Wednesday, April 28, 2021

அடிவயிற்று ஆவேசத்துடன் மேலெழுந்து அதிகார முகங்களுக்குச் சவால்விடுபவை - பேராசிரியர் கல்யாணராமன்

 




நெடுங்காலத்திற்கு பிறகு, தமிழ்க்கவிதையில் ஓர் அசல் கிராமத்துக்குரல் ஒலிக்கிறது. அசல் என்று சொன்னால், நகல் இல்லை என்பதுதான் பொருள். என்பதுகளின் நடுப்பகுதியில் பழமலயின் சனங்களின்கதை வெளிவந்தபோது, புதுக்கவிதையின் வாசகர்கள் ஒரு புதிய சாளரம் திறக்கப்பட்டதைக் கண்டு பெரிதும் மகிழ்ந்தார்கள். அதே தடத்தில் 2015 இல் இன்னொரு புதிய குரல், ஓர் அசல் கிராமத்தானுக்கு உள்ள நெஞ்சுரத்தோடும் பாசாங்கற்ற குமுறலோடும் வேர்முளைத்த உலக்கை என்ற கவிதைத்தொகுப்பாக வெளிவந்துள்ளது.

பிரம்மராஜனின் கவிதை ஒன்றுக்கு `ஹேங்கர் திருடும் காக்கை' என்று தலைப்பிடப்பட்டிருக்கும். ஒரு நகரத்து வாழ்க்கையின் தலைகீழ்புரட்டலைக் கூறிவிடும் நுட்பமான ஒரு தலைப்பு அது. அதற்கு இணையாக கவிஞர் பச்சோந்தியின் வேர்முளைத்த உலக்கை என்ற தலைப்பைக் குறிப்பிடவேண்டும். தலைவெட்டப்பட்ட தென்னைமரம் ஒன்று கண்முன் நிழலாடுகிறது. இது எவ்வாறு நிகழ்ந்தது. இயற்கையின் சீற்றத்தால் நிகழ்ந்த விபத்தா இது? நாசக்காரகும்பலால் நேர்ந்த சுற்றுச்சூழல் சிதைவா? விடைதேடும் பொறுப்பு, கவிதை வாசகர்களுக்கு இருக்கிறது.

`ஏதேச்சையாக வரும் மழைத்துளி

வேர்களைக்கட்டிக்கொண்டு அழும்

வேர்கள் இருந்த இடத்தையேனும்'

என்பதைப் படிக்கும்போது, நமக்குள் ஏதோ ஒன்று முறியும் சப்தம் கேட்கிறது. தென்னைமரம் மட்டுமா அழிந்துபோனது? இன்னும் எதைஎதையெல்லாம் இழந்தோம் என்பதை எண்ணி ஒரு கணம் இதயம் நொறுங்குகிறது.

ஒரு துண்டு தேங்காய்பத்தை

ஒரு மரங்கொத்திப்பொந்து

அடுப்பெரிக்கப் பன்னாடை

பந்தடிக்கக் காய்ந்தமட்டை

குச்சுக்கட்ட பச்சைமட்டை

அத்தனையும் கிடைக்குமா

அறுத்துப்போட்ட ரீப்பர்களில்…..

தேங்காய்பத்தும் மரங்கொத்திப்பொந்தும் பன்னாடையும், பந்தைக்கும் மட்டையும், குச்சுக்கட்டும் பச்சைமட்டையுமா தென்னை? ரீப்பர்களாக தென்னையைப் பார்க்கும் நுகர்வுப்பார்வை மட்டும் பிரச்சனை இல்லை. சுற்றுச் சூழலில் கலந்துள்ள அத்தனையையும் பயன்படுப்பொருள்களாகப் பார்ப்பதிலும் சிக்கல் உண்டு. கிராமத்து வாழ்க்கையா, நகரத்து வாழ்க்கையா என்று வாதப்பிரதிவாதங்கள் செய்துகொண்டிருப்பதில் பயன் இல்லை. மனதின் உள்ளிட்ட அனைத்து உயிர்களும் அமைதியாக வாழ்வதற்கான இடங்களும் தருணங்களும், நமது கிராமங்களிலும் நகரங்களிலும் அருகிக்கொண்டு இருக்கின்றன என்பதுதான் நிகழ்கால வெட்கை.

