இன்று காலை 6.45 மணியளவில் நடைப்பயிற்சி செல்லப் புறப்பட்டேன். அப்போது ஷங்கரைப் பார்த்து நீலம் மார்ச் இதழ் தரலாமே என்று தோன்றியது. தகவல் தெரிவித்துவிட்டுப் போகலாம் என்று அழைத்தால் அவரின் எண் அணைத்துவைக்கப்பட்டிருந்தது. எப்படியும் எழுந்துவிடுவார் என்று கையில் இதழை எடுத்துக்கொண்டேன். M70 பேருந்தில் ஏறி பேபி நகர் நிறுத்தத்தில் இறங்கினேன். கிட்டத்தட்ட 90 களிலிருந்தே வேளச்சேரி அறிமுகம் என்றாலும் விஜய நகருக்கு அடுத்து முதலில் வருவது பேபி நகரா, டான்ஸி நகரா என்கிற குழப்பம் நீண்ட காலமாகவே இருந்து வந்தது. சமீபத்தில் அக்குழப்பம் தீர்ந்துவிட்டது. மர்பிதாஸ் சாலை நடை மேம்பாலத்தில் ஏறினால் பேபி நகர் 2 வது பிரதான சாலையில் இறங்கிவிடலாம். வள்ளுவர் தெரு, கம்பர் தெரு, பாரதி தெரு, வாஞ்சிநாதன் தெரு ஆகிய தெருக்களைக் கடந்து செல்லும் போது காய்ந்த வேப்ப இலைகள் நடனமிட்டபடி உதிர்ந்தன. குப்பைத் தொட்டியின் முன்னே அப்போதுதான் வெட்டப்பட்ட நாரத்தை மரம் துண்டு துண்டாகக் கிடந்தது. அருகில் துப்புரவுப் பணியாளர் செல்போனைக் கண்ணுக்கு அருகில் வைத்துக் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார். ஞாயிற்றுக்கிழமை என்பதால் மனித நடமாட்டம் மிகக் குறைவாகக் காணப்பட்டது. சுருக்கமான தோலினைக்கொண்ட பெண் வாசலின் ஈரத்தில் குனிந்து கோலம் போட்டுக்கொண்டிருந்தார். மிச்சமுள்ள புள்ளிகளையும் புள்ளிகளை விழுங்கிய கோடுகளையும் பார்த்தவாறு ஷங்கரின் வீட்டை நெருங்கினேன்.
Sunday, March 6, 2022
நீங்களும் மாஸ்டர்தான் ஷங்கர்
Friday, March 4, 2022
ரத்த உறவா, தாய்மையா, காதலியா
அரும்பாக்கம் ஸ்கைவாக் வணிக அங்காடியில் உள்ள திரையரங்கிற்கு Jhund படம் பார்க்கச் செல்கிறேன் வருகிறீர்களா என்றார் நண்பர் நவீன். வீட்டில் பேசிவிட்டு அழைக்கிறேன் என்றேன். அப்போது அண்ணன் மகன் அவினாஷுடன் சதுரங்கம் ஆடிக்கொண்டிருந்தேன். அன்று காலை ஊரிலிருந்து வந்திருந்த அத்தை மகளைக் காண மாலை வந்திருந்தான். அவனை வெல்லும் முனைப்பில் இருந்ததால் நவீன் அழைத்ததை மறந்துவிட்டேன். மீண்டும் அழைத்த நவீன் திரையங்கின் உள்ளே வந்துவிட்டேன் நீங்கள் வருவதாக இருந்தால் டிக்கெட் எடுப்பேன் என்றார். காய்களை நகர்த்தியவாறே வந்துவிடுகிறேன் என உறுதியளித்தேன். 10.35 க்குத் திரையிடல். படம் முடிந்து எப்படி வீட்டுக்குச் செல்வது கேட்ட போது, இதுவரைக்கும் அதையெல்லாம் யோசித்தா படம் பார்க்க வந்திருக்கிறோம், வாங்க நண்பா என்றார். வீட்டுக்கு வந்த விருந்தினரிடமும் மனைவி பிள்ளைகளிடமும் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டேன்.
