2021

எலி நாற்றத்தை எறிய முடியவில்லை

 


காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் எல்லாம் நடு இரவில் கொள்ளை போகும் வழக்கம் நாள்தோறும் நடந்துவந்தது. இவ்வளவு நாள் இல்லாமல் எப்படித் திடீரென்று எலிகளின் வரவு என்று யோசித்து அதன் வழித்தடங்களை அறிய நினைத்தேன். நடு இரவில் பாத்திரங்கள் உருளும் சத்தம் தூக்கத்தைக் கலைத்ததால், கடுங்கோபத்தில் லைட்டைப் போட்டேன். அப்போது சமையல் கட்டுக்கும் மேல் உள்ள ஜன்னலில் நுழைந்து தப்பித்தது எலி. ஓ... இங்குதான் இருக்கா வழி. எப்படி நுழைந்தது என்று அருகில் சென்று பார்க்கும் போது பழைய அட்டை கொறிக்கப்பட்டிருந்தது. அங்கு வேறு ஓர் அட்டை வைத்து அடைத்து நிம்மதியடைந்தேன். ஆனால், அது தற்காலிகமானது என்று அடுத்த நாள் இரவு பாத்திரங்கள் உருளும் போது தெரிந்தது. 

அடுத்த நாள் உறங்கும் முன் மளிகைக் கடைக்குச் சென்று எலி மருந்து கேட்டேன். உடன் என் மகன் வந்திருந்தான். ஆனால், கடைக்காரர் எலி மருந்து இல்லை. எலி பிஸ்கட் இருக்கு வேணுமா என்றார். எலி பிஸ்கட்டா என்று திகைப்போடு கேட்டேன். ஆமாம், ரொட்டி மாதிரி இருக்கும் வீட்டில் வைத்தால், இதன் வாடை அறிந்து தானே வந்து எலி திங்கும் என்றார். 

வாங்கிச் சென்று மூன்றாக உடைத்து இரண்டை மட்டும் எலிக்கு வைத்து, ஒன்றை பத்திரம் வைத்தேன். இன்னையோட சரி இனி எலி வராது என்று மீண்டும் நிம்மதி. அடுத்தடுத்த நாட்களில் முன்போல் எலித் தொல்லை இல்லை என்று மகிழ்ச்சியடைந்தோம். அடுத்த நாள் பரணில் இருந்த புத்தகப் பைகள் சத்தம் போடவே, மிச்சமிருந்த ஒரு ரொட்டியையும் எலிக்கு வைத்தேன்.

எலி மருந்து வைத்தோம் அது என்னாச்சு என்றே தெரியலையே என்றபோது, தின்னுட்டு இங்கதான் கிடக்கும் ரெண்டு மூணு நாள் போனால்தான் வாடை அடிச்சு செத்தது தெரியும் என்றாள் மனைவி. 

இரண்டு நாட்களுக்குப் பிறகு கட்டிலின் ஓரம் ஓர் எலி வாயில் இருந்து ரத்தம் சொட்டியவாறு திக்குதெரியாமல் திணறிக்கொண்டிருந்தது. அருகில் சென்றதும் ஓடிவிடும் என்று பார்த்தால், அதனால் தப்பிச் செல்லமுடியவில்லை. அந்த மருந்து பிஸ்கட்டைத் தின்ன எலி போல, எடுத்து வெளியில் போடுங்கள் என்று மனைவி சொன்னாள். பழைய செய்தித்தாளை மடித்து எலியைக் கைகளால் கவ்வி எடுத்து வெளியில் எறிந்தேன். சுவரோரம் படிந்த அதன் ரத்தக்கறையை மாப் போட்டுத் துடைத்துவிட்டாள் மனைவி. 

அடுத்த நாளும் எலி வாடை வரவே, கட்டிலுக்குக் கீழதான் எங்காவது செத்துக்கிடக்கும் என்றாள். விடிந்ததும் கட்டிலை நகர்த்திப் புத்தகப் பைகளை எல்லாம் எடுத்துப் பார்த்தோம். ஆனால், அங்கு எலி இல்லை. அப்படியே விட்டுவிட்டோம்.  

இன்று காலை நடைப்பயணம் கிளம்பும் நேரத்தில், `` மாமா,எலி நாத்தம் அடிக்கிறது என்னான்னு பாருங்க" என்றாள் மனைவி. நடு இரவிலே எலி நாற்றம் பற்றிச் சொன்ன போது ``ஊதுவத்தியைக் கொளுத்தி வை"  என்று தூக்கக் கலக்கத்தில் சொன்னது ஞாபகம் வந்தது.

