Thursday, April 29, 2021

புராதனக் குரங்குகளின் கோட்டோவியம் - யவனிகா ஶ்ரீராம்




உலகில் எல்லா மனிதர்களும் கிராமத்திலிருந்து வந்தவர்கள்தான். அவர்களின் கிராமம் எப்போதும் அவர்களை ஆதூரப்படுத்தியும் அந்நியப்படுத்தியும் நிகழ்காலத்தின்மீது ஒரு பதற்றத்தை உருவாக்குகிறது. கிராமங்களில் தெரிந்த முகங்கள் பெரு நகரங்களில் அச்சமாகவும் போலிப் புன்னகையாகவும் மாறிவிட்டன. கிராமத்திலிருக்கும் சொந்த வீட்டைவிட நகரத்திலிருக்கும் வீட்டிற்குத்தான் மதிப்பு அதிகம். ஆகவே பெரும்பாலான மக்கள் நகர மதிப்பாகி விடுகிறார்கள். அவர்களுக்கான உயர்ந்த உலக விற்பனைக் கூடங்கள் கவர்ச்சிகரமாகக் கடவுளின் கருணையைப் போல் கண்ணடித்து அழைக்கிறது. உலகம் நகரமாகிவிட்டது. நாமும் நகரத்தைப் பேணுகிறோம். அதன் வேசித்தனத்தின்மீது கவர்ச்சி கொள்கிறோம். ஒரு கொகோகோலாவும் கண்டகிச் சிக்கனும் நமது வாழ்க்கையை மதிப்பிற்குரியதாக மாற்றிவிட்டதை ஏற்றுக்கொள்கிறோம். நமது குடும்பம் பெரும் உணவு விடுதிக்குள் வாழ்கிறது.

சரி இதெல்லாம் நமது சொந்தக் கைகளின்மீது நிகழ்கிறதா? நமது தானியங்கள் இத்தனை விலைமதிப்புள்ளதா? நமக்கு இருந்த திறன்கள் என்ன? நாம் எங்கே நமது உழைப்பையும்  படைப்புத்திறனையும் விருந்துத்தன்மையையும் காதலையும் மறந்தோம் என்கிற இடத்திலிருந்து தொடங்குகிறது பச்சோந்தியின் கவிதைகள். அவன் ஊர்சுற்றுகிறான். அவனது இரயில்கள் அவனை பாரதூரமாக அவனை பல்வேறு இடங்களுக்குக் கடத்தி விடுகின்றன. 

புகைவண்டியில் துண்டுத் தூளிகளில் உறங்கும் குழந்தைகளின் அடியில் செய்தித் தாளை விரித்து உறங்குகிறான். அவனது கவிதைகள் கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடையே அலைபாய்கின்றன. கிராமம் உறங்கும் முன்னிரவை நகரத்தின் உறங்காத பின்னிரவுகளுக்குக் கடத்திச் செல்கிறான். கவிஞர்கள் இப்படித்தான் உற்பத்தியிலிருந்தும் தங்களின் நிலத்தின் உறுதிப்பாட்டிலிருந்தும் மொழியை மற்றமை ஆக்குகிறார்கள். தமிழில் கிராமியப் பீடிப்பு நிறைந்த மனம் ஒரு நாடோடிக்கு வாய்ப்பதுபோலவே பச்சோந்திக்கு வாய்த்திருக்கிறது. அவனது காதல் அவனது அடிவயிற்றிற்கும் கீழில்லை. கொஞ்சம் மேலே. அவனது பாடல் வயிற்றின் ராகம். அவன் உலகத்தின் பசிக்காக, தன் சொந்தப் பசியை ஒப்படைக்கிறான். அவனது `முந்நூறு ரூபாய் வீடு’ உலகத்தின் கடைக்கோடியில் அலைகிறது. அவனது கடிகாரம் சோர்ந்துபோன யாரையும் தைய்க்க முடியாத கூர்மையற்ற முட்களுடையது. ஆயினும் அதில் ஒரு நூலைக் கோக்க முயலுகிறான். அவன் தைய்த்துக்கொண்டே இருக்கிறான். அவன் மரங்கள் மின்சார இலைகளை உடையன. அவனது பாட்டி அலறிய கதைதான் அவன் அதிர்ந்தோடும் பாதை வழிகள். 

ஒரு கறுக்கருவாளை நகரத்தில் சுமந்து திரிபவனைப் பார்த்திருக்கிறீர்களா? அங்கோ தானியங்கள் விளைவதில்லை. ஏனெனில் உலகம் ஒரு மானியமயமாகிவிட்டது. எனது நிலத்தின், எனது நீரின், எனது தாகத்தின், எனது இச்சையின், எனது காமத்தின் அத்தனை விழுமியங்களின்மீது பற்றுகொண்ட ஒரு பழங்குடிதான் கவிஞர் பச்சோந்தி. அவனின் இந்தத் தொகுப்பு அவன் அறிந்த மொழிகளின் கதை. அவன் வீடு ஒரு தொங்கும் அங்காடி. அவன் அங்காடிகளின் தெருவில் அலைகிறான். குழந்தைகள் கைநீட்டும் பொருட்களின்மீது அதிர்ச்சியுற்றவனாய் அவனைக் கண்காணிக்கும் CCTV கேமராக்களின் பார்வைக்குத் தப்பி விமானத்தை மண்டியிட்டுத் தொழும் மனிதர்களைப் பார்த்துப் புன்னகைக்கிறான். 

அவனது கவிதை புராதனக் குரங்குகளின் கோட்டோவியம். பிராந்திய உற்பத்தி உறவில் தன் ஐம்புலன்களையும் கிளர்ச்சியாகச் சேகரிக்கத் தெரிந்த ஒருவனை அவனது மொழி இறுதியில் கவிஞனாக்கி விடுகிறது. அவனும் நானும் தொங்கும் அங்காடிகளில் பரிதவிக்கிறோம். அவனது கவிதைகள் தொப்புள் கொடிகளை அறுக்க இயலாமல் தவிப்பதுபோலவே, வாங்குவதற்காக உயிரோடு வைக்கப்பட்டிருக்கும் பெரும்பாலான மக்களின் அமுக்கப்பட்ட பிரதியாக இருக்கிறது. ஆகவே, கவிஞனால் அமைதியாக இருக்க முடியாது. எனவே, அவனது கவிதைகளில் அமைதியில்லை. அதுவே அனைத்தையும் நமக்குச் சமர்ப்பிக்கிறது. அவன் இன்னும் மேலும் எழுதிச் சிறக்க எனது வாழ்த்துகள்.

யவனிகா ஸ்ரீராம், 

சின்னாள பட்டி,

25.09.2016.

(எனது இரண்டாவது கவிதை நூலான `கூடுகளில் தொங்கும் அங்காடி'க்குக் கவிஞர் யவனிகா ஶ்ரீராம் எழுதிய அணிந்துரையிலிருந்து)

No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...