Thursday, April 29, 2021

உழுகுடிகளின் கவிசொல்லி - பேராசிரியர் கல்யாணராமன்

 




இப்போது மூங்கிலுக்கு என் பாட்டி வயதாகிறது 

காய்ந்த வேர்களின் கணுக்களில் சிந்தித் 

தரையில் பரவிய மூங்கில் அரிசிகளில் 

ஒன்றுதான் நான்      

இது பச்சோந்தியின் மூன்றாவது கவிதைத்தொகுப்பு. முதல் தொகுப்பான வேர் முளைத்த உலக்கையின் வெளியீட்டு விழாவில் நான் பேசினேன். அதைச் சிறிதும் மாற்றாமல், அப்படியே கணையாழியில் வெளியிட்டார்கள். ஓர் அசல் கிராமத்துக் குரலென்றும், நிகழ் கால வெக்கையின் நிஜக்காட்சியென்றும், மண்பிணைப்பின் வேரோடிய மனவிரிவென்றும், ஒரு பெருந்திரளின் ஆவேச வெடிப்பாய்ப் பொங்கிப் பெருகும் பேச்சென்றும் கவிஞர் பச்சோந்தியைச் சாதகமாக மதிப்பிட்டிருந்தேன். இன்னும் நுண்மையான கவனிப்புகளுடன், காட்சிமொழியின் அதிகபட்ச சாத்தியங்களுடன் அவர் கவிதைவயப்பட வேண்டுமெனக் கோரியிருந்தேன். இந்த என் வலியுறுத்தலுக்குச் செவிகொடுத்து  கிராமத்தை அதன் வேர் முடிச்சிலிருந்து உசாவியும் நகரக்கண்களால் விசாரித்தும் உழுகுடிகளின் உடலெங்கும் புகுந்துள்ள கருவேல முட்களைக் கண்டுகொண்டும் இத்தொகுப்பில் பச்சோந்தி தீவிரப்பட்டிருக்கிறார், ஆவணமாக்கத்துடன் அசைவுகளுக்குள் சுருண்டிருக்கும் அதிர்வுகளையும் ஆர்ப்பாட்டமின்றிக் கவனப்படுத்தியுள்ளார். மேலும், கடலுக்குள் பதுங்கிய சூறாவளியாய், அவர் சொற்களில், நெருப்பள்ளிப்போட்டுக் குப்பைக்கூளங்கள் ஒழிக்கும் ஞான சூரியனின் கிரணக் கதிர்வீச்சையும் காண்கிறேன்.           

ஒரு தொப்புள் கொடியைப் பல்லில் அறுக்கும் 

காலக்கூத்தில் 

சிறு ஈரமடி தொடங்கித் தீயை முடுக்கும் ஊழித்தீட்டே 

நீதி... நீதி...

பறையொலியில் பார்துயிலை எழுப்பிச் 

சுள்ளிகளின் மீது குடல்விறைத்து ஆடுகிறோம் 

தகிக்கும் கானலில் எம்மைப் பொசுக்கு 

எங்கள் அலறலோ ஆவியோ மட்டும்தான் 

உமது நெருப்பின் உயரம் தாண்டும் 

கொதிக்கும் எம் சூடான சாம்பலை 

உம் நெற்றியில் பூசி மிச்சத்தை வாயிலிட்டு ருசி          

ஓரிடத்தில் பிறந்து, அவ்விடத்திலேயே வளர்ந்து, அங்கேயே மணமுடித்துப் பிள்ளைகள் பெற்றுப் பிழைத்து, உழைத்துக் களித்த மண்ணோடு மண்ணாய்ப் புதையுண்டும், நதியோடு விளையாடிக் கொடியோடு தலைசீவிக் காற்றோடு காற்றாய்க் கலந்தும் கரைந்தும் போன வேளாண் வாழ்வின் காலம் முடிந்துவிட்டது. பதியெழு அறியாப் பழங்குடி மக்கள் எனச் சிலம்பு பேசும் அந்தத் தொல்குடிப் பாரம்பரியம், இன்று புலம்பெயர்தல்களின் இடையறாத துரத்தலால், பிணந்தின்னிகளின் கருணையை எதிர்நோக்கிக் கூசிச்சிறுத்துக் கையெடுத்துக் கும்பிட்டு உயிர்ப்பிச்சை கேட்கிறது. ஊற்று, குளம், குட்டை, கிணறு, ஏரி, நதி, காடு, கழனி, பூக்கள், பறவைகள், விலங்குகள், தோட்டம், தோப்பு, நிழல், தட்டான்கள், புல், பூண்டு, பச்சை தாண்டி மனிதனை அடிக்கக்கிளம்பிவிட்டன மனிதமூளைகள். இயற்கையோடும் வேற்றுக் கிரகங்களோடும் மிருகங்களோடும் இயந்திரங்களோடும் மனிதனால் போராடவும் வெற்றி அடையவும் முடியும். ஆனால், மனிதனோடு மனிதன் மோதும் தற்கொல்லிப்போரைத் தவிர்த்து, எல்லோரும் இன்புறும் மேலாம்நிலையை எப்படித் தக்கவைப்பது என்பதுதான், விஞ்ஞான யுகத்தின் வினா. இதற்குப் பதில் கூறும் திராணி பச்சோந்திக்கு இருக்கிறது.    

