saatchiart
ஓர் நாள் கிழிந்த டவுசரின் வழியே கருத்த பிண்டம் ஒன்று எட்டிப் பார்த்தது. என்னடா இது என்று அதன் நுனியைத் தொட்டுக் கேட்டேன். வெட்கப்பட்டுக் கைகள் இரண்டால் பொத்திக்கொண்டு ஓடி விட்டான். சமீப நாட்களாகத்தான் கிழிந்த ஆடைகளை அணிந்த பிள்ளைகளைக் கவனிக்க ஆரம்பித்தேன். குடும்பத்தின் மேல் என்ன அக்கறை கொண்டுள்ளோம் என எழுந்த கேள்வி புதுத் துணி வாங்கிக் கொடுக்க நினைத்தது.
சில நேரம் குளித்து முடித்து ஈரம் சொட்டச் சொட்ட வீட்டுக்குள் ஓடி வருவான். ஒற்றை அறையுள்ள வீடு முழுவதும் நனைந்துவிட்டால் என்ன செய்வதென்று, வெளியில் சென்று குஞ்சைச் சூரியனில் காய வை என்பேன். பார்த்துக் காற்றில் பறந்துவிடாமல் பார்த்துக்கொள் என்று சொல்லும் போது என் மண்டையில் குட்டுவைத்த படி சூரியனின் வெப்பத்தை நோக்கிச் சென்றுவிடுவான்.
கிழிந்த டவுசரைத் தைய்த்துக் கொடுக்கலாம் என்று பார்த்தால் கந்தலாய்க் கிடந்தது. சரி புதுத் துணி வாங்கித் தருகிறேன் என்றதும் எனக்கும் என்று கேட்டாள் மகள். சரி இருவருக்கும் வாங்கித் தருகிறேன் என்று சொன்னதும், அவ்வப்போது எப்ப வாங்கிக் கொடுப்பீர்கள் என்று நச்சரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு வழியாக இந்த மாதச் சம்பளம் வந்ததும் என்று உறுதியளித்தேன்.
சம்பளத்தில் வாடகையும் சென்ற மாதம் வாங்கிய கடனும் கொடுக்கும் போது இந்த மாதம் புதுத் துணி வாங்குவதில் சந்தேகம் எழுந்தது. நேற்று இரவு அலுவலகம் முடிந்து A51 இல் வீட்டுக்குச் சென்றுகொண்டிருக்கும் போது, மகன் அழைத்து ``என்னப்பா ட்ரெஸ் வாங்கிட்டு வருகிறீர்களா'' என்று கேட்டான், என்ன சொல்வது என்று தெரியாமல் ம்ம்ம்... என்றேன். பஸ் பாஸ் வாங்க 1,000 ரூபாய் ஒதுக்கி வைத்திருந்தேன். பின் வேளச்சேரியில் இறங்கினேன். வீட்டுக்குச் செல்லாமல் இளம் பச்சையில் துளிர்த்திருக்கும் அந்த அரச மரத்தின் நிழலில் நின்ற படி சிறிது யோசிக்கலானேன். மீண்டும் பேருந்தில் ஏறி தி.நகருக்குச் செல்ல ஆரம்பித்தேன். எல்லோரும் விளக்குகள் அணையும் வீட்டுக்குத் திரும்பும் இரவில் விடிய விடிய எரியும் நகரத்தின் உள் நுழைந்துகொண்டிருந்தேன்.
தி.நகர் பேருந்துப் பணிமனையின் அருகிலிருந்த பெரியார் சிலையின் பின்னந்தலையில் வாகன வெளிச்சம் பீறிட்டது. சவுத் உஸ்மான் சாலை கொஞ்சம் கொஞ்சமாய் மூட்டையைக் கட்ட ஆரம்பித்திருந்தது. அதில் ஒரு மூட்டையைப் பிரிக்கச் சொல்லி அழகான ஜோடியைத் துலாவ ஆரம்பித்தேன். மிகவும் மென்மையான துணி வகைகள் மட்டுமே இருந்தன. இதைவிடக் கொஞ்சம் தடிப்பான ரகம் வேண்டும் என்றேன். எங்களிடமில்லை, பிள்ளையார் கோயில் வாசலில் இருக்கும் சீக்கிரமாகச் சென்று கேளுங்கள் இல்லையென்றால் கடையை மூடி விடுவார்கள் என்றார். பலாச்சுளையின் வாசனையை நுகர்ந்த படி உஸ்மான் சாலையின் மத்தியை நோக்கி நகர்ந்தேன். சென்று கொண்டிருக்கும் போதே ஓர் நடைபாதைக் கடை மேசையின் நுனியில் மிக அழகான பட்டாடைப் பாவாடையைப் பார்த்தேன். விலையைக் கேட்டேன் 150 ரூபாய் என்றார், எந்தவித யோசனையுமின்றி வாங்கிப் பையில் திணித்துவிட்டேன். இனி மகளுக்காக என்ன வாங்கினாலும் இது ஒன்றே போதும் அவள் ஆரவாரிக்க.
