Thursday, April 21, 2022

பலகீனங்களின் மேல் சவாரி செய்யும் சமூகத்தில்

  


நேற்று காலை 3.30 மணியளவில் போதி பிரவேஷ் எழுதிய `தந்த்ரா வழியில் தாம்பத்ய வாழ்க்கை' நூலில் இடம்பெற்ற `பாலின்பத்தின் ஆற்றல்' பகுதியைப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் `பாலின்பம் நிகழும் போது நுண்ணறிவை உருவாக்கும் வேதிகள் சுரக்கின்றன. உச்சக்கட்டப் பாலின்பத்தின் போது சுரக்கும் வேதிகளே நுண்ணறிவை உருவாக்கக் கூடியவை' என்கிற இடம் குறித்துக் கூடுதல் புரிதல் தேவைப்பட்டது. ஆனால், பாலியல் சார்ந்து யாரிடம் பேசுவது என்கிற குழப்பம். பிறரின் பலகீனங்களின் மேல் சவாரி செய்யும் சமூகத்தில் இவ்வாறான உரையாடல் சாத்தியமில்லைதான். இரண்டு மணி நேரம் படித்துவிட்டு, பின்பு 5.30 க்கு மீண்டும் உறங்கச் சென்று விட்டேன். சரியாக 6.45 மணி இருக்கும், உறக்கத்தைத் தட்டி எழுப்பினாள் மகள். கீழறைக்கு வந்ததும் சதுரங்கம் ஆட அழைத்தாள். 

புதிய தலைமுறையில் தலைப்புச் செய்தி கேட்ட படியே காய்களை நகர்த்த ஆரம்பித்தோம். பால் பாக்கெட் வாங்கிக்கொண்டு அம்மாவுடன் படி ஏறிய மகனை அழைத்து அவன் நெஞ்சைத் தொட்டுப் பார்த்தேன். நேற்றெல்லாம் கடுமையான காய்ச்சல். வாந்தி எடுத்ததில் கொஞ்சம் வாடிப் போயிருந்தான். கையில் இருநூறு ரூபாய்தான் இருந்தது. மகனுக்கு எதுவும் ஆகிவிடுமோ என்பதைவிட பெரிய அளவில் மருத்துவச் செலவு வந்தால் யாரிடம் பணம் கேட்பது என்கிற பயம்தான் மேலோங்கி இருந்தது. ஆனாலும் எதுவும் ஆகிவிடாது மகனே கவலைப்படாதே என்று, மருந்துக் கடையில் டானிக்கும் வாந்தி மாத்திரையும் வாங்கிக் கொடுத்திருந்தேன். இன்று வெப்பச் சூடு ஏதுமில்லாதது ஆறுதலாக இருந்தது. விளையாட்டின் ஊடே மனைவி எடுத்து வந்த தேநீரின் சூட்டை ஆற்றினேன். ஆவி பறத்தலைப் பகிர்ந்து பருகினோம். என்னுடைய வழிகாட்டுதல் ஏதுமின்றி முதல் முறை ஆட்டத்தைத் தன்வசமாக்கி வெற்றி பெற்றாள் மகள். நான் அவள் கைகளை இறுகப் பிடித்து வாழ்த்துச் சொன்னேன். அப்பாவை வென்ற மகிழ்ச்சியுடன் மேலறைக்குச் சென்று விட்டாள். 

சற்று நேரத்தில் ஷங்கர் அழைத்து நிதானமான பதில் வணக்கத்துடன் தேநீர் குடிக்கலாமா என வினவினார். வீட்டில் குடித்த தேநீரின் கசப்பு இன்னும் தொண்டைக் குழியில் வடியாமல் கிடந்தது. ஷங்கர் அழைத்தால் செல்லாமல் இருக்க முடியாது. அது ஓர் அதீத அன்பு. அன்பை மறுத்து வேறென்ன செய்யப் போகிறோம் இவ்வுலகில். நடைப்பயிற்சியின் போது இடைவெளி விட்டு இரண்டு கோப்பைத் தேநீர் குடித்ததெல்லாம் பலமுறை நடந்திருக்கிறது. உடனே வருகிறேன் என்றேன். ஜிம் பக்கம் வந்திருங்க என்றார். அவருக்கு முன்பே ஜிம் எதிரே நின்று அழைத்தேன். அப்படியே கீழிறங்கி டீக்கடைக்கு வந்திருங்கள் என்றார். காய்கறிகளை இறக்கும் வேலை, தள்ளுவண்டியில் அடுக்கும் வேலை எனப் பரபரப்பாக இருந்தது தண்டீஸ்வரம் சாலை.