நாம் ஒளியிலும் இருக்கிறோம் 

இருளிலும் இருக்கிறோம் 

அந்த ஒளியும் இருளும்  

உன்னுடையதுமில்லை 

என்னுடையதுமில்லை   

நாம் ஒளியற்றும் இருக்கிறோம் 

இருளற்றும் இருக்கிறோம் 

அந்த ஒளியின்மையும் இருளின்மையும் 

உன்னுடையதும் என்னுடையதுமாகும்  

கிராமங்களின் அழிவைக் கண்முன் கண்டுகொண்டிருக்கிறோம்; விவசாய நிலங்கள் ஃப்ளாட்டுகளாவதை வேடிக்கை பார்க்கிறோம். நகர்மயமாதல் குறித்தும், மக்கள்தொகைப் பெருக்கம் பற்றியும், பூர்வகுடிப் பண்பாட்டழிவு சார்ந்தும், மையக்குவிப்பின் கேடுகள் தொடர்பாகவும் நிறைய நிறையப் பேசிவிட்டோம். பிரச்சனைகள் பிரச்சனைகள் பிரச்சனைகள் என்பதல்லாமல், தீர்வுகளேயில்லை என்ற நிலைக்குப் பொதுபுத்தியை மிக விரைந்து நகர்த்திக்கொண்டிருக்கிறோம். சாலைகள் வேண்டும், மேம்பாலங்கள் வேண்டும், மெட்ரோ வேண்டும், தடையற்ற மின்சாரம் வேண்டும், லாரி லாரியாய்க் குடிநீர் வேண்டும், செல்போன்களும் கணினிகளும் புதிது புதிதாய்த் தினமும் வேண்டும் என்ற மனநிலை இனி மாறாது. உயிரோடிருப்பதற்கான போராட்டமும், மிஞ்சி எஞ்சுவதற்கான யத்தனிப்பும் இனி குறையாது. இவ்விடத்தில் நின்றுகொண்டு புத்தர், இயேசு, வள்ளலார், காந்தி என்று சமரசம் சன்மார்க்கம் பேசலாகாது. 

அயோத்திதாசர், பெரியார், அம்பேத்கர் என்று பயணப்பட்டு, மார்க்ஸ் காட்டும் ஒளியில், லெனினையும் மாவோவையும் காஸ்ட்ரோவையும் சிந்தித்தாக வேண்டும். இதை வறட்டுப் புரட்சிவாதம் என்று ஏசி கட்சி மனநிலையைக் கண்டித்துவிட்டுக் கடுகுள்ளத்தாரோடு கண்மறைவில் கைக்கோத்துக்கொண்டு, மலையை வெட்டிச் சாலை போடுவதையும் அணுவுலைகளையும் எதிர்ப்பதுபோல் ஆதரிப்பதுதான் நம்மில் பெரும்பாலோர் தொடர்ந்து செய்வதாகும். இச்சூழ்ச்சியைப் புரிந்தும் புரியாமல் மருண்டு நடுங்கும் இளம் கவிமனங்கள், புறப் பதற்றங்களால் அகஞ்சிதைந்து நொறுங்கிக் கண்ணீரும் கவலையுமாய்ப் பித்துப் பிடித்துச் சீறுகின்றன. 

