அரும்பாக்கம் ஸ்கைவாக் வணிக அங்காடியில் உள்ள திரையரங்கிற்கு Jhund படம் பார்க்கச் செல்கிறேன் வருகிறீர்களா என்றார் நண்பர் நவீன். வீட்டில் பேசிவிட்டு அழைக்கிறேன் என்றேன். அப்போது அண்ணன் மகன் அவினாஷுடன் சதுரங்கம் ஆடிக்கொண்டிருந்தேன். அன்று காலை ஊரிலிருந்து வந்திருந்த அத்தை மகளைக் காண மாலை வந்திருந்தான். அவனை வெல்லும் முனைப்பில் இருந்ததால் நவீன் அழைத்ததை மறந்துவிட்டேன். மீண்டும் அழைத்த நவீன் திரையங்கின் உள்ளே வந்துவிட்டேன் நீங்கள் வருவதாக இருந்தால் டிக்கெட் எடுப்பேன் என்றார். காய்களை நகர்த்தியவாறே வந்துவிடுகிறேன் என உறுதியளித்தேன். 10.35 க்குத் திரையிடல். படம் முடிந்து எப்படி வீட்டுக்குச் செல்வது கேட்ட போது, இதுவரைக்கும் அதையெல்லாம் யோசித்தா படம் பார்க்க வந்திருக்கிறோம், வாங்க நண்பா என்றார். வீட்டுக்கு வந்த விருந்தினரிடமும் மனைவி பிள்ளைகளிடமும் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டேன்.
Friday, March 4, 2022
ரத்த உறவா, தாய்மையா, காதலியா
முன்னதாக Masaan, Court, Premam ஆகிய படங்கள் இங்கு பார்த்திருக்கிறோம். எல்லாம் இரவுக் காட்சிதான். அப்போது சூளைமேட்டில் தமிழ் ஸ்டுடியோ படிமை மாணவர் காளிமுத்துவின் அறை இருந்தது. படம் முடிந்து பொடிநடையாக நடந்து அங்கு தங்கிவிட்டுக் காலையில் வீட்டுக்குச் செல்வேன். காளிமுத்து இப்போது தன் சொந்த ஊரான ராஜபாளையத்தில் வசிக்கிறார். மிகவும் நுட்பமான வாசிப்புத்திறன் உள்ள காளிமுத்துவுக்கு சினிமா சார்ந்த கனவுகள் இருந்தாலும் குடும்பச் சூழல் சென்னை நோக்கி வரமுடியாமல் செய்துள்ளது. சுருட்டை முடியுடன் மிகவும் ஒல்லியாக இருப்பார். எந்த ஜோடனையுமின்றி எளிமையாகப் பழகக்கூடியவர். ஒரு சில சினிமா வாய்ப்புகள் ஏற்படுத்த முன் சென்றாலும் அண்ணே அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை, பாட்டிக்கு நடக்க முடியவில்லை போன்ற காரணங்களைச் சொல்லி நிராகரித்துவிடுவார். அவர் தன் கனவை நோக்கித் தீவிரமாய்ச் செயல்பட சென்னை நோக்கி வரவேண்டும். சரி விசயத்திற்கு வருகிறேன்
வீட்டில் தகவலாகச் சொல்லிவிட்டுத்தான் புறப்பட்டேன், அனுமதி பெற்றல்ல. இதுபோல் இரவுக் காட்சிக்கு மனைவியை அவர் தோழியுடன் நான் அனுப்புவேனா அல்லது அனுமதிதான் கொடுப்பேனா. என்னே உலகம் ; என்னே முற்போக்கு. 51 A பேருந்தித் தடத்தில் ஏறி கிண்டியில் இறங்கினேன். கிண்டியிலிருந்து நுங்கம்பாக்கம் செல்ல டிக்கெட் விலை 5 ரூபாய். நடைமேடை 1 இல் வெகுநேரமாய்க் காத்திருந்தேன். நேரம் 10.05 ஆகிவிட்டது. ஒருவேளை படத்தைத் தவறவிட்டுவிடுவோமோ என்கிற கேள்வி எழுந்தது. சென்னை விமான நிலையம் வரைச் செல்ல வேண்டிய மெட்ரோ ரயில் இன்னும் சிறிது நேரத்தில் நடைமேடை ஒன்றை வந்தடையும் என்னும் அறிவிப்பு ஒலித்தது. இரு இளைஞர்கள் செல்போனில் கேம் விளையாடிக்கொண்டிருந்தனர். தனியே அமர்ந்திருந்த பெண்மணி யாருமற்ற இருட்டை வெகுநேரம் வெறித்துக்கொண்டிருந்தார். எதிர் நடைமேடை நடுச் சுவரின் மீது வயோதிகன் தள்ளாடியபடி சிறுநீர் பெய்துகொண்டிருந்தான். தூரத்துத் தண்டவாளத்தில் ரயிலின் வெளிச்சம் மிக வேகமாக வந்துகொண்டிருந்த போது, ரயில் செல்லும் திசையில் குழந்தையைச் சுமந்தபடி பெண்ணொருத்தி ஓடினாள்.
