நேற்று மாலை சிவராஜ் பாரதியும் நானும் அலுவலகத்தில் உரையாடிக்கொண்டிருந்தோம். வரவேற்பரையில் கரகரத்த குரல் ஒலித்தது. யாரென்று பார்த்தேன். புத்தக மூட்டையுடன் பரிசல் செந்தில்நாதன் வந்திருந்தார். தலித் வரலாற்று மாதத்தை முன்னிட்டு இம்மாத இறுதியில் மதுரையில் வானம் கலைத் திருவிழா 2022 நடைபெறவிருக்கிறது. அங்கு விற்பனை செய்வதற்காக நீலம் சார்பாகப் புத்தகங்கள் கேட்டிருந்தோம். எனவே, க.பஞ்சாங்கத்தின் `தலித்துகள் பெண்கள் தமிழர்கள்', கோ.ரகுபதியின் `காந்தியின் ஸநாதந அரசியல்', பிரஞ் ரஞ்சன் மணி, பமீலா சர்தார் இருவரும் தொகுத்து வெ.கோவிந்தசாமி மொழிபெயர்த்த `மறக்கப்பட்ட விடுதலைப் போராளி சாவித்திரிபாய் பூலேவின் வாழ்வும் போராட்டமும்', வசந்த் மூனின் `ஒரு தலித்திடமிருந்து', பிரியா விஜயராகவனின் `ஆட்டுக்குட்டியும் அற்புத விளக்கும்' ஆகிய பிரதிகளுடன் பரிசல் வந்திருந்தார்.
காஸ்ட்லெஸ் கலக்டிவ் பார்க்கப் பாண்டிச்சேரிக்குச் சென்றீர்களா, கூட்டம் எப்படி இருந்தது என்றார். வழக்கம் போல் இளைஞர்கள் கூட்டம் திரண்டிருந்தது. விசில் சத்தம், கைத்தட்டல் என ஆரவாரமாக இருந்தது என்றேன். நேற்று நடைபெற்ற நாடக விழாவுக்குச் சென்றீர்களா என்றேன். இல்லை, நேற்றுதான் பரிசலின் நூல் வெளியீடு நடைபெற்றது என்றார். சரி வாங்க தேநீர் குடிப்போம் என்றேன்.
நல்லதம்பி தெருவில் இறங்கிச் சென்றபோது, வணிக அங்காடிக்குள் நுழைந்து செல்லலாம் என்றார். அடர் இருட்டு என்பதால் ஏதோ குகைக்குள் இருப்பது போல் இருக்கும். எனவே, எப்போதும் சாலையின் வழி சுற்றிச் செல்வதையே விரும்புவேன். குறுந்தெருவின் வானம், உடைந்த வளையல் துண்டினைப் போல் இருக்கும். அதில் தென்படும் சிறகுகளையும் மேகங்களையும் பார்த்துச் செல்லலாம் அல்லவா. ஆனால், தற்போது குகைக்குள் புகுந்துதான் சென்றோம்.
சற்று நேரத்திற்கு முன்பு சிவராஜுடன் தேநீர் குடித்ததால், செந்தில்நாதனுக்கும் மட்டும் ஒரு நார்மல் டீ சக்கரை கம்மி என்று கடைக்காரரிடம் சொன்னேன். தம்பி, ராம்கி எப்படி இருக்கிறான் என்றேன். ராம்கி என்பது செந்தில்நாதனின் மகன்.
போன வாரம்தான் அறுவை சிகிச்சை செய்தோம்.
ஏன் அடிக்கடி அறுவை சிகிச்சை செய்றீங்க, உடல்நிலைக்கு என்ன ஆச்சு.
போன வருசம் விழுந்தது, இப்போதான் வலி எடுத்தது, இப்போது செய்யவில்லையென்றால் பின்னாடி பிரச்சினை ஆகிவிடும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். இன்ஷுரன்ஸ் க்ளைம் செய்து சிகிச்சையைச் செய்தோம் என்றார்.
திரைப்பாடல் முயற்சி எப்படிப் போகிறது என்றார்.