ஒரே புயல் ஓராயிரம்முறை சுழன்றடிக்கிறது 

ஒரே மனிதன் ஓராயிரம்முறை விஷம் குடித்துச் சாகிறான் 

ஒரே மீன் ஓராயிரம்முறை செத்து மிதக்கிறது 

ஒரே மான் ஓராயிரம்முறை ரத்தம் கக்குகிறது 

ஒரே மின்கம்பம் ஓராயிரம்முறை உடைந்து சாய்கிறது 

மழைக்கு ஒதுங்கியவனின் மீது 

ஒரே மரம் ஓராயிரம்முறை முறிந்துவிழுகிறது 

நுகத்தடி பூட்டிய மாடுகளின் மீது 

ஓராயிரம்முறை மின்கம்பி அறுந்துவிழுகிறது 

ஓராயிரம்முறை நாய் கவ்வுகிறது

இப்பூமியை

பழைய மாட்டுக்கொம்பால் புதிய மாட்டின் குரல்வளையைக் குத்திக்கொண்டிருக்கிறார் பச்சோந்தி; ஆடு நீராகாரம் குடிக்கும் ஒலியைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்; அப்பாவும் விறகென்று அரிவாளுக்கும் தெரிந்துவிட்டதை அறிவிக்கிறார்; வாழ்வு கெடுக்க யார் யாரோ வருவதெண்ணிப் பதைபதைக்கிறார்; மலை சுமந்த வண்ணத்துப்பூச்சி மீதேறும் லாரியைப் பகைக்கிறார்; கொழுமுனையைப் பிடுங்கி அடிவயிற்றில் நட்டுக்கொண்டவரைக் குருதிப் படமாய்க் காட்டுகிறார்; மலைப்பாம்பாகும் மெட்ரோ ரயிலை வெறிக்கவைக்கிறார்; அமிலம் மிதக்கும் புகைக்குள் மாநகரச்சாலையின் மூச்சுத்திணறலை நாடி பிடிக்கிறார். பிளாஸ்டிக் தொட்டியின் கற்றாழைக்கும் ஓமவல்லிக்கும் நீரூற்றி நடுங்கும் குதிங்காலைப் பார்வைப் புலத்தில் நிறுத்துகிறார்; உரலிலிருந்து உருவப்பட்டு அந்தரத்திலாடும் புழுத்துப்போகாத உலக்கையை செல்போன் வெளிச்சத்தில் எதிர்கொள்கிறார்! காட்சி மொழி விரிய விரிய எட்டுத் திசைகளிலும் கேட்கும் சிரிப்பும் அழுகையும் சேர்ந்து, முதுகுத்தண்டைச் சில்லிடவைக்கின்றன. 

அரளி வீசும் கந்தகக் காற்றை உள்ளிழுத்தபடி புறப்படும் பேருந்தையும், மேம்பாலத்தில் மூழ்கிய ஆற்றையும், மழை நிறைக்கும் பிச்சைப்பாத்திரத்தையும்,  முறிந்த கிளையில் தலைகீழாகத் தொங்கும் கலாபத் தோகையையும், அலையாத்திக் காடுகளின் மரண வாசத்தையும் காட்டும்போது பேயவன் காண் எங்கள் கவி, பெரும் பித்துடையான், காயழல் ஏந்திக் காதலுடன்  மண் பாடுவான் எனக் கண்டுகொள்கிறோம். தயிர் கலந்த, மிருதுவான, கொத்தமல்லியும் கறிவேப்பிலையும் தூவிய, எண்ணெய் மிதக்கும் மாட்டுக் கறியை நாவிலெடுத்து வாயிலடக்கிக் கீழண்ணமும் மேலண்ணமும் எச்சிலில் ஊற ஊறத் தொண்டைக்குழிக்குள் ஆழப்புதைத்துச் சிறுமியின் கையில் ஒளிரும் வீச்சருவாள் தந்து, ரத்தம் நிலமெல்லாம் ரத்தம், ரத்தம் நினைவெல்லாம் ரத்தம் எனப் பலிக் குரலெடுக்கிறார் பச்சோந்தி. 

