Thursday, March 3, 2022

அடிச்சுத் துவைச்சுக் காயப்போடுவோம்


குளித்துச் சாப்பிடுவதற்காக மேற்கு ஜன்னலோரம் அமர்ந்தேன். அருகே இருந்த மகளின் மடியில் தூக்கம் வருதும்மா என்று தலைவைத்தேன். சற்று நேரத்தில் தலையிலிருந்து தன்னை உருவிக்கொண்டாள். பின்பு, தரையில் படுத்திருந்த மகனின் மண்டை மீது தலைவத்தேன். அவன் ராட்டினம் போல் சுற்றினான். பின்பு நெஞ்சின் மீதுவைத்தேன். அவனை அள்ளிக் கோழிக்குஞ்சு மாதிரி இருக்க, உன்னை அடைப்பதற்குப் பள்ளிக்கூடத்தில் பஞ்சாரம் இருக்கிறதா என்றேன். இல்லை, நீங்க வேண்டுமானால் பஞ்சாரத்தைச் செய்து கொடுங்க என்றான். கழுத்தை இறுக்கி மண்டையிலும் முதுகிலும் கும்மு கும்மென்று மெதுவாய்க் குத்தினேன். சரி, சாப்பிட்டு வாங்க பள்ளிக்கூடம் கிளம்ப நேரமாகிவிட்டது என்றான். என்னடா எப்பவும் அழுதுகிட்டே இருப்பான், இன்று இவ்வளவு கம்பீரம் கூடியிருக்கிறதென்று ஆச்சரியமாக இருந்தது. என்ன விசயம் என்றேன். இன்று 12 மணி வரைக்கும்தான் பள்ளிக்கூடம் என்றான். இருவரும் என்னை அழைத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்றனர். இந்து அத்தைக்கு, அபி, மணிக்கு டாடா சொல்லுங்கள் என்றேன். டாடா....

இன்றைக்கு இருவருக்கும் முந்திரிப் பருப்பு வாங்கிக் கொடுத்தேன். கைப்பிடித்திருந்தும் இருவருக்கும் பின்னாடி வந்தவனை, ``என்னடா வண்டி பின்னோக்கியே போகுது அடுத்த கீரைப் போடு'' என்றேன். ஒரு தாவு தாவி எல்லா வண்டியும் பின்னாடி பின்னாடி போகுது என்றான். ``தம்பி, இனிமே நீ அழமால் இருக்கணும். அப்பா சம்பளம் வாங்கியதும் நம்ம ஊருக்குப் போயி ஒன்றரை மாதம் அங்கேயே இருப்போம்'' என்றாள். அதற்கு, ``ரெண்டரை மாதம் இருப்போம். அப்புறம் பள்ளிக்கூடம் ஆரம்பிக்கும் போது வருவோம். அப்பா நீங்களும் எங்கள் கூட வந்து ஜாலியா இருக்கணும்'' என்றான். பிறகு, பெரிய விளையாட்டு மைதானம் இருக்கும் பள்ளிக்கூடத்தில் சேர்ந்திடுவோம் எனச் சொல்லி முடிப்பதற்குள், அங்கு நான் வர மாட்டேன் இங்கேயேதான் படிப்பேன் என்றாள். ஏம்மா என்றதும் என்னை அடித்துத் துவைச்சுக் காயப்போட்டு விடுவார்கள் என்றாள். ஊருக்கு வந்தால் ஊரு சுத்துவதுதான் எனக்கு ஒரே வேலை என்றும் சொன்னாள்.

ராஜலஷ்மி பள்ளிக்கூடம் தாண்டிச் செல்லும் போது, ``தூரத்தில் ப்ரௌன் கலர் பையைச் சுமந்து ஒரு பெண் செல்கிறாள் அல்லவா, அவள் என்கூடதான் படிக்கிறாள் என்றாள். என்ன பெயர் என்றதும், மன்னிக்கவும் பெயர் தெரியவில்லை.நாளைக்குக் கேட்டு வந்து சொல்கிறேன்'' என்றாள். அப்பா, தம்பியை அவன் வகுப்பறையில் விட்டு விட்டு, அப்புறம் நான் என் வகுப்பறைக்குச் செல்கிறேன் என்றாள். நான் உங்கள் இருவரையும் வாசலிலே விட்டுவிடுகிறேன் என்றேன். வாசலில் மட்டும் நீங்க விட்டீங்க.... என்று இழுத்தாள். என்னம்மா செய்வ? ``ம்ம்ம்ம் அடிச்சுத் துவைச்சுக் காயப்போட்டுருவோம்'' என்று இருவரும் ஒரு சேரச் சொன்னார்கள். சரி சரி மாஸ்க் போடுங்க பள்ளிக்கூடத்தின் பக்கத்தில் வந்துவிட்டோம். பெரிய வகுப்பு மாணவர்களின் வரிசைக்குப் பின் சென்ற படி இருவரும் திரும்பிப் பார்த்துக் கையசைக்க, எப்போதும் கொடுக்கும் ப்ளைன் கிஸ் ஒன்று என்னை நோக்கியும் மற்றொன்று அவளை நோக்கியும் பறந்தவண்ணமிருந்தன...

03.03.2022
வியாழக்கிழமை 

No comments:

Post a Comment

  பேச்சுக்குரலில் நவீனப் பட்டினப்பாலை   `கபால நகரம்’ பச்சோந்தியின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பென்று நினைக்கிறேன். அவருடைய முதல் தொகுப்பு, ‘வே...