யாரையும் சென்று வாய்ப்புக் கேட்பதில்லை. பரியேறும் பெருமாள் படம் ஆரம்பித்த போது மாரி செல்வராஜைச் சந்தித்ததுதான் கடைசி. அதன் பின்பு வேறு யாரையும் சென்று பார்க்கவில்லை. இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு சமயத்தில் அதியன் ஆதிரையைச் சந்திக்க போனில் தொடர்பு கொண்டேன், சந்திக்க முடியவில்லை. பிறகு, இனி யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம், நம்ம வேலையைப் பார்ப்போம் என்று தோன்றிவிட்டது என்றேன். வெட்கம், மானம், ரோசம் எல்லாவற்றையும் இறக்கி வைத்துவிட்டு ஒவ்வோர் அலுவலகமாய்ச் சென்று பாடல் வாய்ப்புக் கேளுங்கள். ஏதோ ஒரு படம், ரெண்டு படத்தில் எழுதினால் கூட அடுத்தடுத்து வாய்ப்பு வரும். யாரிடமும் சென்று வாய்ப்புக் கேட்கவில்லை என்றால் உனக்குப் பாடல் எழுத விருப்பம் இருக்கிறது என்று பிறருக்கு எப்படித் தெரியும். ஒண்ணும் தெரியாதவங்க எல்லாம் பாடல் எழுதி யூடியூபில் பதிவு செய்கிறார்கள், உனக்கு என்னய்யா குறைச்சல் என்றார்.
உன்னுடைய நோக்கம் பாடல் எழுதுவதுதான் என்று அறிவிப்பு கொடு, அப்போதுதான் யாராவது ஒருவர் வாய்ப்புக் கொடுப்பார். மூடி மறைத்து வைத்திருந்தால் வயசுதான் ஆகும் என்றார். இப்போது மட்டுமல்ல கடந்த நான்கு ஐந்து வருடங்களாக என்னைத் தொடர்ந்து பாடல் எழுதச் சொல்லும் நண்பர்களில் பரிசலும் ஒருவர். இவ்வளவு தார்மிக உரிமையுடன் திரைப்பாடல் எழுதச் சொல்லும் இன்னொரு நண்பர் அகரமுதல்வன். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக அகரன் என்னுடன் சரியாகப் பேசுவதில்லை. வேளச்சேரியில் நடைபெற்ற பீஃப் கவிதைகள் விமர்சனக் கூட்டத்தில் கைக்கொடுக்கக் கூட மறுத்துவிட்டார். ஏன் கைக்கொடுக்க மறுக்கிறீர்கள் என்றேன், நான் எதுக்கு உங்களுக்குக் கைக்கொடுக்க வேண்டும் என்று மிகவும் அதிகாரத் தொனியுடன் அகரமுதல்வன் சொன்னது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. பார்க்கும் இடமெங்கும் அன்பொழுகப் பேசிய அகரமுதல்வனுக்கு என் மேல் என்ன கோபம் என்பது புரியாத புதிராக உள்ளது.
ஜி.நாகராஜன் சொல்வது போல் மனிதனுக்குத் தேவை அன்பு அல்ல மரியாதைதான். மரியாதையற்ற எந்த இடத்திலும் பச்சோந்தி இருக்க மாட்டான். என் 22 ஆண்டு சென்னை வாழ்க்கையில் மிகவும் தெரிவு செய்துதான் பழகி வருகிறேன். கூட்டத்தோடு கோவிந்தா போடும் பழக்கம் இதுவரையிலும் இனிமேலும் எனக்குச் சாத்தியமற்ற ஒன்று.
பனுவலில் இருக்கும் போது இலக்கியக் கூட்டங்கள், சமூக நீதி நிகழ்வு எனத் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளைப் பரிசல் நடத்தி வந்தார். இப்போது சரியான இடம் அமையவில்லை என்பதால் அவ்வாறான நிகழ்ச்சிகளைச் செய்ய முடியவில்லை என்று சற்று வருத்தத்துடன் தெரிவித்த பரிசல், இன்னும் ஐந்தாண்டுகளில் பதிப்பகத்தின் நூல் எண்ணிக்கையைக் கூட்ட வேண்டும். சரி, விகடன் வரை செல்ல வேண்டும் புறப்படுவோமா என்றார். மாரி செல்வராஜின் `உச்சினியென்பது' கவிதை நூல் இருக்கிறதா என்றேன்.
அது வாங்கத்தான் வெய்யிலைச் சந்திக்க விகடனுக்குச் செல்கிறேன் என்றார்.