ஒற்றை அறை கொண்ட வீட்டில், கட்டிலுக்கு அடியில் மட்டுமல்லாது மூட்டை மூட்டையாகப் புத்தகங்களைக் கட்டி பரண் மீது வைத்திருந்தேன். தூசி படிந்துகிடக்கும் பரணை முதலில் எந்தப் பக்கம் இருந்து சுத்தம் செய்வது என்று யோசித்து, சரி இங்கிட்டு இருந்து ஆரம்பிப்போம் என்று சனிமூலையில் இருந்த பைகளை ஒவ்வொன்றாக இறக்கினேன். அதற்குள் மாமா, இங்கிட்டு இருந்துதான் வாட அடிக்குது என்று வடமேற்கு திசையைக் காட்டினாள். ஆனால் எனக்கு வாடை அடிக்கவில்லை. ஒருவேளை மூக்கடைப்பு இருக்கும் என்று எனக்கு நானே கூறிக்கொண்டு தேட ஆரம்பித்தேன். 

அங்கிருக்கும் பைகளை இறக்கும் முன் கட்டிலில் இருந்த தலையணைகளை ஆரஞ்சு பச்சை நிறம் கலந்த மெல்லிய போர்வையால் மூடினேன். முகத்துக்கு முகக் கவசம் அணிந்தேன். ``கொரோனாவுக்குத்தானே மாஸ்க். செத்த எலியைப் பிடிக்கக் கூடவா போடுவீங்க'' என்றபடி சிரித்தாள்.

பைகளை இறக்க இறக்க எலிப் புழுக்கைகள் நிரம்பிக் கிடந்தன. எலிப் புழுக்கைகளும் வேர்க்கடலை ஓடுகளும் சின்னச் சின்ன காகிதங்களுமாகக் குவிந்துகிடந்தன. அதன் நடுவே கொஞ்சம் திரவத்தன்மையோடு ஓர் எலி கிடந்தது. நாற்றம் மூக்கைத் துளைத்தது. வெள்ளைத் தாள்களை எடுத்து அள்ளி வெளியில் எறிந்தேன். சரி மொத்தப் பரணையும் சுத்தம் செய்திடுவோம் என்று பைகளை எடுக்க எடுக்க இன்னோர் எலி எந்தத் தடயமுமின்றி ஒரு பிளாஸ்டிக் கவரின் மேல் ஒருக்களித்துத் தூங்குவது போல் கிடந்தது. அதையும் எறிந்தேன். பைகளை இறக்கப் பிள்ளைகள் உதவிசெய்ய முன்வந்தார்கள், ஓரிரு பைகளுக்குப் பிறகு தூசி படியும் வெளியில் சென்றுவிடுங்கள் என்று மனைவி கூறிவிட்டாள்.  

நண்பன் பரிசாகக் கொடுத்த கையடக்க ஜே.கிருஷ்ணமூர்த்தி நூல் ஒன்று கிடைத்தது. இரண்டு துண்டுகளான நிலையில் ஒரு அழி ரப்பர், பிளாஸ்டிக் ரப்பர் பந்து, முதன்முதலாய் வாங்கிய பழுதடைந்த செல்போன், ஒரு நகல்கூட இல்லையே என்று கவலைப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை, சினிமா சிடிக்கள் நிரம்பிய பை எல்லாம் கிடைத்தன. இவற்றின் ஊடாகக் கிடைத்த  சொப்புச் சாமான்களைக் கண்டதும் பிள்ளைகளுக்கு ஒரே குதூகலம்தான்.

முன்பைவிட அதிக நாத்தம் அடித்தது. எலிகளை எறிந்தாலும் அதன் நாத்தத்தை எறியமுடியவில்லை. தண்ணீரில் ஷாம்பும் துவைக்கிற சோப்பும் கலந்து துணியால் நன்கு துடைத்து எடுத்தேன். நாற்றம் குறைந்தது போல் இருந்தது. பின்பு, அலுவலகம் செல்ல நேரமானதால் அவசர அவசரமாகக் கிளம்பிவிட்டேன். இன்று இரவு பாத்திரம் உருளுமா பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஏப்ரல் 2, 2021. 


No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...