கிராமங்களை எழுதிக்கொண்டாடுதல் என்பது நவீனத் தமிழ் இலக்கியத்தில், அது சிறுகதையாகினும் புதுக்கவிதையாகினும், பிரிக்கமுடியாத அல்லது தவிர்க்கமுடியாத ஒரு மோஸ்தரப் போக்காகச் செல்வாக்கு செலுத்திக்கொண்டிருக்கிறது. இப்போக்கிலிருந்து முற்றிலுமாக விலகிய தமிழ்ப்படைப்பாளிகள் என்று அதிகம்பேரைச் சொல்லமுடியாது. இழந்துபோன பழம்வாழ்வின் நீடிக்கமுடியாத பெருமித எச்சங்களைத் திரும்பத் திரும்ப நினைவில் நீட்டி மகிழும் படைப்பாளிகளின் பொதுப்போக்கு அது.

எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் கிராமங்களைவிட்டு நகரங்களுக்கு வாழவந்துவிட்டாலும், நகர வாழ்க்கையில் காலூன்றிக் கலக்கமுடியாமல், மீண்டும் மீண்டும் கிராமப்பசுமையை நோக்கியே தாவும் தமிழ்மனங்கள் நம் படைப்பாளிகளுடையவை. ஆனால், பசுமைமட்டும் கிராமம் இல்லை சாதிச்சாயத்தால் உள்ளூத்ர தழும்பேறிக்கிடக்கும் நச்சுவட்டம் அது. சாதியை விமர்சிக்காமல் கிராமங்களைப் புகழ்வது என்பதில் மேட்டிமை அரசியல் ஒளிந்துள்ளது. இந்திய கிராமங்கள் அழியாமல் இந்தியாவில் வாழும் சராசரி மனிதர்களுக்கு விடுதலை சாத்தியமில்லை என்று மார்க்ஸ் கூறியதை கீழை மார்க்சியம் பேசி நாம் மறந்துவிட முடியாது. கிராமங்களைப்பற்றி எழுதும் எந்தப் படைப்பாளியும் இச்சிக்கலுக்கு முகம் கொடுத்துதான் ஆகவேண்டும்.

வேர்முளைத்த உலக்கையில் கிராமங்களைக்கொண்டாடும் மனநிலை இல்லை. கிராம வாழ்க்கையின் ஒவ்வோர் அணுவிலும் புகைந்திருக்கும் அடிமைத்தனத்தையும், அதற்கு எதிரான போராட்ட உணர்வையும் மறுவிசாரணை செய்து, பசுமையின் அமைதியைக் கிழித்து அதன் உள்ளிருக்கும் கொடூர முகத்தைக் கொஞ்சமும் தயங்காமல் வெளிக்காட்டிவிடும் படைப்பு நேர்மை கவிஞர் பச்சோந்திக்கு வாய்த்திருக்கிறது. இத்தொகுப்பின் முதல் கவிதையான `ஆவிகள் நடமாடும் கிராமம்' என்ற கவிதையின் தலைப்பேகூட, ஒருவகையில் இதைக் குறிப்புணர்த்திவிடுவதாகக் கூறலாம். தாமஸ் கிரே எழுதிய `An elegy Written in a Country Ghurchyard' என்ற ஆங்கிலக் கவிதையை நினைவூட்டும் ஒரு தமிழ்க்குரல் இது. மனிதர்கள் ஏன் ஆவிகளானார்கள் என்பதை நாம் சிந்திக்க வேண்டாமா? குழந்தையாய் இருந்தபோது `எப்பா இவ்வளவு பெரிய ஊரா நம்மூரு' என்று விழிவிரிய வியந்துநின்ற சின்னப்பிள்ளையை, மீசைவைத்த கல்யாண வயதில், `அட இத்துனூண்டு ஊரா நம்மூரு' என குமயவைத்த அந்த திடுக்கிடல் எவ்வாறு நிகழ்ந்தது. 