Thursday, March 3, 2022
அடிச்சுத் துவைச்சுக் காயப்போடுவோம்
குளித்துச் சாப்பிடுவதற்காக மேற்கு ஜன்னலோரம் அமர்ந்தேன். அருகே இருந்த மகளின் மடியில் தூக்கம் வருதும்மா என்று தலைவைத்தேன். சற்று நேரத்தில் தலையிலிருந்து தன்னை உருவிக்கொண்டாள். பின்பு, தரையில் படுத்திருந்த மகனின் மண்டை மீது தலைவத்தேன். அவன் ராட்டினம் போல் சுற்றினான். பின்பு நெஞ்சின் மீதுவைத்தேன். அவனை அள்ளிக் கோழிக்குஞ்சு மாதிரி இருக்க, உன்னை அடைப்பதற்குப் பள்ளிக்கூடத்தில் பஞ்சாரம் இருக்கிறதா என்றேன். இல்லை, நீங்க வேண்டுமானால் பஞ்சாரத்தைச் செய்து கொடுங்க என்றான். கழுத்தை இறுக்கி மண்டையிலும் முதுகிலும் கும்மு கும்மென்று மெதுவாய்க் குத்தினேன். சரி, சாப்பிட்டு வாங்க பள்ளிக்கூடம் கிளம்ப நேரமாகிவிட்டது என்றான். என்னடா எப்பவும் அழுதுகிட்டே இருப்பான், இன்று இவ்வளவு கம்பீரம் கூடியிருக்கிறதென்று ஆச்சரியமாக இருந்தது. என்ன விசயம் என்றேன். இன்று 12 மணி வரைக்கும்தான் பள்ளிக்கூடம் என்றான். இருவரும் என்னை அழைத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்றனர். இந்து அத்தைக்கு, அபி, மணிக்கு டாடா சொல்லுங்கள் என்றேன். டாடா....
கிடைமட்ட வானம்
இப்போதெல்லாம் பள்ளி மாணவரைப் போல் நடுநிசியில் எழுந்து படிக்க ஆரம்பித்துள்ளேன். நடுநிசி, அதிகாலை மட்டுமல்ல எப்போது விழிப்பு வருகிறதோ அப்போதெல்லாம். இன்று 3:30 மணிக்கு எழுந்து வெவ்வேறு மூன்று புத்தகங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகப் படித்தேன். அதிகாலையில் முகம் கழுவ மேலே சென்றபோது, மல்லிகை மணத்துடன் பாத்ரூமில் இருந்து வந்த மனைவியிடம் கதவைச் சாத்திவிடாதே என்று பவ்யமாகச் சொல்லும் போது கொஞ்சம் சிரித்துவிட்டாள். ச்சே!!! ராத்திரி மேலயே தூங்கியிருக்கலாம் என்கிற ஏக்கம் ஒட்டிக்கொண்டது.
Tuesday, March 1, 2022
பிள்ளைகளாவது...
பஜனை கோயில் தெருவில் மகளுடன் நடந்து சென்றேன். அவளைப் பள்ளியில் விட.