பிள்ளையார் கோயிலின் வாசலின் வலது புறத்தில் மகனுக்கும் மகளுக்கும் மிக அழகான உடைகளைத் தெரிவு செய்தேன். ஆனால், விலையைச் சற்றும் குறைக்க முன்வரவில்லை. எவ்வளவு பேசிப் பார்த்தும் 10 ரூபாய் கூட குறைக்காததால் துணி வேண்டாம் என்கிற முடிவுக்குச் செல்ல ஆரம்பித்தேன். வேண்டாம் என்று புறப்பட்ட போது, ``இதே துணிகளை நாளைக்கு விற்கும் தெம்பு என்னிடம் இருக்கிறது. இவ்வளவு நேரம் பார்த்து வாங்காமல் போவது உங்களுக்கு வருத்தத்தைக் கொடுக்கும் என்பதற்காகச் சொல்கிறேன்'' என்றார். நானும் பிடிவாதமாக மறுத்து விலகினேன். ஆனால், அனைவரும் கடையை மூடும் இந்நேரத்தில் இனி எங்கே போய்த் துணிகளைத் தேடப் போகிறாய், பேசாமல் வாங்கிச் செல் என்றது உள் மனம். ``இதே துணிகளை விற்கும் தெம்பு என்னிடம் இருக்கிறது'' என்று அவர் சொன்ன போது அருகே ஓர் பெண் இருந்தாள். வேற துணி வாங்க நம்மிடம் தெம்பில்லையா என்ன என்று தோன்றியது. ஆனாலும் நிற்கவும் இல்லாமல் போகவும் மனமில்லாமல் அதே கடையைக் கடந்து வடக்கும் தெற்குமாக நடக்கலானேன். எப்படியாவது கூப்பிட்டுக் கொடுத்துவிடுவார் என்று நம்பினேன், என் நம்பிக்கை பொய்த்தது.
இன்னும் சற்று தூரம் சென்றதும் இன்னோர் கடையில் துணிகளைப் பார்த்து விலை கேட்டேன். நல்ல விலையாகத் தெரிந்தது, துணி அவ்வளவு நல்லதில்லை. அவரிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்று தெரியாமல் இன்னும் விலை குறைத்துக் கேட்டேன், அந்த விலைக்குத் துணி இல்லை என்று சொல்லிவிட்டார். விட்டால் போதும் என்று ஓட ஆரம்பித்தேன். இருபதடி தூரத்தில் சென்ற போது, சரி வாங்க நீங்க கேட்ட விலைக்கே வாங்கிக் கொள்ளுங்கள் என்று இரண்டு முறை அழைத்தார். எதுவும் கேட்காதது போல் அந்தக் குரலைக் கூட்டத்தினிடையே விட்டுவிட்டேன்.
ரங்கநாதன் தெருவைத் தாண்டி பேருந்து பணிமனையை நோக்கிச் செல்லும் கடைகளை மீண்டும் வெறிக்கலானேன். இன்றும் துணி வாங்குவது சிரமம் போல் என்கிற எண்ணம் என் குரல்வளையை நெரிக்க ஆரம்பித்தது. மணி 10.5 ஆகிவிட்டது. மனைவி அழைத்து எங்க இருக்கிறீங்க என்றாள். அப்போதுதான் துணி வாங்க வந்திருக்கும் செய்தியை அவளிடம் பகிர்ந்தேன். வாங்காமல் விட்டு வந்த தன்மையிலான பாவாடைகள் ஒரு கடையில் தென்பட்டன. முதலில் விலையைக் கேட்டேன், ``பத்து இருபது குறைத்துக்கொள்ளலாம் நீங்க பாருங்க'' என்று சொன்னதும் தீவிரமாய்த் தேட ஆரம்பித்தேன். மகனுக்கும் மிக அழகான பனியனும் டவுசரும் வாங்கினேன். இந்த ஒரு பனியனே போதும் அவன் மகிழ்ச்சிகொள்ள என்று நினைத்து நறுமணத்தால் மூழ்கிய உஸ்மான் சாலையில் இருந்து விடைபெற்றேன்.
இந்நேரத்தில் பேருந்து இல்லையென்றால் ஓலா பைக்கில்தான் செல்ல வேண்டியதிருக்கும் என்று எண்ணியபடி, இருண்ட பணிமனையின் உள்நுழைந்தேன். பேருந்துத் தடம் எண் 3 நின்றிருந்தது. சரிபாதி இருளும் ஒளியும் மிதந்த இருக்கையில் அமர்ந்தேன். அதற்கு முன் பச்சைப் பலகை 51A நின்றிருந்தது. முதலில் எடுத்த பேருந்தில் ஏறி வீடு வந்தேன்.
நகரம் உறங்கும் நேரத்தில் திறந்த கதவின் இருளை விலக்கினேன். மனைவி விழித்தெழக் குரல் கேட்டுப் பிள்ளைகளும் படபட வெனப் பாயின் மீது அமர்ந்துவிட்டார்கள். புதுத் துணிகளைப் பாயின் மீது எடுத்து வைத்தேன். பட்டாடைப் பாவாடையை மகளும் வெள்ளை நிறப் பனியனை மகனுமாக நெஞ்சோடு அணைத்துக்கொண்டார்கள். அணைப்பை ரசித்த படி எல்லாத் துணிகளுமே நல்லா இருக்கிறது என்றாள் மனைவி. அடுத்த நாள் காலையில் துணி துவைக்கையில் நான் அந்தக் கந்தல் துணிகளைக் குப்பையில் எறிந்துவிட்டேன். இனி கிழிசலில் தொங்கும் குஞ்சைப் பார்த்து ``பார்த்துடா கீழே விழுந்திடப் போகுது'' என்று வம்பளக்க வாய்ப்பில்லை.
15.04.2022
வெள்ளிக்கிழமை
No comments:
Post a Comment