இக்கேள்விகளுக்கான பதில்களாக விரிபவைதான் பச்சோந்தியின் கவிதைகள்.

ஒரு தனிப்பட்ட இளைஞனின் மனக்குறிப்புகளாக இக்கவிதைகள் குறுகி ஒலிப்பதில்லை. சிலபல தலைமுறைகளின் அடயாளமிழந்த உரிமைகள் மறுக்கப்பட்ட இயல்புணர்வுகள் பறிக்கப்பட்ட ஒரு பெரும்திரளின் ஆவேச வெடிப்புகள் இவை. முணங்கித்தேயும் முக்கல்களாக இவை நீர்த்துப்போவதில்லை, அடிவயிற்று ஆவேசத்துடன் இவை மேலெழுந்து வந்து அதிகார முகங்களுக்குச் சவால்விடுகின்றன.

`வெய்யிலில் கருத்த விவசாயிபோல்

வானம் கருத்துப்போனது' 

`தெருக்கொன்றாய்த்

 திருகுகுழாய் முளைக்க

நாகரிகக் குண்டு விழுந்து

யாழ்ப்பாண நூலகமாய்ச் சாம்பலாகியது

மானிட உறவுகள்' 


`இருட்டு எல்லோருக்கும் இருட்டாகவே இருக்கிறது

வெளிச்சம்தான் எல்லோருக்கும் வெளிச்சமாக இருப்பதில்லை'

இத்தைகைய கவிதைவரிகள் பிழிந்துவைக்கும் சோகத்தின் ஊடே என்ன சொல்ல முனைகின்றன கிராமமும் விவசாயமும் அதனை நம்பி வாழும் மக்களும் இழக்க இழக்க நாம் அவற்றை வேடிக்கைப்பார்த்துக்கொண்டே இருக்கவேண்டியதுதானா? யாராவது பேசுவதற்கு ஆள்கிடைப்பார்களா என கிராமத்துக் குட்டிச்சுவர்களைப்போல துயரமும் அழுகையும் அல்லாத ஒரு வாழ்க்கை சாத்தியமே இல்லையா? ஆட்டுக்கல்லின் அலாதிச்சத்தங்களைக் கேட்டுக்கொண்டு, கொலைசெய்யப்பட்ட குலசாமிகளின் நினைவுகளில் நீந்திக்கொண்டு கிழிந்துபோன ஜனநாயகச் சட்டையைத் தைத்தலின்றி வேறொன்றையும் நம்மால் செய்ய இயலாதா? `இன்னும் இன்னும் வசதிகள் வாய்வைத்துத் தின்னும் நம் ஆயுளை' என்றெழுதி ஆறுதல்பட்டுக்கொள்ளத்தானா உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

இருவழிச்சாலையும், அதன் மேம்பாலமும், அதற்குமேல் மெட்ரோபாலமும் எழும்பும் நகரங்களை நோக்கி ஒவ்வொருநாளும் நம் இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் வந்துகொண்டிருக்கிறார்கள். ஒத்தைடைப்பாதைகள்கூட சீராக இல்லாத கிராமங்களில் நோயாளிகளும் கிழடுகளும் ஏதிலிகளும் அனாதைகளும் தங்களுக்கு என்ன நேர்ந்தது என்பதையே அறியாதவர்காளாய் மரணத்துக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். கிராமம் விரட்டுகிறது; நகரம் நெருக்குகிறது. இன்றைய மனிதன் என்னதான் செய்வான், பாவம்!

