நீடித்த நட்பு எவ்வளவு அசாத்தியமானதோ அதேபோல்தான் ஷங்கரிடமிருந்து கருத்தை அறிந்துகொள்வதும். அவ்வளவு எளிதாக எதற்கும் உடனடியாக எதிர்வினையாற்ற மாட்டார். முதலில் மனிதர்களைப் படிப்பார் ; அவர்களின் பண்பு நலன்களை, நடத்தையை, பழகும் விதத்தை, அவர்களின் கருத்தியலை இப்படியான படிநிலைகளில் தேறியவர்களிடம்தான் நட்பு பாராட்டுவார். இது அவரின் பலம் மட்டுமல்ல ; அவரே அறிந்த பலவீனமும்கூட. எனக்கும் அவருக்குமான நட்பு சண்டையில்தான் ஆரம்பித்தது. அவரிடமிருக்கும் அறம், கசடுகளைச் சற்றென்று களைந்தெடுத்துவிட்டு பேரன்பைப் பொழிய ஆரம்பிக்கும். அந்த அறம்தான் எங்களின் உறவைக் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறது.
கருணா பிரசாத் கட்டுரை குறித்துத் தன் கருத்தைப் பகிர்ந்துகொள்வதற்காக
நேற்று மாலை ஷங்கர் அழைத்திருந்தார். உடல் நிலை சரியில்லாமல் இன்று வீட்டில்தான் இருந்தேன் என்று அவர் சொன்னதும் மாலை உங்களைப் பார்க்க வருகிறேன் என்றேன். கட்டுரையைப் படித்தேன், சிவாஜி படம் பார்த்தது போல் கடுமையான உருக்கம். மொழி என்பது காதலியைப் போல், வேற வேற இடங்களைப் பரிச்சயப்படுத்த வேண்டும். மொழியைத் தவிர பகிர நம்மிடம் என்ன உண்டு என்றார்.
இலக்கியம், சினிமா, ஆவணப்படம், மருத்துவம், அறிவியல் எனப் பல்துறையில் அவ்வப்போது நிகழும் மாற்றங்களை, வளர்ச்சியைப் பற்றி ஒவ்வொரு சந்திப்பின் போதும் ஷங்கர் பேசுவார். அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் பார்த்து வரலாம் என்று புறப்பட்டேன். வருகிறேன் என்றதும் ரயிலில் வந்தால் சீக்கிரம் வந்திடலாம் என்று ஆலோசனை கூறியிருந்தார். இங்கிருந்து புறப்படும் போதே இருட்டத் தொடங்கிவிட்டது. தினமும் பேருந்துப் பயணம் என்பதால் 1,000 ரூபாய் பஸ் பாஸ் வைத்திருப்பேன். கையில் காசு இருக்கிறதா, இல்லையா என்று யோசிப்பதில்லை. பையில் தடவிப் பார்த்தேன் சட்டைப் பையில் 6 ரூபாய் இருந்தது. திருவல்லிக்கேணியில் இருந்து வேளச்சேரி செல்ல டிக்கெட் விலை 5 ரூபாய்தான். என்னிடமிருந்த 6 ரூபாய் மிகவும் நம்பிக்கை கொடுத்தது.
வாலாஜா சாலையின் நடுவில் உள்ள புல்வெளியின் கம்பிகளைத் தாண்டும் போதே 2A பேருந்து வந்து நின்றது. விரைந்த வாகனங்களின் வெளிச்சத்திற்கு வழிவிட்டு ஒருவழியாகப் பேருந்தில் ஏறிவிட்டேன். ஒயிட் போர்டு என்பதால் பேருந்தும் இருட்டித்தான் இருந்தது. கண்ணகி சிலையில் இறங்கிச் செல்லலாம் என்றிருந்த மனம் கோஸா மருத்துவமனையில் இறங்கியது. பழைய புத்தகக் கடைகள் தெருவிளக்கில் ஒளிர்ந்தன. மாட்டான் குப்பம் வழியாக திருவல்லிக்கேணி ரயில் நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தேன். கருவாடு வாசனை கமகமத்தது. பஜ்ஜி சுடுவதை, பூக்கட்டுவதை வேடிக்கை பார்த்தபடியே சென்றேன். சுவரில் மஞ்சள் நிறத்தின் மீது கறுப்பில் PCO என்று எழுதியிருந்தது. அம்மூன்றெழுத்து எதை எதையோ நினைவுப்படுத்தின. மாட்டுத் தொழுவத்தைச் சுவாசித்து ரயில் நிலையப் படிக்கட்டுகளில் ஏறினேன்.