நான் நின்றுகொண்டிருந்த இடத்தில் மகளிர் பெட்டி நின்றது. அதில் பெண்ணொருத்தி தன் கால்களை எதிர் இருக்கையில் கால்களை வைத்து செல்போனை உற்றுப்பார்த்தபடி இருந்தாள். என்னே உலகம். சகமனிதரின் முகங்கள், இரவு, விண்மீன், நிலவு எதையும் பாராமல் எல்லோரும் செல்போனிலேயே மூழ்கியிருக்கிறார்கள் என எண்ணியபடி முன்னோக்கி விரைந்து பெட்டியின் வலது பக்கம் சென்றேன். எனக்கு இடது புறம் மங்கை ஒருவர் அமர்ந்திருந்தார். அருகிலும் எதிரிலும் மிக நெருக்கமாக ஆட்கள் இருந்ததால் சற்றென்று பார்க்க முடியவில்லை. கொஞ்சம் நேரம் கழித்து மெதுவாய்த் திரும்பிப் பார்த்தேன். அவரும் பார்த்தார். மஞ்சள் முகம் முகக் கவசத்தில் மூடியிருந்தது. மிக மென்மையான சுடர்விடும் நெற்றிப் பரப்பு, கலவரமற்ற கண்களின் ஒளி ஏதோ வொன்றை எனக்குள் எழுப்பின. ரத்த உறவா, தாய்மையா, வாலிபத்தில் காணாத காதலியா யார் அவள். மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றியது. ஓரக்கண்ணால் அவர் என் பக்கம் திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்ததைக் கண்டேன். ரயிலுக்கு வெளியே பின்னோக்கிச் சென்றுகொண்டிருந்த இருட்டையும் ஒளியையும் பார்ப்பது போலும் இருந்தது. நான் அவரைப் பார்ப்பதைத் தன் ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தார். நானும் பின்னோக்கிய இருளையும் ஒளியையும் பார்த்தேன்.
இறங்கும் நிறுத்தம் ஏன் இவ்வளவு சீக்கிரம் வந்தது. திரைப்படத்துக்குச் செல்லாமல் இன்னும் கொஞ்ச தூரம் மங்கையுடன் பயணிக்கலாமா எனத் தோன்றியது. ஆனால், துரதிர்ஷ்டம் எழுந்துவிட்டேன். பெட்டியின் இடப்பக்கம் செல்வதா, வலப் பக்கம் செல்வதா என்கிற குழப்பம் எழுந்தது. இடப்பக்கம்தான் நடைமேடை வருமென்று ஓரமாய் நின்றபடி அம்மங்கையைப் பார்த்தேன். அவரின் கண்கள் ஓரக் கண்ணால் என் திசையில் அலைவுற்றன. இறங்கிவிட்டேன். இரவின் மீது நடந்தபடி இரும்புக் கம்பிகள் பொருந்திய ஜன்னலின் ஊடே மஞ்சள் வெளிச்சத்தைக் கண்டு நடைமேடையை விட்டு வெளியேறினேன். ரயில் தடதடக்கிறது என் கால்களுக்கடியில். எங்கே இறங்குமோ அந்த மஞ்சள் வெளிச்சம். ரத்த உறவா, தாய்மையா, வாலிபத்தில் காணாத காதலியா யார் அவள்.
05.03.2022
சனிக்கிழமை
Subscribe to:
Post Comments (Atom)
பேச்சுக்குரலில் நவீனப் பட்டினப்பாலை `கபால நகரம்’ பச்சோந்தியின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பென்று நினைக்கிறேன். அவருடைய முதல் தொகுப்பு, ‘வே...

-
என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...
-
பேச்சுக்குரலில் நவீனப் பட்டினப்பாலை `கபால நகரம்’ பச்சோந்தியின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பென்று நினைக்கிறேன். அவருடைய முதல் தொகுப்பு, ‘வே...
-
இரண்டு மூன்று நாட்களாக வளையல் வாங்கித் தரச் சொல்லிக் கேட்டுக்கொண்டிருந்தாள் மகள். மனைவி வாங்கிக் கொடுப்பாள் என்று சட்டை செய்யாமல் விட்டு...
No comments:
Post a Comment