நாங்கள் யார் பொருளையும் திருடியதில்லை 

நாங்கள்  யார் நிலத்தையும் அபகரித்ததில்லை 

எமது பனையின் வேர்கள் அறுக்கப்படுமாயின் 

எமது புளியம்பூக்கள் உதிர்க்கப்படுமாயின் 

எமது மயில் உண்ணும் பயிர் அழித்து 

அளவைக்கல் நடப்படுமாயின் 

கரும்பும் நெல்லும் தென்னையும் விளைந்திருக்கும் நிலத்தை 

ஜேசிபி விழுங்குமாயின் 

கொழுமுனையைக் கொண்டறுப்போம் உங்கள் சதை நரம்புகளை 

அம்மியில் நொறுக்குவோம் எலும்பு மூட்டுகளை 

அவற்றைச் சூரியனை மூட்டி 

கொஞ்சம் சூப்பு குடிப்போம் 

எஞ்சிய சிறு குறு சதை எலும்புத்துண்டுகளைக்  

கோணூசியில் கொத்தி வானில் எறிவோம் 

இனி எவனின் நிழலாவது எம் கிணற்று நீரில் தென்பட்டால் 

உலக்கையால் குத்துவோம் 

 ஆம் உலக்கையால் குத்துவோம் 

இருள் மூடிய ஒரு மாபெரும் மரணப் பள்ளத்தாக்கில் விழுந்துகொண்டேயிருக்கும் பிணங்களை விளக்கேந்திக் கணக்கெடுக்கும் கண்ணியமற்ற காவற்பணியைக் கவிஞர்கள் செய்யவேண்டியிருக்கிறது. நிகழ்காலம் கோரும் இந்தக் கடுங்காவலைத் தன்நினைவாகப் பச்சோந்தி அம்பட்டன் கலயம் தொகுப்பாக்கியிருக்கிறார். இது இன்றின் கவிதையானாலும், நேற்றை நினைத்தேங்குவதும், நாளைக்கு நடுங்குவதுமாகக் காலம் மூன்றுக்கும் சாட்சி பூதமாகிறது. ஒரு கிராமக் கவி, புலம் பெயர்ந்திறங்கிய நகரவாழ்வால் வெகுண்டெழுந்து, மண்ணையும் மனிதர்களையும் அதிகாரங்களுக்குக் காவுகொடுத்த அவலத்தையே மீளமீள அலுக்காதும் சலிக்காதும் பச்சோந்தி பேசுகிறார். இலக்கைக் குறிவைக்கும் அவர் குரல், மேன்மேலும் கூர்மையுறுவதைக் கவனிக்கிறேன். மொழியும் பார்வையும் ஒன்றுகூடி கவிதை அடர்த்திப்படுவதைக் காண்கிறேன்.                              

வீட்டைத் தூக்கிக்கொண்டலைகிறேன் 

புதிதாய் வாங்கிய இடத்தில் கட்டிய கனவு வீடு 

இப்போது அங்கே முடிவற்ற தார்ச்சாலை செல்கிறது 

அரளிக்காற்றை வீசியபடி 

அதைச் சொந்த ஊருக்குத் தூக்கிச்சென்றேன் 

அங்கே ஓர் அணு உலை புகைந்தபடியிருந்தது 

மாமன் ஊருக்குத் தூக்கிச்சென்றேன் 

அங்கே மீத்தேன் வாயு வெடித்தபடியிருந்தது 

அத்தை ஊருக்குத் தூக்கிச்சென்றேன் 

அங்கே நிலக்கரி வெட்டியபடியிருந்தது 

இனி எங்கேதான் தூக்கிச்செல்வது இவ்வீட்டை 

பேசாமல் கையிலேயே வைத்திருக்கலாமென்று நினைக்கிறேன் 

என் காட்டுக்குருவிகளோடு 

என் காட்டுக்காற்றோடு 

என் காட்டுப்பூச்சிகளோடு 

என் காட்டுவானத்தோடு                          

கனிவோடு பச்சோந்தி தொட்டுத் தழுவும் மண்பற்று மனிதர்களுக்குக் கணக்கில்லை; நஞ்சை புஞ்சையில் அவர் கண் பதியாத ஒருதுளி நிலமில்லை; கவிதை அவருக்குக் கை வாளில்லை; உயிர்க்காற்று! இவ்வாறே உழுகுடிகளின் கவியாக அவர் உயர்ந்தெழுகிறார். ஆனால் அடுக்கிப் பட்டியலிடுவதையும், மிகை நெகிழ்ச்சியையும், சொற்களைச் சற்றே நீட்டுவதையும், கூடுதல் அழுத்தங்களையும் இனிமேல் பச்சோந்தி சுய தணிக்கை செய்ய வேண்டும். தாமாகவும் பிறராகவும் கூடுவிட்டுக் கூடுபாய்ந்து அவர் பொதுமையாகும்போது, நோக்கும் திசையெலாம் தாமன்றி வேறில்லை என்றாகி கவிதை பேசாப் பேச்சாகிவிடும். இத்தடத்திலேயே தொடர்ந்தவர் பயணிக்கும்போது, இன்னொரு கபிலனாய், பரணனாய், பெருஞ்சித்திரனாய் பெருங்கடுங்கோவாய்த் தமிழின் நவீன உருத்திரங்கண்ணனாய்ப் புத்துயிர்ப்பார்! 

என் விழிகளின் வெப்பத்தில் உருகி வழிந்து 

என் தீண்டப்படாத வாசல் தாண்டி 

உலகெங்கும் பரவிக்காய்ந்த ரத்தத்தில் கலந்திருப்பது

அந்தத் தேவடியாப்பயல்களின் ரத்த நெடியும்தான்


கல்யாணராமன்

அண்ணா நகர்

16/12/2018


(`அம்பட்டன் கலயம்' என்கிற எனது மூன்றாவது கவிதை நூலில் இடம்பெற்ற பேராசிரியர் கல்யாணராமனின் அணிந்துரை)   

No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...