சரி நானும் வருகிறேன் எனக்கு ஒரு புத்தகம் கொடுங்க என்றேன். ஆனால், விகடனுக்கு வர மாட்டேன் என்றேன். அப்பு டீக்கடையில் வந்து நில்லுய்யா என்றார். மறுத்துவிட்டேன். பின்பு, ஈரானி டீக்கடை ஓரமாக நிற்பது என முடிவு செய்தோம். இருவரும் அவரின் டிவிஎஸ் 50 இல் புறப்பட்டோம். அண்ணா சாலையில் உள்ள IOB எதிரில் உள்ள ஸ்மித் சாலையின் ஓரம் என்னை இறக்கிவிட்டு விட்டு விகடனுக்குச் சென்றார் பரிசல்.
அருகில் இருந்த ஈரானி டீக்கடையை நோக்கினேன். விகடனில் பணி புரிந்த போது மாலை நேரத்தில் நண்பர்களுடன் டீ குடிக்க வருவோம். இங்கு பருப்பு கலந்த சிறிய அளவிலான சமோசா மிகச் சுவையாக இருக்கும். எதிரில் சிறிய அரசமரத்தின் அருகே இருந்த பெட்டிக்கடைப் பெண்மணி அவ்வழியாகச் சென்ற ஆஃபீஸர் ஒருவருக்குப் புன்னகை செய்தார். சாய்ந்திருந்த துருப்பிடித்த மின்பெட்டியின் கீழ் சருகுகள், கேபிள் வயர்கள், கட்டைகள் கிடந்தன. சிக்னல் விளக்குகள் பச்சையும் சிவப்புமாக ஒளிர்ந்தன. வெளியின் கருமை கூடியது. எங்கேனும் விண்மீன் தென்படுமா என்று வானத்தைத் துலாவினேன். சைக்கிளில் வந்த பூ வியாபாரி வெகு நேரமாய்ச் சாலையைக் கடக்கக் காத்திருந்தார். அலுவலகம் முடிந்து அங்கும் இங்குமாய்ப் பெண்கள் நடந்த வண்ணம் இருந்தனர். கருஞ்சிறகுகள் தனித்தும் சேர்ந்தும் கருமையாய்ச் சிறகடித்தன. உதிர்ந்து நைந்த மல்லிகைக் பூக்களை நெருக்கமான காட்சியில் நிழற்படம் எடுத்துக்கொண்டிருந்தேன்.
சிக்னலைத் தாண்டி வந்த பரிசல் செந்தில்நாதன் வெய்யிலிடம் நூல்கள் கேட்டேன் நூல் வனம் மணிகண்டனிடம் வாங்கிக்கச் சொல்லி விட்டார். பின், ``உன் தம்பி இரண்டு நூல்கள் வேண்டும் என்று காத்திருக்கிறான். நீயென்னடான்னா இல்லை என்று சொல்றீயே'' என்று சொன்னதும் இருங்க வருகிறேன் என்று சொல்லிவிட்டுத் திரும்பி வந்து மூன்று நூல்கள் கொடுக்கிறார். நான் கேட்டேன் இல்லை என்று சொல்லிவிட்டு, நீ இருக்கிற என்றதும் தருகிறார். ரெண்டு பேரும் என்னய்யா நினைச்சிக்கிட்டு இருக்கீங்க என்றார். சரி சரி எனக்கு ஒரு நூல் தாங்க என்று வாங்கி இருவரும் பிரித்துப் பார்த்தோம் மிக நேர்த்தியான வடிவமைப்பும் திக்கான காகிதமும் இடம்பெற்ற பின்னட்டையில் `மொழியின் பிரத்யேக மூக்குத்தியின் வெளிச்சம் இச்சொற்களில் இருக்காது. ஏனெனில் இவை இருளின் வரிகள்' என்று கூறும் மாரி செல்வராஜ் `கலையைக் களத்துக்கு இழுத்துவந்த அண்ணன் பா.இரஞ்சித்துக்கு...' என்று இந்நூலைச் சமர்ப்பணம் செய்துள்ளார். பரிசல் செந்தில்நாதன் வடக்கு திசையை இரு சக்கர வாகனத்திலும் நான் தென் திசையைப் பேருந்திலுமாக விரட்டிச் சென்றோம். வேளச்சேரியில் இறங்குவதற்குள் பாதி நூலை வாசித்துவிட்டேன். கவிதைகளைப் பற்றிப் பிறகு பேசுவோம் டியர்ஸ்.
19.04.2022
செவ்வாய்க்கிழமை
No comments:
Post a Comment