Tuesday, April 5, 2022

நவீன இலக்கியத்தின் சிந்தனை வறட்சி!?


Texasmonthly


இன்று காலை ஆங்கில இந்து இணையதளத்தில் டி.எம்.கிருஷ்ணாவின் `செபாஸ்டியனின் குடும்பக் கலை', `கர்னாடக இசையின் கதை' இரண்டு நூல்களின் வெளியீட்டு நிகழ்வின் செய்தியைப் பார்த்தேன். மைலாப்பூரில் இந்நிகழ்வு நடைபெற்றதை அறிந்தும் செல்லவில்லை. இப்போதெல்லாம் இலக்கிய நிகழ்வுக்குச் செல்வதென்பதே மிகவும் அயர்ச்சியூட்டுகிறது. இலக்கியக் கூட்டங்களெங்கும் ஏற்கெனவே அழைத்த `அந்த மூன்று பேரை' யே திரும்பத் திரும்ப அழைப்பது சிந்தனை வறட்சி செழித்தோங்கியதையே காட்டுகிறது. ஒருவரும் நூலைப் படிப்பதில்லை; நுனிப்புல் கணக்காய் மேய்ந்தாலும் அதைப் பற்றியும் பேசாமல் ஏற்கெனவே கற்றறிந்த அறிவைக் கொட்டுவதற்குள் துண்டுக் காகிதத்தை நீட்டி விடுகிறார்கள். காகிதம் நம்மைக் காப்பாற்றிவிட்டது என்று நினைக்கத் தோன்றுகிறது. நிகழ்ச்சிக்குச் செல்லாமல் இருப்பதற்கு இன்னொரு முக்கியக் காரணம் ஸ்ருதி டிவி. சுடச் சுடக் கேட்க முடிகிறது. க்ளிக் செய்தால் ஓரிரு நிமிடங்களில் முக்கிய உரையா அல்லது மொக்கை உரையா என்று கண்டு பிடித்து விடலாம். 

டி.எம்.கிருஷ்ணா நேர்காணல், உரை எதுவாக இருந்தாலும் கேள்வியாளரையே கேள்வி கேட்டல், மரபான விசயங்களைக் கட்டுடைத்தல், எதற்கும் அஞ்சாது கருத்துரைக்கும் அவரின் துணிச்சல் இதற்கு எல்லாம் பின்னணியாக இருக்கும் சமுதாயப் பின்புலம் என்று சொல்லும் சுய மதிப்பீடு என நிறையச் சொல்லலாம். எனவே, மேற்கண்ட நிகழ்வு சம்பந்தமான வீடியோ இருக்குமா என்று யுடியூபில் தேடிப் பார்க்க முற்பட்ட போது நக்கீரனின் முகம் தென்பட்டது. இன்று பதிவேற்றப்பட்டது என்பதைக் கண்டதும் மிகவும் ஆவல் எழுந்தது. மிகச் சமீபத்தில் திருப்பத்தூரில் நடைபெற்ற புத்தகக் காட்சியில் உரையாற்றியது. நிகழ்ச்சிக்கு அழைத்த பார்த்திபராஜா `இலக்கியத்தையும் பேச வேண்டும் சூழலியலையும் பேச வேண்டும்' என்று கேட்டுக்கொண்டதாகக் கூறியிருந்தார். இரண்டாண்டுகளுக்கு முன்பு இவர் பேசிய `சூழலியல் சாதியம்' என்னும் உரை மிகப் பெரிய தாக்கத்தை உண்டாக்கியது. 

சங்க இலக்கியத்தில் என்ன மரம், மரத்தின் உயரம், இலையின் வடிவம், பூக்கள் பூத்திருக்கா இல்லையா, என்ன பறவை, எப்படிக் கூவியது இப்படியான விவரணைகள் நிறைந்து இருக்கும். ஆனால், கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு இலக்கியத்தில் `மரத்தில் ஒரு பறவை இருந்தது அல்லது பெயரே தெரியாத பறவை' என்றவாறு இடம் பெற்றிருக்கும். நீண்ட பரம்பரையைச் சேர்ந்த நாம் இவ்வாறான சூழலியல் அறிவுக்குத்தான் நகர்ந்து வந்திருக்கிறோம் என்று தன் உரையைத் தொடங்குகிறார் நக்கீரன்.

இன்றைய ஊடகங்கள் எவ்வாறு மேம்போக்காகச் செய்திகளைக் கட்டமைக்கின்றன என்பதைச் சொல்லும் நக்கீரன் அதனூடாகப் பறவைகள் வலசை செல்வது வடக்கிருந்தும் தெற்கும் தெற்கிலிருந்தும் வடக்குமாக என்கிற தர்க்கப் பூர்வமான ஒன்றைப் பகிர்கிறார். இத்தனை சாட்டிலைட் வைத்திருக்கும் ஊடகங்களுக்குத் தெரியாத இந்த அறிவியல் பசியோடும் பட்டினியோடும் கிடந்த சங்கப் புலவனுக்குத் தெரிந்திருக்கிறது என்றார். நக்கீரனின் மேற்கோள்கள், முன்வைக்கும் தரவுகள், உண்டாக்கும் சொற்கள் எல்லாம் தர்க்கப்பூர்வமானவை. இவற்றில் சூழலியலும் அறிவியலும் இரண்டரக் கலந்திருக்கும்.  

15 கோடி ஆண்டுகள் வாழ்ந்த டைனோசர் இன்று தொல் எச்சங்களாக எஞ்சிக் கிடக்கின்றன. சில லட்சம் ஆண்டுகளாக வாழ்ந்துகொண்டிருக்கும் மனித இனம் என்னவாகும்? நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சக்கர நாற்காலியில் அமர்ந்த படி சிந்தித்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் ``இன்னும் நூறு ஆண்டுகளில் இந்தப் பூமி வாழத் தகுதியற்றதாக'' மாறிவிடும் என்கிறார். இதைத்தான் தொல்குடி தாயான ரேச்சல் கார்சனும் சொல்கிறார். இருவரும் இயற்கையைப் புரிந்து வைத்திருக்கிறார்கள். ``நாம்தான் வெல்வோம்'' என்கிற மனிதமையத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம் என்கிறார் நக்கீரன். ஆம் சூழலியலைப் புரிந்துகொள்வதற்கு முன் சக மனிதரைப் புரிந்துகொள்வோம். சக மனிதரைப் புரிந்து நடக்கும் போது பிரபஞ்சத்தின் பிடிபடாத அத்தனையும் புலப்படும். காதல், காமம், தனிமை, குடும்பம், பால்யம் இப்படியான தருணங்கள்தான் பெரும்பாலும் இலக்கியமாகப் படைக்கப்படுகின்றன. இவற்றிலிருந்து துண்டிக்கப்பட்ட அரிதான குரல் நக்கீரனுடையது. தனித்துச் செல்லும் அவரின் தடத்தை எண்ணற்ற கால்கள் இனிப் பின்பற்றும். 

05.04.2022
செவ்வாய்க்கிழமை

No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...