`அன்று ஒன்றாக இருந்தோம்

வெவ்வேறாக

இன்று வெவ்வேறாக இருக்கிறோம்

ஒன்றாக'

 ஒன்றாக இருப்பதும், வெவ்வேறாகத் திரிவதும் நிகழ்கால தலைமுறைக்கு ஒரே நேரத்தில் நிகழும் கொடுமையை இன்று காண்கிறோம். வேறுபாடுகள் அனைத்தையும் எப்படியாவது உடைத்தெரிந்திட முடியாதா எனப் பதைபதைக்கிறார் கவிஞர் பச்சோந்தி. வேறுபாடுகளை உடைத்தெறிகிறோம் என்கிற போர்வையில் பண்பாட்டு அடையாளங்களை முற்றிலுமாகச் சிதைத்துவிடும் அதிகாரச் சூழல்பற்றிய அச்சமும் அவர் கவிதைகளில் முன்னுக்கு வருகின்றன.

எனது கண்களால்

வேறொரு முகத்தையும்

வேறொரு கண்களால்

எனது முகத்தையும்

பார்த்து ரசிக்கத்தான் கண்களா?

எனக் கவிஞர் கேட்கும்போது உயிர்வாழ்க்கை என்பது, உரிமைகள் யாதும் பறிக்கப்பட்ட சூழலில் எவ்வளவு பிரச்சனைக்குரியது என்பது மிகவும் எளிமையான மொழியில் கவிதைக் கேள்வியாக உயிர்த்துவிடுகிறது அல்லவா! யாருடைய வாழ்க்கையை நாம் வாழ்ந்துகொண்டி ருக்கிறோம், யாருடைய உணவை உண்டுகொண்டிருக்கிறோம், யாருக்காக அல்லது யாருக்குப்போட்டியாகச் சந்தையில் விற்கப்படுகிறோம். இத்தைகைய கேள்விகளுக்கெல்லாம் கவிதைகளுக்குள் தீர்வைத் தேடுவது இயலாத செயலாய் இருக்கலாம். ஆனாலும் இக்கேள்விகளையே எழுப்பாமல், வெறும் அழகியல் நுட்பங்களில்மட்டும் தன்னை நிறைத்துக்கொண்டு, இன்றைய சூழலில் எந்தக் கவிஞனும் தப்பிவிடமுடியாது. 

நகத்தடி பட்டினிப் பெருமூச்சுகளையும் நினைவுகளின் நிலநடுக்களில் சிக்கிக்கொண்ட முதுமை எறும்புகளையும் மண்ணை நக்கும் நாகரிகங்களையும், லொக் லொக் மனிதர்களையும், அவன் கவனித்துதான் ஆக வேண்டும். இவற்றை கவிஞர் பச்சோந்தி கவனித்திருக்கிறார் என்பது மட்டுமன்றி, ஒரு கிராமத்து நதியைப்போல் இயல்பாகவும் நளினமாகவும் காட்சிமொழி வாயிலாகக் கருத்துகளைக் கவிதைகளுக்குள் பேசமுனைகிறார் என்பதுதான், ஒரு கவிஞராக அவரது வருகையைக் கவனப்படுத்துகிறது.

பச்சோந்தி பெயர்பற்றிய விவாதங்களில் ஈடுபட்டு பச்சோந்தியின் பார்வைக்குப் பின்னால் உள்ள மானுட விழுமியங்களைப் பற்றிய அவரது பெரும்பரிவை எளிதாக நாம் கடந்து சென்றுவிடக் கூடாது. கவிதை என்பது சொரிந்துகொடுப்பதோ, கிச்சுக் கிச்சு மூட்டுவதோ, யாரையும் தொந்தரவு செய்யாமல் இதமாக மனங்களை வருடி விடுவதோ இல்லை. சிலபல வேளைகளில் சூடியிழுப்பதும் சுயநினைவூட்டுவதும் ஓங்கி ஒலிப்பதும்கூட கவிதைதான். 

