நாளை சீக்கிரம் எழுந்திருக்க வேண்டுமென்று முடிவெடுத்திருந்தேன். இங்கு சீக்கிரம் என்பது விடிவதற்குள். அப்போதுதான் பூசனம் பிடித்த சோற்றை யாருக்கும் தெரியாமல் கீழே கொட்ட முடியும். பூசனம் பிடித்தது சோறு மட்டுமல்ல ; சாம்பார், பால், பொறியலும்கூட. இவற்றுடன் மனமும்தான். மனதின் பூசனத்தைப் பிறகு எழுதுகிறேன்.
தமிழ்ப் புத்தாண்டு அன்று சமைத்தது. காலையில் நண்பரைப் பார்க்கச் சாப்பிடாமல் சென்றதில் மனைவிக்குக் கோபம். என்ன செய்வது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் இருக்கும் அவரைப் பார்த்து, இப்போது சினிமாவில் ரொம்ப பிஸியாகி விட்டார். மேலும், 9.30 இல் இருந்து 10 மணிக்குள் வந்துவிடுங்கள் என்றதால் சீக்கிரம் புறப்பட்டு விட்டேன்.
இப்படியானவற்றைக் கொட்டச் செல்லும் போது பக்கத்து வீட்டிலோ, கீழ் வீட்டிலோ யாராவது பார்த்தால் பாவம் நாற்றத்தில் மயக்கமடைந்து விடக் கூடும். நல்லவேளை இருட்டில் எழுந்து கொட்டிவிட்டேன். வீட்டின் தென்புறமுள்ள தொழுவத்தின் ஓரக் காலியிடத்தில்தான் இப்படியான கழிவுகளைக் கொட்டுவோம். வழக்கமான கனத்தினை நினைத்துச் சோற்றுச் சட்டியை உதறினேன், முழுச் சட்டியளவு கனம் மணிக்கட்டில் வலியைக் கொடுத்தது. ஏதோ நாலைந்து பாத்திரம் இருக்குமென்று சமையல் கட்டில் நுழைந்தால் அள்ள அள்ளக் குறையவில்லை.
பிள்ளைகள் இருவரும் தன் அம்மாவுடன் பெரியப்பா வீட்டிற்குச் சென்றுவிட்டனர். அவர்கள் இல்லாததால் மேலறைக்குச் செல்லாமல் இரண்டு நாட்களாகக் கீழறையிலேயே உறங்கி விட்டேன். ஊருக்குப் போனவர்கள் வந்து பாத்திரங்கள் இருக்கும் நிலையைப் பார்த்தால் மனைவியை விட மகள் என்னைக் கேள்விகளால் கொன்று போட்டு விடுவாள். ஒருவழியாகத் தேய்த்த பாத்திரங்களைச் சின்ன வாளியில் மூன்று முறை எடுத்துச் சென்றேன். துவைக்கத் துணியிருந்தது, எதிர் வீட்டுப் பாத்திரங்களுக்கு இடம் கொடுத்துக் கீழறைக்குச் சென்று விட்டேன். செல்லும் போது சுவரோரம் வெண்கோணியில் கிடந்த குப்பையை எடுத்துச் சென்றேன், அதன் அழுகல் கொஞ்சம் தரையில் ஒட்டிக்கிடந்தது.
`உண்ணாமதி சியாம சுந்தர்' தெரிவு செய்து தொகுத்த `நகைக்கத்தக்கதல்ல' நூலை வாசிக்கலானேன். சா.தேவதாஸ் மொழிபெயர்ப்பில் எதிர் வெளியிட்ட இந்நூல் 1932 - 1956 காலகட்டத்தில் வெளியான அம்பேத்கர் கேலிச்சித்திரங்களை மையப்படுத்தியவை. இந்நூலுக்கு சூரஜ் யங்டே அணிந்துரை எழுதியுள்ளார். அதன் இறுதியில் `இப்புத்தகத்தைக் கீழே வைக்கையில் தலித் அரசியலில் மிகவும் கற்றறிந்தவராக, அறிவு விளக்கம் பெற்றவராக, கூர்மையானவராக வெளிவருவீர்கள். வரவிருக்கும் எதிர்காலப் படைப்புகளுக்கு வழிகாட்டும் மைல்கல்லாக `நகைக்கத்தக்கதல்ல' நிச்சயம் இயங்கும்' இவ்வாறு குறிப்பிடுகிறார். ஒவ்வொரு கேலிச்சித்திரத்திற்கும் இரண்டு அல்லது மூன்று பக்கங்களில் அக்காலகட்டத்தின் அரசியல் போக்கு வரலாற்றுப் பின்புலத்துடன் விவரிக்கப்பட்டுள்ளது.
புத்தகக் காட்சியின் போது தம்பி கே.சி.ரஞ்சித் குமார் வாங்கி அலுவலகத்தில் வைத்திருந்தான். அவ்வப்போது எடுத்துப் படிப்பேன். ஓர் நாள் அலுவலகம் வந்திருந்த அருள் முத்துக்குமரனுடன் ரஷ்யா - உக்ரைன் போர் குறித்து உரையாடிய பிறகு ``படித்துவிட்டுப் பொறுமையாகத் தாங்க அண்ணா'' என்று கே.சி.ஆர் இந்நூலைக் கொடுத்தான். பத்து மணி வரை படித்துவிட்டுத் துணி துவைக்கச் சென்று விட்டேன்.
துணி சோப்பைத் தேடும் போதுதான் நீரூற்றி வைக்கும் ட்ரம் மீது பட் ரோஸ் வாடிக் கிடந்தது தெரியவந்தது. கடந்த வாரம் தன் பெரியப்பா வீட்டில் இருந்து மகள் கொண்டுவந்தது. நாங்கள் இல்லையென்றாலும் தினமும் பூச்செடிக்குத் தண்ணீர் ஊற்ற வேண்டும் எனச் சொல்லி இருந்தாள். துணிகளின் மீது விழுந்த நீரைப் பிடித்து வதங்கிய செடியின் வேர் மீது ஊற்றினேன். அப்போதுதான் ஒரு போர்வையும் படுக்கை விரிப்பும் மூன்று நாட்களாக வெயிலில் கிடப்பதையும் பார்த்தேன். வீட்டையும் பார்ப்பதில்லை, நாட்டையும் பார்ப்பதில்லை, என்னதான் பார்க்கிறாய் கணேஷா!?
No comments:
Post a Comment