கனரா வங்கி ஏடிஎம் அருகில் இருந்த டீக்கடைக்குச் சென்று லெமன் டீ இருக்கிறதா என்று முன்பே விசாரித்தேன். இல்லை என்ற கடைக்காரர் புதிய நபராக இருந்தார். காய்கறி மூட்டை, கீரைக் கட்டுகள் நடைமேடை மீது கிடைந்தன. கட்டடங்களின் மீது விழுந்த சூரியன் இன்னும் வீதிக்கு வரவில்லை. பூக்கட்டும் மேசையும் பூக்கட்டுபவர் அமர மரப் பலகையும் தயார் நிலையில் இருந்தன. வெள்ளைச் சட்டை, கறுப்பு பேன்ட்டுடன் இரு சக்கர வாகனத்தில் வந்திறங்கிய ஷங்கரின் முகம் க்ளீன் ஷேவிங் செய்யப்பட்டிருந்தது. வாகனங்களின் இரைச்சலினூடே காகங்கள் கரைந்தன. ஜிம்மிற்குச் செல்லும் போது என்ன சட்டையுடன் என்று வினவுவதற்குள் சூர்யா பேசினார். அவருடன் பேசிக்கொண்டிருந்ததால் சட்டையை மாற்றத் தவறிவிட்டேன் என்றார். வெகுநாளாகிவிட்டது சூர்யாவைப் பற்றிப் பேசி எப்படி இருக்கிறார் என்றேன். அடுத்த கவிதைத் தொகுதியை உங்களுக்கு அனுப்பியது போல் அவருக்கும் அனுப்பியிருக்கிறேன். அவர் படித்துத் தன் கருத்தைச் சொன்னதும் வெளியீட்டுக்கான வேலையை ஆரம்பிக்க வேண்டியதுதான் என்றார்.

மொத்தக் கவிதைகளையும் படித்து நான் அவரிடம் பேசிய போது, `இன்னும் கொஞ்சம் கூடுதலாக எழுத வேண்டும், அதற்கு ஒரு வருடம் கூட ஆகலாம்' என்கிற முடிவில் இருந்திருந்தார். இன்று `அந்தத் தொகுப்பு ஏற்கெனவே முடிந்து விட்டது. நானும் மன அளவில் அதிலிருந்து வெளியே வந்துவிட்டேன். பலகீனமாக இருந்தாலும் கொண்டு வந்திடலாம். இனி எழுதப் போவது இந்தத் தன்மையில் இருக்காது. இது தன் நிகழ்வை முடித்துக்கொண்டது' என்று கூறிய போது, சர்க்கரை கம்மியான தேநீர் தயாராகியிருந்தது. மிகவும் மட்டமான சுவையைச் சுட்டியபடி கோப்பையில் வடியும் தேநீரைக் கழுவியோ அல்லது துடைத்தோ கொடுக்காமல் அப்படியே கொடுக்கிறார் பாருங்க என்று சொல்லும் போது கொழுத்த கறுப்பு வெள்ளை நாயொன்று ஷங்கரின் ஷார்ட்ஸை மோந்து பார்த்தது. நாயின் உரிமையாளர் அதட்டினார். மனிதர்களைப் போல் விலங்குகளிடமும் அன்பும் பரிவும் காட்டும் ஷங்கர் நாயின் செயலுக்கு அமைதியாக இருந்தது வியப்பொன்றுமில்லை.     

22.04.2022
வெள்ளிக்கிழமை



No comments:

Post a Comment

  பேச்சுக்குரலில் நவீனப் பட்டினப்பாலை   `கபால நகரம்’ பச்சோந்தியின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பென்று நினைக்கிறேன். அவருடைய முதல் தொகுப்பு, ‘வே...