உருவம் X உள்ளடக்கம் என்ற பழைய மிரட்டலுக்குப் பச்சோந்தி பணிந்துவிடவில்லை என்பதும், இவற்றை உருத்தெரியாது சிதைத்த பன்மைகுரல்களின் பெருவீச்சாய்த் தம் கவிதையைப் பச்சோந்தி ஒலிக்கவைத்துள்ளார் என்பதும் மிகவும் முக்கியமான விடயங்களாகும். தன்னைச்சுற்றி நிகழும் பலவற்றின்மீதும் இன்னும் நுன்மைகளை, கவனங்களை அவர் செலுத்த வேண்டும் என்பதும், கருத்துகளைக் காட்சிமொழியின் அதிகப்பட்ச சாத்தியங்களுடன் விரிப்பதற்கு அவர் முனையவேண்டும் என்பதும் நட்பின எதிர்பார்ப்புகளாகும்.

`கொத்துக்கொத்தாய்க் கட்டிப்போட்ட

நாற்றுக்கட்டுகள்

சேற்றுத்தண்ணீரில் காலூன்றமுயலும்

பிள்ளைகளாய்' 

நாற்றாங்காலில் கிடக்கும் நாற்றுக்கட்டுகளைப் பார்க்கும்போது காலூன்ற முயலும் குழந்தைகளின் நினைவு பச்சோந்திக்கு வருகிறது. ஓர் அரிய கவித்துவத் தருணம் இது. உயிர்ப்பன்மையில் தன்னொருமையைக் கரைத்துவிடும் பழங்குடி பண்பாட்டின் இயற்கைச் சாரம் இது. தி.ஜானகிராமனின் மலர்மஞ்சம் நாவலில் ஒரு கூடை நிறைய பூத்துக்கிடக்கும் ரோஜாக்கள், கையும் காலும் முளைத்துக் கூடைக்குள் ஒண்டிக்கிடக்கும் குழந்தைகளாக தி.ஜாவுக்குத் தெரிவதைப்போன்ற ஒரு நுண்காட்சி இது. இதுபோன்ற பல கண்திறப்புகள் கவிஞர் பச்சோந்திக்கு மேலும் வாய்க்கட்டும். அவரது வாழ்க்கைப் பார்வை மேலும்செழித்து மானுடம் தழுவியதாக மலரட்டும்.

`என் வயிற்றைத்திருடிக்கொண்டாய்

என் வானத்தை இடித்து உடைத்தாய்

போதும் நிறுத்திவிடு

இனி பூஜ்ஜியத்திலிருந்து பூக்கிறேன்

காயத்திலிருந்து காய்க்கிறேன்

அவமானத்திலிருந்து அடையாளப்படுகிறேன்'

லெனின் `பொலிட் பீரோ' அறிக்கையில் தம் கவிதைக்கும் ஓர் இடம் கேட்டான் மாயாகோவிஸ்கி என்பார்கள். இத்தகைய கவிஞர்கள் இன்றுஇல்லை என்று பலரும் நிம்மதி பெருமூச்சுவிடலாம் இந்த வரிசையில் பச்சோந்தி சேர்ந்துவிடமாட்டார் என்று நம்புகிறேன். கிராமத்தைவிட்டு நகரத்தை நோக்கி இடப்பெயர்ந்துள்ள பச்சோந்தி மேலும் ஆற்றலுடன், இன்னும் வலிமையுடனும் இந்த நூற்றாண்டின் அடுத்தகட்ட வாழ்க்கையைக் கவிதைகளாக எழுதி தமிழ்மண்ணுக்குப் பெருமை சேர்ப்பார்.

(எனது முதல் கவிதை நூலான `வேர்முளைத்த உலக்கை' வெளியீட்டு நிகழ்வில் கவிஞர் கல்யாணராமனின் உரை, பின்பு இது எழுத்து வடிவம் பெற்று கணையாழியில் கட்டுரையாக வெளிவந்தது. கணையாழி பொன்விழாவில் சிறந்த கட்டுரைக்கான விருதும் பெற்றது) 

No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...