அப்பா ஸ்நாக்ஸ் வேண்டும் என்றாள். முடியாது என்று இரண்டு முறை சொல்லியும் பிடிவாதமாய் நின்றாள். சரி, என்ன வேண்டும் என்றேன். நானே எதிர்பார்க்காத அளவில் முந்திரிப் பருப்பு என்றாள். உடனே பத்து ரூபாய் கொடுத்து வாங்கிக் கொள் என்றேன். பள்ளியில் சென்று திங்காமல் என் முன்னே இப்போதே தின்றால் இன்னொன்று வாங்கிக் கொடுப்பேன் எனச் சொல்ல உடனே அதன் பாலித்தீன் உறையைப் பல்லில் கிழித்து இழுக்க முயற்சி செய்தாள். அதை வாங்கி இப்படிக் கிழித்தால் வந்துவிடும் என்று கிழித்துப் பார்த்தேன், என்னாலும் முடியவில்லை. பின்பு பல்லைதான் பயன்படுத்தினேன். தின்றுகொண்டே இவ்வாறு கேட்டாள், நான் முந்திரிப் பருப்பு தினமும் தின்றால் என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுப்பியாப்பா. கண்டிப்பாக. நீ சிறு குழந்தையாக இருக்கும் போதெல்லாம் முந்திரியும் பேரிச்சையும் எப்போதும் வீட்டில் இருக்கும் நீயும் நன்றாகச் சாப்பிடுவாய். இப்போதுதான் அவற்றை மறந்துவிட்டாய். மேலும், உலர்ந்த திராட்சையும் சாப்பிடலாம் என்றேன். உலர்ந்த திராட்சை என்றால் என்னப்பா. திராட்சைப் பழங்களை வெய்யிலில் காயவைக்க வேண்டும், துவைத்த துணியைக் காயவைப்பது போல். அவ்வாறு காயும் போது பழத்தோல் சுருங்கும். அதுதான் உலர்ந்த திராட்சை. ஓஹோ அப்படியா என்றாள்.
பேருதான் நல்லதம்பி தெரு
Monday, February 28, 2022
பசியற்ற வயிறும் பசியுற்ற உடலும்
அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்ததும் வாசலில் நின்றவாறே, சுவரோரமிருந்த பழுதுற்ற தொலைக்காட்சிப் பெட்டின் அருகில் பையை வைத்தேன். மனைவி, மகன் இருவரும் கட்டிலில் அமர்ந்திருந்தனர். மகள் நின்றுகொண்டிருந்தாள். கைகால் கழுவச் சோப்பைத் தேடினேன். எப்போதும் வெளியிலிருக்கும் வெளிரிய ட்ரம் மீதுதான் இருக்கும். சில நேரத்தில் சிறிய மென்நீல வாளியில் துணி சோப்பு, பேஸ்ட், பிரஸ்களோடு கலந்திருக்கும். அம்மா இன்று சேலை கட்டினார் என்றாள் மகள். முதலில் மகிழ்ச்சியாக இருந்தாலும் சற்றெனக் கோபம் வந்து உங்க அம்மா சேலை கட்டினால் எனக்கென்ன கட்டாவிட்டால் என்னக்கென்ன என்றேன். மகளின் முகம் சுருங்கியதைக் கண்டேன். பையை உள் வைக்கும் போது நைட்டிதான் கட்டியிருந்தாள். ஆனால், அழுக்கு நைட்டியல்ல.
பேச்சுக்குரலில் நவீனப் பட்டினப்பாலை `கபால நகரம்’ பச்சோந்தியின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பென்று நினைக்கிறேன். அவருடைய முதல் தொகுப்பு, ‘வே...
-
Pinterest நேற்று மாலை அலுவலகம் முடிந்ததும் நண்பர் செந்தில்குமாரைச் சந்திக்கச் சென்றேன். இவர் திருவல்லிக்கேணியில் உள்ள பைகிராஃப்ட் சாலை நடைமே...
-
பேச்சுக்குரலில் நவீனப் பட்டினப்பாலை `கபால நகரம்’ பச்சோந்தியின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பென்று நினைக்கிறேன். அவருடைய முதல் தொகுப்பு, ‘வே...
-
நேற்று இரவு கீழறைக்கு உறங்கச் சென்றேன். பிள்ளைகளில் யாராவது ஒருவரை உங்களுடன் அழைத்துச் செல்லலாம் அல்லவா. காலையில் இருந்து கூடவே இருக்காங்க, ...