Tuesday, March 1, 2022

பிள்ளைகளாவது...


பஜனை கோயில் தெருவில் மகளுடன் நடந்து சென்றேன். அவளைப் பள்ளியில் விட. 

அப்பா ஸ்நாக்ஸ் வேண்டும் என்றாள். முடியாது என்று இரண்டு முறை சொல்லியும் பிடிவாதமாய் நின்றாள். சரி, என்ன வேண்டும் என்றேன். நானே எதிர்பார்க்காத அளவில் முந்திரிப் பருப்பு என்றாள். உடனே பத்து ரூபாய் கொடுத்து வாங்கிக் கொள் என்றேன். பள்ளியில் சென்று திங்காமல் என் முன்னே இப்போதே தின்றால் இன்னொன்று வாங்கிக் கொடுப்பேன் எனச் சொல்ல உடனே அதன் பாலித்தீன் உறையைப் பல்லில் கிழித்து இழுக்க முயற்சி செய்தாள். அதை வாங்கி இப்படிக் கிழித்தால் வந்துவிடும் என்று கிழித்துப் பார்த்தேன், என்னாலும் முடியவில்லை. பின்பு பல்லைதான் பயன்படுத்தினேன். தின்றுகொண்டே இவ்வாறு கேட்டாள், நான் முந்திரிப் பருப்பு தினமும் தின்றால் என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுப்பியாப்பா. கண்டிப்பாக. நீ சிறு குழந்தையாக இருக்கும் போதெல்லாம் முந்திரியும் பேரிச்சையும் எப்போதும் வீட்டில் இருக்கும் நீயும் நன்றாகச் சாப்பிடுவாய். இப்போதுதான் அவற்றை மறந்துவிட்டாய். மேலும், உலர்ந்த திராட்சையும் சாப்பிடலாம் என்றேன். உலர்ந்த திராட்சை என்றால் என்னப்பா. திராட்சைப் பழங்களை வெய்யிலில் காயவைக்க வேண்டும், துவைத்த துணியைக் காயவைப்பது போல். அவ்வாறு காயும் போது பழத்தோல் சுருங்கும். அதுதான் உலர்ந்த திராட்சை. ஓஹோ அப்படியா என்றாள்.

வழக்கமாக `வண்டி எப்போ வாங்குவோம்' என்கிற இடம்வந்ததும் இன்னும் இரண்டு நாளில் உங்களுக்குச் சம்பளம் போட்டுவிடுவார்கள் அல்லவா என்றாள். எண்ணிப் பார்த்து இன்னும் மூன்று நாட்கள் இருக்கின்றன, சரி இன்னொரு முந்திரிப் பாக்கெட் வாங்கிக் கொடுக்கவா என்றேன். முதலில் வாங்கியதையே இன்னும் தின்னும் முடிக்கவில்லை என்பதை அவள் சொல்லித்தான் தெரிந்துகொண்டேன். அப்பா, இந்த இடத்தில் ரயில்வே ஸ்டேஷன் வாசனை அடிக்கிறது அல்லவா. நுகர்ந்து பார்த்து மருத்துவமனை வாசனைதானே அடிக்கிறது என்றேன். இல்லை எனக்கு ரயில்வே ஸ்டேஷன் வாசனைதான் அடிக்கிறது என்றாள். முன்பொரு முறை இதே வாசனை அடித்ததைச் சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது. பின்பு, அப்பா `கிளை' என்றால் என்ன?. திரும்பிப் பார்த்தேன், இந்தியன் வங்கியில் கிளை என்று இருந்தது. இதுவரை மரம், செடி, நிறங்களைச் சுட்டிக் காட்டித்தான் கேள்வி கேட்பாள் முதல் முறையாக மொழி குறித்து அதுவும் அவளாக எழுத்துக் கூட்டி வாசித்து கேட்டது கொஞ்சம் சிலிர்ப்பாகத்தான் இருந்தது. மரத்தில் ஒரு வேரும் அதற்கு மேல் பல கிளைகளும் இருக்குமல்லவா, அப்படி வேரைப் போன்று இந்தியன் வங்கிக்கு ஒரு இடத்தில் Head Office இருக்கும். பிற ஊர்களில் இருக்கும் இதே வங்கிகளை கிளை என்று சொல்லலாம் என்று முடிப்பதற்குள் சரி சரி புரிந்தது, அது ஆபீஸ் இல்லை ஆஃபீஸ் என்றாள். இரண்டு முறைச் சொல்லிப் பார்த்தேன். இல்லை ஆஃபீஸ் என்று சொல்லி உங்களுக்குச் சுத்தமா வரலை என்றாள். 

தமக்கு வராதவை, தாம் அடையாதவை தம் பிள்ளைகளுக்காவது கிடைக்க வேண்டுமென்று தானே காலந்தோறும் ஒவ்வொரு பெற்றோரும் விரும்புகின்றனர்.  

02.03.2022
புதன்கிழமை   

No comments:

Post a Comment

  பேச்சுக்குரலில் நவீனப் பட்டினப்பாலை   `கபால நகரம்’ பச்சோந்தியின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பென்று நினைக்கிறேன். அவருடைய முதல் தொகுப்பு, ‘வே...