டிக்கெட் கவுன்டரில் எனக்கு முன்பு 2 பேர்தான் நின்றிருந்தனர். சீக்கிரம் டிக்கெட் வாங்கிக்கொண்டு `கண்ணில் ரெண்டு நூறு வெண்ணிலாக்கள் தோன்றும் ஆனாலும் அனல் பாயும்' பாடலைப் பாடிய படி நடைமேடைக்குச் சென்றேன். ரயில் நிலையக் கூரை நீலம், பச்சை, மஞ்சள் நிறங்களால் வண்ணமயமாய் இருந்தது. `வேளச்சேரி மார்க்கம்' என்ற எழுத்துகளின் மீது மின் விசிறி சுழன்றது. சற்று நேரத்தில் தண்டவாளத்தில் இரண்டு முழு நிலவுகள் ஒளிர்ந்த படி நகர்ந்து வந்தன. நான் ஒளியின் மீது சவாரி செய்தேன். `RAILWAY HELPLINE NUMBER 139', `புகைப்பிடிக்கக் கூடாது' எனக் கரும்பலகையில் பொறிக்கப்பட்டிருந்தன. `எண்ணத்தில் சிவனை வைத்தால் எடுத்த காரியம் வெற்றியாகும்' என்னும் ஸ்டிக்கர் மேற்புரம் ஒட்டப்பட்டிருந்தது. `VACCINES FOR ALL FREE FOR ALL' என்கிற ஸ்டிக்கரில் நீண்ட வெண்தாடிக்குள் ஸ்மைல் செய்தார் நரேந்திர மோடி. அதன் கீழ் `மாந்திரீகப் பாதிப்பு குணமாக்கப்படும்' விளம்பரம் பாதி கிழிந்திருந்தது. அடர் வெளிச்சத்திலிருந்து இரு நிலவுகள் இருட்டை நோக்கிப் பாய்ந்தன. தூரத்துக் கண்ணாடி மாளிகையைக் கடந்து பறந்தது ரயிலின் நிழல்.
முண்டகக் கண்ணியம்மன் நிறுத்தத்திலிருந்து புறப்பட்ட ரயில் பாம்பைப் போல் வளைந்து நெளிந்தது. இறங்குமிடத்தில் நின்றிருந்தேன், என் எதிரில் பதின்பருவ ஜோடிகள் ஒருவரை ஒருவர் அணைத்த படி நின்றிருந்தனர். இருவருக்கும் வயிறு இல்லாதது போல் இருந்தது. மிகவும் ஒல்லியான உருவங்கள். வருடுதலும் உரசுதலும் இணை பிரியாமல் ஒட்டி உலாவினர். அருகே வட நாட்டைச் சேர்ந்தவர்களைப் போல் இரு பெண்மணிகள் குழந்தைகளுடன் கீழே அமர்ந்திருந்தனர். ஓடும் ரயிலின் ஓரத்தில் தள்ளாடி நடந்தது ஓர் குழந்தை. எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவர்களில் ஒரு பெண் இந்த மாதச் சம்பளம் 8,836 ரூபாய் போட்டுவிட்டார்கள் என்றார். கையில் இருந்த பச்சை, சிவப்புப் பீப்பி தாய், பிள்ளையை மாறி மாறி ஊதியது. இன்னோர் பெண்ணின் ஓரக் கண்கள் ஒல்லி ஜோடிகளைப் பார்த்து வெடுக்கெனப் பிடுங்கிக்கொண்டன. கறுப்பு நிறக் கண்ணாடி தவறி விழுந்தது தெரியாமல் கொஞ்சல் தொடர்ந்தது.
சமோசா வடிவில் எஞ்சியிருந்த
பெருங்குடி ஏரியைக் கடந்து நிறுத்தத்தில் இறங்கினேன். Back to nature save future என்னும் சொற்கள் பொறித்த ஓவிய மரத்தில் ஒளிரும் கட்டடங்களும் விரையும் வாகனங்களும் படுக்கை அறைகளும் இவற்றைச் சுற்றிப் பச்சை இல்லைகளுமாய் இருந்தன. அதன் வேர் இரண்டு கோடரிகளின் ஓங்குதலில் சாய்ந்துகொண்டே இருந்தது.
பெருங்குடி ரயில் நிலையத்தின் வெளியே சற்று தூரம் சென்றதும் மஞ்சள் வெளிச்சம் அணைந்தது. வாகனங்களின் வெளிச்சத்தில் இருட்டு வடிவில் மனிதர்கள் நடமாடினர். அவ்வடர் இருட்டில் ஓர் பெண் செல்போன் வெளிச்சத்தில் தன்னை மூழ்கடித்தபடி நடந்து செல்கிறாள். நான் மீண்டும் பாடத் தொடங்கினேன் `கண்ணில் ரெண்டு நூறு வெண்ணிலாக்கள் தோன்றும் ஆனாலும் அனல் பாயும்'.
01.04.2022
வெள்ளிக்கிழமை
No comments:
Post a Comment